இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் – பேரா. நா.வானமாமலை | மதிப்புரை: மதுரை மாநகர்.கோவிந்தராஜ்

நேற்று (05.04.2020) கொஞ்சம் ஆடித்தான் போனோம். நாம் நடத்தும் போராட்டங்களின் போது போராட்டத்தில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்த கை தட்ட செய்தோம், மெழுகுவர்த்திகளை ஏந்த வைத்து கவனத்தை ஈர்த்தோம், நவீனமாக செல்போன் மூலம் ஒளியை பாய்ச்சி உற்சாகபடுத்தினோம். கேரளாவில் தீப்பந்த ஊர்வலங்களை நடத்தி மக்களை எழுச்சி பெற செய்தவர்கள் தானே நாம். நாம் மெழுகுவர்த்தி என்றால் அவர்கள் விளக்கினை தேர்வு செய்தார்கள். இந்திய சமூகத்தில் விளக்கு என்பது பிரதான இடத்தில் இருப்பதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். நம்முடைய இந்நடவடிக்கைகளை எல்லாம் எதிர் புரட்சிகாரர்கள் இன்று ஆளுங்வர்க்கத்தின் அரசு எனும் கருவியின் துணையுடன் பயன்படுத்தியுள்ளார்கள்.

சோர்வடைந்து, பயந்து போயிருக்கும் மக்களுக்கு நம்பிக்கை தேவைபட்டிருக்கலாம். உற்சாகம் தேவைபட்டிருக்கலாம். இதனை எதிர் புரட்சிகாரர்கள் துல்லியமாக கணித்து பயன்படுத்திக் கொண்டார்கள். இதில் மத்திய தர வர்க்கம் பலியாகியுள்ளது. உழைப்பாளி மக்களும் பலியாகியுள்ளர்களா? தெரியவில்லை. நகரம் சார்ந்த பகுதிகளில் ஒரளவிற்கு இருக்கலாம். இருந்தாலும் ஆய்வு தேவைப்படுகிறது. எதிர் புரட்சிகாரர்கள் புரட்சிகாரர்களிடமிருந்து கற்றுக் கொள்வது போல் நாமும் எதிர் புரட்சிகாரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் நம்மிடமிருந்து மட்டும் தான் கற்று கொள்கிறார்களா? இந்திய தத்துவ வரலாற்றிலிருந்தும் இந்திய பண்பாட்டிலிருந்தும் தான். எனவே அவைகளையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

உஜிலாதேவி: இப்படித்தான் இருந்தது ...

தத்துவம் என்பது மானுட அறிதலின் உயரிய வடிவம்.

தத்துவ அறிதல் என்பது அன்றாட அனுபவ அறிதலின் வழியே சமூக வரலாற்றின் வளர்ச்சியோடு இணைந்து வளர்வது.தத்துவம் சமூக உணர்வின் மேலான வடிவம். எனவே, தத்துவ வரலாற்றை அறிவதற்கு முன் மார்க்சிய தத்துவத்தையும் நாம் கற்க வேண்டியுள்ளது. வலதுசாரிகளின்/ பாசிஸ்ட்களின் மேலோங்கிய நடவடிக்கைகளுக்கு எதிரான நம்பிக்கையினை எங்கிருந்து பெறுவது? அல்லது எது நமக்கு அளிக்கும்? இதில் தத்துவத்திற்கு தான் பிரதான இடம் உள்ளது.

தத்துவங்கள் எல்லாம் இந்திய மண்ணில் ஆத்திக தத்துவமாக தான் இருந்துள்ளதா? என்றால் உரக்க சொல்லலாம் நாத்திகத் தத்துவமும் ஆதி முதலே வலுவாக இருந்து வந்துள்ளது என்று. ரிக் வேத காலத்தில் எல்லா வற்றிற்க்கும் பரம்பொருள் ஒன்றே காரணம் என்ற கருத்தாக்கம் இல்லை. இந்திரனை, வருணனை, அக்கினியை கடவுளாக அவர்கள் வழிப்பட்டனர். இதனை மறுதலிக்கும் கருத்துகள் அப்பொழுதே தோன்றி விட்டன. கண்ணால் காணாததை நம்பாதே போன்ற கருத்துகள் தோன்றிவிட்டன. வீரர்களே! இந்திரன் இருப்பது உண்மையானால் அவனது புகழைப் பாடுங்கள் என்கிறார் நாமா எனும் ரிஷி.

 

Rig Vedam | ரிக் வேதம் | ऋग्वेद - YouTube

இந்திரன் என்று எவரும் இல்லை. யார் அவனைக் கண்டார்கள். யார் புகழை நீங்கள் பாடப் போகிறீர்கள் (ரிக் வேதம் VIII 100).

இந்திய நாத்திகவாதிகள் தருக்க முறையிலே சிறந்து விளங்கினர். அதன் மூலம் கடவுட் கொள்கையை கடுமையாக தாக்கினர். ஆழ்ந்த அங்கத உணர்ச்சியோடு கேலி செய்தார்கள். சர்வ வல்லமை படைத்தவர், சர்வ ஞானம் கொண்டவர், எவ்விடத்திலும் இருப்பவர். கடவுள் பரிபூரணாந்தம் என்றெல்லாம் கருதி மனமுருகி ஆத்திகர்கள் பாடினார்கள். இதனை குணரத்னா எனும் ஜைனத் துறவி கேலி செய்கிறார்.

“இக்குணங்களை எல்லாம் இல்லாத ஒன்றிற்கு படைப்பது வீணானது. ஒரு அழகிய பெண்ணை வீரியமற்றவனுக்கு அளிப்பது போன்றது இது. பாலுணர்ச்சி இல்லாதவனுக்கு அழகிய இளம் பெண் எப்படி பயனற்றவளோ, அது போலவே இல்லாத கடவுளுக்கு இந்த இயல்புகளும் பயன்படாது”

தற்பொழுது இது போன்ற தர்க்க அணுகுமுறைகளை கையாளக் கூடாது என்பதனையும் நாம் கவனித்தில் கொள்ள வேண்டியுள்ளது.

வலுவாக அறிவுக் கொண்டு தாக்கும் நாத்திகத்தை சாதுரியமாக விழுங்க முயற்சித்தது ஆத்திகம். பல சாகசங்களை செய்தது. நாத்திகம் உள்பட தன்னை எதிர்த்த எல்லா தத்துவங்களையும் உள்ளடக்கி தன்னுள் விழுங்க முயற்சி செய்தது. உதயணர் என்பவர், உலகில் யாரும் நாத்திகரில்லை. ஒவ்வொருவரும் தங்கள் வழியில் கடவுளை நம்புகிறார்கள் என்ற வாதத்தை முன் வைத்தார். இந்த தருக்க முறைக்கு சாமான்ய சாலம் என்று பெயர். இதன் நீட்சியாக மார்க்சியத்தை கூட அணுக முயற்சித்தார்கள் இந்திய தத்துவவாதிகள். குறிப்பாக இந்திய தத்துவவியலாளர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், “கம்யூனிசம் ஒரு மதம்” என்று அடித்துக் கூறினார்.

இந்திய தத்துவ வரலாற்றில் ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்குமான போராட்டம் ஒரு நீண்ட நெடிய போராட்டம். அறிவுக் கொண்டு தாக்கும் நாத்திகத்தை நயவஞ்சகமாக விழுங்க முயற்சித்த வரலாறு இந்திய ஆத்திகத்திற்கு உண்டு என்பதனை நாம் கவனித்தில் கொள்ள வேண்டும்.

இந்திய நாத்திகத்தின் குறைபாடுகள் என்ன? விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாக தற்பொழுது இருந்தாலும் அதன் துணையினால் கூட நாத்திகத்தினால் ஏன் முழுமையான வெற்றியை இன்னமும் ஈட்ட இயலவில்லை என்ற கேள்வி முக்கியமானது. இதற்கான காரணத்தை தத்துவ வேலிக்கு அப்பால் சென்று காண வேண்டியுள்ளது. கடவுள் நம்பிக்கைக்கு உணவு அளிக்கும் அடிப்படை எது? என்ற கேள்விக்கு பதிலளிக்க மார்க்சின் சிந்தனை தான் உதவுகிறது.இந்திய நாத்திகமும் மார்க்சீயத் ...

சமூக வாழ்க்கையில் இருந்து தான் சிந்தனை படைக்கப்படுகிறது என்ற மகத்தான உண்மையை மார்க்ஸ் தான் விளக்கினார். சமூக விருட்சத்தின் ஆணி வேர் பொருளாதார அடிப்படையும் உறவுகளுமே. தரைக்கு மேல் தெரிகிற மரம், கிளை, இலை போன்று தான் மனதின் சிந்தனைகள். புற உலக வாழ்க்கை தான் சிந்தனைக்கு காரணம். சமூக அடிப்படையின் இயக்கத்தை வேகமாக்கவோ, மந்தப்படுத்தவோ கூட சிந்தனைகள் உதவலாம்.

ஆனால் முற்றிலும் மாற்றி விட முடியாது. அடிப்படை மாற்றப்பட்டால் சிந்தனைகள் மாறும். இது உடனடியாக நிகழாது. பழைய சமுதாய அடிப்படையில் எழுந்த சிந்தனைகள் பல காலம் மக்கள் மனதில் நீடிக்கும். இதனால் தான் சிந்தனைகளை எதிர்த்து நடத்துகிற தர்க்கப் போராட்டம் மட்டும் வெற்றியடைவதில்லை. சிந்தனையின் சமூக அடிப்படையை மாற்ற வேண்டும். அப்பொழுது தான் சிந்தனை மாறும். கடவுளைப் பற்றி நினைத்து மனிதன் ஏங்குவதைத் தடுக்க சமூக புரட்சி ஒன்றினால் தான் முடியும். இது மார்கசின் சிந்தனை.

சமூக புரட்சி நடக்கும் வரை நாம் என்ன செய்வது? சமூக வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மதக் கருத்துகளுக்கு எதிரான பிரச்சாரம் எவ்வாறிருக்க வேண்டும்? இதற்கு லெனினே பதிலளிக்கிறார்.

“எல்லா மொழிகளிலும் நாத்திகம் பற்றி எழுதப்பட்டிருக்கும் நூல்களை எல்லாம் கவனமாகப் படித்து அவற்றில் இருக்கும் முக்கியமான கருத்துகளை விமர்சனம் செய்தல் வேண்டும் அல்லது மதிப்புரைகள் எழுத வேண்டும்.

கோடிக்கணக்கான மக்கள் எழுத்தறிவு இன்மையிலும், மதங்கள் செய்யும் பிரச்சார மூடத்தனத்திலும் மூழ்கி கிடக்கும் பொழுது, மார்க்சிய கல்வியெனும் நேர் வழியால் இவர்களது மனத்தில் அறிவொளி பாயச் செய்யலாம் என்று மார்க்சியவாதிகள் கருதினால் அது பெருந்தவறாகும்.

இம்மக்கள் கூட்டத்திற்கு பல்வேறு விதமான நாத்திக எழுத்துகளை அளித்தல் அவசியம். வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் இருந்து உண்மைகளை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் நாம் அவர்களை நாம் சந்திக்க வேண்டும். மத மயக்கத்திலிருந்து அவர்களை விழிப்புறச் செய்ய வேண்டும். அவர்கள் எழுச்சி பெறச் செய்ய பல்வேறு முறைகளை நாம் கையாள வேண்டும்.

வேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு ...

மார்க்சிஸ்டுகளாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகள் ஒரு முக்கியமான விசயத்தை கவனத்தில் கொள்ளுவதில்லை. அறிவு வளர்ச்சி பெறாத மக்கள் மனங்களில் மதப் பிரச்சினைகள் பற்றி ஒரு அறிவு கூர்மையான போக்கை உண்டாக்கவும் மதம் பற்றிய அறிவுக் கூர்மையான விமர்சனம் செய்ய மக்கள் கற்றுக் கொள்ளவும் ஒர் எழுச்சியை உண்டாக்குவது தமது கடமை என்று கம்யூனிஸ்டுகள் உணர வேண்டும்.”

இறுதியாக மதுரை அறிவியல் இயக்கத்தின் அனுபவத்தை இங்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ பிடித்த சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய வலதுசாரிகள், “இது அபசகுணம்; எனவே மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்” என கூறினர். மக்களும் குறிப்பாக சிம்மக்கல் பகுதியில் உள்ள அக்ராஹார மக்கள் பெருமளவு விளக்கேற்றினர். இதில் எவ்வாறு தலையீடு செய்வது என்று விவாதித்தோம். காத்திருப்போம். உரிய நேரத்தில் தலையிட வேண்டும் என்று கருதினோம். அடுத்த 15, 20 தினங்களில் அந்த வாய்ப்பு வந்தது. சந்திர கிரகணம் வந்தது. சிம்மக்கல் பாலம் மீது 4 டெலஸ்கோப் உடன் அறிவியல் இயக்கத்தினர் சுண்டலுடன் போய் உட்கார்ந்தனர். ]

சனாதன வாதிகளின் அறை கூவலுக்கு செவி மடுத்து விளக்கேற்றிய அதே மக்கள் கூட்டம் கூட்டமாக சந்திர் கிரகணத்தை பார்க்க தங்கள் குழந்தைகளுடன் வந்தனர். இந்த அனுபவத்தின் நீட்சியாக கடந்த டிசம்பர் மாதம் வந்த சூரிய கிரகணத்தையும் அறிவியல் இயக்கத்துடன் பயன்படுத்தினோம். ராஜா மில் பாலம், வண்டியூர் லேக், ஆரப்பாளையம் ரவுண்டானா, அக்ரிணி வளாகம், திருமங்கலம் டோல் கேட்… என 10 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்ணாடியுடன் சென்றோம். இதில் தோழர் சுரேஷ்குமார் உள்பட பல தோழர்கள் இராஜா மில் பாலத்தில் உற்சாகத்துடன் நூற்றுக்கணக்கான மக்களுக்கு முறுக்குகளை வழங்கி சூரிய கிரகணத்தை விளக்கி கூறினார். இதே அனுபவம் தான் அக்ரினி வளாகத்தில் தோழர் இரமேசுக்கு(ஜி.ஐ.சி). இது ஒரு வழி முறை. இதே போல் பல்வேறு முறைகளை பின்பற்ற தான் லெனின் சொல்கிறார்.

இந்த சிந்தனையோட்டத்தை உருவாக்க பேரா. நா.வானமாமலையின் நூல் உதவியது.

புத்தகம் : இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும்
ஆசிரியர் : பேரா. நா.வானமாமலை
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்                                                                                                                      மதிப்புரை: கோவிந்தராஜ்                                                                                                                                 மாவட்ட செயர்குழு உறுப்பினர் -CPIM
மதுரை மாநகர்