இந்தியாவின் வன விலங்கு சூழலியல் அறிஞர் இராமன் சுகுமார் (Indian Ecologist Raman Sukumar)
தொடர் 81: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
இராமன் சுகுமார் (Indian Ecologist Raman Sukumar) பெங்களூரிலுள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் சூழலியல் அறிவியல் என்னும் துறையில் தலைமை விஞ்ஞானியாக செயல்பட்டு வருகிறார். ஆசியாவில் குறிப்பாக தெற்காசியாவின் இந்தியா, நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள யானைகளின் வாழ்க்கை மற்றும் பராமரிப்பு குறித்த அறிவியல் துறையின் வித்தகர்.
யானைகள் குறித்த ஆய்வுத்துறை பாலூட்டிகள் துறையின ஒரு அங்கமாக MAMMALOGY என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக ஆசிய யானைகள் என்பவை குறித்த ஆய்வுகள் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. சர்வதேச இயற்கை பராமரிப்பு யூனியன் IUCN என்னும் பொது அமைப்பு AsESG என்றழைக்கப்படும் ஏஷியன் எலிஃபென்ட்ஸ் ஸ்பெஷலிஸ்ட் குரூப் என்கிற தனி ஆசிய யானை பாதுகாப்பு குழுமத்தை ஒரு ஆய்வு குடும்பமாக நடத்தி வருகிறது. அதில் ஏஷியன் எலிஃப்ண்ட் லைஃப் அண்ட் ரிசர்ச் அண்ட் கன்சர்வேஷன் AERC தனிப்பெரும் அமைப்பாகும். இந்த அமைப்பின் இந்திய முதன்மை விஞ்ஞானி தான் அறிஞர் ராமன் சுகுமார்.
இராமன் சுகுமார் (Indian Ecologist Raman Sukumar) சென்னையைச் சேர்ந்தவர். 1955 ஆம் ஆண்டு பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டத்திற்கு தாவரவியல் பாடத்தை எடுத்து படித்தார். முதுகலை பட்டம் பெற்ற பிறகு பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் சயன்ஸ் நிறுவனத்திற்கு சென்று முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார். யானைகள் குறித்த அவருடைய ஆராய்ச்சி தொடங்குவதற்கு முன் 1986 ஆம் ஆண்டு நீலகிரி உயிர்கோள காப்பகம் அமைப்பதில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.
இராமன் சுகுமார் அவர்களின் முதல் பங்களிப்பு. நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை அமைக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்தது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள நீலகிரி மலைகளில் இந்த காப்பகம் அமைக்கப்பட்டது. இது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா முழுவதும் பரவி இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனை நடைமுறைக்கு கொண்டு வந்ததில் ராமன் சுகுமார் அவர்களின் பங்கு மகத்தானதாகும். இது தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளான முதுமலை தேசிய பூங்கா, முகூர்த்தி தேசிய பூங்கா, சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றை உள்ளடக்கியது. கர்நாடகாவில் நாகர்ஹோலே தேசிய பூங்கா, பந்திபூர் தேசிய பூங்கா இவை இரண்டும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டன. கேரளாவில் அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா, ஆடுகளம் விலங்கு சரணாலயம், வயநாடு வனவிலங்கு சரணாலயம் இவற்றோடு கரிம்புழா வனவிலங்கு சரணாலயம் இவையும் இந்த திட்டத்தின் கீழ் இராமன் சுகுமார் அவர்களின் தீவிர போராட்டத்திற்கு பிறகு இணைக்கப்பட்டு, இந்த பகுதிகள் முழுவதும் வனவிலங்குகளை பாதுகாக்கும் ஒரு பிரமாண்ட போராட்டமாக தொடங்கியது.

5000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பை உள்ளடக்கிய நீலகிரி மலைத்தொடர்கள் மற்றும் அதன் சுற்றுப்புற சூழல்களில் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் மற்றும் முதன்மையான உயிர்கோள காப்பகம் இது. மேலும் இது தாவரங்கள் மற்றும் விலங்குகள் நிறைந்த பாரம்பரிய சூழலியலை காப்பாற்றுவதற்கான ஒரு பிரம்மாண்ட அமைப்பாகும். இந்த பகுதிகளுக்குச் சென்று தன் வாழ்க்கையை அர்ப்பணித்த இராமன் சுகுமார். இது குறித்து ஆறு அற்புதமான ஆய்வு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இந்த பகுதிக்கு உரிய பழங்குடியின குழுக்களோடு ஒன்று கலந்து வாழ்ந்து படகுள், தோடா, கொட்டாக்கள், உலா, குறும்பா பணியா, எடநாடன் மற்றும் மலையன் போன்ற பழங்குடி இனகுழுக்களை குறித்த வனவிலங்கு பாதுகாப்பு ஆய்வுகளை தீவிரமாக மேற்கொண்டார் இராமன் சுகுமார் (Indian Ecologist Raman Sukumar).
நீலகிரி உயிர்கோள காப்பகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் 14 பறவையினங்கள் உள்ளன. இவற்றில் நீலகிரி சிரிப்பு துளிர் என்னும் பறவை 1200 மீட்டர்களுக்கு மேல் உயரமான இடங்களில் மட்டுமே வாழ்கிறது. நீலகிரி மர புறா, மலபார் சாம்பல் இருவாச்சி போன்ற பறவைகள் தனித்துவமிக்கவை என்பது இராமன் சுகுமார் அவர்களின் ஆய்வின் மூலம் உலகிற்கு அறிவிக்கப்பட்ட முக்கிய தகவல்கள்.
1997 ஆம் ஆண்டு அவர் ஏஷியன் நேச்சர் கன்சர்வேஷன் ஃபவுண்டேஷன் உடன் இணைந்து ஆசிய யானைகள் பாதுகாப்பு செயல் திட்டத்தில் இணைந்தார். அதற்கு முன் அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் சென்று மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகள் குறித்த முக்கிய ஆய்வு ஒன்றில் இணைந்து பயிற்சி பெற்று இந்தியா திரும்பினார். FULBRIGHT FELLOW என்று இந்த பயிற்சியை முடித்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள். இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் பெங்களூர் கல்வியகத்தில் சூழலியல் அறிவியல் துறையில் ஒரு பேராசிரியராக தன்னை இணைத்துக் கொண்ட இராமன் சுகுமார் (Indian Ecologist Raman Sukumar) இப்போது யானைகளின் ஆய்வுகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.

மக்கள் தொகை அதிகமுள்ள நம்முடைய துணைக்கண்டத்தில் யானைகளும், மக்களும் நிலம் மற்றும் வளங்களை பகிர்ந்து கொள்வதில் மோதல்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் யானைகள் பற்றிய சில அடிப்படை உண்மைகளை இராமன் சுகுமார் அவர்களின் ஆய்வுகள் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டின.. யானைகள் வசிப்பிடத்தின் 22% மட்டுமே நம்ம அது பாதுகாக்கப்பட்ட பகுதி வளை அமைப்பிற்குள் காணப்படுகிறது. மீதம் உள்ள யானைகள் அனைத்தும் பாதுகாப்புக்கு வெளியே உள்ளன. இப்போது மக்கள் அதிகமாக உள்ள இடங்களில் யானைகள் நடமாடுகின்றன. இந்தியாவிலுள்ள இருபத்தெட்டாயிரம் காட்டு யானைகள் நாட்டின் புவியியல் பகுதியில் சுமார் மூன்று சதவீத பரப்பு அளவில் மட்டுமே வாழ்கின்றன. இது மனிதர்கள் யானைகளுக்கு கொடுத்துள்ள உயர்ந்தபட்ச தண்டனை என்கிறார் இராமன் சுகுமார் (Indian Ecologist Raman Sukumar)
இந்தியாவில் உள்ள யானைகள் குறித்த இராமன் சுகுமார் அவர்களின் அரிய தகவல்கள் நம்மை வியப்பூட்டுகின்றன. அறிவில் மேம்பட்ட விலங்கினமாக இந்திய யானைகள் உள்ளன. மனிதர்கள் டால்ஃபின் வகையை சேர்ந்த மீன்கள் உயர்ந்த நிலையில் உள்ள மனித குரங்குகள் ஆகியவற்றைப் போலவே அறிவில் சிறந்தவையாக ஆசிய யானைகள் விளங்குகின்றன. அவைகளிடம் இரக்க குணம், துயரம், குடும்பத்தை பேணுவதில் பொறுப்புத் தன்மை, சுய அறிவு என பல சிறப்பு குணாம்சங்கள் அமைந்துள்ளன. கண்ணாடியில் பார்த்தால் தங்கள் முகங்களை அவை எளிதில் கண்டறிந்து சுயத்தை அனுபவிக்கின்றன என்பது எவ்வளவு பெரிய அதிசயம். ஆசிய யானைகளுக்கு மனிதர்களுக்கு ஒப்பான ஆயுள் உண்டு.

கன்சர்வேஷன் இந்தியா என்னும் இதழில் மனித – யானை மோதல் குறித்த மிக முக்கிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை இராமன் சுகுமார், ஜானகி லெனின் எனும் தன்னுடைய சக ஆய்வாளர்ரோடு இணைந்து எழுதி வெளியிட்டார். இரு தரப்பிலும் இழப்புகள் அதிகம் இதுவரை யானைகள் உடனான மோதலில் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் சராசரியாக 350 பேர் கொல்லப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 – 50 யானைகள் உயிர் விடுகின்றன. இருதரப்பிலும் இப்படி ஏற்படும் இழப்புகளை சரி செய்வதற்கு கிராம மக்கள் காடுகளை ஆக்கிரமிப்பதில் இருந்து பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. யானைகளின் வழித்தடங்கள் யானைகளின் வசிப்பிட பகுதிகள் ஆகியவற்றில் விவசாயத்தை விரிவு படுத்துவதும் நவீன தொழில்களில் ஒன்றாகிவிட்ட கார்ப்பரேட் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது முக்கிய காரணமாக அவரால் சுட்டிக்காட்டப்படுகிறது. யானைகளின் வாழ்க்கை வரம்பு குறைவதற்கும் மனிதர்களின் வாழ்க்கை வரம்பு அதிகரிப்பதற்கும் இடையிலான மோதல் இது என்பது இராமன் சுகுமார் (Indian Ecologist Raman Sukumar) அவர்களின் நிலைப்பாடு.
இந்தியாவில் 28,000 காட்டுப்பகுதி யானைகளும், ஏறக்குறைய 16,000 பராமரிப்பு யானைகளும் உள்ளன என்பது உட்பட பல்வேறு தரவுகளை யானைகள் ஆய்வாளரான இராமன் சுகுமார் (Indian Ecologist Raman Sukumar) அவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் நமக்கு வழங்குகின்றன. இந்தியா மட்டுமின்றி ஆசியாவின் ஏனைய யானை பகுதிகளான இலங்கை, நேபாளம், வங்காளதேசம் என்று இவருடைய யானைகள் குறித்த ஆய்வுகள் பிரபலம் அடைந்துள்ளன. இமயமலை, விந்திய சாத்பூரா மலை, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் இலங்கையின் அடர்ந்த காடுகள் ஆகியவற்றில் நிலவும் வாழும் யானைகளுக்கு இடையிலான வாழ்வின் வேறுபாடுகளை துல்லியமாக கணக்கிட்டு பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கும் இராமன் சுகுமார் அவர்கள் வனவிலங்கு பாதுகாப்பு விஞ்ஞானிகள் என்கிற உலக பட்டியலில் 20 வல்லுநர்களில் ஒருவராக இடம் பெற்று இருப்பது நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : இந்தியாவின் ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் என்று போற்றப்படும் கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் (Prof V Balakrishnan)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமையான கட்டுரை!மிக சிறப்பாக சுகுமார் அவர்களின் ஆய்வுகள் பற்றி எடுத்துரைகாப்பட்டுள்ளது. நன்றி!பாராட்டுக்கள் அய்யா!! By முனைவர். பா. ராம் மனோகர்.