முட்டாள் சாச்சுலியின் கதை – 6: கட்டி வைத்து அடி!
இந்திய நாடோடிக்கதை – 10
ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர்
மீண்டும் அம்மா செய்து கொடுத்த கொழுக்கட்டைகளை எடுத்துக் கொண்டு தேவதைகள் இருந்த காட்டுக்குள் சென்றான். அப்படியே நடந்து கொண்டே,
“ இப்பொழுது முதலாவதைச் சாப்பிடுவேன்..பிறகு இரண்டாவது, அப்புறம் மூன்றாவது, பிறகு நான்காவது, ஐந்தாவது… “ என்று சொன்னான். அந்த ஐந்து தேவதைகளும் ரொம்பப் பயந்து விட்டனர்.
“ இதோ மறுபடியும் அந்த மனிதன் ஐந்து பேரையும் சாப்பிட வந்து விட்டான்.. நாம் அவனுக்கு ஒரு பரிசு கொடுப்போம்..” என்று பேசிக் கொண்டே அவன் முன்னால் போய் நின்றனர். அவனிடம் ஒரு கயிறையும், ஒரு கம்பையும் கொடுத்தனர். பிறகு,
“ மனிதா இந்தக் கயிற்றிடம், இவனைக் கட்டு என்றால் உடனே அவனைக் கட்டிப்போட்டு விடும்.. இந்தக் கம்பிடம் இவனை அடி என்றால் போதும் அவனை அடிக்கும்..” என்று சொல்லி அனுப்பினார்கள்.
சாச்சுலிக்கு மிகவும் மகிழ்ச்சி. அந்த மந்திரப் பானையும், மாயப்பெட்டியும் எப்படி திருடு போயிருக்கும் என்று ஏற்கனவே யூகித்திருந்தான். எனவே நேராக கடைத்தெருவுக்குப் போனான். அந்த உணவகத்துக்கு முன்னால் போய்,
“ கயிறே.. இந்த மனிதர்களைக் கட்டிப்போடு..” என்று ஆணையிட்டான். உடனே அந்தக் கடையிலிருந்த அத்தனை பேரையும் கயிறு கட்டிப்போட்டது. பிறகு சாச்சுலி கம்பைப் பார்த்து, “ இவர்களை அடி..” என்று ஆணையிட்டான். உடனே அந்தக் கம்பு அவர்களை அடிக்க ஆரம்பித்த து.
“ ஆ.. ஐய்யோ.. அடிப்பதை நிறுத்து.. கட்டை அவிழ்த்து விடு.. நான் உன்னுடைய பானையையும், பெட்டியையும் கொடுக்கிறேன்..” என்று அந்தச் சமையல்காரன் அலறினான்.
“ முடியாது.. பானையும் பெட்டியும் என் கையில் வரும்வரை நான் அடிப்பதை நிறுத்த மாட்டேன்.. கட்டை அவிழ்த்து விட மாட்டேன்..” என்றான் சாச்சுலி. சமையல்காரன் பானையையும் பெட்டியையும் சாச்சுலியிடம் கொடுத்தான். இப்போது சாச்சுலி அடிப்பதை நிறுத்தி, அவிழ்த்து விட்டான்.
சாச்சுலி வீட்டுக்குப் போனான். அவனைப் பார்த்தவுடன் அவனுடைய அம்மாவுக்குக் கோபம் வந்த து. ஆனால் அவன் மந்திரப்பானையையும் மாயப்பெட்டியையும் அம்மாவிடம் கொடுத்து நடந்த தைச் சொன்னான். உடனே அம்மா அகமகிழ்ச்சியுடன் சாச்சுலியை வாழ்த்தினாள்.
அதுவரை முட்டாள் சாச்சுலியாக இருந்தவன் அதன்பிறகு புத்திசாலி சாச்சுலியாக மாறிவிட்டான். சாச்சுலியின் அம்மா அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் முடித்து வைத்தாள். அதன்பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
கதை சொன்னவர்: டுங்க்னி டார்ஜிலிங் ( 1879 )
தமிழில் எழுதியவர் :

✍🏻 உதயசங்கர்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
