இந்தியாவில் சர்வாதிகார ஹிந்து தேசியவாதத்தின் எழுச்சி குறித்து எழுதி வருகின்ற மிக உறுதியான வரலாற்றாசிரியர்களில் ஒருவர் புலனாய்வு பத்திரிகையாளரான ராணா அயூப். மதச்சார்பற்ற மற்றும் பன்முக கலாச்சார ஜனநாயகத்திலிருந்து இந்தியாவை, சிறுபான்மையினர் அடிபணிந்து போகின்ற, வகுப்புவாத வெறுப்பு கொண்டதாக இருக்கின்ற ஹிந்து தேசமாக ஆக்குகின்ற வகையில், 2014இல் தான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அதுவரையிலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹிந்து மேலாதிக்கச் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்து, இந்தியா குறித்து இருந்து வருகின்ற கருத்தை மறுவரையறை செய்யத் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது பாரதிய ஜனதா கட்சி கூட்டாளிகளைப் பற்றி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக விடாப்பிடியுடன் அவர் ஆய்வு செய்து வருகிறார்.
அயூப்பின் தனிப்பட்ட வரலாறும், பத்திரிகை நோக்குநிலையும் ஒன்றுக்கொன்று ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளன. மும்பையில் முஸ்லீம் குடும்பம் ஒன்றில் வளர்ந்து வந்த அவர், ஹிந்து கோவிலைக் கட்டுவதற்காக, முகலாயர் காலத்து பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் விளைவாக 1992ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிந்து-முஸ்லீம் கலவரத்தின் விளைவுகளை தனது ஒன்பதாவது வயதிலேயே நேரடியாக அனுபவித்தார். வன்முறை வெடித்ததால், அவரும், அவருடைய சகோதரியும் தலைமறைவாகினர்.
பல்வேறுபட்ட நடுத்தர வர்க்கத்தினர் வசித்து வந்த இடத்திலிருந்து, முஸ்லீம் சேரிக்கு இடம் பெயர வேண்டிய கட்டாயம் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2002ஆம் ஆண்டு அப்போதைய குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஹிந்து கும்பல்கள் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களைக் கொன்று குவித்து நடத்தியிருந்த மிகமோசமான கலவரத்தைத் தொடர்ந்து, குஜராத்திற்கு நிவாரணப் பணியாளராக அவர் சென்றார்.
அயூபிடம் பத்திரிகைத்துறை மீதான ஆர்வம் எழுவதற்கு, அப்போது நடந்திருந்த படுகொலைகளின் எண்ணிக்கையும், அதற்குப் பின்னர் இருந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளாத தன்மையும் உதவின. சில ஆண்டுகளுக்குப் பிறகு, தெஹெல்கா என்ற ஆங்கில இதழ் மூலமாக, பாஜக தலைவர்களின் ஊழல்களையும், தவறான நடத்தைகளையும் வெளிக்கொண்டு வரத் தொடங்கினார். 2010ஆம் ஆண்டில், இந்திய-அமெரிக்க ஹிந்து திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பெயரில் குஜராத் ரகசியப் புலனாய்வை நடத்தினார். 2002 படுகொலையில் அதிகார வட்டம் உடந்தையாக இருந்தது, மாநில அரசின் ஹிந்து தேசியவாத திட்டம் ஆகியவற்றை அம்பலப்படுத்துகின்ற முயற்சியில் மோடியின் வட்டாரத்திற்குள் அவர் ஊடுருவினார்.
அவரது வேலைகள் புதுமையானவை என்று பாராட்டப்பட்டாலும், வழக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் தணிக்கை போன்றவற்றால் அதிக அளவிற்குப் பாதிக்கப்பட்டிருந்த இந்தியப் பத்திரிகைகளில் அந்த செய்திகளை வெளிடுவதற்கு அவர் அதிகம் போராட வேண்டியிருந்தது. இறுதியில் அவற்றை ’குஜராத் பைல்ஸ்: அனாடமி ஆஃப் எ கவர் அப்’ (குஜராத் கோப்புகள்: ரகசியப் புலனாய்வின் உள்ளடக்கம்) என்ற புத்தகத்தில் தானாகவே வெளியிட்டார். அந்தப் புத்தகம் சுமார் 600,000 பிரதிகள் விற்றது. 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஏராளமான சர்வதேச விருதுகளை அயூப்பிற்கு பெற்றுத் தந்தது.
குடியுரிமை பெறுவதற்கான விரைவான பாதையில் இருந்து புலம்பெயர்ந்த முஸ்லீம்களை விலக்கி வைக்கின்ற வகையில் இருந்த புதிய கூட்டாட்சிக் கொள்கையான குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் டெல்லியில் நடைபெற்றன. அவற்றின் விளைவாக பல நாட்கள் நடந்த வன்முறைக்குப் பின்னர், 2020 பிப்ரவரியின் பிற்பகுதியில் இந்த உரையாடலின் பெரும்பகுதி நடைபெற்றது. அதிபர் டொனால்ட் டிரம்பின் அரசு விஜயத்தை மோடி நடத்தியபோது, நாட்டின் தலைநகரில் ஹிந்து கும்பல்கள் முஸ்லீம்களின் வணிக நிறுவனங்களையும், வீடுகளையும் குறிவைத்துத் தாக்கி பலரைக் கொன்றன.
அதற்குப் பின்னர் சில வாரங்களில், 130 கோடி மக்கள் கொண்ட தேசத்தை முழுமையாக அடைத்து வைத்து, இந்தியாவில் நிலவுகின்ற அதிர்ச்சியூட்டும் சமத்துவமின்மையை இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. தற்போது வேலையிழந்திருக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நகரங்களை விட்டு வெளியேறி, கால்நடையாக தங்கள் கிராமங்களுக்குச் செல்ல முயன்று வருகின்றனர்.
’சமூக இடைவெளி என்பது சிலருக்கு மட்டுமே கிடைக்கின்ற அரிதான பாக்கியம்’ என்று சமீபத்தில் அயூப் எழுதியிருந்தார். அவர் குறிப்பிட்டதைப் போல, ஏராளமான நகர்ப்புற ஏழைகள் நெரிசல் மிகுந்த, சுகாதாரமற்ற சேரிகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த தொற்றுநோய் மோடியின் எதேச்சதிகார போக்குகளுக்கும், சிறுபான்மையினரிடம் மட்டுமல்லாது, வறியவர்களிடத்தும் அரசு காட்டுகின்ற வெட்கக்கேடான அணுகுமுறைகளுக்கும் மட்டுமே தீனியளித்திருக்கிறது. ’ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வது என்பது, இப்போது இருப்பதை விட வேறு எப்போதும் இந்த அளவிற்கு முக்கியமானதாக இருந்ததில்லை’ என்று அவர் கூறுகிறார். ’இந்த பெரும்பான்மை படுகுழிக்குள் இந்தியா தலைகீழாக வீழ்ந்து கொண்டிருப்பதைப் பற்றி அனைவரிடமும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது’ என்கிறார்.
நேர்காணல்
அடி: இந்த நேர்காணலின் பெரும்பகுதி கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே நடைபெற்றது. இப்போது எந்த உலகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?
ராணா அயூப்: மும்பையில் எனது உயர் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்குள் நான் மூழ்கியிருக்கிறேன். அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் இருப்பு வைத்துக் கொண்டு, முழுமையாக அடைக்கப்பட்ட நிலையில் வாழ்கிறேன். இது எனக்கு கிடைத்திருக்கும் பாக்கியம். ஆனால் கைக்கும் வாய்க்கும் எட்டாத வகையில் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, அடுத்து வரப் போகின்ற நாட்களில் தங்களின் வாழ்வாதாரம் குறித்து கவலைப்படுகின்ற மிகப்பெரிய எண்ணிக்கையிலான இந்திய மக்களுக்கு துரதிர்ஷ்டவசமாக வாழ்க்கை இதுபோன்றதாக இருக்கவில்லை.
ஆசியாவின் மிகப்பெரிய சேரியான தாராவியில் இருந்து செய்தி அளித்துக் கொண்டிருந்ததால், நான் தனிமைப்படுத்தப்பட்டிள்ளேன். அந்த சேரிகளில், சமூக இடைவெளி என்பதை மோசமான கருத்து என்று கருதுகின்ற அன்றாட கூலித் தொழிலாளர்களை நான் சந்தித்தேன். ஒரு சதுர மைல் பரப்பளவில் 15 லட்சம் மக்கள் அங்கே வாழ்கின்றனர். ஒவ்வொரு சேரி வீட்டிலும் சராசரியாக ஐந்து பேர் எந்தவித அடிப்படை சுகாதார வசதிகளுமின்றி வசித்து வருகின்றனர். நான் சந்தித்த பல தொழிலாளர்கள், வைரஸுக்கு முன்பாகவே இந்த பட்டினி தங்களைக் கொன்று விடும் என்று நம்புகிறார்கள். நமது வீதிகள் காலியாக உள்ளன. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இது யாருமே கற்பனை செய்திராத பேரழிவாகும்.
அடி: கடந்த மாதம், பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகை குறித்து செய்திகளைச் சேகரிப்பதற்காக டெல்லி மற்றும் குஜராத்தில் நீங்கள் இருந்தீர்கள். அதோடு டெல்லியின் சமீபத்திய வரலாற்றில் நடந்த மிகமோசமான இனவாத வன்முறை பற்றியும் செய்திகளைச் சேகரித்தீர்கள். ஹிந்து கும்பல்கள் முஸ்லீம் கடைகளையும் வீடுகளையும் குறி வைத்து தாக்கியதை காவல்துறையினர் விலகி நின்று பார்த்தார்கள்; பலரும் அடித்துக் கொல்லப்பட்டனர். அது எவ்வாறு நடந்தது என்பதைப் பற்றி சொல்லுங்களேன்.
ராணா அயூப்: டிரம்ப்-மோடி வருகை, ஆரம்பத்தில் இருந்தே அது மிகவும் வருத்தமளிப்பதாகவே இருந்தது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்து டிரம்ப் பேசிய போது, அரங்கத்திலிருந்து மிகுந்த சத்தத்துடன் ஆரவாரம் எழுந்தது. ’இஸ்லாமிய பயங்கரவாதம் என்று வரும்போது, நீங்கள் ஏன் அதை உற்சாகப்படுத்துகிறீர்கள்?’ என்று மக்களிடம் கேட்டேன். ’இஸ்லாத்தை எதிர்த்து எவ்வாறு போராடுவது என்று தெரிந்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே – மோடி மற்றும் டிரம்ப்’ என்று அவர்கள் எனக்குப் பதில் சொன்னார்கள்.
பின்னர் டெல்லியில் படுகொலை நடந்தது. இதுபோன்று தேசிய தலைநகரில் நடக்கும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு கலவரம் கொழுந்து விட்டு எரிந்தது. முஸ்லீம்கள் அடித்து, தடுத்து வைக்கப்பட்டனர். அப்போது நமது குடியரசுத் தலைவருடன் டிரம்ப் உணவருந்திக் கொண்டிருந்தார். அனைவரும் எதுவுமே நடக்காதது போன்று நடித்துக் கொண்டிருந்தார்கள். பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகம் குறித்து பிரபல பத்திரிகையாளர்கள் மிகவும் அபத்தமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில், கொல்லைப்புறத்தில் படுகொலை நடந்து கொண்டிருந்தது.
நான் சி.என்.என்க்குச் சென்றேன். அந்த வன்முறையை முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை என்று கூறியதற்காக தாராளவாதிகள் என்னைத் தாக்கினர். ஆமாம். நிச்சயமாக ஹிந்துக்களும் கொல்லப்பட்டனர். ஆனால் அரசு உடந்தையாக இருந்ததால், கொல்லப்பட்ட முஸ்லீம்கள் அதிகமாக இருந்தனர். இரண்டு பக்கங்கள் உள்ளன என்றாலும், ஒரு பக்கம் அரசால் செயல்படுத்தப்பட்டது. அந்தக் கும்பல் சார்பாக காவல்துறையினர் செயல்பட்டார்கள். திட்டமிட்டு நடத்தப்படுகின்ற படுகொலையின் வரையறையாகவே அது இருந்தது. .
அமைச்சர்கள் தொலைக்காட்சியில் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு உரைகளை ஆற்றுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 1947இல் அனைத்து முஸ்லீம்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று கலவரத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உள்ளூர்வாசிகள் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு, ஜெய் ஸ்ரீ ராம் (ஹிந்து தேசியவாத அணிவகுப்பின் முழக்கமாக மாறிவிட்ட சொற்றொடர்) என்று கோஷமிடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கிளையை இயக்குவதாகவும், டெல்லி படுகொலைக்கு காரணமானவர் என்றும் கூறி முஸ்லீம் தம்பதியை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ கைது செய்தது. ஊடகங்கள் இவையனைத்தையும் உள்வாங்கிக் கொள்கின்றன. ஆனால் எந்தக் கேள்வியும் எழுப்பப்படுவதில்லை. ஊடகவியலாளர்களுடன், அரசுடன், ஒரு சமூகமாக நம்முடன் என்று பல்வேறு மட்டங்களில் நான் ஏமாற்றமே அடைந்திருக்கிறேன்.
அடி: இந்த செய்திகள் சர்வதேச ஊடகங்களில் விவரிக்கப்படுகின்ற விதத்தில் வேறுபாடு இருப்பதாகத் தெரிகிறது. முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அரசின் பங்கு பற்றிய விரிவான அறிக்கைகளை சர்வதேச ஊடகங்களில் பார்க்க முடிகிறது. ஆனால் இந்திய ஊடகங்களில் அரசிற்கு சார்பாக இருக்கின்ற கதைகள் மட்டுமே வெளியாகின்றன.
ராணா அயூப்: ஆம், முற்றிலும் உண்மை. காஷ்மீர், சி.ஏ.ஏ, டெல்லி பற்றி வெளியாகும் கதைகளைப் பார்த்தால், இந்திய ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் அவற்றை விவரிக்கின்ற விதத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது நன்கு தெரிகிறது. குறிப்பாக காஷ்மீரைப் பொறுத்த வரை, இந்திய ஊடகங்கள் தேசபக்தி என்ற முப்பட்டகத்தின் வழியாகவே தங்களுடைய செய்திகளை வெளியிடுகின்றன. இந்திய பத்திரிகையாளர்கள் யாரும் நகரத்திற்குள் நுழையவில்லை. அவர்கள் அனைவரும் விமான நிலையத்திற்கு அருகே நின்று கொண்டு தங்களுடைய நேரடி செய்திகளைத் தந்து கொண்டிருந்தார்கள்.
நான் அங்கே சென்று இறங்கியபோது, நாங்கள் ஒரு டிரைவரைக் கண்டுபிடித்து, உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டியிருந்தது. சர்வதேச ஊடகங்கள் அதைத்தான் செய்து கொண்டிருந்தன. காஷ்மீர் மற்றும் டெல்லி படுகொலை குறித்து அவர்கள் செய்திருக்கும் பணிகள் குறிப்பிடத்தக்கவை. அவர்களால் அதைச் செய்ய முடிகிறது என்றால், தங்கள் சொந்த பத்திரிக்கைகளில் இந்திய பத்திரிகையாளர்களால் ஏன் அதைச் செய்ய முடியவில்லை?
அடி: இறுதியாக பொது மக்களிடையே மனநிறைவை உருவாக்குகின்ற வகையில், இந்திய ஊடகங்களில் இருக்கின்ற இந்த வகையான விடாப்பிடியான குருட்டுத்தன்மையை எது அனுமதிக்கிறது?
ராணா அயூப்: இந்தவிதமான அக்கறையின்மை, இந்திய ஊடகங்கள் சுய தணிக்கை செய்து கொள்ளத் தொடங்கிய வேளையில் – மோடி தணிக்கை செய்வதற்கு முன்பாக – 2013ஆம் ஆண்டிலே தொடங்கியது. ஆளும் கட்சியான பாஜகவின் தலைவராக அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றி அந்த நேரத்தில் ஒரு செய்தியை நான் எழுதினேன். மிரட்டி பணம் பறிப்பவன் மற்றும் கொலைகாரன் என்று மத்திய புலனாய்வுப் பிரிவால் அழைக்கப்பட்ட ஒருவர் ஆளும் கட்சியின் தலைவராவது இந்திய அரசியலுக்கு ஏற்பட்டிருக்கும் இழுக்கு என்பதை அந்த செய்தியில் நான் விவரித்திருந்தேன்.
நான்கே மணி நேரத்தில் அந்த செய்தி நீக்கப்பட்டது. அது மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நடந்திருந்தது. குஜராத்தில் நடந்த 2002 படுகொலைகளுக்கு மோடி உடந்தையாக இருந்ததைப் பற்றி தேசிய தொலைக்காட்சியில் பேசிய அதே பத்திரிகையாளர்கள், இப்போது அவரை ஏற்றுக் கொண்டு, நேர்காணல் செய்வதற்காக மோடியையும் அவரது குழுவினரையும் அணுகுவதற்காக தவம் கிடப்பதை என்னால் காண முடிகிறது.
இதற்கிடையில் முழுநேர தீவிர ஊடகவியலாளர்கள் திடீரென்று சுயாதீன பத்திரிக்கையாளர்களாக மாறினார்கள். இப்போது இந்தியாவில் கௌரவ ஆசிரியர்கள், சுயாதீன பத்திரிகையாளர்கள் அல்லது தங்கள் செய்திகளை வெளியிடுவதற்கு வெளிநாட்டு பத்திரிக்கைகளைக் கண்டுபிடிக்க முடிந்தவர்களே மிகச்சிறந்த அறிவாளிகளாக இருக்கிறார்கள். 2013இல் தெஹல்கா பத்திரிகையை விட்டு வெளியேறிய நான், வாஷிங்டன் போஸ்ட்டில் பணியாற்றுவதற்காக 2019 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதுவரை நான் வேலையில்லாமல் இருந்தேன். ’எல்லாவற்றையும் பற்றி எழுதுங்கள். ஆனால் மோடியைப் பற்றி எழுத வேண்டாம்’ என்று பத்திரிகையாளர்களும் ஆசிரியர்களும் என்னிடம் அப்போது சொல்வார்கள். அதனால்தான் நான் வேலையில்லாமல் இருந்தேன்.
2016ஆம் ஆண்டில் குஜராத் கோப்புகளை நான் வெளியிட்ட போது, கிட்டத்தட்ட அனைத்து பெரிய பத்திரிகையாளர்களும், ஆசிரியர்களும் எனது புத்தக வெளியீட்டு விழாவில் இருந்தது என்னுடைய நினைவில் இருக்கிறது. அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை நான் படித்தேன். அவர்கள் அனைவரும் ’நீங்கள் இந்த நாட்டில் இருக்கின்ற மிகவும் துணிச்சலான நபர்’ என்று எனக்கு குறுஞ்செய்திகளை அனுப்பினார்கள். ’சரி. மறுநாள் செய்தித்தாள்களில் இந்த புத்தகம் தலைப்புச் செய்தியாக இருக்கப் போகிறது’ என்று நான் அப்போது நினைத்தேன். ஸ்க்ரோல், கேரவன் போன்ற ஒரு சில ஆங்கில வெளியீடுகள் தவிர, மற்றவற்றில் ஒரு வரி கூட வெளியாகவில்லை. காபி கடைகளில் பொதுவாக என்னைச் சந்தித்துப் பேசி வந்த பத்திரிகையாளர்கள், இப்போது என்னை தங்கள் வீடுகளுக்கு வரச் சொன்னார்கள். .
அடி: இதன் பின்னணியில் இருப்பது என்ன? இது பயமா, அல்லது வேறு எதுவும் சலுகைகள் உள்ளதா?
ராணா அயூப்: பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் பத்திரிக்கைகள் வணிக நிறுவனங்கள் அல்லது ரிலையன்ஸ் மற்றும் ஜெயின்கள் போன்ற பெரிய தொழில்நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. அவர்கள் கருத்தியல் ரீதியாகச் செயல்படக் கூடியவர்கள் அல்ல; சந்தர்ப்பவாதிகள். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், அவர்கள் அப்போதும் இதையேதான் செய்திருப்பார்கள்.
காங்கிரஸ் அரசாங்கம் தற்போதைய ஆட்சியை விட குறைவான பழிவாங்கும் தன்மையைக் கொண்டிருந்தது என்பதைக் கட்டாயம் சொல்ல வேண்டும். தற்போதைய ஆட்சி வெட்கக்கேடானது, கீழ்த்தரமானது. தெஹல்காவுக்காக நான் வேலை செய்து கொண்டிருந்த போது, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அரசு நிர்வாகத்தில் இருந்தவர்களைப் பற்றி கடுமையான கட்டுரைகளை எழுதினேன். ஒருபோதும் எனக்கு எந்தப் பின்னடைவும் அதனால் ஏற்பட்டதில்லை. ஆனால் நீங்கள் இந்த ஆட்சியை விமர்சித்தால், இப்போது உங்களால் அதை இந்தியப் பத்திரிக்கைகளில் வெளியிட முடியாது.
வாஷிங்டன் போஸ்டுக்காக எழுதுகின்ற என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் இந்தியாவையும் அதன் சர்வதேசப் புகழையும் சீர்குலைக்க முயற்சிக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக வாட்ஸ்ஆப் மற்றும் வலதுசாரி பத்திரிகைகள் மூலமாக போலி செய்திகளின் வழியாக கதைகளை அவர்கள் உருவாக்குகிறார்கள். பாஜக மற்றும் ஸ்வராஜ்யா பத்திரிகையால் திறம்பட நடத்தப்படுகின்ற ஓபிஇந்தியா போன்ற வலதுசாரி அமைப்புகள் என்னைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஒரு கட்டுரையை வெளியிடுகின்றன.
மத அடையாளங்களுடன், நான் முஸ்லீம் என்ற உண்மையுடன், ராணா அயூப் நாட்டை விற்கிறார் என்றிருக்கும் கதையை, அவர்களுடைய லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் ஒவ்வொரு நாளும் பெறுகிறார்கள். எனது எழுத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று அவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மையினரிடம் கொண்டு சேர்க்கிறார்கள். மற்ற பத்திரிகையாளர்களுக்கும் இதே நிலைமைதான்.
அடி: ஆக அவர்கள் உங்களைத் தரம் தாழ்த்துகிறார்கள்.
ராணா அயூப்: நிச்சயமாக. நம்மில் பலரும் தீர்வை நாடுவதற்கு காரணம் இருக்கிறது. ஒரு நண்பர் சமீபத்தில் கூறியது போல், உங்கள் சகாக்களே உங்களைக் கீழே தள்ள முயற்சிக்கும்போது அது மிகவும் கடினமாகி விடுகிறது. ’உண்மையிலேயே நான் தவறு செய்கிறேனோ?’ ’ஒருவேளை மோடியை மிக அதிகமாக நான் விமர்சிக்கிறேனோ?’ என்று நீங்கள் நினைக்கலாம். ஏனென்றால், நாட்டின் வளர்ச்சிக்காக இவ்வளவு செய்திருக்கின்ற மனிதர் என்று மட்டுமே அனைவரும் மோடியைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், சர்வதேச பத்திரிகைகளையும் அவர்கள் தாக்குவதைப் பார்க்கும் போது, இல்லையில்லை, இந்த அரசாங்கம் உண்மையில் பழிவாங்குகின்றது என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
அக்டோபரில் நியூயார்க் டைம்ஸ் பதிப்பாளர்கள் இந்தியாவிற்கு வந்தனர். மோடியுடனான அவர்களின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. ஜெஃப் பெசோஸ் இந்தியாவிற்கு வந்தார். மோடி அவரைச் சந்திக்கவில்லை. வாஷிங்டன் போஸ்டுக்கு எழுதுவதற்காக இஸ்லாமியர்களையும், ஜிஹாதிகளையும், ஜெஃப் பெசோஸ் நியமித்துள்ளார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஒரு ட்வீட்டை வெளியிட்டார். அவர்கள் இப்போது என்ன செய்து வருகிறார்கள் என்று சொல்வதற்கு இதைவிட வெளிப்படையாக எதுவும் தேவையில்லை.
அடி: இன்றைக்கு இந்தியாவில் ஒரு முஸ்லீமாக இருப்பதை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்?
ராணா அயூப்: கடந்த காலத்தில் நான் ஒளிவுமறைவாக இருந்திருக்க வேண்டிய தேவையே ஒருபோதும் இருந்திருக்கவில்லை. ஆனால் இப்போது ஒரு பக்க சார்பு பிரதானமாக உள்ளதால் – வாஷிங்டன் போஸ்டுக்காக நான் ஒரு கட்டுரையில் எழுதியதைப் போல, ஒரு முஸ்லீமாக இந்த இந்தியாவில் வாழ்வது என்பது நிச்சயம் ஒரு கொடுங்கனவாகவே இருக்கிறது.
எனது வாழ்நாளில், நாட்டின் மிக மோசமான மூன்று இனப்படுகொலைகளை நான் கண்டிருக்கிறேன். ஒன்பது வயதில், பம்பாய் கலவரத்தின்போது, என் வீட்டிற்கு வாள்களுடன் வந்தவர்கள் என்னையும் என் சகோதரியையும் அழைத்துச் செல்ல விரும்பினர். ஒரு சீக்கிய குடும்பத்தினர் எங்களைக் காப்பாற்றினர். எங்கள் குடும்பத்தினர் எங்கே சென்றார்கள் என்பது தெரியாமல், நாங்கள் இரண்டு மாதங்கள் அவர்களுடைய வீட்டிலே தஞ்சம் புகுந்திருந்தோம்.
குஜராத் கலவரம் நடந்தபோது எனக்கு 19 வயது. தொலைக்காட்சியில் முதன்முதலாக காட்டப்பட்ட படுகொலை. நான் நிவாரணப் பணியாளராக குஜராத் சென்றேன். அங்கே எனது நெற்றியில் திலகம் இட்டுக் கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது. எனது கடைசிப் பெயரை நான் மக்களிடம் சொல்ல மாட்டேன். கொஞ்சம் தெளிவற்றதாக இருப்பதால் நான் ராணா என்று மட்டுமே என் பெயரை அவர்களிடம் சொல்வேன். இந்த நாட்டில் பெரும்பான்மையினராக இருப்பதில் உள்ள பாக்கியத்தை, ஹிந்துவாக இருப்பதில் உள்ள பாக்கியத்தை நான் முதன்முதலாக அப்போது உணர்ந்தேன்.
எனது ஒன்பதாவது வயதில் எந்தவிதத்திலும் உதவியற்றவளாக நான் இருந்தேன். 19ஆவது வயதில் என்னால் முடிந்ததைச் செய்ய முடியும், ஒரு மாற்றத்தை என்னால் கொண்டு வர முடியும் என்று நினைத்தேன். உலகம் சாட்சியாக இருக்க, இன்றைக்கு டெல்லியில் என்ன நடக்கிறது என்பதை நான் கண்டிருக்கிறேன். முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு இந்த நாட்டில் இப்போது இயல்பாக்கப்பட்டு விட்டதாக உணர்கிறேன். ஒளிவுமறைவாக மதவெறி கொண்டவர்கள் யாரும் இல்லை என்றாக்கி இருக்கின்ற மோடிக்கு நன்றி. மதவெறி திறந்த வெளியில் நிற்கிறது.
வாட்ஸ்ஆப் குழுக்களிலும், குடும்ப விழாக்களிலும் பேசி வந்த விஷயங்கள், இப்போது இந்த நாட்டின் தெருக்களில் பேசப்படுகின்றன. முஸ்லீம்கள் எட்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள், இந்த நாட்டை அவர்கள் கைப்பற்ற விரும்புகிறார்கள், அவர்களுக்கு நான்கு மனைவிகள் உள்ளனர், அவர்கள் மிகவும் மோசமானவர்கள் என்ற மொழி இப்போது பிரதானமாக உள்ளது. அமைச்சர்கள் இது குறித்து மிகவும் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். இஸ்லாம் என்ற மதம் எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்று நண்பர்கள் பேசுகிறார்கள். தங்களை இந்திய கலாச்சாரத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சமூக ஊடகங்களில், முஸ்லீம்தன்மை கொண்டவர்களாக இருக்கின்ற தனிநபர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மற்றமை என்ற உணர்வு எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அதை மிகச் சிறிய வயதிலேயே என்னால் உணர முடிந்துள்ளது. ஆனாலும் இந்த புதிய தலைமுறையில், வெறுப்பு அல்லது வர்க்கம் தொடர்பான பிரச்சினைகள் அல்லது மதம் தொடர்பான சார்புகளுக்கு இடமிருக்காது என்றே நான் நினைத்திருந்தேன். எந்த அளவிற்கு இந்தியா முன்னேறுகிறதோ, அந்த அளவிற்கு சிறுபான்மையினர் மோசமாக நசுக்கப்படுகிறார்கள்.
முஸ்லீம்கள் தங்களுடைய குல்லாக்களை அணிவதில் இருந்து விலகி இருக்கிறார்கள்; அவர்கள் தாடியை முழுமையாகச் சிரைத்துக் கொள்கிறார்கள்; நகரத்திலிருந்து வெளியேறி முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு நகர்ந்து செல்கின்றார்கள். சித்தப்பிரமை பிடித்தவர்களாகவோ அல்லது எச்சரிக்கை கொண்டவர்களாகவோ அவர்கள் இதைச் செய்யவில்லை. அவர்களிடம் இருக்கின்ற பயம் உண்மையானது.
1947இல் பாகிஸ்தானை விடுத்து இந்தியாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதன் மூலம் நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று இந்த நாட்டில் உள்ள இந்திய முஸ்லீம்களுக்கு ஒவ்வொரு நாளும் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் இந்தியா என்ற கருத்தாக்கத்தை நம்பியதாலேயே, பாகிஸ்தானுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்த போதும், கோடிக்கணக்கான இந்திய முஸ்லீம்கள் இந்தியாவைத் தங்களுக்கான நாடாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
இந்த நாட்டுடனே நான் இணைந்திருக்கிறேன். ஆயி மேரே வதன் கே லோகன் என்ற தேசபக்தி கொண்ட ஹிந்திப் பாடலை லதா மங்கேஷ்கர் பாடுவதைக் கேட்கும் போது, எனக்கு எப்போதும் மயிர் கூச்செறிவதுண்டு. ஆனால் இப்போது தேசபக்தி என்பது ஒரு மிகத்தவறான வார்த்தையாகி இருக்கிறது. தேசபக்தி கொண்ட இந்தியர் என்பதை நாள்தோறும் நான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. ஒன்பது வயதாக இருந்தபோது, முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு உச்சத்தில் இருந்தபோதுகூட, நான் ஒருபோதும் இதுபோன்று உணர்ந்ததில்லை.
அடி: இந்த நாட்டோடு இணைந்திருக்கிறேன் என்று கூறும்போது, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?
ராணா அயூப்: என்ன நடந்தாலும், இந்த இடத்தை விட்டு என்னால் வெளியேற முடியாது. என் மக்களிடையேதான் நான் இருக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் எனக்கு பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்ட போதிலும், நான் நாட்டை விட்டு வெளியேறவில்லை. ஏனெனில் ஒரு பத்திரிகையாளராக நான் இங்கேயே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தேன். மதச்சார்பின்மையின் புனிதத்தையும், நம்பிய இந்த நாட்டின் அழகையும் நம்மில் சிலரே பாதுகாக்க முடியும் என்பதாக நான் உணர்ந்தேன். நாட்டின் மீது அன்பு செலுத்திய போதிலும், நாட்டிற்கான அர்ப்பணிப்பு இருந்தபோதிலும், ’இந்த நாட்டிற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்த நாட்டிற்கான உங்கள் பங்களிப்பு என்ன?’ என்று இப்போது என்னிடம் கேட்கப்படுவதை என்னால் உணர முடிகிறது.
பெரும்பான்மையினருக்கு கிடைத்திருக்கும் பாக்கியம் ஒவ்வொரு நாளும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. வெறுக்கத்தக்க வகையில் பேசுகின்ற கபில் மிஸ்ராவைப் போன்ற அரசியல்வாதிக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கின்ற. அதே நேரத்தில் காவல்துறையினரை உதவிக்காக அழைத்த தாஹிர் உசேன், டெல்லி படுகொலையின் சூத்திரதாரி என்று அழைக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார். ஹுசைன் என்பதால் தாஹிர் கைது செய்யப்படுகிறார். மிஸ்ரா என்பதால் கபிலுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இந்தியாவின் பெரும்பான்மையினர் மௌனமாக இருப்பதன் மூலம், மோடியின் பாசிச ஹிந்து நிகழ்ச்சிநிரலைச் செயல்படுத்துவதற்கு உடந்தையாக இருக்கின்றனர். இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். வெறுக்கத்தக்க குற்றங்களும், பேச்சுக்களும் இருந்த போதிலும், மோடியும் பாஜகவும் 2019இல் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது குறித்து இந்தியாவில் உள்ள பெரும்பான்மை சமூகம் ஆய்ந்து பார்க்க வேண்டும். இந்தியா எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்? இந்தியா என்பதை என்னால் இனி அடையாளம் காண முடியாது.
அடி: மதச்சார்பற்ற, பன்முக கலாச்சாரம் கொண்ட இந்தியா என்ற கருத்துடன் இணைந்திருப்பதைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். அந்த கருத்தில் இருந்து எது விலகி இருக்கிறது?
ராணா அயூப்: நான் அதை சிறுசிறு துணுக்குகளாக காண்கிறேன். குடியுரிமை சட்டத் திருத்தத்திர்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் வடிவத்தில் அதை நான் காண்கிறேன். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் மக்கள் ஒற்றுமையுடன் நின்றார்கள். இந்தியா என்ற கருத்தை நம்புகின்ற மக்கள் இருக்கின்றனர். தாங்கள் பேசினால், தங்களுக்குப் பின்னடைவு ஏற்படும் என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால் பலர் மௌனம் சாதிக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, பாலிவுட்டில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களாக உள்ள மூன்று முஸ்லீம்கள் – அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் – சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களின் போது அவர்கள் எதுவும் பேசவில்லை. காஷ்மீர் பற்றியும் அவர்கள் பேசவில்லை. தேசிய தலைநகரில் படுகொலை நடந்தது. மிகப் பெரிய அளவில் அவர்களைப் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர். அமைதிக்கான வேண்டுகோளை அவர்கள் விடுத்திருக்கலாம் என்றாலும், அவர்களால் அதைச் செய்ய முடியாது. ஏனென்றால் அதைச் செய்யும் போது, அவர்களுக்கு எதிராக பல வழக்குகள் போடப்பட்டிருக்கும். எனவேதான் அவர்கள் அதற்கு மாறாக பிரதமருடன் நின்று செல்ஃபி எடுத்து அவரை ஆதரிப்பதை உங்களால் காண முடிகிறது.
நேருவிற்குப் பதிலாக மோடியை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள நமது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்தியா என்ற கருத்தாக்கம் கேலி செய்யப்படுகிறது. நேரு மற்றும் காந்தி மீது சேற்றை வாரி இறைப்பது நாகரீகமான புதிய நிகழ்வாகி விட்டது. பெண்ணாசை கொண்டவர், வெள்ளைக்காரப் பெண்கள் மீது காதல் கொண்டவர் என்று நேரு மீது வசை பாடுவதில் பள்ளிகள் கவனம் செலுத்துகின்றன. இப்போது கதை மாறிக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். திடீரென்று சுதந்திரப் போராளிகள் அனைவரும் இந்தியா என்ற கருத்தை அழித்துக் கொண்டிருந்த மோசமான தாராளவாதிகளாக மாறுவதை உங்களால் காண முடியும்.
பள்ளிகளில் உள்ள இந்த புதிய தலைமுறையின் சிந்தனையில், இந்தியா குறித்த கருத்து மோடி குறித்ததாக மட்டுமே இருக்கிறது. எல்லா இடங்களிலும் மோடி மட்டுமே இருக்கிறார். நமது வரலாறு மறுவடிவமைக்கப்படுகிறது. இதை புதிய யதார்த்தம் என்று நமது குழந்தைகள் ஏற்றுக்கொள்கிறார்கள். முன்னர் கற்பிக்கப்பட்டு வந்த வரலாற்றை காங்கிரஸ் கட்சியினர் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்துவதற்காக மாற்றி விட்டனர் என்றும், ஹிந்து தேசியவாத திட்டமே நமது உண்மையான வரலாறு என்றும் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சொல்லித் தரப்படுகிறது.
வலதுசாரிகள் வழக்கமாக இந்தியாவை ஒரு ஹிந்து தேசமாக கற்பனை செய்து கொண்டு வாழ்ந்து வருகின்ற மற்றொரு பிரபஞ்சத்திலேயே செயல்படுகின்றனர். அந்த கற்பனை இப்போது திடீரென்று நிஜமானதாக உணரப்படுகிறது. ’ஆனாலும் இந்தியா என்பது ஹிந்து நாடுதானே. பெரும்பாலும் நாம் ஹிந்து தேசமாகத்தானே இருக்கிறோம்’ என்று நண்பர்கள் இப்போது கூறக்கூடும். இதற்கு முன்பாக நாம் அந்த மொழியில் பேசியதில்லை.
இதற்கு முன் இந்தியாவை நான் ஜனநாயக நாடாகவே பார்த்திருந்தேன். நாம் அனைவருமே இந்தியாவை ஒரு ஜனநாயக நாடாகவே பேசி வந்தோம். இப்போது இந்தியா ஒரு ஹிந்து தேசம் என்று உறுதியாகக் கூறுகின்ற மக்களின் எண்ணிக்கை ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. பெரும்பான்மையினருக்கு கிடைக்க வேண்டியதை முஸ்லீம்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்ற எண்ணத்தை, அதாவது தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற உணர்வை பெரும்பான்மையினரிடம் மோடி தூண்டி விடுகிறார்.
அடி: வரலாற்றை மீண்டும் திருத்தி எழுதுவது மிகவும் முக்கியமானதாக இருப்பது தெரிகிறது. அதில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளுடன் கூடுதலாக, இத்தகைய புதிய இந்தியா குறித்த உத்திகளும், நீண்டகாலப் பார்வையும் இருப்பதாகவும் தெரிகிறது.
ராணா அயூப்: நிச்சயமாக. தாஜ்மஹாலை தேஜு மஹாலே என்ற ஹிந்திமயமாக்கப்பட்ட பெயரில் ஹிந்து தேசியவாதிகள் பேசிய காலம் ஒன்று இருந்தது. அப்போது நாங்கள் அதைப் பற்றி கேலி செய்வோம். இப்போது, பாஜக அரசியல்வாதிகள் தாஜ்மஹாலுக்கு அடியில் ஒரு ஹிந்து கோவில், சிவன் கோவில் இருப்பதாகக் கூறுகிறார்கள். மெக்கா ஒரு சிவன் கோவிலின் மேல் கட்டப்பட்டது என்று கூட மக்கள் கூறுகிறார்கள்.
இவ்வாறான சதிக் கோட்பாடுகளைப் பற்றி கேட்கும் போது நாங்கள் சிரித்துக் கொள்வோம். ஆனாலும் ஹிந்து கோவில் ஒன்றின் மேல் கட்டப்பட்டதாக, இந்தியாவில் முகலாய காட்டுமிராண்டித்தனத்தின் அடையாளமாக இருக்கின்ற தாஜ்மஹால் இடிக்கப்பட வேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டால், நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனெனில் அவுரங்கசீப், அக்பர், ஷாஜகான் அல்லது அன்னை தெரசா போன்ற அனைவர் மீதும் இப்போது களங்கம் பூசப்படுகின்றது. இந்தியாவின் புதிய ஹீரோக்களாக வலதுசாரி பயங்கரவாதிகளும், வலதுசாரி தேசியவாதிகளும் இருக்கின்ற வகையில் புதிய வரலாற்று அலைக்கு நாம் இப்போது வழி வகுத்து தந்து கொண்டிருக்கிறோம். இது முற்றிலும் வன்முறையே ஆகும். இந்த வன்முறை நமது பாடப்புத்தகங்கள், இலக்கியம், திரைப்படங்களில் வேறொரு வடிவத்தில் பல்கிப் பெருகி வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிவந்திருக்கும் பாலிவுட் படங்கள் மிகுந்த இஸ்லாமிய எதிர்ப்பு கொண்டவையாக இருக்கின்றன. பத்மாவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ராஜபுத்திரர்கள் – வரலாற்று ஹிந்து மன்னர்கள், கண்களில் மைதீட்டப்பட்ட மோசமான முகலாய பேரரசர்களுடன் போரிடுகிறார்கள். முகலாயர்கள் ஒவ்வொரு முறையும் காட்டுமிராண்டித்தனமான செயலைச் செய்யவிருக்கும் போது, இஸ்லாமிய வழிபாட்டிற்கான அழைப்பை விடுக்கின்ற அஸான் பின்னணியில் ஒலிக்கிறது. கருத்து திணிப்பு முறையாகத் திட்டமிட்டு நடக்கிறது. முஸ்லீம்களின் பிம்பத்தை வில்லனாக அவர்கள் உருவாக்குகிறார்கள்.
நாம் இதுவரையிலும் கேள்விப்பட்டிராத போர்களைப் பற்றிய தேசியவாத திரைப்படங்களை உருவாக்க அனைவரும் விரும்புகிறார்கள். அவர்களுடைய படங்களுக்கு தியேட்டர்கள் நிரம்புகின்றன. முஸ்லீம்கள் நம் மீது படையெடுத்தவர்கள், காந்தி குறைபாடுகளுள்ள ஹீரோ, அவரை வணங்கக் கூடாது, ஹிந்து தேசியவாதிகளே நமது உண்மையான தலைவர்கள், ராஜபுத்திரர்களும், மராத்தியர்களும் இஸ்லாமியர்களிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றியவர்கள் என்று பார்வையாளர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ஏற்படுத்தப்படுகின்ற சேதம் மீண்டும் மாற்ற முடியாத அளவிலேயே இருக்கும்.
அடி: இது போன்ற செயல்களுக்கு எதிர்ப்பு இப்போது எவ்வாறு இருக்கிறது?
ராணா அயூப்: பல்வேறு தளங்களில் எதிர்ப்பு இருக்கிறது. ஆனாலும் தங்களைக் காட்டிக் கொள்ள விரும்பாத குரல்களின் வடிவத்திலே அந்த எதிர்ப்பு இருக்கிறது. பிரதான நீரோட்டத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய அடையாளத்தை ஏற்றுக் கொள்வதை முஸ்லீம் கதாநாயகன் தவிர்ப்பதில்லை என்று கூறிய, விருது பெற்ற கல்லி பாயை உருவாக்கிய சோயா அக்தர் போன்ற திரைப்பட தயாரிப்பாளர்களின் வடிவத்தில் அந்த எதிர்ப்பு உள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவரான ஆயிஷே கோஷ் மற்றும் உமர் காலித் போன்ற மாணவர் தலைவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய குரல்களும் முறையாகத் திட்டமிட்டு அமைதிப்படுத்தப்படுகின்றன. செயற்பாட்டாளர் கன்னையா குமார் மீது தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உமர் பொது இடத்தில் சுடப்பட்டார் எனினும் உயிர் தப்பினார். ஆயிஷே ஜேஎன்யூவில் தாக்கப்பட்டார்.
கேரவன், ஸ்க்ரோல், தி வயர் போன்ற பத்திரிக்கைகளின் வடிவத்தில் ஏதோ கொஞ்சம் நம்பிக்கை இப்போது நம்மிடையே இருக்கிறது. எதிர்வினைக்கு எதிர்வினை என்பதாகவே அவர்களுடைய இதழியல் இருக்கிறது. என்.டி.டி.வி (புதுடெல்லி டெலிவிஷன் லிமிடெட்) மீது அடக்குமுறை ஏவி விடப்பட்டுள்ள போதிலும், தன்னால் முடிந்தவரை அது பேச முயற்சித்து வருகிறது. ஆனால் மீண்டும் என்.டி.டி.வி மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதன் நிறுவனர் பிரணாய் ராயின் வீடு மத்திய புலனாய்வுப் பிரிவினரால் சோதனை செய்யப்பட்டுள்ளது.
வாய்ப்பு கிடைக்கும் என்றால், இந்த எதிர்ப்பின் குரல்கள் இன்னும் அதிகமாகவே இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் அவ்வாறு பேசுவதால் ஏற்படுகின்ற விளைவுகள் பலரால் தாங்க முடியாத ஒன்றாகவே இருக்கின்றன. நாமும் அதிருப்தியைத் தெரிவிக்கின்ற அனைத்து குரல்களையும் இப்போதே பயன்படுத்தித் தீர்த்துக் கொள்ள முடியாது. நம்மில் சிலர் இன்னும் இருக்க வேண்டியிருக்கிறது. பிரபல செயற்பாட்டாளர்கள் சிலர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொழிற்சங்கவாதியும், சிவில் உரிமை ஆர்வலருமான சுதா பரத்வாஜ் சிறையில் இருக்கிறார். பல வழக்கறிஞர்கள் சிறையில் இருக்கின்றனர். டெல்லி படுகொலை தொடர்பாக உச்சநீதிமன்றம் செயல்பட வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டபோது, 1992-93 மும்பை கலவரத்தை எடுத்துக் காட்டி, ’பம்பாயில் கலவரக்காரர்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டபோது, பின்விளைவு ஏற்பட்டது. எனவே இதற்கு எதிராக இப்போது நாங்கள் செயல்பட மாட்டோம்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. உச்சநீதிமன்றமே இவ்வாறு சொல்லும் என்றால், நாம் எங்கே செல்வது?
நமது பிரதமர் இனவெறியைத் தூண்டுகின்ற அரசியலில் ஈடுபடுகிறார், நமது உள்துறை அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் வெறுப்பு பேச்சுக்களைப் பேசி வருகின்றனர். இப்போது வைரலாகி வரும் வீடியோக்களில் முஸ்லீம்களைத் தாக்குவதற்காக, கும்பலுடன் சேர்ந்து நமது காவல்துறையும் செல்கிறது. இந்த அமைச்சர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராகச் செயல்படுவதற்கு நமது நீதிபதிகள் விரும்பவில்லை. நாம் எங்கே செல்வது?
அடி: பாஜகவுக்கு எதிரான அரசியல் சவால் எவ்வாறு இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
ராணா அயூப்: இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவது நடைபெறுகிறது. பெரிய தலைவர்கள் ராஜினாமா செய்து பாஜகவில் இணைகிறார்கள். காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு மாறுவது என்பது மிகப்பெரிய மாற்றமாகும். அவர்கள் அதைச் செய்கிற விதம், எப்போதாவது அவர்களிடம் சித்தாந்தம் என்ற ஒன்று இருந்திருக்குமா என்று ஆச்சரியப்பட வைப்பதாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அதுபோன்று நடந்து கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுக்கு மாறினால், முஸ்லீம்களுக்காக யார் பேசுவார்கள்? ஓவைசி போன்ற தலையில் குல்லா அணிந்த தலைவர் பேசினால், அவர் தீவிரவாதி என்று அழைக்கப்படுகிறார். எனவே இங்கே கருத்து வேறுபாடுள்ள அரசியல் கட்சிக்கு இடம் எங்கே இருக்கிறது?
போராடுபவர்கள் இருக்கின்றார்கள் என்றாலும், இந்த போராட்டக்காரர்களைப் பலப்படுத்துகின்ற வகையில் ஒற்றைக் குரல் கூட இதுவரை எழவில்லை. மாணவர் குழுக்கள், ஆர்வலர்கள் என்று எதிர்ப்பு இப்போது மக்களிடமிருந்தே வர வேண்டும் அது ஏற்கனவே இருந்து வருகின்ற அரசியல் கட்சிகளிடமிருந்து வர முடியாது.
அடி: ஒரு புதிய அரசியல் கட்சி உருவாகும் என்று நீங்கள் கணிக்கிறீர்களா?
ராணா அயூப்: இப்போது என்னால் இதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இருந்தாலும் 2024க்குள் அது நடந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இந்த கொடுங்கோன்மை நீடிக்க முடியாது. அதற்கான எதிர்வினை நிச்சயம் இருக்கும். ஒரு கோவிலை தொடர்ந்து எப்போதும் ஏழைகளுக்கு உணவாக இந்த நாடு அளிக்க முடியாது. ஒரு கட்டத்தில் அது அவர்களுக்கு தானியங்களை உணவாக அளிக்க வேண்டியிருக்கும். அவர்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்க வேண்டியிருக்கும்.
இந்தியாவில் ஹிந்து-முஸ்லீம் பிரச்சினை பற்றி பேசாத தலைவர்களும் உள்ளனர்; அவர்கள் விவசாய நெருக்கடியைப் பற்றி பேசுவார்கள். இது இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது. தானியங்களின் விலை உயர்ந்துள்ளது. பணவீக்கம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. ஒவ்வொரு நாளும் நமது வங்கிகள் திவாலாகிக் கொண்டு வருகின்றன. உழவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. ஆனாலும் இவையனைத்தும் சில காலமாகவே அரசாங்கத்தால் கவனிக்கப்படாத, செய்தித்தாள்களின் முதல் பக்கங்களைச் சென்றடையாத பிரச்சினைகளாகவே இருக்கின்றன.
இனவாத வெறுப்பை மக்களிடம் தொடர்ந்து எப்போதுமே திணித்துக் கொண்டிருக்க முடியாது. அதற்கென்று ஓர் அளவு இருக்கிறது. அந்த அளவைத் தாண்டும் போது, வேலையின்மை அதிகரித்து இருக்கும், மக்கள் பசியால் இறப்பார்கள். .இந்தியர்கள் அப்போது கேள்விகளைக் கேட்டு பதில்களைத் தேடுவார்கள். இவ்வாறு இருத்தலியல் குறித்த கேள்வி எழும் போது, இந்த நாட்டின் விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குரல்களிடமிருந்து, தொழிற்சங்கம் சார்ந்த தொழிலாளர்களிடமிருந்து எதிர்ப்புகள் வரும்.. இந்த நேரத்தில் இந்தியாவிற்குத் தேவையான குரல் அதுதான். மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் குரல் அல்ல.
இப்போது, இந்த வைரஸ் வந்திருக்கிறது. இந்தியாவில் இப்போது என்ன நடக்கிறது என்பது உண்மையில் துயரம் நிறைந்த உலகு குறித்த கற்பனை சினிமா என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். மதத்தின் பெயரால் மக்கள் ஒருவருக்கொருவர் கொலை செய்து கொள்கிறார்கள். பின்னர் ஒரு வைரஸ் வருகிறது. அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள்.
அடி: இந்த தொற்றுநோய் மோடி மற்றும் பாஜகவுக்கு என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
ராணா அயூப்: இந்தியாவில் தொற்றுநோய் பரவுவதற்கு முஸ்லீம்களைப் பொறுப்பாக்கியுள்ளனர். மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா ஜிஹாத் செய்ததாக முஸ்லீம் சபை ஒன்றின் மீது பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முஸ்லீம்களால் தலிபான்மயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கூறுகிறார். தொற்றுநோய்க்கு எதிர்வினையாற்றுவதில் தான் பின்தங்கியிருக்கின்ற உண்மையை உணர்ந்து கொண்ட போதிலும், அதிகாரத்தின் மீதும், அதன் முக்கிய பார்வையாளர்கள் மீதும் தனது இறுக்கத்தை உறுதி செய்வதற்காக தன்னுடைய பெரும்பான்மைவாத திட்டத்தை வலுப்படுத்திக் கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.
உண்மையான தீர்வுகள் எதுவும் இல்லாத நிலையில், பால்கனியில் நின்று கைதட்டுவது, தட்டுகளைத் தட்டுவது அல்லது வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அடையாள நிகழ்ச்சியாக விளக்குகளை அணைப்பது போன்ற வித்தைகள் மூலம் நாட்டின் கவனத்தை திசை திருப்பவே மோடி அரசு முயற்சிக்கும் என்ற அச்சமே என்னிடம் இருக்கிறது.
அடி: இந்த தருணத்தில் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ராணா அயூப்: காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது பற்றி உலகம் அறிந்திருக்கும் என்றே ஒரு பத்திரிகையாளராக நான் நம்புகிறேன். நாடு முழுவதும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சட்ட சேவைகளுக்கு அடிப்படையான அணுகல் இல்லாத ஆயிரக்கணக்கான காஷ்மீர் குழந்தைகளைப் பற்றி உலகம் பேசுகிறது என்றே நம்புகிறேன். டெல்லி படுகொலை பற்றி, இந்த நாட்டில் உள்ள வேலையின்மை, மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக மட்டுமல்லாது, ஏழைகளுக்கும் எதிராக காட்டப்படுகின்ற பாகுபாடுகள் பற்றியும் பேசப்படுகின்றது என்றே நான் நம்புகிறேன். இந்த அரசாங்கம் பணக்காரர்களுக்குச் சாதகமானது; அது தொழிலதிபர்களின் பக்கம் இருக்கிறது.
நான் எழுதும் ஒவ்வொரு நீண்ட கட்டுரைகளிலும் மீண்டும் மீண்டும் சில விஷயங்களையே நான் சொல்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் அது அப்படித்தான் இருக்க வேண்டியுள்ளது. மக்களின் நினைவுசேகரம் மிகவும் குறுகியிருப்பதால், ஒரே விஷயத்தை இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்வது முக்கியமானதாகிப் போகிறது. இந்த பெரும்பான்மை படுகுழிக்குள் இந்தியா தலைகீழாக வீழ்ந்து கொண்டிருப்பதைப் பற்றி அனைவரிடமும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இப்ப்பொது நமக்கு ஏற்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 13%, அதாவது 22 கோடிப் பேர் இருக்கின்றனர். நாட்டில் மிகப் பெரிய அளவில் உள்ள சிறுபான்மையினரை தாக்கி அந்நியப்படுத்துபவர்கள் இந்த நாட்டின் அடித்தளத்தையே பலவீனப்படுத்துகிறார்கள். இந்த பாசிஸ்டுகளிடமிருந்து இந்தியாவை நாம் மீட்டெடுக்க வேண்டும். இது அனைவரிடமும் சொல்லப்பட வேண்டிய கதையாக இருக்கிறது.
மீரா சர்மா நடத்திய நேர்காணல்
அடி இணைய இதழ் 2020 வசந்தம்
https://adimagazine.com/articles/rana-ayyub-reclaiming-india-from-the-fascists/
தமிழில்
முனைவர் தா.சந்திரகுரு
”பெரும்பான்மை படுகுழிக்குள் இந்தியா தலைகீழாக வீழ்ந்து கொண்டிருப்பதைப் பற்றி அனைவரிடமும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இப்போது நமக்கு ஏற்பட்டுள்ளது.”
இதைவிட எப்படி சொல்வது.கவலை அதிகரிக்கிறது.
சிறப்பான மொழிபெயர்ப்பு தோழர்.
கருத்தியல் பூர்வமாகவும் களத்திலுமாக காவிப் பரிவாரங்களின் பெரும்பாண்மை அராஜக வாதத்தின் படிநிலைச் செயல்பாடுகளை இதைவிட வேறெப்படியும் பட்டவர்த்தனமாக சொல்லிவிடமுடியாது.Totalitarian regime என்பது மதச் சிறுபாண்மையினருக்கு மட்டுமல்ல மதப் பெரும்பாண்மையினருக்கும் கேடாய் முடியும் என்பதற்கு எல்கர் பரிஷத்(பீமா கோரேகான் 2018) வழக்கும் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக நம் கண்முன்னே இருக்கத்தான் செய்கிறது. இவர்களின் இலக்கு இந்து தேசியவாதமல்ல இந்துத்துவ(பார்ப்பன-பனியா) நலன்களை பிரதிபலிக்கும் தேசியவாதம் என்பதே தெளிவாகிறது.
யதார்த்தமான பயங்கர உண்மைகளைத் தைரியமாக எழுதும் இத்தகைய நாயகர்களை வெறுமனே பாராட்டிவிட்டு மௌனம் காத்தல் – அல்லது அவர்களுடன் சேர்ந்து முன்னிற்க நாமும் தயாராகுதல், முன்னதிலிருந்து பின்னதிற்கு வரும் கால அளவு தான் தற்போது நிலவும் கொடுமையான நிகழ்வுகள் முடிவடைவதற்கும் ஆகக்கூடிய காலஅளவாகவும் இருக்கும்.