உலகம் வியக்கும் இந்திய நரம்பியல் விஞ்ஞானி சந்தியா கௌஷிகா
தொடர் 68 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
சந்தியா கௌஷிகா நரம்பு செல்களுக்கு இடையே நடைபெறுகின்ற ஆற்றல் போக்குவரத்தைக் குறித்து ஆய்வு செய்கின்ற டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் கல்வி நிறுவனத்தின உயிரியல் துறையின் முதன்மை விஞ்ஞானி ஆவார். உலக அளவில் நரம்பியல் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஹோவர்ட் ஹியூஸ் மெடிகல் இன்ஸ்ட்டிட்யூட் என்னும் அமெரிக்க நிறுவனத்தின் சர்வதேச விருதைப் பெற்ற ஒரே இந்திய விஞ்ஞானி எனும் பெயர் பெற்றவர் அவர்.
சந்தியா கௌஷிகா சார்ந்திருக்கும் துறை நரம்பு செல்களுக்கு இடையே ஆற்றலை கடத்துகின்ற AXONAL TRANSPORT சிக்கலான நானோ அளவில் நடைபெறும் ஒருங்கிணைக்கப்பட்ட செல் போக்குவரத்து குறித்த துறையாகும். ஆக்ஸோபிளாஸ்மிக் டிரான்ஸ்போர்ட் என்று அழைக்கப்படுகின்ற அச்சு போக்குவரத்து முறை செல்களுக்கு இடையே ஆற்றலைக் கொண்டுபோய் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நாம் சாலைகளில் பொதுவாகக் கவனிக்கும் வண்டிகளை VEHICLES என்று அழைக்கிறோம்.. நரம்பு செல்களுக்கு இடையே ஆற்றலையும் தகவல்களையும் கொண்டு போய் சேர்க்கின்ற இந்த போக்கு வரத்தில் பயன்படக் கூடிய அமைப்பை அவர்கள் VESICLES என்று அழைக்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாத இந்த உலகம் நம்முடைய நரம்பு செல்களிடையே கண்ணிமைக்கும் நேரத்திற்கும் குறைவான ஒரு கால கட்டத்தில் அதி வேகமாகச் செயல்பட்டு ஒரு பாய்ச்சலின் மூலம் நமக்குத் தகவல்களை கடத்துகிறது. ஒரு நியூரான் சின்ஆப்டிக் வெசிகல்ஸ் என்பவை நரம்பிய கடத்திகளை சேமித்து வைக்கின்றன. அவை எங்கே சென்று எந்த செல்களில் அவற்றை ஒப்படைக்க வேண்டுமோ அந்த இடத்திற்கு நம்முடைய போக்குவரத்தில் இருக்கும் லாரிகளைப்போலவே அதிவேகமாக சென்று அந்த இடத்தில் அவற்றை ஒப்படைக்கின்றன.
இந்த இடம் அற்புதம் நிறைந்தது. இதை தான் சந்தியா கௌஷிகா ஆய்வுக்கு உட்படுத்தினார். 20 ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். இவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவது மிக மிகச் சிரமமாக இருந்தது. அவருடைய ஆர்வமெல்லாம் ஒரு வண்டி போக்குவரத்து போல் நடைபெறுகின்ற இந்த இடம் போக்குவரத்துக்கு பயன்படுகின்றன. இந்த வெசிகல்ஸ் எதனால் ஆனவை இந்த போக்குவரத்துக்கான ஆற்றல் இவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது, தன் பணி முடிந்ததும் இவை எங்கே போகின்றன, அவ்விதம் இவை ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்கு அல்லது குறிப்பிட்ட ஒரு இடத்திற்குத் தகவலையோ ஆற்றலையும் கடத்துகின்ற பொழுது தங்கள் பாதையை எப்படி இவை தீர்மானிக்கின்றன இப்படிப் பல கேள்விகளுக்கு சந்தியா கௌஷிகா விடைகளை கண்டுபிடித்தார்.

டிரில்லியன் கணக்கான மனித உடலின் செல்களுக்கு இடையே ஆற்றலைக் கொண்டு செல்லும் இந்த முக்கியமான அமைப்பை ஆய்வு செய்ய அவர் இன்சுலின் என்கிற மூலக்கூற்றை எடுத்துக்கொண்டார். இது மனிதனின் கணையத்தில் உற்பத்தியாகும் மிக முக்கியமான குளுகோஸ் ஆற்றல் ஆகும். இவற்றை எவ்வித இடர்பாடும் இன்றி செற்களுக்குக் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். ஆயிரக்கணக்கான வேலைகள் நடைபெறுகின்ற 24 மணி நேரமும் செயல்படுகின்ற ஒரு பெரிய இயந்திரம் போல் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத மனித செல்களுக்கு எரிபொருள் இந்த இன்சுலின். தீவிரமாக ஆய்வு செய்து இந்த இடத்தில் என்ன நடக்கின்றது என்பதை அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இந்த இடத்தில் லாரி போல இவற்றை எடுத்து ஏற்றிக் கொண்டு செல்பவை NEUROTRANSMITTERS ஆகும். ஆனால் இந்த இன்சுலின் மூலக்கூறுகளை ஒவ்வொன்றாகப் பிரித்து அதனை தான் உற்பத்தி செய்யும் ஒரு வகை கொழுப்பின் மூலம் மூடி போல அவற்றை உள்ளே வைத்துச் சிறு பொட்டலமாக முதலில் அவை மாற்றுகின்றன.
அமேசான் அல்லது நம்மளுடைய தபால் துறை தங்களுடைய பொருட்களை விநியோகம் செய்யும் ஆட்கள் மூலம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அவற்றைக் கொண்டு போயி டெலிவரி செய்வது போல இந்த பாக்கெட்டுகளை சுமந்து கொண்டு சரியான இடத்தை நோக்கி விரைகின்றன. வெசிகல்ஸ் என்றழைக்கப்படும் இவற்றின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் நியூரோட்ரான்ஸ்மிட்டர்களை சந்தியா கௌஷிகா தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தினார். இவை ஒரு இடத்திலிருந்து தொடங்கும் பொழுதே எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்திற்கு ஒரு சமிக்கை அனுப்பப் பட்டு விடுகிறது. அந்த குறிப்பிட்டசெல் இதன் வருகைக்காக காத்திருக்கிறது. எல்லாம் ஒரு நொடி ஏறத்தாழ 100 மடங்கு மிகச் சிறிய நேரத்திற்குள் நடந்து முடிந்துவிடுகின்றன.

நாம் வீட்டில் இருக்கும் ஒரு மிக்ஸியை இயக்கும் பொழுது அதற்கு மின்னாற்றலை வழங்குகின்றோம். அந்த மின்னாற்றல் உள்ளே இருக்கின்ற அந்த மோட்டாரை சுற்றுகிறது. சுழற்றிய சற்று நேரத்தில் நாம் உள்ளே அனுப்புகின்ற ஆப்பிள் பழ ரசமாக வெளியே கொட்டுகிறது. அதே போல நியூட்ரான்ஸ்மிட்டர்க்களை கடத்துவதற்கு வெசிகிள்ஸ் எந்தவகை ஆற்றலைப் பயன்படுத்துகின்றன என்பது குறித்து சந்தியா கெளசிகாவின் ஆய்வுக் கட்டுரைகள் பேசுகின்றன. அதற்கு நாம் ஒரு நொடிப்பொழுது என் 100 மடங்கு குறைவான நேரத்தில் அதிவேகமாக நடைபெறும் இந்த செயலை படிப்படியாக ஆராய வேண்டும். இங்கே மூலக்கூறு மோட்டார்கள் என்கின்ற ஒரு விஷயம் இருக்கிறது. இந்த மூலக்கூறு மோட்டார்களுக்கு SYNAPTIC VESICLES என்று பெயர் மிக சரியான திசையில் மிகச் சரியான இடத்தை நோக்கி இந்த பயணம் நடக்கும் வரை பிரச்சனை இல்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் இந்த போக்குவரத்தில் பழுது ஏற்படும் பொழுது பலவகையான நோய்களை மனிதன் எதிர்கொள்கிறான்.
இன்னொரு மிக முக்கியமான அதிசயம் உண்டு பரவசம் ஏற்படுத்தும் சந்தியா கௌஷிகாவின் ஆய்வு முடிவு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இப்படி இன்சுலின் போல எரி சக்தியை நம்முடைய செயல்களுக்கு எடுத்துக் கொண்டு போய் வழங்குகின்ற இந்த வெசிகிள்ஸ் திரும்ப திரும்ப பயன்படுத்தப் படுவதில்லை. நம்முடைய போக்குவரத்துக்கு பயன்படுகின்றன டிரக் அல்லது லாரிக்கும் இந்த வெசிகிள்ஸ் என்கிற செல் போக்குவரத்து வண்டிக்கும் முக்கியமான ஒரு வேறுபாடு உண்டு. ஒரு இன்சுலின் மூலக்கூற்றை ஏற்றிச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வெசிகிள்ஸ் தன் பணி முடிந்ததும் உடனடியாக தன்னை தானே அழித்துக் கொள்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு இன்சுலின் அணுவை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்புவதற்குப் புதிதாகத் திரும்பத் திரும்ப வெசிகிள்ஸ் கட்டமைக்கப்படுகின்றன என்பது எவ்வளவு பெரிய அதிசயம். இந்த போக்குவரத்து பாதிக்கப்படும் பொழுது பார்க்கின்சன் நோய் உட்பட பல வினோத நோய்கள் மனிதனைத் தாக்குகின்றன என்பது சந்தியா கௌஷிகாவின் அரிய கண்டுபிடிப்பாகும். இதனடிப்படையில் மருத்துவ உலகம் தற்போது இவ்வகை நோய்களுக்கான சிகிச்சை முறைகளைப் புதிதாகக் கண்டுபிடித்து அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தியா கௌஷிகா மும்பையை சேர்ந்தவர். மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய இளங்கலை பட்டத்திற்கு உயிரியலை எடுத்துப் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு இருக்கிறது. உயிரி தொழில் நுட்பத்தை எடுத்துக் கொண்டார். அமெரிக்காவின் போஸ்டன் பகுதியில் அமைந்திருக்கும் பிரண்டிஸ் பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு அங்கிருந்து செயிண்ட் லூயிஸ் நகருக்கு வாசிங்டன் பல்கலைக் கழகத்திற்குச் சென்று ஆறு ஆண்டுகள் கடும் பயிற்சியில்nஈடுபட்டார். இந்தியாவுக்குத் திரும்பி டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தில் இணைவதற்கு முன் பெங்களூரிலுள்ள தேசிய உயிரியல் கல்வியகத்தில் சில ஆண்டுகள் அவர் இணைப் பேராசிரியராக பணியாற்றினார்.

தன்னுடைய பள்ளிக் கல்வி காலத்தில் தான் படித்த பள்ளியின் நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்த மேரி கியூரியின் வாழ்க்கை வரலாறு என்கிற புத்தகம் தன் வாழ்க்கையை அறிவியலை நோக்கி இழுத்து வந்ததாக சந்தியா கௌஷிகா சமீபத்தில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆரம்பக் காலத்திலிருந்தே தன்னுடைய பெற்றோர்கள் அறிவியல் சஞ்சிகைகளையும் புத்தகங்களையும் தனக்கு வாங்கி கொடுத்து வாசிக்க வைத்து அறிவியல் ஆர்வத்திற்குத் துணையாக நின்றனர் என்பது அவருடைய பெருமையான செய்தி ஆகும். இந்திய நரம்பியல் துறை விஞ்ஞானியின் அறியக் கண்டுபிடிப்புகள் உலக அங்கீகாரம் பெற்று இருப்பது நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் அறிந்த இந்திய கடல் ஆய்வாளர் அதிதி பந்த்
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


உலக அளவில் நரம்பியல் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஹோவர்ட் ஹியூஸ் மெடிகல் இன்ஸ்ட்டிட்யூட் என்னும் அமெரிக்க நிறுவனத்தின் சர்வதேச விருதைப் பெற்ற ஒரே இந்திய விஞ்ஞானி சந்தியா கௌசிகா அவர்களின் கண்டுபிடிப்பு உலக அளவில் சிறப்பு வாய்ந்தது. மேரி கியூரி அவர்களின் வாழ்க்கை வரலாறு அவருக்கு உந்துதலாக இருந்திருக்கின்றது.
நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்க்களை கடத்துவதற்கு வெசிகிள்ஸ் எந்தவகை ஆற்றலைப் பயன்படுத்துகின்றன என்பது குறித்து சந்தியா கெளசிகாவின் ஆய்வுக் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தது.
இவரை அறிமுகம் செய்த ஆயிஷா நடராசன் ஐயா அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்.