இந்தியச் சமூகம் : மார்க்சும் பெரியாரும் - முனைவர் சு.மாதவன் | Putting Marx and Periyar on the same page, analysed the fundamental issues of Indian society

இந்தியச் சமூகம் : மார்க்சும் பெரியாரும் – முனைவர் சு.மாதவன்

இந்தியச் சமூகம் : மார்க்சும் பெரியாரும்

– முனைவர் சு.மாதவன்

இந்தியச் சமூகத்தைப் பற்றிய வரையறைகளையும் அனுமானங்களையும் உள்நாட்டு – வெளிநாட்டு அறிஞர்பலரும் வெளியிட்டுள்ளனர். அனைவருமே அவரவர் ஏற்றுக்கொண்ட மெய்யியலின் கண்ணோட்டத்திலிருந்தே விளக்கியுள்ளனர். எனினும் அவை யாவும் இந்தியச் சமூகததைப் பற்றிய புரிதலுக்கான திறவுகோல்களாக இலங்குகின்றன. அந்த  வகையில் இந்தியச் சமூகத்தைப் பற்றி மார்க்சும் பெரியாரும் கூறியுள்ள சில கருத்துக்களை ஒப்பிட்டு ஆராய முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மார்ச்சும் பெரியாரும்

இந்தியாவைப் பற்றிய மார்க்சின் குறிப்புகளாகக் கிடைப்பவை 1853 முதல் 1857 வரையிலான காலகட்டத்தில் அவரால் “நியூயார்க்  டெய்லி டிரிபியூன்” என்ற இதழில் எழுதப்பட்ட  கட்டுரைகளாகும். இவற்றில் அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றிய தமது மதிப்பீடுகளைப் பதிவு செய்துள்ளார். இம்மதிப்பீடுகளில் இந்தியக் கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகளின் தன்மையைக் காணமுடிகிறது.

பெரியாரைப் பொருத்தவரையில் இந்தியக் கலாச்சார பண்பாட்டுக் கூறுகளைப் பற்றிய தமது மதிப்பீடுகளைத் தாம் நடத்திய குடியரசு, புரட்சி, விடுதலை ஆகிய ஏடுகளில் பதிவுசெய்துள்ளார். இவையே பெரியாரின் சமூகம் அரசியல், கலாச்சாரம், பண்பாடு பற்றிய வரலாற்று ஆவணங்களாகும். 50 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் காங்கிரஸ், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு களங்களில் இந்தியச் சமூக மாற்றத்திற்கான தமது கருத்துக்களை முன்வைத்தவர் பெரியார்.

இவ்விருவரில் மார்க்சு காலனியாதிக்க அரசின் ஆவணங்கள் மற்றும் இதழ்களின் செய்திகளிலிருந்து  இந்தியச் சமூகத்தைப் பற்றிய வரையறைகளை உருவாக்கினார். ஆனால் பெரியாரோ இச்சமூகத்திலேயே வாழ்ந்து அதன் பண்பாட்டுக் கூறுகளை அறிந்துகொண்டு விமர்சித்தார்.

இந்தியச் சமூகம்

சமூக வளர்ச்சி அம்சங்களை மார்க்சீயம் கீழ்க்காணுமாறு வரையறுக்கிறது:

மனித சமூகமானது பொருளாதாரத்தை அடிக்கட்டுமானமாகவும் கலாச்சார – பண்பாடு – அரசியல் அம்சங்களை மேல்கட்டுமானங்களாகவும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அடித்தளமே மேல்கட்டுமானங்களின் உருவாக்கங்களையும் தன்மைகளையும் இயக்கப் போக்குகளையும் தீர்மானிக்கிறது. எனினும், மேல்கட்டுமானங்களின் வீரிய கருத்தியல் வீச்சினால் அடிக்கட்டுமானம் பாதிப்படைவதற்கான சாத்தியங்களும் உண்டு (ஆக்க நிலையிலோ அழிவு நிலையிலோ).

இந்த  வரையறையின் அடிப்படையில் நோக்கும்பொழுது உலகிலுள்ள எந்தவொரு  சமூகத்தைவிடவும் இந்தியச் சமூகம் 3-வது அம்சத்தில் மிகுந்த அழுத்தம் பெற்றதாக விளங்குகிறது எனலாம்.

இந்தியச் சமூகத்தைக் கட்டமைத்துள்ள மேல்கட்டுமான அமைப்பைப் பற்றி மார்க்சு குறிப்பிடுவதாகவது:

“தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குல மரபுகள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து, உருவாக்கப்பட்டிருக்கிற பூங்கோள ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம்” – (இந்தியாவைப் பற்றி.,ப.111)

இந்தியச் சமூக நிறுவனங்களுக்குள் இணக்கமான உறவுநிலை இல்லை என்பதை மார்க்ஸ் தெளிவாக்குகிறார். இத்தகைய சமூக அமைப்பைப் பற்றிப் பெரியாரும்,

“இந்தியா சுமார் 500 வருஷங்களுக்கு முன்வரையில் –ஏன் வெள்ளையன் வருகிற வரையில் சில சந்தர்ப்பங்கள் தவிர இனம், மொழி, மொழி, சீதோஷ்ணநிலை, பூர்வீக நாடு முதலியவைகளுக்கு ஏற்ற தனித்தனி  நாடுகளாக  இருந்துவந்த நாடாகும்.   இப்படி எல்லாம் இருக்கக்கூடிய நாடு  எவ்வித  நன்மைக்கும் பயன்படாத வகையில் ஒரே நாடாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. – (பெரியார் :  ஈ.வெ.ரா.சி.,ப.1197)

என்றே எழுதுகிறார்.

ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்ட இந்தியச் சமூக நிறுவனங்களை ஒன்றிணைத்திருப்பது வெறும் பூகோள ஒற்றுமை மட்டுமே என்று மார்க்ஸ் வரையறுப்பதும், “எவ்வித நன்மைக்கும் பயன்படாதவகையில்   ஒரே நாடாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது” என்று பெரியார் மதிப்பிடுவதும் ஒரே புரிதல்தன்மையின் வேறுவேறு வெளியீட்டு வடிவங்களே எனலாம்.

இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாகக் காரணம் அரசியலே. அரசியல், மேல்தளக் கட்டமைப்பின் ஒரு கூறுதான். எனினும், இதர மேல்தளக் கூறுகளான சாதி, மதம், குலமரபுகள் ஆகியவை அரசியலைக் கட்டமைப்பதற்கான சூழலை உருவாக்குவனவாய்த் திகழ்கின்றன. பிற எந்த தேசத்தைக் காட்டிலும் இந்தியாவில் அரசியலுக்கான முக்கியப் பின்புலங்களாக இவை விளங்குகின்றன. இதைத்தான்,

“அதன் சரித்திரம் என்று நாம் அழைப்பதெல்லாம் எதிர்க்காமலும், மாறாமலும் உள்ள சமுதாயத்தின் அடங்கி, ஒடுங்கி இருக்கிற தன்மையின் அஸ்திவாரத்தில் இடைவிடாமல் தொடர்ச்சியாக ஆக்கிரமித்த அன்னியர்கள் தங்கள் சாம்ராஜ்யங்களைக் கட்டினார்களே அவைகளின் சரித்திரம்தான்.”  – (இந்தியாவைப் பற்றி, ப.99)

என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். எதிர்க்காமலும் மாறாமலும் உள்ள சமுதாயத்தின் அடங்கி ஒடுங்கி இருக்கிற தன்மையானது, இந்து சனாதனக் கருத்தியலாதிக்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவேதான்,

“இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் எவ்வாறு மாறிய போதிலும் சமுதாயநிலை மாறவில்லை. பண்டு ஒழிந்த காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை மாறவே இல்லை.” – (இந்தியாவைப் பற்றி, ப.22)

என்று குறிப்பிடுகிறார் மார்க்ஸ். இங்கு 19ஆம் நூற்றாண்டுவரை இந்தச் சமுதாயநிலை மாறவே இல்லை என்று அழுத்தமாகக் கூறுவது கவனத்திற்கும் ஆய்விற்கும் உரியது.  அவரால் ‘சமுதாயநிலை’ என்று குறிப்பிடப்படுவது ‘இந்திய வருணாசிரம தரும் முறை’யேயாகும்.  இதே கண்ணோட்டத்திலேயே பெரியாரும் இந்தியச் சமூகத்தை விளக்கினார் என்பதை,

“பேதங்களால் ஒற்றுமை இல்லை என்பது மாத்திரமில்லாமல் பொது முன்னேற்றம் என்பது வகுப்புத் துவேசமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இந்நாடு அனேக காலமாக தேக்கம் அடைந்திருப்பதோடு, கேடும் அடைந்து வருகிறது.  ஆகவே, இந்த நாட்டு முன்னேற்றத் தடைக்கும், விடுதலைத் தடைக்கும் ஜனசமுதாய அமைப்பே முக்கிய காரணம் என்று சொல்லத்தக்க வண்ணம் இந்நாட்டுச் சமுதாயம் இருந்து வருகிறது.” – (பெரியார் :ஈ.வெ.ரா.சி.,ப.1202)

என்று அவரது கருத்து உணர்த்துகிறது.

ஆக, இந்தியச் சமுதாய அமைப்பில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழாமைக்குக் காரணங்களாக; நிகழும் மாற்றங்களையும் நீர்த்துப்போக வைப்பவையாக–இங்குள்ள சாதீய அமைப்புமுறையும் அதைத் தாங்கிப் பிடிக்கும் சனாதன இந்து மதமும் இவற்றுக்கான கருத்தியல்களும் இருக்கின்றன என்பதை மார்ச்சும் பெரியாரும் ஒருங்கே வெளிப்படுத்தியுள்ளனர் என்று புரிந்துகொள்ளலாம்.

ஆங்கிலேயரும் இந்தியாவும்

இந்திய அரசியல் வரலாற்றின் பெரும்பகுதியும் அன்னியர்களின் ஆட்சி வரலாறாகவே இருந்தது என்பதைக் குறித்த மார்க்ஸின் கருத்து ஏற்கனவே குறிப்பிடப்பட்டது. இந்தியச் சமூகங்களுக்குள் இருந்த தீர்க்க முடியாத முரண்பாடுகள்தாம் இத்தகைய நிலைக்கும் காரணங்களாக விளங்கின.  எனவே, ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது கடினமான வேலையாக இருக்கவில்லை.  இதை மார்க்ஸ் கீழ்க்காணுமாறு விவரிக்கிறார்:

“இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கம் அமைக்கப்பட்டதே, அது எவ்வாறு ஏற்பட்டது? மாபெரும் மொகலாய சக்கரவர்த்தியின் மேலாதிபத்தியத்தை மொகலாய வைஸ்ராய்கள் உடைத்தெறிந்தார்கள்; அந்த வைஸ்ராய்களின் அதிகாரத்தை மகாராஷ்டிரர்கள் உடைத்தெறிந்தார்கள்; மகாராஷ்டிரர்களின் அதிகாரத்தை ஆப்கானியர்கள் உடைத்தெறிந்தார்கள். இவ்வாறு அனைவரும் அனைவரையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்ததால், பிரிட்டன் வேகமாக உள்ளே நுழைந்து, அனைவரையும் அடக்கி அடிமைப்படுத்த முடிகிறது.” –  (இந்தியாவைப் பற்றி, ப.22)

“தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிற பூகோள ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம். இவைகளுக்கு இடையே இருந்த தீர்க்க முடியாத முரண்பாடுகள்தான் பிரிட்டிஷ் மேலாதிக்கத்திற்கு மிக முக்கியமான அடிப்படையாகத் தொடர்ந்து இருந்தது.” – (இந்தியாவைப் பற்றி, ப.22)

மேற்கண்ட மார்க்ஸின் கருத்துகளிலிருந்து, ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றவும் தக்கவைத்துக் கொள்ளவும் சாத்தியமாக இருந்த இரு அம்சங்களைத் தொகுக்கலாம்:

அவை,

ஆதிக்க வர்க்கங்களுக்குள் இருந்த அதிகார ஆக்கிரமிப்புக்கான முரண்பாடு.
சமூகக் கட்டமைப்பின் பண்பாட்டு ஏற்றத் தாழ்வுக் கூறுகளுக்கிடையிலான முரண்பாடு.

இந்த இரண்டு அம்சங்களும் பெரியாரின் கருத்துக்களிலும் எதிரொலிப்பதைக் காணமுடிகிறது. முதல் அம்சத்தைப் பொருத்தவரையில், அவர்களில் ஒவ்வொருவரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும்போதும் இந்திய வரைபடத்தில் அங்குமிங்குமாக பொருத்தமற்ற கோடுகள் கிழிக்கப்பட்டன என்று பெரியார் கூறுகிறார்.

இரண்டாவது அம்சத்தின் மீது அதிகமான கவனம் செலுத்தியுள்ளமை அவரது கருத்துக்களிலிருந்து தெரியவருகிறது. பெரியாரின் கருத்துக்கள் வருமாறு:

“பொருத்தமில்லாதவற்றை ஒன்றுபடுத்தி இருப்பதற்கும் பொருத்தமுள்ளதை வேறுபடுத்தி இருப்பதற்கும் சரித்திர சம்பந்தமானதோ அல்லது அவசிய சம்பந்தமானதோ ஆகிய காரணம், அவ்வப்போது படையெடுத்து வந்து வென்ற அரசர்கள் ஒன்று சேர்ந்ததும் பிரிந்ததும் தவிர வேறு ஒரு காரணமும் தென்படவில்லை.” – (பெரியார் :ஈ.வெ.ரா.சி.,ப.1197)

“நமது நாட்டில் உள்ள வர்ணாசிரம தர்மந்தான் இந்நாட்டிற்கு வெள்ளைக்கார ஆட்சி முதலிய முதலாளிகள், ஆட்சியைக் கொண்டுவந்துவிட்டதாகும். இன்று அவ்வாட்சியை நடத்திக்கொடுப்பதே –  அதைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பதே – நமது நாட்டு வர்ணாசிரம் தரும முறையேயாகும்.” – (மேற்கோள், பெரி/சுய/சம.,ப.207)

பெரியாரின் மேற்கண்ட கருத்துக்கள் மார்க்ஸ் குறிப்பிடும் இரு அம்சங்களையும் உள்ளடக்கியதாக விளங்குகின்றன. ஆதிக்கச் சக்திகள் மக்களின் நலனையோ, பண்பாட்டுத் தனித்தன்மைகளையோ கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் அதே முறையில்தான் ஆங்கிலேயர்களும் இந்தியாவின்மீது ஆதிக்கம் செலுத்தினர் என்பதையும் இருவருமே பதிவுசெய்துள்ளனர்.

ஆதிக்கத்திற்குதவும் கருத்தியல்கள்

இ்ந்தியச் சமூக வரலாற்றில் இந்திய, அந்நிய ஆதிக்வர்க்கங்கள் தங்கள் மேலாண்மையை ஏற்படுத்தவும், நிலைநிறுத்தவும் மக்களின் அறியாமையினால் உருவாகியுள்ள – உருவாக்கப்பட்டுள்ள மதம், மூடநம்பிக்கைகள், தலைவிதி போன்ற கருத்தாக்கங்களைப் பயன்படுத்திக் கொண்டன. இன்னும்சொன்னால், அவற்றை வளர்த்தெடுப்பதற்கான சூழலையும் உருவாக்கின. இந்நிலை ஆங்கிலேய ஆட்சியின்போது இருந்தது என்பதை மார்ச்சும் பெரியாரும் துல்லியமாக விவரித்துள்ளனர்.  இந்நாட்டு மக்களுக்காகக் களத்தில்  பணியாற்றியவர் என்கிறவகையில் பெரியாரின் பங்களிப்பு மகத்தானதாகும். அதே நேரத்தில் உலகின் ஒரு கோடியில் இருந்துகொண்டு இந்தியச் சமூக இயங்கியலை நாடிபிடித்துப் பார்த்துச்சொன்ன மார்க்சின் பங்கும் மகத்தானதே.

மதம்

மதத்தைப் பற்றிய மார்க்ஸின் புகழ்பெற்ற  கருத்து அனைவரும் அறிந்ததே  அக்கருத்து ‘மதம் ஒரு அபின்’ என்பதாகும். அபின் என்பது ஒருவகைப் போதைப் பொருள். அதை உபயோகித்தவன் எவ்வாறு புத்திபேதலிப்பானோ – சொன்னதையே சொல்வானோ – அப்படிப்பட்ட செக்குமாட்டுச் சிந்தனையைத்தான் மதம் தரும் என்பது அவரது கருத்தின் உட்கிடை எனலாம். இதே கண்ணோட்டத்தோடுதான்  பெரியாரும் மதத்தை அணுகினார் என்பதை,

“கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத்  தருகிறது. கள், குடித்தவனைக் கெடுக்கிறது; மதம், மனத்தில் நினைத்தவனையே கெடுக்கிறது”  – (இந்தியாவைப் பற்றி, ப.22)

என்ற அவரது கருத்து உறுதிப்படுத்துகிறது. இருவருமே மதத்தை இவ்வாறு காரசாரமாக விமர்சிப்பதற்குக் காரணம் சமூகத்தின் – மக்கள் வாழ்வியலின் –மேற்கட்டுமான அம்சங்கள் அனைத்தையும் பாதிக்கவும், தேக்கமடையவும் செய்யும் கருத்தியலாக அது உள்ளதாலேயாகும். எனவேதான்,

“எல்லா விமர்சனங்களுக்கும் அடிப்படையானது
மதத்தைப் பற்றிய விமரிசனமே ஆகும்” –  (Marx Engels, p.175)

என்று மார்க்ஸ் வலியுறுத்தினார். மார்க்ஸ் விரும்பியவாறு, 20 ஆம் நூற்றாண்டில் மதத்தை ஈவிரக்கமின்றி விமரிசித்தவர்களுள் பெரியார் முதன்மை யானவரும் முக்கியமானவரும் ஆவார்.  அவர் மதத்தை விமர்சிப்பதையே பிரதானமாகக் கொண்டிருந்தார். ஏனென்றால்,

“அது வாழ்க்கையின் ஒவ்வொரு முறையையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.  தலைமயிர்முதல் கால் செருப்புவரை, மதத்துக்குச் சம்பந்தப்பட்டிருக்கின்றன.  நடை, உடை, ஆகாரம், பாவனை, கல்வி, மரணம், வாழ்வு, தொழில், பணம் சேர்த்தல், பணம் செலவழித்தல், தர்மம் எல்லாம் மத ஆதிக்கத்தில் – மதப் பிரவேசத்தில் இருக்கின்றன.” – (பெரியார் :ஈ.வெ.ரா.சி.,ப.1197)

என்கிறார் பெரியார். அவரது நுட்பமான நோக்கு இதிலிருந்து பெறப்படுகிறது. பெரியார் கூறுவதுபோல், வாழ்க்கையின் எல்லா அங்கங்களையும் கட்டமைத்து இயக்குவதால் மார்க்சும் எல்லா விமர்சனங்களுக்கும் அடிப்படையானது மதத்தைப் பற்றிய விமரிசனமே என்றார்.

இந்து மதம்

வேதம், உபநிடதம், அரண்யகம், புராணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது வைதீகமதம்; இதனைப் ‘பார்ப்பன மதம்’ (Brhaminical Religion) எனவும் குறிப்பர். இம்மதம் ஒரு காலத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே உரியதாக இருந்து காலப்போக்கில் பரவலான இந்திய மக்களுக்கும் உரியதாகத் திணிக்கப்பட்டது. ஆதிக்கச் சக்திகள் பொருள்குவிப்பதற்கும் இன்பம்பெறுவதற்கும் உரிய கட்டமைப்பைக் கொண்டதாக நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பில் இது இருந்தது. பின்னர் நாட்டுப்புற வழிபாட்டு மரபு மற்றும் அறுவகைச் சமயங்களையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டபின் ஏற்பட்ட பொதுப்பெயரே ‘இந்துமதம்’ என்பதாகும். அதோடு, எதிரெதிர் பண்பாட்டுக் குழுக்களையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்வதாகவும் இருந்தது. இந்துமதத்தைப் பற்றி,

“சிற்றின்ப ஈடுபாடு உலகமும் மிகுதுயர் வருந்தும் உலகமும் வியப்பான முறையில் சேர்ந்திருப்பதை இந்துஸ்தான் சமயத்தின் பண்டைய மரபுகள் முன்பே உணர்ந்து புலப்படுத்தியிருக்கின்றன. அந்த மதம் புலனுணர்ச்சி இன்பங்களில் மூழ்கித் திளைத் திருப்பதை வலியுறுத்தும் மதமாக உள்ளபோதே, தன்னைத் தானே வதைத்துக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தும் துறவு மதமாகவும் விளங்குகின்றது. லிங்கத்தை வழிபடும் சமயமும் அதுவே; சன்னியாசியின் சமயமும் அதுவே.” – (இந்தியாவைப் பற்றி.,ப.118)

என்று மார்க்ஸ் தனது அவதானிப்பை வெளியிட்டுள்ளார். இதில் “தேவதாசி மதமும் அதுவே; சன்னியாசியின் சமயமும் அதுவே” என்று குறிப்பிடுவதை இந்து மதத்தின் பேரால் நிலப்பிரபுக்களால் நடத்தப்பட்ட இழிவான செயல் களை ஏராளமான விமர்சனங்களைப் பெரியாரும் முன்வைத்துள்ளார்.

மதமும் வர்க்கமும்

இந்தியாவில் வருண அடிப்படையைக் கொண்டதும் நிலப்பிரத்துவ அமைப்பைக் கொண்டதுமான ஒரு சமூகம் ஓங்கி வளர்ந்திருந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள் இங்கு வந்தனர். இயல்பாகவே, முதலாளித்துவத்தின் உற்பத்தி எந்திரங்கள் வந்துவிட்டால் சமூகக் கட்டமைப்பில், மக்களின் சிந்தனையில் மாற்றம் நிகழ்வது தவிர்க்க இயலாதது. அவ்வாறு மாற்றங்கள் நிகழ்ந்த போதும், அவர்களின் மதம் அவற்றுக்கு இடம் தராதபோதும் இந்தியர்களின் மதம்சார்ந்த சடங்கு, சம்பிரதாயங்களில் கைவைக்க முயன்றபோதெல்லாம் சனாதனவாதிகளின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்படும் கருத்தியல் கவசமாக அவை இருந்ததால் அவற்றைத் தடுக்கவில்லை; மாறாக, வளர்த்துவிட்டனர். ஏனெனில், ஒவ்வொரு செயல்பாட்டுக்கும்கீழ் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிர்ந்திருக்கிறது அல்லவா? அவ்வாறே தங்களது சொந்த லாபத்துக்காக ஆங்கிலேயர்கள் இந்துமத நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தியதைப் பற்றி,

“நமது புனிதமான மதத்தைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில், பிரஞ்சுப் புரட்சியை எதிர்த்த அதே நபர்கள், அதே சமயத்தில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தை நடத்தக்கூடாது என்ற தடை செய்யவில்லையா? வங்காளத்திலும், ஒரிஸ்ஸாவிலும் உள்ள ஆலயங்களுக்குச் சாரிசாரியாகச் செல்லும் ஏராளமான யாத்திரிகர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கும் நோக்கத்தோடு, ஜெகன்னாதர் ஆலயத்தில் நரபலியையும், விபச்சாரத்தையும் நிரந்தரமாக்கி அவைகளைப் பயன்படுத்திக்கொண்டு தாங்களே வியாபாரம் செய்யவில்லையா? இவர்கள்தான் சொத்துக்கள், அமைதி, குடும்பம், மதம் ஆகியவைகளின் பாதுகாவலர்களாம்” -(இந்தியாவைப் பற்றி.,பக்.108-109)

என்று பரிகாசம் செய்துள்ளார் மார்க்ஸ். மேலும்,

“சில ஆண்டுகளாகக் கொடுமை செய்வதை உட்கொண்ட ஒரு மதத்தின் நரபலிச்சடங்குகளை ஆதரித்து, பாதுகாத்து, ஜகன்னாதர் ஆலயத்தில் திருவிழா நடக்கும் பொழுது வரிவிதித்து, அதன் மூலம் வருமானத்தையும் பெற்றுவந்த(னர்) ஆங்கிலேயர்கள்” –  (இந்தியாவைப் பற்றி, பக்.141)

என்றும் குறிப்பிடுகிறார் மார்க்ஸ். நரபலிச் சடங்குகள் போன்ற மூடத்தனமான செயற்பாடுகளில்லாத கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஆங்கிலேயர்கள், தங்கள் ஆதிக்கதிற்காக அதைப் பயன்படுத்திக் கொண்டனர். இதில் வர்க்கநலன் ஒளிந்தல்ல ; வெளிப்படையாகவே தெரிகிறது.

மார்க்சு சுட்டுவதைப் போலவே பெரியாரும் ஆதிக்க வர்க்க நலனுக்குரிய கருவியாகவே மதம் உள்ளது என்பதை,

“மதக்கடவுள் பல! அவைகளின் சரித்திரங்கள் விபரீதம். அதன் பயனாய் மனித சமூகம் பிரிக்கப்பட்டிருக்கிறதே தவிர, ஒன்றுபடுத்தப்படவில்லை. சடங்குகள், பிராத்தனைகள் முதலியவை பொருளாதாரக் கேட்டுக்கும் ஒருவரையொருவர் சுரண்டுவதற்கும் ஏற்ற வண்ணமே வழங்கப்பட்டு வருகிறதனால் – ஒரு வகுப்பு உயர்வு, ஒரு வகுப்பு தாழ்வும்  ஆகி வருகிறது; மதத்தால் நாடு கெட்டது.”  – (பெரியார் :ஈ.வெ.ரா.சி.,ப.1198)

என்றும்,

“சமுதாய வாழ்வில் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது மாத்திரமில்லாமல், பொருளாதாரத்தில் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் மதம் மூலக்காரணமாய் இருக்கிறது. உண் மையில் நீங்கள் யோசித்துப் பாருங்கள் ; உடல் வலிக்கப் பாடுபட ஒரு சாதியும், நோகாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஒரு சாதியும் மதம் சிருஷ்டிக்கவில்லையா?”  – (பெரியார் :ஈ.வெ.ரா.சி.,ப.1382).

என்றும் பெரியார் குறிப்பிடுபவை ஆழ்ந்து சிந்திக்கத்தக்கவை. இவற்றிலிருந்து வர்க்க – சாதிய வேறுபாடுகளை நீடிக்கச் செய்வதற்கான கருத்தியலாக மாத்திரமல்லாது நிறுவனமாகவும் மதம் செயல்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

மார்க்ஸ், அன்னிய முதலாளிகள் இந்தியாவிற்கு வந்து தமது மேலா திக்கத்தை நிலைநாட்ட மதத்தை எவ்வாறு பயன்படுத்தினா் என்பதை விளக் கியுள்ளார். பெரியார் இந்தியப் பார்ப்பன மற்றும் பணக்காரர்கள் தங்களின் சுரண்டல் தொடர்வதற்கு மதத்தை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை விவரித்துள்ளார்.

சாதி

பிறப்பினடிப்படையில் சமூகத்தின் எந்தவொரு விளைச்சலையும் பூரணமாக அனுப்பவிப்பதைத் தடுப்பது இந்தியச் சாதீய அமைப்பு முறை யாகும். இதனால் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியும கேள்விக்குறியாகவே இருந்துவந்தது. இன்றுங்கூட அதன் எச்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

பிரிட்டிஷாரின் ஆட்சியின்போதும், அதற்கு முந்தைய காலங்களிலும் உலகெங்கிலும் இல்லாத விசித்திரமான சமூகக் கட்டமைப்பு இந்தியாவில் மட்டும் நிலவிவந்தது. பிற நாடுகளில் தொழில் பிரிவினையிலிருந்து தொழிலாளி வர்க்கம் தோன்றியது. இந்தியாவிலோ தொழில் பிரிவினை யிலிருந்து சாதி தோன்றியது; மக்கள், வர்க்கமாகத் திரள்வதைச் சாதி தடுக்கிறது; நீர்த்துப் போகவும் செய்கிறது. ஒவ்வொரு சாதியினருக்கும் உரிய தொழில் இதுதான் என்றும், குறிப்பிட்ட சாதியில் பிறப்போர் தாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்தத் தொழிலைச் செய்துதான் ஆகவேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கப்பட்டது. ஒவ்வொரு தொழில் செய்யும் சாதியினரும் சமூக இயக்கத்தின் தவிர்க்கவியலாத அங்கம் என்பதை எண்ண மறந்து அவர்களுக்குள் உயர்வுதாழ்வுகளை பார்ப்பதோ தீண்டுவதோ கூடாது என்பதுவரை – கற்பித்துக் கொண்டனர்; கற்பிக்கப்பட்டது.  இதனால் படித்தோன் காலங்காலமாகப் படித்தோனாகவும் துவைததோன் காலங் காலமாத் துவைத்தோனாகவும் என்றும் இருப்பதற்கான; இருக்க வைப்ப தற்கான கருத்தியல்கள் உருவாக்கப்பட்டன. இதைத்தான், ‘வர்ணாசிரமதர்மம்’ என்கின்றனர். இந்தியச் சமூகத்தின் ஈடுஇணையற்ற அழுக்கான இச்சாதீய அமைப்பே அதன் முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்பதை,

“இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் இந்தியாவின்  அறிவாற் றலுக்கும் மிக முடடுக்கட்டையாக இருக்கும் இந்தியச் சாதிகளுக்கு அஸ்திவாரமாக விளங்கும் பரம்பரைக் குலத்தொழில் பிரிவி னைகளை இருப்புப்பாதை அமைப்பதிலிருந்து உருவாக்கப்படும் நவீன இயந்திரத் தொழில்கள் கலைத்துவிடும்.” – (இந்தியாவைப் பற்றி., ப.108).

“இந்தச் சிறு சமூகங்கள் சாதி வேறுபாடுகளாலும், அடிமை முறையாலும்களங்கமடைந்திருந்தன.”      (இந்தியாவைப் பற்றி, ப.108).

என்ற மார்க்ஸின் நிர்ணயிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. இங்கு மார்க்ஸ் எதிர்பார்த்ததுமாதிரி நவீன எந்திரத் தொழில்கள் வந்தும் வளர்ந்தும் சாதீயத்தின் வலிமை அவ்வளமாகச் செயலிழக்கவில்லை என்பது ஆழ்ந்து பரிசீலிக்கத்தக்கதாகும்.

அதைப்போலவே, சமூகக் கூறுகள் ஒவ்வொன்றுக்கும் அடித்தளமாக விளங்குவது பொருளாதாரமே என்பதை நிறுவிய மார்க்ஸ் இந்தியச் சமூகத்தின் சாதீய அமைப்புக்கு அஸ்திவாரமாக இருப்பது குலத்தொழில் முறையே என்று கூறியிருப்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. பொருளியல் காரணிகளைவிடக் கருத்தியல் காரணிகளின் ஆதிக்கமும் தாக்கமும் இந்தியச் சமூகத்தில் அதிகமாக இருந்து வந்துள்ளது என்பதை மார்க்ஸின் கருத்து நிறுவுகிறது. அறிவுவளர்ச் சிக்கான தடைக்கல்லாகச் சாதி உள்ளது என்ற மார்க்ஸின் கணிப்போடு பெரியாரின் விமர்சனம் பெரிதும் பொருந்துகிறது:

“உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும் அது நமது நாட்டைப் பொருத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனார் ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் இருக்க முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் சாதி ஒழிந்த இடமாகும்… ஏனெனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும். மனிதன் மடையனாக – அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் சாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் மடைமைக்கும், அடிமைத்தனத்துக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலைநிறுத்துவதுதான். சாதி ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர்கள் என்பவையாகும்” – (மேற்கோள், பெரி/சுய/சம : பக் 449-450).

மார்க்ஸ் குறிப்பிடும் இந்தியச் சாதிகளுக்கு அடிப்படையாக விளங்கும் பரம்பரைக் குலத்தொழில் பிரிவினைகள் பெரியார் குறிப்பிடும் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை. சமூக ஒத்திசைவுக்கும் வளர்ச்சிக்கும் ஊறுவிளைவிப்பதாகச் சாதி உள்ளது என்பதும் அது அகற்றப்பட வேண்டும் என்பதும் இருவரின் உள்ளக்கிடக்கையாகும். மார்க்சால் ‘பரம்பரைக் குலத்தொழில்’ என்று சுட்டப்படுவதும், பெரியாரால் ‘சாஸ்திரம்’ என்று குறிப்பிடப்படுவதும் வருணாசிரம தரும முறையேயாகும்.

இந்தியச் சமூகம் : மார்க்சும் பெரியாரும் - முனைவர் சு.மாதவன் | Putting Marx and Periyar on the same page, analysed the fundamental issues of Indian society

மூடநம்பிக்கை

எந்தவொரு காரண – காரிய இயைபும் இல்லாமல் ஏதாவது ஒன்றை நம்புவதை “மூடநம்பிக்கை” என்கிறோம்.  புராதன சமூகத்தில் இருந்த மனிதன் பட்டறிவுக்குறைவால் தனது அறிவுக்கும் அனுபவத்திற்கும் எட்டாதவற்றின்மீது ஓர் பயங்கலந்த மரியாதை செலுத்தித் தொடங்கினான் ; வணங்கவும் செய்தான். ஆண்டான் – அடிமைச்சமூகத்தில் அத்தகைய நம்பிக்கைகள் பெருகின. இன்றைய நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ சடூமூகத்திலும் அவை நிலவி வருகின்றன.  இந்நிலை ஆங்கிலேய ஆட்சியின்போதும் இருந்தது.

சகமனிதனால் வாழ்க்கை இழந்து நிற்கும் மனிதன், தனது தாழ்வு நிலைக் கான காரணங்களை ஆராய்ந்துநோக்க எண்ணாமல் கடவுளின் அவதா ரங்களாக அல்லது குறியீடுகளான விலங்குகளை வணங்கிய மூடநம்பிக்கயை மார்க்ஸ் கடுமையாக நையாண்டியாக – விமர்சனம் செய்துள்ளார்.

“இயற்கையின் எஜமானாகிய மனிதன், குரங்காகிய அனுமான் முன்பும். பசுமாட்டின் முன்பும் தெண்டனிட்டு வணங்கியதில், இந்தச் சிறுமை காட்சியளித்தது.  இவற்றையும் நாம் மறக்கக் கூடாது.  அவை மனிதனது சிந்தனையைக் குன்றிய வட்டத்தில் சுழலச்செய்து, அதனை மூடநம்பிக்கைக்கு ஏற்ற கருவியாகவும் மரபின் அடிமையாகவும் செய்து, அதன் மேன்மை முழுவதையும் – வரலாற்றுப் படைப்பாற்றல் அனைத்தையும் – இழக்கச் செய்துவிட்டன என்பதையும் நாம் மறப்பதற்கில்லை.” – (இந்தியாவைப் பற்றி., பக்.27-28).

என்ற அவரது விமர்சனம் இத்தகைய மூடநம்பிக்கையின் இழிநிலையையும் சிந்தனையை மழுங்கடிக்கும் தன்மைமையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நிற்கிறது.

“விலங்குகளை வணங்கும் மூடநம்பிக்கையை, இன்றும் இந்துக்கள் கோடிக்கணக்கான கடவுள்களை உருவத்துடன் மாத்திரமில்லாமல் பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி, ஆடு, மாடு, குதிரை, யானை, எலி, பெருச்சாளி, மயில், கருடன், பாம்பு ஆகிய உருவங்களுடன் வணங்குகிறார்கள். இவையெல்லாம் மேல்சாதி – கீழ்சாதி அனைவரிடமும் உள்ளன.” – (பெரியார் :ஈ.வெ.ரா.சி.,ப.1380).

என்று பெரியாரும் விமர்சித்துள்ளார். மார்க்ஸ் இத்தகைய மூடநம்பிக்கைகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை விவரித்துள்ளார். பெரியார் அதை நையாண்டி செய்வதோடு சமூகத்தில் தன்னை அறிவா ளியென்று காட்டிக் கொள்கிற பிராமணரிடமும் இம் மூடநம்பிக்கை நிலவு கிறது. என்பதைச் சுட்டியுள்ளார். இதைப் பிராமணர்களும் மூடத்தனமாக இருந் தார்கள் என்று புரிந்துகொள்ளக்கூடாது. மாறாக, இதைத் திட்டமிட்டே செய்தனர் என்றே கொள்ள வேண்டும். பெரியார் இந்த முரண்பாட்டை எடுத்துக்காட்டுவதன்மூலம் நடைமுறையளவில் பிராமணனும் மூடநம்பிக் கையைப் பின்பற்றுபவனே என்பதாக நையாண்டி செய்துள்ளார். மார்க்ஸ் குறிப்பிடும் ‘வரலாற்றுப் படைப்பாற்றல் இழப்பு’ என்பது எவ்வெவற்றால் நிகழ்ந்தது என்பதைப் பெரியார் பட்டியலிடும் பாங்கு வியக்கத்தக்கது.

மனுதர்மம்

வேதங்களும் உபநிடதங்களும் கட்டமைத்த சமூக நிறுவனங்களை அப்படியே நிலைநிறுத்துவதற்கென்று எழுந்தது மனுதர்மம். அதாவது, இயல்பாக வளர்கின்ற சமூகத்தைத் தாம் விரும்புகிற அல்லது தமது கட்ட ளைக்குக் கட்டுப்பட்டிருப்பதாக நிலைநிறுத்துவதே மனுதர்மத்தின் அடிப்படை.  இத்தகைய தன்மைகளோடு அவர் எதைச் செய்தாலும் அந்நடவடிக்கை மனுதர்மத்தின் பாற்பட்டதாகவே கொள்ளப்படும். அந்தவகையில், 1853 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் இந்திய அதிகாரியாக இருந்த சர்.சார்லஸ்வுட் செயல் பட்டதால் மார்க்ஸ் அவரை ‘நவீன மனுதர்மன்’ என்றே குறிப்பிடுகிறார்.  ஏனென்றால், 1854 இல் காலாவதியாகும் கிழக்கிந்தியக் கம்பெனியின் சாசனத்தை ஒரேயடியாக மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் பரிந்துரை செய்தார் அவர்.  இந்திய விவகாரங்கள் குறித்து சட்டமியற்றும் எல்லா வேலைகளையும் ஒத்திப்போடும்படி இங்கிலாந்து மக்களும் இந்திய மக்களும் ஒருமித்த குரலில் கோரிய நிலையிலும் அவர் பிடிவாதமாய் நின்றார். மக்களின் விருப்பத்தைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் மனுதர்மம் எப்படி விதிகளைத் திணிக்கிறதோ அதுமாதிரி சர்.சார்லஸ்வுட்டும் செயல்படுகிறார் என்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்காகத்தான் இந்தியப்புரிதலுக்கேற்ற ‘மனுதர்மன்’ என்ற சொல்லால் அவரைக் குறிப்பிடுகிறார் மார்க்ஸ்.

இது குறித்து மார்க்ஸ் எழுதுவது இதுதான்:

“உடனடியாகவும் நேரடியாகவும் அது (அரசு) 15கோடி மக்களுக்குச் சட்டமியற்ற விரும்புகிறது. அதுவும் ஒரேயடியாக 20 ஆண்டுகளுக்குச் சட்டமியற்ற வேண்டுமென்கிறது. சர்.சார்லஸ் வுட் தன்னை நவீன மனுதர்மனாக நிலைநாட்டிக்கொள்ள விரும்புகிறார்.” – (இந்தியாவைப் பற்றி., ப.8).

சமூகத்தின் இயல்புநிலைக்கு ஒவ்வாதவற்றைத் திணித்து அதையே நிலையானதாக்க முயலுவதில் மனுவும் சர்.சார்லஸ் வுட்டும் ஒன்றுபடுகிறார்கள்.  இதர கருத்தியல்களைப் போலவே ஆங்கிலேயர்கள் இதையும் தங்கள் ஆதிக்கத்திற்கு உதவியாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

“வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டில் தங்களது ஆட்சி என்றும் நிலைத்திருக்கவும், இந்த நாட்டுச் செல்வத்தைத் தாராளமாய்த் தங்கள் நாட்டுக்குக் கொள்ளைகொண்டு செல்லவும் உத்தேசித்து இந்த நாட்டில் யாருடைய தயவு தங்களுக்கு இருந்தால் தங்களது எண்ணம் தாராளமாய் நிறைவேறுமோ அவர்களது தயவைப் பூர்ணமாய்ச் சம்பாதிக்க வேண்டியே, அவர்கள் மனித தர்ம ஆட்சி என்பதை அடியோடு மறந்து முழுவதையும் கைவிட்டு மனுதர்மப்படி ஆட்சி முறையை வகுத்து நடத்த வேண்டியர்களானார்கள்.” – (பெரியார் :ஈ.வெ.ரா.சி.,ப.177).

என்ற பெரியாரின் மதிப்பீடும் மார்க்ஸின் கருத்தோடு ஒப்புமை உடையதாகவே விளங்குகிறது. மார்க்ஸ், மனுதர்மத் தன்மையோடு  ஆங்கிலேயர்கள் ஆட்சியை நடத்தினார்கள் என்பதோடு நிற்க, பெரியாரோ மனுதர்மத்தின் காவலர்களான பிராமணர்களின் ஆதரவோடு – அவர்களுக்குப் பயன்விளைவதாகவே ஆட்சியை நடத்தினார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

இந்தியக் கிராமங்கள்

“இந்த அமைதியான கிராமச் சமூகங்கள் சாதுக்களாகத் தோன்றிப் போதிலும், கீழ்க்கண்ட கொடுங்கோன்மைகளுக்குத் திட்டமான அடிப்படையாக இருந்தன என்பதை நாம் மறக்க முடியாது; அந்தச் சமூகங்கள் மனித மூளையைச் சின்னஞ்சிறு கூட்டுக்குள் அடைத்து – அதைவிட மூடநம்பிக்கையின் சுலபமான கருவிகளாகவும் பரம்பரைச் சம்பிரதாய விதிகளின் அடிமையாகவும் ஆக்கியதையும், சகல வகைப்பட்ட சிறப்புக்களையும் சரித்திரப் பூர்வமான சக்திகளையும் மனித மூளை பெறமுடியாமல் செய்ததையும் நாம் மறக்க முடியாது.”  – (இந்தியாவைப் பற்றி.,ப.26).

என்று இந்தியக் கிராமங்களின் தன்மைகளை விவரிக்கிறார் மார்க்ஸ். ஒவ்வொரு கிராமத்தில் வாழும் மனிதனுக்கும் அவனது கிராமமே மிஞ்சிப் போனால் சுற்றுப்பத்து (சுத்துப்பத்து) கிராமங்களே உலகம் என்பதான நிலையில் முந்தைய இந்தியா இருந்ததைத் துல்லியமாகப் பதிவுசெய்துள்ளார் மார்க்ஸ். சமய விதிகளும் சமூக விதிகளும் இந்தியக் கிராம மக்களை,

“தேக்கம் நிறைந்த அசைற்ற வாழ்க்கை – சிருஷ்டிக்கும் திறனில்லாத செயலற்ற வாழ்க்கை”  – (இந்தியாவைப் பற்றி., ப.27).

வாழவைத்தது என்பதையும் மார்க்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

சகலவகைப்பட்ட சிறப்புக்களையும் வரலாற்றுப்பூர்வமான சக்திகளையும் மனிதமூளை பெறமுடியாதபடிக்கு இந்தியக் கிராமங்கள் இருந்தன என்பதை மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போலவே பெரியாரும்,

“கிராமம் என்றால் என்ன? அதில் பள்ளிக்கூடமில்லை, ஆஸ்பத்திரி இல்லை. டிராமா இல்லை, பார்க் இல்லை, நீதி ஸ்தலமில்லை, போலீஸ் காவல் இல்லை, நல்ல ரோட்டு வசதியில்லை, விளக்கு இல்லை, நல்ல தண்ணீர் இல்லை, உயர்ந்த நாகரீகம் என்பது இல்லை, பெரும்பாலும் வயிற்றுக்கு ஆகாரம் சம்பாதிப்பதைவிட வாழ்வு ஆசைக்குப் பணம் சம்பாதிக்கும் வசதியில்லை – இப்படி இன்னும் பல வசதிகள் (நகரத்தானுக்கு இருப்பவைகள்) “கிராமத்தானுக்கு இல்லை” – (கிராமச் சீர்திருத்தம், ப.6)

என்று அதே சிந்தனையோட்டத்தோடு கூறியிருப்பது ஒப்புநோக்கத்தக்கது. பெரியார் பட்டியிலிடும் மேற்கண்டவற்றைப் பெற்ற நகரமக்களின் வளர்ச்சியோடு எந்தவகையிலும் ஒப்புநோக்கத்தக்கதாக இந்தியக் கிராமங்கள் அன்றைக்கும் இருக்கவில்லை என்பதே இருவரின் முடிவாகவும் இருப்பது நோக்கத்தக்கது. எனவே, உலக  ஞானத்தைக் கிராம மக்கள் பெறுவதற்கு அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்புகளும் வாழ்க்கை முறையும் சிந்தனையும் அவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதே இருவரது எதிர்பார்ப்பாகும்.

விடுதலையும் சமூக மாற்றமும்

ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறப்போகும் இந்தியா எத்தகைய தன்மையிலான விடுதலையைப் பெறப் போகிறது என்பதைத் தீர்க்கதரிசனத்தோடு கீழ்க்காணுமாறு எழுதுகிறார் மார்க்ஸ்:

“பிரிட்டனில் இன்று அதிகாரத்திலிருக்கும் ஆளும் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டு, இயந்திரத் தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது வரையிலும் அல்லது ஆங்கிலேய ஆதிக்கத்தை அறவே ஒழித்துக்கட்டும் அளவுக்கு இந்தியர்கள் வளர்ந்து வலிமைபெறும்வரையிலும் பிரிட்டீஷ் முதலாளிகளால் அங்குமிங்கும்  உருவாக்கப்பட்டிருக்கும் சமுதாயத்தின் புதிய அம்சங்களின் பலன்களை இந்தியவர்கள் அனுபவிக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் சரி, அந்த மகத்தான, கவர்ச்சியான தேசம் ஏறக்குறைய தூரத்திலுள்ள ஒரு காலத்தில் மறுமலர்ச்சியடைவார்கள் என்று நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.”          (இந்தியாவைப்பற்றி., ப.107)

மார்க்சால் கவனமாகவும், சரியான புரிதலோடும் கையாளப்பட்டுள்ள வார்த்தை, “மறுமலர்ச்சியடைவார்கள்” என்பதாகும். இந்தியாவில் சமூக மாற்றம் ஒன்றும் இப்பொழுது நிகழப்போவதில்லை.  ஆட்சி மாற்றம் நிகழ்வது மட்டும் நிச்சயம் என்பதை அந்த வார்த்தை அழுத்தமாகக் குறிப்பிடுகிறது. இத்தகைய ஆட்சி மாற்றம் அனைத்து மக்களுக்கும் பலனளிப்பதாக இருக்காது என்பதுதான் பெரியாரின் வாதமும். அதனால்தான் அவர்,

“இந்தியாவுக்கு ஏதாவது அரசியல் மாறுதல் ஏற்படுத்த வேண்டுமானால் அதில் மனுதர்மக் கொள்கைகள், வருணாசிரக் கொள்கைகள் ஆகியவைகள் இல்லாத ஆட்சி ஏதாவது ஏற்படக் கூடும் என்கின்ற நம்பிக்கை சிறிதாவது இருந்தால்தான் இந்த ஆட்சியை மாற்ற முயற்சிக்கலாமே ஒழிய, மற்றபடி செய்யும் அரசியல் முயற்சிகள் பாமர மக்களின் தற்கொலை முயற்சியாகும்.” – (பெரியார் :ஈ.வெ.ரா.சி.,ப.777).

என்று கருத்தறிவித்தார். இந்த அணுகுமுறைதான் இந்திய விடுதலை நாளைக் கறுப்புநாள் என்று அவரை அறிவிக்க வைத்தது.  எனினும், சமூக வளர்ச்சி வரலாற்றில் மாற்றத்திற்கான ஒவ்வொரு பாய்ச்சலும் முயற்சியும் அவசியத்தேவையென்றே மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில், அந்நியச் சுரண்டலின் இருந்தும் ஆதிக்க – அடிமைத் தளத்திலிருந்தும் விடுதலை யடைவது  காலத்தின் தேவை என்றே கருத வேண்டியுள்ளது. இங்கு, பெரியா ரின் அச்சம் நியாயமானதுதான் என்பதையும் இன்றைய அரசியல் சூழல் தெளி வாக்குகிறது, இன்று மனுதர்மம், வருணாசிரம பாரப்பனக் கொள்கைகள் புத்துயிர் பெற்று எழுவது மக்கள் நலனுக்கு எதிரானது என்பது உண்மையே.

சமூக வரலாற்றில் ஒவ்வொரு சமூக அமைப்பும் அதற்கு முந்தைய சமூக அமைப்பைவிட முற்போக்கானது என்று மதிப்பிடப்படுகிறது.  ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்தது நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பாகும். இயங்கியலின்படி அது முதலாளித்துவ சமூகமாக மாறவேண்டும். அவ்வாறு இந்தியா முதலாளித்துவ சமூகமாக மாறுவதற்கும் சமத்துவச் சமூகத்தை நோக்கி நடைபோடுவதற்கும் தேவையான அடிப்படைப் பணிகளை ஆங்கிலேயர்கள் நிறைவேற்ற வேண்டுமென்று மார்க்ஸ் விரும்பினார் ; ஏனெனில், ஒவ்வொரு சமூக அமைப்பும் தனக்கு நேர் எதிரான விளைவுகளை உண்டாக்கும் காரணிகளைத்  தம்மை அறியாமல் தாமே உற்பத்திசெய்து கொள்கிறது என்பது மார்க்சீயம். எனவே,

“இந்தியாவில் இரண்டு கடமைகளை இங்கிலாந்து ஆற்ற வேண்டி யிருக்கிறது; ஒன்று அழிக்கும் வேலை; மற்றொன்று புத்துயிரளிக்கும் வேலை. பழைய ஆசிய சமுதாயத்தை அழிக்கவேண்டும்;  அத்துடன் ஆசியாவில் மேற்கத்திய சமுதாயத்தின்  பௌதிக அடிப்படைகளை அமைக்க வேண்டும்.” – (இந்தியாவைப் பற்றி.,ப.99).

என்று கூறினார். அவர் குறிப்பிடும் ‘அழிக்கும் வேலை’ என்பது இந்தியாவில் சனாதன – வருணாசிரம் தர்மமுறையை அழித்தலையாகும்.  ‘புத்துயிரளிக்கும் வேலை’ என்பது ஏற்கனவே இந்தியச் சமூகத்தில் வளர்ந்திருப்பது அன்றைய நிலையில் சக்தியற்றிருந்த உலகாய்தச் சிந்தனைகளுக்குப் புத்துயிரளிப்பதாகும்.

அதை மேற்கத்திய சமுதாயத்தின் பௌதிக அடிப்படைகளான ஆலை களையும் சிந்தனைகளையும் இந்தியாவில் அமைப்பதன் வாயிலாக நிறை வேற்ற வேண்டும் என்று விரும்பினார் எனலாம்.  எனினும்,

“ஆசியாவின் சமூக அடிப்படையான புரட்சி ஏற்படாமல், மனிதகுலம் தன் லட்சியத்தில் நிறைவு எய்துமா என்பதே கேள்வி.” – (இந்தியாவைப் பற்றி.,ப.99).

என்ற அவரது கூற்றை ஆழ்ந்து நோக்கவேண்டியுள்ளது.  ‘மனித குலத்தின் இலட்சியம்’ என்று மார்க்ஸ் குறிப்பிடுவது பொதுவுடைமைச் சமூகத்தை நிர்மாணிப்பதையேயாகும்.  அது நிறைவேற வேண்டுமாயின் இந்தியச் சமுதாயத்தின் சிறப்புத் தன்மையான வருணாசிரம தருமத்தை அழிக்க வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. ஆக, இந்தியச் சமூக நிறுவனங்களின் பழமைத் தன்மைகளை உடைத்தெறிய வேண்டியதை இந்தியச் சமூக மாற்றத்தை உருவாக்குவதற்கான அடிப்படைகளுள் ஒன்றாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமானுடப் பொதுவுடைமை வாழ்வியலை முழுமைப்படுத்துவதாகவும் அமையும் எனவும் மார்க்ஸ்  கருதியுள்ளார் என்பது உறுதியாகிறது.

“இந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு முதலாவது வருணாசிரம முறை ஒழிய வேண்டும்; இரண்டாவது மத சம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும் ; மூன்றாவது, கோவில், குளம், சடங்கு, சாத்தான், சனி விலக்கு ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும். பிறகு, அரசன் ஜமீன்தார் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்.” – (மேற்கோள் பெரியார் : சுய /சம., ப.169).

என்றும்,

“……..இந்தியாவுக்கு முக்கியமாய் வேண்டியதான காரியங்கள்..

மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு உணர்ச்சி மறைதல்
ஆண், பெண் வித்தியாச உணர்ச்சி ஒழிதல்
ஏழை, பணக்காரன் என்ற தன்மை, உணர்ச்சி அழிதல்.” – (மேற்கோள் பெரியார் : சுய /சம., ப.160).

என்றும் பெரியார் குறிப்பிடுகிறார்.

இருவருமே வர்க்க பேதமற்ற, மூடவழக்கங்களற்ற சமூகம் உருவாக வேண்டுமென்று விரும்பியுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று பெரியார் கூறிய அதே வேளையில் ஆட்சி மாற்றம் – அரசியல் மாற்றம் யார் கையில் வரப்போகிறது என்பதையும் உன்னிப்பாகக் கவனித்தார்.  எனவேதான், மனுதர்மம், வருணாசிரம் தர்மம், பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்த ஆட்சியாக அது மலர வேண்டுமென்று உறுதிபடத் தெரிவித்தார். அதே காலகட்டத்தில் அரசியல் அதிகாரம் காங்கிரஸ் கைக்குப் போவதை – சுரண்டும் வர்க்கத்திடம் ஆட்சி அதிகாரம் செல்வதை – கம்யூனிஸ்டுகளும் மறுதலித்தார்கள் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.

மார்க்ஸ் சுட்டும் அழித்தல் வேலைக்கே பெரியாரும் மிகுந்த முக்கியத் துவம் அளித்தார். கிராமச் சீர்திருத்தத்தில் மேற்கத்திய பௌதிக அடிப்ப டைகளை அமைப்பதற்குரிய செயல்திட்டங்களையும் பெரியார் முன்வைத் துள்ளார் (கிராமச் சீர்த்திருத்தம். பக் 12-13).

சமூகத்தைத் தேக்கநிலைக்கு ஆளாக்கும் கருத்தியல்களை உடைத் தெறிந்து விட்டால் பௌதிக அடிப்படைகளை அமைப்பதற்கான சரியான சூழல் உருவாகும் என்று இருவருமே நம்பியுள்ளனர். ஆனால், இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களின் செல்லத்தக்க தன்மைகளோடு இருக்க வேண்டும் என்பதுதான் வரலாற்றுத் தேவையாக உள்ளது. இதைத்தான், இன்றைக்குப் பொதுவுடைமை மற்றும் திராவிட இயக்கங்கள் தங்கள் படிப்பி னையாகக் கற்றுக்கொண்டுள்ளன அல்லது கொள்ள வேண்டியுள்ளன எனில் அது மிகையில்லை.

 துணைநூற்பட்டியல்

1. ஆனைமுத்து.,வே.

(பதி.ஆ.)

1974 பெரியார்:.வெ.ரா.சிந்தனைகள்

தொகுதி 1,2,3, சிந்தனையாளர் கழகம்

திருச்சிராப்பள்ளி -2

2. கார்ல் மார்க்ஸ்

பிரெடரிக் எங்கெல்ஸ்

1971 இந்தியாவைப்பற்றி,

தமிழாக்கம்:

எஸ்.ராமகிருஷ்ணன்,

ஆர்.எஸ்.நாதன் ஆர்.கிருஷ்ணய்யர்,

நியூசெஞ்சரி புக் ஹவுஸ், பிரைவேட் லிட்,

6, நல்லதம்பிச் செட்டித்தெரு,

சென்னை

3. தந்தை பெரியார் 1988 கிராமச் சீர்த்திருத்தம்,

பெரியார் சுயமரியாதை

பிரச்சார நிறுவன வெளியீடு,

சென்னை-600 007.

4. நெடுஞ்செழியன்.,க. 1990 தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்

மனிதம் பதிப்பகம் திருச்சி -21

5. ராஜதுரை.,எஸ்.வி.

கீதா.,வ.

1976 பெரியார்:சுயமரியாதை சமதர்மம்

விடியல் பதிப்பகம்,

3 மாரியம்மன் கோவில் வீதி,

உப்பிலிப் பாளையம்,

கோவை -641 005

6. Karl Marx

Frederick Engels

1973 Collected Works, Vol-3

Progress Publishers, Moscow.

 

எழுதியவர் : 

✍🏻 – முனைவர் சு.மாதவன்
உதவிப்  பேராசிரியர் & தலைவர்
தமிழாய்வுத் துறை
இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி
செங்கல்பட்டு
மின்னஞ்சல் : munaivarsumadhavan@gmail.com

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *