இந்தியா பாரம்பரியங்களின் வண்ணக்கலவை | India parambariyangalin vanna kalavai

‘இந்தியா – பாரம்பரியங்களின் வண்ணக்கலவை’ இளம் தலைமுறை வாசிக்க ஒரு கையேடு!

 

வரலாற்றில் நடந்த சம்பவங்கள் குறித்து சில புத்தகங்கள் நிறைய தகவல்களை கொடுக்கும், சில புத்தகங்கள் சில கருத்துக்களை முன் வைக்கும். ஆனால் சில புத்தகங்கள் தகவல்களினூடாக ஒரு கருத்தை முன்வைத்து அதன் அரசியலை விவரிக்கின்றபோது எளிதாக நம்மால் வரலாற்றைக் கற்றுக்கொள்ள முடியும்.

அப்படி ஒரு எளிய, சிக்கலற்ற எழுத்து நடையில் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வந்துள்ள புத்தகம்தான் “இந்தியா – பாரம்பரியங்களின் வண்ணக்கலவை” என்ற கட்டுரைத் தொகுப்பு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினரும், கட்சியின் சட்ட மன்றக்குழுத் தலைவருமான நாகைமாலி யின் படைப்புகளின் தொகுப்பு இந்த நூல்.

“இந்தியா – பாரம்பரியங்களின் வண்ணக் கலவை”, “மதங்களால் நாட்டை ஒற்றுமைப் படுத்த முடியாது”, “ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி – வெளிவரும் பாசிச முகங்கள்”, “அமைதியான பிள்ளையார் ஆயுதம் ஏந்தியது எப்படி?” “மதவெறித் தோட்டாக்களை உயிர்த்தெழ விடோம், மகாத்மாவே”, “காந்தி படுகொலை – இரண்டு கோட்பாடுகளின் மோதல்” ஆகிய தலைப்புகளில் உள்ள முதல் ஆறு கட்டுரைகள் பாசிசத்தின் கூறுகளை, பாசிச அரசியலை அது முன்வைக்கும் உளவியல் கேள்விகளை மிக நுட்பமாக அம்பலப்படுத்துகிறது.

தர்க்க ரீதியான கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலளிக்கும் வகையில் தரவுகளை முன் வைக்கிறார். “வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்தது திரேதா யுகம் என்று கூறப்பட்டுள்ளது. திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம், கிருதயுகம் என நான்கு யுகங்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. திரேதா யுகம் என்பது பன்னிரண்டு லட்சத்து தொண்ணூற்றி எட்டாயிரம் ஆண்டுகளாம். அடுத்த துவாபர யுகம் எட்டு லட்சத்து நான்காயிரம் ஆண்டுகளைக் கொண்டதாம். இப்போது நடப்பது கலியுகமாம். இது நான்கு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் ஆண்டுகளைக் கொண்டதாம். அடுத்துவரப் போவது கிருதயுகமாம். கலியுகம் துவங்கி நான்காயிரம் ஆண்டுகள் ஆகிறதாம். எப்படிப் பட்ட கற்பனை இது.

திரேதா யுகத்தின் இறுதியில் இராமர் பிறந்திருந்தால்கூட இராமர் பதின்மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் என்றுதானே பொருள்? இத்தனை ஆண்டுகளுக்கு முன், இராமர் பிறந்ததாகச் சொல்லப் படும் அயோத்தி இருந்ததா? மனிதன் அங்கு வாழ்ந்தானா?” என்ற, நூலாசிரியரின் கேள்விக்கணை ஓர் உதாரணம். இப்படி நூல் முழுவதும், பகுத்தறிவுக்கு பொருந்தாத விடயங்களுக்கு எதிராக நிறைய வாதங்கள்.

மகாத்மா காந்தியை கொலை செய்ய வேண்டும் என்ற நாதுராம் கோட்சே முடிவுக்குப் பின்னால் உள்ள சித்தாந்த அரசியலின் கோரமுகத்தை, தோட்டா ஒரு கருவி தான், அதன் இயக்கு விசை எதுவெனப் புரியவைக்கிறார்.

1966ஆம் ஆண்டு பசுவதைத் தடுப்புச் சட்டம் இயற்ற கோரிக்கை வைத்து தலைநகர் தில்லியில் ஊர்வலம் சென்ற சங் பரிவார் கூட்டம் கர்ம வீரர் காமராஜரை எப்படி கொலை செய்ய முயன்றனர் என்ற வரலாற்று தகவல் கொண்ட கட்டுரைதான் “மீண்டும் பசுமாட்டு அரசியல்”.
இராமர் கோவில் கட்ட ரதயாத்திரை சென்ற அத்வானியை தடுத்தி நிறுத்திய ஆட்சியை கவிழ்க்க நேரம் பார்த்திருந்த சங் பரிவார் அமைப்புகள், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முன்வைத்த மண்டல் கமிஷன் அமலாக்கத்தையொட்டி கலவரம் செய்து ஆட்சியை கவிழ்த்தனர்.

ஆம், தன் ஆட்சி கவிழும் எனத் தெரிந்தும், ரத யாத்திரையை தடுத்து நிறுத்திய, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு மண்டல் கமிஷன் அறிக்கையை அமலாக்கிய விஸ்வநாத் பிர தாப் சிங் என்ற மகத்தான மனிதனை அறிமுகம் செய்கிறது “இப்படியும் ஒரு பிரதமர் இந்தியாவில் இருந்தார்” என்ற கட்டுரை.

1982 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் உயிழந்த திருமெய்ஞானம் தியாகிகள் அஞ்சான் மற்றும் நாகூரான் களப்பலியை விவரிக்கிறது “ஒற்றுமைப் பயணத்தை உறுதி செய்வோம்” என்ற கட்டுரை.

இராம பக்தரான துளசிதாசர், பாபர் மசூதி கட்டப்பட்ட (1528) ஆண்டுகளில் வாழ்ந்தவர். இராம சரிதமானஸ் என்ற புகழ்பெற்ற இதிகாசத்தை எழுதிய கவிஞர், பாபர் மசூதி கட்டப்பட்டபின் பல்லாண்டுகள் உயிரோடு வாழ்ந்தவர். இராமர் கோவில் இடிக்கப்பட்டு அங்கு மசூதி கட்டப்பட்டிருந்தால் நிச்சயம் அவர் பொறுத்துக்கொண்டு இருந்திருக்க மாட்டார். அவர் எழுத்தில் எங்கும் இது குறித்து இல்லை என்ற விபரங் களுடன் எழுதப்பட்டுள்ள கட்டுரை “துளசி தாசரைப் பற்றி இவர்கள் பேசமாட்டார்கள்.” இராம சரிதமானஸ் எழுதியவரை சங் பரிவார் அமைப்புகள் ஏன் கொண்டாடவில்லை என இக்கட்டுரையை படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

“சங்கரலிங்கனார் உயிர்த் தியாகமும் ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றமும்”, “வெண்மணியின் உண்மைகளை மூடி மறைத்த பத்திரிகைகள்”, “பரவட்டும் வெண்மணிப் பெருநெருப்பு” ஆகிய கட்டுரைகள் தலைப்புக் குறிய செய்திகளை உரத்துப் பேசுகின்றன.

புத்தகத்தில் கடைசியாக உள்ள 12 கட்டுரைகள் சர்வதேச அரசியலில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்துக் கொடுக்கும் கட்டுரைகள். அர்ஜெண்டினாவில் பிறந்து, பெருவில் புரட்சிக்கு பக்குவம் அடைந்து, கியூபாவின் விடுதலைக்கு ஆயுதம்தரித்து, பொலிவியக் காடுகளில் அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்ட சே எனும் சர்வதேசியன் குறித்தும்;

பாசிச சக்தியே உலகை ஆள வேண்டுமென அதற்காக உலகைத் தலைகீழாய் மாற்ற ஹிட்லருடன் கரம் கோர்த்த முசோலினி எப்படி தலைகீழாய்த் தொங்கவிடப்பட்டான் என்பது குறித்தும்; ஹிட்லரை விரட்டியடித்த இரும்பு மனிதன் ஸ்டாலின் குறித்து எளிய அறிமுகமும் உள்ள கட்டுரைகள் அவை. மரணமில்லா மாமேதை காரல் மார்க்ஸ் குறித்து ஓர் அறிமுகத்தைக் கொடுத்துவிட்டு, அவரது தத்துவத்தை மண்ணில் நடை முறைப்படுத்திய புரட்சியாளர் லெனினது ஆளுமை குறித்தும், அவரது புரட்சிகரக் கோட்பாடுகள் எப்படி பரிசோதனை செய்யப்பட்டது என்றும், திருத்தல்வாதத் திற்கு எதிராக அவர் எப்படிப் போராடினார் என்றும், ரஷ்ய இலக்கியங்களில் எத்தகைய ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார் என்றும் விவரித்து, லெனின் என்னும் தோட்டக்காரர் பக்குவமறிந்து பறித்த கனியே ரஷ்யப் புரட்சி என முடிக்கிறார்.

முழுக்க முழுக்க வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்ட சம்பவங்களை நிகழ்கால அரசியலுடன் இணைத்ததும், வரலாற்றிலிருந்து எப்படி நிகழ்காலத்தை இணைத்துப் பார்ப்பது எனவும் கற்றுக்கொள்ள இளம் தலைமுறைக்கு இந்த புத்தகம் ஒரு கையேடாக இருக்கும். நமக்கு தெரிந்த இளைஞர் களுக்கு இந்த புத்தகத்தை நிச்சயம் பரிசளிக்கலாம்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : இந்தியா பாரம்பரியங்களின் வண்ணக்கலவை

ஆசிரியர் : நாகை மாலி 

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

விலை : ₹110.00

நூலைப் பெற : 44 2433 2924

 

நூலறிமுகம் எழுதியவர் 

– எஸ்.ஜி.ரமேஷ்பாபு

 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *