பகுதி ஒன்று
1931ம் ஆண்டு மார்ச் மாதத்தின்போது நவஜவான் பாரத சபையின் புகழ் அதன் உச்சத்தை அடைந்திருந்தது. அப்போது அதன் கராச்சி கூட்டத்திற்குத் தலைமை வகித்த சுபாஷ் சந்திர போஸ் பேசுகையில் கீழ்க்கண்டவாறு பிரகடனப்படுத்தினார்.
“நான் ஒரு இந்திய சோஷலிசக் குடியரசையே விரும்புகின்றேன். அரசியல் விடுதலையையும், முழுமையான பொருளாதார விடுதலையையுமே வரவேற்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் உழைப்பதற்கான உரிமையும், வாழ்க்கை ஊதியத்திற்கான (living wage) உரிமையும், கண்டிப்பாக வேண்டும். நமது சமுதாயத்தில் உழைக்காதிருக்கும் சோம்பேறிகளோ, உழைப்பில்லாத வருமானங்களோ இருக்கக் கூடாது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக, நியாயமாகவும், நேர்மையாகவும், சமமாகவும் சொத்துக்கள் பங்கீடு செய்யப்பட்டிருக்கவேண்டும். இந்த நோக்கத்திற்காக அரசு, உற்பத்திச் சாதனங்கள் மற்றும் சொத்துப் பங்கீட்டின் கட்டுப்பாட்டைத் தானே ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை நேரிடலாம். மூன்றாவதாக, அனைவருக்கும் சமுதாயச் சம உரிமை வேண்டுகின்றேன். ஒடுக்கப்பட்ட வர்க்கங்களோ, வகுப்புக்களோ இருக்கக் கூடாது. சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனும் சம உரிமையும், சம அந்தஸ்தும் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆண், பெண் இரு பாலரிடையிலும் சமுதாய அந்தஸ்திலோ, சட்டத்திலோ ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடாது.
ஒவ்வொரு வழியிலும் பெண்கள், ஆண்களுக்குச் சமமானப் பங்குதாரர்களாகவே விளங்க வேண்டும்’’ கூட்டத்தின் வரவேற்புக் குழுத் தலைவரான சுவாமி கோவிந்தானந்த் “மக்களுக்கான சோஷலிஸ அரசாங்கத்தை நிறுவும்’’ இலட்சியத்தை உணருமாறு கூட்டப் பிரதிநிதிகளுக்கு அறைகூவல் விடுத்தார். சோவியத் சோஷலிசத்திற்கு ஒரு இந்திய வடிவமைப்பை அளிக்க வேண்டும் என விரும்பிய அவர், “பூரண சோஷலிசக் குடியரசு ஒன்று மட்டுமே இளைஞர்களின் குறிக்கோளாக இருக்கவேண்டும். அதற்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும்’’ என்றும் கூறினார்.
1920-ன் தொடக்கத்தில் இந்தியா ஒரு வெகுஜன எழுச்சியைக் கண்டது. முதன்முறையாக ஏகாதிபத்திய அரசு ஏறத்தாழ எல்லா முகப்புகளிலும் எதிர்ப்புக்குள்ளானது. முதல் உலகப் போரின் போதும், அதற்குப் பின்னும் உருவான உழைக்கும் வர்க்கத்தின் எழுச்சி; கிலாபத் பிரச்சினையினால் முஸ்லிம்களிடையே தோன்றியிருந்த தணிக்க முடியாத உணர்வுகள்; கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு, போர் நிதித் திரட்டல் போன்ற ஏகாதிபத்தியக் கொள்கைகள், சுய நிர்ணய உரிமை மற்றும் ஜனநாயகம் பற்றி சம்பந்தப்பட்ட தலைவர்கள் அளித்த பொய்யான வாக்குறுதிகள், ‘ஹோம் ரூல்’ இயக்கம் மற்றும் போல்ஷ்விக் புரட்சியின் வெற்றியால் தோற்றுவிக்கப்பட்ட உற்சாகம் ரௌலட் சட்டக் கிளர்ச்சி; ஜாலியன்-வாலாபாக் படுகொலையில் போய் முடிந்த இராணுவச் சட்டத்தின் அட்டூழியங்கள் – ஆகிய அனைத்தும் ஏகாதிபத்தியக் காவல் அரணைத் தாக்குதற்குத் தயாராக உள்ள புதிய சமுதாயச் சக்திகளை உருவாக்குவதற்கு உதவின. பாட்டாளி வர்க்கம், இத்தகைய புதிய சமூகச் சக்திகளை உருவாக்குவதிலும், வெகுஜன எழுச்சிகளிலும் பெரும் பங்கு வகித்தது.
காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் மக்களின் அதிருப்தியைத் திரட்டி ஒருவழிப்படுத்துவதாய் அமைந்திருந்ததென்றாலும், அரை குறையான நிலையில் காந்தி இதனைத் திரும்பப் பெற்றபோது உண்டான உணர்வெழுச்சிகளின் விரக்தி விளைவித்த குழப்பத்தில் இயக்கம் முழுவதும் சிக்கித் தடைபட்டு நின்றது. “தேசம் ஆழ்ந்த இருளில் மூழ்கியது; மலையைக் கிள்ளி எலியைப் பிடித்ததாகப் பலரும் உணர்ந்தார்கள்’’ இளைஞர்கள்தான் மிக அதிக அளவில் ஏமாற்றமடைந்த பகுதியினர். இயக்கத்தின்போது காந்தி எழுப்பிய “கல்வி நமக்காக காத்திருக்கலாம்; ஆனால் சுயராஜ்யம் காத்திருக்குமா?” என்ற கோஷத்தை நினைத்துக் கொண்டது இளைஞர் படையினர்தான். “ஒரு நாட்டில் ஜாலியன் வாலாபாக் கொடுமை போன்றவை நடைபெறலாமென்றால் அங்கு ‘சௌரி-சௌரா’ நிகழ்ச்சியும் நடைபெறலாம். ஆனால் அந்நிகழ்ச்சி மென்மையான உள்ளத்தையுடைய சர்வாதிகாரி (காந்தி)யால் தாங்க முடியாத ஒன்றுதான்’’ என்பதனால் அந்த இளைஞர்கள் சௌரி-சௌரா நிகழ்ச்சியில் எந்தவிதமானத் தவற்றையும் பார்க்கவில்லை. அரசியலுடன் ‘தர்மத்தை’ இணைத்த காந்தீயக் கொள்கை அவர்களால் கடுமையாக விமரிசிக்கப்பட்டது. “காந்தி; அரசியலைச் சாதாரண மக்கள் மட்டத்திற்குக் கொண்டு சென்றார். ஆனால் புரட்சியின் முதல் மின்னலைக் கண்டே அவர் பின்வாங்கினார்’’.
காங்கிரஸ் கட்சி, ஒத்துழையாமைக் கொள்கைக்கும், ஒத்துழைப்புக் கொள்கைக்கும் இடையிலும், சுயராஜ்யத்திற்கும், டொமினியன் அந்தஸ்திற்கும் இடையிலும் ஊசலாடிக் கொண்டிருந்தது. தம்முடைய வர்க்க நலன்களைப் பாதுகாக்க வேண்டியிருந்த தாராள குணமுடைய பூர்ஷ்வா தேசியவாதிகளிடம், போராடுகின்ற இந்திய மக்களுக்கு அளிப்பதெற்கென்று எந்தத் தத்துவமும் இல்லை. ஒத்துழையாமை இயக்கம் தோல்வியைத் தழுவிய நிலையில் போலியான காங்கிரஸ் தலைமை அளித்த இரண்டு மாற்று வழிகளாகிய சுயராஜ்யவாதிகளின் பார்லிமெண்டடிரி அரசியல் மற்றும் “மாற்றம் வேண்டாதவர்களின்’’ (No changers) ஆக்கப் பூர்வமான திட்டம் ஆகியவை சற்றும் திருப்தியளிப்பதாக இல்லை. அப்போது நிலவிய அவநம்பிக்கையின் பாற்பட்டுச் சிந்திக்க சிந்திக்க தேசியவாதிகளின் தந்திரோபாயங்கள் தவறுகள் நிறைந்தவனாகத் தோன்றின. இந்நிலையில் அக்டோபர் புரட்சியின் எதிரொலி நமது நாட்டை வந்தடைந்தது. தங்களின் அடிமைத்தளைகளைத் தகர்த்தெறிய சோவியத் போராட்ட முறைகளைக் கைகொள்ளுமாறு மக்களைத் தேசியப் பத்திரிக்கைகள் மிகத் தீவிரமாக வற்புறுத்திப் பிரச்சாரம் செய்யத் துவங்கின.
பாலகங்காதர திலகர், விபின் சந்திர பாலர், லாலா லஜபதிராய் மற்றும் சி.ஆர். தாஸ் போன்ற தலைவர்கள் இந்தியாவில் போல்ஷ்விக் தத்துவங்கள் போதிக்கப்பட்டு செயல் படுத்தப்படவேண்டும் என விரும்பினார்கள். காங்கிரசின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இழந்த இளம் தேசபக்தர்கள், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திரத்தை அடைவதற்கு நவீன வழிமுறைகளை மிகத் தீவிரமாகத் தேடத் துவங்கினார்கள். போல்ஷ்விக் தத்துவங்களின் மீதும், தங்களின் கனவுகளுக்கு மிக அருகில் உள்ள அரசு என்கிற முறையில் சோவியத் ரஷ்ய அரசின் மீதும் அவர்களின் பார்வை இறுதியாக நிலைத்தது.
1926-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், தத்துவரீதியிலான வழிகளில் போர்க்குணமிக்க தேசிய இயக்கத்தை ஒருவழிப்படுத்துவதெற்கென பகத்சிங்கினால் ‘நவஜவான் பாரத் சபை’ உருவாக்கப்பட்டது. இந்தப் பணியில் அவருக்கு, பகவதி சரண் வோரா, தன்வந்திரி, இஸான் இலாஹி போன்ற சிலர் நல்ல முறையில் துணை புரிந்தனர். ராம் கிருஷ்ணாவும், பகத்சிங்கும் முறையே இச்சபையின் முதல் தலைவராகவும், செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்கள். பகவதி சரண் வோரா இதன் பிரச்சாரச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சைபுதீன் கிச்லூ, சத்யபால், கிதார் நாத் செகால், லாலா பிந்தி தாஸ் மற்றும் லாலா லால் சந்த் போன்ற காங்கிரஸ் கட்சியின் இடதுசாரிகள், சபைக்குத் தங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கினார்கள்.
சபையானது, சமுதாயம் மற்றும் அரசியல் என இருவகைக் குறிக்கோள்களைக் கொண்டிருந்தது. சுதேசிப் பொருட்களைப் பிரபலப்படுத்துவது, எளிய வாழ்க்கை, உடல் நலத்தகுதி, சகோதரத்துவ உணர்வைப் புகுத்துதல், இந்திய மொழிகள் மற்றும் இந்தியக் கலாச்சாரத்தின் மீதுள்ள ஆர்வத்தைத் தூண்டுதல் ஆகிய அனைத்தும் சமுதாயக் குறிக்கோள்களில் அடங்கும். சபை ஒரு உறுதியான அரசியல் திட்டத்தையும் வைத்திருந்தது. விரைவில் சபையின் இந்த ‘சமுதாயக் குறிக்கோள்கள்’, புரட்சிக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதற்கான ஒரு மூடுதிரையாக மட்டுமே ஆகிவிட்டன. சபையின் அரசியல் திட்டம் பின்வருவனவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது.
(அ) இந்தியா முழுவதிலும் தொழிலாளர், விவசாயிகளின் பூரண சுதந்திரக் குடியரசை நிறுவுதல்.
(ஆ) ஒன்றுபட்ட இந்திய தேசத்தை நிறுவுவதற்காக நாட்டு இளைஞர்களின் உள்ளத்தில் நாட்டுப்பற்றுணர்வை வளர்த்தல்.
(இ) எல்லாவிதமான வகுப்புவாத உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளின் பூரணச் சுதந்திர குடியரசை நிறுவும் இலட்சியத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் பொருளாதார, தொழில் மற்றும் சமுதாய இயக்கங்களுக்குத் ‘துணை புரிந்து’ அவைகளுக்கு ஆதரவு அளித்தல்.
(ஈ) தொழிலாளிகளையும், விவசாயிகளையும் அமைப்பு ரீதியாகத் திரட்டுதல்.
நவஜவான் பாரத சபை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தோடு மற்ற ஏகாதிபத்தியங்களையும் முடிவுகட்ட விரும்பியது குறிப்பிடத்தக்கது. சபை நடவடிக்கைகள் ஒரு பரந்த தொலை நோக்குப் பார்வையைக் கொண்டிருந்தது. அடிமை நாடுகளின் விடுதலையிலும் அது நம்பிக்கை கொண்டிருந்தது. இந்தியா முழுவதும் ஒரு சுதந்திர சோஷலிசக் குடியரசை நிறுவுதல், மற்ற நாடுகளிலும் ஏகாதிபத்தியத் தாக்குதலை முறியடித்தல் போன்ற தெளிவான தத்துவத்தையும், திடமான குறிக்கோளையும் சபை முன் வைத்தது.
சபை மதச்சார்பின்மையையும் முன் வைத்தது. “சபையில் சேர்வதற்காகப் பதிவு செய்து கொள்வதற்கு முன், ஒவ்வொரு உறுப்பினரும் தன்னுடைய இன நலன்களுக்கு மேலாக நாட்டின் நலன்களுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற உறுதிமொழியில் கையொப்பமிடச் செய்தனர். இந்தியாவில் தீவிர தேசியவாதத்தின் ஒரு தூணாக விளங்கிய லாலா லஜபதிராயால் கூட இந்து மகா சபைத் தலைவர்களும் இணைந்து நின்றபோது, சபையின் கடும் தாக்குதல் நிறைந்த விமரிசனத்திலிருந்து தப்ப இயலவில்லை. பல்வேறு வகுப்பினரும், பல்வேறு நம்பிக்கைகள் உடையவர்களும் அழைக்கப்பட்டு ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் பொது விருந்துகளைச் சபை ஏற்பாடு செய்தது. ஒரு சமயத்தில் மிகுந்த உற்சாகமடைந்த சில இளைஞர்கள் ஒரு இனத்தாரால் ஏற்றுக் கொள்ளப்படாத ‘ஹலால்’ அல்லது ‘ஜட்கா’ இறைச்சியை ஒரே பாத்திரத்தில் சமைத்தார்கள். அது, அங்கிருந்த இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் ஆகிய அனைவராலும் உண்ணப்பட்டது. புத்தரையும், கிறிஸ்துவையும் ஒதுக்கித் தள்ளி காரல் மார்க்ஸையும், ஏங்கல்சையும் உலகின் தலைசிறந்த மனிதர்களாகப் புகழும் அச்சிட்ட பிரசுரங்களை வெளியிடும் அளவிற்குச் சபை நடவடிக்கைகள் சென்றன.
பல்வேறு இனங்களுக்கிடையே நட்புணர்வை சபை தனது அரசியல் திட்டத்தின் முக்கிய அங்கமாகக் கருதியது. ஆனால் காங்கிரசிற்கு முற்றிலும் மாறாக சிறுபான்மையினரைச் சமாதானப்படுத்துவதிலோ, மதச்சார்பின்மையைக் காட்டும் முறையாகவோ ‘அல்லாஹீ அக்பர்’, ‘சத்யஸ்ரீ அகால்’ மற்றும் ‘வந்தே மாதரம்’ என்னும் முழக்கங்களையும் எழுப்புவதிலோ சபை நம்பிக்கை வைக்கவில்லை. மாறாகப் புரட்சியையும், நாட்டையும் வாழ்த்தும் முகமாக “இன்குலாப் ஜிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்’’ என்ற இரண்டு முழக்கங்களைத்தான் சபை எழுப்பியது. தேசத்தின் முன்னால் சபை மூன்று இலட்சியங்களை வைத்தது. அவை சுதந்திரம், மதச்சார்பின்மை, சோஷலிசம் அல்லது பொருளாதார அடிமைத்தளையிலிருந்து பொது மக்களுக்கு விடுதலை ஆகியவையாகும். ஊன்றி வளர்த்த உன்னத இலட்சியத்தை நோக்கி மக்களை வழிநடத்திச் செல்லக்கூடிய புரட்சியின் முன்னணிப் படையினராகிய இளைஞர்கள் உள்ளத்தில் நாட்டுப்பற்றைப் புகுத்துவதன் மூலமாகவும், வேறுபாடுகளைத் தோற்றுவிக்கும் வகுப்புவாத இன உணர்வுகளிலிருந்து மக்களை விடுவிப்பதன் மூலமாகவுமே இந்த இலட்சியங்களை நிறைவேற்ற முடியும் என்றும் சபை நம்பியது.
இலட்சியங்களும், தத்துவங்களும் உருவாக்கப்பட்டவுடன் சபையின் செயல்வீரர்கள் ஒரு தெளிவான திட்டத்தின்படி செயல்படத் துவங்கிவிட்டார்கள். சபை நிறுவப்பட்டவுடன், 1914 – 15-ம் ஆண்டு லாகூர் சதித்திட்ட வழக்கில் தாயகத்தின் பலிபீடத்தில் தன் வாழ்வை அர்ப்பணித்த கர்தார் சிங் சாராபா என்ற இளம் புரட்சியாளரின் முதலாண்டு நினைவு விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. சாராபாவின் புகைப்படம் ஒன்றை பகத்சிங் கண்டுபிடிக்க, பகவதி சரண் அதனைத் தன் சொந்தச் செலவில் பெரிதுபடுத்தினார். அந்த உருவப்படம் பால் போன்ற ஒரு வெள்ளைத் துணியால் மூடப்பட்டு லாகூரில் உள்ள பிராட்லாஃப் மண்டபத்தில் வைக்கப்பட்டது. நெஞ்சத்தைத் தொடும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. பகவதி சரண்வோராவின் மனைவி துர்க்காதேவி மற்றும் சுசீலாதேவி ஆகிய இருவரும் தங்கள் விரல்களிலிருந்து இரத்தத் துளிகளை உருவப்படத்தை மூடியிருந்த வெண்திரையின் மீது தெளித்து அந்த வீரத்தியாகிக்குத் தங்கள் அஞ்சலியைச் செலுத்தினார்கள். சபை நடத்திய இந்த விழா “புரட்சிகர நடவடிக்கைகளுக்காகத் தங்களையே அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு அழைப்புவிடும் வெளிப்படையான நடவடிக்கையாக அமைந்தது.’’11 1927-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேலை நாடுகளில் இளைஞர் இயக்கம் பற்றிச் சிறப்புரை ஆற்ற வங்கத்தின் புரட்சித் தலைவர் பூபேந்திரநாத் தத்தைச் சபை அழைத்தது.
1926-ம் ஆண்டு மார்ச்சிலிருந்து 1927 ஏப்ரல் வரை சபையின் நடவடிக்கைகள் லாகூருக்குள் மட்டுமே அமைந்தன. சோகன்சிங் ஜோஷ் எழுதுகிறார்: “1926 மார்ச்சிலிருந்து 1927 ஏப்ரல் வரை லாகூர் நவஜவான் பாரத சபை மாணவர்களை அரசியலின் பாற்படுத்துவதற்கான பணிகளைச் செய்து வந்தது. ஆனால் லாகூருக்கு வெளியில் இச்சபையைப் பற்றித் தெரிந்தவர்கள் யாருமில்லை. அதன்பின் சபை நடவடிக்கைகள் ஒரு முடிவுக்கு வந்தன. இந்தக் காலக்கட்டத்தில் சபை எதையும் நிறைவேற்றவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கண்ணோட்டத்தின் படி கம்யூனிசம், பயங்கரவாதம் ஆகியவற்றின் அரசியல் கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்வதற்கு இச்சபையின் வெளிப்படையான நடவடிக்கைகள் ஒரு திரையாக இருந்து வந்தன’’
1927-ம் அண்டு ஜீலை மாதம் துஸீரா வெடிகுண்டு வழக்கில் சபையின் இயக்க சக்தியாக விளங்கிய பகத்சிங் சம்பந்தப்படுத்தப்பட்டபோது சபை ஒரு பெரும் தாக்குதலைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஏதுமறியாத பன்னிரண்டு பேர்கள் கொல்லப்பட்ட அந்த வெடிகுண்டு வீச்சு அராஜகத்தில் சபைக்கும் அதன் அங்கத்தினர்களுக்கும் எந்த வகையிலும் சம்பந்தமில்லை. அவதூறுப் பிரச்சாரத்தின் மூலம் மக்களைச் சபைக்கு எதிராகத் திசை திருப்புவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட சாதாரண முயற்சிதான் இது. எனினும் அரசாங்கம் தனது முயற்சியில் தோல்வி அடைந்தது. மிக அதிகமான ஜாமீன் தொகைதான் என்றாலும் (60,000 ரூபாய்) பகத்சிங் விடுவிக்கப்பட்டார். சபை தோன்றிய முதலாண்டிலேயே ஏகாதிபத்திய அமைப்பு முறைக்கு எதிரான சக்தி வாய்ந்த அச்சுறுத்தலாகச் சபையைக் கருத ஆரம்பித்தனர். மேலும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு சபை பயங்கரம் நிறைந்த வெறுப்பை உண்டாக்குகின்ற ஒரு அமைப்பாகத் தோன்றியது:
1928-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் லாகூரில் சபை “தேசியவாரம்’’ ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்த வாரம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. பம்பாய் கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ. டாங்கே, பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஃபிலிப் ஸ்ப்ராட் ஆகிய இருவரும் இந்தியச் சுதந்திரத்தின் உண்மையான பொருள் பற்றிப் பேசினர்.
மார்ச் 28-ம் தேதி நடந்த கூட்டம் இவற்றுள் மிகவும் முக்கியமானது. இதே மாதத்தில், 1928 ஏப்ரல் 11லிருந்து 13 வரை ஜாலியன் வாலா பாக்கில் இளைஞர் மாநாடு ஒன்று நடத்துவதற்கான தீர்மானத்தை வெளிப்படுத்தும் சுவரொட்டி ஒன்றை பாக்சிங்கனடியன், சோகன்சிங் ஜோஷ் ஆகியோர் கையொப்பமுடன் கிர்தி கிஸான் கட்சி ஒட்டியது. மாநாட்டுக்குச் சில நாட்களுக்கு முன் அமிர்தசரசில் உள்ள கிர்தி அலுவலகத்தில் சோகன் சிங் ஜோஷ் அவர்களைச் சந்திக்க பகத்சிங் சென்றார். பகத்சிங் அவரிடம் நவஜவான் பாரத சபையைப் பற்றியும், அதன் திட்டங்களையும், லாகூரில் அதன் நடவடிக்கைகளையும் கூறியதோடு இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ளும் எண்ணத்தையும் வெளியிட்டார். மாநாட்டில் நவஜவான் பாரத சபை கலந்து கொள்வதை சோகன் சிங் ஜோஷ் வரவேற்றார். காதர் புரட்சியாளர்களுக்குத் (Ghader Revolutionaries) துணையாய் இருந்தவரும், லாகூர் நவஜவான் பாரத சபையின் உறுப்பினருமான கிதார் நாத் செகால் தலைமையில் மாநாடு நடைபெற்றது. பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர்களை, லாகூருக்குப் பதிலாக அமிர்தசரசைத் தலைமையிடமாகக் கொண்ட பஞ்சாப் நவஜவான் பாரத சபை என்ற அமைப்பினுள் ஒன்று திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவோடு “புரட்சி அல்லது அதனையொத்த வழிகளின் மூலம் விவசாயிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் அதிகாரத்தை பங்கீடு செய்யும் திட்டத்தைச் சேர்த்துக் கொள்ளும் வண்ணம் அமிர்தசரசில் உள்ள கிர்தி குழுவுடன் இணைந்து செயல்படுவதாக’’ சபையின் கொள்கை விரிவாக்கப்பட்டது. மேலும் சபைக்கு ஒரு மாகாண அமைப்பும், ஒவ்வொரு ஜில்லா, தாசில், தாணா மற்றும் கிராமத்தில் கிளைகளும் இருக்க வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் செய்யப்பட வேண்டிய பணிகளுக்குச் சிறப்பான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்திற்கு ஒரு மாதத்திற்கு பின் கோதுமை விளைச்சலில் பலன் தவறியதன் பொருட்டு சபை ஒரு விவசாயப் போராட்டத்தை நடத்த முயற்சி மேற்கொண்டது. 1928ம் ஆண்டு மே மாதம் 23ம் நாளன்று பயிர் சாகுபடி தவறியது பற்றி விவாதிக்க லாகூர் மாவட்டத்தில் உள்ள ஜஹ்மான் கிராமத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் புகழ்பெற்ற தீவிரவாதத் தலைவர்களாகிய சத்யபால், எம்.ஏ.மஜீத், கிதார் நாத் செகால் போன்றவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்தக் கூட்டம் ஒரு காங்கிரஸ் கூட்டம் என்று விளம்பரப்படுத்தப்பட்டதெனிலும் உண்மையிலும் அது நவஜவான் பாரத சபையில்தான் நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி தொழிலாளிகள், விவசாயிகள் பிரச்சனைகளுக்காக எப்போதெல்லாம் போராடியதோ அப்போதெல்லாம் சபை அதனை ஆதரித்தது. காங்கிரஸ் நடத்திய பர்தோலி சத்தியாக்கிரகம். பம்பாய் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான அத்துமீறல் கொள்கைக்கு எதிரான ஒரு பொருளாதார எதிர்ப்பு. எனவே 1928ம் ஆண்டு ஜீன் மாதம் ‘பர்தோலி மறுமதிப்பீடு’ (Bardoli reassessment) சம்பந்தமான காங்கிரசின் பிரச்சார நடவடிக்கைகளைச் சபை ஆதரித்தது.
கிர்தி குழுவுடன் கூட்டுச் சேரும் முன்பே சபை விடுதலைப் போராட்டத்தில் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் முக்கிய பங்கு அளித்திருந்தாலும், கிர்தி குழுவுடனான தொடர்பு அந்தக் கண்ணோட்டத்திற்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்தது. இப்போது, இந்திய மக்களுள் எண்ணிக்கையில் அதிகமானவரும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருமாகிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒன்று திரண்ட அமைப்பை மையப்படுத்தி சபையின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விவசாயிகளின் வர்க்கரீதியான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அவர்களின் துன்பங்களை அகற்றுவதற்கும், விடுதலைப்போரில் அவர்களின் பங்குப் பற்றிய உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துவதற்கும் சபை போராடியது. ஏனெனில் பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்கள்தான் மிகப் பெரிதும் ஒடுக்கப்பட்ட, மிருகத்தனமாகச் சுரண்டப்பட்ட வர்க்கத்தினர், எனவே அவர்கள் தான் அமைப்பு ரீதியாக ஒன்று திரட்டப்பட்டு ஒரு மக்கள் புரட்சிக்காகத் தயார்செய்யப்பட வேண்டியவர்கள்.
1928ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியில் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளங்களில் போராட்ட உணர்வை விதைப்பதற்காகவும், அவர்களின் உரிமைப் பற்றிய உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துவதற்காகவும், தொழிலாளர்கள், விவசாயிகள் மாநாடு ஒன்றினை லியல்பூர் என்னுமிடத்தில் கூட்டுவதில் சபை தீவிர ஈடுபாடு காட்டியது. அதில் முக்கியப் பங்கு வகித்தவர்களில் மாகாணத்திற்கு வெளியே இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களாகிய ஸ்ப்ராட், பிராட்லி, டாங்கே ஆகியோரும் சபையின் தலைவராகிய கிதார்நாத் கெகாலும், வெளியீட்டுக் கழகத்தின் செயலாளராகிய சபீல் தாசும் அடங்குவர். வரவேற்புக் குழுத் தலைவரான ராம் சந்திரா தனது உரையில் சபையின் கொள்கையைத் தெளிவுபடுத்தினார். மேலும் சொத்துக்களை தேசவுடமையாக்குதல், சமுதாயப் புரட்சி, முதலாளிகளின் சுரண்டலை எதிர்ப்பதற்கான தொழிலாளர்கள், விவசாயிகளின் ஒருங்கிணைந்த அமைப்பு ஆகியவற்றையும் ஆதரித்து அவர் உரை நிகழ்த்தினார். நாடு பிரிட்டிஷ் எதிர்ப்புணர்ச்சியால் நிரம்பியிருந்த நேரத்தில் சரித்திரப் புகழ் வாய்ந்த காங்கிரஸ் கட்சியின் லாகூர் கூட்டம் நடைபெற்ற 1929-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அனைத்திந்திய விவசாயிகள்-தொழிலாளர்கள் மாநாடு லாகூரில் கூட்டப்பட்டது. அதில் 25,000 பேர் கலந்து கொண்டனர். 15 1930-ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாளன்று மற்றொரு விவசாயிகள் மாநாட்டினையும் ஷாதாராவைச் சுற்றியுள்ள கிராமங்களில் சபை நடத்தியது.
1928-ம் ஆண்டு ஜீலையில் கிர்தி கட்சித் தலைவரான சோகன்சிங் ஜோஷ், நவஜவான் பாரத சபையின் அமிர்தசரஸ் கிளைக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், சபைக்கும் கிர்தி கட்சிக்குமிடையேயுள்ள தொடர்பு மேலும் வலுப்பெற்றது. காங்கிரஸ் இடதுசாரிகளின் ஆதரவுடன் அவர்கள் 1928-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் “சோவியத் யூனியன் நண்பர்கள் வாரம்” கொண்டாடினார்கள். எந்த இந்தியனும் இனி வருங்காலத்தில் பிரிட்டிஷ் அரசிற்கு எந்தப் போரிலும் துணைபுரிவதில்லை என்றும், சோவியத் யூனியனுடன் நட்புறவை வெளிப்படுத்தி சோவியத் கொள்கையின் ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கு ஆதரவளிப்பது என்றும் தீர்மானங்கள் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்தியா தன்னை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் என்பது இங்கிலாந்திற்கு எதிர்காலத்தில் பெரும் துன்பத்தை விளைவிக்கப் போகின்றது என்பதனை இத்தீர்மானங்கள் உணர்த்தின. மேலும், முதலாளித்துவத்தை அழித்து, தொழிலாளர்கள்-விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதே விடுதலைக்கும் வளமான வாழ்விற்கும் உள்ள ஒரே பாதை என்றும் மாநாட்டில் தெளிவுபடுத்தப்பட்டது.
பஞ்சாபில் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் சபை ஒன்று திரட்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில் பகத்சிங் ஐக்கிய மாகாணங்களில் உள்புரட்சியாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அவர் தனது சபை உதவியாளர்களாகிய சுகதேவ், பகவதி சரண் வோரா போன்றவர்களுடன் தனது பெயரையும் ஐக்கிய மாகாணங்களின் புரட்சி அமைப்புகளில் ஒன்றாக இந்துஸ்தான் குடியரசுச் சங்கம் (Hindustan Republic Association) என்ற பெயர் கொண்ட அமைப்பில் பதிவு செய்து கொண்டார். பகவத்சிங், சுகதேவ், சிவவர்மா ஆகியோர் சங்கத்தின் இளம் உறுப்பினர்கள் அவர்கள் தங்கள் உள்ளத்தில் ஒரு முற்போக்கான திட்டத்தைக் கொண்டிருந்தனர். பழம் புரட்சியாளர்களும், இளம் புரட்சியாளர்களும் இணைந்த இந்த அமைப்பு முற்போக்கான, புரட்சிகர சமுதாயப் பார்வை கொண்ட ஒரு திட்டத்துடன் வெளிவந்தது. 1928ம் ஆண்டு செப்டம்பர் 9, 10 தேதிகளில் ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் இளம் புரட்சியாளர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. தீவிரமான பரிசீலனைக்குப்பின் கட்சிக்கு இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசுச் சங்கம் என்று மறுபெயர் சூட்டப்பட்டது. 1928-க்குப் பின் பகத்சிங் இச்சங்கத்தின் நடவடிக்கைகளில் முக்கிய கவனம் செலுத்தினார். புதிய புரட்சிகரத் தத்துவத்தின்மீது மக்களின் கவனத்தையும், உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு பெரும் புரட்சியாளனாக இப்போது அவர் திகழ்ந்தார். வெடிகுண்டு வீச்சு நிகழ்ச்சிக்கு பின் பகத்சிங் இந்தியப் புரட்சியின் சின்னமாக மாறிவிட்டார். அதே நேரம் சபையும் விவசாயிகள், தொழிலாளிகள் மத்தியில் ஒரு முதன்மையான இடத்தைப் பெற்றது. அதன் நடவடிக்கைகள் கிர்தி கட்சியின் தத்துவச் சாயம் பூசப் பெற்றன.
1928ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அமிர்தசரசில் பல்வேறு தொழிற்சங்கங்களை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது கிர்தி கட்சியுடன் சபையும் தனது செல்வாக்கைத் தொழிலாளர்கள் மத்தியில் பரப்புவதில் முனைந்தது. தொழிலாளர்களின் நலனுக்கு ஊறுவிளைவிப்பது என்று தான் கருதிய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் சபை எதிர்த்தது. 1928 ஆகஸ்டு மாதத்தில் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தொழிற்தகராறு மசோதாவை (Trade Disputes Bill) சபை எதிர்த்தது. ஆகஸ்டு மாதம் 18ம் தேதி அன்று அமிர்தசரசில் “மூலதனத்திற்கும் உழைப்பிற்குமிடையே ஏற்படக்கூடிய போர்’’ பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் சோகன் சிங் ஜோஷ், எம்.ஏ.மஜீத், ராம் சந்திரா, கே.என். செகால் ஆகியோர் மசோதாவைக் கண்டித்தும், அக்டோபர் புரட்சியைப் பெரிதும் புகழ்ந்தும் உரையாற்றினார்கள்.
சபையின் அடுத்த முக்கியமான நடவடிக்கை தேசிய, சோஷலிச இலக்கியங்களை பரப்புவதற்காக வெளியீட்டுக் கழகம் ஒன்றை ஆரம்பித்ததாகும். சபில்தாஸ் இதன் முதல் செயலராக நியமிக்கப்பட்டார். சபையின் இந்த வெளியீட்டு கழகம் புரட்சிகரமான போல்ஷ்விக், சோஷலிசக் கொள்கைகள் பெரிதும் நிறைந்ததான மூன்று கையேடுகளை வெளியிட்டது. 1928-ம் ஆண்டு ஜீன் மாதத்தில் லாகூர் மாணவர்கள் “மாணவர்கள் வாரம்’’ ஒன்றைக் கொண்டாடியது. தனது கொள்கையை மாணவச் சமுதாயத்தில் பரப்புவதற்கு சபை இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது. “இளைஞர்களுடன் ஒரு சில வார்த்தைகள்’’ என்கிற மற்றொரு கையேட்டையும் சபை வெளியிட்டது. நாட்டிலுள்ள இளைஞர்களை, விடுதலைக்கான அவர்களது போராட்டத்தில் அயர்லாந்து, துருக்கி, ஜப்பான் மற்றும் சைனாவின் இளைஞர்கள் காட்டியுள்ள முன் மாதிரியைப் பின்பற்றும்படி வற்புறுத்தியது: இந்தியாவைச் சுரண்டி அதில் வசித்துவரும் மக்களை ஏழைகளாகவும், கல்வியறிவற்றவர்களாகவும் வைத்திருப்பதாக பிரிட்டிஷ் அரசை அது குற்றம் சாட்டியது. “இந்தியாவைப் பிடித்திருக்கும் அடிமை நிலை அதன் அண்டை நாடுகளில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது’’ என்று கையேடு, கூறியது. இந்தியா பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருப்பது அண்டை நாடுகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது என்று சபை கருதியிருந்ததைத் தெளிவாக அச்செய்தி காட்டியது.
சுயராஜ்யத்தையும், பொருளாதார விடுதலையையும் கொண்டு வருவதற்குரிய ஒரே வழியான கம்யூனிசம், போல்ஷ்விசம் போன்ற இயக்கங்களையும், விடுதலை மற்றும் சம உரிமைத் தத்துவங்களையும், ஜனநாயகம் மற்றும் சுயதீர்மான உரிமை பற்றியும் ஆழ்ந்து கற்குமாறு இது மாணவர்களை வற்புறுத்தியது. மேலும் சுதந்திர இந்திய வெளியீட்டுத் தொடர் ஒன்றினையும் சபை பிரசுரித்தது. அவற்றில் ஒன்றான லாவா ஹர்தயாளினுடைய ‘இந்திய விவசாயிகள்’ என்னும் மொழி பெயர்ப்புப் பிரசுரம் விவசாயிகள், தொழிலாளர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியது. அதில் “திடீரென்று ஒருநாள் இரவில் டாடாக்கள், பாட்டாக்கள் மற்றும் பிர்லாக்கள் போன்ற உலகத்திலுள்ள அனைத்து பணக்காரர்களும் இறந்தால், அடுத்த நாள் காலையில் எழும் மக்கள் அது பற்றி அதிகம் கவலைப்படமாட்டார்கள். அதற்கு மாறாக, அனைத்து விவசாயிகளும், தொழிலாளர்களும் இதுபோன்ற ஒரு விதியைச் சந்திக்க நேர்ந்தால் இந்த உலகம் வாழ்வதற்கே தகுதியற்றது, நரகத்தைவிட மோசமானது என்று வருந்துவார்கள்’’ என்று கூறப்பட்டிருந்தது.
“உலகத்திலேயே கொடிய பாவம் வறுமை’’ என்ற தலைப்பிடப்பட்ட மற்றொரு கையேடு வெளியிடப்பட்டது. இதில் ஏழ்மையை அதன் ஆணிவேர், பக்கவேர்களுடன் அழித்தொழிக்கவும், நேர்மையான, சமமான சொத்துப் பங்கீட்டை ஏற்படுத்தவும், அதிகாரத்தைச் செலுத்துவதற்கும், பங்கிடுவதற்கும், அனைவருக்கும் சமவாய்ப்பைப் பெறவும் உழைக்குமாறு இளைஞர்கள் வற்புறுத்தப்பட்டனர்.
இந்தக் கையேடுகள் தொழிலாளர்கள், விவசாயிகள் அமைப்பைக் குறிக்கோளாய்க் கொண்டவைகளாக இருப்பினும் இவை, மாணவர்கள் இளைஞர்கள் மனதைத் தூண்டி அவர்களிடமிருந்து பெருமளவு பிரதிபலிப்பை உண்டாக்கின. முன்னர் எப்போதும் இல்லாத அளவில், சுதந்திரம், சமத்துவம், பொருளாதாரத் தளையிலிருந்து விடுதலை பற்றின புரட்சிகரமான தத்துவங்கள் இளைஞர்களைப் பெரிதும் எழுச்சி கொள்ளச் செய்தது. சபையின் ஊக்கம் நிறைந்த உற்சாகமான பலவகை நடவடிக்கைகளால் இளைஞர் கழகங்களும், மாணவர் சங்கங்களும் வட இந்தியா முழுவதும் பலநகரங்களிலும், கல்வி மையங்களிலும் நிறுவப்பட்டன. லாகூர் மாணவர்கள் சங்கம் சபையின் துணை அமைப்பாய் ஆயிற்று. அரசு வெளியிட்ட குறிப்பின்படி, “லாகூர் மாணவர்கள் சங்கம் என்பது நவ ஜவான் பாரத சபையின் ஒரு பகுதியாகவோ அல்லது புரட்சி பணிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் இடமாகவோத்தான் அமைக்கப்பட்டது. தொடக்க காலத்திலிருந்தே சங்கத்தின் இரகசியக்கூட்டம் இந்த இலட்சியத்தை அடைவதற்காகவே வேலை செய்து வந்தது’’ இச்சங்கம் மாணவர்கள் நடவடிக்கைகளை புரட்சிப் பாதையில் வழிப்படுத்த முயற்சித்து வந்தது. மாணவர்களின் உற்சாகம் அதிகாரிகளைத் தன்னிலை இழக்கச் செய்து அவர்களை, சபாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைத் தடுத்து நிறுத்த கெடுபிடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற முறையில் சிந்திக்க வைத்தது.
மாணவர்கள் அசைக்க முடியாத உறுதிமிக்கவர்களாக மாறிவிட்டதோடு அரசாங்கத்திற்கெதிரான சபையின் நடவடிக்கைகளிலும் சுதந்திரமாகப் பங்காற்றுகிறார்கள் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் அறிவித்தார்கள். பிரிட்டிஷ் அரசின் இந்தியச் செயலாளர் (Secretary of State of India) வைஸ்ராய்க்கு எழுதிய 1931-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதியிட்ட தன் கடிதத்தில் பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அரசு உத்தியோக வாய்ப்பை மறுத்துவிடலாம் என்று யோசனை கூறும் அளவிற்குப் போய்விட்டனர். பஞ்சாப் கவர்னரோ, பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் புரட்சிப் போக்கைத் தடுத்து நிறுத்தத் தவறினால் மானியங்கள் நிறுத்தப்பட்டு, பள்ளிக்கு அளிக்கப்பட்ட அரசு அங்கீகாரம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை செய்யும் எல்லையை எட்டினார். “புரட்சி அல்லது சட்ட ஒழுங்கற்ற அராஜகத் தத்துவங்களை போதிக்கும் ஆசிரியர்கள் பணியிலிருந்து விலக்கப்படுவார்கள்’’ என்றும் பயமுறுத்தப்பட்டார்கள். மாணவர்களிடையே வளர்ந்து வரும் பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுகளைத் தடுத்து நிறுத்துவதற்காக அரசாங்கம் அடக்குமுறை, சீர்திருத்தம் என்று இரட்டைக் கொள்கையை மேற்கொண்டது.
ஒருபுறம் நிர்வாகங்களும், கல்லூரி முதல்வர்களும் தங்கள் கல்லூரிகளில் இருந்து புரட்சியாளர்களைக் களையெடுக்க வற்புறுத்தியது. மறுபுறம் பெற்றோர்கள் கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து கூட்டான செல்வாக்கை அந்தப் பகுதி மாணவர்களின் மீது செலுத்துவதற்கு ஏதுவாக பெற்றோர்கள் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டது: இத்தகைய அடக்குமுறை இளைஞர்களது புரட்சிகர உணர்வைத் தூண்டுவதற்குத்தான் துணைபுரிந்தது. பஞ்சாபில் மாணவர்களது நடவடிக்கைகள் மேலும் அதிகரித்தன. மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள சபையின் செல்வாக்கிற்கு எதிர் நடவடிக்கையாக “அரசு விசுவாசிகள்’’ ‘பஞ்சாப் பல்கலைக் கழக மாணவர் சங்கம்’ ஒன்றை உருவாக்கினார்கள். தேவையான அளவிற்குப் பண உதவிகளைப் பெற்றிருந்த இச்சங்கம் மாணவர்களிடமிருந்த அரசியல் மற்றும் புரட்சிகர உணர்வுகளை அழிப்பதற்குப் பல கொண்டாட்டங்களையும், விழாக்களையும் திட்டமிட்டு ஏற்பாடு செய்தது. ஒரே மாதிரியான வழிகளில் செயல்பட்டு வந்த சபையையும் மற்ற அமைப்புகளையும் ஒடுக்குவதே இதன் ஒரே இலட்சியமாக இருந்தது.
“சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளில் செய்லபடும் புரட்சிகர இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் டி.ஏ.வி. கல்லூரியிலிருந்து வெளிவருவதால், அக்கல்லூரியில் படித்த இளைஞர்களை வேலைக்கு எடுக்கும்போது அரசு மிகவும் கவனமாக இருந்தது’’ என்று கூறும் அளவிற்கு லாகூர் டி.ஏ.வி. கல்லூரி புரட்சிகர உணர்வினால் தாக்கப்பட்டிருந்தது. பலரது எதிர்காலத்தை அழித்த இந்த அடக்குமுறையினால் எள்ளளவும் கலங்காமல் மாணவர்கள் உற்சாகத்துடன் சபையின் நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர்.
பகுதி இரண்டு
முற்றிலும் வெள்ளையர்களே நிரம்பிய சைமன் கமிஷன் இந்தியா மீது திணிக்கப்பட்ட நிகழ்ச்சியைப் போல, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின்னர் எந்த நிகழ்ச்சியும் மக்களை அவ்வளவு ஆழமாகப் பாதிக்கவில்லை. இது, அனைத்து உற்சாகம் வாய்ந்த சக்திகளையும், கட்சிகளையும், தேசியவாதிகள் மற்றும் புரட்சிவாதிகளின் அமைப்புகளையும் தத்தமது கொள்கை வழிகளைத் தாண்டி ஒன்றுபடுத்தியது. நவஜவான் பாரத சபையும் மற்றவற்றிற்குப் பின்தங்கிவிடவில்லை. அது 1928-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ந் தேதி அன்று கூட்டமொன்றை நடத்தி கமிஷனைப் புறக்கணிப்பதற்கான தீவிரப் பிரச்சாரத்தை செய்தது. ஆனால் சபையைப் பொறுத்த மட்டில் சைமன் கமிஷன் புறக்கணிப்பின் நோக்கம் வித்தியாசமானது. திரும்பத் திரும்ப வேண்டிக்கொண்டும் காங்கிரஸ்காரர்கள் எவரும் கமிஷனில் சேர்த்துக் கொள்ளப்படாததால் காங்கிரஸ், கமிஷனை எதிர்த்தது. ஆனால் சபையோ, “ஆங்கிலேயே அரசாங்கத்திற்கு நம் வாழ்வை நிர்ணயிக்க உரிமை கிடையாது’’ என்ற உறுதியுடன் “கமிஷனை அனுப்புவதற்கு அவர்கள் யார்?’’ என்ற கேள்வியையும் முன் வைத்தது. கமிஷன் வந்து சேர்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் 1928-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதியன்று சபை லாகூரில் மற்றொரு கூட்டத்தைக் கூட்டி அக்டோபர் 30-ந் தேதி கமிஷன் லாகூரை வந்தடையும் போது ஆர்பாட்டம் ஒன்றை நடத்துவதாகத் தீர்மானித்தது.
உண்மையாகப் பார்க்கப்போனால் லாகூரில் கமிஷனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததே சபைதான். அதன் வெற்றியைக் கண்டு காங்கிரஸ் தலைவர்கள் ஊர்வலத்திற்குத் தலைமை வகிக்க முன்வந்தார்கள். ஒருநாள் முன்னதாக, 1928-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதியன்று லாகூர் போலீஸ் கண்காணிப்பாளராகிய ஸ்காட் என்பவர் தன்னால் அனுமதிக்கப்படாத ஊர்வலத்தை ஏற்பாடு செய்வதையும், அதில் கலந்து கொள்வதையும் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவை மறுதலித்து, அதனைத் தூக்கியெறியும்படி மக்களை வற்புறுத்த அன்று மாலையே ஒரு கண்டனக் கூட்டம் நடத்தப் பெற்றது. அதனை மீறுதல் என்கிற முறையில்தான் அந்தப் போலீஸ் ஆணை ஏற்றுக்கொள்ளப்பட்டது. மக்கட்பெருந்திரள் அக்டோபர் மாதம் 30-ம் தேதி லாகூர் வீதிகளைச் சுற்றிப் பேரலையாய்த் திரண்டெழுந்து சைமன் எதிர்ப்புக் கோஷங்களை முழக்கியது. இரண்டு வாரங்களுக்குப் பின்னர் லஜபதிராய் காலமாவதற்குக் காரணமாயிருந்த திட்டமிட்ட தடியடி பிரயோகத்தால் “கர்வ பங்கம்’’ அடைந்த அரசாங்கத்தின் அதிகாரிகள் தமது கடைசித் தந்திரமாகச் செயல்படுத்தினார்கள்.
ஐயத்திற்கிடமின்றி இது நாடு முழுமைக்கும் வேண்டுமென்றே இழைக்கப்பட்ட பெரும் அவமானமும் அநீதியுமாகும்.
லஜபதிராயின் மேன்மையை மெய்ப்பித்து நிலை நாட்டுவதில் இளைஞர்கள் தீவிர முனைப்புடன் இருந்தார்கள். சபை பல பொதுக்கூட்டங்களை நடத்தி, லஜபதிராயின் கொலைக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியது. டிசம்பர் 16-ந் தேதி அன்று ‘கக்கோரி தினத்தை’ அனுஷ்டிக்கும் வண்ணம் லாகூரிலும், அமிர்தசரசிலும் நடத்தப்பட்ட கூட்டங்களில் பேச்சாளர்கள் புரட்சிவாதிகளின் நாட்டுப்பற்றுணர்வை வெகுவாகச் சிறப்பித்தார்கள். டிசம்பர் 17-ம் தேதியன்று தடியடிக்குக் காரணமான சாண்டர்சும் அவரது உதவியாளரும் கொல்லப்பட்டனர். “கொலை நடந்த சூழ்நிலையானது கூட்டாக இல்லாவிடினும், சபை உறுப்பினர் பலரின் மீது தனித்தனியாக சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். 20 உண்மையில் சபையின் நிறுவனரான பகத்சிங்தான் டிசம்பர் 17-ந் தேதி அன்று சாண்டர்சைக் கொன்றவர். “பகத் சிங் புகழ் பெற்றது லாலா லஜபதிராயின் மேன்மையையும் அதன் முலம் தேசத்தின் மேன்மையையும் நிலைநிறுத்தும் முகமாகச் செயற்பட்டதாகத் தோன்றியதால் தானேயொழிய அவரது பயங்கரவாத நடவடிக்கையாலன்று அவர் ஓர் அடையாளச் சின்னமாக வடிவம் பெற்றார். அவரது செயலின் பயங்கரம் மறக்கப்பட்டது: அடையாளம் மட்டும் எஞ்சி நின்றது. சில மாதங்களுக்குள்ளாகவே பஞ்சாபின் ஒவ்வொரு கிராமமும், நகரமும், ஓரளவிற்கு இந்தியாவின் மற்றெல்லா பகுதிகளும் பகத்சிங்கின் பெயரை எதிரொலித்தன. அவரைப் பற்றின எண்ணற்ற கற்பனைக் கதைகள் எழுந்தன. அந்த மனிதனுக்குக் கிடைத்த பெயரும் புகழும் ஆச்சரியப்படத்தக்க விதமாய் அமைந்தது.’’
தாய் நாட்டின் விடுதலைக்காகத் தியாகம் செய்யுமாறு இளைஞர்களைத் தூண்டும் இலக்கியங்களை அவர்களுக்கு அளிப்பது, தியாகிகளின் நினைவுகளை அவர்களின் நெஞ்சில் எழுப்புவது, ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரை விடுவிப்பதில் துணைபுரிவது ஆகியவற்றுடன் இளைஞர்களின் உள்ளங்களில் நாட்டுப்பற்றுணர்வை வளர்ப்பது என்ற அறிவிக்கப்பட்ட கொள்கைகளோடு 1928-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சபை ஒரு செய்திப் பத்திரிகையை துவங்கியது. அதன் முதற் பிரதியிலேயே மதன்லால் திங்ராவின் வாழ்க்கை வரலாறும் சோகன்சிங் ஜோஷின் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டன. 1928-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி இதழில் தங்களது கோழைத்தனத்திலிருந்தும், பய உணர்விலிருந்தும், வெட்கமற்ற தன்மையிலிருந்தும் இளைஞர்களை விட்டு விலகச் சொல்லும் புரட்சிகர வேண்டுகோள் ஒன்றை அப்பத்திரிகை “நேரம் வந்துவிட்டது’’ என்ற தலைப்பில் வெளியிட்டது. அது, ஆதரவற்ற நிலையிலுள்ள நம் அன்னையின் குருதியைக் குடிக்கத் தயாராக அவள் மார்புக்கு நேராகத் தொங்கிக்கொண்டிருக்கும் அன்னியக் கத்தியை’’ அவர்களுக்கு நினைவுறுத்தி, அராஜகவாதிகளின் இரத்தத் தாகத்தை தணித்து, குருதியை ஆறாகப் பெருகி ஓடச் செய்ய இளைஞர்களே எழுங்கள்! என்று அறை கூவியது. தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளை வெளியிட்டு இளைஞர்களின் உள்ளத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது வெறுப்பையும் இகழ்ச்சியையும் வளர்ப்பதில் அப்பத்திரிகை வெற்றி பெற்றது.

பஞ்சாப் மாகாண நவஜவான் பாரத சபை அதனுடைய இரண்டாவது மாநாட்டை லாகூரில் 1929_-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-_ந் தேதியிலிருந்து 24_-ந்தேதி முடிய சோகன்சிங் ஜோஷ் தலைமையில் நடத்தியது. இம்மாநாடு எள்ளளவும் இரக்கமின்றி காங்கிரசின் டொமினியன் அந்தஸ்திற்கான கோரிக்கையை விமரிசித்தது. இந்த “மாநாடு நவஜவான் பாரத சபையின் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வையும், புரட்சிகரமான கம்யூனிச உணர்வையும் பிரதிபலித்தது’’.
1929-_ம் ஆண்டு இறுதிக்குள் ஐக்கிய மாகாணங்களின் (தற்போதைய உத்திரப் பிரதேசத்தின்) பல மாவட்டங்களிலும் சபையின் கிளைகள் நிறுவப்பட்டன. மீரட் நகரில் 1929-_ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-_ம் நாள் சபையின் கிளை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு ராதாமோகன் ஜாரின் வீட்டில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதேபோல, பின் வந்த ஆண்டுகளில் மிகவும் சிறப்பாகச் செயலாற்றிய சபையின் சிந்து மாகாணக் கிளை கராச்சியில் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் மேற்குப் பகுதியான பம்பாய், சூரத் போன்ற தொலைவான இடங்களிலும் தனது கிளைகளைப் படரவிடுவதில் சபை வெற்றியடைந்தது.
சபையின் நிறுவன உறுப்பினரும், அதன் முதல் செயலருமாகிய பகவத்சிங் இப்போது இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசுச் சங்கத்தின் சிறப்பான செயல்வீரராகவும், பெரும்புரட்சியாளராகவும் ஆகிவிட்டார். 1929-_ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-_ந் தேதியன்று உறுப்பினர்கள் ‘பொது மக்கள் பாதுகாப்பு மசோதா’வைப் (Public Safety Bill) பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது பகவத்சிங், பி.கே. தத்துடன் சட்டசபையில் வெடிகுண்டுகளை வீசிஎறிந்தார். “இன்குலாப் ஜிந்தாபாத்’ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக’’ என்ற கோஷங்களை அவர்கள் முழக்கினார்கள். அந்த இடத்திலேயே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பகவத்சிங்கும் அவரது தோழரும் சிறையிலிடப்பட்டவுடன் சபையின் நடவடிக்கைகள் மேலும் வேகத்தைப் பெற்றன. அடுத்தாற்போன்று ஜதீந்திரநாத் தாசும், பகவத்சிங்கும், தத்தும் மற்றவர்களும் சிறைக்குள்ளிருந்து நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் எரியும் நெருப்பில் எண்ணை விட்டதாய் அமைந்தது. உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஏகாதிபத்திய அரசை வற்புறுத்தியும் சபையின் ஆதரவில் பொதுக் கூட்டங்கள் பல நடத்தப்பட்டன.
1929-_ம் ஆண்டு ஜீன் 19-ந் தேதி அன்று பகத்சிங், தத் மற்றும் கிதார்நாத் செகால் ஆகியோரைப் பாராட்டுவதற்கு லாகூரிலும், அமிர்தசரசிலும் சபை கூட்டங்களை நடத்தியது. பகவத்சிங்கின் தந்தையார் சர்தார் கிசான் சிங் லாகூர் கூட்டத்துப் பேச்சாளர்களில் ஒருவர். “தனது மகன் குற்றம் சாட்டப்பட்டிருப்பதற்காகத் தான் வருந்தவில்லை என்றும், தனது மகனும், பி.கே. தத்தும் எந்த இலட்சியத்திற்காகத் தண்டிக்கப்பட்டார்களோ அந்த இலட்சியம் முடிவில் நிறைவேறியுள்ளது’’ என்றும் அவர் கூறினார். மில்கி ராம் என்னும் சபை உறுப்பினர் ஒருவர் அந்நியத் துணியை பகிஷ்காரம் செய்து கதர் துணியை ஏற்றுக்கொள்வது நாட்டு விடுதலைக்கு வழிகோலும் என்ற எண்ணத்தை பரிகசித்ததுடன் அங்குள்ளவர்களை, “தொப்பிகள் அணிந்து கொள்ளுங்கள். துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று அறிவுறுத்தினார்.
1929-ம் ஆண்டு ஜீலை 21-_ம் நாளை சபை, அனைத்திந்திய பகவத்சிங்-தத் தினமாக கடைப்பிடித்தது அனைத்து காங்கிரஸ் இளைஞர்களுக்கும், தொழிலாளர் அமைப்புகளுக்கும், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்துதல், ஊர்வலங்களை நடத்தி லாகூர் சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிதி திரட்டுதல், மற்றும் சிறைக் கைதிகளை நடத்தும் முறைக்கு நாட்டின் எதிர்ப்பைத் தெரிவிப்பதாயும், அவர்களது போராட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் முறையில் மாலையில் கூட்டங்களை நடத்துதல் ஆகியவற்றின் மூலமாக அந்த தினத்தை அனுஷ்டிக்குமாறு சபை வேண்டுகோள் விடுத்தது. சிறைக்குள் இருந்து கொண்டும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தங்களது போராட்டத்தைப் புரட்சியாளர்கள் தொடர்ந்தார்கள். சிறைக்குள் தங்களை நடத்தப்படும் முறையில் முன்னேற்றம் தேவையென்று வற்புறுத்தினார்கள். பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் இதைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமற் போகவே, பகவத்சிங், ஜதீந்திர தாஸ், பி.கே. தத் ஆகியோரும் மற்றவர்களும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட சிறைக்குள் உண்ணாவிரதம் துவக்கினர். இப்பட்டினிப் போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்தும் அரசு அசைந்து கொடுக்காமல் இருந்தது. முடிவில் தனது உண்ணாவிரதத்தின் அறுபத்து மூன்றாவது நாளில் ஜதீந்திர தாஸ் தனது இறுதி மூச்சை விட்டு தியாகியானார். அவரது தியாகச் செய்தி காட்டுத் தீ போல எங்கும் பரவியது. இது நாடு தழுவிய எதிர்ப்புக்களைக் கிளப்பியது. சிறைக்குள் நடந்த இரண்டு மாத கால பட்டினிப் போரும், தாசின் தியாகமும் பல காந்தியவாதிகள் நம்பிக் கொண்டிருந்தபடி நவஜவான் பாரத சபை வெறும் ஆள் வலிமையை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பல்ல என்பதைக் காட்டியது. அவர்களது உண்ணாவிரதம் ஆத்மசக்தியின் ஆற்றலை நிறுவியதுடன், அரசியல் கைதிகளுக்குச் சலுகைகள் அளிக்கும்படி ஏகாதிபத்திய அரசை பணியவைப்பதிலும் வெற்றி பெற்றது. உண்மையில் உடல் உறுதி, ஆத்ம சக்தி ஆகியவற்றின் சரியான கலவை ஒன்றையே அவர்கள் நம்பினார்கள்.
1929_-ம் ஆண்டு டிசம்பர் 23-ல் சுஹாசினி நம்பியார் தலைமையில் சபை கூடியது. அங்கு தாசின் தியாகம் பற்றின பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “எல்லோருக்கும் முன் மாதிரியான தியாகத்திற்காக ஜே.என். தாசுக்கு இம்மாநாடு அஞ்சலி செலுத்துகின்றது. அவரது மறைவுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கத்தின் தோளிலே சுமத்துகிறது’’ சுஹாசினி தமது பேச்சில் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் டொமினியன் அந்தஸ்துக் கொள்கையைச் சாடியதுடன், சில்லறைத்தனமான பேரங்களை நடத்தும் தலைவர்கள் விரைவில் தங்களது வெகு ஜனப் பிடிப்பை இழந்து விடுவார்களெனவும் எச்சரித்தார்.
1929-ல் காந்தி சட்ட மறுப்புக் கொள்கையைப் போதிக்க ஆரம்பித்தார். இக்கொள்கைகள் சபையால் வரவேற்கப்பட்டன. 1929-_ம் ஆண்டு அக்டோபர் 6-_ந் தேதியன்று அமிர்தசரசில் சபை மேடையிலிருந்து கொண்டு டாக்டர் சைபுதீன் கிச்லூ, சட்ட மறுப்பிற்கும், நாட்டு விடுதலைக்கும் காங்கிரஸ் நடத்த விரும்பும் எந்தத் திட்டத்திற்கும் நாடு தயாராய் இருப்பதாக கூறினார். 1930_-ம் ஆண்டு மார்ச் ஆரம்பத்தில் காந்தி, தனது நாடு தழுவிய சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். காங்கிரசின் சட்ட மறுப்புக் கோட்பாட்டை விளம்பரப்படுத்துவதற்கு சபையின் மேடை பகிரங்கமாகப் பயன்படுத்தப்பட்டது. 1929-_ம் ஆண்டு அக்டோபர் 19_20 தேதிகளில் நடைபெற்ற லாகூர் மாணவர்கள் மாநாட்டில் இளைஞர் இயக்கம் ஓர் உத்வேகம் பெற்றதையும், அதே சமயத்தில் காங்கிரசின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறையத் துவங்கியதையும் கண்ட காங்கிரஸ், சபையின் ஆதரவில் அக்கறை காட்ட வேண்டியிருந்தது. 1929_-ம் ஆண்டிலும் இளைஞர் இயக்கம் அபாய ஊற்றாகத் தொடர்ந்தது. நவ ஜவான் பாரத சபையின் வழியில் ஜலந்தரில் தோபா பாலிக் சபை (Doaba Balik Sabha) என்ற பெயரின் கீழ் மற்றொரு அமைப்பு எழுந்தது. ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் காங்கிரசிற்குச் சபை உதவிய போதும், சபைத் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களை இளைஞர்களின் வழியிலிருந்து தள்ளிநிற்குமாறு எச்சரித்தனர். ஆனாலும் இரண்டு அமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு சட்டமறுப்பு இயக்கம் முழுமையும் நீடித்தது.
பஞ்சாப் காங்கிரஸ் 1930 -பிப்ரவரியில் ‘உண்ணாவிரதம்’ அனுஷ்டித்தது. அது சபையால் மிகுந்த உற்சாகத்துடன் ஆதரிக்கப்பட்டது. கூடவே லாகூர் சதித் திட்ட வழக்கிற்காக நிதி வசூலிக்கும் பணியிலும் சபை மிகத் தீவிரமாக செயல்பட்டது. சபையின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அளவிற்கு, சபையானது பஞ்சாப் மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றது. ஆனால் அரசின் எந்த நடவடிக்கையாலும் கிளர்ந்தெழும் மக்கள் சக்தியை தடை செய்ய இயலவில்லை. சபை தொடர்ந்து மக்கள் ஆதரவை அதிக அளவில் பெற்றது. 1930 மார்ச் 20-_ம் தேதியன்று மீரட்தின’ ஊர்வலங்கள் நடத்தப்பட்டு, மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு நிதியும் திரட்டப்பட்டது. இறுதியில் சபை, வெள்ளை அதிகார வர்க்கத்தின் கடுங்கோபத்திற்காளானது. சபை பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாகவும், சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதில் குறுக்கிடுவதாகவும் குறிப்பிட்டு அதனால் சபையைச் சட்டவிரோதமான அமைப்பு என 1930-_ம் ஆண்டு ஜீன் 23_-ந் தேதியன்று பஞ்சாப் அரசாங்கம் அறிவித்தது. சபை அலுவலகம் தேடப்பட்டது. மாகாணம் முழுதும் அதன் தலைவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.
காங்கிரஸ் உட்பட மற்ற அரசியல் அமைப்புகளின் செல்வாக்கையெல்லாம் ஒளிமங்கச் செய்து, சபை மேலோங்கியிருந்த சிந்துப் பகுதியிலும் ஏகாதிபத்திய அரசு இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாயிற்று. இங்கு, எததகைய உண்மையான முன்னேற்றத்தையும் உண்டாக்கத் தவறிய அஹிம்சாவாதிகள் என்று பகட்டிக்கொண்ட காங்கிரசின் கைகளிலிருந்து இயக்கமானது வன்முறையை கைக்கொண்ட தீவிர (Violent Organisations) என்று மூல ஆசிரியர் குறிப்பிடுவதை வன்முறை அமைப்புகள் என்று மொழியாக்கியுள்ளேன். வேண்டுமென்றால் போர்க்குணமிக்க அமைப்புகள் அல்லது தீவிர அமைப்புகள் என்ற பதத்தைப் பயன்படுத்தலாம், அமைப்புகளின் கைகளைச் சென்றடைந்தது. இத்தகைய அமைப்புகளுக்குள் நவ ஜவான் பாரத சபை தலைமையிடம் வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷிய இளைஞர்களைப் போல இந்திய இளைஞர்களும் கிராமங்களுக்குச் சென்று, அங்கு இந்தியாவில் வரவிருக்கும் புரட்சியின் உண்மையான அர்த்தத்தை விளக்குமாறு சபை பெரிதும் வலியுறுத்தியது- புதியபுரட்சி என்பது வெறும் ஆட்சியாளர்களின் மாற்றத்தை மட்டும் குறிக்கவில்லை என்பதனைக் கிராமத்தினருக்குப் புரிய வைக்கவும், உணர வைக்கவும் வேண்டியிருந்தது. பூரணமான புதிய சோஷலிச-அரசியல் முறையை நிர்மாணிப்பதற்காக அது பாடுபடும். எனவே அது மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் புரட்சி, வேறு வார்த்தைகளில் சொன்னால் 98 சதவித மக்களுக்கு அது சுயராஜ்யத்தை அளிக்கும்.
விசேஷ நீதிமன்றம் விசாரணை நாடகத்தைச் சற்றும் வெட்கமின்றி ஆறு மாதங்கள் நடத்தியது. இறுதியில் மகத்தான துவக்க தினமாகிய 1930-_ம் ஆண்டு அக்டோபர் 7-ல் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவருக்கும் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. மீண்டும் ஒரு முறை தேசத்தின் ஆன்ம கொடூரமாகக் கீறப்பட்டது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பகவத்சிங் ஏறத்தாழ ஒரு வழிபாட்டுச் சின்னமாகவே மாறிவிட்டார். இப்போது பகவத்சிங் ஏகாதிபத்தியச் சக்திக்கு எதிரான போராட்டத்தில் ஈடிணையற்ற வீரத்தின் சின்னமாகத் திகழ்ந்தார். காந்தியின் சட்ட மறுப்பு இயக்கமும் இப்போது பலம் பெற்று வந்தது. ஆனால் சட்டமறுப்பு போராட்டம் திடீரென திரும்பப் பெறப்பட்டது. வைஸ்ராயுடன் பேச்சு வார்த்தை நடத்த காந்தி ஒத்துக்கொண்டார். பஞ்சாப் முழுவதும் பகத்சிங் ‘அப்பீல் கமிட்டிகள்’ (Appeal Committees) உருவாக்கப்பட்டன. 1930-_ம் ஆண்டு ஜீன் மாதம் சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டிருந்த சபை இக்கமிட்டிகளின் மூலம் புத்துயிர் பெற்றது.

லாகூரிலும், அமிர்தசரசிலும் கிட்டத்தட்ட கமிட்டி அங்கத்தினர்கள் அனைவருமே சபையின் பழைய செயல்வீரர்களே. மக்களின் உணர்ச்சிகளை மகத்தான உச்சத்திற்குத் தூண்டிவிட்டு, தூக்கிடப்படும் நாளன்று. ஒரு பெரும் எதிர்ப்புக்குத் தயார்படுத்துவதே இக்கமிட்டிகளின் இலட்சியமாக இருந்தது. 1930-_ம் ஆண்டு பிப்ரவரி 17-_ல் பஞ்சாப் முழுவதும் பகவத் சிங் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கிட்டதட்ட அனைத்துக் கல்லூரிகளுமே வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டன. தயானந்த ஆங்கிலோ -வேதக் கல்லூரியிலும், சனாதன தர்மக் கல்லூரியிலும் அனைத்து மாணவர்களும் தாங்களாகவே வகுப்புகளுக்குச் செல்லாமல் இருந்தார்கள். ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டதுடன், மாலையில் பதினையாயிரம் மக்கட் திரளுடன் பெருங்கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. கூட்டத்தில் சர்துல்சிங், சத்யபால், பாபாசோஹன்சிங் மற்றும் பலர் பேசினார்கள். பகவத்சிங் தூக்கிலிடப்படுவது தமது தாய்நாட்டை நேசிப்பவர்கள் அனைவருக்கும் விடப்பட்ட ஒரு பெரும் சவாலாகும் என்றும், அமைதிக்குரிய வாய்ப்புகள் அனைத்தும் இதனால் பெரும் ஆபத்துக்குள்ளாக்கப் பட்டிருப்பதாகவும் சத்யபால் கூறினார்.
அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்குரிய நிபந்தனைகளில் ஒன்றாக இம்மரண தண்டனைத் தீர்ப்பை மாற்றுவதைக் காங்கிரஸ் வைக்காதிருந்தால், தீவிரவாதிகளிடம் அது செல்வாக்கிழந்துவிடும் என்பது தெளிவாகத் தெரியும் வண்ணம் தீவிரவாதிகளின் உத்வேகம் மிக அதிகமாக இருந்தது.23 1931_-ம் ஆண்டு பிப்ரவரி 16_-ந் தேதி பிரிவு கவுன்சில் (Privy Council) பகவத்சிங் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் மனுக்களை நிராகரித்தது. ஒரு வாரத்திற்குப் பின் அலகாபாத்தில் ஒரு போலீஸ் தாக்குதலின் போது சந்திரசேகர் ஆசாத் கொல்லப்பட்டார்.
சட்ட மறுப்பு இயக்கத்தைக் காந்தி கைவிடுவதற்குக் காரணமாயிருந்த காந்தி -_இர்வின் பிரபு சமரசப் பேச்சு வார்த்தைகளின் வெற்றிக்குச் சிறிது முன்னதாக அரசாங்கம் அரசியற் கைதிகளை விடுதலை செய்வதாக உறுதியளித்தது. ஆனால் அது, அஹிம்சை இயக்கத்தில் தொடர்புள்ள அரசியல் கைதிகளை மட்டுமே விடுதலை செய்யத் தயாராக இருந்தது. சபை இளைஞர்கள் இந்த அமைதி உடன்பாட்டில் திருப்தியடையாததோடு, தமது எதிர்ப்பிற்கு அடையாளமாக ஜாலியன்_வாலாபாக்கில் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு மேலாக கருப்புத் துணி ஒன்றை விரித்துப் பரப்பினார்கள். அமைதி உடன்பாட்டைச் சபை ஊழியர்கள் காங்கிரசின் பரிதாபகரமான சரணாகதி என்று விவரித்தார்கள். மேலும், “காந்தி ஒழிக” போன்ற கோஷங்களைக்கூட அவர்கள் எழுப்பினார்கள். இவ்வாறாக காந்தி_இர்வின் ஒப்பந்தம் புரட்சியாளர்களைத் தனிப்படுத்தி, பகவத்சிங்கையும் அவரது கூட்டாளிகளையும் தூக்கிலிடுவதற்கு அரசாங்கத்திற்கு மறைமுகமாக உதவியது. நாடு முழுமையும் கலகமும் குழப்பமும் நிலவியபோதும் அரசாங்கம் தனது திட்டத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து பிடிவாதமாய் இருந்து வந்தது. 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் நாள் அந்த மூன்று விடுதலை வீரர்களும் தூக்குக் கயிற்றை முத்தமிட்டுத் தாய் நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்தார்கள். சபை பகிரங்கமாகவே பகவத்சிங் மற்றும் அவரது தோழர்களின் மறைவிற்குக் காந்தியைப் பொறுப்பாக்கியது. “மகாத்மா காந்தி இதனை அமைதிக்குரிய நிபந்தனையாக வைத்திருந்தால் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்காது’’24 “அந்தப் பையன்களைத் தூக்கிலிடுவதாக இருந்தால் கராச்சி காங்கிரஸ் கூட்டத்திற்குப் பின்னதாக இல்லாமல், முன்னதாகவே தூக்கிலிடுவது நல்லது என்று மகாத்மா காந்தி வைஸ்ராயிடம், தானாகவே வேண்டிக் கொண்ட உண்மையை அப்போது புரட்சியாளர்கள் அறியாதிருந்தார்கள்.
இந்த தேசாபிமானிகள் தூக்கிலிடப்பட்டது, மூன்று நாட்களுக்குப் பின்னர் நடந்த காங்கிரசின் கராச்சி கூட்டத்தில் ஒரு இருளைக் கவித்தது. பட்டாபி சீத்தாராமையாவின் கூற்றுப்படி “அந்த நேரத்தில் பகவத்சிங்கின் பெயர் இந்தியா முழுவதும் பரவலாகத் தெரிந்திருந்ததுடன், காந்தியின் அளவிற்கு செல்வாக்குடனும் இருந்தது என்று கூறுவது மிகையாகாது’’. 1931-_ம் ஆண்டு மார்ச் 25 அன்று காங்கிரசின் கராச்சிக் கூட்டத்திற்காக காந்தி வந்திறங்கியபோது அவருக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. கொதித்துக்கொண்டிருந்த இளைஞர்களின் கோபமும் விரோதமும் கொண்ட வரவேற்பை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. “காந்தி ஒழிக’’ போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன. அதே நேரத்தில் சபையும் கராச்சியில் தனது மாநாட்டை நடத்தியது. அதற்குத் தலைமை ஏற்று நடத்த சுபாஷ் சந்திரபோஸ் அழைக்கப்பட்டார். டில்லியில் தற்காலிக சமாதான உடன்படிக்கை காங்கிரசின் தோல்வி மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக அறிவித்தார் தனது தலைமையுரையில் போஸ் மேலும் குறிப்பிட்டார். தான் இந்தியாவுக்கு ஒரு சோஷலிசக் குடியரசை வேண்டுகிறேன். நான் தெரிவிக்க வேண்டிய செய்தி பூரண விடுதலையாகும்.
இதயத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்டு, இதயத்திற்குள் நேராகப் பாயும் ஒரு புதிய கருத்து வடிவத்தின் மூலமாக மக்களை கவர்ந்துகொள்வதாலன்றி மற்றபடி நமக்குள் புரட்சி சிந்தனைகளைத் தூண்ட முடியாது. சுபாஷ் சந்திரபோஸ் மேலும், காங்கிரசின் கொள்கை மற்றும் திட்டத்தின் அடிப்படைப் பலவீனத்தைத் தெளிவாக்கினார். “காங்கிரஸ் தலைவர்களின் மனங்களில் தெளிவற்ற தன்மையும், கட்டுப்பாடுகளும் நிறைந்துள்ளன. அவர்களின் திட்டங்கள் தீவிரவாத முழுப்புரட்சியை அடிப்படையாகக் கொண்டதன்று. மாறாக அவை விட்டுக்கொடுத்து ஒத்துப்போகிற இணக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். அதாவது நிலப்பிரபுவிற்கும், குத்தகைதாரர்களுக்கும் இடையில், முதலாளிக்கும், கூலி உழைப்பாளர்களுக்கும் இடையில், உயர்ந்த வர்க்கத்தினர் என்று சொல்லப்படுபவர்களுக்குமிடையில், ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையில் விட்டுக் கொடுத்து ஏற்படுத்தப்படும் இணக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்’’ காங்கிரஸ் கட்சியின் திட்டம் இந்தியாவிற்கு விடுதலையைப் பெறுவதில் வெற்றி பெறாது என்ற கண்ணோட்டத்தை அவர் கொண்டிருந்தார். பதிலாக, தேசவிடுதலையை அடைவதற்கான தனது தீவிர முற்போக்கான திட்டத்தை அவர் முன் வைத்தார்.
கராச்சியில் காங்கிரஸ் கூடியபோது காந்தி – இர்வின் ஒப்பந்தம் அதில் எளிதாக ஏற்று உறுதி செய்யப்பட மாட்டாது என்றே தோன்றியது. கிட்டத்தட்ட தான் சந்தித்த எல்லா காங்கிரஸ்காரர்களும் ஒப்பந்தத்திற்கு எதிராகக் கசப்புணர்வுடன் பேசியதாக அஜாய் குமார் கோஷ்27 எழுதுகிறார். சுபாஷ் சந்திரபோஸ் கோஷிடம் தான் ஒப்பந்தத்தை அக்குவேறு ஆணிவேறாகக் குதறி எதிர்க்கப் போவதாகக் கூறினார். கராச்சியில் காங்கிரஸ் இடதுசாரிகளின் கூட்டத்தில் பேசும்போது போஸ், “நமக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் இடையே குருதிக் கடல் ஒன்றும் பிணக் குன்று ஒன்றும் உள்ளன. காந்தி கையொப்பமிட்ட இந்தச் சமாதான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு நம்மை செய்விக்க உலகில் எந்த சக்தியுமில்லை என்று அறிவித்தார்.28 ஆனால் வியக்கத்தக்க வகையில் காந்தி அனைத்து எதிர்ப்புகளுக்குமிடையில் நிலைத்திருந்தார். டில்லியின் தற்காலிக சமாதான உடன்படிக்கை மிகுதிப் பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இளைஞர்களின், குறிப்பாக நவஜவான் பாரத சபையினரின் மனத்தில் பெருத்த ஏமாற்றம் பூரணமாய்க் கவிந்தது.
சபையின் சில உறுப்பினர்களும் பஞ்சாபின் மற்ற தலைவர்களும் தியாகிகளின் நினைவை என்றும் நிலைத்திருக்கச் செய்யும் வண்ணம் ஒரு அனைத்திந்திய நினைவாலயத்தை நிறுவுவதென தீர்மானித்தார். 1931-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி லாகூர் பிராட்லாஃப் மண்டபத்தில் கூடி, அனைத்திந்திய பகவத் சிங், ராஜகுரு, -சுகதேவ் நினைவுக் கமிட்டி என்ற பெயரில் ஒரு கமிட்டியை அவர்கள் உருவாக்கினார்கள். தொழிலாளர் விடுதி ஒன்றும், சொற்பொழிவு மண்டபம் கட்டுவதற்கும், நூல்நிலையமொன்றும், படிப்பறை ஒன்றும் ஏற்படுத்துவதற்கும் கமிட்டி திட்டமிட்டது. இரண்டு நிரந்தர வைப்பு நிதிகளை ஏற்படுத்துவது என்றும் கமிட்டி திட்டமிட்டது.29 ஒன்றிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து அரசியல் கைதிகளை துன்பத்திலிருந்து விடுவிப்பதென்றும், அவர்களது குடும்பத்திற்கு உதவுவதென்றும், இன்னொரு வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் வட்டியின் மூலம் அரசியல் வழக்குகளை எதிர்த்து வழக்காடுவதற்குதவுவதென்றும், அரசியல் இலக்கியங்களை வெளியிடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. காந்தியின் ஆதரவிற்காகக் கமிட்டி அவரை நாடியது. ஆனால் அவர் தயவு தாட்சண்யமின்றி வன்முறை வழியை மேற்கொண்டவர்களின் புகழை நிலைநிறுத்துவதையே கமிட்டி தனது இலட்சியமாகக் கொண்டிருப்பதாகக் கூறி அதிலிருந்து விலகி நின்று கொண்டார்.
ஆசாத், பகவத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் தியாகங்களுக்குப் பின் சபையின் நடவடிக்கைகளும் இறுதி அறைகூவலும் வேகம் குறைந்து வந்தன. காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிராகவும், காந்தியின் தலைமைக்கு எதிராகவும் சபை வெளி வந்திருந்தது. ஆனால் அது காங்கிரசிற்கும், காந்திக்கும் மாற்றான திட்டத்தையும், தலைமையையும் வளர்க்கத் தவறியது. சபையின் அறைகூவல் உணர்ச்சிமயமானதாய் தீவிரவாத, தேசீயவாத, நடுத்தரவர்க்கத்து இளைஞர்களின் வரம்பிற்குள்ளாகவே அமைந்து விட்டது. அதன் தலைமை உறுப்பினர்களின் தத்துவங்களுக்கும், செயல்களுக்கும் இடையில் ஒரு முரண்பாடு இருந்தது. அவர்கள் சோஷலிசம், தொழிலாளர்கள் விவசாயிகள் ஒற்றுமை, வெகுஜன எழுச்சிகள் மூலம் பொருளாதார அடிமைத் தளையிலிருந்து விடுதலை என்பனவற்றைப் போதித்தார்கள். ஆனால் நடைமுறையில் அவர்கள் தேசீயவாதம், தனிமனித, அராஜக நடவடிக்கை ஆகியவற்றிற்கு அப்பால் போகவில்லை.
சபையின் மிகச் சிறந்த சிந்தனையாளர்கள் வன்முறையின் பாற்பட்டு ‘சாவின் மூலம் விளம்பரம்’ என்கிற கோட்பாட்டில் தஞ்சமடைந்தனர். அதன் விளைவாகத் தங்களின் எண்ணிக்கையும் குறைந்து, புதிய அணியினரையும் சேர்க்க முடியாமல் அழியத் துவங்கினர். சோஷலிசத்திலும், நிலவி வரும் அமைப்பைப் புரட்சிகரமாய்த் தூக்கி எறிவிதிலும் கொண்டுள்ள தமது நம்பிக்கையின் காரணமாக எஞ்சி இருந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். 1930-ம் ஆண்டு காந்தியால் தலைமை ஏற்று நடத்தப்பட்ட சட்ட மறுப்பு இயக்கத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு மிகப் பெரும் வலிமையைப் பெறுமளவிற்கு, தனது தலைவர்களின் மிக உயர்ந்த தியாகத்தின் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்ச்சியைத் தூண்டி விடுவதில் சபை வெற்றியடைந்தது.
முற்றும்
சான்றாதாரங்கள்
1. சமர் குஹா, “Socialist image of Netaji Subhas Chandra Bose” நேஷனல் ஹெரால்டு, ஆகஸ்டு 15, 1971.
2. ஹிரேன் முகர்ஜி, India Struggler for Freedom’ பக்கம் 127.
3. முஸாபர் அகமது, ‘My-self and the communist party of India’ National Book Agency, பக்கம் 122.
4. M.B. ராவ் தொகுத்த ‘The Mahatma – A Marxist Symposium’ என்னும் நூலில் மன்மத்தாத் குப்தா எழுதியுள்ள “Gandhi and the Revlutionaries” என்ற கட்டுரை.
5. இந்திய தேசிய ஆவணக் காப்பகம் (NAI) கோப்பு எண் 130, KW-1930, பக்கம் 36.
6. மேற்கண்ட சான்றாதாரம்.
7. NAI கோப்பு 27-5-1931, HP
1931-ம் ஆண்டு மே 22-ந் தேதியன்று மதுராவில் நடைபெற்ற நவஜவான் பாரதசபை மாநாட்டில் அலகாபாத்தை சேர்ந்த பி.என். சன்யால் கூறினார்: “சைனா காபூல் போன்ற மற்ற நாடுகளின் மீது கொடுமைகள் ஏவப்பட்டாலும், அங்குள்ள மக்களைச் சுட்டு கொன்று குவிக்க நம் நாட்டு ராணுவம் அங்கே சென்றாலும் அவை நம்மால் தடுக்க முடியாத வெட்கக் கேடான காரியமாக அமையும். எனினும் நாம் அதனைத் தடுக்க வேண்டும். நம் நாட்டுடன் நேரடியாக மோதல்களில் ஈடுபடாத நாட்டு மக்களைச் சுட்டுக் கொன்று குவித்து, அப்பாவி மக்களை அடிமைப் படுத்துவதற்காக அந்நாடுகளுக்குப் போக வேண்டாம் என்று நம் மக்களை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்.’’
8. காங்கிரஸ் எப்போதுமே அரசியல் விடுதலைக்காக மட்டுமே நின்றது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பொருளாதார விடுதலைக்கான கோரிக்கைகளை எப்போதுமே அது திசை திருப்பியது. நிலப்பிரபுத்துவத் தளையைத் தகர்த்தெறிய விவசாயிகள் முயன்ற போதெல்லாம் அம்முயற்சி காங்கிரசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. S.K. மித்தால்’ கபில் குமார், “Baba Ram Chandra and Peasant upsurge in Oudh, 1920-21” Social Scientist, June 1978.
9. NAI கோப்பு 130, KW- 1930, HP, பக்கம் 36.
10. மேற்கண்ட சான்றாதாரம், பக்கம் 36. லாலா லஜபதி ராயை நம்பிக்கை விரோதி என்று குற்றம் சாட்டி ‘இளம் பஞ்சாபியர்களுக்கு ஒரு வேண்டுகோள்’ என்ற தலைப்பிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்று சபையின் சார்பில் கிதார் நாத் செகால் மற்றும் நண்பர்களால் வெளியிடப்பட்டது.
11. யஷ்பால், “Sinhavalocan”, Viplavkaryalay, 1964, புத்தகம் 1, பக்கம் 92-93.
12. கிர்தி- கிஸான் கட்சி என்பது கம்யூனிச சார்புள்ள ஒரு விவசாயிகள்-தொழிலாளிகள் கட்சியாகும். இதன் தலைமையகம் அமர்தசரசில் இருந்தது.
13. கோப்பு எண் 130 KW- 1930 HP பக்கம் 100.
14. மேற்கண்ட சான்றாதாரம், பக்கம் 42 ராம் சந்த்ராவால் தயாரித்தளிக்கப்பட்ட சபைத் திட்டத்தை, அதே இடத்தில் நடைபெற்ற மாகாண ஜமீன்தார் லீகின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சௌதுரி சோதுராம் கண்டனம் செய்தார். ஜமீன்தார்களின் நியாயங்களை அவ்ர வெளிப்படையாக ஆதரித்துப் பேசினார்.
15. “The Tribune”, டிசம்பர் 28, 1929 “புரட்சி ஓங்குக’’ “பகவத்சிங் வாழ்க’’ போன்ற கோஷங்கள் மாநாட்டில் எழுப்பப்பட்டன.
16. கக்கோரி வழக்கில் தூக்கிலிடப்பட்ட ராம்பிரசாத் பிஸ்மில், ஜோகேஷ் சந்திரா சட்டர்ஜி, சசீந்திரநாத் சன்யால் ஆகியோரின் தலைமையில் 1924-_ம் ஆண்டு இந்துஸ்தான் குடியரசுச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
17. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பகவத்சிங்தான் இந்துஸ்தான் குடியரசுச் சங்கம் என்ற பெயருடன் ‘சோஷலிச’ என்கிற வார்த்தையைச் சேர்த்தவர்.
18. NAI கோப்பு 4-35-1931, HP. அரசுச் செயலாளரிடம் இருந்து இத்தகைய கடிதம் வந்தவுடன் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்குமாறும், இளைஞர்களிடம் தோன்றியுள்ள புரட்சிகர தன்மைகளைத் தடை செய்வதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைத் தெரிவிக்கும்படியாகவும் வைஸ்ராய் கவர்னர்களுக்குக் கடிதம் எழுதினார்.
19. NAI கோப்பு 4-35-1931, HP.
20. NAI கோப்பு 130, KW-1930, HP.
21. ஜவகர்லால் நேரு, An Auto Biography. New Delhi, 1962, பக்கம் 175-176.
22. NAI கோப்பு 130, KW-1930, பக்கம் 44.
23. புரட்சியாளர்களை விடுவிப்பதற்காகக் காங்கிரஸ்காரர்கள் போராடாவிட்டால் அந்தத் தலைவர்களுக்கும், சிறையிலிருந்து வெளிவரும் சாதாரண அரசியல் கைதிகளுக்கும் சைமன் கமிஷனைப்போல கறுப்புக் கொடி காட்டப்படும் என்றும், “காந்தியே திரும்பிப்போ’’, “ஜவஹர்லாலே திரும்பிப்போ’’ போன்ற கோஷங்களால் வாழ்த்தப்படுவார்கள் என்றும் சபைத் தலைவர்களில் ஒருவராகிய அகமத் தீன் அமிர்தசரசில் எச்சரித்தார். ழிகிமி. 18_1_1931.
24. ‘The Tribune’ ஏப்ரல் 9, 1931.
25. பட்டாபி சீதாராமைய்யா, ‘History of the Indian National Congress’ புத்தகம் 1, 1946, பக்கம் 442.
26. Netaji speaks to nation, Lahore, 1946, பக்கம் 84-85 இந்திய விடுதலைக்காக அவர் நம்பி முன்வைத்த திட்டமாவது: (1) விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளை அமைப்பு ரீதியாகத் திரட்டுதல். (2) சோஷலிசத் திட்டம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இளைஞர் தொண்டர் படையை உருவாக்குதல். (3) சாதீய அமைப்பை அழித்து, சமுதாய பற்றும் மதரீதியான மூடநம்பிக்கை வேரறுத்தல். (4) நமது புதிய தத்துவங்களை ஏற்றுக் கொண்டு, நமது புதிய திட்டத்திற்காகப் பணியாற்றக்கூடிய “மகளிர் மன்றங்களை’’ ஏற்படுத்துவதன் மூலம் நம் நாட்டுப் பெண்களைத் திரட்டுதல். (5) பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணிப்பதற்கான தீவிரத் திட்டம் (6) புதிய தத்துவத்தை விளக்கவும், புதிய கட்சியைக் கட்டவும் நாடு முழுமையும் பிரச்சாரம் செய்தல் (7) புதிய தத்துவத்தையும், திட்டத்தையும் பிரச்சாரம் செய்வதற்கான புதிய இலக்கியங்களைப் படைத்தல்.
27. அஜய்குமார் கோஷ், பகத்சிங்கின் நெருங்கிய நண்பர்; லாகூர் சதி வழக்கில் பகத்சிங்குடன் குற்றம் சாட்டப்பட்டு விடுதலையானவர்.
28. அஜய்குமார் கோஷ், ‘பகத்சிங்கும் அவரது நண்பர்களும்’ பக்கம் 1-3.
29. NAI; 4-12-1931.
நன்றி : கார்க்கி நூலகம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.