உலகம் போற்றும் இந்திய நரம்பியல் விஞ்ஞானி விளையனூர் எஸ் ராமச்சந்திரன் (Vilayanur Subramanian Ramachandran)
தொடர் 75 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
அறிஞர் வி.எஸ். ராமச்சந்திரன் (V.S. Ramachandran) உலகப் பிரசித்திபெற்ற நடத்தை இயல் நரம்பியல் தொடர்பான அற்புத விஞ்ஞானி ஆவார். இந்தியாவில் இருந்து மருத்துவ நோபல் பரிசு பெறும் அறிஞர்களின் உத்தேசப் பட்டியல் வெளிவரும் போதெல்லாம் கண்டிப்பாக அதில் ராமச்சந்திரன் பெயர் இடம் பெறுகிறது. விளையனூர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன் நரம்பியல் துறையில் செய்திருக்கும் ஆய்வுகளும் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவுகளும் தற்போது உலகெங்கிலும் இந்த துறையில் பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
வி.எஸ். ராமச்சந்திரன் (V.S. Ramachandran) ஆய்வு முறை நரம்பியல் என்னும் மூளை சம்பந்தப்பட்ட துறையை சார்ந்தவர். இந்த துறையில் உலகறிந்த நிபுணராக அவர் போற்றப்படுகிறார். அவரது பெரும்பாலான ஆராய்ச்சிகள் நடத்தை நரம்பியல் மற்றும் காட்சி மனோ இயற்பியல் சார்ந்ததாக இருந்தன. ஒரு மனிதனின் மனம் எவ்வாறு உருவாகிறது. சுயம் என்பது கட்டமைக்கப்பட்ட பிறகு மனம் எவ்வாறு விரிவடைகிறது என்பது குறித்த அவரது கோட்பாடு தனித்துவமானது ஆகும்.
நரம்பியல் துறையில் மிகமோசமான ஒரு நோய் உண்டு. அதற்கு பெயர் PHANTOM LIMB என்பதாகும். ஒரு விபத்திலோ அல்லது வேறு ஏதேனும் ஒருவகையிலோ நீங்கள் ஒரு கால் அல்லது ஒரு கையை இழந்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு துண்டிக்கப்பட்டு விட்ட ஒரு கை உங்களிடம் இல்லை என்றாலும் கூட மூளையில் ஏற்படுகின்ற ஒரு வகையான தாக்குதல் காரணமாக இப்படி ஒரு கை இருப்பது போல உங்களுக்கு ஒரு மனத் தோற்றம் ஏற்படுகிறது. இந்த மன தோற்றத்தின் காரணமாக கடுமையான வலி அந்த இல்லாத கையில் அல்லது காலில் இருப்பதாக உணர்கிறீர்கள். இந்த வகை நோயால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகள். வலி தாங்க முடியாமல் கதறி கதறி அழுவதை பார்க்கலாம்.

இது எப்படி சாத்தியம் என்பதே பல நூற்றாண்டுகளுக்கு விளங்காத ஒரு சிக்கலாக இருந்து வந்தது. இந்த பிரச்சினையை கையிலெடுத்த நரம்பியல் விஞ்ஞானி ராமச்சந்திரன் மூளையில் நம்முடைய மனித உடலைப் போலவே ஒழுங்கமைக்கப்பட்டுள்ள உணர்வு புள்ளிகள் இருப்பதை கண்டறிந்து அறிவித்தார். ஒரு கை நீக்கப்பட்டு விட்டாலும் அந்த கையை உயர்த்துவதற்கும் நகர்த்துவதற்கும் அந்த கையை உணர்வதற்குமான உணர்வு புள்ளிகள் மூளையில் அப்படியே செயல்பட்ட வண்ணம் உள்ளன. மூளையை பொறுத்தவரையில் அந்த கை இழக்கப்பட்டு விடவில்லை. இதை ஒரு கோட்பாடாக மாற்றி ஆயிரக்கணக்கான இதே மாதிரியான நோயாளிகளை ஆய்வுக்கு உட்படுத்தி அவர் உலகின் முதல் PHANTOM LIMB AMPUTATION எனும் சாதனையைப் படைத்தார். அவரது சிகிச்சை முறைக்கு MIRROR THERAPY என்று பெயர். கற்பனை மூட்டு வலியை நீக்குவதற்கு கற்பனை மூட்டுகளை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைகளை எளிதில அவரால் மூளையில் மேற்கொள்ள முடிந்தது. இதனால் PHANTOM வலிகளை முற்றிலும் நீக்க முடிந்த ஒரு மருத்துவ முறையை அவர் அறிமுகம் செய்து உலகப் புகழ் பெற்றார்.
அவரது மற்றொரு அற்புத கண்டுபிடிப்பு SYNESTHESIA என்கிற உள்ளுணர்வு குறித்த ஆய்வு ஆகும். இந்த மாதிரியான மன நோய் உள்ளவர்கள் சிக்கலான இரண்டாவது உணர்வு அறிவாற்றல் பாதையை பெற்றுள்ளார்கள். உதாரணமாக ஸினஸ்தீஷியா (Synesthesia) என்கின்ற இந்த மன நிலையை அடைந்தவர்கள் இசையை கேட்கும்பொழுது நிறங்களை அனுபவிக்கிறார்கள். சில வாசனைகளை மணக்கும் பொழுது வடிவங்களை பார்க்கிறார்கள். சில சொற்களை பார்க்கின்ற பொழுது சுவைகளை உணர்கிறார்கள். இத்தகைய குழப்பங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களை துரத்துகின்றன. ஒரு தனி நபரின் தனித்துவமான வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் அவர்கள் கொண்டிருக்கும் குறிப்பிட்ட வகை ஸினஸ்தீஷியா (Synesthesia) ஆகியவை குறித்து முழுமையாக ஆய்வு செய்த வி.எஸ். ராமச்சந்திரன் (V.S. Ramachandran) சில ஸினஸ்தீஷியா (Synesthesia) நோயாளிகள் பூச்சியம் முதல் ஒன்பது வரையிலான ஒவ்வொரு எண்ணிற்குமே ஒவ்வொரு வண்ணம் அவர்களுடைய மூளையில் தூண்டுப்படுவதை கண்டார், இந்த வகை நோயின் வடிவங்களை அவர் இரண்டாக பிரித்தார்..

PROJECTIVE SYNESTHESIA என்பது முதல் வகையாகும். பிறவியிலேயே தோண்டப்படும் இந்த வகை ஸினஸ்தீஷியாவில் வண்ணங்கள் வடிவங்கள் அல்லது வடிவங்களை பார்ப்பது பரவலாக புரிந்து கொள்ளப்படுகிறது. இரண்டாவது வகை, ASSOCIATIVE SYNESTHESIA ஆகும். இது தூண்டலுக்கும், அது தூண்டுகின்ற உணர்வுக்கும் இடையே மிகவும் வலுவான மற்றும் தன்னிச்சையான தொடர்பை உணர வைக்கிறது. சிலருக்கு இது தற்காலிக சூழல் ஆகும். இதை தவிர ரூமஸ்திசியா என்று ஒன்று உண்டு, அது காதில் கேட்கும் ஒலிக்கு தகுந்தார் போல நிறங்களை நம்முடைய மனதில் உருவாக்குகிறது. இவை அனைத்து வகையானத்தையும் கண்டறிந்தது மட்டும் இல்லாமல் அதற்கான தெளிவான சிகிச்சை முறைகளையும் வி.எஸ். ராமச்சந்திரன் (V.S. Ramachandran) அறிமுகம் செய்திருக்கிறார்.
1992 ஆம் ஆண்டு MEG என்று அழைக்கப்படும் மைக்நட்டோ என்செபலோகிராபி, என்னும் துறையில் முதல் முறையாக உலகில் மூளையில் இயற்கையாக நிகழ்கின்ற மின் ஓட்டங்களால் உருவாகும் காந்த புலன்களை பதிவு செய்வதற்கான ஒரு கருவியை அவர் அறிமுகம் செய்தார். மூளையின் செயல்பாட்டை வரைபட முறைக்கு உட்படுத்துவதற்காக ஒரு செயல்பாட்டு நியூரோ இமேஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தவர் ராமச்சந்திரன் அவர்கள். இதற்காக காந்தமானிகளை அவர் பயன்படுத்தினார். ஒரு நோயாளியின் மூளை பகுதியான சோமேட்டோ சென்சரி கார்டெக்ஸ் எனும் பகுதியில் கண்டறியக்கூடிய பல மாற்றங்கள் நடத்தையை தீர்மானிப்பதாக நிரூபிக்க முடிந்தது. முன் மண்டையில் மிக மோசமாக காயம் பட்ட ஒரு மனிதரின் உடைய மூளை செயல்பாட்டு பல ஞாபக நரம்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு பெரிய அளவில் அவருக்கு நினைவாற்றல் சிக்கல்களை உருவாக்குவதை ஆய்வுசெய்து, நினைவாற்றல் குறித்த தனி கோட்பாடு ஒன்றை அவர் அறிவித்தார்.

ஒரு மாற்றுத்திறனாளியின் நரம்பு மண்டலங்களில் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே உள்ள பொருத்தமின்மையால் விதவிதமான வலிகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள் இந்த வலிகளுக்கு நிவாரணங்களை அவர் கண்டறிந்தார். காட்சி அமைப்பு முறை என்கிற MIRROR THERAPY வித்தியாசமானதாகும். உதாரணமாக வலது கையை இழந்த ஒருவர் அல்லது வலது கையில் இழுப்பு நோய் கொண்ட ஒருவர் இந்த வகையான கண்ணாடி பெட்டியின் முன்னால் உட்கார்ந்து, தன் நன்றாக உள்ள இடதுகையால் அசைவுகளை ஏற்படுத்தும் பொழுது தன்னையும் அறியாமல் வலது கையின் இழுப்பு ஓரளவுக்கு தன்னை சரி செய்துகொண்டு ஒத்துழைக்க முன்வருவதை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார் வி.எஸ். ராமச்சந்திரன் (V.S. Ramachandran).
இந்த சிகிச்சை முறை ஒரு கை இழந்தவரின் நல்ல கையை பிரதிபலிக்கும் கண்ணாடியைப் பயன்படுத்தி அவர்களுக்கு இரண்டு கைகளும் இருப்பதை போல அவர் உணர வைக்கிறார். அவர்களின் மனதில் அவர்களின் மறைமுக கை ஒரு ஆர்கெஸ்ட்ரா நடத்துவது போல பாசாங்கு செய்ய அந்த நோயாளி மீண்டும் இரு கைகளும் இருப்பதை உணர முடிந்தது. இதன்மூலம் மூளையின் செல்களுக்குள் நடக்கின்ற வழி என்கிற ரணம் பெரிய அளவில் மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டது.
பரிணாமவியலில் ஒரு டார்வினியவாதியாக இருக்கும் ராமச்சந்திரன் அவர்கள், மனிதனுக்கு மிக சரியாக பேசும் மொழியும் வார்த்தைகளும் எப்படி தோன்றியிருக்கும் என்பது குறித்த தன் பரிணாமவியல் கொள்கையை தனியே வெளியிட்டிருக்கிறார். மனிதனின் மூளையில் கண்ணாடி நியூரான்கள் என்கிற வகை நுண் உறுப்புகள் உள்ளன. இந்த நுண் உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் மனிதனின் மொழி என்கிற ஒரு விஷயம் முதன்முதலில் தோன்றியதற்கும் உள்ள தொடர்பைவருடைய கோட்பாடு விவரிக்கிறது. பரிணாமவியலின் ஒரு கட்டத்தில் இந்த கண்ணாடி நியூரான்கள் மனிதர்களுக்கு இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கான சொற்களை உருவாக்கிக் கொள்ள மனிதனை எப்படி தூண்டியது என்பது குறித்த இவருடைய இந்த கோட்பாடு உலகெங்கிலும் இப்போது பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

மனிதனுக்கு மனம் என்கிற ஒன்றை வழங்கியது மட்டுமல்ல மனிதன் தனக்கிடையே இருக்கும் மனிதர்களை ஒன்றிணைத்துக்கொண்டு ஒரு கலாச்சாரமாக வாழ்வதற்கும் கண்ணாடி நியூரான்கள் தான் காரணம். கலாச்சாரம் என்று அழைக்கப்படும் விரைவான கருத்து பரிமாற்றம் பெரிய பாய்ச்சலை பரிணாமத்தில் ஏற்படுத்தியது எனவே மனிதனுக்கு மொழி என்கிற ஒன்று உருவானது ஒரு தற்செயல் நிகழ்வல்ல அது பரிமாணத்தின் மிக முக்கியமான படிநிலையாகும்.
1999 ஆம் ஆண்டு ராமச்சந்திரன் ஆட்டிசம் என்று அழைக்கப்படும் மன நிலையில் உடைந்த கண்ணாடி கோட்பாடு என்கிற ஒன்றை முன்வைத்தார். கண்ணாடி நியூரான்களின் செயல்பாட்டில் ஏற்படும் செயலிழப்பு தான் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகளின் அறிகுறிகளை உருவாக்குகின்றன என்று அவர் அனுமானித்தார். 2000 மற்றும் 2006 ஆண்டுகளுக்கு இடையில் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் இருந்து தன் சகாக்களுடன் சாண்டியாகோவுக்கு பயணம் செய்து மன இறுக்கத்தின் உடைந்த கண்ணாடிகள் கோட்பாட்டை அவர் அறிவித்தார். மன இருக்கத்தினுடைய பாதிப்பை உடைய குழந்தைகளினுடைய செயல்பாடுகளை EEG முறையில் மூவ் அடக்குதல் என்று அறிவிக்கப்படும் ஆய்வுகளை முன்னிறுத்தி மன இருக்கம் உள்ள குழந்தைகளின் கண்ணாடி நியூரான்கள் செயலிழப்புக்கான ஆதாரங்களை அவர் வெளியிட்டார். இந்த வகையான கண்ணாடி நியூரான்களின் உடைக்கப்பட்ட வடிவம் நிரந்தரமானதல்ல காலப்போக்கில் இந்த உடைந்த கண்ணாடி நியூரான்களை தானாகவே ஒட்ட வைத்துக்கொண்டு சரி செய்து கொள்ளும் ஆற்றல் நம்முடைய மூளைக்கு உண்டு என்பதுதான் இந்த கோட்பாட்டின் அடிப்படையாகும்.

தனது அறிவியல் துறையான ஆய்வு முறை நரம்பியல் துறையை பிரபலபடுத்துவதற்காக பல்வேறு புத்தகங்களை வி.எஸ். ராமச்சந்திரன் (V.S. Ramachandran) எழுதியிருக்கிறார். THE TELL-TALE BRAIN, EMERGING MIND, PHANTOMS IN THE BRAIN போன்றவை அவருடைய மிகப் பிரபலமான புத்தகங்கள் ஆகும்.. இவற்றில் THE EMERGING MIND என்னும் நூலை இந்த கட்டுரையின் ஆசிரியர் தமிழில் உருவாகும் உள்ளம் எனும் தலைப்பில் மொழிபெயர்த்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விளையனூர் எஸ் ராமச்சந்திரன் 1951 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவரது தாயார் கணிதத்தில் பட்டம் பெற்று ஆசிரியராக பணியாற்றி வந்தார். ராமச்சந்திரனின் தாத்தா ஆலடி கிருஷ்ணசுவாமி . இவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை டாக்டர் அம்பேத்கர்ரோடு சேர்ந்து உருவாக்கியவர்களில் ஒருவர். ராமச்சந்திரனின் தந்தை வீ.எம்.சுப்பிரமணியன் ஆவார். இவர் ஐ.நா சபையின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பில் பணிபுரிந்த ஒரு பொறியாளர்.
ராமச்சந்திரன் சென்னையிலுள்ள அரசு பள்ளிகளில் கல்வி கற்று பாதி ஆண்டுகளில் தந்தையினுடைய மாறுதல் காரணமாக பேங்காக்கில் சென்று அங்கு பிரித்தானிய பள்ளிக்கூடங்களில் கல்வி பயின்றார். சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் அவர் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். அதன் பிறகு 1978 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் இணைந்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் கலிஃபோர்னியா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். கலிபோர்னியா, சாண்டியாகோ ஆகிய பல்கலைக்கழகங்களில் உளவியல் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டவர். அவர் உலக பிரசித்தி பெற்ற உயிரியியல் ஆய்வுகளுக்கான சால்க் நிறுவனத்தில் ஒரு இணை பேராசிரியராக தற்போதும் இருக்கிறார்.
உலகம் அறிந்த இந்த நரம்பியல் நிபுணர் பல்வேறு விருதுகளின் சொந்தக்காரர்.. 2005 ஆம் ஆண்டில் அவர் என்ரீடேல் பதக்கம் பெற்றார். லண்டனின் ரௌல்ன் ஸ்டேஷன் வாழ்நாள் கௌரவ உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மைக்கேல் பாரடே, தர்ம்புரிடேவி, தாமஸ் ஹக்ஸ்லி ஆகியோரின் வரிசையில் ரௌல் கழகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சொற்பொழிவுகளை நிகழ்த்திய பெருமை ராமச்சந்திரனுக்கு உண்டு. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க நரம்பியல் அகாடமி ஆகியவற்றின் உயரிய விருதுகளை பெற்றவர்.
2007ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவர் அவருக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை வழங்கி கௌரவித்தார். இந்தியாவின் தலைசிறந்த நரம்பியல் விஞ்ஞானியான விளையனூர் இராமச்சந்திரன், ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல் வெளிவரும் போதெல்லாம் அதில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பை உலகமெங்கும் தொடர்ந்து உருவாக்கி வருவது நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : உலகம் அறிந்த இந்திய வேதியியலாளர் சில்லா மல்லா (Chilla Malla)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமை ஆசிரியரும் எழுத்தாளமான திரு ஆயிஷா நடராஜன் அவர்களின் இந்த முன்முயற்சி மிகவும் வணக்கத்திற்குரியது இதுவரை 75 விஞ்ஞானிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்கள் ஐயா அவர்கள் .ஆனால் இவர்களில் ஒருவர் கூட முன் அறிமுகமே இல்லை என்ற விதத்தில் நாம் படித்தறிந்தது ஏதுமில்லை என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆயிற்று. 🙁 இவர்கள் எல்லாம் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சார்.மாணவர்களிடம் இதை முடிந்தவரை கொண்டு சேர்த்துள்ளோம் பள்ளி கல்லூரி மாணவர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள் தங்களின் மேலான முன்னெடுத்து மிகுந்த நன்றிகள் இந்த முன்னெடுப்பிற்கு. இந்த விஞ்ஞானிகளை அறிந்து கொள்ளும் ஆசிரியர் பெருமக்களும் தலைமை ஆசிரியர்களும் அவரவர் பள்ளிகளில் தினமும் காலை பிரார்த்தனை கூட்டத்தின் போது இவர்களை தினம் ஒருவராக அறிமுகப்படுத்தலாம் முடிந்தால் எல்இடி திரையில் ஒளிரச் செய்து மாணவர்களிடம் சென்று சேர்க்கலாம் என்பது எனது பணிவான வேண்டுகோள்.
நன்றி நன்றி ஜெயராம் பிரகாஷ்
Pingback: கோட்பாட்டு வான் இயற்பியலாளர் ரமேஷ் நாராயண்