கோவிட் தடுப்பூசி வழங்கிய இந்திய மருத்துவ விஞ்ஞானி பிரக்யா யாதவ் | Indian Medical Scientist Pragya Yadav administers Covid vaccine - https://bookday.in/

கோவிட் தடுப்பூசி வழங்கிய இந்திய மருத்துவ விஞ்ஞானி பிரக்யா யாதவ்

தொடர்- 7 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

கோவிட் தடுப்பூசி வழங்கிய இந்திய மருத்துவ விஞ்ஞானி பிரக்யா யாதவ்

இந்திய அறிவியல் மாமனிதர்களால் கட்டமைக்கப்பட்டது. நம் நாட்டில் நடந்த அறிவியல் துறை சம்பந்தமான தியாகங்கள் ஒன்றிரண்டு அல்ல. பெண் விஞ்ஞானிகளின் பல்வேறு சாதனைகள் ஆண் ஆதிக்க மோசடிகளால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ விஞ்ஞானி பிரக்யா யாதவின் கதை நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதமாகும். இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ICMR நடத்தும் ஆய்வுக்கூடமான நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் வைராலஜி தற்போது ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு முதன்மை விஞ்ஞானியாக பிரக்யா யாதவ் செயல்பட்டு வருகிறார். மற்றும் கிரிமியன் காங்கோ போன்ற அதீத நோய் கிருமி வைரஸ் தொற்றுகள் துறையில் தனது பங்களிப்புக்காக உலக அளவில் அவர் போற்றப்படுகிறார்.

யாதவ் அம்மையாரின் பங்களிப்பு இந்தியாவின் வரலாற்று போக்கையே மாற்றி அமைத்த மாபெரும் சாதனையாகும். ரத்தக் கசிவு காய்ச்சல், நிபா வைரஸ், எபோலா தலையீடுகள் மற்றும் மேலாண்மைக்காக தேசிய சுகாதார கண்காணிப்புக் கொள்கையை மேம்படுத்த வழிவகுத்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவரது பங்களிப்புகள் இலேயே மிக சிறப்பானது COVID 19 என்கிற ஆட்கொல்லி நோய் தடுப்பில் அவருடைய பங்களிப்பு ஆகும். இந்தியாவின் தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசியை உருவாக்கிய குழுவிற்கு தலைமை தாங்கியவர் பிரக்யா யாதவ். ஆனால் விரைவில் அவர் மறக்கப்பட்டார். சினிமா நட்சத்திரங்களையும் அரசியல் வாரிசுகளையும் கிரிக்கெட் நட்சத்திரங்களையும் தேடித்தேடி கௌரவிக்கும் நம்முடைய நாடு மில்லியன் கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றிய இந்த தடுப்பூசி தேவதைக்கு ஒரு உள்ளூர் சங்க விருதைக் கூட இதுவரை அறிவிக்கவில்லை என்பது மிகப் பெரிய அவலம் ஆகும்.

பிரக்யா யாதவ் 1978 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் சந்த்கபீர் என்னும் ஊரில் அம்பேத்கர் நகரில் பிறந்தார். அம்பேத்கர் நகர் தாண்டா என்னும் ஊரில் சரஸ்வதி விஷ்ணு மந்திர் எனும் பள்ளியில் கல்வி கற்று அதே தாண்டாவில் வித்யா பரிஷத் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டப்படிப்பிற்காக வேதியியல் பாடத்தை எடுத்து படித்தார். டாக்டர் ராம் மனோகர் லோகியா பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் வேதியியல் முடித்தார். ரெண்டாயிரத்து நான்காமாண்டு புனே பல்கலைக் கழகத்துடன் இணைந்த ICMR என்கிற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் தனது முனைவர் பட்டத்தை முடித்தார்.

நான் கல்வி கற்ற அதே நிறுவனத்தில் ஒரு இளம் ஆய்வாளராக இணைந்தார். 2006 ஆம் ஆண்டு BSL4 வகை வைரஸ்களை ஆய்வு செய்ய அமெரிக்காவினுடைய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். நம் நாடு திரும்பி இங்கே NIV மற்றும் BSL4 வகை ஆய்வு கூடங்களை பொறுப்பாளராக இருந்து அமைத்தார். பறவை காய்ச்சல் நிபா வைரஸ், எபோலா கிருமிகளை இந்தியாவை தாக்கிய பொழுதெல்லாம் நோயாளிகளின்  ரத்த பரிசோதனைக்கு அது வரையில் அயல் நாடுகளை நம்பி இருந்தனா். யாதவ்  அம்மையாரின் பங்களிப்பு காரணமாக இந்தியாவிலேயே ரத்த பரிசோதனை செய்யும் வாய்ப்பை பெற்றோம்.

2017 ஆம் ஆண்டு யாதவ் அம்மையார் கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சலுக்கான சர்வதேச அமைப்பின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றார். 2019 ஆம் ஆண்டு தொற்று நோய்களுக்கான தயார் நிலை கண்டுபிடிப்புகளுக்கான தர நிலை மதிப்பீடுகள் இன்னும் நிபா வைரஸின் பணிக்குழு உறுப்பினராக ஐ.நா சபையின் சர்வதேச சுகாதார அமைப்பில் நிபுணத்துவ குழுவில் இணைந்தார்.  ஒரு நாளைக்கு 18 மணிநேரம் ஆய்வகத்தில் கழிப்பவராக கடுமையாக உழைத்தார். COVID 19 வைரஸ் நம் நாட்டை தாக்கிய பொழுது தன்னை முழுமையாக COVID ஆய்வுகளுக்கு உட்படுத்திக் கொண்டார். இந்த காலக்கட்டம் அவருடைய வாழ்வின் மிகப் பெரிய சோதனை காலகட்டம் ஆகும்..

தீவிரமாக இந்த வைரஸை ஆய்வு செய்ய வேண்டுமென்றால் இந்த வைரஸ் உங்களை தாக்காமல் அந்த ஆய்வில் ஈடுபடுவது மிகக் கடினமாகும். எனவே 45 நாட்களுக்கு தனி அறையில் தன்னை அடைத்துக் கொண்டு கோவீடு குறித்த ஆய்வு தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தன் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்களை இந்த நோய்க்கு அவர் பறிகொடுத்தார். ஆனால் COVID 19 வைரஸின் அமைப்பை முதன் முதலில் வெளியிட்டவர்களில் உலகத்தில் ஆறுபேர் பெயர்கள் இடம் பெறுகின்றன.  அதில் ஒரு பெயர் பிரக்யா யாதவ் என்பது நமது நாட்டின் பெருமை.!

பாரத்பயோடேக் நிறுவனத்தின் உதவியோடு நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் வைராலஜி உடன் இணைந்து இரவு பகலாக  பாடுபட்டு 2021ஆம் ஆண்டு.. கோவாக்சின் தடுப்பூசியை அவர் அறிமுகம் செய்தார். இந்த கண்டு பிடிப்பு மூன்றுகட்ட சோதனைகளை தாண்டியது. ரஷ்யாவிலும், கனடாவிலும், ஜப்பானிலும் இதே போன்ற ஆராய்ச்சிகள் தோல்வியில் முடிந்த பொழுது இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களுக்கு குறைந்த விலையில் அரசு ஏற்று வழங்க முடிந்த ஒரு தடுப்பூசியாக கோவேக்ஸின் வெற்றி பெற்றது.

NOV 2020 ல் மூன்றாம் கட்ட மனித சோதனைகளை நடத்துவதற்கு கோவாக்சின் குழு ஒப்புதல் பெற்றது 22 தளங்களில் சுமார் 26,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி அது பரிசோதிக்கப்பட்டது. ஜப்பானின் சர்வதேச மருத்துவ ஒத்துழைப்பு நிறுவனம் உடனடியாக பிரக்யா யாதவ் ஐ தொடர்பு கொண்டது. கோவீசில்டு தடுப்பூசி தொடர்பாக அவரோடு பல்வேறு ஆலோசனைகளை நிகழ்த்தியது மிகக் குறைந்த விலையில் ஒரு வைரஸை எதிர் கொள்கின்ற தரமான தடுப்பூசி தயாரிப்பு குறித்த பக்க விளைவுகள் நாடெங்கும் விவாதிக்கப்பட்டன.  இப்போதும் கூட தடுப்பூசி பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்று மறுப்பதற்கில்லை. COVID காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்துவது சர்வதேச மருந்தியல் கார்ப்பரேட்களின் சதி என்று விரிவான வாதமும் உண்டு.

ஆனால் கோவிட் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களில் லட்சக்கணக்கான மரணங்களை தடுத்த பெருமை யாதவ் அம்மையாரை சேரும் என்பதை யாருமே மறுக்க மாட்டார்கள். 2019-20 காலகட்டத்தில் 45 நாட்களுக்கு அதே நோயால் பீடிக்கப்பட்டு இருப்பினும் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து தன் உடலையே ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டு கடுமையாக உழைத்து இந்தியாவுக்கு கோவாக்ஸின் தடுப்பூசியை வழங்கிய யாதவ் அம்மையாருக்கு பெரிய அளவில் இந்திய அரசு எந்த விருதும் வழங்கி கௌரவிக்கவில்லை. அதற்கு ஒரு காரணம் இருப்பதாக நான் கருதுகிறேன். கோவிட் பாதிக்கப்பட்ட நாட்களில் அதை அரசியலாக்கி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அது சீன நாட்டிலிருந்து வந்தது என்றும் வவ்வால்கள் (BATS) இடமிருந்துதான் பரவி இருக்கிறது என்றும் உலக அளவில் பெரிய பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.  அது மட்டுமல்ல கைகளை கழுவுவதற்கு அப்போது நாம் பயன்படுத்திய சானிட்டைசர் குடித்தால் நோய் போய் விடும் என்பது போன்ற மிக ஆபத்தான பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

வவ்வால்கள் BATS களிடமிருந்து அல்லது சீனாவின் ஒரு குறிப்பிட்ட ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் உலகிற்கு பரவி இருக்க வாய்ப்பு இல்லை. என்று உலக அளவில் முதலில் அதை மறுத்து இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் என்னும் இதழில் ஒரு பிரமாண்ட ஆய்வு கட்டுரையை வெளியிட்டு உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர் நம்முடைய பிரக்யா யாதவ் அம்மையார் ஆவார். தடுப்பூசி போர் (THE VACINE WAR) எனும் தலைப்பில் 2023 ஆம் ஆண்டு விவேக் அக்னி ஹோத்ரி ஹிந்தியில் ஒரு திரைப்படம் எடுத்தார். இந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக யாதவ் அம்மையார்  இடம் பெற்றிருக்கிறார். இந்திய மெடிக்கல் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் எப்படி காலத்திற்கு எதிராக ஒரு பந்தயத்தில் கோவிட் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள். என்பதை இந்த திரைப்படம் காட்டினாலும் டாக்டர் ரஜினிகாந்த் ஸ்ரீவாஸ்தவா, டாக்டர் ராமன்கங்கா கேத்கர், டாக்டர் சமீரன் பாண்டா போன்ற ஆண் மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன..

யாதவ் அம்மையார் புது டெல்லிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கோவிட் நோய்க்கிருமி மாதிரிகளைக் கொண்டு மரபணு வரிசை GISAID தரவுதளத்தில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி SARS- COV-2 தடுப்பூசி அடிப்படையில் பரிசோதனைகளை மேற்கொள்கிறார் என்பது மறைக்கப்பட்டுள்ளது.
சாதாரண குடும்பத்தில் பிறந்து. பட்டப்படிப்பு வேதியியல் துறையில் ஆர்வத்தோடு எடுத்து படித்து இன்று உலக அளவில் தடுப்பூசி நிபுணராக மாபெரும் மருத்துவ விஞ்ஞானியாக உயர்ந்திருக்கும் யாதவ் அம்மையாரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.. இந்தியாவில் கோவிட் நோயிலிருந்து பிழைக்கவைக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் நன்றியை எப்போதும் அவர் பெற்று உயர்ந்து இருப்பார் அது தான் அவருக்கு வழங்கப்படும் தலைசிறந்த விருது ஆகும்.

கட்டுரையாளர் :
Chemical Biologist Expert and Scientist Govindasamy Mugesh (கோவிந்தசாமி முகேஷ்) | ஆயிஷா இரா. நடராசன் (Ayesha Era Natarasan) | Thyroid Hormone (தைராய்டு ஹார்மோன்) - https://bookday.in/
                  ஆயிஷா இரா. நடராசன்

 

 

 

 

 

 

 

 

 

 

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்:  உலகறிந்த இந்திய உயிரியலாளர் புத்திசாகர் திவாரி (Buddhisagar Tiwari)

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 4 Comments

4 Comments

  1. Ravi G

    வணக்கம். கோவாக்சின் கண்டுபிடிப்பில் பிரக்யா யாதவ் அம்மையாரின் தன்னலமற்ற சேவையை நாம் பாராட்டுவோம். இது ஆண்களுக்கான பாரதம் மட்டுமல்ல, அறிவியலை மதிக்காத, அறிவியல் மனப்பான்மையற்ற பாரதம். மாறும் என நம்புவோம். இவரது பணிகள் தொடர வாழ்த்துக்கள்.

  2. Dr.P.Sasikumar

    கோவிட் தடுப்பூசியும் நோய்க் கிருமிகளை கண்டறிவதில் இவர் ஆற்றியுள்ள சேவைகளும் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி

  3. Paulmurugan

    பெரும்பாலான மக்களுக்கு தெரியாத பிரக்யா யாதவ் அவர்களை உங்கள் கட்டுறை மூலம் உலகிற்கு தெரியப்படுத்தற்கு உங்கள் மனமார்ந்த நன்றிகள் சார் இதைப் போல கட்டுரைகள் வெளியில் வரும்போது அந்த விஞ்ஞானிகளுக்கு உண்மையான விருது கிடைத்ததற்கு சமமானது இன்னும் ஆண் பெண் பாகுபாடு இந்தியாவில் எல்லா துறையிலும் இருக்கிறது என்பதை உங்கள் கட்டுரை வெளிப்படுத்துகிறது உண்மையாக உழைப்பவர்கள் மக்களிடம் நேரடியாக சென்றடைவார்கள் அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய விருது ஆகும். சாதாரண குடும்பத்தில் சாதாரண பின்புலத்தில் பிறந்தவர்கள் சாதனைகள் செய்தாலும் இன்னும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து இதுபோன்று கட்டுரைகள் எழுதும் பொழுது அந்தப் புறக்கணிப்பு ஒரு நாள் மாறும் என்று நம்பிக்கை கொள்வோம் தாங்கள் எழுத்துக்கள் இன்னும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *