கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியை எதிர்த்து போரிட, இரண்டு கட்ட நிவாரண உதவிகளை பிரதமர் அறிவித்துள்ளார் . ஒன்று, 15 000 கோடி மதிப்பிலான அவசரகால சுகாதார செலவுகளுக்கானது. மற்றொன்று, பொருளாதார நிவாரண உதவிகளுக்கான 1.07 லட்சம் கோடி. கோவிட்- 19 விளைவித்த நெருக்கடியை சமாளிக்க, இந்தப் பிரச்சினையை இரண்டு முனையுள்ள பிரச்சனையாக அரசு கற்பிதம் செய்ய முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அப்படி இருக்காது என்று நம்புவோம்.
நீங்கள் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ளும் போது, பொருளாதாரத்தையும் கவனத்தில் கொள்கிறீர்கள். அதேபோல, பொருளாதாரத்தை கவனத்தில் கொள்கிறீர்கள் என்றால் ஆரோக்கியத்தையும் தேடுகிறீர்கள் என்றே பொருள்படும். பல பத்தாண்டுகளாக தத்துவ வாதியும் பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் மனித வளர்ச்சியை முன் வைத்து பொருளாதார ஆய்வுகள் பல செய்து, நமக்கு அளித்து வந்த போதும், மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள், இந்த இரண்டுக்குமான உள்ளார்ந்த உறவுகளை ஏற்றுக்கொள்ள வில்லை.
இந்திய நாட்டின் மக்கள், குறிப்பாக 90 விழுக்காடு முறைசாரா தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் குறைந்த கூலிக்கு கடுமையாக உழைத்து இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றியுள்ளனர். இதன் விளைவாக 1990 முதல் 2019 வரை உள்ள காலகட்டத்தில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் தேசிய வருவாயில் சுகாதாரத்தின் பங்கு 0.9 விழுக்காட்டிலிருந்து 1.28 விழுக்காடாக மட்டுமே அதிகரித்திருக்கிறது. இது உலகின் வளர்ச்சி குன்றிய நாடுகளின் சராசரி சுகாதார செலவான 1.6 விழுக்காட்டை காட்டிலும் குறைவு.
இவ்வளவு குறைவாக சுகாதாரத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்தால், ஒரு கொடிய தொற்று நோய் எதிர்த்து அதன் முன்னணிப் படையான சுகாதார கட்டமைப்பு எப்படி எதிர்த்து நிற்க முடியும்? எவ்வளவு குறைவான எண்ணிக்கையில் மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள்? என்று நினைத்துப் பாருங்கள். அரசு ஒதுக்கும் சுகாதாரத்திற்கான நிதியில்,ஒரு கணிசமான பகுதி ‘குடும்ப நலன்’ என்ற கௌரவமான சொல்லாட்சி யின் பெயரில் குடும்பக்கட்டுப்பாட்டு செலவுக்கே சென்றுவிடுகிறது. இதனைக் கழித்து விட்டு பார்த்தால் சுகாதாரத்திற்காக செலவுகள் மிக மிக குறைவு.
மத்திய அரசோ, மாநில அரசுகளோ பொதுச் செலவில் சுகாதார செலவில் முக்கியத்துவத்தை போதுமான அளவு உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை. அதற்கான கொள்கையோ பணியாளர்களையோ நியமிக்கவில்லை. புதிய தாராள மையத்திற்கு பின்னர், நிதிச் சிக்கனம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு அரசின் நடவடிக்கையும் சமூக நலத்துறையையே பலிகடா ஆக்கி வருகிறது. ஒரு விசித்திரமான உண்மை என்னவெனில், புதிய தாராளமயக் கொள்கைகளின் கோட்டையாக விளங்கும் அமெரிக்காவில் கூட, சுகாதாரம் காப்பீடு சார்ந்து இயங்கினாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரச் செலவுகளுக்கான ஒதுக்கீடு 8 முதல் 9 விழுக்காட்டிற்கு குறையவே இல்லை.
ஐரோப்பிய பாணியிலான புதிய தாராளமய கொள்கைகளிலும் பழமைவாத கண்ணோட்டம் கொண்ட கட்சிகள் ஆட்சிக்கு வந்த போதும், இந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 முதல் 7 விழுக்காட்டிற்கு கீழ் சுகாதார செலவுகள் குறையவில்லை. ஜீ- 20 நாடுகளில் உறுப்பினராக இருந்த போதும்,இந்தியாவின் சுகாதார கட்டமைப்பும் சுகாதார நிலையும், நாடும், நாட்டு மக்களும் வெட்கப்படும் விதத்தில்தான் இருக்கிறது. ஆரம்ப சுகாதாரம் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக இருக்கிறது. மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகளை பொருத்தமட்டில்,பத்தாயிரம் பேருக்கு 7 படுக்கைகள் என்ற நிலையிலேயே நம் நாடு உள்ளது. ஆனால் சற்றேறக்குறைய நமக்கு சமமான மக்கள் தொகை கொண்ட சீனாவில், பத்தாயிரம் பேருக்கு 42 படுக்கைகள் உள்ளது அதேபோல் வியட்நாமில் 26 படுக்கை வசதிகள் இருக்கிறது. பங்களாதேசத்தில் கூட 8 படுகைகள் என்ற விகிதத்தில் உள்ளது. இதே போன்றுதான் இந்தியாவிலுள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையும்.
இந்தியாவின் இந்த சுகாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குறைவான சுகாதாரக் குறியீடுகள் ஆகியவையும் கூட பிராந்தியங்களில் நிலவும் ஆதித ஏற்றத்தாழ்வுகளை வெளிக்காட்டவில்லை. இந்த நெருக்கடியான நேரத்தில், தற்போதுள்ள சுகாதார பணியாளர்களைக் கொண்டு மட்டும் இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாள்வது என்று பார்த்தால், பெரும்பகுதி இந்தியர்கள் ஸ சுகாதார சேவைகள் இன்றி கையறுநிலையில் இருப்பது தெள்ளத்தெளிவாக தெரியும். 2017 -18 ஆம் ஆண்டு வேலை மற்றும் வேலையின்மை ஆய்வின் படி பார்த்தால், 26.3 லட்சம் மருத்துவ பணியாளர்கள் நம் நாட்டில் உள்ளனர். இதில் மூன்றில் ஒரு பங்குக்கு குறைவாக உள்ள நகர்ப்புறங்களில் தான் 72 விழுக்காடு மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். இந்த 26.3 இலட்சம் பேரில் 44 விழுக்காடு மருத்துவ பணியாளர்கள் அல்லது 11.6 இலட்சம் பேர் பொதுத் துறையில் வேலை செய்பவர்கள். இந்தப் 11.6 இலட்சம் பேரைக் கொண்டுதான் கொரானாவுக்கு எதிரான நோய் சிகிச்சை பணிகளை செய்ய வேண்டியுள்ளது.
பொதுத்துறை மருத்துவ பணியாளர்களிலும் 31 விழுக்காட்டினர் தான் கிராமப்புறங்களில் பணியாற்றுகின்றனர்.புதிய தாராளமயக் கொள்கைகள் அமலுக்கு வந்தது முதலே வளர்ந்து வரும் கார்ப்பரேட் மருத்துவமனையில் பணியாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மொத்தம் பணியாளர் எண்ணிக்கையில் இது 15 விழுக்காடு. அதாவது 4 லட்சம் பேர். இதிலும் 86 விழுக்காடு பணியாளர்கள் நகர்ப்புறங்களில் பணியாற்றுகின்றனர். குறிப்பாக, ஐந்து தென் மாநிலங்களிலும் டெல்லி மகாராஷ்டிரா குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டுமே 74 விழுக்காடு கார்ப்பரேட் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக மேற்படி மாநிலங்களின் உள்ள பெரு நகரங்களில் மட்டுமே இந்த மருத்துவமனைகளும் மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர் .
2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு சுகாதார குறியீட்டு எண் ஒன்றை தயாரித்து வெளியிட்டது.அந்த குறியீடு இந்திய மாநிலங்களுக்கிடையே இருக்கும் சுகாதார ஏற்றத்தாழ்வுகளை வெளிக்காட்டியது. கேரளா சுகாதாரத்தில் பிரேசில் அர்ஜென்டினா நாடுகளோடு ஒப்பிடத்தக்க நிலையில் உள்ளது என அவ்வறிக்கை கூறியது. ஒடிசாவின் சுகாதார நிலைமைகள் சியாரா லியோன் நாட்டின் நிலைக்கு ஒத்ததாக இருக்கிறது.சுகாதார குறியீட்டில் முதல் ஐந்து இடங்களில் கேரளா, ஒன்றுபட்டு ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகியவை உள்ளன. கடைசி ஐந்து இடங்களில் உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இந்தியாவின் சராசரி மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை 10,000 பேருக்கு 19.6 என்ற அளவிலேயே உள்ளது. இந்த எண்ணிக்கை மாநிலங்கள் என்று வருகிறபோது கேரளாவில் பத்தாயிரம் பேருக்கு 49 பணியாளர்களும், பஞ்சாபில் 26 பேரும் உள்ளனர். சுகாதாரத்துறையில் கடைக்கோடி மாநிலங்களான பீகாரில் 6.8 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 8.9 பேருமாக உள்ளனர். ஆனால் மாநிலங்களுக்கு இடையே உள்ள சுகாதார ஏற்றத்தாழ்வுகள், சுகாதாரத்தில், சமூகத்தில் உள்ள (சாதி ஏற்றத் தாழ்வுகளை) ஏற்றத்தாழ்வுகளை மறைத்து விடுகிறது. சுகாதாரத் துறைக்கான கொள்கைகள் திட்டமிடல் என்று ஒன்று இருந்தால் அதில் இந்த சமூக ஏற்றத்தாழ்வுப் பிரச்சினைகளுக்கு இடமே இல்லை. இதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்,பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடிகளே.
இந்தியாவின் பெருமளவு ஆரோக்கிய தேவைகளை நிறைவு செய்ய புதிய தாராளமயத்தின் தீர்வுகளான நெறிப்படுத்தப்படாத தனியார்மயம் தீர்வாக அமையாது. மக்களை மையப்படுத்திய, பொது சுகாதாரத்தை பரவலாக்கும், சுகாதார செலவுகளை சமூக மயமாக்கும் முறையே தேவை. கேரளாவை முன்மாதிரியாக அடிக்கடி குறிப்பிடுவோமானால் அது ஒரு கால வெள்ளத்தில், பொதுமக்களின் மிகச்சிறந்த தலையீடுகள், அதற்கு முகம் கொடுத்த அரசின் கொள்கைகள், பொது சுகாதாரத்தை நிறுவனமயமாக்கியது, வலுவான பஞ்சாயத்து ராஜ் நிர்வாகம், நிதி ,சுகாதாரம் மற்றும் இதர செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொறுப்புள்ள, செயல்திறன் மிக்க குடிமக்கள் பங்கேற்பும், சுகாதார நெருக்கடியை கூட்டாக கையாள்வதற்கு பக்கபலமாக இருக்கிறது. கேரளாவிலும் லாபமீட்டும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் முறைப் படுத்தப் படாமல் வளர்ந்து வருகிறது. பொது சுகாதாரத்தை வலுப்படுத்த அது இன்னும் பயணிக்க வேண்டும். இந்த நேரத்தில் நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டியது ,கோவி- 19 நாடு முழுவதும் ஏற்படுத்தியிருக்கும் சுகாதார நெருக்கடியின் விளைவாக எல்லையற்ற சவாலை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். இதிலிருந்து தேசிய அரசு ஏதேனும் பாடம் கற்றுக் கொள்ளுமா?
Economic and political weekly (ஏப்ரல் 18-24) தலையங்கம் )
தமிழில்: நா. மணி