இந்தியா என்கிற பரந்துபட்ட தேசத்தில் அதனை தனது ஏதேச்சதிகார ஆளுகைக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள் தங்களது வியாபார தொழிற்புரட்சி சுரண்டலுக்கு வசதியாக பூகோள அமைப்பில் ஒத்தே வராதபோதிலும இந்திய தீபகற்பத்தை ஒரே காலனிய எல்லைகளாக தங்கள் சட்டப்படி உருவாக்கினார்கள். கல்விக்குழுக்கள் 1820களில் இருந்தே அமைக்கப்பட்டு வருகின்றன.

நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அந்ததந்த ஆட்சியாளர்கள் மக்களில் எந்த பிரிவினருக்கு எந்தவகை கல்வி என தீர்மானிக்கிறார்கள். கல்வி அற்றம் காக்கும் கருவி என்பது வள்ளுவர் வாக்கு. கல்வி ஆட்சி அதிகாரத்தின் கருவி என்பதே அரசியல்வாக்கு. அதற்குத்தான் பாரதி ‘தேடுக் கல்வி இலாத ஊரை தீயனுக்கு இரையாக்குவோம்’ என்று ஆவேசப்பட்டான்.

‘அதிகார வர்க்கத்தின் கண்ணிற்குப் புலப்படாத சாட்டை, அடிமைச் சங்கிலிதான் கல்வி எனும் அதிகாரம்’ என்றார் இடதுசாரி கல்வியாளர் ஆண்டனியோ கிராம்சி. போதனைகளையும் கட்டளைகளையும் ‘கல்வி’ எனும் இனிப்பு தடவி வழங்குவார்கள் என்றார் அவர். புராதன காட்டுமிராண்டித்தனமான பாகுபாட்டு மதவெறியைக்கூட நாட்டுப்புற கலை- பாரம்பரியம் (Folklore – Tradition) என்று மாற்றி அறிவிக்கப்படாத சட்டமாக்கும் வசதி முதலாளியக் கல்வியில் உள்ளது எனும் அவரது கருத்தை  (In Search of Educational Principle) சிறை நாட்குறிப்புகளில் வாசித்தபோது நான் வியந்துபோனேன். எத்தனை  பெரிய உண்மை?!

எனவே எல்லாக் கல்விக்குக்குழுக்களுமே அதிகாரத்தில் இருப்பவர்களால் ஏதோ ஒரு நோக்கத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டவையே. இதுவரை வாழ்ந்த கல்வி சிந்தனையாளர்கள் கல்வியின் வரைவிலக்கணம் பற்றியும், அதன் இலக்குகள் பற்றியும் பல்வேறு கோணங்களில் தம் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஆயினும் எல்லாரும் கருத்துவேறுபாடு இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் கருத்து பிரஜைகளின் நடத்தையை மாற்றும் சாதனமே கல்வி என்பதாகும்.

‘சமூக அமைப்பில் கல்வி என்பது பொருளாதார அமைப்பு எனும் அடித்தளத்தின் மீது நிறுவப்படும் அதிகார மேல்கட்டமைப்பின்ஒரு கூறு’ என்கிறது. 1847ல் வெளிவந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எவ்வளவு நிதர்சனமான உண்மை? ‘சாதாரண மக்களிடமிருந்தும் உழைப்பாளி மக்களிடமிருந்தும் கல்வியை எவ்வளவுக்கெவ்வளவு விலகி இருக்குமாறு செய்யலாம் என திட்டமிடுவதே – நிலப்பிரபுத்துவ அமைப்பின் கல்விக்கொள்கை’ என்று லெனின் எழுதினார்.

(நம் பள்ளி பற்றி -1913 கட்டுரை)
இந்திய கல்வியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கல்விக் குழுக்கள்- அந்தந்த காலத்தின் ஆட்சி அதிகார குழுவின் கல்விநோக்கப்படி அமைக்கப்பட்டவை. 1835ல் மெக்காலே முன்மொழிந்த கல்வியின் நோக்கம் என்ன? அதன் நோக்கம் ஆங்கிலேயர் ஆட்சியின் எடுபிடிகளை உருவாக்குதல், கணக்காளர் மற்றும் எழுத்தர் பணி செய்யத்தகுதிவாய்ந்த இந்தியர்களை உருவாக்குதல் 1853 சார்லஸ் உட்ஸ் கல்விக்குழு வந்தது.

மேற்கண்ட மெக்காலே கல்வியை கண்காணிக்க கல்வி போதனா துறையை ஏற்படுத்தி கல்விக்கு அதிகாரிகளை வழங்கியது ஆங்கிலேயர்களுக்கான அடிமை சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தை ஆங்கிலேய ஆதிக்க அரசை ஏற்கும் அதற்கு அடிபணிந்து நடக்கும் காலனிய பிரஜையை உருவாக்குதல் என்பதே அக்கல்விக்குழுவின் நோக்கம் 1883ல் வந்த ஹண்டர் கமிஷன் கிருத்துவமதத் திணிப்பு, கல்வியை ஆங்கிலேயர்கள் தரும் சான்றிதழ் கொண்டு அடையாளப்படுத்துதல், பள்ளிக்கல்வியை இந்திய சுதந்திர போராட்டத்திற்கு எதிரான அமைதி ஆயுதமாக்கல் போன்ற மறைமுக நோக்கங்கள் கொண்டது. தேர்வுகளை அது அறிமுகம் செய்தது.

சீருடை ராணுவத்திற்கு மட்டுமல்ல பள்ளிக்கும்தான் என அறிவித்தது. இப்படி ஆங்கிலேயர்கள் முன்மொழிந்த கல்விக்குழுக்கள் யாவுமே காலனிய அடிமை பிரஜைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு வெற்றியும் கண்டன. அந்தக் கல்வி முறைப்படி உருவான எதையும் எதிர்த்து கேள்வி எழுப்பாத சுதந்திர போராட்டம் ஊர்வலம் தர்ணா என்றால் பல மைல் தள்ளி ஓடுகிற பிரஜைகள் பலரை இச்சமூகத்தில் அவர்கள் உருவாக்கி உலாவவிட்டார்கள்.

சுதந்திர இந்தியாவில் இந்த நிலைமையை மாற்றிட பிரதமர் நேரு கோத்தாரி கல்விக்குழுவை அமைத்தார். தனது அறிக்கையை அது சமர்பித்தபோது அவர் இல்லை. பிரதமர் லால்பகதுர் சாஸ்திரிதான் கல்விக்குழு பரிந்துரைகளை ஏற்று அமல் படுத்தும் பொறுப்பை ஏற்றார். வருடம் 1968 கோத்தாரி கல்விக்குழு இந்திய விடுதலைப் போராட்ட உணர்வுகளைத் தக்கவைப்பதை தன் நோக்கங்களில் ஒன்றாகக் கருதியது.

இந்திய அரசியல் சட்டத்தை மதிக்கும் தேச ஒற்றுமை, சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்து வாழும் பிரஜைகளை உருவாக்குதல் கோத்தாரி கல்விக்குழுவின் நோக்கமாக இருந்தது. முன் உதாரண பிரஜையை உருவாக்க குடிமை பயிற்சி, விவசாயம் மற்றும் நெசவு போன்ற அடிப்படை தொழில்களை மதிக்க வகுப்பறைக்குள் தோட்டக்கலை ஆசிரியர் தறி வாத்தியார் ஆகியோர் வந்தனர். அருகமைப் பள்ளிகள் விலையற்ற கல்வி என வெகுஜனக் கல்வியாய் அனைவருக்கும் எழுத்தறிவு அடைவதற்கான செயல்திட்டங்களோடு களம் இறங்கியது கோத்தாரி குழு.

1980களில் ராஜீவ் அரசு கல்வியை மாற்றி அமைக்கத் தீர்மானித்தது. அவர்களது (புதிய) கல்விக் கொள்கைப்படி வந்ததுதான் நர்சரி பள்ளிகளும், பொறியியல் மருத்துவ தனியார் கல்லூரிகளும். மேற்கத்திய உலகால் முன்மொழியப்பட்ட உலகமயமாதலின்படி இந்திய சந்தைகளுக்குள் நுழையவிடப்பட்ட சேவைத்துறை சார்ந்த பில்கேட்ஸ் வகையறாவுக்கு வேலையாட்களை உற்பத்தி செய்தல், தொழில் துறைக் கல்வியைப் பிரதானப்படுத்தி இலக்குகளை அடைய மதிப்பெண் துரத்தும் உலகமயமாதலின் அடிமைகளை உற்பத்தி செய்து தள்ளுவதே அந்தக் கல்விக்கொள்கையின் நோக்கமாக இருந்தது.

அதன்பின் விளைவுகளில் புற்றீசல் போல முளைத்த தனியார் நர்சரி ஆங்கிலப் பள்ளிகள் எல்.கே.ஜி, யு.கே.ஜி மம்மி டாடி கலாச்சாரம் எல்லாம். மனித மதிப்பீடுகள் பின்னுக்குதள்ளப்பட்டு முரட்டுத்தனமான மதிப்பெண் அடிப்படைக் கல்வியும், தாராளமய, சந்தைப் பொருளாதார நவீன அடிமைப்பிரஜை என்பதே அதன் இலக்கு.
ஆனால் அந்தக் கல்விக்கொள்கையின் பின் விளைவுகள் பற்றி 1990களின் இறுதியில் பெருங்கவலை தெரிவிக்கப்பட்டு, இடதுசாரிகள் அதிகம் இருந்த பாராளுமன்றம் மற்றும் நீதிமன்ற போராட்டங்கள் மாணவர் அமைப்புகளின் போராட்டங்கள் காரணமாக குழந்தைகளின் கற்றலை இனிமையாக்குதல் குறித்த பேரா.யஷ்பால் கல்விக்குழு அமைக்கப்பட்டது.

கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் அடுத்த சில ஆண்டுகளில் இடது சாரிகளின் கடும்முயற்சியால் நிறைவேற்றப்பட்டது.  இந்திய சரித்திரத்தில் முதல்முறையாக ஒரு குழந்தை என்னவாக வரவேண்டும் என்பதை இலக்காகக் கொள்ளாமல் ஒரு குழந்தை தன்வயதிற்கு அடைய வேண்டிய அடிப்படை திறன்களை வழங்கும் நியாயமான சூழல்கள் கல்விக்கூடங்களில் உள்ளனவா, அவற்றை எப்படிக் கொண்டுவரலாம் என்பதைப் பற்றிய முழு புரிதலோடு நாம் 2005ம் ஆண்டு பல்வேறு கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் களப்போராளிகள் என குழுக்களாக பிரிந்து விவாதித்து நாடு முழுவதும் எண்ணப்பரிமாற்றங்கள் பல கடந்து கல்விக்கான அகில இந்திய அளவில் தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு ஒன்றை பேரா.யஷ்பால் தலைமையில் ஏற்படுத்தி அதை
அமல்படுத்தி கல்வியை குழந்தைகளின் பார்வையில் மறுசீரமைப்பு செய்ததும் வரலாறு.

தமிழகஅளவில் மாநிலகல்வித்திட்டம், மெட்ரிக் கல்வித்திட்டம், ஆங்கிலோ இந்தியன் கல்வித்திட்டம் என்றெல்லம் விதவிதமாக இருந்ததை ஒரே பாடத்திட்டமாக அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே சமச்சீர் கல்வியாக மாற்றி புதிய பாடத்திட்டங்களை நமக்கென்று தமிழக அளவில் திரு உதயச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய கல்விக்குழுவை அமைத்து இந்த ஆண்டுதான் நாம் அந்த வேலையை ஓரளவு அச்சாக்கம் பெறவைத்து- அமல்படுத்தி இருக்கிறோம்.

இதற்கிடையே 2014ல் ஆட்சிக்கு வந்த வலதுசாரி பாரதீய ஜனதா-மோடி அரசு, ஒரு புதியகல்விக் கொள்கைக் காண முன்வரைவை பேரா. சுப்ரமணியம் என்பவர் தலைமையில் வழங்கி – அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தைக் கிடப்பில் போட்டது. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு, மருத்துவக் கல்லூரி செல்ல நாடு தழுவிய நீட்தேர்வு, மீண்டும் தலைதூக்க முயற்சித்த மனுதர்மகால பரம்பரை தொழில் முறை என யாவற்றையும் தங்களது கறார் விமர்சனங்கள் மூலம் கல்வி சிந்தனையாளர்களும் களப்போராளிகளும் பெரும்பாலும் அமல்படுத்தமுடியாமல் தூக்கி எறிந்தனர்.

‘சமூக வரலாற்றில் அடிமைச் சமூக அமைப்பிலும், நிலப்பிரபுத்துவ அமைப்பிலும், முதலாளிய- ஜனநாய சமூக அமைப்பிலும் உற்பத்திச் சாதனங்கள் மற்றும் சாதகங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சிறு கூட்டத்தினரே, சமூகப்பொருளாதார அமைப்பின் மேற்கட்டுமானமாக உள்ள அரசியல், மதம், கல்வி முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஒருங்கிணைத்து எத்தகைய எதிர் முயற்சிகளையும் முறியடிப்பர்”. என்பார் லெனின். அரசியலிலும், சமூக அமைப்பிலும் ஆத்திகம் செலுத்துபவர்கள் இன்று இந்துத்துவா வெறியர்களாக உள்ளனர். தங்களது பாசிச நலன்களைப் பேணும் வகையில் கல்வியை ஒரு கருவியாகக் கையாளத் துடிக்கின்றனர்.

அதன் அடிப்படையில் பிரதமர் மோடி இரண்டாம் முறை பதவி ஏற்ற இரண்டாம் நாளே கஸ்தூரிரங்கன் கல்விக்குழு புதிய கல்விக்கொள்கைக்கான தனது அறிக்கையை சமர்பித்தது. இந்தக் கல்விக்குழுவினை 2017ல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்(ஜவடேகர் – அமைச்சர்) அமைத்தது. கஸ்தூரிரங்கன் கல்விக்குழுவின் நோக்கம் வலதுசாரிகளின் கல்விபற்றிய முழுமையான சாசனம்.

சர்வதேச பொருளாதார ஒப்பந்தமான காட் (GATT)ஒப்பந்தத்தின்படி இந்திய உயர்கல்வியை பன்னாட்டு முதலாளிகளுக்கு திறந்து விடுதல் முதல் நோக்கம். இந்துத்துவா கோரும் மனுதர்மம் உட்பட அனைத்தையும் ஏற்கும் காவிப் பிரஜைகளை உருவாக்குதல் இரண்டாவது நோக்கம். இவையே நம்இந்திய வருங்காலக் கல்வி.
இந்த முன் வரைவை முழுமையாக வாசிக்கும்போது நமக்கு பலவகையான அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.

மதவாதக்கல்வியை திணிக்க பாரதீய ஜனதா அரசு எப்போதுமே தனது ஆர்.எஸ்.எஸ் நோக்கங்களுக்காக முயற்சி செய்தே வந்துள்ளது. அவ்விதம் நடந்தபோதெல்லாம் கடும் போராட்டங்கள் காரணமாக அது முழுமையாக நிறைவேறாத பட்சத்தில் தற்போது கஸ்தூரிரங்கன் கல்விக்குழு முன்வைத்திருப்பது இறுதியான சுனாமித்தாக்குதல் இப்போது பாராளுமன்றத்தில் அதீத பெரும்பான்மை இருப்பதால் இதை நிறைவேற்றும் வானளாவிய அதிகாரத்தோடும் அது உள்ளது. இந்துத்துவாவின் வெறி முழக்கமான ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி என்பதோடு ஒரே கல்வி எனும் அதிகார திணிப்பை இந்தக் கல்விக்கொள்கை வரிக்கு வரி பறை சாற்றுகிறது.

கஸ்தூரிரங்கன் கல்விக்குழு மத்திய பி.ஜே.பி அரசால் 2017ல் அமைக்கப்பட்ட கல்விக்குழு. 2016ல் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக்கொள்கை முன்வரைவு எனும் ஆவணத்தின் அடிப்படையில் தனது முழுமையான அறிக்கையை மே 31ல் அது சமர்பித்தது. தேசியகல்வி கொள்கை ஆவணத்தை வெளியிட்ட மத்தியஅரசு ஜீன் 30 வரை பொதுமக்கள் கருத்துக்கூறலாம் என அறிவித்துள்ளது. மும்மொழிக்கொள்கை கட்டாய இந்தி மொழி என உடனடியாக சர்ச்சை கிளம்ப அந்த பகுதிகள் நீக்கப்பட்டன. ஆனாலும் கட்டாய இந்தி மட்டுமே பிரச்சினை அல்ல. கஸ்தூரிரங்கன் கல்விக்குழு முன் வைக்கும் பத்து அடிப்படை ஆபத்துக்களும் அதற்கான நமது கேள்விகளும்…

கல்விக்குழுவின் பரிந்துரை–1 (பள்ளிக்கல்வி 5+3+3+4 பள்ளி அமைப்பு.
குழந்தையின் ஆரம்பக்கல்வி 5 ஆண்டுகள். மூன்று வயது தொடங்கி ஏழு வயது வரை. அதாவது பிரீ.கே.ஜி முதல் இரண்டாம் வகுப்புவரை ஆதாரக்கல்வி. பிறகு மூன்றாண்டு (III முதல் V வகுப்பு) தொடக்க நிலைக்கல்வி – பின் VI முதல் VIII வரை மூன்றாண்டுகள் நடுநிலை கல்வி IX வகுப்பு முதல் XII வரையான நான்காண்டுகள் உயர்நிலை கல்வியாக அமைக்கப்படும் (பக்-75 அத்தியாயம் P4.1.1 )

கே : உலகின் வளர்ச்சி அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட (சீனா, ஜப்பான், பின்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட) நாடுகளில் குழந்தையின் பள்ளி செல்லும் வயது ஐந்து என்று ஏற்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நான்கு வயது என்பதை பள்ளிக்குச்செல்லும் வயதாக அறிவித்தபோது அதற்கு உளவியலாளர், கல்வியாளர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய சம்பவமும் உண்டு. அதனால் மூன்று நான்கு வயதுக்கு – தனியே மழலை மையங்கள் – நம் பால்வாடிபோல)அமைத்திருக்கிறார்கள்.

காந்தியடிகள் முதல் தற்போதைய ஐரோப்பிய கல்விக்கொள்கை, யுனெஸ்கோ பரிந்துரை உட்பட அனைத்தையும் பின்தள்ளி மூன்று வயது மழலைக்கு 5 ஆண்டு கல்வி என அதை பள்ளிக் கல்வியோடு இணைப்பது சரிதானா? குழந்தையின் ஆரம்பக்கல்வி தாய்மொழியில் இருக்கவேண்டும் எனும் நீண்டகால கோரிக்கை என்ன ஆனது? இது குறித்து கல்விக்குழு அறிக்கை ஏதும் குறிப்பிடாதது ஏன்?

கல்விக்குழு பரிந்துரையில் சம்பிரதாயத்திற்காக முடிந்தால் (Possibly) ஐந்தாம் வகுப்பு வரையிலும் அவசியமானால் (Preferably) எட்டாம் வகுப்புவரையிலும் கல்வி தாய்மொழி மீடியத்தில் இருக்கலாம் என்று ஒருவரி வருகிறது. ஆவணத்தை முழுமையாக வாசித்த பின் அதை எடுத்துப் பார்க்கும்போது அதற்கான திட்டமோ சாத்தியமோ மறுக்கப்பட்டிருக்கிறது என்பது கண்கூடு.

கல்விக்குழுவின் பரிந்துரை 2
எட்டாம்வகுப்போடு பொதுக்கல்வி அமைப்பு முடிந்து வகுப்பு 9 முதல் 12 வரையிலான நான்காண்டு கல்வி தற்போதைய மேனிலைக்கல்வி போன்று பாடத்தொகுதிகளாக மாற்றி அமைக்கப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை நான்காண்டுகள் எட்டு செமஸ்டர்கள் நடத்தப்பட்டு ஒட்டுமொத்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தங்களது எதிர்காலத்திற்கான பாடத்தொகுதியை ஒன்பதாம் வகுப்பிலேயே மாணவர்கள் தேர்வு செய்யலாம். சில பாடங்கள் பொதுவானவை. ஆனால் பெரும்பாலும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் சிறப்புப் பிரிவுகள் அடிப்படையில் பாடங்கள் அமையும். (பக்கம் 76 அத்தியாயம் P4.1.1 pol)

கே: தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் விருப்பப்பாடத்துறை ஒன்றை தேர்வு செய்ய எட்டாம் வகுப்பு முடிக்கும் 13 வயது குழந்தையால் முடியுமா? ஒரு அர்த்தத்தில் ஒன்பதாம் வகுப்பு முதலே பொதுத்தேர்வு போல உள்ளதே. தற்போது தமிழகத்தில் அறிமுகமாகி உள்ள பதினோராம் வகுப்பு பொது தேர்வு என்பதே கடந்த இரண்டாண்டுகளில் சுமார் ஒரு லட்சம் மாணவர்களை பள்ளிகளை விட்டு காணாமல் போக வைத்திருக்கிறதே. ஒன்பதாம் வகுப்பு முதலே தொடங்கும் செமஸ்டர் முறை பள்ளி இடைநிற்றலை அதிகரித்து விடாதா? எட்டாம் வகுப்போடு பொதுக்கல்வியை முடித்துவைப்பது வசதியும் வாய்ப்பும் உள்ளவர்க்கே அதன்பிறகான கல்வி என்பதுதானே ஐடிஐ டிப்ளமா என்பதெல்லாம் பற்றி ஆவணம் தொழில்முறைக்கல்வி (Vactional) என துரத்தப்போகிறது.

கல்விக்குழுவின் பரிந்துரை – 3
பத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வோடு கூடுதலாக மூன்று, ஐந்து, எட்டு வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் தேசிய அளவில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு கல்வி – திறன்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். அடுத்த வகுப்பு துறைக்குச் செல்ல இத்தேர்வுகள் அவசியம். குறிப்பாக மூன்றாம் வகுப்பில் நடத்தப்படும் தேர்வு அடிப்படை கல்வி அறிவு கணக்கீட்டு திறன் , மற்றும் ஏனைய கல்வி திறன்களை பரிசோதிக்க உதவும் (பக்கம் 107, P4.9.4)

கே :தேசிய அளவில் ஆறு வயது முதல் 18 வயது வரையில் ஒட்டுமொத்த பள்ளி சேர்ப்பு விகிதம் (Gross Enrolment Ratio) ஆரம்ப வகுப்பில் 95,1 சதவிகிதமாக இருப்பது 2017 கணக்கீட்டின்படி ஒன்பது பத்து வகுப்புகளில் 79.3 சதவிகிதமாக குறைந்து 11,12 வகுப்புகளில் வெறும் 51 சதவிகிதமாகி விடுகிறது. உங்கள் கல்விக்குழு அறிக்கையின்படி இன்றும் (பக்6.5) பக் (65 கொடி குழந்தைகள் பள்ளிசெல்வது இல்லை. மேற்கண்ட (மிரட்டல்) தேர்வுகள் மேலும் குழந்தைகளை வடிகட்டி வசதியும் வாய்ப்பும் உள்ளவர்களை மட்டுமே உயர்நிலைக்கல்வி நோக்கிச் செல்லவைக்கும் அபாயம் உள்ளதே. இது கல்வி உரிமைச்சட்டத்திற்கு எதிரானது இல்லையா? குழந்தைகள் மீதான மிகப்பெரிய வன்முறை இது.

கல்விக்குழுவின் பரிந்துரை – 4
இலவச கட்டாய கல்வி உரிமைசட்டத்தை(RTE) 12ம் வகுப்புவரை நீட்டிப்பது(பக்கம்72 P3.13) பள்ளிக்கல்வியில் உதவும் மனம்கொண்ட தனியாரை (Philanthropic Public Partnership) அனுமதித்தல் (பக்71 P3.12)
கே : இலவச கட்டாயக் கல்வி என்பது என்ன? 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு எத்தகைய கட்டணமும் இன்றி தொடக்கக்கல்வியை வழங்குதல் என்பதுதானே ஆனால் தனியார் பள்ளிகளில் ஆரம்பவகுப்பில் 25 சதவிகித இடங்களை சமூக பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவு குழந்தைகளை சேர்த்து அதன் கட்டணத்தை அரசே செலுத்தும்முறை இந்த சட்டத்தின் மூலம் அமலாகி ஆண்டுக்கு இரண்டு லட்சம் குழந்தைகளை (தமிழகத்தில் மட்டுமே) நாம் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம் இதனால் மூடப்படும் அரசுப்பள்ளிகள் ஒன்றிரண்டல்ல. கல்வி உரிமைச்சட்டத்தின் உண்மையான அர்த்தப்படி தரமான கல்வி முற்றிலும் விலையின்றி வழங்கப்படவேண்டுமானால் தனியாரின் கட்டணக் கல்வியை முடிவுக்கு கொண்டுவரவேண்டாமா?

கல்விக்குழுவின் பரிந்துரை – 5
கல்வி உரிமைசட்டத்தில் (RTE) மாற்றம் கொண்டுவந்து மாற்று கல்விக்கூடங்களான இந்தியாவின் புராதன குருகுலம், மதராஸா, பாடசாலைமுறை இவற்றையும் கல்வி நிலையங்களாக அங்கீகரித்து கட்டுமானங்கள் கற்றல் வெளிப்பாடு (Learning outcome) இவற்றைவிட யாவரையும் கல்வியில் ஒருங்கிணைத்தல் என்பதை மனதில் கொண்டு குறைந்தபட்சதர நிர்ணயம் (Minimum Standard) மூலம் தக்கவைத்தல் வேண்டும் (பக்கம் 71, P3.12)
கே : குருகுலக்கல்வியை திரும்பக் கொண்டு வருவது வர்ணாசிரம சாதி அடிப்படை வாதத்தை புதுப்பிப்பதே ஆகும். கூடவே இசுலாமியரின் மதராஸா (பள்ளிவாசல்) கல்விகூடங்களையும் தானே வளர்க்கிறோம் என்று சொல்லலாம். பாடசாலை திண்ணை பள்ளி என யாவற்றையும் நடத்தியவர்கள் மடாதிபதிகளும், ஆதினங்களுமே ஆவார்கள். நவீன அறிவியல் வளர்ச்சி சமூக மேம்பாடு அர்த்தத்தில் இப்படி திரும்ப செல்வது நம் கல்வியை பலநூறு வருடங்கள் பின்னோக்கி எடுத்துச் சென்றுவிடாதா? இந்துத்துவாவின் உண்மையான கல்வி நோக்கம் புரிகிறதா?

கல்விக்குழு பரிந்துரை -6
பள்ளிப்பாட முறையின்படியான பயிற்றுவிப்பு இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தின்படி அமையும் (பக்கம் 101 பாரா 4.8) பாடப்புத்தகங்கள் தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (NCERT) மூலம் வெளியிடப்படும். மாநிலக் கல்வி நிறுவனங்கள் பாடநூல் தயாரிக்கலாம். ஆனால் தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் (NCERT) பாடத்திட்டப்படியே அவை இருக்கவேண்டும். (பக்கம் 102 – பாரா P 4.8.2)

கே: கல்வியை முழுக்கவும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பது நமது நீண்ட நாளைய கோரிக்கை ஆகும். மேற்கண்ட பரிந்துரை மாநிலங்கள் தங்களது மக்களுக்கு தாங்கள் விரும்பும் கல்வியை வழங்கமுடியாத நிலையை ஏற்படுத்தவில்லையா? இந்தியா புவியியல் கலாச்சார ரீதியில் பலதரப்பட்ட மக்களால் ஆனது. ஒரே பாடத்திட்டம் ஒரே புத்தகம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை எனும் நம் நாட்டின் அடிப்படையை தகர்த்து ஒரே இடத்தில் அதிகாரத்தை குவித்து விடவில்லையா?

கல்விக்குழு பரிந்துரை – 7
தேசிய அளவில் உயர்கல்வி வழங்கும் கல்விமுறையில் மூன்றுவகை பல்கலைக்கழகங்கள் அமையும். முதல் வகை பல்கலைக்கழகம் ஏராளமான ஆய்வும் குறைந்தபட்ச கற்பித்தலும் கொண்டது. இரண்டாவது வகை பல்கலைக்கழகம் ஏராளமான கற்பித்தலும் குறைந்தபட்ச ஆய்வு வசதியையும் கொண்டது. மூன்றாவது வகை பல்கலைக்கழகம் பட்டம் வழங்கும் வசதி மட்டுமே கொண்டது. பல்கலைக்கழகம் எனும் சொல்லாக்கம் உள்ளதோ இல்லையோ. பெரும்பாலான கல்லூரிகள் பட்டம் வழங்கும் தன்னிச்சையான நிறுவனங்களாக்கப்படும். (பக்கம் 219 பாரா P 10,13)

கே : இந்த பட்டங்கள் வழங்கும் முழு உரிமை பெற்ற கல்லூரிகளும் பல்கலைக்கழக தன்னதிகார அந்தஸ்து பெற்றவைகளும் இந்திய உயர்கல்வியை முற்றிலும் தனியாருக்கு தாரை வார்த்து விடாதா? ஆய்வுகளை அதிகரிக்கவும் பரவலாக்கவும் மேம்படுத்தவும் அதை அனைவருக்கும் சென்று சேர்ந்திடுமாறு செய்வது அல்லவா ஜனநாயக நடவடிக்கையாக இருக்க முடியும். ஆய்வு மேற்கொள்ளும் வசதிகளை பெரும்பாலானோர் பட்டம் பெறும் கல்வி நிலையங்களில் ஏற்படுத்தாமல் அதற்கான சிறப்பு பல்கலைகழகங்களை தனியே உருவாக்குவது ஏன்?

கல்விக்குழுவின் பரிந்துரை – 8
தேசிய தேர்வு குழுமம் (National Testing Agency) விரிவாக்கப்பட்டு மேலும் பலப்படுத்தப்படும் அனைத்து வகை கல்லூரிகள் பல்கலைக்கழக கல்விக்கும் நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாக்கப்படும். உயர்கல்வி நிறுவனங்களின் சேர்க்கை அனைத்தும் தேசிய தேர்வுக்குழுமத்தின் கீழ் கொண்டுவரப்படும். இதற்காக கல்வியாளர்கள், உளவியலாளர்கள், தேர்வு வல்லுனர்கள் நியமிக்கப்படுவார்கள், (பக்கம் 109 பாரா 4.9.6)

கே : நீட் (NEET) தேர்வு பல மாநிலங்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் அலவத்தைப் பார்க்கிறோம். பதினான்கு ஆண்டு கல்வி பெற்ற பள்ளிக்கூட இறுதி ஆண்டு மதிப்பெண்ணை தூக்கி எறிந்துவிட்டு ஒரே ஒரு நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே கல்லூரிக்கல்வி சாத்தியம் எனும் நிலை வந்தால் நுழைவுத்தேர்வு தனியார் பயிற்சி நிலையங்கள் பள்ளிக்கூடங்களை விட அதிக முக்கியத்துவம் பெற்று விடாதா? இந்த நுழைவுத்தேர்வு பயிற்சி பெறும் வசதி எல்லாருக்கும் எப்படி இருக்கமுடியும்? கல்லூரிக் கல்விக்குள் நுழையவிடாமல் வசதி வாய்ப்பு இல்லாதவர்களை பள்ளியோடு கல்வியை கைவிட்டு இது ஓட வைத்து விடாதா?

கல்விக்குழு பரிந்துரை – 9
பாரத பிரதமரின் தலைமையில் ஒருங்கிணைந்த ஒற்றை தேசிய கல்வி கமிசன் (ராஷ்டிரிய ஷிக் ஷா அயோக்) நிறுவப்படும். (பக்கம் 391 அத்தியாயம் 23) இந்த அமைப்பு இந்தியாவின் அனைத்து வகை கல்வியின் உயர் அதிகார அமைப்பாக செயல்படும் சில (தொடர்புடைய) அமைச்சர்கள், அதிகாரிகள், சில (தேர்வு பெற்ற) முதலமைச்சர்கள் இக்குழுவில் இருப்பார்கள். இதுவே இந்திய கல்வி குறித்த கொள்கை முடிவுகள் எடுக்கும் அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பாக இருக்கும். (பக்கம் 393 பாரா 23.5)

கே : ஏற்கெனவே பல்கலைக்கழக மானிய குழு (UGC) கலைக்கப்பட்டது. 2017 தேசிய மருத்துவ கமிஷன் சட்டம் என்ன ஆனது? இப்படி ஒரு அதிகார அமைப்பு – மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் ஆதரவோடு இயங்கும் எனில் மருத்துவம், விவசாயக்கல்வி, பொறியியல் சட்டத்துறை மற்றும் பள்ளிக்கல்வி என எல்லாவற்றின் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் ஒரே இடத்தில் குவிப்பதன் நோக்கம் என்ன? உயர்கல்வி நிதிக்குழு (Higher Education Funding Agency) உட்பட பல விஷயங்கள் பற்றி மவுனம் சாதிப்பது ஏன்?

கல்விக்குழு பரிந்துரை – 10
இந்திய புராதன மொழிகளை கற்கவும் பாதுகாக்கவும் கல்வியில் தக்க இடம் தரப்பட வேண்டும், இதற்கான பிரத்தியேக திட்டங்கள் தீட்டப்பட்டு அவற்றையும் அவற்றின் இலக்கியங்களையும் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதிலும் அம்மொழிகளை பலப்படுத்தி தக்கவைப்பதிலும் தனிகவனம் செலுத்தப்படும், தேசிய அளவில் பாலி, பிராக்கிரத மொழி, பெர்சிய மொழி ஆகியவற்றுக்கான கல்வி வளர்ச்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு அதை ஆதரிக்கும் அனைத்து வகை கல்வி கூடங்களுக்கும் நிதி உதவி உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும், (பக் – 387 பாரா 22.4)

கே : பிராகிரத மொழி என்பது சமஸ்கிருதமே. பாலி மொழியும் கூட சமஸ்கிருதத்தின் ஒரு கிளை மொழியே. இந்த மொழிகளை வளர்ப்பதில் கல்விக்குழு காட்டி இருக்கும் அபரிமித அக்கரையை செம்மொழியான தமிழ் மொழி மீதோ இது போன்ற இன்ன பிற இந்திய மொழிகள் மீதோ காட்டாதது ஏன்? செம்மொழி உயர் ஆய்வு மையத்தை முடக்கியும் தமிழக அகழ்வாராய்ச்சிகளை புறக்கணித்தும் வரும் போக்கை முடிவுக்கு கொண்டு வரும் நமது முயற்சி ஒருபுறம் இருக்கட்டும்.

மாநில மொழிகளை கல்வியின் அங்கமாக இணைக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்தைக்கூட கல்விக்குழு முன் மொழியாதது ஏன்? ஒட்டுமொத்த தேசத்தின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு மேற்கண்ட கேள்விகள் பரிசீலிக்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்தியா பரந்துப்பட்ட தேசம். மாற்றுக் கல்வி சிந்தனையாளர்கள் இங்கே ஒரே இந்தியா கருத்தை ஏற்பது இல்லை. நாடு முழுமைக்கும் ஒரே கல்விக் கொள்கை என்பதே ஏற்புடையதல்ல. நாம் மூன்று பிரதான விஷயங்களை ஒரு போதும் விட்டுக்கொடுக்கமுடியாது.
1. ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்விவரை தாய்மொழிவழிக்கல்வி அதற்காக கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுதல்.
2. அனைத்துவகை கல்வியையும் அரசு தன் பிரஜைகளுக்கு விலைஇன்றி வழங்குவதன் மூலம் தனியார் கொள்ளை கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தல் அதற்காக பொதுப்பள்ளி முறைக்காக போராடுதல்.
3. கல்வியில் மதவாதத்தை தூக்கி எறிந்து பகுத்தறிவுவாத – அறிவியல் கல்விக்கும் – வரலாற்று பொருள்முதல்வாத ஜனநாயகக் கல்விக்கும் வித்திடுதல்.

கஸ்தூரி ரங்கன் கல்விக்குழுவின் அறிக்கை இந்த அடிப்படைகள் யாவற்றையும் தூக்கிவீசிவிட்டு, மும்மொழிக்கல்வி, முழுதும் தனியார் மயமாக்கும் கல்வி மற்றும் குருகுலம் உட்பட பாகுபாட்டையே அடிப்படையாகக் கொண்ட விஷத்தனமான காவிக்கோட்பாட்டையும் திணிப்பதாக உள்ளது.

எனவே இருண்ட காலத்திற்குள் நமது தேசத்தை முழுமையாக வீழ்த்திட கொண்டு வரப்படும் இந்த பிரமாண்ட சதியை எப்படி முறியடிக்கப்போகிறோம். பன்முகத்தன்மை, சமநீதி சமத்துவம் இவற்றை முன்வைத்து கல்விக்கான விடுதலைப்போர் ஒன்றை நோக்கி நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *