இந்திய நரம்பியல் விஞ்ஞானி விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத் (Indian Neuroscientist Vijayalakshmi Ravindranath) - பார்க்கின்சன் (Parkinson's) நோய்

இந்திய நரம்பியல் விஞ்ஞானி விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத்

இந்திய நரம்பியல் விஞ்ஞானி விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத் (Indian Neuroscientist Vijayalakshmi Ravindranath)
தொடர் 83: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத் பெங்களூரிலுள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தில் நியூரோ செய்ன்ஸ் என்று அழைக்கப்படும் நரம்பியல் அறிவியல் துறையின் முதன்மை விஞ்ஞானியாக செயல்பட்டு வருகிறார். குர்காவ்னில் இந்திய மூளை தொடர்பான ஆராய்ச்சி மையத்தை தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர்.

விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத் சார்ந்திருக்கும் துறை மூளை தொடர்பான நோய்களை ஆய்வு செய்து சிகிச்சை முறைகளை வெளியிடும் மூளை நரம்பியல் துறை ஆகும். நியூரோ ஜெனரேட்டிவ் நோய்கள் என்பவை மிகவும் ஆபத்தானவை. மூளையிலுள்ள நியூரான்களின் செயலிழப்பால் இந்த நரம்பியக்கடத்தல் நோய் ஏற்படுகிறது. நரம்பியல் பாதிப்பும் அதனால் ஏற்படுகின்ற சிக்கல்களும் நோய்வாய்ப்பட்டவர்களை இறுதியாக மரணத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். நியூரோ ஜெனரேட்டிவ் நோய்களின் பல்வேறு நிலைகளில் அவைகள் ஏற்படும் காரணங்களையும் சிகிச்சை முறைகளையும் உலகிற்கு அறிமுகம் செய்தவர் தான் விஞ்ஞானி விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத் (Vijayalakshmi Ravindranath).

இந்திய நரம்பியல் விஞ்ஞானி விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத் (Indian Neuroscientist Vijayalakshmi Ravindranath) - பார்க்கின்சன் (Parkinson's) நோய்

குறிப்பாக இரண்டு நோய்கள் தொடர்பான இவருடைய ஆராய்ச்சிகள் உலக பிரசித்தி பெற்றவை ஆகும். அவற்றில் முதன்மையானது அல்சைமர் நோய் (Alzheimer disease) ஆகும். அல்சைமர் நோய் (Alzheimer disease) என்பது ஒரு நரம்பியல் கடத்தல் நிலை ஆகும். இது பொதுவாக மிக மெதுவாக தொடங்கி படிப்படியாக மோசமடைந்து விடுகிறது. மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறி என்பது சமீபத்திய நிகழ்வுகளை நினைவில் கொள்வதில் ஏற்படும் சிரமம் ஆகும். நோய் அடுத்த நிலைக்குச் செல்லும் பொழுது மொழி பிரச்சனைகள், தான் நினைப்பதை வெளியில் எடுத்து சொல்ல இயலாமை, திடீர் மனநிலை மாற்றங்கள், சுய புறக்கணிப்பு என்கின்ற நடத்தை சிக்கல்களால் இந்த நோய் அடையாளப்படுத்தப்படுகிறது. ஒரு நபரின் இம்மாதிரியான நிலை வரும்பொழுது அவர்கள் பெரும்பாலும் குடும்பத்தினரால் கைவிடப்படுகிறார்கள். சமூகத்திலிருந்தே விடுபடுகிறார்கள். இந்திய சாலைகளில் சுற்றித்திரியும் பெரும்பாலான இவ்வகை நோயாளிகள் மிக மோசமான பராமரிப்பு காரணமாக பெருத்த ஆபத்தில் உள்ளவர்கள்.

இந்திய நரம்பியல் விஞ்ஞானி விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத் (Indian Neuroscientist Vijayalakshmi Ravindranath) - பார்க்கின்சன் (Parkinson's) நோய்

இவர்களுக்கான மருத்துவ முறையை கண்டறிந்ததில் டாக்டர் விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத்தின் பங்களிப்பு மிகவும் போற்றத் தகுந்ததாகும். அல்சைமர் நோயால் (Alzheimer disease) பாதிக்கப்பட்டவரின் மூளையில் முக்கியமான இடங்களில் மடிப்புகள் குறிப்பாக கார்டெக்ஸ் பகுதியில் முரட்டுத்தனமான இருகிய திட நிலையை அடைவதை விஞ்ஞானி ரவீந்திரநாத் கண்டுபிடித்து அறிவித்தார். இவ்வகை நோயாளிகளை எளிதில் அடையாளம் காண்பதற்காக COGNITIVE TEST என்று அழைக்கப்படும் அறிவாற்றல் சோதனை ஒன்றை அவர் அறிமுகம் செய்தார். இந்த வகை நோய் மரபணுக்களின் வழியாக பரம்பரை நோயாகவோ, சிறுவயதில் மோசமாக தலையில் அடிபட்டதாலோ, பொதுவாக நமக்கு ஏற்படுகின்ற மருத்துவ முறை மன அழுத்தங்களாலோ எந்த வயதிலும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் நமக்கு சொல்கின்றன.

இந்திய நரம்பியல் விஞ்ஞானி விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத் (Indian Neuroscientist Vijayalakshmi Ravindranath) - பார்க்கின்சன் (Parkinson's) நோய்

விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத் (Vijayalakshmi Ravindranath) அவர்களின் இரண்டாவது முக்கிய பங்களிப்பு பார்க்கின்சன் நோய் (Parkinson’s disease) எனும் நோய் தொடர்பாக அமைந்தது. பார்க்கின்சன் நோய் (Parkinson’s disease) என்பது மைய நரம்பு மண்டலத்தின் ஒரு வகையான நரம்பியல் கடத்தல் நோயாகும். இது உடலிலுள்ள மோட்டார் இயக்கங்கள் என்று அழைக்கப்படுகின்ற பொதுவான கை கால்களின் இயக்கத்தை பெரிய அளவிற்கு பாதிக்கிறது. ஒருவருக்கு ஏற்படுகின்ற நடுக்கம், பொது உடல் இயக்கத்தின் மந்தநிலை, சில உறுப்புகளின் விறைப்புத்தன்மை நடக்கும் போது ஏற்படுகின்ற சமநிலையில் சிரமம் ஆகியவை இந்த பார்க்கின்சன் நோய்னுடைய அறிகுறிகள் ஆகும். பார்க்கின்சன் நோய் (Parkinson’s disease) என்பது தூக்கமின்மை என்கிற நோயின் ஒருவகையான வெளிப்பாடு என்பது விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத்த்தின் கண்டுபிடிப்பு. தூக்க கோளாறுகள் ஏற்படும் பொழுதே நடத்தை மாற்றங்கள் தொடங்குகின்றன. அதிகமான போதை மருந்து பழக்கம் பொதுவாகவே தூக்கத்திற்கு மயக்க மருந்துகளை அதிகம் உட்கொள்ளுதல் மற்றும் வயல்வெளிகளில் தெளிக்கப்படுகின்றன பூச்சிக்கொல்லி மருந்துகளின் காரணமாகவும் இந்த நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பது அவரது நிலைப்பாடு.

எளிய நரம்பியல் சோதனைகள் மூலம் நியூரோ மெலனின் எம்ஆர்ஐ மற்றும் மருத்துவ இமேஜிங் என்கிற இரண்டு விஷயங்களை இந்தியாவில் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்த பெருமை விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத்தை சேரும். இந்த சோதனைகளின் மூலம் பார்க்கின்சன் நோய் (Parkinson’s disease) குறித்து உடனடியாக நாம் அறிந்து கொண்டுவிட முடியும். நோய்களின் நிலையை அறிந்து கொண்டவுடன் அவர்களுக்கான சிகிச்சை முறையை தொடங்குவது எளிதாகும். இந்த இரண்டு நோய்களுக்குமான இந்தியா முழுவதும் பல மையங்களை ஏற்படுத்தியவர் விஜயலட்சுமி ரவீந்திரநாத்.

இந்திய நரம்பியல் விஞ்ஞானி விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத் (Indian Neuroscientist Vijayalakshmi Ravindranath) - பார்க்கின்சன் (Parkinson's) நோய்

டாக்டர் விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத் (Vijayalakshmi Ravindranath) சென்னையில் 1953 ஆம் ஆண்டு பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் (B.Sc.) உயிரி வேதியியல் எடுத்து படித்தார். அதன் பிறகு ஆந்திரா பல்கலைக்கழகம் சென்று நரம்பியலில் முதுகலை பட்டமும் முனைவர் பட்டமும் வென்றார். 1981ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் உயர் ஆய்வுகளுக்காக அவர் இணைக்கப்பட்டார். தன்னுடைய உயர் ஆய்வுகளின் ஒரு மட்டத்தை முடித்துக் கொண்ட பிறகு அவர் பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் ஒரு உயர் ஆய்வாளராக தன்னை இணைத்துக் கொண்டார். அங்கு அவர் மனித மூளையின் வளர்சிதை மாற்றத்தினை ஆய்வு செய்தார். குறிப்பாக மனோவியல் மருந்துகள் மற்றும் சுற்றுசூழல் நச்சுகள் மீது கவனம் செலுத்தினார். வயல்வெளிகளில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் முதல் கொசுவின் பாதிப்பு குறைவதற்காக தெளிக்கப்படும் புகை மருந்துகள் மற்றும் ஆலைகளில் இருந்து வெளியேறுகின்ற நச்சு புகைகள் காரணமாக அந்த அந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு மன நோய் ஏற்பட கூடும் என்கிற அவருடைய அதிர்ச்சியான கண்டுபிடிப்பு இன்று உலகெங்கும் பேசப்படுகிறது.

1999 ல் இந்தியாவில் நரம்பியல் ஆய்வு குறித்த குழுக்களை ஒருங்கிணைத்து பெரிய ஆய்வுத் திட்டத்தை முன்மொழிந்து தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தை நிறுவ இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறைக்கு அவர் உதவினார். இந்திய அறிவியல் அகாடமி தேசிய அறிவியல் அகாடமி மற்றும் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமி ஆகியவற்றில் அவர் கௌரவ உறுப்பினராக உள்ளார். மூன்றாம் உலக அறிவியல் அக்கடமி என்று ஆஸ்திரேலியாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்ற ஒரு முக்கிய கல்வியகத்திலும் அவர் கௌரவ உறுப்பினர் ஆவார்.

விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத் (Vijayalakshmi Ravindranath) 1996 ஆம் ஆண்டு மருத்துவ அறிவியலுக்கான அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். இந்திய தேசிய அறிவியல் அகாடமி வழங்கும் K.D. பார்கவா பதக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் ஓம் பிரகாஷ் பாஸின் விருது, இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் எஸ் எஸ் பட்நாகர் விருது என்று பல விருதுகளை பெற்று இருக்கும் அவர் 2010 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்:

கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - V.BalakrishnanIndian theoretical physicis - ayesha era natarasan - https://bookday.in/

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : உலகம் அறிந்த உலோகவியல் மற்றும் பருப்பொருள் பொறியியல் விஞ்ஞானி கமனியோ சட்டோபாத்யாய் (Indian Materials Engineering Scientist Kamanio Chattopadhyay)


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *