முட்டாள் சாச்சுலியின் கதை – 4: பிரியாணியும் ஐந்து தேவதைகளும்
இந்திய நாடோடிக்கதை – 8
ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர்
சாச்சுலி கேட்ட மாதிரியே இரண்டு கொழுக்கட்டை செய்து கொடுத்தார் அம்மா. அதை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் போனான் சாச்சுலி. இரவாகி விட்டது. அந்தக் காட்டில் ஐந்து தேவதைகள் வாழ்ந்து வந்தனர். சாச்சுலி போகும்போதே இரண்டு கொழுக்கட்டைகளை ஐந்து துண்டுகளாக உடைத்தான். பிறகு,
“ இப்போது முதலாவதைச் சாப்பிடுவேன்.. பிறகு இரண்டாவதைச் சாப்பிடுவேன்..அப்புறம் மூன்றாவதைச் சாப்பிடுவேன்.. பிறகு நான்காவது அப்புறம் ஐந்தாவது..” என்று சொல்லிக் கொண்டே நடந்தான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஐந்து தேவதைகளும் சாச்சுலி அவர்களைச் சாப்பிடுவதைப் பற்றித் தான் சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டார்கள். நம்மையே சாப்பிடும் அளவுக்குப் பெரிய ஆளாக இருப்பான் போல என்று நினைத்துப் பயந்து விட்டார்கள்.
“ இப்போது நாம் என்ன செய்வது? அவன் நம்மைச் சாப்பிடப் போகிறான்.. நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளணுமே.. அவனுக்கு எதையாவது கொடுத்துச் சமாளிக்க முடியுமா என்று பார்ப்போம்..”
என்று பேசிக் கொண்டார்கள். உடனே திடீரென சாச்சுலியின் முன்னால் போய் நின்றார்கள். முதலில் சாச்சுலி பயந்து போனான்.
“ தயவு செய்து எங்களை நீ சாப்பிட்டுவிடாதே.. நீ சாப்பிட மாட்டேன் என்று உறுதி அளித்தால் நாங்கள் உனக்கு ஒரு பரிசு தருகிறோம்..” என்றார்கள். முதலில் சாச்சுலிக்குப் புரியவில்லை. பிறகு தான் பேசியதைத் தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்த து.
“ நீங்கள் என்ன தருவீர்கள்? “ என்று கேட்டான் சாச்சுலி.
“ ஒரு சமையல் பானை தருகிறோம்..உனக்குப் பசிக்கும்போது உனக்கு என்ன உணவு வேண்டுமோ அதைப் பானையிடம் கேட்டால் போதும் உடனே கிடைத்து விடும்..” என்று ஐந்து தேவதைகளும் சொன்னார்கள்.
சாச்சுலி அந்தச் சமையல் பானையை எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்குப் போனான். ஒரு உணவகத்துக்குப் போனான்.
“ பிரியாணி இருக்கா? “ என்று கேட்டான்.
“ பிரியாணியா? பிரியாணியெல்லாம் இல்லை..” என்றார் கடைக்காரர்.
“ அப்படியா? நான் ஒரு பானை வைத்திருக்கிறேன்.. நான் என்ன உணவு கேட்டாலும் உடனே கொடுக்கும்…” என்றான் சாச்சுலி.
“ என்ன முட்டாள்தனம்! “ என்று சொன்னார் கடைக்காரர்.
“ இப்போது பாரு… “ என்று சொல்லிய சாச்சுலி பானையிடம்,
“ எனக்குப் பிரியாணி வேண்டும்..” என்றான். என்ன ஆச்சரியம்! உடனே பானை நிறைய சுடச் சுடப் பிரியாணி மணந்தது. உடனே கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்தப் பிரியாணியைப் பரிமாறினான். எல்லாரும் அதன் சுவையைப் பாராட்டினார்கள்.
கடைக்கார ர் மனதில் கபட எண்ணம் தோன்றியது. எப்படியாவது அந்தப் பானையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அவர் சாச்சுலிக்கு குடிப்பதற்கு குளிர்பானம் கொடுத்தார். அந்தக் குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்திருந்தார். அதைக் குடித்த சாச்சுலி அப்படியே உறங்கிவிட்டான். அவன் உறங்கும்போது அவனிடமிருந்த மந்திரப்பானையை எடுத்துக் கொண்டார் கடைக்கார ர். அந்த இட த்தில் சாதாரணப்பனையை வைத்து விட்டார்.
மறுநாள் சாச்சுலி பானையுடன் வீட்டுக்குப் போனான்.
“ அம்மா.. நான் ஒரு மந்திரப்பானையைக் கொண்டு வந்திருக்கிறேன்.. நீ எந்த உணவைக் கேட்டாலும் உனக்குக் கிடைக்கும்..”
என்றான். சாச்சுலியின் அம்மா கங்குனி. அதை நம்பவில்லை.
“ என்ன முட்டாள்த்தனமாக உளறிக் கொண்டிருக்கிறாய்..பொய் சொன்னால் அவ்வளவு தான்..” என்று கோபமாய்க் கத்தினாள்.
“ இது முக்காலும் உண்மை அம்மா.. பாரேன்..” என்று சொல்லிய சாச்சுலி பானையிடம் ஏதேதோ உணவு வேண்டுமென்று கேட்டான். எதுவும் வரவில்லை. அது சாதாரணப்பானை தானே. அம்மாவுக்கு ஆத்திரம் வந்த து.
“ நீ ஏன் வீட்டுக்குத் திரும்பி வந்தே? பொய் சொல்றவன் இங்கே இருக்கக்கூடாது..”
என்றார்.
“ சரி நான் போறேன்.. எனக்கு ஐந்து கொழுக்கட்டை செய்ஞ்சு கொடு..” என்றான் முட்டாள் சாச்சுலி.
கதை சொன்னவர்- டுங்க்னி டார்ஜிலிங்(1879)
எழுதியவர் :

✍🏻 உதயசங்கர்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
