[குடிமக்கள், பொய்ச் செய்திகள் வேண்டுமென்றே ஊதிப் பெரிதாக்கப்படும்போது, அதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாபவர்கள் நாம்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று மூத்த இதழியலாளர், ரவிஷ் குமார் கூறினார்.]
மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, இந்தியாவில் உள்ள ஊடகங்களில் பல, இன்றைய தினம் மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவாகவும், மக்களின் மனதில் மதவெறி நஞ்சை ஏற்றும் விதத்திலும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று என்டிடிவி – இந்தியா ஊடகத்தின் மேலாண்மை ஆசிரியரும் (Managing Editor), மக்சாய்சாய் விருது பெற்றவருமான ரவிஷ் குமார், பரஞ்சய் குஹா தாகுர்தாவிற்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார். 2020 ஏப்ரல் 12 ஞாயிறு அன்று ஆங்கிலத்தில் வெளியான காணொளி நேர்காணலின் சாராம்சம் வருமாறு:
பரஞ்சய் குஹா தாகுர்தா: நாம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சர்வதேச நெருக்கடியினூடே சென்றுகொண்டிருக்கிறோம். உலக சுகாதார ஸ்தாபனத்தின் டைரக்டர்-ஜெனரல், இப்போது பரவிக்கொண்டிருப்பது குரோனா வைரஸ் தொற்று (‘pandemic’) மட்டுமல்ல பொய்ச்செய்தித் தொற்றும் (‘infodemic’) தான் என்று கூறியிருக்கிறார்.

ஏனெனில், பொய்ச் செய்திகள் உலகம் முழுதும் பரவும் வேகம், இப்போது இருப்பதுபோன்று இதற்கு முன்னெப்போதும் இருந்தது கிடையாது. பல நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களை, தங்களின் அந்தரங்கங்களைக் கைவிடுமாறு செய்துகொண்டிருக்கின்றன. இதற்கு அவைகள் கூறும் வாதம், தகவல்கள் வெளியாவதைச் சரிபார்க்காவிட்டால், பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த முடியாது அல்லது தடுத்திட முடியாது என்பதாகும். இவ்வாறு இவை அளித்திடும் சிகிச்சை, நோயைவிட மோசமானதாக இல்லையா?
ரவிஷ் குமார்: பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் முன்னணியில் இருப்பது அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் என்பதற்கு எண்ணற்ற எடுத்தக்காட்டுகளைக் கூற முடியும். செய்திகள் இருவிதமானவை. ஒன்று, (இந்திய அரசாங்கம் உட்பட) அரசாங்கத்தின் ஆதரவாளர்களால் அவிழ்த்துவிடப்படும் பொய்ச் செய்திகள். இத்தகைய “செய்திகள்” பரவுவதைக் கட்டுப்படுத்திட எவ்விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப் படவில்லை. மற்றொரு விதமான செய்திகளும் உண்டு. அரசாங்கம் அதைப்பற்றி எதுவும் பேசாது.

அதனை “இறந்த செய்திகள்” (‘dead news’) அல்லது “புதைக்கப்பட்ட செய்திகள்” (‘buried news’) என்று அழைத்திடலாம். இவற்றைப் பற்றிய தகவல்கள் நமக்கு அதிகமாகத் தெரியாது. ஒரு பார்வையாளர் அல்லது ஒரு வாசகருக்கு, தவறான தகவல் முகநூலிலோ (அல்லது வாட்சப்பிலோ) முன்வைக்கப்படும்போது அது மிகவும் உண்மையானதாக இருக்கிறது. ஆனால், மிகப் பெரிய அச்சுறுத்தல் பொய்ச் செய்திகள் அல்லது புதைக்கப்பட்ட செய்திகளிலிருந்து வருவதுதான். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்போர் சில உண்மைகள் மக்களிடம் போய்ச் சேராமல் புதைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அரசாங்கம், இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவது தொடர்கிறது. இவ்வாறு இங்கே (இந்தியாவில்) மட்டுமல்ல, பல நாடுகளிலும் இதுதான் நிலைமை. அரசாங்கங்கள் இத்தகைய சரடுகளைத் தங்களின் ஊடகங்கள் மூலமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. இதில் பிரச்சனை என்னவென்றால் மக்களில் பெரும்பான்மையோருக்கு உண்மை என்ன என்பது தெரியாது. பலர், அரசாங்கத்தால் பொய்யாகக் கட்டி எழுப்பப்படும் உலகத்தில்தான் வாழ்ந்துகொண்டிருப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். எனினும் நாம் தற்போது என்ன பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றால், குரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்கொண்டிருந்தாலும்கூட, அரசாங்கத்தால் அளிக்கப்படக்கூடிய “தகவல் உணவைத் தான்” பெற்றிருக்கிறோம். மக்கள் நம்பகமானத் தகவலுக்காக பசித்திருக்கிறார்கள் என்றாலும், இந்த “உணவு”தான் உங்களுக்கு சிறு சிறு துண்டுகளாகக் கொடுக்கப்படுகிறது. அதிகபட்சம் 10 நிமிடங்கள்.
என்னுடைய நாட்டிலிருந்து ஓர் உதாரணத்தை உங்களுக்குத் தருகிறேன். அரசாங்கத்தால் அளிக்கப்படும் குறுகியகால பத்திரிகையாளர் சந்திப்புகளை எடுத்தக்கொள்ளுங்கள். சமீபத்தில் ஐசிஎம்ஆர் எனப்படும் இந்தியன் மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலிலிருந்து (Indian Council of Medical Research) விஞ்ஞானிகள், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது கொரானா வைரஸ் தொற்று தொடர்பாக பேசியதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பத்திரிகையாளர்களுடன் அமர்ந்திருந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியிருந்தார்கள் என்றால், அது சாமானிய குடிமக்களுக் உதவுவதாக இருக்கும்.
ஆனால், அவர்கள் தாங்கள் நினைப்பதை சுதந்திரமாகப் பேசுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்களா? அப்படி இல்லை என்றே கருதுகிறேன். உதாரணமாக, ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் கோவிட்-19 தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான சோதனைக் கருவிகளுக்கான (test kits) ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன என்றும், இவை ஒருசில தினங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்கள். ஆனால், அவை இன்னமும் வந்துசேரவில்லை. ஏன்? அவர்கள் விஞ்ஞானிகள். ஒருவேளை அவர்களுக்கு அதற்கான விடைகள் தெரியாமல் இருந்திருக்கலாம். அவர்களுக்கு எப்போதுமே தெரிவதற்கான வாய்ப்புகள் கூட அவர்களுக்குக் கிடைக்காமல் இருக்கலாம். ஏனெனில் இதுதொடர்பான உண்மை விவரங்களை அவர்களிடம் அரசாங்கம் வெளிப்படுத்துவதில்லை. இதுபோன்ற உண்மை செய்திகள் நமக்குக் கிடைப்பதில்லை. உண்மையான விவரங்கள் நம்மிடம் வந்து சேர்வதே இல்லை.
வளர்ந்த நாடுகளில் தகவல் பரவல் பரவாயில்லை என்று சொல்லும் விதத்தில் இருக்கின்றன. அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே விஞ்ஞானிகள் ஊடகவியலாளர்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் ஒவ்வொரு நாளும் பதில் சொல்கிறார்கள். அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலிருந்தும், அமெரிக்க ஜனாதிபதியின் நிலைப்பாட்டிலிருந்தும் இவர்கள் வித்தியாசமான நிலைப்பாட்டை அடிக்கடி எடுக்கிறார்கள். இதுபோன்று இந்தியாவில் நடக்குமா? அரசாங்கம் கூறுவதற்கு முரணாக, ஐசிஎம்ஆர் விஞ்ஞானி எவராவது எதுவும் கூறமுடியுமா? அவர்களால் முடியாது.
பரஞ்சய் குஹா தாகுர்தா: ஏப்ரல் 2 அன்று, சர்வதேச பத்திரிகையாளர் நிலையம் (International Press Institute) ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அரசாங்கங்கள், குறிப்பாக எதேச்சாதிகார மனோபாவத்துடன் செயல்படுபவை, தங்கள் நாடுகளில் பொய் செய்திகளைக் கண்காணிப்பதைக் குறியாகக் கொண்டு கொண்டுவரப்பட்ட சட்டங்களை, சுதந்திர ஊடகங்களை மவுனமாக்குவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று கூறியிருக்கிறது. பொய்ச் செய்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் அடிக்கடி பத்திரிகை சுதந்திரத்தின்மீது தாக்குதல் தொடுப்பதற்கு அவசரச் சட்டங்களைப் பயன்படுத்திக்கொள்கின்றன. அவர்கள் பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். நீங்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்துக் கூறினீர்கள். சமீப காலங்களில் “பொய்ச் செய்திகள்” அதிகம் உபயோகப்படுத்தப்படுவதாகக் கூறிய நபர்களில் அவரும் ஒருவர்.
நம் பிரதமர் போல் அல்லாமல் பத்திரிகையாளர் சந்திப்பை முறையாக அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். மார்ச் 20 அன்று, சர்வதே ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் (National Broadcasting Corporation) செய்தியாளர், பீட்டர் அலெக்சாண்டர், என்பவர் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது ஒரு கேள்வியைக் கேட்டார். இன்றைய தினம் அமெரிக்க குடிமக்களில் அநேகம்பேர், “ஜனாதிபதி நமக்காக என்ன செய்தி வைத்திருக்கிறாரோ என்று கேட்டு பயந்துபோய் இருக்கிறார்கள்,” என்று கூறினார். டிரம்ப், அவரைப்பார்த்து “நீ ஒரு பயங்கரமான நிருபர்,” என்று கூறி அவரைக் கிழித்துத் தொங்கவிட்டார். பின்னர் அந்த நிருபர் மீது தனிப்பட்டமுறையில் தாக்குதல் தொடுத்தார். நீங்கள் ஒரு கேள்வி கேட்கிறீர்கள். உடனே நீங்கள் ஒரு பயங்கரமான நிருபராக மாறுகிறீர்கள்?
ரவிஷ் குமார்: பரஞ்சாய், தயவுசெய்து ஒன்றைக் குறித்துக் கொள்ளுங்கள். அந்த நிருபர், அமெரிக்க ஜனாதிபதி முன் இருந்தார். இந்தியாவில், பிரதமர் முன்பு ஒரு நிருபராவது இவ்வாறு இருப்பதைப் பார்க்க முடியுமா? நாம் இவ்வாறு கூறும்போது, அவர் (நரேந்திரமோடி) 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக (குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு) நடத்திய ஒரு பத்திரிகையாளர் கூட்டம் போன்று நடத்த இருக்கிறாரா என்று நமக்குத் தெரியாது. அப்போது பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளைச் சற்றே நினைவு கூருங்கள். எத்தனை இரவுகளாக நீங்கள் தூங்காமல் இருக்கிறீர்கள்? அதிகாலை 2.30 மணிவரையிலும் மாநில முதலமைச்சர்களுடன் போனில் பேசினீர்களா? பொறுத்திருந்து பார்ப்போம். இதேபோன்ற நேர்காணல்கள் மீண்டும் தொடங்கப்படலாம்.
‘பொய்ச் செய்திகள்’ தொடர்பாக சர்வதேச பத்திரிகையாளர் நிலையத்தின் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளபடி, இந்தியாவில் அது எப்படி அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பார்ப்போம். தப்லிகி ஜமாத் சம்பவம் குறித்து உத்தரப்பிரதேசத்தில் சில மாவட்டங்களில் காவல்துறையினர் சில டெலிவிஷன் சேனல்களில் காட்டப்பட்ட பொய்ச் செய்திகளை நீக்கிவிட்டார்கள்.
பரஞ்சய் குஹா தாகுர்தா: உங்களால் பெயர்களைக் கூற முடியாது. நான் அவர்களில் ஒருசிலரின் பெயர்களையும் குறிப்பிடுகிறேன். தப்லிகி ஜமாத் சம்பவத்தில், அமிஷ் தேவ்கான், (இவர் நியூஸ் 18 இந்தியா – இந்தி சானலின் மேனேஜிங் எடிட்டர்) ஒரு செய்தி வெளியிட்டார். பின்னர், ஸ்மிதா பிரகாஷ், (ஏ.என்.ஐ. நிறுவனத்தின் எடிட்டர்-இன்-சீஃப்) (ஆசியன் நியூஸ் இண்டர்நேஷனல்), பல சமயங்களில் அரசாங்கத்திற்குத் துதிபாடி, தன் கதைகளை ட்விட்டரில் பதிவேற்றம் செய்திருக்கிறார். யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் காவல்துறையினர்கூட இத்தகைய பொய்ச் செய்திகளை ஒலிபரப்பப்பட்டிருக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.
ரவிஷ் குமார்: ஆனால், என்ன நடந்தது? இவற்றுக்குப் பதிலாக நீங்கள் காவல்துறையினரை (தி ஒயர், சக-நிறுவன எடிட்டர்,) சித்தார்த் வரதராஜன் இல்லத்திற்கு அனுப்புகிறீர்கள். இந்த சமூக முடக்கக் காலத்திலும் கூட, ஒருசில போலீசார் ஒரு வாகனத்தில் தில்லிக்கு வந்தார்கள். அவர்கள் சமூக முடக்கத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒருவர்க்கும் மற்றொருவருக்கும் இடையே சமூக இடைவெளியைப் பின்பற்றினார்களா? இதேபோன்று எண்ணற்ற போலீசார் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்வேறு ஊடக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்களை அனுப்பி இருக்கிறார்கள்.
ஒரு பெரிய பத்திரிகையால் பரப்பப்பட்ட பொய்ச் செய்தி குப்பையில் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. பீகாரில் கட்டிகார் மாவட்டத்தில் சமீபத்தில் என்ன நடந்தது? ஒரு சானல், புதுதில்லியில் தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர், உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் இதில் நல்ல செய்தி என்னவென்றால், அம்மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், அம்மாவட்ட ஆட்சித் தலைவரும் அந்தச் செய்தி முற்றிலும் பொய் எனக் கூறியதாகும்.
பொய்ச்செய்தி வெளியிடுபவர்களிடையே ஒரு தெளிவான கைகோர்ப்பு இருப்பதை நாம் பார்க்கிறோம். ஒருவர் ஒரு பொய்ச்செய்தியை வெளியிடும்போது, டெலிவிஷன் சானல்களுக்கு அல்லது பத்திரிகைகளுக்குப் ‘பொறுப்பு’ வகிப்பதாகக் கூறுபவர்களில் பலர், அவ்வாறான பொய்த் தகவலைத் தவறானது என்று கூறுவதும் கிடையாது, அதனைக்கண்டிப்பதும் கிடையாது. மாறாக அதனை அப்படியே தங்கள் ஊடகங்களில் பரப்புகிறார்கள். இதனால் சரியான தகவல் வாசகர்களையோ அல்லது பார்வையாளர்களையோ சென்றடைவதில்லை.

கட்டிகாரிலிருந்து வந்த பொய்ச் செய்தியை அது பொய்ச்செய்தி என்று கூறி பிரதான ஊடகங்கள் எதுவும் அதனைக் குப்பையில் தூக்கி எறியவில்லை. ஆனால் தனிப்பட்ட நபர் ஒருவரின் யூ ட்யூப்தான் அதனைச் செய்தது. ஆல்ட்நியூஸ் இதுபோன்ற பொய்ச் செய்திகள் அனைத்தையும் தொகுத்திருக்கிறது. ஆனால் இது ஒரு பிரதான ஊடகம் அல்ல. அபிஷார் ஷர்மா என்று ஒருவர். இவரும் பொய்ச் செய்திகளைத் தன் ‘யூ ட்யூப்’ வலைதளத்தில் குப்பையில் தூக்கி எறிந்துகொண்டிருக்கிறார்.
இங்கே நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இதுபோன்று பொய்ச்செய்திகளை எதிர்கொள்வதற்கு, எதிர்த்து முறியடிப்பதற்கு ஏற்றவிதத்தில் ஒரு ஸ்தாபனரீதியான அமைப்பு இல்லை என்பதாகும். ஒரு தவறான செய்தி பரப்பப்பட்டால், அதனை யார் பரப்புகிறார்கள் என்பதை மக்களிடம் எடுத்துச் சென்று, அதனைத் தோலுரித்துக் காட்டுவதற்கான வழி இருந்திட வேண்டும்.
ஒரு மாவட்ட ஆட்சியரோ அல்லது காவல்துறை அதிகாரியோ ஒரு குறிப்பிட்ட சானலில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தியை, பொய்ச் செய்தி என்று அறிவித்தால், மற்றவர்களும் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதுபோன்று ஒரு தணிக்கை முறை ஊடகங்களுக்கு இல்லை. பொய்ச்செய்திகள் பரப்பப்படுவதற்கு எதிராக, ஒருசில தனிநபர்கள்தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களைத்தான் எல்லாமும் சார்ந்திருக்கிறது. பொய்ச் செய்திகள் வேண்டுமென்றே பரப்பப்படுவதை அனுமதிக்கும்பொழுது, தாங்கள்தான் இழப்பவர்களாக இருக்கிறோம் என்பதை மக்கள் இறுதியில் புரிந்து கொள்ள வேண்டும்.
வங்கி அதிகாரிகள், மக்களைத் துன்புறுத்தும்போது என்ன நடக்கிறது? பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பெற்றுவந்த குறைந்த ஊதியம்கூட, அளிக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருக்கின்றனவே, இது குறித்து ஏதேனும் செய்தி வந்திருக்கிறதா? பல வேலைகள் காணாமல் போய்விட்டனவே. இவை குறித்தெல்லாம் மக்கள் தெரிந்துகொள்வதற்கு உரியவர்கள் கிடையாதா? பொய்ச் செய்திகளைப் பரப்பும் ஊடகங்களுக்கு எதிராக, அதன் பார்வையாளர்களும், வாசகர்களும் அணிதிரண்டு அதனை எதிர்த்திடாவிட்டால், பொய்ச் செய்திகளைப் பரப்புவோரே அதனை எதிர்கொள்ளமுடியாமல் மூச்சுத்திணறும் நிலை ஒருநாள் ஏற்படும்.
எவ்வளவு செய்திகளைத்தான் நீங்களும் நானும் பரப்ப முடியும்? நாட்டிலுள்ள ஒவ்வொருவரிடமும் நாம் போய்ச் சேர முடியுமா? நிச்சயமாக முடியாது. அதற்கான திறமையோ அல்லது வசதிவாய்ப்புகளோ நம்மிடம் கிடையாது. மக்கள் தங்களுக்கு அளிக்கப்படும் ‘தகவல் உணவு’ குறித்து சற்றே ஆழமாக சிந்திக்க வேண்டி இருக்கிறது. இந்தத் ‘தகவல் உணவு’ நம் சுகாதாரத்திற்கு ஏற்புடையது அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டியிருக்கிறது.
மக்கள் ஒரு குகைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து அவர்களால் திரும்ப முடியாது. இந்திய ஊடகங்கள் பல என்ன செய்திருக்கிறது மற்றும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து மக்களில் பலர் புரிந்துகொள்ள சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள். கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே, ஊடகங்கள் ஒரே சிந்தனையுடன் முஸ்லீம்களுக்கு எதிராக, சிறுபான்மையினருக்கு எதிராக பிரச்சாரத்தைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளில் மிகவும் பயங்கரமான விவாதங்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
இவர்களால் பரப்பப்படும் சரடுகள் மறுதலிக்கப்படுவதோ அல்லது அவற்றுக்கெதிராக சவால் விடுவதோ கிடையாது. தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்பப்படும் அனைத்தையும் மக்களில் பெரும்பாலானவர்கள் உண்மை என்றே ஏற்றுக்கொள்கிறார்கள். இத்தகைய பொய்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையாளர்களை அடையாளம் காட்டுவதற்காக ஒரு புதிய “பார் குறியீடு” (“Bar Code”) உருவாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் எல்லாவற்றையும் விளக்க வேண்டிய தேவையில்லை. ஓர் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, அதனை மேலும் சிறந்ததாக மாற்றுவது, மதவெறி வைரஸைப் பரப்பாமல் இருப்பது, ஊடகங்களின் வேலை இல்லையா?
இதனைக் கூறும்போது நான் மிகவும் வருந்துகிறேன். இந்தியாவில் ஊடகங்களின் நிலை குறித்து இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் விவாதிக்கப் போகிறோம்? பார்வையாளர்களில் பலர் அவர்கள் கட்டவிழ்த்துவிடும் சரடுகளை புரிந்துகொள்ளவில்லை எனில் நாம் என்ன செய்ய முடியும்? ஊடகங்களில் காட்டப்படுவனவற்றையெல்லாம் நம்பக்கூடிய அளவிற்கு மதரீதியாக ஒருதலைப்பட்சமானவர்களாக அவர்கள் மாறிவிட்டார்களா? இதே ஊடகங்கள், தங்கள் தொலைக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களின் பிரச்சனைகளைப் பேசுவதில்லை, அவர்களின் வேலைகள் பறிபோய் இருப்பதையோ அவர்களின் ஊதியங்கள் வெட்டப்பட்டிருப்பதையோ கூறுவதில்லை.
இவர்கள் குறித்து வேறெந்த மொழியில் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் எந்தவொரு அரசியலையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. நீங்கள் விரும்பும் எந்தக் குழியிலும் நீங்கள் குதித்துவிடலாம். ஆனால், ஊடகங்கள் அல்லும் பகலும் தொடர்ந்து பரப்பிக்கொண்டிருக்கும் பொய்ச் செய்திகளை நீங்கள் ஆதரிப்பீர்களேயானால், நீங்கள் நாட்டிற்கு அளப்பரிய சேதத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமானவர்களாக அமைந்துவிடுவீர்கள். இது ஒரு நன்னெறி சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். (This is an issue of ethics.)
செய்திகளை இந்து (எதிர்) முஸ்லீம் என்கிற ரீதியில் வெளியிடாதீர்கள் என்று நாம் கூறுகிறோம். ஆனால், அவர்களோ இதற்கு நேரெதிராக, ஒவ்வொரு செய்தியையுமே இந்து-முஸ்லீம் கதையாகவே ஜோடித்து முஸ்லீம்கள் மீத குற்றத்தைச் சுமத்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வதந்திகளைப் பரப்பக்கூடாது என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதற்கு மாறாக, பாரதீய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் படையாட்கள் அவர்களுடன் இருப்பதால், அவர்கள் எதைவேண்டுமானாலும் செய்ய முடிகிறது. அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள். என்றாவது ஒருநாள் பார்வையாளர்களும், வாசகர்களும் இவ்வாறாக உண்மையல்லாதவைப் பரப்பப்படுவதில் தங்களுக்கு ஆர்வம் இல்லை என்பதை உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
பரஞ்சய் குஹா தாகுர்தா: மார்ச் 31 அன்று, மத்திய உள்துறை அமைச்சர், அஜய் குமார் பல்லா, மத்திய அரசின் வழக்குரைஞர் (Solicitor General of India), துஷார் மேத்தா,வுடன் இணைந்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் அவர், மின்னணு, அச்சு, சமூக ஊடகங்கள் எதிலாவது, குறிப்பாக இணைய தளங்களில், “வேண்டுமென்றே அல்லது சரியல்லாத” விவரங்கள் வெளியாகும்போது, அது “சமூகத்தில் பெரும்பான்மை பிரிவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும்” என்றும், எனவே நீதிமன்றம் செய்திகளை வெளியிடுவதற்கு முன் மத்திய அரசுக்கு அனுப்பி, அதன் உண்மைத் தன்மையை (true) மற்றும் உண்மை விவரங்களை (factual) மத்திய அரசு சரிபார்த்து, பின் அது தருகின்ற தகவலைத்தான் பரப்பிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார்.
எனினும், உச்சநீதிமன்றம் அரசாங்கத்துடன் ஒத்துப்போகவில்லை. மேலும் அது, பொய்ச் செய்திகள் பரப்பப்படக்கூடாது என்று கூறும் அதேசமயத்தில், அவர்களிடம் அரசாங்கத்தரப்பில் “அதிகாரபூர்வமாகத் தரப்படுபவைகளை” வெளியிட வேண்டும் என்று கேட்கும் அதே சமயத்தில், தொற்று சம்பந்தமாக நடைபெறும் “சுதந்திரமான விவாதத்தில்” தலையிடும் நோக்கம் இல்லை என்றும் கூறியது. இங்கே நம்முன் உள்ள கேள்வி, ஒரு செய்தியாளருக்கு அதிகாரபூர்வத் தகவல் கிடைக்கவில்லையானால், அல்லது அதனை அவர் காலத்தில் பெறவில்லை என்றால், அவர் என்ன செய்வார் என்பதேயாகும்.
எனக்கு, மிகவும் அதிர்ச்சியை அளித்த விஷயம் என்னவென்றால், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதி எல். நாகேஷ்வர் ராவ் ஆகியோர், “நகரங்களிலிருந்து பெரிய அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பொய்ச் செய்திகளால் உருவாக்கப்பட்ட கொந்தளிப்பால் தூண்டப்பட்டிருக்கிறார்கள் என்றும் இதன் காரணமாக சமூக முடக்கம் (அரசாங்கம் இந்தச் சூழ்நிலையில் அறிவித்திருக்கிற மூன்ற வாரங்கள் மட்டுமல்ல, மாறாக) மூன்று மாதங்களுக்கும் மேல் தொடரும்,” என்று கூறியிருப்பதாகும். உச்சநீதிமன்ற அமர்வாயம், மேலும், “இத்தகைய கொந்தளிப்புக்கு உள்ளான புலம்பெயர்ந்தோர். இத்தகைய செய்திகளின் அடிப்படையில் நம்பப்படுகிற மற்றும் செயல்படுகிறவர்களுக்கு சொல்லொண்ணா துன்பங்களை விளைவித்திருக்கிறார்கள்,” என்றும் கூறியிருக்கிறது.
அமர்வாயம் பின்னர், வதந்திகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்புவோர் எப்படி ஓராண்டு காலத்திற்கு சிறைத் தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்க முடியும் என்கிற பேரிடர் மேலாண்மை சட்டத்தின் ஷரத்துக்களையும் படித்துக் காட்டியிருக்கிறது. இந்தப் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அரசாங்கத்துடன் ஒத்துப் போகிறது. வாட்சப் செயலி மூலமாக பரப்பப்பட்ட பொய்ச் செய்திகளால்தான் புலம்பெயர் நடவடிக்கைகள் நடந்துள்ளன என்பதுதான் இதன் பொருளா? தற்சமயம் இந்தியாவில் சுமார் 400 மில்லியன் (40 கோடி) பேர் வாட்சப் செயலியைப் பயன்படுத்துகின்றனர் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ரவிஷ், தரமான கல்வியைப் பெறமுடியாத ஏராளமான இந்தியர்கள், வாட்சப் பல்கலைக் கழகத்தில் இன்றையதினம் “கல்வி” பெற்றது பற்றி, நீங்கள் உங்களேயே கேட்டுக்கொள்ளுங்கள்…
ரவிஷ் குமார்: நாம் மேலும் ஒருசில விஷயங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. நம் முன்வைக்கப்பட்டுள்ள உண்மைகள் என்ன? ஊடகங்கள் சமூக முடக்கம் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குத் தொடரும் என்று உண்மையில் செய்திகளைப் பரப்பினால், அதனால் கொந்தளிப்பு உருவாகாதா? இதுதான் மேற்கொள்ளப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது குறித்த உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டுசெல்வதில் அரசாங்கம் மேற்கொண்ட தவறுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? சமூக முடக்கம் தொடர்பான வதந்திகள் புலம்பெயர்ந்தோர் மத்தியில் காட்டுத்தீ போல் பரவியது. ஏனெனில், அரசாங்கம் தன்னுடைய தகவல் உத்திகளை முற்றிலுமாக தவறான விதத்தில் கையாண்டது.
மிகவும் பாதிப்புக்கு உள்ளான பகுதிகள் (hotspots) என்று உத்தரப்பிரதேசத்தில் தில்லி அருகே உள்ள நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளை உ.பி. அரசாங்கம் அறிவித்தபோது, அதன் விளைவாக ஏற்படக்கூடிய முக்கியமான தகவல்கள் பலவற்றை அது வெளியிடவில்லை. அதன் விளைவாக, மக்கள் கூட்டம் கூட்டமாகத், உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக, தெருக்களில் திரண்டனர். உ.பி. அரசாங்கம், பத்திரிகையாளர்களை சிறை அல்லது ஜாமீன் போன்ற அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி மிரட்ட விரும்பியது. ஆனால், மக்களிடம் முக்கியமான உண்மைகளைக் கூறுவதற்கு அது பரிதாபகரமான முறையில் தவறிவிட்டது.
உச்சநீதிமன்றம், அரசியல் கட்சிகளின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளுக்கு (IT cells), பொய்ச் செய்திகளைப் பரப்பக்கூடாது எனக் கட்டளையிட வேண்டும். இவைகள்தான் பொய்ச் செய்திகளைச் சுற்றுக்கு விடுகின்றன. பிஎம்-கேர்ஸ் நிதியம் (PM-CARES Fund—Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund) தொடங்கப்பட்டபோது என்ன நடந்தது என்று பரிசீலனை செய்யுங்கள். இது தொடர்பாக எண்ணற்ற கேள்விகள் எழுந்தன. வாட்சப் செயலி பல்கலைக்கழகங்களில் படித்த மேதாவிகள் வதந்திகளைப் பரப்பினர். அவை ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்குப் பரவியது.
இந்தப் புதிய நிதியம் மோடியால் உருவாக்கப்பட்டதற்குக் காரணம், (இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால்) நேரு, தற்போது செயல்பாட்டில் இருக்கின்ற பிரதமர் தேசிய நிவாரண நிதியத்திற்கு (Prime Minister’s National Relief Fund)இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் மட்டுமே தலைமை தாங்க முடியும் என்று முடிவு எடுத்திருந்ததுதான் என்று அவர்கள் கூறிவந்தார்கள். இப்போது இந்தத் தகவல் முற்றிலும் பொய் என தெளிவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியத்திற்கு பிரதமர்தான் தன்னுடைய பொறுப்பின் அடிப்படையில் (ex-officio capacity) தலைவர் என்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பரப்பப்பட்ட பொய்ச்செய்திகளை, “அவை பொய்ச்செய்திகள்” என்று அரசுத்தரப்பில் சுற்றுக்கு விடப்பட்டு அவற்றை எதிர்த்திட வேண்டாமா? அவர்கள் எதுவுமே செய்யவில்லை.
இப்போது மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில், அனைத்து செய்தி சானல்களும் இது தொடர்பாக நாள்தோறும் அரசாங்க அதிகாரிகள் கூறும் பத்திரிகைக் செய்திகளை உயர்த்திப்பிடித்திட வேண்டும். இது ஏன் என்று உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் மாலையில் உங்கள் தொலைக்காட்சியைப் பார்க்கும்போது, பயனற்ற விவாதங்கள் தொடங்கியிருக்கும். பகலில், பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும்போது, ஏராளமான முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்படும். அவை தொலைக்காட்சிகளில் இடம் பெறாது.
உதாரணமாக, மத்திய அரசாங்கம் நிலத்தில் விளைந்துள்ள பயிர்கள் குறித்து ஒரு முடிவு எடுத்திருக்கிறது. அதன்படி விளைந்த பயிர்களை நிலங்களிலிருந்து உரிய உபகரணங்கள் மூலமாக அறுவடை செய்து அவற்றை வாகனங்களில் ஏற்றி ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லலாம். சமூக முடக்கம் இருந்த போதிலும் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கத்தின் இந்த முடிவை ஊடகங்கள் உயர்த்திப்பிடித்திடவில்லை. பெரும்பான்மையான மக்களுக்கு இது மிகவும் முக்கியமான செய்தியாகும். கோதுமை அறுவடை செய்வதற்குத் தயாரான நிலையில் இருந்தது. இந்தச் செய்தி மக்கள் மத்தியில் காலத்தே செல்லாவிட்டால், இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திடும். விளைந்த தானியங்கள் வீணாகிவிடும்.
ஏப்ரல் 8 அன்று, அரசாங்கம் ஒரு நோட்டிஸ் வெளியிட்டது. அதன்படி மருத்துவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டக்கூடாது. இதன்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு எதிராக செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என பல அடையாளங்கள் அல்லது களங்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்த அறிவிப்பின் முதல் வரியாக இது இருந்திருக்க வேண்டும். ஆனால், “கோடி” மீடியாக்கள் (“godi” media) என்னும் ‘மோடி ஆதரவு ஊடகங்கள்’ தல்பிகி ஜமாத் கதையை தொடர்ந்து கூறிவந்தன. அரசாங்க அதிகாரிகள் கூட இத்தகைய அரைவேக்காட்டு கதைகளை உத்தரவாதப்படுத்தும்விதத்தில் புள்ளிவிவரங்களை அளித்துக் கொண்டிருந்தனர். இதுதான் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் உயர் அதிகாரி (ஐஏஎஸ் அதிகாரி)யின் மகன் ஒருவர், அயல்நாடு சென்று திரும்பியிருப்பவர், தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறார். இதனை எத்தனை தொலைக்காட்சி சானல்கள் நமக்கு தெரிவித்தன? அவர் எந்த நாட்டிலிருந்து திரும்பி வந்தார்? அவரும் அவருடைய தாயாரும் அவருடைய பயண விவரங்கள் குறித்து ஏன் இதனை எவருக்கும் கூறவில்லை? ஏன் இது ஒரு பெரிய கதையாக ஊடகங்களால் மாற்றப்படவில்லை?
இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அநேகமாக மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டன. ஒருசில மட்டும் தங்களால் முடிந்த அளவுக்கு உண்மைச் செய்திகளைத் தர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றை அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாடு கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட்டிருக்கிறது என்று நமக்குக் கூறப்படுகிறது. அது உண்மையானால், தனியார் மருத்துவமனைகளில் பல ஏன் மூடப்பட வேண்டும்? ஏன் தனியார் மருத்துவர்கள் தங்கள் கிளினிக்குகளை மூடிவிட்டு, ஓடிவிட வேண்டும்? அவை திறந்திருக்க அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. நாம் அந்த மருத்துவர்களுக்கு நம்மால் ஆன அனைத்தையும் அளித்திருக்கிறோம்.
எனினும் அங்கே சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் இப்போது மிகவும் ஆழமான சங்கடங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள், டியாலிசிஸ் செய்யப்பட வேண்டியவர்கள் போன்றோர் கடும் சிரமங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். எப்படி அரசாங்கம் இத்தகைய தங்களின் குடிமக்களைக் காப்பாற்றப் போகிறது? இதுபோன்றவர்களின் கதைகளையெல்லாம் ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டாமா? புதுதில்லியில் அமைந்திருக்கிற அரசாங்கத்தை இதுபோன்றவர்கள்தான் ஆதரரித்து ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியிருக்கிறார்கள் என்பதை நினைவுகூர்ந்திடுங்கள்.
நன்றி https://www.newsclick.in/
(தொடரும்)