2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில். இந்தியாவை உலகளவில் முதன்மை தேசமாக்குவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, இந்தியாவில் தயாரிப்பது, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப் பு, பெண்களுக்கானச் சமத்துவம், நல்லாட்சி, உள்ளடக்கிய வளர்ச்சி, உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. இத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது 354 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் பா.ஜ.க தனித்து 303 இடங்களில் வெற்றிபெற்றது. இது பா.ஜ.க 2014ல் வெற்றி பெற்றதைவிடக் கூடுதலாக 21 இடங்களில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான ஆட்சியானது பா.ஜ.க சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதிரடி நடவடிக்கைகளை அரங்கேற்றியது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான அரசியல் சாசனப் பிரிவு 370 விலக்கிக்கொள்ளப்பட்டது. குடியுரிமை சட்டம் முஸ்லீம் அல்லாத இந்தியாவில் குடியேறிய மூன்று நாடுகளின் (பாக்கிஸ்தான். பங்களாதேஷ்; ஆப்கானிஸ்தான்) மக்களுக்குக் குடியுரிமை, முஸ்லீம் மக்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுதல், ராமர் கோவில் கட்டுவதற்கானப் பணிகள் துவக்கம், புதிய பாராளுமன்றக் கட்டிடம் கட்ட அடிக்கல், முஸ்லீம் பெண்களுக்கு எதிரான மும்முறை தலாக் ஒழிப்புச் சட்டம், புதிய கல்விக் கொள்கை போன்ற அதிரடி அரசியல் நிகழ்வுகள் நடந்தேறியது. 2019ன் இறுதியில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, 2019 மற்றும் 2021களுக்கிடையே மூன்று அலைகளின் தாக்கத்தினால், நாடுமுழுவதும் முழு அடைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதால் இந்தியா பொருளாதார அளவில் நிலைகுலைந்து போனது. உற்பத்தி நிறுத்தம், வேலையின்மை அதிகரிப்பு, வறுமை, போக்குவரத்து தொடர்பு அறுபடுதல், அரசுச் செலவு அதிகரிப்பு போன்ற விளைவுகள் உருவானது. இதில் வேளாண்மைத் துறை உட்பட அனைத்து துறைகளும் பெரும் பாதிப்பிற்கு உண்டானது. வேளாண்மையில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் கூலித் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியதால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு வேளாண்மை நடவடிக்கைகள் பெருமளவிற்குப், (குறிப்பாகப் பஞ்சாப். ஹரியானா. உத்திரப் பிரதேசம். கேரளா) பாதித்தது. 2019ல் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் இந்திய அளவில் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை உருவாக்கியது. மோடி அரசு 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக அதிகரிப்பது, 2024ல் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது, நீர் சேமிப்பைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலும் நிறுத்துவது, சுகாதார அளிப்பை மேம்படுத்துவது, அனைவருக்கும் வீட்டு வசதி, உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.102 கோடி மதிப்பீட்டில் 7000 திட்டங்களுக்கு (குழாய் நீர் இணைப்பு, சாலை, நீரப்பாசனம், சுகாதாரம், டீஜிடல் இந்தியா, நகர்ப்புற வசதி) ஒதுக்கப்பட்டு நடைமுறைகளை மேற்கொள்வது என்று பல செயல்பாடுகளை மோடியின் 0.2வில் முன்னெடுத்தது.

நீர் சேமிப்பு நடவடிக்கையின் முதல் படியாக ஜல சக்தி என்ற புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு ஜல சக்தி அபியான் (Jan Shakti Abhiyaan) மற்றும் ஜல ஜீவன் மிஷ்ன் (Jal Jeevan Mission) என்ற இரு திட்டங்கள் நீர் சேமிப்பிற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது. இவற்றின் முக்கிய நோக்கம் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் 2024குள் குடிநீர் இணைப்பை ஏற்படுத்தித் தருதல். நீர் வீணாகுவதைத் தடுக்கப் புதிய உத்திகளைக் கடைப்பிடித்தல். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 43 முதல் 55 லிட்டர்வரை தண்ணீர் அளிப்பது போன்றவையாகும். சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பது அரசின் கொள்கையாகும். 2018ல் ஆயுஷ்மான் பாரத் தொடங்கப்பட்டு தரமான மருத்துவத்தைச் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக மருத்துவக் காப்பீடு மற்றும் நல மையங்கள் வழியாகச் சுகாதாரம் அளிக்க ரூ.1.50 லட்சம் கோடியில் சுகாதார மையங்கள் கிராமப்புறங்களில் 2022ல் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்று இருக்க இருப்பிடம் அடிப்படையானதாக உள்ளதால் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா தொடங்கப்பட்டு 20 மில்லியன் வீடுகளுக்குப் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க 2016ல் திட்டமிடப்பட்டது. இவ்வீடுகள் அனைத்து வசதிகளும் (தண்ணீர் குழாய் இணைப்பு. மின் இணைப்பு உட்பட) உள்ளடக்கியதாக இருந்தது.

2021ல் வெளியிடப்பட்ட SAS அறிக்கையின்படி இந்தியாவில் விவசாய குடும்பங்கள் தங்களின் மாத வருமானத்தில் 37 விழுக்காடு மட்டுமே வேளாண் சாகுபடி வழியாகப் பெறுகின்றனர். 40 விழுக்காடு வருமானம் கூலியின் வழியாகவும் , 15 விழுக்காடு கால்நடை வளர்த்தல் மூலமாகவும் , 6 விழுக்காடு வேளாண் சாரா வணிகம் மூலமாகவும் , 1 விழுக்காடு நிலம் குத்தகைக்கு விடுவதன் மூலமாகவும் பெறப்படுகிறது. 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தது. இடுபொருட்களுக்கான மானியத்தைத் தொடர்ந்து வழங்குதல், உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தரமான இடுபொருட்களைப் பயன்படுத்துதல், வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலையினை அதிகரிக்கக் குறைந்த பட்ச ஆதரவு விலையினை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கச் செய்வது, வேளாண் உற்பத்தியில் அதிக அளவிற்கு உபரியை உருவாக்கிச் சந்தை படுத்துதல் , வேளாண் மற்றும் வேளாண் சாரா இரண்டுக்குமான வர்த்தக நிர்யினை அதிகரிப்பது, நேரடியாக விவசாயிகளுக்கு வருமானம் அளிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு தீவிரமாக நடைமுறை படுத்திவருகிறது.

10000 புதிய விவசாயிகள் உற்பத்தி அமைப்பை அடுத்த ஐந்தாண்டுகளில் தொடங்கி விவசாயிகள் பலன்பெற மாநில அரசுகள் மின்-சந்தை (e-NAM) தொடங்க அனுமதி அளிப்பது, வேளாண்மையில் பூஜ்ய செலவிலான திட்டம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.

வேளாண்மையில் மின்சாரப் பம்பு செட்டுகள் நீர்ப்பாசன வசதியினை அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பல மாநிலங்களில் விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. ஆனால் மின் பற்றாக்குறை நிலவிவருவதால் தடையற்ற மின்சாரம் கிடைப்பது இல்லை. எனவே அரசு முறைசார ஆற்றலைப் பயன்படுத்திப் பம்பு செட்டுக்களை நீர் இறைப்பிற்குப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஜூலை 2019ல் நீர்ப்பாசன வசதிக்காக மோட்டார் பம்பு செட் பயன்பாட்டிற்குப் பிராதான் மந்திரி கிசான் உர்ஜா சுரகூஷ உத்தன் மஹாவியான் திட்டம் (PM-KUSUM) அறிமுகப்படுத்தப்பட்டது. டீசல், மண்ணெண்ணெய் பயன்பாட்டிற்கு மாற்றாகச் சூரியஒளியினைப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது. இதன்படி 20 லட்சம் விவசாயிகளுக்குப் பம்பு செட்டுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இத்துடன் 15 லட்சம் விவசாயிகளுக்குச் சோலார் பம்பு செட்டுகள் 60 விழுக்காடு மானியத்துடன் , 30 விழுக்காடு அரசுக் கடனுடன் அமைத்துத் தர முடிவெடுக்கப்பட்டது. சோலார் பேனல் வழியாக உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை விற்கவும் விவசாயிகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உபரியாக உள்ள வேளாண் விளைபொருட்களை வெளிநாடுகளில் சந்தைப் படுத்துவதால் விவசாயிகளுக்கு அதிக வருமானத்தையும் பெற இயலும். இதற்கு முக்கியத் தேவையாகக் கிடங்குகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகளை உருவாக்கித் தரப்படுகிறது. 162 மில்லியன் மெட்ரிக் டன் கொள்ளவுக் கொண்ட சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் போன்றவை நபார்டு (NABARD) உதவியுடன் அமைக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அழுகக்கூடிய பொருட்களான பால், இறைச்சி, மீன் ஆகியவற்றை விரைவுப் பரிவர்த்தனைக்குக் கொண்டு செல்லா ஏதுவாக இந்திய ரயில்வே ‘விவசாயி இரயில்’ பொது-தனியார்-பங்கேற்புடன் இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சுய உதவிக் குழு உதவியுடன் கிராமப்புறச் சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைந்த முறையில் தோட்டக்கலையை மேம்படுத்த ஏற்றுமதி சந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மானாவாரி பயிரிடும் பகுதிகளை ஒருங்கிணைந்த முறையில் பல்லடுக்கு பயிர்செய்தல், தேனி வளர்த்தல், சூரியஒளி பம்புகள், சூரியஒளி உற்பத்தி போன்றவை ஏற்படுத்தவும், வேளாண்மையில் பூஜ்ய செலவின் அடிப்படையிலான திட்டத்தை விரைவுபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் நீடித்த மேம்பாட்டுக்குப் பிரதம மந்திரி கதி சக்தி என்ற திட்டத்தின்படி சாலை, ரயில்வே. விமான நிலையம், துறைமுகம், பொருண்மை போக்குவரத்து, நீர் வழிப் போக்குவரத்து, போக்குவரத்து உள்கட்டமைப்பு, போன்றவற்றை வலுப்படுத்த முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவுச் சாலைகளை உருவாக்க ரூ.2000 கோடியில் 25000 கி.மீ அமைக்கவும், மக்கள் மற்றும் பொருட்களை வேகமாகப் பயனிக்கவும், எடுத்துச் செல்லவும் பலநிலை போக்குவரத்து வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ட்ரோன்கள் முறையைப் பயன்படுத்தி வேளாண் விளைச்சலைக் முன் கணிப்பு செய்தல், நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுதல், வேளாண்மையைத் தாக்கும் புதியவகைப் பூச்சிகள் அழிப்பு, மண்ணின் உயிர்ச்சத்தை அதிகரிப்பது போன்றவை நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுபோல் வேளாண்மை மீதான முதலீடுகள் குறிப்பாக நீர்ப்பாசம், ஆராய்ச்சி, சந்தை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற முயற்சிகளும் அரசு மேற்கொள்கிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு வேளாண் சார்புத் துறைகளை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பிரதான் மந்திரி கிராமப்புறச் சாலை இணைப்புத் திட்டம் 2000ல் அன்றைப் பிரதமர் வாஜ்பாயால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் செயல்பாடுகள் அரசியலைக் கடந்து கிராமப்புறச் சாலை இணைப்பு மற்றும் மேம்பாட்டில் நல்ல முன்னேற்றம் கண்டதால் கிராமங்களில் சமூக-பொருளாதாரத் தளங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது 97 விழுக்காடு குடியிருப்புகள் சாலை இணைப்பைப் பெற்றுள்ளது. மோடியின் ஆட்சியில் பிரதான் மந்திரி கிராமப்புறச் சாலை இணைப்பு திட்டம் பகுதி மூன்றுக்கு ரூ.8020 கோடியில் 1.25 லட்சம் கி.மீ சாலை அமைக்க 2019ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்து வரும் 1000 நாட்களுக்கு ஒருநாளைக்கு 130 முதல் 135 கி.மீ சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 30000 கி.மீ சாலைகள் பசுமை தொழில்நுட்பம் முறையிலும், பிளாஸ்டிக் கழிவுகளை அடிப்படையாகக் கொண்டும் அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டது.

ஜூன் 2020ல் பாராளுமன்றத்தில் மூன்று புதிய வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு செப்டம்பர் 2020ல் இவற்றைச் சட்டமாக்கியது. அதன்படி ‘அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்’, ‘வேளாண் விளைபொருள் வணிகம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்’, ‘விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம்’ நடைமுறைக்குக் கொண்டுவந்தது. இச்சட்டங்களின் முதன்மை நோக்கங்களாக, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பது, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நாட்டின் எப்பகுதியிலும் நல்ல விலைக்கு விற்கத் தடையற்ற நிலையினை உருவாக்குவது, தனியார் மண்டிகளை ஊக்குவித்து வேளாண் விவசாயிகளுக்கு வருவாய் பெறும் நோக்கினை மேம்படுத்துதல். வேளாண் விளைபொருட்களை அறுவடைக்காலங்களில் கொள்முதல் செய்து அவற்றைச் சேமித்துவைத்தல் போன்றவை ஆகும். இதனால் வேளாண் உள்கட்டமைப்புகள் தனியார் முதலீடுகளால் வலுப்பெறும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும், விவசாயிகள் லாபமடைவார்கள் என்று எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் இச்சட்டத்தினால் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய குறைந்த பட்ச ஆதரவு விலை நாளடைவில் நீர்த்துப்போகக்கூடும். விவசாயிகளுக்கு உறுதுணையாக உள்ள ஏபிஎம்சி என்கிற மண்டி அமைப்பு நடைமுறையில் காணாமல் போகலாம். வேளாண்மை பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றடையும் இதனால் விவசாயிகளின் உரிமைகள் பறிபோகும் போன்ற காரணங்களில் விவசாயிகளிடம் கடுமையான எதிர்ப்பு உருவானது.

வேளாண் ஒப்பந்த முறை 1960களில் இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் 1990களில் தக்காளி, மிளகாய், உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் ஒப்பந்த முறையிலான சாகுபடி செய்யும் முறையிருந்தது. பின்னால் இது 12க்கு மேற்பட்ட வேளாண் பயிர்கள் என விரிவானது. இவ்வொப்பந்தத்தில் உள்நாட்டுத் தனியார் மற்றும் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் விவசாயிகளுடன் ஒப்பந்த வேளாண்மையை மேற்கொண்டது.

2003ல் மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த வேளாண்மை மற்றும் சேவைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முதன் முதலில் தமிழ் நாட்டில் இச்சட்டத்தை அடிப்படையாகக்கொண்டு 2019ல் வேளாண் ஒப்பந்தச் சட்டம் கொண்டுவந்தது அதனைத் தொடர்ந்து ஒடிசாவில் 2020ல் கொண்டுவரப்பட்டது.

வேளாண் ஒப்பந்தச் சட்டத்தினால் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்துதல், தரமான விதைகள், வேளாண் விரிவாக்கம், உறுதிப்படுத்தப்பட்ட சந்தைப் படுத்துதல் மற்றும் விலை போன்றவற்றில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என்றாலும் நடைமுறையில் கடந்த காலங்களில் இம்முறையில் வேளாண் விளைபொருட்களின் தரத்தைக் காரணம் காட்டி ஒப்பந்த நிறுவனங்கள் கொள்முதல் செய்ய முன்வராத நிலையும், நிறுவனங்கள் தாமதமாகப் பணம் வழங்குதல், குறைவான விலைக்குக் கொள்முதல், தரம் குறைந்த இடுபொருட்கள் அளிப்பு, பயிர் செய்வதில் இழப்பு ஏற்படும்போது எந்தவித இழப்பீடும் வழங்கப்படாதது. அதிக அளவில் இடுபொருட்களின் செலவு, நிலைத்த நிலையிலான ஒப்பந்த விலை, நிறுவனங்கள் ஒப்பந்தத்தைத் தன்னிச்சை செய்யும் உரிமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டது. வேளாண் ஒப்பந்த நிறுவனங்கள் குறைந்த பட்ச நிலம் என்ற வரையறையை நிபந்தனையாக வைத்ததால் சிறு, குறு விவசாயிகள் இதனால் பயன் பெற முடியாத நிலை உள்ளது. இதற்கான முக்கியக் காரணம் குறைந்த அளவு நில உடைமையாளர்கள் அனுமதிப்பதால் போக்குவரத்துப் பரிமாற்றச் செலவு அதிகமாகும் என்பதாகும் (Sukhpal Singh 2022).

அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகளால் டெல்லியை முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாளடைவில் ஹரியானா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சார்ந்த விவசாயிகள் பெருமளவிற்குத் திரண்டு ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத்துடன் டெல்லியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் அறவழியில் முற்றுகைப் போராட்டத்தினை நவம்பர் 25, 2020இல் முன்னெடுத்தனர். இப்போராட்டத்திற்கு இந்தியாவில் உள்ள 500க்கு மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் ஒன்றிணைந்து அனைத்து இந்திய விவசாயிகள் போராட்ட கூட்டு ஒருங்கிணைப்புக் குழு (All India Kisan Sangharsh Coordination Committee) உருவாக்கப்பட்டது. போராட்ட காலங்களில் 750க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். 358 நாட்கள் பல்வேறு வடிவங்களில் நடைபெற்ற இந்த அறவழிப் போராட்டத்திற்கு இந்திய அரசு வேறு வழியின்றி அடிபணிந்து இந்த மூன்று சட்டங்களையும் நவம்பர் 19, 2021 அன்று திரும்பப் பெறுவதாக அறிவித்தது. விவசாயிகள் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இப்போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

இந்தியாவில் இயற்கை வேளாண்மைக்கான சூழலைப் பற்றி பன்னாட்டு நிபுணர்களின் பங்கேற்புடன் நிதி ஆயோக்ஏ ஏற்பாட்டில் மே 2020ல் நடந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கப் பாரதிய ப்ராக்ரித்திக் க்ரிஷ் மேம்பாட்டுத் திட்டம் (Bharatiya Prakritik Krishi Paddhati Programme) தொடங்கப்பட்டது. இதற்காக அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.12200 நிதி உதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தினால் ஆந்திரப் பிரதேசத்தில் 1 லட்சம் ஹெக்டேரும், மத்தியப் பிரதேசத்தில் 0.99 லட்சம் ஹெக்டேரும் பயனடைந்திருக்கிறது.

விவசாயிகளின் முக்கிய வருமான ஆதாரங்களில் கால்நடைகள் வளர்த்தலும்; ஒன்றாகும். இதற்காகப் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமாகப் பால் உற்பத்தியானது இந்தியப் பொருளாதாரத்திற்கு 5 விழுக்காடுப் பங்களிப்பினைத் தருகிறது. இத்துறையில் 8 கோடி விவசாயிகள் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். இந்தியா உலக அளவில் பால் உற்பத்தியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. உலக பால் உற்பத்தியில் இந்தியா 23 விழுக்காடுப் பங்களிப்பினைத் தருகிறது. 2014-15ல் 146.31 மில்லியன் டன் பால் உற்பத்தியாக இருந்தது. 2020-21ல் இது 209.96 மில்லியன் டன்னாக அதிகரித்தது. தலா பால் நுகர்வானது 427 கிராம் என்ற அளவில் தற்போது உள்ளது. 2020ல் ரூ.15000 கோடி மதிப்பில் கால்நடை உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் பால் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் உள்கட்டமைப்பை உருவாக்குவதாகும்.

மே 2020ல் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana) என்ற திட்டம் ரூ.2050 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. இதன்படி மீன் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, போக்குவரத்துச் சங்கிலித் தொடரை மேம்படுத்துவது, மீன் சந்தைப் படுத்துதலுக்கான கட்டணம் உருவாக்குவது போன்றவை ஆகும். இதுபோல் வேளாண்மையை வளப்படுத்த டிராக்டர், விசை கலப்பையின் பயன்பாட்டை அதிகரிக்கவும், உணவுப் பதப்படுத்தும் துறையை மேம்படுத்தவும் ஒரு குடையின் கீழ் நடைமுறைப்படுத்த பிரதான் மந்திரி கிசான் சம்பதா திடடம் (PM Kisan SANOADA Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது.

உணவு தானியம் மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியானது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்தியாவில் நகரமயமாதல் அதிக அளவில் காணப்படுவது, மக்கள் தொகை அதிகரிப்பு, நுகர்ச்சியில் பெருமளவிற்குக்காண மாறுபாடுகள் போன்ற நிலையில் தாவர எண்ணெய்யின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் உள்நாட்டு எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி அதிகரித்திருந்தாலும் பற்றாக்குறை நிலவிவருகின்றது. எனவே அரசானது உடனடியாக தீர்வாகச் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்து தேவையினை நிவர்த்தி செய்கிறது (Sekhar 2022). இந்தியாவில் அன்மைக் காலமாகச் சமையல் எண்ணெய்க்கு இறக்குமதியை அதிகமாக சார்ந்திருக்கவேண்டிய நிலை உள்ளதால் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களை அதிகமாக உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆகஸ்ட் 2021ல் தேசிய சமையில் எண்ணெய் இயக்கம் – பனை எண்ணெய் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி பனை எண்ணெய் பயிர்செய்யும் விவசாயிகளுக்கு அதற்கான விலையினை அரசு உறுதி செய்கிறது. இதன் விளைவு தற்போது 3.70 லட்சம் ஹெக்டேர் பனை பயிரிடப்பட்டுள்ளது. பனை எண்ணெய் வழியாகப் பெறப்படும் தாவர எண்ணெய்யானது மற்றவற்றைக் காட்டிலும் 10 – 46 மடங்கு ஒரு ஹெக்டேருக்கு எண்ணெய் பெறப்படுகிறது. அதுபோல் உற்பத்தித் திறன் மற்றவற்றைவிட 4 டன் ஒரு ஹெக்டேருக்குக் கூடுதலாக விளைச்சல் தரக்கூடியதாக இருக்கும். இதனால் இந்தியாவில் பனை எண்ணெய் இறக்குமதி வரும் காலங்களில் குறையக்கூடும்.

இந்தியா உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. கரும்புச் சாகுபடியில் 5 கோடிக்கு அதிகமான விவசாயிகள் ஈடுபடுகின்றனர். ஆண்டுக்குச் சராசரியாக 35.5 கோடி கரும்பும். 3 கோடி டன் சர்க்கரையும் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்க்கரை உற்பத்தியானது உள்நாட்டு நுகர்விற்குப் போக எஞ்சியதை உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கரும்புக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையும். தனியார் சர்க்கரை ஆலைகள் அதிகமாக இயங்கிவருவதால் சர்க்கரை உற்பத்தியானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2018-19 நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்கமானது தற்போது 36 விதை ரகத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தது. உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தச் செயல்படுத்துகிறது. ஒன்றிய அரசானது இயற்கை விவசாயத்தைச் செயல்படுத்தி ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டை நீக்கும் நோக்கத்தை தற்போது நடைமுறைப்படுத்துகிறது. இயற்கை விவசாயமானது சுற்றுப்புறச் சூழல் சார்ந்த நீடித்த வளர்ச்சி மூலம் மண்வளத்தைப் பாதுகாப்பது, ரசாயன உரப்பயன்பாட்டிலிருந்து விடுபடுவது, குறைவான நீர்ப்பாசன முறையைப் பயன்பாட்டில் கொண்டுவருவது போன்றவை அடிப்படையாகக் கொண்டது. பாரதியா பிரகிருதிக் கிருஷ் பத்திதி திட்டம் (Bharatiya Prakritik Krishi Paddhati Programme -BPKP) இயற்கை வேளாண்மைக்காகக் கொண்டுவரப்பட்டது. இத் திட்டத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.12200 நிதி அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதிகபட்சமாக இந்த திட்டத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் 1 லட்சம் ஹெக்டேர், மத்தியப் பிரதேசத்தில் 0.99 லட்சம் ஹெக்டேர் பயனடைகிறது.

Source: GoI (2022): “Economic Survey 2021-22”, Government of India.

வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சியானது 2017-18ல் 6.6 விழுக்காடு என்று இருந்தது அடுத்த வந்த ஆண்டுகளில் 2.6 விழுக்காடு (2018-19) , 4.3 விழுக்காடு (2019-20) , 3.6 விழுக்காடு (2020-21) , 3.9 விழுக்காடு (2021-22) என மாற்றமடைந்தது. வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகள் பொருளாதாரத்திற்கான பங்களிப்பாக 18.3 விழுக்காடாக 2017-18ல் இருந்தது 2021-22ல் 18.8 விழுக்காடாக விளிம் பு அளவில் அதிகரித்துள்ளது. இக்கால கட்டத்தில் அரசு முதலீடானது நிலையாக 2 – 3 விழுக்காடு அளவிற்கானதாக இருந்தது ஆனால் தனியார் முதலீடானது ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது.

2020ல் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பெருமளவிற்குப் பாதிக்கும் சூழல் உருவாக்கியது. இச்சட்டத்தால் குறைந்த பட்ச ஆதார விலையினை இழக்கவும், வேளாண் விளைபொருட்களின் விலையினைத் தீர்மானிப்பதில் பெருநிறுவனங்கள் முக்கிய பங்காற்றவும் வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் பாதிப்படையலாம், மானியங்கள் குறைக்கப்படலாம், மண்டிகளின் (APMC) செயல்பாடுகள் முடக்கப்படும், என்ற அடிப்படையில் விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டு இச்சட்டங்களுக்கு எதிராகக் கடுமையான முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அரசு வேறு வழியின்றி இச்சட்டங்களை விலக்கிக்கொண்டாலும், எதிர்காலத்தில் வேறுவழிகளில் இவற்றை முன்னெடுக்க வாய்ப்புண்டு. ஒப்பந்த முறை விவசாயத்தில் அரசு அதிகமாக அக்கறை காட்டி வருகிறது. இம் முறை பல மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டதில் பல பின்னடைவுகளை (ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக நிறுவனங்கள் முறித்துக்கொள்ளுதல், பெருநிறுவனங்கள் விவசாயிகளைக் கட்டாயப்படுத்தப்படுத்தி தங்களின் நோக்கிற்காகச் சாகுபடி செய்ய வலியுறுத்துதல், லாபம் இன்மை) விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் குறு விவசாயிகள் (ஒரு ஹெக்டேர் கீழ்) மொத்த விவசாயிகளில் 1960-61ல் 40.7 விழுக்காடாக இருந்தவர்கள் 2018-19ல் 76.5 விழுக்காடாக அதிகரித்திருந்தனர். இவர்களின் சராசரி சாகுபடி நிலப்பரப்பு 0.41 ஹெக்டேராக இருந்தது 0.38 ஹெக்டேராக இவ் ஆண்டுகளில் குறைந்துள்ளது. இந்தியாவில் தீவிர வறுமைக் கோட்டின் கீழ் 80 விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் என்கிறது தரவுகள். இதில் பெருமளவிற்குச் சிறு, குறு விவசாயிகள் இருக்கின்றனர். தேக்க நிலையிலான இந்திய வேளாண் துறையின் வளர்ச்சி, குறைவான வேளாண் வருமானம், அளவிற்கு அதிகமான உரப் பயன்பாடு, இடுபொருட்களுக்கானச் செலவு அதிகரிப்பு, குறைந்து வரும் மண் வளம், நிலத்தடி நீர் தொடர்ந்து குறைந்தது வருதல் போன்றவை பெரும் அறைகூவல்களாக இந்திய வேளாண்மை எதிர்கொண்டு வருகிறது. இவற்றின் விளைவு விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த இயலாத நிலையினால் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில், ஆண்டுக்குச் சராசரியாக 10000 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஒவ்வொரு 32 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாகத் தரவுகள் தெரிவிக்கிறது. மொத்த விவசாயிகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் பங்கு 0.006 விழுக்காடாகும். மொத்த தற்கொலையில் 11.2 விழுக்காடு விவசாயத் தற்கொலைகளாக உள்ளது பெரும் அதிர்ச்சியைத் தரக்கூடியதாகும் (Chris J Perry et al 2022).

இந்தியாவில் நீர் செறிவு சாகுபடி பயிர்களான நெல், கோதுமை. கரும்பு அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இது நிலத்தடி நீர் குறைவதற்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. எனவே இதற்கு மாற்றான அதே சமயம் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது (உலகிலே அதிக ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது). இப்பயிர் ரகங்கள் வறட்சியினை தாங்குவதாகவும், நீர் பயன்பாட்டைக் குறைப்பதாகவும் இருக்க வேண்டும். பல் வேறு ஆய்வுகளின்படி இவ்வகைப் பயிர்களின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கிறது, ஆனால் இதற்கான இடுபொருட்கள் அதிகமாக உள்ளது. எனவே அரசு இதற்கான விலை உறுதிப்பாட்டை அளிக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஏற்படும். விவசாயத் தற்கொலைகளும் குறையும் (Chris J Perry et al 2022).

வேளாண்மைக்கு சில வளரும் நாடுகளும், வளர்ந்த நாடுகளும் மானியங்கள் தொடர்ந்து அதிக அளவில் வழங்கிக்கொண்டு வருகிறது. இது விவசாயிகளை ஊக்குவிப்பது மட்டுமல்ல உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கச் செய்கிறது. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வேளாண் மானியம் 15 முதல் 20 விழுக்காடுவரை அளிக்கிறது. நார்வே. ஜப்பான். தென்கொரியா நாடுகளில் 40 முதல் 60 விழுக்காடுவரை மானியங்கள் வழங்குகிறன. இந்தியாவில் வேளாண்மைக்கான மானியம் 10 விழுக்காட்டிற்குக் குறைவாகவே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சில மாநிலங்கள் (குறிப்பாகப் பஞ்சாப், ஹரியானா) மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக மானியங்கள் வழங்கப்படுகிறது. மானியங்கள் உரம், பூச்சி மருந்துகள், விதைகளுக்கு அதிகமாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் வட இந்திய மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிக உற்பத்தித் திறன் உடையதாகவும். நீர்ப் பாசன வசதியினை உடையதாகவும் உள்ளது. சராசரி நில உடைமையானது வட இந்திய மாநிலங்கள் ஒப்பீட்டு அளவில் அதிகமாக உள்ளது. இதுபோல் குறைந்த பட்ச ஆதரவு விலையினை முதலில் கோதுமைக்கு வழங்கப்பட்டது, பின்னால் பிற பயிர் வகைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பசுமைப் புரட்சியும் அதிகமாக வட இந்திய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவற்றின் காரணமாகவே வட இந்திய மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்களைவிட மானியங்கள் அதிகமாகப் பெறப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவிலான மக்களின் முக்கிய உணவாக அரிசி உள்ளது. இது பொது விநியோகம் வழியாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக விவசாயிகளிடமிருந்து குறைந்த பட்ச விலையை அடிப்படையாகக் கொண்டு கொள்முதல் விலையில் (அதாவது குறைந்த பட்ச ஆதரவு விலையுடன் அம் மாநில அரசு அளிக்கக்கூடிய ஊக்கத் தொகையும் சேர்ந்தது) வேளாண் விளைபொருட்கள் வாங்கப்படுகிறது. இதனால் வட மாநில விவசாயிகள் நெல் சாகுபடியினை நோக்கிச் சென்றனர். நெல் பயிர் செய்ய அதிக அளவிற்கான தண்ணீர் தேவை (சராசரியாக 8 இன்ச் தண்ணீர் தேக்க வேண்டும்) உள்ளது. வட இந்திய மாநிலங்களில் தண்ணீர் ஆதாரம் தென்னிந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா. மேற்கு உத்தரப்பிரதேச மாநிலங்களில் கோதுமை சாகுபடி செய்பவர்கள் நெல்லை அரசு கொள்முதல் செய்வதால் அதிக அளவில் பயி ரிடத் தொடங்கினர். ஆனால் இதற்கான தண்ணீர் பயன்பாட்டினால் நிலத்தடி நீர்மட்டம் இம் மாநிலங்களில் வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாகப் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு ஒரு இன்ச் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. தண்ணீரின் தன்மையும் குறைந்துவருகிறது. இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணீரின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான சாகுபடியினை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது (Nitya Nanda 2021).

குறைந்த பட்ச ஆதார விலையைப் பொருத்தவரையில் மொத்தமாக நாட்டின் உற்பத்தியாகும் வேளாண் விளைபொருட்களின் மதிப்பில் 6 விழுக்காடு மதிப்புடைய விளைபொருட்கள் மட்டுமே இதனைப் பெறுகின்றன. மாநில அளவில் பார்த்தால் பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் 75 விழுக்காடு நெல், கோதுமை உற்பத்திக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலையினைப் பெறுகின்றன. மற்ற மாநிலங்களில் 10 விழுக்காட்டிற்குக் குறைவாகவே இவ்விலை கிடைக்கப்பெறுகிறது. இந்த நிலையினைப் போக்க அரசு சாகுபடி செய்கின்ற பயிர்களில் பன்முக முறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் அளவிற்கு அதிகமாக சில பயிர்களின் சாகுபடி குறைந்து தேவையான வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படும். அவை விவசாயிகளுக்குப் பயனளிப்பதாக இருக்கும். இம்முறையினை மேம்படுத்த மேலும் பல பயிர்களுக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கப்படவேண்டும். குறைந்த பட்ச ஆதரவு விலை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த கூட்டுறவு முறைகளுக்கு உயிர்கொடுத்து விவசாய முறையை முன்னெடுக்க வேண்டும். இதனால் விவசாயிகள் இழப்பினைத் தவிர்ப்பதுடன் வேளாண்மையானது சமநிலை வளர்ச்சியினை அடையும் (Nitya Nanda 2021).

மோடியின் இரண்டாம் கட்ட ஆட்சி நிறைவுறும் நிலையில் உள்ளது. பூட்டன் (Bouton) என்ற ஆய்வாளரின் கருத்துப்படி இந்தியா கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது, வேளாண்மையில் கடுமையான வீழ்ச்சி, வங்கி முறையில் பலவீனம், கடன் வழங்குதலில் பின்னடைவு பொன்றவை காணப்படுகிறது. 2014ல் ஆட்சிக்கு வரும்போது ‘அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி’ என்ற உறுதியை அளித்து வென்ற மோடி தற்போது 9 ஆண்டுகள் கடந்தும் இந்த உறுதிமொழியை நிறைவு செய்யப்படாமல் உள்ளது. மோடி நான் ‘இந்தியாவின் காவலன்’ என்று கூறி இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியமைத்தார். ஆனால் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் நிலை மேலும் பரிதாப நிலைக்குச் சென்றுள்ளது. கோவிட் தொற்றுப் பரவலால் வறுமையிலிருந்து ஏற்கனவே விடுபட்டவர்கள் வறுமைக்குள் மீண்டும் தள்ளப்பட்டதும். வறுமைக் கோட்டிற்கு மேல் இருந்தவர்கள் வறுமையில் சென்றதுமான நிலை உள்ளது. தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு நீக்குப்போக்குடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் தொழிலாளர்களின் உரிமைகள் இழக்கப்பட்டுள்ளது (Marshall Bouton 2019). பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியினால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயச் சட்டங்களைக் கொண்டுவந்து பெருநிறுவனங்களுக்குச் சாதகமான நிலை உருவானது. இதனை எதிர்த்து விவசாயிகள் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய நிலை உருவானது. இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாடு ஒரே தேசம் என்ற உத்தியை மோடி அரசு நடைமுறைப்படுத்துவதால் தற்போது மாநில அரசுகளின் உரிமைகளில் ஒன்றிய அரசு பறித்துக்கொள்கிற நிலை பரவலாகி வருகிறது. இதனால் வேளாண்மைத் துறை பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்கிறது. அரசியல் சூழலும், வாணிப சூழலும் இதற்குச் சாதகமாக உள்ளதால் பன்னாட்டு அளவில் வரிசைப்படுத்தப்படும் ‘எளிமையாக வணிகம் மேற்கொள்ளும் குறியீடு’ என்பதில் இந்தியா 2014ல் 134வது இடத்தில் இருந்தது தற்போது 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பொதுத் துறை நிறுவனங்கள் தாரைவார்க்கப்படுகிறது, பெருநிறுவனங்கள் கோலோச்சுகிறது, சந்தைப்பொருளாதார நிலைக்கு இந்திய வேளாண்மையைக் கொண்டுசெல்ல அரசு துடிக்கிறது இதனால் பெருமளவிலான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வேளாண்மையிலிருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளது. இது விவசாயிகளை மட்டும் பாதிப்பாக பார்க்க முடியாது, நுகர்வோர், வணிகர்கள், சமுதாயத்தில் வாழும் விளிம்பு நிலை மக்கள் எனப் பரவலாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வருங்காலத்தில் இதற்காக அனைத்து தரப்பினரும் போராடவேண்டிய கட்டாயம் உள்ளது. இதுவரை விவசாயிகள் இயற்கையின் போக்கினால் பாதிப்படைந்து வந்தனர் ஆனால் தற்போது அரசியல் காரணங்களையும் எதிர்நோக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கு விலை உத்தரவாதம், வேளாண்மை மீதான அரசு முதலீட்டை அதிகரிப்பது, வேளாண் இடுபொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவது, தேவையை நோக்கிய சாகுபடி செய்தல் போன்ற நிலைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டிய கட்டாம் தற்போது உள்ளது.

பேரா.பு.அன்பழகன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *