இந்திய உயிர்- கரிம வேதியியலாளர் கே.என்.கணேஷ் (K.N.Ganesh)
தொடர் : 48 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
கிருஷ்ண ராஜ் நகர் நாகப்பா கணேஷ் (K.N.Ganesh) உலக அளவில் இன்று அறியப்படும் இந்தியா உயிர் கரிம வேதியியலாளர் ஆவார். திருப்பதியில் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் நிறுவன இயக்குநராக அதே சமயத்தில் அங்க இருக்கும் வேதி கரிம ஆய்வகத்தின் முதன்மை விஞ்ஞானியாகவும் அவர் செயல்பட்டு வருகிறார். நானோ மரபணுக்களின் மூலக்கூறுகளில் வேதியியல் அடிப்படைகளை கோட்பாடாக வெளியிட்ட பெருமை விஞ்ஞானி கணேஷை சேரும்.
கோட்பாட்டு வேதியியல் என்பது மிக சிக்கலான ஒரு துறை. வேதி அறிவியலின் அடிப்படைகளைக் கோட்பாடுகளாக மாற்றுவது என்பது உலகில் வெகு சிலரால் மட்டுமே முடிந்த ஒன்றாகும். இவருடைய ஆராய்ச்சி பணி டிஎன்ஏ ஜலட்டின் என்னும் துறை சார்ந்ததாகும். இது ஒளி ஊடுருவக்கூடிய நிறமற்ற சுவையற்ற உணவுப் பொருள் சார்ந்தது. விலங்குகளின் உடல் பாகங்களில் இருந்து எடுக்கப்படும் கொலாஜன் என்று அழைக்கப்படும் பொருளிலிருந்து இது பெறப்படுகிறது. மிகவும் உலர்ந்து போகும் பொழுது உடையக்கூடிய அமைப்பு ஈரமாக இருக்கும் பொழுது இது ரப்பராக இருக்கும். இந்த கொலாஜன், கொலாஜன் ஹைட்ரோ லைட் செட் என்னும் ஒரு பொருளாக மாற்றப் பட வேண்டும் இவற்றில் கொலாஜன் பெப்டைடுகள் தனித்துவமானவை.
இன்றைய உணவுப்பண்டங்களின் தயாரிப்பு முதல் மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான சிகிச்சை முறைகளுக்குப் பயன்படும் மருந்துகள் வரை பயன்பாட்டு அறிவியலில் இந்த கொலாஜன் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. நான்காம் தொழில் புரட்சி ஆண்டுகளை தற்போது நாம் கடந்து வருகிறோம். முதலாவது தொழில் புரட்சி இங்கிலாந்து போன்ற நாடுகளில் முதன்முதலில் எந்திர ஆற்றல் அறிமுகமான போது உருவானது கரியைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் ரயில் வண்டிகள் என்று உலகம் மாறிப்போனது. இந்த தொழிற்சாலைலுக்கான கச்சா பொருள்களைப் பெறுவதற்காக உலகெங்கும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தன்னுடைய காலணிகளை உருவாக்கிக் கொண்டு இயற்கையை தன்னகத்தே வசப்படுத்தியது. இரண்டாவது தொழில் புரட்சி என்பது மின்சாரம் தயாரிக்கப்பட்ட பிறகு மின்சாதனங்கள் சம்பந்தப்பட்டதாக மாறியது. மூன்றாவது தொழில் புரட்சி என்பது அதன் பிறகான எலெக்ட்ரானிக் யுகமாகும்.
இன்று நான்காம் தொழில் புரட்சிக்குள் நுழைந்திருக்கிறோம். இது இணையத்தின் செயல்பாடு செயற்கை நுண்ணறிவு மற்றும் அனைத்து துறைகளிலும் அதிவேகமாக இன்று முன்னேறி வருகின்ற 3D அச்சாக்கம் உட்பட மருத்துவ மற்றும் வாணிப உணவு என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த விஷயத்தில் உலக அளவில் இந்தியா ஒரு பெரிய போட்டியாளர். எனவே விஞ்ஞானி கணேஷ் (K.N.Ganesh) போன்றவர்களின் அத்தியாவசியமான நானோ வேதியல் கண்டுபிடிப்புகள் தனிப்பெரும் தொழில் சாம்ராஜ்யமாக நம்முடைய இந்தியா உருவாவதற்கு பெரிய அளவில் உதவி செய்கின்றன.
விஞ்ஞானி கணேஷின் அடுத்த ஆய்வு நியூக்ளிக் அமிலங்கள் தொடர்பானதாகும். இவை அனைத்து உயிர் செல்கள் மற்றும் வைரஸ்களிலும் முக்கியமான பெரிய உயிர் மூலக்கூறுகள் ஆகும். இவை அனைத்துமே நியூக்ளியோடைடுகளால் ஆனவை. 5 கார்பன் சர்க்கரை, ஒரு பாஸ்பேட் குழு மற்றும் ஒரு நைட்ரஜன் என்பது அனைத்து நியூக்ளிக் அமிலங்களின் அடிப்படை வேதி அமைப்பு ஆகும். நியூக்ளிக் அமிலம் என்பது டிஎன்ஏ மற்றும் RNA ஆகியவற்றின் ஒட்டுமொத்த பெயராக உள்ளது. இது பயோ பாலிமர்களின் குடும்பத்தின் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பாலிநியூக்ளியோடைடு என்னும் அங்கத்திற்குள் கணேஷின் ஆய்வுகள் இடம்பெறுகின்றன. அணுக்கருவிற்குள் அவற்றின் அடிப்படைகளை பாஸ்பேட் குழுக்களின் தொடர்புடையதாக அவர் அறிவித்தார். யூகாரியோடிக் செல்கள் என்று அழைக்கப்படும் உட்கருவில் இவை முதன்முதலாக அவரால் கண்டறியப் பட்டன இதன் மூலம் நமக்கு இவற்றினுடைய உயிர் அமைப்பை அறிந்து கொள்கின்ற மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. COLLAGEN PEPTIDES ஆய்வுகளின் வழியே விஞ்ஞானி கணேஷ் அவர்கள் நானோ டிஎன்ஏ தொழில்நுட்பம் என்னும் துறைக்குள் நுழைந்தார்.
நானோ டிஎன்ஏ தொழில்நுட்பம் என்றால் என்ன? அதில் கணேஷின் பங்களிப்பு என்ன? டிஎன்ஏ நானோ தொழில்நுட்பம் என்பது தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான செயற்கை நியூக்ளிக் அமில கட்டமைப்புகளை வடிவமைத்து தயாரிக்கும் முறை இந்த துறையில் நியூக்ளிக் அமிலங்கள் நானோ தொழினுட்பத்திற்கான உயிரியல் அல்லாத பொறியியல் பொருட்களாகப் பயன்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்புகளை ஏற்படுத்தும் சவால் கொண்டது. உயிரணுக்களில் மரபணு தகவல்களின் கேரியர்களாக நாம் இந்த நானோ டிஎன்ஏக்களை பயன்படுத்த முடியும்.
இருதய அறுவை சிகிச்சை செய்து இன்று நானோ குழாய்களைப் பொருத்துவது மிகவும் சகஜமாகி விட்டது. இந்த நானோ குழாய்களைப் பாதி செயற்கை வேதிப்பொருளாகவும் மீதி உயிரி வேதிப்பொருளாகவும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இந்தியாவில் இத்தகையவற்றை தயாரித்து வழங்கிய பெருமைக்குரியவர்தான் நம்முடைய விஞ்ஞானி வேதியியலாளர் கே.என்.கணேஷ் (K.N.Ganesh). முப்பரிமான படிக நானோ நியூக்ளிக் அமிலங்களை நாம் அன்றாடம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளாக மாற்றுவதில் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய வகைப்பாடுகளை கணேஷ் முன்வைத்தார். அத்தோடு பாலிஹெட்ரா மற்றும் தன்னிச்சையான மூலக்கூறு இயந்திரங்களை தானாகவே உருவாக்கிக்கொள்ளும். தானியங்கி 3D வேதியியல் இயந்திரங்களை உற்பத்தி செய்வதில் கணேஷ்யின் பங்கு மகத்தானது.
PEPDIDE NEUCLIC ACID- PNA எனும் பெப்டைடு நியூக்ளிக் அமிலம் தொடர்பான கணேஷின் அமைப்பியல் வேதி கட்டுரைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. PNA என்பது டிஎன்ஏ அல்லது ஆர்என்எ போன்ற இயற்கையாக அமைந்தவற்றின் செயற்கையான முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட பாலிமர் வகைகளாகும். இந்த செயற்கை பெப்டைடு நியூக்ளிக் அமில பாலிமர்கள் சமீப ஆண்டுகளில் மூலக்கூறு உயிரியல் நடைமுறைகள் ப்ரோடீன், மற்றும் வைட்டமின் மருந்துகள் போன்றவற்றில் அதிகம் பயன்படுகின்றன. PNA இயற்கையாக நிகழ்வதே கிடையாது, ஆனால் PNA உள்கட்டமைப்பான N கிளைசின் இந்த பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான மரபணு மூலக்கூறின் ஆரம்ப வடிவமாக அனுமானிக்கப்பட்டு சைனோ பாக்டீரியாக்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர் விஞ்ஞானி வேதியியலாளர் கே.என்.கணேஷ் (K.N.Ganesh).
உயிரி வேதி துறையில் தனக்கென்று ஒரு இடம் பிடித்த விஞ்ஞானி வேதியியலாளர் கே.என்.கணேஷ், 1953 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். பெங்களூர் பல்கலைக்கழகத்தில் 1970 ஆம் ஆண்டு தன்னுடைய இளம் அறிவியல் பட்டத்தை வேதியியலில் பெற்றார். பிறகு அதே பல்கலைக்கழகத்தில் Msc பட்டத்தை வேதியியலில் பெற்று 1975-76 ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். அந்த நேரத்தில் காமன்வெல்த் பெல்லோஷிப் என்னும் அபூர்வமான தேர்வில் வெற்றி பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைந்து இரண்டாவதும் உயர் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். 1980 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் ஹைதராபாத்தில் உள்ள சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிக்குலர் பயாலஜி ஆய்வகத்தில் டிஎன்ஏ புரதங்கள் குறித்த ஆய்வில் இணைந்தார். 1987 ஆம் ஆண்டு தேசிய வேதியியல் ஆய்வுக் கூடத்தில் இணைந்து அங்கு உயிரி வேதியியல் துறையின் தலைமை பொறுப்பை 1994 ஆம் ஆண்டு ஏற்றார். பூனாவில் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் செயன்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பொழுது அதன் முதல் இயக்குநராகத் தேர்வு பெற்றவர் விஞ்ஞானி வேதியியலாளர் கே.என்.கணேஷ் (K.N.Ganesh).
தற்போது திருப்பதியில் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் நிறுவனத்தின் இயக்குநராகவும் அதே அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாகவும் அவர் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றவர். 2023 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் அறிந்த இந்திய வானியலாளர் சோமக் ராய் சௌத்ரி (Prof. Somak Raychaudhury)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.