இந்திய போலி அறிவியல் காலண்டர் – பொ. இராஜமாணிக்கம், பொதுச்செயலர் (அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு)ஒரு பிரபல தமிழ் நாளிதழில் இந்திய அறிவுமுறை குறித்த நாட்காட்டி பற்றிப் பாராட்டி ஒரு கட்டுரை வந்திருந்தது. ஐஐடி கரக்பூரில் இயங்கும் நேரு அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம் சார்பாக வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திற்கும் பண்டைய அறிவு குறித்தும் அதனைப் பாராட்டும் விதமாக மேலைநாட்டு விஞ்ஞானிகளின் பாராட்டுக் கருத்துகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமாகச் சொல்ல முயற்சிப்பது சமஸ்கிருதப் பெருமையும் சமஸ்கிருதம் சார் அறிவு முறையும் இந்தியாவின் உன்னத வரலாறாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தும் ஆதாரமற்ற புனைவு வகை அறிவு என்பதே முதல் கட்டப் பார்வையாகும்.

IIT Kharagpur calendar 2021 Indian ancient insights

ஜனவரி மாதத்தை காஸ்யபா், ஜமத்க்னி, கௌதமா, பரத்வாஜா, விஸ்வாமித்திரர், வசிஷ்டர் , அட்ரி உள்ளிட்ட ஏழு ரிஷிகளைச் சப்த ரிஷிகள் எனக் குறிப்பிட்டு ஆரம்பித்து டிசம்பர் மாதத்தைக் கண் முன்னே வாழ்ந்த பி.சி.ராய், ஜே.சி. போஸ், சீனிவாச ராமானுஜன், எஸ்.என் போஸ் , சமீமா சாட்டர்ஜி, ஜானகி அம்மாள், ஐராவதி கார்வே போன்ற தலைசிறந்த விஞ்ஞானிகளுக்கு ஆச்சார்யா பட்டத்துடன் முடிக்கின்றனர். இதன் மூலம் நமது தலைமுறைகளில் கண் முன்னே சாதனை செய்த விஞ்ஞானிகளுக்கு ஆச்சாரியா பட்டம் கொடுத்து வேதங்கள், இதிகாசங்கள்,புராணங்களில் கற்பனைப் பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்ட ரிஷிகளைச் சம கால விஞ்ஞானிகளோடு இணைத்து வரலாற்றுச் சான்றாக நிரூபிப்பது தான் இந்த காலண்டரின் முக்கிய வேலையாக இருக்கிறது.

இந்த இரண்டு துவக்க, முடிவு மாதங்களுக்கு இடையே சமஸ்கிருதம் தான் ஐரோப்பிய மொழிகளுக்கு முதன்மை என்றும், கணிதம் அத்வைதத்தின் சூனியக் கோட்பாட்டிலிருந்து ஆரம்பித்தது என்றும், அர்த்த சாஸ்த்திரம் இன்றை பொருளியலின் முன்னோடி என்றும், ஆயுர்வேதத்தின் முன்னோடி தன்வந்திரி என்றும், கலிலியோ, கெப்ளருக்கு முன்னரே வானியல் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், தற்போதைய புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளப் புராணங்களில் கூறப்படும் வனவாசம் முன்னோடி என்றும், தற்போதைய கட்டிடக் கலைக்கு ஏழாவது மண்டல ரிக் வேதம் முன்னோடி என்றும், நியாயம், தர்மம், பணி நேர்மை ஆகிய சமூகம், சூழல், சட்டம் ஆகியன குறித்து ரிக் வேதம் பத்தாவது மண்டலம்பேசுகின்றதென்றும், நாட்டிய சாஸ்திரத்திற்கு அக்னி சாஸ்திரம், வேதாங்கம், அகஸ்திய ரிஷி ஆகியோரே துவக்கம் என்றும் இடையே உள்ள பத்து மாதங்களில் ஒவ்வொன்றாகச் சிலாகித்து உள்ளனர்.

IIT Kharagpur calendar 2021 Indian ancient insights

இதில் கொடுமை என்னவென்றால் பண்டைய இந்தியாவென தற்போது கருதப்படும் நிலப்பரப்பில் வரலாற்று ரீதியாக வாழ்ந்த ஆர்யப்பட்டா, பிரம்மகுப்தா, பாஸ்கரா, வராகமிகிரர், சுஸ்ருதா, சரகா, ஆத்ரேயா போன்றோர்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு கற்பனைப் பாத்திரங்களான ரிஷிகளே முன்னோடி என்றும் வேதங்கள், காவியங்கள் அறிவியல் ஆராய்ச்சி நூல்களாக முன் வைக்கப்படுவது தான்.

அதே போல் இதில் குறிப்பிடப்பட்டுள்ள ரிஷிகள், சொல்லப்போனால் கௌடில்யர் என்றழைக்கப்பட்ட சாணக்கியரே ஒரு கற்பனையான கதாபாத்திரம் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் பொழுது, ரிஷிகள் அனைத்துமே கற்பனைக் கதாபாத்திரங்களே! இவர்களுடன் நமது தற்கால தலைசிறந்த ஏழு விஞ்ஞானிகளை ஆச்சாரியர்களாக இணைத்து அந்த ரிஷிகளுக்குச் சரித்திரச் சான்று கொடுத்து நிரூபிக்கும் முயற்சி என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? குறிப்பாகச் சரகா, சுஸ்ருதர் போன்றோர் உயிரோடு வாழ்ந்து மருத்துவத் துறைக்குச் சிறப்புச் சேர்த்தவர்கள். அவர்கள் கற்பனையான புனைவு தன்வந்திரியைப் பின்பற்றியவர்கள் எனக் கூறுவது தன்வந்திரிக்கே வரலாற்று அடையாளம் கொடுப்பதாகும். தன்வந்திரி உட்பட இந்த சப்த ரிஷிகளின் காலத்தைக் கூற முடியுமா?

IIT Kharagpur calendar 2021 Indian ancient insights

இந்தியன் நாலட்ஸ் சிஸ்டம் என்று சொல்லும் போதே அது நவீன சோதனைக்கு உட்பட்ட அறிவியல் உருவாவதற்கு முன்னர் இருந்த ஆரம்பக் கால பாரம்பரிய அறிவு என்றே கொள்ளலாம். அப்படி என்றால் இந்தியாவின் ஆரம்பக் கால அறிவு, தொழில்நுட்பம் என்பது வேத காலத்திற்கு முற்பட்டது. ஆதாரங்களுடன் கூடியது என்றால் அது சிந்து சமவெளி நாகரீகத்திலிருந்து இது அல்லவா தொடங்கப்பட்டிருக்க வேண்டும். எழுத்து, தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆதாரங்கள் சமஸ்கிருத காலத்திற்கு முற்பட்டது ஆகும். அதை ஏன் இந்திய அறிவுசார் பாரம்பரியம் பேசும் இந்தக் காலண்டரில் இடம்பெறவில்லை ?

இந்தியப் பாரம்பரிய அறிவு வரலாற்றில் சமஸ்கிருதத்திற்கு முன்னரே உருவான திராவிட மொழிகளில் தமிழ் போன்ற மிகத் தொன்மையான மொழியும் சிந்துவெளி நாகரீகத்தைப் போலவே வேதகாலத்திற்குப் பிற்பட்ட கீழடி போன்ற ஆதாரப்பூர்வமான அறிவியல் தொழில்நுட்பம் குறித்தோ, தென்னிந்தியப் பாரம்பரிய சித்தர்களின் அறிவும் ஏன் கண்டு கொள்ளப்படவில்லை.

IIT Kharagpur calendar 2021 Indian ancient insights

கேரளாவில் மலர்ந்த கணிதவியல், வானவியல் குறித்து ஏதும் ஏன் இடம்பெறவில்லை. இந்தியாவில் முதன் முதலாக அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்ற சி.வி ராமன் இடம் பெறவில்லையே ஏன்? விடுதலைக்குப்பின் இந்தியாவின் பிரசித்த முன்னேற்றமான அணு அறிவியல், விண்வெளி அறிவியல் குறித்த எதுவுமே இல்லையே. அதை மறைப்பதன் நோக்கம் என்ன? ஏனென்றால் இதன் நோக்கமே வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றில் கற்பனையாகக் கூறியவற்றைச் சம கால அறிவியலோடு பொருத்திப் பேசி பெருமை கொள்வதும் அதை வரலாற்றாக்குவதும் தான் முதன்மையான பணியாகத் தெரிகிறது.

மேலும் புனைவு அறிவியலை நியாயப்படுத்தும் விதமாக ஐரோப்பிய, அமெரிக்க, இந்தியாவின் பிரபல விஞ்ஞானிகளின் படங்களை அந்தந்த மாதத்தில் போட்டு ஒவ்வொரு புனைவுகளையும் பாராட்டுவது போலக் குறிப்புகள் கொடுத்துள்ளனர். வில் துராந்த், ஐன்ஸ்டீன், மார்க் ட்வைன், ரோலண்ட், அர்னால்ட் டாயின் பீ, மேக்ஸ் முல்லர், அலீஸ் போனர் ஆகியோரை முன் நிறுத்திப் புனைவு அறிவு முறைக்கு அங்கீகாரம் கொடுக்க முனைகின்றனர்.

IIT Kharagpur calendar 2021 Indian ancient insights

இதில் வேடிக்கை என்னவென்றால் ஐன்ஸ்டீன், நியூட்டன் போன்றோர்களின் கொள்கைகள் தப்பும் தவறுமானது என்று இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் பேசிய ஜாம்பவான்கள் தான் இவர்கள். மேலும் நவீன அறிவியல் வளர்ச்சி பற்றி நாம் பேசும் போதெல்லாம் இவற்றை மேலை நாட்டு ஐரோப்பிய அறிவியல் என்றும் நவீன அறிவியல் குறித்துப் பேசுபவர்களை மெக்காலே புத்திரர்கள் என்றும் ஏளனம் செய்வதும் இதே பாரம்பரியவாதிகள் தான்!

இறுதியாக அறிவியல் வரலாற்றைத் திரித்து எழுதியும் போலி அறிவியல் வரலாற்றை உருவாக்கும் செயல்பாட்டை ஒரு நவீன அறிவியல் தொழில்நுட்ப மையம் செய்யலாமா? உண்மையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஐஐடியின் பெருமையையும் அறிவியல் மனப்பான்மைக்காகத் தன்னை அர்ப்பணித்த நேருவின் பெயரையும் இந்தக் காலண்டர் பெருங்களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. சுருக்கமாகக் கூறினால் தற்போதைய மத்திய அரசின் அரசியல் சார்ந்த போலி, புனைவு அறிவியலை பிரபலப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட காலண்டர் என்பது தான் உண்மை.

2021 Calendar - YouTube

இதற்கு மாற்றாக இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வரலாற்றை உண்மையாகப் பிரதிபலிக்கும் காலண்டர் ஒன்றை அறிவியல் இயக்கங்கள் தயாரித்து வருகின்றன. இதன் மூலம் உண்மையான அறிவியல் மக்களிடம் எடுத்துச் சொல்லப்படும்.