இந்திய அறிவியலின் ஃபீனிக்ஸ் ஆய்விதழ்.. (மறைக்கப்பட்ட போராட்டம்)
– ஆயிஷா இரா.நடராசன்
இன்று உலக அறிவியலின் கதாநாயகன் குவாண்டம் மெக்கானிக்ஸ்.. இது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் திறன் பேசியிருந்து இன்று புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு வரை அனைத்துமே குவாண்டம் அறிவியலை வைத்துதான் இயங்குகிறது.. ஆனால் குவாண்டம் அறிவியல் என்கிற இந்தத் துறையின் முதல் கணக்கீட்டு ஆய்வு கட்டுரை ஒரு இந்தியரால் எழுதப்பட்டது அது ஒரு இந்திய ஆய்விதழில்தான் வெளியிடப்பட்டது.. என்றால் நம்ப முடிகிறதா. அது யார்? விடையை யோசித்துக் கொண்டிருங்கள் அதற்குள் நாம் கட்டுரைக்குள் நுழைவோம்.

இந்திய இயற்பியல் ஆய்விதல்..(INDIAN JOURNAL OF PHYSICS) சி வி ராமன் அவர்களால் தொடங்கப்பட்டு .. கடுமையாகப் போராடிய ஆண்டுகளை சென்ற இதழில் நாம் விரிவாக விவாதித்தோம்.. இந்தியாவிற்கென்று அதிலும் குறிப்பாக இயற்பியல் துறைக்கு தனியாக ஒரு ஆய்விதழ் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து தன்னுடைய நோபல் பரிசு பெறதக்க கண்டுபிடிப்பு விவரிக்கப்படும் ஆய்வுக் கட்டுரையையும் இந்திய இதழிலேயே வெளியீட்டு சாதனை படைத்த ஆண்டுகளை ஒருபோதும் நாம் மறப்பதற்கில்லை.. ஆனால் இந்த ஆய்வுதழின் கதை அத்தோடு முடிந்துவிடவில்லை.. இந்தியன் அசோசியேஷன் ஃபார் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ்.. உருவாக்கிக் கொடுத்த அறிஞர்கள் பலர்.. ஏறக்குறைய அறுபத்தி ஏழு அற்புத அறிஞர்களின் இந்திய ஆய்வுக் கட்டுரைகளும் 23 அயல் அறிவிய அறிஞர்களின் இயற்பியல் ஆய்வு கட்டுரைகளும் வெளிவந்து கொண்டிருந்த உச்சக்கட்ட ஆண்டுகளை கடந்து இந்திய இயற்பியல் ஆய்விதல்(IJP) வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தது. ஒரு புறம் ஆங்கிலேயர்களின் தீவிர கண்காணிப்பு மறுபுறம் கட்டுமையான நிதி நெருக்கடி.. இந்த சூழலிலும் விடாமல் தொடர்ந்தது இந்திய பயணம்.
ஆனால் தனக்கென்று ஒரு ஆய்வு கல்வியகத்தை உருவாக்கிக் கொண்டு சி வீ ராமன் பெங்களூருக்கு இடம் மாறுவது என்று முடிவு செய்தார்.. இப்படியான சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை நாம் விரிவாக பார்க்க வேண்டியது இல்லை.. இந்நிதியை அவர் தவறாகக் கையாண்டார் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்மீது ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது தனி கதை.. அதே சமயத்தில் அனைத்து வகையிலும் அனைத்து வகையான ஆய்வுகளிலும் தீவிரமாக தானே தலையிட்டு கொண்டிருந்த ஒற்றை தலைமை எனும் திணிப்பை எல்லோராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. எனவே இந்தியன் அசோசியேஷன் ஃபார் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ் அமைப்பிலிருந்து ராமன் வெளியேற வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது..

1933 ஆம் ஆண்டு பெங்களூருக்கு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தை ஸ்தாபித்து ராமன் இடம் மாறியபொழுது இந்திய இயற்பியல் ஆய்விதழையும் தன்னோடு எடுத்துச் செல்ல முயற்சி செய்தார்.. மேக்னாட் சாகா போன்ற அறிஞர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர்.. இந்திய இயற்பியல் ஆய்வுகள் என்பது ஒரு ஆசிரியர் குழுவால் இதழ் வெளிவருவதற்கு இடம் பொருள் ஆவி அனைத்தையும் துறந்த எத்தனையோ மாமனிதர்களால் வெளிவந்து கொண்டிருந்தது அதை ராமன் மட்டுமே சொந்தம் கொண்டாடுவது நியாயமில்லை என்பதை பல தரப்புகள் முன்வைக்க தொடங்கின.. ஆனால் இராமனின் ஒத்துழைப்பும் தேவை.. ராமனை சமாதானம் செய்வது மிகக் கடினமாக இருந்தது..
ராமன் குறித்த அதிருப்தி உருவானதற்கு பல காரணங்கள் இருந்தன.. அங்கு நடந்த அனைத்து வகையான ஆய்வுகளிலும் அவர் தலையிட தொடங்கினார் என்பது பிரதான சிக்கல் தானே அனைத்திற்கும் முடிவான தலைமை என்று அவர் தன்னை கருதிக்கொண்டார் குறுகிய ஒரு வட்டம் ராமனை பெரிய அளவில் உலக ஜாம்பவானாக தூக்கி நிறுத்தி அவருடைய பிம்பத்தை வளர்த்துக் கொண்டிருந்தது.. உலக அறிவியல் மிக வேகமாக ஏனைய துறைகளில் முன்னேறிக் கொண்டிருந்தபொழுது அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் அனைவருமே பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.. ராமன் விளைவை முன் நிறுத்துகின்ற ஒளி சிதறல் குறித்த ஆய்வுகளை மட்டுமே மேற்கொள்ள ராமன் அனைவரையும் நிர்பந்தித்தார் என்று சொல்லப்படுகிறது.. அது தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் மட்டுமே முதல் அந்தஸ்தை பெற்றன.
வானியல் இயற்பியல் அனு இயற்பியல் மற்றும் புள்ளியியல் இயந்திரவியல்.. போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்திய மேக்னாட் சாகா போன்றவர்கள் இந்தியன் அசோசியேஷன் ஃபார் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ் அமைப்பில் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்.. எது தன்னுடைய நிதி எது நிறுவனத்தின் நிதி என்கிற குழப்பத்தோடு அனைத்திலும் தலையிட்ட ஒரு தலைமை பலரது நேரடியான விமர்சனத்துக்கு உள்ளானது இந்த சூழ்நிலையில் ராமன் இதழை நிறுத்திவிடுவோம் என்கிற ஒரு அறிவிப்பை தன்னிச்சையாக வெளியிடுகிறார்.. இது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெங்களூருக்கு இடம் பெயர்ந்த பிறகு அவரை தொடர்பு கொள்வது மிகக் கடினமான வேலையாக இருந்தது இன்றைக்கு இருப்பது போல தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவும் அன்றைக்கு இல்லை என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்திய இயற்பியல் ஆய்விதழ்.. நிறுத்தப்படுவதாக தன்னுடைய சர்வதேச தோழமைகளுக்கு ராமன் ஒரு அறிவிப்பு போல கடிதம் எழுதியது தான் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி விட்டது. இந்த சூழ்நிலையில் இதழை காப்பாற்றுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட மாமனிதர் தேவேந்திர மோகன் போஸ் எனும் அறிஞர் ஆவார்.. இப்போது யாருமே அவரைப் பற்றி பேசுவதில்லை இந்திய இயற்பியலின் ஃபீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்த இந்த வரலாற்றின் கதாநாயகர் அவர்தான். அவர் ராமனுக்கும் இதழுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து செயல்படுவது என்று முடிவு செய்தது அவருடைய பெருந்தன்மை.. நான் இல்லாமல் இதழ் வந்துவிடுமா.. சரி முயற்சி செய்யுங்கள் என்கிற தொனியோடு தன்னை நேரில் சந்தித்தவரிடம் ராமன் கோபப்படுகிறார்.
ராமன் வெளியேறிய ஆண்டில் இந்திய இயற்பியல் ஆய்விதல் தன்னுடைய நிறுவனர் ஆசிரியர் மற்றும் உலகளாவிய முகம் இரண்டையுமே ஒரே நேரத்தில் இழந்தது. பலர் இதழ் நீண்ட. நிலைக்காது என்றே முடிவு செய்தனர். இந்தியன் அசோசியேஷன் ஃபார் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ் எனும் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை தேவேந்திர மோகன் போஸ் ஏற்றுக்கொண்டார் கடினமான அந்த ஆண்டுகளில் ஆய்வுப் பணிகளோடு சேர்த்து இதழின் அறிவியல் தரம் குறையாமல் பாதுகாக்க எவ்வளவோ முயற்சி செய்தார் விளம்பரம் இல்லாத வரலாற்றில் பதிவு செய்யப்படாத அவருடைய நிர்வாகப் பணி காரணமாக இதழ் தொடர்ந்தது இந்த சூழ்நிலையில் மேக்னாட் சாஹா அற்புதமான ஒரு வேலையை செய்தார்.
1933 எனும் அதே ஆண்டில் இந்திய இயற்பியல் கழகம் (INDIAN PHYSICAL SOCIETY) அமைப்பை உருவாக்கினார் இந்தியாவுக்கு தனித்துவமான அறிவியல் நிறுவனங்களும் தேசிய அறிவியல் இதழ்களும் அவசியம் என்பதை வலியுறுத்தி தனியே ஒரு அறிக்கையை வெளியிட்டார் மெக்னாட் சாகா. இந்த இந்திய அறிவியலாளர்கள் 100 பேருக்கு 100 பிரதிகள் கைப்பட எழுதி அவர் அனுப்பி இருந்தார் என்றால் அது எப்பேர்ப்பட்ட முயற்சி. இந்த அமைப்பினால் இந்திய இயற்பியலாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டார்கள்.. ராமன் கல்கத்தாவை விட்டு செல்லும் முன் கே எஸ் கிருஷ்ணனை முக்கிய பொறுப்பில் அமர்த்தினார்.. கே எஸ் கிருஷ்ணன் ராமனின் வழிகாட்டுதல் பேரில் முனைவர் பட்டம் பெற்றவர் ராமன் விளைவு எனும் கண்டுபிடிப்போடு தொடர்புடையவர்.. கே எஸ் கிருஷ்ணன் மேக்னாட் சாகாவோடு இணைந்தார் இயற்பியலில் காந்தவியல் மற்றும் கட்டமைப்பு இயற்பியல் என்கிற ஒரு புதிய ஆய்வகத்தை அங்கே அவர் கட்டமைத்து உருவாக்கினார் இந்தியன் அசோசியேஷன் ஃபார் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ் இன் அறிவியல் மரியாதையை தொடர்ந்து காப்பாற்றியதில் கே எஸ் கிருஷ்ணனின் பங்கு மிக மிக முக்கியமானது.
உலக அளவிலான அறிஞர்களின் கவனத்தை பெறுவதற்காக கே எஸ் கிருஷ்ணனும் மேக்னாட் சாகாவும் இணைந்து பல கடிதங்களை பலருக்கும் அனுப்பினார்கள்.. உலகெங்கிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட அந்த 1930 களில் அச்சிடும் செலவு தபால் செலவு போன்றவை பெரிய சவாலாக இருந்தன சந்தாகாரர்கள் மிகக் குறைவு இருந்தாலும் இதழ் நிறுத்தப்படவில்லை.. காரணம் தேவேந்திர நாத் தான் தனக்கிருந்த குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் விற்று கடும் கடன் சுமையோடு.. இந்திய இயற்பியலை அதனுடைய ஆய்விதழை காப்பாற்ற முன்வந்தார்.. ராமனுக்கும் மெக்னாட் சாகாவுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தன.. இருந்தாலும் இந்திய இயற்பியலை உலக அரங்கிற்கு உயர்த்த வேண்டுமென்றால் கண்டிப்பாக ராமனின் துணை தேவை அது ராமனின் கடமை என்பது தேவேந்திரநாத்தின் நிலைப்பாடாக இருந்தது.
பக்கங்கள் குறைவு.. ஆனால் இந்திய இயற்பியல் ஆய்விதழ் தன்னுடைய இரண்டாம் கட்ட பயணத்தை விரைவில் தொடங்கியது ராமன் விளைவு எனும் ஒற்றைத் தலைப்பு ஆதிக்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அந்த ஆய்விதழ் பல்துறை சார்ந்த தளமாக தன்னுடைய முதல் இதழிலேயே நிரூபித்தது இந்திய இயற்பியல் சங்கம் இந்த விஷயத்தில் மிகப் பெரிய அளவில் இதழுக்குத் துணையாக நின்றது எக்ஸ் கதிர் விளிம்பு விளைவு மற்றும் படிக அமைப்பு குறித்து கேதாரேஷ்வர் பானர்ஜி மற்றும் பிது பூசண் ரே ஆகியோர்
எழுதிய ஆய்வுக் கட்டுரை உலகத்தின் கவனத்தை ஈர்த்தது கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வக ஆய்வகத்திலிருந்து வெளிவந்த முக்கிய ஆய்வு முடிவு படிகவியல் துறையின் மிக முக்கிய திருப்புமுனை என்று இது போற்றப்பட்டது.

இந்த ஃபீனிக்ஸ் பற்றி போல் உயிர்த்தெழுந்த இதழில் வெளிவந்த இன்னொரு முக்கிய கட்டுரை பரு பொருளின் காந்த பண்புகள் குறித்தது. பிரியரஞ்சன் ரே மற்றும் ஏ முகர்ஜி ஆகியோரின் பங்களிப்பு.. கே எஸ் கிருஷ்ணன் உடன் அடிக்கடி இணைந்து பணியாற்றிய இந்த ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கரிம படிவங்கள் மற்றும் சிக்கலான ஒருங்கிணைப்பு சேர்மங்களின் காந்த சமச்சீர்மை குறித்த விரிவான சோதனை முடிவுகளை வெளியிட்டனர்.. இந்தத் தரவுகள் மூலக்கூறு கட்டமைப்பு இயல் மற்றும் படிகப் புலன்களின் குவாண்டம் இயந்திரவியல் மாதிரிகளை சரிபார்க்க உதவின.. எனவே குவாண்டம் இயந்திரவியலுக்குள் இந்திய இயற்பியல் நுழைந்துவிட்டிருந்தது!
அடுத்த மா மனிதர் சுசீர் குமார் மித்ரா.. ஐனோஸ்பியர் இயற்பியல் மற்றும் வானொலி அலை பரவல் குறித்த அவருடைய அற்புதமான ஆய்வுக் கட்டுரை.. பிற்காலத்தில் நேரு அவரை அழைத்து வானொலி ஆய்வு குறித்த பிரம்மாண்ட நிறுவனம் ஒன்றை அமைத்தார்.. என்பது ஒருபுறம் இருக்கட்டும் அவருடைய இந்த குறிப்பிட்ட கட்டுரை ஐனோஸ்பியரின் E மற்றும் F அடுக்குகளின் உயரங்கள் மற்றும் எலக்ட்ரான் அடர்த்திகளை ஆய்வு செய்து ஆழமாக எழுதப்பட்டிருந்தது.. இந்த ஒரு கட்டுரை பிற்காலத்தில் முதன் முதலில் சோவியத் யூனியன் விண்ணை நோக்கி ஸ்புட்னிக் ஏவு-செயற்கைக்கோளை அனுப்பியபொழுது பயன்பட்டது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று செய்தி.
ஆனால் இந்த ஆய்வுக்கட்டுரைகள் அனைத்துமே ராமனால் வெளியீட்டுக்குத் தகுதியற்றவை என்று திருப்பி அனுப்பப்பட்டவை என்பதை இன்று நினைத்தால் வேதனையாக இருக்கிறது.. தலைசிறந்த அறிஞர் ஏன் இப்படி அவர் இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் வரலாற்றை ஆய்வு செய்யத் தூண்டுகிறது.. இந்திய அறிவியலின் வரலாறு என்பது இப்படி எத்தனையோ இருண்ட பிரதேசங்கள் கொண்டது.. மெக்னாட் சாகா என்கிற ஒரு மாமனிதர் இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகிருக்கும் என்பதை நாம் இங்கே நேர்மையாகப் பதிவு செய்ய வேண்டும் இந்திய இயற்பியல் சங்கம் (IPS) 1933 முதல் இயற்பியல் ஆராய்ச்சியை ஜனநாயகத் தன்மை மிக்கதாக மாற்றியது அனைத்து வகையான ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்கிற ஒரு போராட்டத்தின் அடித்தளத்தை தாங்கிக் கொண்டிருந்தது இந்திய இயற்பியல் சங்கம்.. இந்திய இயற்பியல் ஆய்விதழைத் தொடர்ந்து வெளியிடுவதற்கான சவாலை அது 1938 இல் ஏற்றுக் கொண்டது.

இந்தியன் அசோசியேஷன் ஃபார் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ் அமைப்போடு ஒரு கூட்டாண்மையை உருவாக்கிக் கொண்டு இந்திய இயற்பியல் சங்கம் இந்திய இயற்பியல் ஆய்விதழின் செயல்பாடு தலையங்கம் மற்றும் வரலாற்றுப் பாதையை மறு வடிவமைத்தது.. மூன்று முக்கிய சிக்கல்களை இங்கு நான் கண்டிப்பாக விவரிக்க வேண்டும்..
செயல்பாட்டுத் தூண்1: ஜனநாயகப்படுத்தப்பட்ட சக மதிப்பாய்வு. கொல்கத்தாவை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த பழைய அமைப்பில் இருந்து தலையங்க கட்டுப்பாட்டை விரிவுபடுத்து பிரிக்கப்படாத இந்தியா முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து ஆய்வுக் குழுக்களை தேர்வு செய்து மேக்னாட் சாகா மதிப்பாய்வாளர்களை நியமித்தார் . இதற்கென்று ஒரு குழு அமைக்கப்பட்டு ஜனநாயக முறைப்படி இந்த தேர்வு நடைபெற்றதால் பெரும் வரவேற்பை பெற்றது
செயல்பாட்டு தூண்2: விரிவாக்கப்பட்ட அடிப்படை நோக்கம். ஆய்வுதழின் கவனத்தை மேக்நாத் சாஹாவின் தலைமையிலான குழு முதன்மை துறைகளை உள்ளடக்கும் வகையில் மாற்றி அமைத்ததன் காரணமாக வானியற்பியல் அணு இயற்பியல் மற்றும் புள்ளியியல் இயற்பியல் ஆகிய துறைகளில் இருந்து வரும் கட்டுரைகளையும் பெரும் எண்ணிக்கையில் வெளியிடுவதென்று தீர்மானித்தது.
செயல்பாட்டுத் தூண்3: உறுதிப்படுத்தப்பட்ட நிதிநிலைத்தன்மை. இந்தியன் அசோசியேஷன் ஃபார் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ் நிதிநிலையை ஒரு ஆய்வுக் குழுவிடம் முதல் முறையாக அவர்கள் ஒப்படைத்தார்கள். உறுப்பினர் சந்தாக கட்டணங்கள் நேரடியாக இந்தியன் அசோசியேஷன் ஃபார் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ் அறக்கட்டளை நிதிகளுடன் இணைத்ததன் மூலம் இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட கடும் பணவீக்கம் மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்திலும் கூட இந்த இதழ் நிதி ரீதியாக நிலைத்திருக்கும் வழி ஏற்படுத்தப்பட்டது.
செயல்பாட்டுத் தூண்4: உலகளாவிய அங்கீகாரம். சர்வதேச விநியோக வலை அமைப்புகளை கையாண்ட முறையில்.. இதழை சந்தா எதுவும் எதிர்பார்க்காமலேயே உலகெங்கிலும் உள்ள தேர்வு செய்யப்பட்ட 23 பல்கலைக்கழகங்களுக்கு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வகங்களுக்கும் நூலகங்களுக்கும்.. தவறாமல் அனுப்புகின்ற ஒரு முறையை இந்திய இயற்பியல் சங்கம் அறிமுகம் செய்தது.. இதற்கான செலவினத்தை அது ஏற்றுக் கொண்டது. ஆய்விதழ் வெளிவந்ததோடு ஒவ்வொரு ஆய்வுகள் குறித்தும் உலகளாவிய கவனம் பெறும் கருத்தரங்கம் ஒன்றை நடத்துவது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.

ராமன் விடை பெற்ற பிறகு ஆசிரியர் குழுவில் முதன்மை வழிகாட்டியாக கே எஸ் கிருஷ்ணன் செயல்படுகிறார் அவருக்கு துணையாக ஆசிரியர் குழுவில் தேவேந்திர மோகன் போஸ், மேக்நாத் சாகா, எஸ் தத்தா பி ஷ்யாம் ஆகியோர் இருந்தனர்.. இதில் தீபேந்திர மோகன் போஸ் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பின்னர் ஜெகதீஷ் சந்திரபோஸ் உருவாக்கிய போஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார் இதழின் ஆசிரியக்குழுவில் மிக முக்கிய பங்காற்றிய ஒருவர் இவர் காந்த வேதியியல் மற்றும் அண்டக்கதிர் ஆய்வுகளை இதழில் இவர் ஊக்குவித்தார் மேக்னாட் சாகா அலகாபாத்தில் இருந்து கொல்கத்தா திரும்பி வந்து இதழை கையில் எடுத்துக் கொண்டார் அண்டார்டிக் மற்றும் வளிமண்டல இயற்பியல் சார்ந்த கட்டுரைகளை தீவிரமாக ஆய்வு செய்து வெளியிடுவதில் இதழுக்கு உதவியவர் மேக்நாத் சாகா.. வளிமண்டல அடுக்குகள் மற்றும் ஒளியியல் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை இதழ் தாங்கி நிற்கத் தொடங்கியது
1935 ஆம் ஆண்டு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெளிவந்த இதழ் உலக அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.. ஃபீனிக்ஸ் பறவை போல அக்னிக் குண்டத்திலிருந்து அழிவிலிருந்து மீண்டு வந்த இந்த அற்புத இதழ் வெளிவந்த நாள்.. ஆகஸ்ட் 15 1935! பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றின் இன்னொரு சிறப்பு மிக்க ஆகஸ்ட் 15.. பிரம்மாண்ட இயற்பியல் இந்திய போராட்டத்தின் இன்னொரு வெற்றி கதையை படைத்த தினம்.. இந்த போராட்டம் குறித்து நம்முடைய பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கண்டிப்பாக நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.. இந்திய இயற்பியலை ஜனநாயகப்படுத்திய இந்த மாமனிதர்களை நாம் இந்த உலகிற்கு வெளிச்சமிட்டு காட்ட வேண்டும்.
அடுத்தடுத்து நான்கு இதழ்கள் இந்த ஆண்டில் மட்டுமே வெளியிடப்பட்டன.. இந்த இதழ்களின் முக்கியத்துவம் எந்த அளவிற்கு உலகத்தின் கவனத்தை பெற்றிருந்தால்.. இனி இதழ் அவ்வளவுதான் தான் இல்லாமல் இதழ் வருவதற்கு வாய்ப்பில்லை.. இந்திய இயற்பியல் ஆய்விதழை நிறுத்திவிட வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த அதே ராமன்.. தன்னுடைய இன்னொரு மாணவர் என் எஸ் நாகேந்திரநாத் என்பவரோடு இணைந்து ஒளியைப் போலவே ஒலி சார்ந்தும் ராமன் விளைவு எப்படி செயல்படும் என்பது பற்றி இந்த இதழில் அல்ட்ராசானிக் அலைகள் குறித்த தொடர் எழுத வேண்டும் என்று பனிவோடு கேட்டு ஆசிரியர் குழுவுக்கு கடிதம் எழுதுகிறார்..விரும்பி தொடர்ந்து மூன்று இதழ்களுக்கு முன்வந்து பங்களிக்கிறார்.. உலக அரங்கில் தொடர்ந்து பேசப்பட வேண்டும் என்றால் இந்திய இயற்பியல் ஆய்வுதழில் ஆய்வு கட்டுரைகள் வெளிவந்துதான் ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தை ராமனுக்கே ஏற்படுத்தியது.. மேக்நாத் சாகாவின் புரட்சி அல்லவா.
இப்போது நான் தொடங்கிய கேள்விக்கு வருகிறேன். இன்றைக்கு குவாண்டம் இயந்திரவியல் உலகத்தின் போக்கையே மாற்றி அமைத்து வெற்றி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது.. அப்படி ஒரு விஷயத்தை தொடங்கி வைத்த முதல் கணக்கீட்டு கட்டுரையை எழுதியவர் சத்யேந்திரநாத் போஸ்.. அணுக்களுக்கு உள்ளே தனியே ஒரு உட் துகள் உலகம் இருக்கும் என்றால்.. அது இதுவரையில் மனிதனுக்குத் தெரிந்த கணக்கீட்டு முறைப்படி அளவிட முடியாதது அதற்கு புதிய கணக்கீட்டு முறை தேவை என்பதை தன் கட்டுரையில் அறிமுகம் செய்தார்.. அதனை இந்திய இயற்பியல் ஆய்விதழ்.. வெளியிட ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அதை வாசித்து ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து வெளியீட்டு அதனை போஸ் ஐன்ஸ்டீன் கணக்கீட்டு இயல் என்று மாற்றுகின்றார்.. உட்துகள்கள் போஸான்கள் என்றுதான் இன்றைக்கு அழைக்கப்படுகின்றன.. குவாண்டம் அறிவியலின் தொடக்கத்தை எழுதிய இந்திய இயற்பியல் ஆய்விதழை .. இன்றைக்கும் ஸ்ப்ரிங்கர் எனும் சர்வதேச இதழோடு இணைந்து நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றால்.. அந்தப் பிரம்மாண்ட போராட்டத்தின் வரலாறை கண்டிப்பாக நாம் போற்றத்தான் வேண்டும்.
நன்றி – அறிவியல் பலகை
📚 எழுதியவர் :

✍🏻 – ஆயிஷா இரா.நடராசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

