இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது மிகவும் பெருமையாகப் பேசப்படுகிறது. மார்ச் 19 அன்று மக்கள் மார்ச் 22ம் தேதியன்று தாங்களாகவே ஊரடங்கிற்கு உள்ளாகிக் கொள்ளவேண்டும், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பணிகளைப் பாராட்டும் வகையில் பால்கனியில் நின்று கைதட்டவேண்டும், மணியடிக்க வேண்டும், பொருட்களைப் பதுக்கக் கூடாது என்றெல்லாம் வேண்டிக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் உரையிலும் நாட்டின் சுகாதாரத் துறையின் தயார் நிலை பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.
பயணம் குறித்த ஆலோசனைகள், விமான நிலையங்களில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான சோதனைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்துதல் ஆகிய அரசாங்கத்தின் முயற்சிகள் பாராட்டுக்குரியன என்று ஏற்றாலும், பொது சுகாதார நிபுணர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மிகவும் குறைத்துக் கூறுதல் பற்றி கவலை தெரிவிக்கிறார்கள். மேலும், ஐசிஎம்ஆர் நடத்திய குறைந்த எண்ணிக்கையிலான சாம்பிள்கள் மீதான பரிசோதனைகள் சமூகப் பரவல் நடக்கவில்லை என்று முடிவுசெய்ய போதுமானவை அல்ல என்றும் கூறுகிறார்கள்.
COVID-19 ஆல் தாக்கப்பட்டவர்கள் சுதந்திரமாக எங்கும் நடமாடிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. மார்ச் 21ல் வெளியான ஐசிஎம்ஆரின் பரிசோதனை பற்றிய திருத்தப்பட்ட திட்டம் இந்தியாவில் COVID-19 தொற்று பயணம் மூலமாக வருவது, உள்ளூரில் அது “அவர்களது நெருங்கிய தொடர்பு உள்ளவர்களுக்கு இறக்குமதி ஆகிறது” என்ற அணுகுமறையை வலியுறுத்துகிறது. “இந்த நோயின் சமூகப் பரவல் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை. சமூகப் பரவல் ஆவணப்படுத்தப்பட்டதும், மேற்குறித்த பரிசோதனை திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, அந்த நிலைக்குத் தகுந்த பரிசோதனைத் திட்டம் உருவாக்கப்படும்”, என்று அந்த அறிக்கை கூறுகிறது.
தற்போதைய பரிசோதனைத் திட்டம், கடந்த 14 நாட்களில் சர்வதேசப் பயணம் மேற்கொண்ட, நோய் அறிகுறியற்ற நபர்கள் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்கிறது. அவர்கள் (காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற) நோய் அறிகுறிகள் கொண்டிருந்தால் மட்டுமே பரிசோதிக்கப்படவேண்டும், நோய் உறுதி செய்யப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. பரிசோதனைக்கூடத்தில் உறுதிசெய்யப்பட்ட நபர்களின் அனைத்து அறிகுறிகள் உள்ள தொடர்புகள், அறிகுறிகள் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகிய சிரமங்கள் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், நோய் உறுதிசெய்யப்பட்டவரின் அதிக ஆபத்து உள்ள அறிகுறி அல்லாத நெருங்கிய தொடர்புகள் ஆகியோரும் அவரோடு தொடர்பு கொண்ட 5ம் நாளும், 14ம் நாளும் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. காய்ச்சல், கடும் மூச்சுத் திணறல் ஆகியவற்றிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளையும் பரிசோதிக்க வேண்டியதில்லை என்ற அதன் முந்தைய நிலைபாட்டிலிருந்து இது சற்று மாறுபட்டதாகும்.
பரிசோதித்தல், சிகிச்சையளித்தல், தடம் காணுதல் (Test, Treat, Trace)
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) சமீபத்திய செய்தி ”நாடுகள் தனிமைப்படுத்தவேண்டும், பரிசோதிக்க வேண்டும், சிகிச்சை அளிக்க வேண்டும், தொற்றின் தடம் காணவேண்டும்” என்று சொல்கிறது. இதை இந்திய அரசாங்கம் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை.
இந்தியாவின் மோசமான பொது சுகாதார அமைப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதமாக மிகக் குறைவான தொகையே பொது சுகாதாரத்திற்கு செலவிடப்படுவது ஆகியவற்றின் பின்னணியில் இந்தக் கவலைகள் எழுகின்றன. மிக முன்னேறிய பொதுச் சுகாதார அமைப்பும், சேவைகளும் கொண்ட மேற்கத்தியப் பொருளாதாரங்களில், அவற்றை மீறி COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இந்தியாவின் சுகாதார அமைப்பு, சேவைகளின் தயார்நிலை குறித்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட அளவில் கூடுதலான பரிசோதனை வசதிகள், ஏழை, எளியோருக்கு அதிக சமூக, பொருளாதார ஆதரவு ஆகியவற்றிற்கு பதிலாக. தாமே சொந்தமாகப் பார்த்துக் கொள்ளுதல், தனிமைப்படுதல், ஒதுங்கியிருத்தல் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தருவது விமர்சனத்திற்கு உள்ளாகிறது. திடீர் தொற்றுத் தாக்குதல்களைக் கண்டுபிடித்து, அவற்றிற்கு வினையாற்றுவதற்காக 2004ல் உருவாக்கப்பட்ட Integrated Disease Surveillance Project (IDSP) திட்டத்தின் செயல்திறன் பற்றியும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கரோனா தொற்றுப்பரவல் பற்றி எழுதியுள்ள சத்தீஸ்கரின் கிராமப்புறத்தைச் சேர்ந்த பொது மருத்துவரான யோகேஷ் ஜெயின், தடயங்கள் இல்லை என்பது இல்லை என்பதற்கான தடயம் இல்லை என்று பிரண்ட்லைனிடம் கூறினார். மிகக் குறைந்த அளவே பரிசோதிக்கப்படுவதால் இந்தியா குறைந்த எண்ணிக்கையைக் காட்டுகிறது என்றார் அவர். இந்தியாவில் ஒரு மாறுபட்ட நோய்த் தொற்று அறிவியல் இல்லை என்பதால், சமூகப் பரவல் ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றார் அவர். அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்யப்படவேண்டும், அந்தத் தரவுகள் மக்களிடையே பகிரப்பட வேண்டும் என்றார். ஐ.சி.எம்.ஆர். தான் நோய் அறிகுறிகளைக் கவனிப்பதற்கான மையங்களை வைத்திருப்பதாகவும், அங்கிருந்தே மாதிரிகளை எடுத்ததாகவும் கூறுகிறது. ஆனால் ஒரு பத்து மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து நிமோனியா சோதனை செய்தாலும்கூட, நமக்கு ஒரு தெளிவு கிடைத்துவிடும். ஐரோப்பிய நோய் விரிவாக்க வளைவில் நாம் ஓரிரு வாரங்கள் பின்தங்கி இருக்கிறோம் என்பதால் மட்டுமே, இங்கு அது நிகழாது என்பதல்ல என்கிறார் அவர். சமூகப் பரவல் இருந்தால் மட்டுமே அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பது “பைத்தியக்காரத்தனம்“ என்கிறார். உலக சுகாதார நிறுவனம் சில நாடுகள் வேகமாக செயல்பட வேண்டும் என்று மறைமுகமாக கோடிட்டுக் காட்டியுள்ளது.
குறைவான அளவு சோதனை நடத்துவதற்கு, சோதனை உபகரணங்கள் பற்றாக்குறையை பல காரணங்களுள் ஒன்றாக ஐசிஎம்ஆர் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், பொது சுகாதார நிபுணர்கள், இந்தப் பிரச்சனையை அரசாங்கம் முன்னதாகவே தீர்த்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். IDSயின் கீழ் சுமார் 168 ப்ளூ சோதனை மையங்கள் உள்ளன. உண்மையில் அடிக்கடி ஏற்படும் வைரஸ் கிருமித் தொற்றுப் பரவல் காரணமாக சுகாதார ஆய்வுத் துறை முக்கியமான வைரஸ் தொற்றுகளை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுகொள்வதற்காக ஐசிஎம்ஆரின் கீழ் வைரஸ் ஆய்வு மற்றும் கண்டறியும் ஆய்வுக்கூடங்களை உருவாக்கியுள்ளது. இப்படிப்பட்ட சுமார் 85 ஆய்வுக்கூடங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை COVID – 19 ற்காக சோதனைகள் செய்கின்றனவா என்று தெரியவில்லை. ”ரகசியமாக செயல்படுவது போல் தெரிந்தால், மக்கள் எல்லாவிதமான முடிவுகளுக்கும் வந்துவிடுவார்கள்”, என்கிறார் ஜெயின்.
சீனா, ஊஹான் பகுதியைத் தனிமைப்படுத்துவதில் வெற்றி பெற்றது. ஆனால் இந்தியாவில் அதிக மக்கள்தொகை நெருக்கத்தின் காரணமாக இது நடைமுறை சாத்தியமில்லை. “நோய்த் தொற்று இருப்பதாக சோதனை முடிவு வந்தாலும் கூட, மக்கள் கவலைப்படாமல், சமூகத்தில் இணைந்து நடமாடுகிறார்கள்,” என்கிறார் ஜெயின். சீனாவில் ஊஹானில் எல்லோரும் வெளியில் செல்வதற்கான தேவை இன்றி, வீட்டிலேயே இருப்பதற்காக அரசாங்கம் அனைத்தையும் பார்த்துக் கொண்டது. COVID – 19ஆல் பாதிக்கப்படுவோரில் குறைந்தபட்சம் 10 சதத்தினரையாவது ஐசியுவில் வைக்க நேரும், வெண்டிலேட்டரில் வைக்க நேரும் என்கிறார் அவர். ஆனால் வெண்டிலேட்டர்களின் பற்றாக்குறை, முழுமையான வசதிகள் கொண்ட ஐசியுக்களின் பற்றாக்குறை ஆகியவை நமக்கு பெரிய சவால்கள்.
வெண்டிலேட்டர்
சதீஸ்கரில் 32 மில்லியன் மக்களுக்கு 156 வெண்டிலேட்டர்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு இரண்டு லட்சம் பேருக்கும் ஒன்று என்ற விகிதத்தில். “நோய்ப் பரவல் ஒருசதவிகிதத்தினருக்கு என்றாலும் கூட, ஆயிரம் பேருக்கு நோய் தொற்றியிருக்கும். அதில் நூறு பேருக்கு வெண்டிலேட்டர் தேவைப்படும், ஆனால், ஒருவருக்குத் தான் வெண்டிலேட்டர் கிடைக்கும்,” என்கிறார் அவர்.
சமீபஆண்டுகளாக, உலக சுகாதார நிறுவுனங்கள் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவாத, வாழ்க்கை முறை தொடர்பான நோய்களான புற்றுநோய். நீரிழிவுநோய், நுரையீரல் அடைப்பு நோய் போன்றவற்றில் தமது கவனத்தைத் திருப்பிவிட்டன. இப்போது தொற்று நோய்கள் மீண்டும் பெருமளவில் பரவுவது ஒரு புதிய சவாலை விடுத்துள்ளது. இந்திய சுகாதார ஆய்வுத் துறையின்படி, இந்தியா இதுபோன்ற சவால்களை நிபா, (2001, 2007, 2018) ஏவியன் இன்ஃபுளுயன்ஸா H5N1, (2006) சிக்கன்குனியா, (2006) பெரும்தொற்று இன்ஃபுளுயன்ஸா, (2009) எபோலா, (2013), ஜிகா, (2016) என்று பலமுறை சந்தித்திருக்கிறது.
இந்திய பொதுச் சுகாதார தரநிலையின் வழிகாட்டுதல்களின்படி அதிக முன்னுரிமை மாவட்டங்களில் 2020 வாக்கில் மருத்துவர்கள், மருத்துவத் துணை ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், கடும் மருத்துவ செலவுகள் செய்யும் குடும்பங்களின் விகிதத்தை 2025 வாக்கில் 25 சதவிகிதமளவிற்குக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை அரசாங்கம் வைத்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது 1.15 சதமாக உள்ள தனது சுகாதாரத்திற்கான செலவினத்தை 2025 வாக்கில் 2.5 சதமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
COVID – 19 பரவலால் அமெரிக்காவும், பிரிட்டனும் வெண்டிலேட்டர்கள் மற்றும் பிற ஐசியு வசதிகளின் பற்றாக்குறைகளைச் சந்தித்துள்ளன. இவையெல்லாம் அத்தியாவசிய சேவைகள் என்ற வகைளில் மிக உயர்ந்த மருத்துவ வசதிகள் கொண்ட நாடுகள். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசாங்கம் நோய்த் தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபரோடு தொடர்புடையவர்களை தேடிக் கண்டுபிடிக்காது, மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவபவர்களுக்கு சிகிச்சை மட்டுமே தரும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால், ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில் எண்ணிக்கை அதிகரித்ததும், தன் நிலைபாட்டை மாற்றிக் கொண்டார்.
தொற்று நோய்கள் விடும் சவால்கள்
2019 தேசிய சுகாதார அறிக்கையின்படி, இந்தியாவில் சராசரியாக 10926 நபர்களுக்கு ஒரு அரசாங்க அலோபதி மருத்துவர் இருக்கிறார். சுமார் 8.6 லட்சம் துணை செவிலியர், பிரசவ தாதிகள், சுமார் 20 லட்சம் பதிவு யெற்ற செவிலியர் உள்ளனர். 130 கோடி மக்கள்தொகைக்கு வெறும் 25,778 அரசு மருத்துவமனைகளும், 7,13,986 படுக்கைகளும்தான் உள்ளன. தொற்றுநோய்கள், இயற்கைச் சீற்றங்களைச் சமாளிப்பதற்கான நிதிஒதுக்கீடு எந்த ஆண்டிலும் ரூ.100 கோடியைத் தாண்டியதில்லை. உண்மையில் 2016லிருந்து இதற்கான செலவு 50 முதல் 60 கோடி வரை ஆகிறது. நெருக்கடிகால மருத்துவ உதவி, நெருக்கடிகால மருத்துவ சேவை உள்ளிட்ட சுகாதாரத் துறைப் பேரழிவுத் தயார் நிலை மற்றும் நிர்வாகத்திற்கான, 2018-19 பட்ஜெட் மதிப்பீடு ஒதுக்கீடு, 2016-17 ஒதுக்கீட்டில் பாதியாகக் குறைக்கப்பட்டது. (2016-17ல் 30 கோடி, 2018 – 19 மதிப்பீட்டில் 16.85 கோடி)
2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி மக்கள்தொகையில் 8.3 சதம் மட்டுமே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். அதே சமயம், 15 முதல் 59 வரையிலான வயதுகளில் 64.7 சதத்தினர் உள்ளனர். தொற்று வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற கருதுகோள் உண்மையல்ல. ஏனெனில் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரில் சுமார் 30 சதவிகிதத்தினர் 20 முதல் 44 வயதுகளில் உள்ளவர்கள்தான். எனினும்,மரணங்கள் வயதானவர்களுக்கே நிகழ்ந்துள்ளன. பரவக்கூடிய, கர்ப்பகால, சிசுக்கள், ஊட்டச் சத்துக் குறைபாடுகள் தொடர்பான நோய்கள் 1990க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் 61 சதத்திலிருந்து 31 சதமாக குறைந்தது, பரவாத நோய்களில் இது 30 சதத்திலிருந்து 55 சதமாக அதிகரித்தது பற்றி அரசாங்கம் ஆறுதல் கொள்ளலாம். ஆனால், மாநிலங்களுக்கு இடையே பரவாத நோய்களில் இந்த சதவிகிதத்தில் 48 முதல் 75 சதம் வரையிலும் பரவும் நோய்களில் 14 முதல் 43 சதம் வரையிலும் வேறுபாடுகள் உள்ளன.
ஆனால் 2019 தேசிய சுகாதார அறிக்கையின்படி, பரவும் நோய்களின் காரணமாக, மொத்த நோய்களில் சுமார் 69.47 சதமான நோய்கள் கடும் மூச்சுத் திணறல் தொடர்பானவைகளாக உள்ளன. தொற்று நோய்கள் காரணமாக, மரணங்களில், 57.86 சதம் நிமோனியா மற்றும் மூச்சுத் திணறல் நோய்கள் காரணமாகவே நிகழ்கின்றன. மரணங்களுக்கான மூன்றாவது பெரிய காரணம் கடும் வயிற்றுப்போக்கு. இது 10.5 சத மரணங்களுக்குக் காரணமாக உள்ளது. 2018ல் மட்டும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9.2 லட்சம். அதற்கு முந்தைய ஆண்டு 7.5 லட்சம்தான். அதேபோல, வைரல் மஞ்சள் காமாலை, வைரல் மூளைக் காய்ச்சல். பன்றிக் காய்ச்சல், கடும் வயிற்றுப்போக்கு. கடும் மூச்சுத் திணறல் ஆகியவை 2018ல் முந்தைய ஆண்டை விட அதிகமாக இருந்தன.
குணப்படுத்தும் வழிமுறையாக ஊரடங்கு
பொது சுகாதார நிபுணர்கள் அரசாங்கம் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று எச்சரித்தாலும் கூட, அரசாங்கத்திற்குத் தெரிய வரும் எண்ணிக்கையை விட பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதை மறுக்கும் போக்கே இப்பொழுதும் உள்ளது. சமூகத்தில் வைரஸ் ஏற்கனவே நுழைந்திருக்கும் வாய்ப்புள்ள இந்த நேரத்திலும், அரசாங்கம், “குணப்படுத்துவதை விட தவிர்ப்பது மேல்” என்ற வழியையே கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. அடிக்கடி சோப் போட்டு கை கழுவுவது, ஆல்கஹால் உள்ள சானிடைசரைப் பயன்படுத்துவது, நேரடித் தொடர்பைத் தவிர்ப்பது நோய் பரவலைத் தடுக்கும் என்று சில வழிமுறைகளை மேற்கொண்டால் போதும் என்பதாக பரவலைத் தடுக்கும் பொறுப்பு அளவிற்கு மீறி மக்கள் மீதே திணிக்கப்படுகிறது.
இந்தியச் சூழலில், கூலி உழைப்பிற்காக நெடுந்தூரம் பயணிப்பவர்கள் அதிகமுள்ள நாட்டில், மக்கள்தொகையின் பெருபகுதியை தனிமைப்படுத்துவது சாத்தியமில்லை. ஊஹானில் சீன அரசாங்கம், மக்களுக்கு வீட்டிற்குச் சென்ற உணவு அளிப்பதை உறுதிசெய்தது. அதன் மூலம் நேரடி, சமூகத் தொடர்பு வழியே நோய் பரவுவதைத் தடுப்பதில் வெள்றி பெற்றது. இந்தியாவில் அதுபோன்ற முயற்சிகள் இல்லை.
இந்தியாவில் ஊரடங்கு
மக்கள் தம் கைகளை சோப் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் திரும்பத் திரும்பச் சொல்லும் அறிவுரையை குடிக்க, குளிக்க மற்றும் இதர சுகாதாரத் தேவைகளுக்கு சுத்தமான நீர் கிடைக்கும் வாய்ப்புகளோடு பொருத்திப் பார்க்க வேண்டும். தேசிய சுகாதார அறிக்கை 2018ன்படி, நாட்டில் 43.5 சதவிகித குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் வசதி இருக்கிறது. அதிலும் 32 சதம்தான் சுத்திகரிக்கப்பட்டது. சுமார் 33.5 சத குடும்பங்கள் அடிபம்புகளை நம்பியுள்ளன. 11 சத்த்தினர் கிணற்று நீரை பயன்படுத்துகின்றனர். இதில் 9 சதம் திறந்த கிணறுகள். 46.6 சத குடும்பங்களுக்கு மட்டுமே வீட்டிற்குள்ளேயே குடிநீர் வசதி இருக்கிறது. 35.8 சதத்தினருக்கு வீட்டிற்கு அருகே குடிநீர் கிடைக்கிறது. 17.6 சதத்தினருக்கு வீட்டிற்கு சற்று தூரத்தில்தான் குடிநீர் கிடைக்கிறது.
மாநிலங்களுக்கு இடையிலும் இவ்விஷயத்தில் பரந்த வேறுபாடுகள் உள்ளன. கேரளாவில் 77.7 சத குடும்பங்களுக்கு வீட்டிற்கு உள்ளேயே குடிநீர் கிடைக்கும் அதே வேளையில் சத்தீஸ்கரில் இந்த சதவிகிதம் 26.5 மட்டுமே. 10379 கிராமக் குடியிருப்புகள் பாதுகாப்பான குடிநீர் இன்றி இருக்கின்றன. அந்த நீரில் ஃபுளூரைடின் அளவு அதிகமாக உள்ளது. சுமார் 16279 குடும்பங்களின் குடிநீரில் ஆர்சனிக் கலந்துள்ளது. 46.9 சத குடும்பங்களுக்குதான் கழிப்பறை வசதி உள்ளது. 53.1 சத வீடுகளில் வீட்டினுள் கழிப்பறை கிடையாது. சுமார் 48.9 சத வீடுகளுக்கு சாக்கடை வசதி கிடையாது. 42 சத வீடுகளில்தான் குளியலறை உள்ளது. 55.8 சத வீடுகளுக்குத்தான் சமையலறை வசதி உள்ளது. 31.8 சத வீடுகளில் சமையலறை தனியாக கிடையாது.
எனவே, குழாயில் வந்துகொண்டே இருக்கும் சுத்தமான நீர் என்ற வசதி இல்லாத சூழலில், சோப் வைத்து கை கழுவுவது, சானிடைசர் பயன்படுத்துவது என்பதெல்லாம் இந்தியச் சூழலில் மிக ஆடம்பரமான விஷயங்கள். COVID – 19 அச்சம் அதிகரிக்கும் போது, முகக் கவசம், சானிடைசர் ஆகியவற்றை நடுத்தர, உயர் நடுத்தர வர்க்க மக்கள் அதிகமாக வாங்க ஆரம்பிக்கும்போது, வியாபாரிகள் அவற்றிற்கு அதிக விலை வைக்கிறார்கள். ஊரடங்கு பயத்தில் பலரும் உணவு, மருந்து அகியவற்றை தேவைக்கு அதிகமாக வாங்கி வைத்துக் கொள்ளும்போது, கடைகளில் இவற்றிற்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. காய்கறி விலைகளும் ஏறுகின்றன. சில மக்கள் இதை வாய்ப்பாகப் பயன்படுத்துவதை தாமதமாக உணர்ந்த நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், மார்ச் 21 அன்று அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1950ன் கீழ் முகக்கவசம், சானிடைசர்களின் விலையை ஒழுங்குபடுத்தும் உத்தரவை இட்டது. இதன்படி., இரண்டு குறிப்பிட்ட ரக முகக்கவசங்களுக்கு கடைக்காரர்கள் ரூ8 மற்றும் ரூ10ற்கு மேல் விலை வைக்க முடியாது. அதே போல, 200மிலி சானிடைசரின் விலை ரூ100 மட்டும்தான். எனினும், இப்படி விலை குறைக்கப்பட்டாலும் கூட, சானிடைசரை வாங்குவதற்கு பலருக்கும் வசதி இல்லை. வாங்க இயலாதவர்களுக்கு இவற்றை இலவசமாக வழங்க அரசாங்கத்திடமிருந்து எந்த உறுதிமொழியும் இல்லை.
COVID – 19ஆல் பாதிக்கப்பட்டோரது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் வாரங்களில் ஒரு திடீர் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை எதிர்கொள்ள பெரிதும் தனியார்மயப்படுத்தப்பட்டுள்ள இந்திய சுகாதார அமைப்பு தயாராக இல்லை என்று தெரிகிறது. இந்த தொற்றுப்பரவல், அரசாங்கம் பொது சுகாதாரத்தின் மீது அக்கறை செலுத்தி, தனியார்களை நம்பி இருப்பதைக் குறைத்துக் கொண்டு, மக்கள் ந்லனுக்காக பொதுத் துறை மருந்து உற்பத்தித் துறையை பலப்படுத்தி, அதில் மறுமுதலீடு செய்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகும்.
– டி.கே.ராஜலட்சுமி
தமிழில் ச.சுப்பாராவ்
– நன்றி பிரண்ட்லைன் (01.04.2020)