இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய்….! – S.மோசஸ் பிரபு

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய்….! – S.மோசஸ் பிரபுஇந்தியாவின் முதல் பிரதமர் யார்..? முதல் ஜனாதிபதி யார்..? என்கிற கேள்விக்கு மிக எளிதாக பலரும் பதில் சொல்லி விடுவோம். ஆனால் முதல் பெண் ஆசிரியர் யார்..? என்கிற கேள்விக்கு பலருக்கும் பதில் தெரியாது, அது மட்டுமல்ல கேள்வியே புதிதாக இருக்கும்.

பொது அறிவு வினாக்களை ஆர்வத்தோடு படித்தவர்கள் கூட இப்படியொரு கேள்வியையே எங்கேயும் படித்ததிருக்க வாய்ப்பில்லை. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு சாவித்ரிபாய் வரலாறு குறித்து அறிமுகப்படுத்தியிருக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு. திட்டமிட்டு ஆளும் வர்க்கங்களின் சாதி உளவியல் சாவித்ரிபாய் வரலாற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமல் இருட்டடிப்பு செய்துள்ளது.

பிறப்பால் சாவித்ரிபாய் தலித் சமூகத்தை சேர்ந்தவராக இல்லையெனினும். பிரமாணியத்தால் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள், பெண்கள் உள்ளிட்டவர்களின் முன்னேற்றத்திற்க்காக வாழ்க்கையை அர்பணித்தமையால் இந்த இருட்டடிப்பு நடந்துள்ளது.

ஒருவரை பாராட்ட அவர், யாருக்கு ஆதரவாகவும் எதற்கு எதிராகவும் இருக்கிறார் என்பது முக்கியமானது. சாவித்ரிபாய் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் பிராமணியம் வகுத்துள்ள மனுதர்மத்திற்கு எதிராகவும் செயல்பட்டுள்ளார். எனவேதான் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்.

இங்கே வில்வித்தையில் கெட்டிக்கிறாரான ஏகலைவனுக்கு மரியாதை இல்லை. மனசாட்சியே இல்லாமல் அவன் கட்டை விரலை வெட்டி எடுத்துக் கொண்ட துரோணாச்சார்யாவிற்கு ராஜமரியாதை. அதனால் தான் நவீன இந்தியாவும் அவர் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பயிற்சியாளர் விருதுகளை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி கௌரவிக்கிறது….

இனியும் இந்த இருட்டடிப்பு அநீதி தொடரக் கூடாது. சாவித்ரி பாய் பூலேவின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

இந்தியாவில் கல்வி ஒரு குறிப்பிட்ட நூற்றாண்டுகள் வரை அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. நான்கு வேதங்களை படிப்பதே கல்வியாக இருந்த சூழலில் அது அனைத்து சமூக பிரிவினருக்கும் உரியதாக இல்லை. பிராமணர்களை தவிர யாருக்கும் கல்வி கிடையாது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பிராமணப் பெண்கள் உட்பட அனைத்து சாதியை சேர்ந்த பெண்களுக்கும் கல்வி தரக்கூடாது என்று மனு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

Savitribai Phule: Remembering India First Woman Teacher | Mango News

மனுசாஸ்திர தர்மங்களை கடைப்பிடித்த அன்றைய நிலவுடமை சமூகத்தில் சமத்துவம் இன்று இருப்பது போல் ஏட்டளவில் கூட இல்லை. பிரிட்டிஷ் வந்த பிறகுதான் கல்வியின் வாசம் பிராமணர்களை தாண்டியும் வீச துவங்கியது. பிரிட்டிஷ் அரசுக்கு அதில் சுயநலம் இருந்தாலும் கல்வி பொதுவானதன் துவக்கப்புள்ளி அவர்கள் வைத்ததுதான். 1813ல் துவங்கிய பிரிட்டிஷ் கல்வி பத்தாண்டுகளுக்கு பிறகு 1822ல் சர் தாமஸ் மன்றோ கல்வி குறித்த கணக்கெடுப்பு நடத்துகிறார். 12,498 பள்ளிக்கூடங்கள் அன்றைய பிரிட்டிஷ் இந்தியா முழுவதும் செயல்பட்டன. ஆனாலும் வெறும் 7% ஆண் குழந்தைகள்தான் பள்ளிக்கு சென்றிருக்கின்றனர். ஒரு சதவிகிதத்திற்குள்ளாகத்தான் பெண் குழந்தைகள் படித்திருக்க வாய்ப்புகள் உண்டு. இந்த சூழலில் படித்தவர்தான் நம் சாவித்திரிபாய்.

1831ல் மகாராஷ்ட்ராவில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகாவுன் என்ற இடத்தில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கான்டோஜி நைவஸ் பட்டேல், தாய் லட்சுமி பாய். தந்தை கிராமத்து தலைவராக இருந்தவர்.

அக்கால வழக்கப்படி, அவருக்கு 9 வயதாகும்போது, 1840ல்.குழந்தை திருமணம் செய்து வைத்தனர். அந்த ஊருக்கு அருகில் உள்ள 13 வயது நிரம்பிய ஜோதிராவ் பூலே என்னும் பாலகனுக்கு சாவித்திரியை மணம் முடித்தனர்.

ஜோதிராவ் பூலே முற்போக்கு எண்ணம் கொண்டவர். சமூக சீர்த்திருத்தவாதி. தன் மனைவி சாவித்ரிபாய்க்கு வீட்டில் யாருக்கும் தெரியாமல் 4 ஆண்டுகள் கல்விக்கற்றுக் கொடுத்திருக்கிறார். குடும்பத்தாருக்கு தெரிந்தவுடன் இருவரையும் வெளியே துரத்திவிட்டனர். வெளியேறிய அவர்கள் படிக்கும் பணியை நிறுத்தவில்லை. மிக்கெல்துரை என்பவரது துணைவியார் வெள்ளையர்களுக்காக நடத்திய பூனா பயிற்சியகத்தில் ஆறு மாதம் பயின்று முறையாக ஆசிரியர் பயிற்சியை முடித்தார்.

ஜோதிராவ் பூலே 1846 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட சமூகத்து பெண்களுக்குக்காக கல்வி புகட்டினார்.

பின்னர் 1848 ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கினார். அதில்தான் சாவித்திரிபாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப் பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் ஆதிக்க சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர்.

First Lady' Teacher of India: Savitribai Phule | Dr. B. R. Ambedkar's  Caravan

அவர் மீது சேற்றினையும், மனித மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்ற லட்சியோத்தோடு கல்விப் பணியாற்றினார்.

இரட்டைக் குவளை முறை மிகவும் தீவிரமாக அமலில் இருந்த காலகட்டத்தில் இருவரும் தங்கள் வீட்டிலேயே கிணறு வெட்டி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு குடிநீர் எடுத்துக் கொள்ள வழி செய்தனர். விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். அவரது பள்ளியில் 1852ல் 150 பெண்கள் கல்வி கற்றார்கள் என்றும் அந்த எண்ணிக்கை 1854ல் 200ஆக உயர்ந்த்து என்றும் சார்லஸ் உட் தலைமையில் இந்தியா வந்த உட்-கல்விக்குழு அறிக்கை குறிப்பிடுகிறது….

“நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் என்றால் உங்களிடம் கல்விக்கற்ற மாணவர்களில் எத்தனை பேர் மருத்துவர், பொறியாளர், ஐஏஎஸ் ஆனார்கள் என்பதல்ல வெற்றி. எத்தனைபேர் உங்களை பார்த்து ஆசிரியர் பணி செய்ய முடிவு செய்தார்கள் என்பதே வெற்றி”.

அந்த வகையில் சாவித்ரிபாய் பூலேவிடம் கல்விக்கற்ற 417 பெண்கள் அடுத்த தலைமுறை ஆசிரியரானர்கள். அந்த காலச்சூழலில் இது மிகப்பெரிய சாதனை.

அவர் சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல சிறந்த கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே துவங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தது. சாவித்ரிபாயின் மரணத்திற்கு பிறகு 1934ல் அவரது மாணவி காவியப்பூலே என்ற தலைப்பில் 267 கவிதைகளை தொகுத்து வெளியிட்டார்.

Few poems by Savitribai Phule | Dr. B. R. Ambedkar's Caravan

1890ல் வட இந்தியாவின் பல பகுதிகள் ப்ளேக் நோயால் பாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மிகவும் பின்தங்கிய மக்களுக்கும் பிரிட்டிஷ் அரசு சிகிச்சை அளிக்க மறுத்தது. அந்நேரத்தில் மருத்துவம் படித்து ராணுவத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சாவித்ரிபாயின் வளர்ப்பு மகன் யஸ்வந்த் தென்ஆப்பிரிகாவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார். நோய் பாதிக்கப்பட்ட பல பேரை தூக்கிக் கொண்டு வந்து, தனது அறுபத்தி ஆறு வயதில், நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை காக்க போராடினார். அப்படி பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காப்பாற்ற தூக்கிக் கொண்டு வந்தபொழுது நோய் தொற்று ஏற்பட்டு, 1897, மார்ச் 10 ம் நாள் மரணமடைந்தார்.

சமூக விடுதலையைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாத காலகட்டத்தில், பெண் கல்வி, விதவை மறுமணம், புரோகிதர் இல்லத் திருமணம், தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை எனத் தன் மொத்த வாழ்நாளையும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இந்த சமூகத்திற்காகவே செலவிட்ட இவர்தான் சிறந்த ஆசிரியர் எனப் போற்றப்பட்டிருக்க வேண்டும்.

சிறந்த ஆசிரியராக, சீர்திருத்தவாதியாக, மருத்துவராக, கவிஞராக செயல்பட்ட சாவித்ரிபாயை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடியிருக்க வேண்டும். அரசு அவரது புகழை நாடு முழுவதும் பரப்பியிருக்க வேண்டும். ஆனால் கடந்தகாலத்தில் போதுமானளவு இவை எதுவும் நடக்கவில்லை.

இனி நடத்துவோம் நாம்….!!!

ஆசிரியர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது போல், சாவித்ரிபாய் பூலே பிறந்த தினத்தை நாடு முழுவதும் கொண்டாடுவோம்.

– S.மோசஸ் பிரபுLeave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *