இந்திய நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர், அறிஞர் வெங்கி ராமகிருஷ்ணன் (Indian Nobel Laureate and Structural Biologist Dr.Venki Ramakrishnan)

இந்திய நோபல் அறிஞர் வெங்கி ராமகிருஷ்ணன் (Dr.Venki Ramakrishnan)

இந்திய நோபல் அறிஞர் வெங்கி ராமகிருஷ்ணன் (Dr.Venki Ramakrishnan)
இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100 நிறைவு தொடர்

வெங்கடராமன் ராமகிருஷ்ணன் இந்திய கட்டமைப்பு உயிரியலாளர் ஆவார்.. 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் செயல்பாடு குறித்த கண்டுபிடிப்பிற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.. லண்டன் நகரில் உள்ள உலக பிரசித்திபெற்ற அறிவியல் நிறுவனமான ராயல் சொசைட்டி அமைப்பின் 62 ஆவது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாபெரும் அறிஞர் வெங்கி ராமகிருஷ்ணன்.

விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணன் 1952 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் பிறந்தார்.. அவருடைய தாயார் அப்போது அங்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.. ஆர் ராஜலட்சுமி அம்மையார் உலகம் போற்றும் உயிர் வேதியலாளராக பின்னாட்களில் ஊட்டச்சத்து நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானியாக அறியப்பட்டார்.. தந்தை பேராசிரியர் சி வீ ராமகிருஷ்ணன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கொஞ்ச மாதங்கள் பணிபுரிந்தார் அவரும் ஒரு உயிரிவேதியியல் விஞ்ஞானி ஆவார்.. வெங்கி ராமகிருஷ்ணன்னுக்கு ஒரு சகோதரி இருக்கிறார் அவர் கேம்பிரிட்ஜில் நுண்ணுயிரியலாளர் எனும் புகழ்பெற்ற லலிதா ராமகிருஷ்ணன் ஆவார்.

இந்திய நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர், அறிஞர் வெங்கி ராமகிருஷ்ணன் (Indian Nobel Laureate and Structural Biologist Dr.Venki Ramakrishnan)

பிறந்த சில மாதங்களில் குடும்பம் பரோடாவுக்கு குடி பெயர்ந்தது அங்கு பள்ளி கல்வியை மேரி கான்வென்டில் முடித்து.. அவரது தந்தை பணிபுரிந்த பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டத்திற்கு ராமகிருஷ்ணன் இயற்பியலை எடுத்துக் கொண்டார்..1971 ஆம் ஆண்டில் அவர் இயற்பியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார் பெர்க்லி இயற்பியல் பாட கட்டமைப்பு மற்றும் இயற்பியல் மீதான ரிச்சர்ட் ஃபைன்மேன் விரிவுரைகள் ஆகிய நூல்களை நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்து அறிவியல் ஆய்வுகளின் பக்கம் வந்தார்.. பட்டப் படிப்பை முடித்த உடனேயே அமெரிக்காவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது ஓஹியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் வரை முடித்துவிட்டார்..

ஓஹியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் நாட்டம் செலுத்தி கொண்டிருந்த நாட்களில் அவருக்கு உயிரியலின் பால் ஈர்ப்பு ஏற் பட் டது.. இதனைத் தொடர்ந்து நாம் அவருடைய வாழ்க்கையை வாசிக்கும் போது பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.. அவர் முதலில் இருந்து உயிரியலை படிக்கத் தொடங்கினார்.. உயிரியல் பாடத்தில் ஒரு இளம் அறிவியல் பட்டத்தையும் முதுகலை பட்டத்தையும் முடித்தார் அப்போது Yale பல்கலைக்கழகத்தில் பீட்டர் மோர் என்பவரோடு தன் ஆய்வு பணியை தொடங்கினார் தன்னுடைய முந்தைய முனைவர் பட்டப்படிப்புக்கு பிறகு அவர் அமெரிக்காவில் உள்ள சுமார் 50 பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்த போதிலும் ஆரம்பத்தில் அவருக்கு ஒரு உதவி பேராசிரியர் பதவி கூட கிடைக்கவில்லை..

ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் வேலை இல்லாமல் அவர் தவித்தார்.. ஆனால் ஒருபோதும் அவர் தன் நம்பிக்கையை இழக்கவில்லை உயிரி வேதியியல் தொடர்பான அனைத்து புத்தகங்களையும் அவர் வாசிக்க தொடங்கினார்.1983 முதல்1995 வரை ரூக் ஹெவன் தேசிய ஆய்வகத்தில் ஒரு குறைந்தபட்ச பணியாளராக இணைந்துகொண்டார்..

நோபல் பரிசு நோக்கிய தன்னுடைய ரைபோசோம்ங்களின் ஆய்வு எப்படி தொடங்கியது என்பதை தன்னுடைய ஜீன் மெஷின்..GENE MACHINE என்னும் நூலில் விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணன் விரிவாக விவரிக்கிறார்.. இந்த புத்தகம் நம்முடைய நாட்டின் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் பாடமாக வைக்கப்பட வேண்டும்..1980 ஆம் ஆண்டு ஏல் பல்கலைக்கழகத்தில் அவருடைய கல்வி ஆண்டுகளினூடாக அங்கிருந்த செய்தி பலகையில் ஒரு சிறிய அறிவிப்பினை அவர் காண நேர்ந்தது. அது ஆடா யோநாத் எனும் ஒரு அம்மையாரின் உரை குறித்த செய்தியாக இருந்தது.. அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டபடி.. அன்று மாலை வேறு ஏதும் வேலையில்லாததால் அந்த உரையை கேட்பது என்று முடிவு செய்து அந்த அரங்கத்திற்கு வழக்கம் போல் கால தாமதமாக அவர் சென்றார்..

இந்திய நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர், அறிஞர் வெங்கி ராமகிருஷ்ணன் (Indian Nobel Laureate and Structural Biologist Dr.Venki Ramakrishnan)

எளிதாக அவருக்கு அங்கு உட்கார இடம் கிடைத்தது ஆடா யோநாத் பெர்லின் நகரில் இருந்து வந்திருந்தார் ஒரு அறிமுகத்திற்கு பிறகு அவர் தான் மேற்கொண்டு வரும் மிக முக்கியமான ஆய்வை குறித்து அந்த சிறு கூட்டத்திற்கு விவரிக்க தொடங்கினார். மூலக்கூறுகளின் படிவங்களை எப்படி உருவாக்க வேண்டும் என்பது குறித்து ஆரம்பத்தில் அவர் விவரித்தார். பிறகு மனித உடலிலுள்ள அதிசயிக்கத்தக்க மூலக்கூறான ரைபோசோம் கள் மரபணுக்களில் உள்ள செய்திகளை சரியாக உள்வாங்கிக்கொண்டு எப்படி புரதங்களை தயாரிக்கின்றன என்பது குறித்த தன்னுடைய ஆய்வை விவரித்து படிகங்களை உருவாக்கும் முறையையும் அதில் உள்ள சிரமங்களையும் தன்னுடைய ஆய்வு எந்த இடத்தில் எதனால் முட்டுக்கட்டை போடப்பட்டு கடினப் பாதையில் தொடருகிறது என்பதையும் அவர் விவரித்தார்..

வெங்கி ராமகிருஷ்ணன் உரை முடிந்து வெளியில் வரும் பொழுது இந்த உரை குறித்து தன்னுடைய சக மாணவர்களோடு வழக்கம்போல் விவாதித்துக் கொண்டு வந்தார்.. ஆடா யோநாத் தயாரிக்கின்ற படிகங்கள் இன்னும் சற்று சிறப்பாக இருந்தால் மிக எளிதில் அவர் நினைக்கின்ற வெற்றியைப் பெற முடியும் என்று தோன் றி யது.. அவற்றை எப்படி தயாரிப்பது என்பது குறித்து அவருக்கு ஒரு யோசனை தோன் றி யது.. ஆனால் விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணன் எழுதுகிறார் அன்று அவர் ஒருபோதும் கருதவில்லை.. இந்த விஷயம் அடுத்த மூன்று பத்தாண்டுகள் அவருடைய தீவிரமான தேடலாக மாறப்போகிறது என்பதை யோ அல்லது ஒரு டிசம்பர் மாதத்தில் சுவீடனில் தன்னோடு சேர்ந்து ஆடா யோநாத் நோபல் பரிசு பெற போகிறார் என்பதையோ அவர் அப்போது சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை.. என்று எழுதுகிறார்!

இது எப்படி சாத்தியமானது? அவருடைய ஆய்வின் அடிப்படை என்ன? தேடல் தான் ஒரு மனிதனின் அடிப்படையான மிக முக்கிய படிநிலை ஆகும்.. ஆடா யோநாத் உரையைக் கேட்ட பிறகு செல்களின் உயிரியக்கத்தின் உறுதியான நோக்கங்களின் கட்டமைப்பு குறித்து தீவிர தேடலில் அவர் ஈடுபடத் தொடங்கினார்.. ஆடாயோநாத் மற்றும் அவரது குழு அடைய முடியாத ஒன்றை வெங்கி ராமகிருஷ்ணன் தனி ஒருவராக எப்படி அடைந்து காட்டினார்.. சொன்னால் நம்புவது கஷ்டம்.. வெங்கி ராமகிருஷ்ணன் கடந்து வந்த பாதை அப்படி.. உயிரியலை மிகவும் விரும்பி மரபணுவியலின் அடிப்படை தளங்களில் அவருடைய தேடல் அமைந்திருந்தது அதேசமயத்தில் ஒளிஇயல் என்கிற பிரம்மாண்டத்தின் இயற்பியல் அவர் ரத்தத்தோடு கலந்து இருந்தது.. அறிவியலில் ஒரு அபூர்வப்பிறவியாக அவர் இருந்ததற்கு அதுதான் காரணம்.

ஒரு மூலக்கூறை யாராலுமே நேரடியாக காண முடியாததன் காரணம் என்ன.. தன்னுடைய ஜீன் மெஷின் புத்தகத்தில் அவர் அழகாக அதை விவரிக்கிறார்.. அணுக்களின் கூட்டாக மூலக்கூறுகள் விளங்குகின்றன.. அவற்றை காண்பது என்பது ஒளி என்பதன் அடிப்படை பண்புகள் ஒன்றோடு தொடர்புடையது. ஒளி ஃபோட்டான்கள் என்கிற அடிப்படைத் துகள்களால் ஆனது என்பதை அவர் க்வாண்டம் இயற்பியல் வழியே அறிந்திருந்தார்.. ஒளி துகள் ஆகவும் அலையாகவும் ஒரே சமயத்தில் இரட்டை தன்மை கொண்டதாக உள்ளது. ஒளியினுடைய அலைப் பண்பினால்தான் ஆடிகள் நுண்ணோக்கிகள் இயங்குகின்றன ஆனால் அதே பண்பு தான் நம்மை துல்லியமாக ஒரு அளவிற்கு மேல் உள்சென்று அணுக்களை பார்க்க விடாமல் செய்கிறது.. இதனால் தான் ரைபோசோம் அமைப்பை காண்பது கடினமாக இருந்தது.. ஒளி ஒரு சிறு துவாரம் வழியே செல்லும்பொழுது அல்லது ஒரு பொருளின் முனைகளை கடக்கும் பொழுதும் அலைவளைவு எனப்படும் முறை இயலுக்கு உட்படுகிறது.

இந்திய நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர், அறிஞர் வெங்கி ராமகிருஷ்ணன் (Indian Nobel Laureate and Structural Biologist Dr.Venki Ramakrishnan)

இயல்பு நிலையில் பொதுவாக நாம் இதை உணர்வதில்லை என்றாலும் இரண்டு மிக நுண்ணிய தனித்தனி பொருட்கள் ஒன்றை ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தால் அவைகளின் பிம்பங்களை ஒளி ஒரு பொருள் போலவே நமக்கு காட்டுகிறது.. அவற்றை நுண்ணோக்கியில் காணும் ஒருவருக்கு பெரிய தெளிவில்லாத ஒற்றை பிம்பமே தெரிய வருகிறது 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியின் இயற்பியலாளரான ஏர்னஸ்ட் அபே அப்படி சேர்ந்து இருக்கின்ற பிம்பங்களை தனித்தனியாக கண்டுணர அந்த இரு பொருட்களும் குறைந்த பட்சம் ஒளியின் அலைநீளத்தின் சரிபாதி அளவில் ஆவது இடைவெளிவிட்டு இருக்க வேண்டும் என்பதை கண்டறிந்தார் இயற்பியலின் மிக நுணுக்கமான இந்த விஷயத்தை உள்வாங்கிக் கொண்ட விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணன் இரண்டு பொருட்கள் தனித்தனியானவை என்று பிரித்து உணரப்படும் நுண்ணிய தொலைவை தெளிவு வரம்பு என்று அழைத்தார்

இரண்டு பிரம்மாண்ட துறைகளையும் ஒன்றிணைகின்ற ஒரு ஒற்றை ஒளி போல வெங்கி ராமகிருஷ்ணன் செயல்பட்டார் எக்ஸ் கதிர்கள் ஒளியைப் போலவே நடந்துகொள்கின்றன உண்மையில் அவை துகள் வடிவில் உள்ளனவா அல்லது அலையா என்பது உட்பட யாருக்குமே தெளிவில்லாத ஒரு காலகட்டத்தில் படிக கல்லின் ஒவ்வொரு அணுவும் எங்கே உள்ளது என்பதை கண்டறியும் வித்தையை வெங்கி ராமகிருஷ்ணன் அறிந்து செயலில் இறங்கினார்

ரைபோசோம் என்பது அனைத்து உயிரணுக்களிலும் காணப்படும் மைக்ரோ மாலிக்குலர் இயந்திரங்கள் ஆகும் அவை உயிரியல் புரதத் தொகுப்பை உருவாக்குகின்றன மெசஞ்சர் RNA என்பவைகளில் இருந்து தனக்கான சிமிக்கைகளை பெற்று ரைபோசோம்கள் அமினோ அமிலங்களை உற்பத்தி செய்கின்றன. அமினோ அமிலங்களை மெசஞ்சர் ஆர் என் ஏ மூலக்கூறுகளின் மூலம் குறிப்பிட்ட வரிசையில் ஒன்றாக இணைத்து பாலி பெப்டைட் என்றழைக்கப்படும் சங்கிலி தொடரை உருவாக்குகின்றன

ரைபோசோம் கள் இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்டிருக்கின்றன சிறிய மற்றும் பெரிய ரைபோசோம்.. துணைக் குழுக்கள் ஒவ்வொரு துணை குழுவுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரைபோசோமால் ஆர் என் ஏ மூலக்கூறுகள் மற்றும் புரதங்களை உருவாக்குகின்றன.. இப்படிப்பட்ட அது வரையில் மனிதனுக்கு தெரியாத அற்புதங்களை தன் ஆய்வுக் கட்டுரைகளில் முன்வைத்தார் வெங்கி ராமகிருஷ்ணன்.. ரைபோசோம் ஒரு சிக்கலான செல்லுலார் இயந்திரம் இது பெரும்பாலும் ஆர் என் ஏ வாக செயல்படுகிறது.. இது தனித்துவமான புரதங்களால் ஆனது. ரிபோசோமல் புரோட்டின்ங்கள் மற்றும் RNA கள் வெவ்வேறு அளவுகளில் இரண்டு வேறுபட்ட ரைபோசோம்ளாக அமைக்கப்பட்டிருக்கின்றன.. ரைபோசோம்ங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த வெங்கி ராமகிருஷ்ணன் அவர்களின் கண்டுபிடிப்புகளின் மூலம் நோய் தடுப்பு முறைகளில் இருந்து மனிதனின் சத்து செயல்பாடு வரை பல்வேறு விஷயங்களில் நம்முடைய பார்வை மாறியது.. அந்த வகையில் உலகை மாற்றிய மாபெரும் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணன் பங்களிப்பு அமைந்தது.

1999 ஆம் ஆண்டு வெங்கி ராமகிருஷ்ணன் ஆய்வகம் ரைபோசோ மின் 30S அலகு மற்றும் அதன் மூலக்கூற்று கட்டமைப்பை பல நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உடன் ஒப்பிட்டு தீர்மானித்து புரத உயிரியக்கத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்தது..2007 ஆம் ஆண்டு அவர் முழு ரைபோசோம்ன் அணு கட்டமைப்பையும் அதன் டி- ஆர் என் ஏ மற்றும் எம்- ஆர் என் ஏ… அமைப்புகளுடன் வெளியிட்டு உலகத்தின் கவனத்தை பெற்றார்.. இயற்பியலையும் உயிரியலையும் ஒன்றிணைக்க கூடிய கிரயோஜெனிக் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பி என்கிற ஒரு விஷயத்தையும் அவர் உலகிற்கு அறிமுகம் செய்திருந்தார். இது குறித்த அவருடைய பிரபலமான ஆய்வறிக்கை நேச்சர் இதழில் வெளிவந்தது

இந்திய நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர், அறிஞர் வெங்கி ராமகிருஷ்ணன் (Indian Nobel Laureate and Structural Biologist Dr.Venki Ramakrishnan)

2009 ஆம் ஆண்டு இந்த கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.. உலகப்பிரசித்தி பெற்ற மாபெரும் அறிஞர்களில் ஒருவரான வெங்கி ராமகிருஷ்ணன் லண்டனின் ராயல் சொசைட்டியின் தலைவராக 2015 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அவர் 2020 வரையில் அந்த பதவியை வகித்தார். தன்னுடைய பதவி காலத்தின் இறுதி ஆண்டில் கோவிட் 19 தொற்றுநோய் குறித்த உலக அளவிலான ஆதிக்கத்தின் பொழுது மிக அற்புதமான சில கண்டுபிடிப்புகளின் ஆய்வரங்கு ராயல் சொசைட்டி அரங்குகளில் நடப்பதை உறுதி செய்தவர்.

உலக அளவிலான அறிவியல் அரங்கங்களில் தன் கருத்துகளை வெளிப்படையாக பேசுவார் என்று ராமகிருஷ்ணன் அறியப்படுகிறார்.. சர்வதேச காலநிலை அறிவியல் ஒப்பந்தமொன்றில் இருந்து இங்கிலாந்து வெளியேறப் போகிறது என்பதை அறிந்த பொழுது அதைக் கடுமையாக விமர்சித்தார்.. அறிவியல் தொடர்பான ஒப்பந்தம் ஒட்டுமொத்த உலகத்தின்.. ஐரோப்பாவின் நலன்களுக்காகவே உள்ளது மற்ற விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் காரணமாக இணை சேதம் ஏற்படக்கூடாது காலநிலை மாற்றம் மனித நோய் தடுப்பு உணவு பாதுகாப்பு போன்றவற்றில் உலகளாவிய ஒற்றை சிந்தனையாக அறிவியல் உருவெடுக்க வேண்டும் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார்.

வெறும் அறிவியல் கண்டுபிடிப்பாளராக நோபல் பரிசு பெற்றவராக ஒதுங்கிக்கொள்ளாமல் சமூக சிந்தனையும் பகுத்தறிவு கொள்கைப்பிடிப்பும் அதே சமயத்தில் உலகளாவிய பொது அமைதி குறித்த தனக்கென்று ஒரு சரியான நிலைப்பாட்டையும் கொண்டவர் வெங்கி ராமகிருஷ்ணன்.

வெங்கி ராமகிருஷ்ணன் பல்வேறு விருதுகளின் சொந்தக்காரர்..2002 ஆம் ஆண்டு அவர் ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் அமைப்பின் உறுப்பினராக தேர்வு பெற்றார் 2003 ஆண்டில் ROYAL கல்வி இயக்கத்தின் உறுப்பினராகவும் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அக்கடமியின் வாழ்நாள் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார் 2007 ஆண்டில் அவருக்கு மருத்துவத்திற்கான லூயிஸ் ஜடேட் பரிசு அறிவிக்கப்பட்டது.2010 ஆண்டில் இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது

ஆண்டிற்கு இரு முறையாவது இந்தியாவிற்கு வந்து நம்முடைய மக்கள் அறிவியல் அரங்கங்களில் உரையாற்றுவதை தன் கடமையாக அவர் செயல்படுத்தி வருகிறார் இந்திய தேசிய அறிவியல் அகாடமி முதல் மருத்துவ அறிவியல் அக்கடமி வரை பலவற்றில் அவர் கௌரவ உறுப்பினராக உள்ளார் பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் முட்டாப் பல்கலைக்கழகம் கோஹிமா பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் கௌரவப் பட்டங்கள் பெற்றவர். உலகத்தின் சிந்தனைப் போக்கையே மாற்றி அமைத்த அற்புத கண்டுபிடிப்பு ஒன்றின் வித்தகராக உலகெங்கும் போற்றப்படும் வெங்கி ராமகிருஷ்ணன்.. அந்த மாமனிதரால் இந்தியாவுக்கு பெருமை.


அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்

இது ஆயிஷா இரா நடராசன்..

முதலில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி🙏🙏

ஜூலை 31 ஆம் நாள் இந்த குழு அமைக்கப்பட்டது..

இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

தொடர் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது..

இன்று நவம்பர் 8ஆம் நாள்.. வெற்றிகரமான நூறாவது கட்டுரை வெளிவந்து விட்டது.

இந்த நூறு நாட்கள் உங்களோடு எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்.. இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் மேதைகளான.. அந்த நூறு அற்புத விஞ்ஞானிகளோடு எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்..

இவற்றிற்கு நான் என்ன வகையில் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று தெரியவில்லை..

இந்த கட்டுரையை வெளியிட்ட புக் டே டாட் இன்.. bookday. in இணைய வெளியில்.. ஒவ்வொரு நாளும் என்னோடு.. இந்தக் கட்டுரைகளை வெளியிடுவதில் கடுமையாய் உழைத்த.. தோழர் டயானா உள்ளிட்ட பலருக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்..

இந்தத் தொடரை எழுதுவதற்கு என்னை ஊக்கப்படுத்திய தோழர் க.நாகராஜன்,

பல்வேறு முறைகளில் எனக்கு ஆலோசனைகள் வழங்கிய.. விஞ்ஞானி முனைவர் T V வெங்கடேஸ்வரன், மாநில கல்வித்துறை உயர் அதிகாரிகள், இனிய தோழர் இஸ்ரோ ராஜசேகர், பெங்களூரின் இந்தியன் இன்ஸிடியூட் ஆப் சயின்ஸ் நண்பர்கள்.. கலாநிதி சூரிய தீபன்.. ராம்.. பவானி ராவ்.. சேலம் முனைவர் பால சரவணன்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினுடைய செயலாளர் தோழர் பாதுஷா.. எங்களில் மூத்த அறிவியல் அறிஞர் அணுவியல் விஞ்ஞானி பி கோபாலன் சார்.. சென்னை ஐஐடி பேராசிரியர் ஹேம பிரபா.. அறிவியல் பலகையின் ஸ்ரீகுமார்.. இஸ்ரோ சசிகுமார்.. சோலார் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன்.. சுட்டி கணேசன் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி.

இந்தத் தொடர்பில் இடம் பெறாமல் போன பல நல்ல விஞ்ஞானிகள் உண்டு.. விரைவில் அவர்களைக் குறித்தும் தனியாக நான் எழுத வேண்டி இருக்கும்.. அவர்கள் தொழில்நுட்பம் சார்ந்தவர்கள்.. கணிதவியல் சார்ந்தவர்கள்.. அவற்றை அறிவியலோடு வைத்து நான் குழப்பவில்லை..

கல்லூரிகளில் இயற்பியல் வேதியியல் தாவர இயல் விலங்கியல்.. உலோகவியல்.. என்று அடிப்படையான அறிவியல் பாடங்களை எடுத்து படித்தவர்களில் சாதனையாளர்களை நான் இந்த 100 நாட்கள் அறிமுகம் செய்துள்ளேன்..

அதிகாலையில் இந்த கட்டுரைகள் முதலில் மூவாயிரம் பேருக்கு பகிரப்பட்டது.. இந்த 3000 பேரில் நீங்களும் ஒருவர்.. உங்களைத்தான் நான் முழுமையாக நம்பி இருந்தேன்.. என் நம்பிக்கை வீண் போகவில்லை.. ஆயிரக்கணக்கானவர்களுக்கு இந்த 3000 பேர்.. இந்திய அறிவியலின் உண்மையான போராளிகளை பகிர்ந்து உதவி இருக்கிறார்கள்..

தொடர் எழுதத் தொடங்கும் பொழுது இருந்த இரண்டு விஞ்ஞானிகள்.. இயற்பியல் வானியல் வல்லுநர் பத்மஸ்ரீ பிகாஸ் சின்ஹா.. துகள் இயற்பியலாளர் பத்மஸ்ரீ ரோகினி கார்ட்போலே.. தற்போது நம்மிடையே இல்லை.. இறுதி நாட்களில் தன்னைப் பற்றி நான் எழுதியதை வாசித்து விட்டு தான் அவர்கள் இந்த பூ உலகை விட்டு மறைந்தார்கள்..

அவர்களுக்கு என்னுடைய ஆத்மார்த்தமான அஞ்சலியை உங்கள் அனைவரின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்..

நம் தொடரில் இடம்பெற்ற (நேரமோ என்னமோ தெரியவில்லை )பலர் விருது பெற்றார்கள்.. அதற்காக எக்ஸ் வலைதளங்களில் எனக்கு நன்றி கூறிய அவர்கள் அனைவருக்கும் நான் என்ன கைமாறு செய்வேன்..

முத்தாய்ப்பான நோபல் அறிஞர் வெங்கடராமன் ராமகிருஷ்ணனோடு நூறாவது கட்டுரையை நான் நிறைவு செய்கிறேன்..

இந்த விஞ்ஞானிகளை குறித்த செய்திகளை திரட்டுவதற்கும்.. பல்வேறு வகைப்பட்ட இந்த துறைகளை புரிந்து கொள்வதற்கும்.. அவற்றைப் பற்றிய நுணுக்கங்களை தவறின்றி பதிவு செய்யவும்.. உறக்கமற்ற இரவுகளையும்.. தேடல்மிக்க பகல் பொழுதுகளையும்.. நான் கழித்ததை விட பெருமையானது.. இந்த விஞ்ஞானிகள் தங்களுடைய துறையில்.. அற்புதங்களை சாதித்தது என்று கருதுகின்றேன்.

நூறு அறிவியல் அறிஞர்களை அறிமுகம் செய்தேன்.. என்று எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் அங்கீகாரங்களை விட..

இந்த அறிஞர்கள நம்முடைய மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு இந்த மாணவர்கள் அறிவியலை தங்களுடைய பட்டப் படிப்பிற்கு ஒரு பாடமாக எடுக்க ஊக்குவிக்கப்பட்டால் அதிகம் நான் மகிழ்ச்சி அடைவேன்..

பல கல்லூரிகளில் மூடப்பட்ட இயற்பியல் வேதியியல் கணிதவியல் துறைகள் மீண்டும் திறக்கப்பட்டால்.. இந்தத் தொடர் ஏதோ ஒரு வகையில் சிறு அளவில் உதவி இருக்கிறது என்று நான் எடுத்துக் கொள்வேன்.. 🙏🙏

இந்தியாவில் அறிவியல் அறிஞராக ஆய்வுகளில் ஈடுபடுவது என்பது மிகப்பெரிய போராட்டமாகும்.. இன்னும் ஏராளமான இளைஞர்கள் அதில் இணையும் பொழுது.. இந்திய அறிவியல் இணையற்ற உலகம சாதனைகளை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த தொடர் குறித்து தங்கள் கருத்தை www.bookday.in ல் எழுதுங்கள். தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களும், விமர்சனங்களும் புத்தகமாக வரும்போது (தங்கள் பெயருடன்) இணைத்து வெளியாகும்.

வேறு ஒரு நாளில் வேறு ஒரு தொடரோடு சந்திப்போம்..

அனைவருக்கும் நன்றி

கட்டுரையாளர்:

கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - V.BalakrishnanIndian theoretical physicis - ayesha era natarasan - https://bookday.in/

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: இந்தியாவின் கால்நடை மருத்துவயியல் விஞ்ஞானி டாக்டர் விநாயகமூர்த்தி பாலமுருகன் (Dr. Vinayagamurthy Balamurugan)


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 5 Comments

5 Comments

  1. srikumar Balakrishnan

    சார், வாழ்த்துகள். மிகவும் அற்புதமான பணி உங்களுடையது. 100 தற்கால விஞ்ஞானிகளை கண்டறிந்து அவர்களை தமிழ் சமூகத்திற்கு அறிமுகப்படுத்திய உங்களுடைய அறிவியல் ஈடுபாடு வியக்க வைக்கிறது. இந்தத் தொடர் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. புத்தகமாக வெளிவருவது அவசியம். நன்றி. பா.ஶ்ரீகுமார்

  2. S.Harikrishnan

    1952 ஆம் ஆண்டு எங்கள் கடலூர் மாவட்டத்தின் உலக விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணன் பிறந்தார். எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமையாக இருக்கிறது. 2007 ஆம் ஆண்டு அவர் முழு ரைபோசோம்ன் அணு கட்டமைப்பையும் அதன் டி- ஆர் என் ஏ மற்றும் எம்- ஆர் என் ஏ… அமைப்புகளுடன் வெளியிட்டு உலகத்தின் கவனத்தை பெற்றார்.. இயற்பியலையும் உயிரியலையும் ஒன்றிணைக்க கூடிய கிரயோஜெனிக் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பி என்கிற ஒரு விஷயத்தையும் அவர் உலகிற்கு அறிமுகம் செய்து நோபல் விருது வென்றவர் பெருமதிப்புக்குரிய நமது ஒப்பற்ற இந்திய விஞ்ஞானி.

    பெரும்தொற்று காலத்தில் ராயல் சொசைட்டியின் தலைவராக தன்னுடைய பதவி காலத்தின் இறுதி ஆண்டில் கோவிட் 19 தொற்றுநோய் குறித்த அற்புதமான சில கண்டுபிடிப்புகளின் ஆய்வரங்கு ராயல் சொசைட்டி அரங்குகளில் நடப்பதை உறுதி செய்தவர்.

    இவர் எழுதிய gene machine நூல் எனது ஆசிரியர் பெருந்தகை முனைவர் ஆயிஷா நடராசன் ஐயா அவர்கள் மூலம்தான் அறிந்தேன்.

    கடந்த நூறு நாட்களில் நூறு இந்திய அறிவியல் விஞ்ஞானிகள் குறித்து ஒருநாளும் தவறாமல் வழங்கினார்.
    தொடர்ந்து பணியில் இருப்பவர்கள் கூட ஏதோ சில தவிர்க்க இயலாத சில காரணங்களால் அன்றைய தினத்தில் தொடர் பணியை செய்யாமல் விட்டுவிடுவார்கள்.

    தான் வகிக்கும் பணியில், குடும்பத்தில், எத்தனை இடையூறுகள் இருந்திருக்கும், ஆனாலும் இந்திய அறிவியல் விஞ்ஞானிகள் குறித்து அவர்களின் ஆர்வம், தேடல், அற்பணிப்பு, தியாகம் போன்றவற்றை மாணவர்கள் மற்றும் அனைவரும் அறியும் வண்ணம் மிகச்சிறப்பாக எழுதியது ஓர் மிகப்பெரிய அறப்பணி.

    பல கல்லூரிகளில் அறிவியல் துறைகள் மூடப்பட்டது குறித்து யாராவது கவலைப் பட்டார்களா…கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது என்றாலும் அதற்கான தீர்வாக,
    தன்னாலான முயற்சியை, கல்வியாளர்கள், மாணவர்கள் மத்தியில் மேற்கொள்வோம் என்று பணியினூடே இரவு,பகல்,இடையூறுகள் பாராது நூறு அறிவியல் விஞ்ஞானிகள் குறித்து எழுதியிருப்பது என்பது எந்த அளவிற்கு மாணவர்கள் மீதும் அறிவியல் மீதும் உள்ள அக்கறை என்பது புலப்படுகிறது.

    பெருமதிப்பிற்க்குரிய முனைவர் ஆயிஷா நடராசன் ஐயா அவர்களோடு கைகோர்த்து அரசும் , நாமும் அறிவியல் வளற பரப்புரை செய்வோம்.

    தங்கள் ஈடு இணையற்ற உழைப்பிற்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
    மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  3. PERUMALRAJ D

    ஆயிஷா நடராசன் அவர்களுக்கு ஒரு பள்ளி ஆசிரியரின் நன்றி!

    எழுத்தாளர் ஆயிஷா நடராசன் அவர்கள் bookday.in இணையதளத்தில் கடந்த 100 நாட்களாகத் தொடர்ந்து “இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100” என்ற தலைப்பில் தினமும் ஒரு சமகால இந்திய விஞ்ஞானியை அறிமுகப்படுத்தியுள்ளார். அவரது இந்த அரும்பெரும் சாதனை, அவரது எழுத்துகளை உத்வேகமாகக் கொண்டு ஆசிரியர் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது.

    அவரது இந்த அரும்பெரும் சாதனைக்கு, ஒரு பள்ளி ஆசிரியராக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தளராத உழைப்பும், மன உறுதியும் இல்லையேல் இது சாத்தியமில்லை. 100 நாட்கள் தொடர்ந்து இந்தப் பணியை மேற்கொண்டு, அறிவியல் சமூகத்திற்கு அவர் ஆற்றியுள்ள பணி அளப்பரியது. இந்தத் தொடர், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    இந்திய விஞ்ஞானிகளைப் பற்றிய அறிவை மேம்படுத்துவதோடு, அறிவியலுக்கு ஆதரவான குரல்களை எழுப்பவும், அரசின் அறிவியல் சார்ந்த நிதி ஒதுக்கீட்டையும், பங்கேற்பையும் வலியுறுத்தவும், குரல் கொடுக்கவும் இந்தத் தொடர் உதவும்.

    உடல் சோர்வு, மனக் களைப்பு என எதையும் பொருட்படுத்தாமல், தன்னை உருக்கி இந்தத் தொடரை சமூகத்திற்கு வழங்கிய ஆயிஷா நடராசன் அவர்களுக்கு நன்றியும், பெருமிதமும். இந்தத் தொடரின் வெற்றிக்குப் பின்னணியில் உழைத்த bookday.in குழுவினருக்கும், எழுதும் போது அவரை ஊக்குவித்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    தொடரின் இறுதிப் பதிவில் ஆயிஷா நடராசன் அவர்கள் குறிப்பிட்டது போல, இந்தத் தொடர் பல இளம் மாணவர்களை அறிவியல் துறையை நோக்கி ஈர்க்கும் என்றும், கல்லூரிகளில் மூடப்பட்ட அறிவியல் துறைகள் மீண்டும் திறக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.

    இந்திய அறிவியல் உலகின் சாதனைகளை உலக அளவில் எடுத்துச் செல்லும் இந்த விஞ்ஞானிகளின் உழைப்பையும், அவர்களை அறிமுகப்படுத்த ஆயிஷா நடராசன் மேற்கொண்ட உழைப்பையும் பெருமையுடனும் நன்றியுடனும் நினைவு கொள்வோம்.

    வாழ்க ஆயிஷா நடராசன்! வளர்க அறிவியல்!

    அன்புடன்,
    த. பெருமாள்ராஜ்.

  4. S.Harikrishnan

    இயற்பியல் வேதியியல் தாவர இயல் விலங்கியல் உலோகவியல் என்று அடிப்படையான அறிவியல் பாடங்களை எடுத்து படித்தவர்களில் சாதனையாளர்களை இந்த 100 நாட்களில் அறிமுகம் செய்து எழதியுள்ளார் பெருமதிப்பிற்குரிய முனைவர் ஆயிஷா இரா.நடராசன் அவர்கள்.

    பல கல்லூரிகளில் அறிவியல் துறைகள் மூடப்பட்டு வருகிறது இது குறித்து யாராவது கவலைப்படுகிறார்களா.?அப்படி கவலைப்பட்டுத்தான் என்ன ஆகப்போகிறது என்பவர்கள் இதற்கு தீர்வு காண முனைந்திருப்பார்களா?

    ஆனால் தன்னால் இயன்றதை செய்வோம் என்று இரவு பகல் பாராது இடையராது விஞ்ஞானிகளின் தகவல்களை சேமித்து மிகவும் சிறப்புடன் மாணவர்கள் உத்வேகம் பெறவும் அறிவியல்துறை வளர்ச்சியடையவும் அறிவியல் துறையில் இந்திய விஞ்ஞானிகள் குறித்து எழுதியுள்ளார். அறிவியல் வளர்ச்சிக்காகவும் மாணவர்களுக்காகவும் ஒரு அறிவியல் எழுத்தாளராக தார்மீக பொறுப்பேற்று எழதியுள்ளார்.

    பெரும்பாலான நம் இந்திய விஞ்ஞானிகள் இதற்கு முன் நான் அறிந்திராதவர்களே.

    வியப்பூட்டும் விஞ்ஞானிகள்…ஆம் இன்றைய 100வது அறிமுக விஞ்ஞானி ஆம்…பெருமதிப்பிற்க்குரிய நோபல் அறிஞர் உலக விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு காலகட்டத்தில் உதவி பேராசிரியர் வேலைகூட கிடைக்காமல் அவதிப்பட்டிருக்கிறார். மனம் தளராது தேடலில் கவனம் செலுத்தி வெற்றி கண்டுள்ளார்.

    100 விஞ்ஞானிகளுமே பல்வேறு இடையூறுகளை சந்தித்து தான் தங்களது கண்டு பிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

    அறிமுகப்படுத்திய எந்த விஞ்ஞானியுமே பணம் பதவி பேராசை அற்றவர்கள். தனக்கான சொகுசு வாழ்க்கையை தேடியவர்கள் கிடையாது.

    இந்த தொடரை, தொடர்ந்து வாசித்த மாணவர், பெற்றோர், ஆசிரியர் என அனைவரும் இதை உணர்ந்திருப்பார்கள்.

    ஒருவாரம் தொடர்ந்து செய்கிற வேலையையே ஏதோ காரணங்களால் நம்மால் செய்ய முடிவதில்லை.

    ஆனால் பணியினூடே அனைத்து இடையூறுகளையும் கடந்து, தொடர்ந்து தினம் ஒரு விஞ்ஞானி என நூறு நாட்களுக்கு இடையறாது எழுதியிருப்பது மாபெரும் அறப்பணி.

    இத்தொடரின் ஆசிரியர் அவர்களின் ஈடு இணையற்ற உழைப்பிற்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  5. B Gopalan

    100 நாட்களில் 100 விஞ்ஞானிகளை அறிமுகப்படுத்துவதை ஒரு வேள்வியாகச் செய்து முடித்துள்ள ஆயிஷா நடராசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒன்றரை மாதங்களாக ஓய்வில்லாமல் தொடர்ந்தது ஒரு அசுர சாதனை. முத்தாய்ப்பாக நோபல் பரிசு வென்ற நமது ஊர்காரர் விஞ்ஞானி வெங்கி இராம கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய கட்டுரை. இயற்பியலில் ஒரு காலும். உயிரியலில் மற்றொரு காலும் வைத்துக்கொண்டு ஆராய்ந்தவர். நம் நாட்டில் கல்வி பயின்று, IIT மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் தோல்வி, ஆராய்ச்சிப் பணிக்காக அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பல இடங்களுக்கு குடும்பத்துடன் குடிபெயந்தது, ஆராய்ச்சியைத் தொடர்வதில்ஆதரவற்ற நிலை, பல வருடங்களாக விஞ்ஞாணிகள் வெற்றி பெறாத பிரச்சினையை ஆய்வுக்காக தேர்ந்தெடுத்தது என்ற பலவற்றையும் அனுபவித்து வெற்றிகண்ட வெங்கி அவர்களின் வரலாறு பல படிப்பினைகளை எடுத்துக் காட்டுகிறது. அவர் கண்டுபிடித்த ரைபோசோம் கட்டமைப்பு முறை ஆண்டீபயாடிக் மருந்துகள் எவ்வாறாக வேலைசெய்கின்றன என்பதை ஆராயவும், மேம்படுத்தவும் வகை செய்கிறது. அறிவியலில் இது ஒரு மைல் கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *