நூல் அறிமுகம்: இந்திய மண்ணில் பொருள் முதல் வாதம் – சுபாஷ் சந்திர போஸ். சு (இந்திய மாணவர் சங்கம்)

நூல் அறிமுகம்: இந்திய மண்ணில் பொருள் முதல் வாதம் – சுபாஷ் சந்திர போஸ். சு (இந்திய மாணவர் சங்கம்)



“உலகம் தோன்றி மனிதன் சிந்திக்கத் துவங்கியது முதல் இன்றுவரை நியூட்டனின் விதிப்படியே  நேர் விசை இருந்தால் அதற்கு எதிரான எதிர்விசை இருக்கும் என்றவாறே உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அப்படியேதான் தோன்றி மறைந்த, நிலவிக் கொண்டிருக்கிற வர்க்க முரண்பாடுகளும் அமைந்துள்ளன. இந்த வர்க்கங்கள் நிலவிய காலத்தின் உற்பத்தி நிலைமைகளில் இருந்து தோன்றிய கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளே தத்துவங்களாக உருப்பெற்றன. அப்படி தோன்றி மறைந்த மற்றும் நிலைபெற்று நிற்கிற தத்துவங்கள் , அதன் மீதான வாதங்கள் , அவை இந்திய மண்ணில் கோலோச்சிய விதங்கள்  குறித்தான அறிமுக பார்வையை “இந்திய மண்ணின் பொருள்முதல்வாதம்” என்ற தலைப்பில் சிறு பிரசுரமாக வடிவமைத்துள்ளார் தோழர் வி பி சிந்தன்.
ஆதிசித்தாந்தம்..
 ஏதோ இயக்கவியலும், பொருள்முதல்வாதமும் காரல் மார்க்சின் கடை சரக்கு போலவும் அதை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்தல் பலனளிக்காது என்றெல்லாம் தொடர்ந்து பாசாங்கு ஊழை விட்டுக் கொண்டிருக்கின்றனர் சிலர்.  பொருள் முதல்வாதத்திற்கு முரணாக வைக்கப்படும்  ஆன்மீகவாதத்தின்(கருத்துமுதல்வாதம்) பெயரால் அரசியல் செய்வதெல்லாம் அதன் ஒரு பகுதிதான். ஆனால் வரலாற்றில் அழிக்கப்பட்ட மற்றும் அதன் மிச்ச சொச்சங்கள் , குறிப்பாக ஆன்மீகவாதிகளின் பொருள்முதல்வாதத்தின்   மீதான இலக்கிய தாக்குதல்களை ஆராய்ந்தாலே பொருள்முதல்வாத கருத்தானது இந்தியாவின் ஆதி சித்தாந்தமாக விளங்கிற்று என்று அறிந்துகொள்ள முடிகிறது.
வி.பி. சிந்தன் மேற்கோள்கள் ... » மார்க்சிஸ்ட்
வி.பி. சிந்தன்
 முன்னத்தி ஏர்கள்… 
 லோகாயதவாதிகள், சார்வாகர்கள் , மீமாம்சிகள், வைசேஷிகர்கள், சாங்கியர்கள் என பலரும் பொருள்முதல்வாத அடிப்படை கூறுகளை கருத்தாகக் கொண்டு இருந்ததைக் காணமுடிகிறது.  லோகாயதவாதிகள் கடவுள் வழிபாட்டை தீரமாக எதிர்த்தனர். இயற்கையின் இயல்பில் ஏற்படும் மாற்றத்தில் இருந்தே உயிர் தோற்றம் மற்றும் அழிவு ஏற்படுகிறது என்ற கோட்பாட்டை முன்வைத்தனர். ஆனால் ஆதி பொதுவுடைமைச் சமூகத்தில் இருந்த வளர்ச்சியற்ற தன்மையான பலகீனத்தினால் அவர்களால் அதை தாண்டி சிந்திக்க முடியவில்லை. குறிப்பாக பொருள்முதல்வாத கருத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துமுதல்வாத கருத்தான ஆன்மீகவாதத்தின் தோற்றுவாய் அதன் சமூக நிலை ஆகியவற்றை அவர்கள் ஆராய முற்படாததின் விளைவே கருத்துமுதல்வாதத்தின் தொடர் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்களால் முடியவில்லை.
பௌத்த நிலையாமை. ..
ஆனால் மாறும் சமூக நிலைமைகளில் வர்க்கங்களின் உற்பத்தி நிலைகளில் ஏற்படும் அறிவியல் முன்னேற்றங்களின் விளைவால் உலகில் பொருள்முதல்வாதம் அழிக்க முடியாத உண்மை சித்தாந்தமாக கோலோச்சி வருகிறது என்பதை வரலாற்று வளர்ச்சியின் இயங்கியல் வழி நின்று விளக்கியுள்ளார் விபிசி. இந்திய வளர்ச்சியில் பௌத்தம் என்பது அழிக்க முடியாத மையினால் எழுதப்பட்ட வரலாறாகும். அது முன்வைத்த சமத்துவ கோட்பாடுகள் ஒடுக்கப்பட்ட மக்களின்  ஒளிக்கீற்றாக பிரகாசித்தது. ஆனால் இப்போது வழங்கப்படும் பல பௌத்த கோட்பாடு வரலாற்றில் பலரால் திரிக்கப்பட்டது என்கிறார் விபிசி. அதுமட்டுமின்றி பல நிலைப்பாடுகளில் குறிப்பாக பொருள் முதலா? கருத்து முதலா போன்ற வாதங்களில் மையநிலையை தழுவியதன் விளைவாகவே  காலப்போக்கில் பௌத்தம் தன் சொந்த சித்தாந்தத்திற்கு எதிரான கருத்துக்களை சுவீகரித்துக் கொண்டது என்ற விமர்சனத்தை முன் வைக்கிறார் விபிசி. அதேசமயம் அக்காலத்தில் உபநிஷங்கள், வேதங்கள் மற்றும் மூடநம்பிக்கை சார்ந்த ஆன்மீக கோட்பாடுகளை எதிர்த்த பௌத்த புரட்சியை யாரும் மறைத்து விட முடியாது என்கிறார். இப்படியாக பொருள்முதல்வாத கருத்துக்கள் இந்திய மண்ணின் பூர்வீக சொத்து என்பதை வரலாற்றின் துணைகொண்டு வழிமொழிகிறார் விபிசி.


தேவையும், செய்ய வேண்டியதும்… 
வறட்டுத்தனமான நாத்திகவாதம் பேசுவதால் மக்கள் திரளை கடவுள் மாயையில் இருந்து விடுவிக்க முடியாது. சமூக நிலைகள் மற்றும் உற்பத்தி உறவுகளுக்கும் எதிரான  போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் சொற்களைப் பயன்படுத்தி வரலாற்றுப்  பொருத்தப்பாடுகளுடன் இந்திய பொருள்முதல்வாதத்தையும், அதன் உலகளாவிய வளர்ச்சியையும் குறித்து விளக்கியுள்ளார் விபிசி. “முதலாளித்துவத்தின் தோல்வியும் , பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் தவிர்க்கமுடியாதது எப்படியோ, அப்படியே கருத்துமுதல் வாதத்தின் தோல்வியும், பொருள்முதல் வாதத்தின் வெற்றியும் தவிர்க்க இயலாது என்கிறார்.
அவரே இதையும் சொல்கிறார், “சமுதாய மாற்றத்தை விரும்புகிறவர்கள் பண்டைக்கால பொருள்முதல்வாதத்தையும், அது ஆற்றிய பங்கையும் புரிந்து கொள்வது அவசியமாகிறது.
சுபாஷ் சந்திர போஸ். சு
இந்திய மாணவர் சங்கம் 
புத்தகம் : இந்திய மண்ணில் பொருள்முதல்வாதம்
ஆசிரியர் : வி. பி. சிந்தன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் 
விலை : 10



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *