1975-76ல் இந்திரா காந்தி அரசாங்கத்தால் சட்டபூர்வமாகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு சட்டவிரோத வழிமுறைகள் இன்றும் ஊடகங்களின் உரிமைகளை நசுக்கப் பயன்படுத்தப்படுகிறது.
ஜூன் 25, 1975 அன்று நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நாடு இருளில் மூழ்கி 45 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தத் தருணம் அந்தக் கால நிகழ்வுகளை நினைவுபடுத்துவதற்கான சந்தர்ப்பமாக அமைகிறது.
வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூறுவது பழைய நினைவுகளைப் பற்றிக் குறிப்பாக மோசமான நிகழ்வுகளைப் பற்றிப் புலம்புவதற்காக மட்டுமல்லாது அதிலிருந்து நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ள பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அந்த வகையில் அவசரநிலைக் காலத்தில், குறிப்பாகப் பத்திரிகைத்துறை ஜனநாயகத்திற்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வது இன்றைக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாக உள்ளது. எனவே அவசரநிலைக் காலத்தில் அரசு பயன்படுத்திய பல சட்ட விரோத வழிமுறைகள் மூலமாக சட்டரீதியான (ஆனால் சட்டவிரோத) நடவடிக்கைகளையும் நினைவுகூறுவது மிகவும் சரியானது. அதன்மூலம் நமது குடியரசின் ஜனநாயகத்தில் முக்கியமான கருவியான பத்திரிக்கைத்துறை குறித்த குறுகியகால வரலாற்றை வெளிப்படுத்தப் பயன்படுகிறது.
அத்தகைய சட்டரீதியான (ஆனால் சட்டவிரோத) நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலமாகவே செயல்படுத்தப்பட்டன. அவசரநிலை பிரகடனத்திற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 1976இல் தான் இவை நிகழ்ந்தன. பிப்ரவரி 11, 1976 இல் மூன்று தொகுப்புகளாகச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை: ஆட்சேபனைக்குரிய விஷயத்தை வெளியிடுவதைத் தடுக்கும் சட்டம், 1976; பாராளுமன்ற நடவடிக்கைகள் (வெளியிடுவதற்கான பாதுகாப்பு) திரும்பப்பெறுதல் சட்டம், 1976; மற்றும் பத்திரிக்கை கவுன்சில் (திரும்பப் பெறுதல்) சட்டம், 1976.
இந்தச் சட்டங்கள் டிசம்பர் 8, 1975 அன்று அறிவிக்கப்பட்ட அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக மட்டுமே இருந்தன. அந்த வகையில் இது சட்டவிரோதமானவை என்றாலும் ‘சட்டபூர்வமானவை’யே. வேறு வகையில் கூறுவதானால், அதன் விளைவுகள் சட்டத்தின் செயல்முறைக்கு எதிராக போராடியபோதிலும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பத்திரிக்கைச் சுதந்திரங்களை மறுக்கும் இந்தச் சட்டங்கள் அனைத்தும் சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையைப் பின்பற்றியே இயற்றப்பட்டன.
இந்தச் சட்டங்கள் அனைத்தும் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்குப் பிறகு நீக்கம் செய்யப்பட்டன. 1976 இல் நிறைவேற்றப்பட்ட ஆட்சேபனைக்குரிய விஷயத்தை வெளியிடுவதைத் தடுக்கும் சட்டம், 18 ஏப்ரல், 1977 அன்று பாராளுமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. பாராளுமன்ற நடவடிக்கைகள் (வெளியீடு பாதுகாப்பு) திரும்பப்பெறுதல் சட்டம், 1976 ஐ கூட ரத்து செய்து, 1956 ஆம் ஆண்டின் சட்டத்தை (தி ஃபெரோஸ் காந்தி சட்டம்) மீட்டெடுத்தது. அதே நாளில் எந்தவித அவதூறு குற்றச்சாட்டுகளுக்கும் அஞ்சாமல் பாராளுமன்ற அவையில் கூறியபடி பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிடுவதற்கான உரிமையை பெற்றுத்தரும் உறுதியையும் அளித்தது. 10 ஆண்டுகள் ஆயுட்காலத்துடன் 1965 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த பத்திரிகைக் கவுன்சில் சட்டம் , டிசம்பர் 31, 1975 அன்றோடு செயலிழக்கும்படி செய்யப்பட்டு ஜனதா கட்சி அரசாங்கத்தால் செப்டம்பர் 7, 1978 அன்று புதுப்பிக்கப்பட்டது. பத்திரிகைகளுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதற்கான இந்தச் சட்டங்கள் அனைத்தும் அப்போதைய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் எல்.கே. அத்வானி அவர்களால் இயற்றப்பட்டது.
எவ்வாறாயினும் ஒரு சில நடவடிக்கைகளை அரசியலமைப்புச் சட்டமே சட்டவிரோதமானது என்று குறிப்பிடுகிற நிலையிலே பத்திரிகைச் சுதந்திரம் மீதான தாக்குதல் ஒப்பீட்டளவில் அதை மிகவும் பலவீனப்படுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் 1977 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி மாலை அவசரநிலை ஆட்சி அறிவிக்கப்பட்டது முதல் , டிசம்பர் 8, 1975 அன்று அவசரச் சட்டமாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 11, 1976 அன்றுமுதல் சட்டங்களாக மாறும் வரை, அதன் நகர்வுகளும், நடவடிக்கைகளும் அளித்த உத்தரவாதத்தை இன்றும் நினைவுபடுத்திப் பார்த்தால் 45 ஆண்டுகளுக்குப் பிறகும் அதிலிருந்து பத்திரிக்கைகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன என்றே தெரிகிறது.
சுதந்திரத்திற்கான நம்பிக்கையைத் துண்டித்தல்
1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு அப்போதைய இந்திய ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது அவசரசநிலை பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே அத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகள் ஆரம்பமானது.
இந்தச் சட்டத்தைப் பற்றி நீதிபதி ஷா ஆணையம் பின்வருமாறு பதிவு செய்தது:
“ஜூன் 25, 1975 அன்று இரவு அவசரநிலை விதிக்கப்பட்டபோது, செய்தித்தாள் அலுவலகங்களுக்கான மின்சாரத்தைத் துண்டித்தது அரசு. டெல்லியின் துணைநிலை ஆளுநர் ஸ்ரீ கிருஷன் சந்த் அவர்களால் டெல்லி மின்சார விநியோக நிறுவனத்தின் அப்போதைய பொது மேலாளராக இருந்த திரு பி.என். மெரோத்ரா அவர்களுக்கு ஜூன் 25, 1975 இரவு, நகரத்தில் உள்ள செய்தித்தாள் அலுவலகங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என்று வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. துணைநிலை ஆளுநர் கிருஷன் சந்த் அவர்களை பொறுத்தவரை ஜூன் 25, 1975 அன்று பிரதமர் மாளிகையில் நடந்த ஒரு கூட்டத்தின்போது மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கான வழிமுறைகள் வந்ததாகவும், ஆனால் குறிப்பிட்ட உத்தரவுகளை யார் கொடுத்தது என்பதை அவரால் நினைவுபடுத்த முடியவில்லை என்றும் தெரிகிறது.
ஆகவே, அவசரநிலை குறித்தும், 1971 ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தனது தொகுதியை காலியிடமாக அறிவித்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 25 அன்று மாலை டெல்லி ராம் லிலா மைதானத்தில் பேரணியை நடத்திய அரசியல் கட்சிகத் தலைவர்கள் கைது செய்யப்படப்போவது குறித்தும் வெளிவரவிருந்த செய்திகளை டெல்லியைத் தளமாகக் கொண்ட பல செய்தித்தாள்கள் தங்களது ஜூன் 26 பதிப்பில் அச்சிடுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது மத்திய அரசு.
‘முட்டாள்தனம் பெரும்பாலும் வெற்றி பெறுகிறது’ என்று அப்போதைய இந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியராக இருந்த பி.ஜி.வர்கீஸ் கூறியது போலவேதான் அன்று மாலையும் நிகழ்ந்தது. இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகைகள் மட்டும் அன்றைய மாலை ஏற்பட்ட மின் தடைக்கு ஆளாகவில்லை. எனவே இந்துஸ்தான் டைம்ஸின் முதல் பக்கத்தை அதிகாலை 2:30 மணியளவில் தனியாக அச்சிட்டு ஜூன் 26 அன்று சிறப்பு இதழாக வெளியிட்டார் வர்கீஸ். அன்றைய செய்தித்தாளின் தலையங்கப் பகுதி மட்டும் காலியாக விடப்பட்டது.
இருப்பினும் அவரது முயற்சிகள் பெரிதும் பலனளிக்கவில்லை. அச்சகம் நிறுத்தப்படுவதற்கு முன்பு சில நூறு பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டன.
முந்தைய நாள் இரவு புது தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மின் தடைக்கான உத்தரவு பிறப்பித்திருந்தபோதும் அந்தச் செய்தித்தாளின் உரிமையாளர் – கே.கே. பிர்லா இதை எப்படி நடத்திக்காட்டினார் என்பது குறித்து அறிந்துகொள்ளும் நடவடிக்கையில் இறங்கியது அரசு. வர்கீஸ் தனது வேலையை இழந்தார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 1975 இல் ஒரு செய்தித்தாளின் ஆசிரியராக இருந்தபோது சஞ்சய் காந்தியைப் பாராட்டி எழுத மறுத்த குஷ்வந்த் சிங்கை ஆசிரியராக நியமித்தார் குர்லா.
செய்தித்தாள்கள் அச்சிடப்படுவதைத் தடுப்பதற்கு மின் தடை ஏற்படுத்த வேண்டும் என்ற வெட்கக்கேடான செயலைச் செய்தது நேரத்தை வீணடிப்பதற்காகக் கூட இருக்கலாம். எனவே மிக உயர்ந்த மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி பத்திரிகைகளைக் கட்டுப்படுத்த ‘சட்டபூர்வமான’ வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று அரசு தீவிர ஆர்வத்துடன் செயல்படத் தொடங்கியது. அதன்படி 1975 ஜூன் 26 அன்று இரவு 8:30 மணிக்கு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில், பத்திரிகைகளுக்கு முன் தணிக்கை செய்வதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.
இத்தகைய சட்ட விரோத நடவடிக்கையைச் செயல்படுத்த ஒரு சட்டத்தைத் தேடுவது ஒன்றும் அரசு அதிகாரத்திற்கு மிகவும் கடினமானதில்லையே. ஆக 1971 ஆம் ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போரை அடுத்து நிறைவேற்றப்பட்ட இந்திய பாதுகாப்புச் சட்டம், 1971 இல் இருந்து வரையப்பட்ட இந்திய பாதுகாப்பு விதிகள், 1971 ன்படி அறிவிக்கப்பட்ட வெளியுறவு தொடர்பான அவசரநிலை மூலம் இது செயல்படுத்தப்பட்டது. பின்பு ஓரிரு நாட்களில், ஜூன் 30, 1975 அன்று ஒரு அரசு உத்தரவு மூலம் அவசரகதியில் அறிவிக்கப்பட்ட அந்த இந்திய உள்நாட்டு பாதுகாப்பு விதிகள் (DISIR ) போதுமான அளவு அலங்கரிக்கப்பட்டது.
முதலில் ஜூன் 26 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கைகளுக்கான தணிக்கை வழிகாட்டுதல்கள் பல முறை திருத்தப்பட்டன. அவற்றில் இறுதியானது ஆகஸ்ட் 12, 1975 அன்று வெளியிடப்பட்டது. அவை அனைத்துமே டி.ஐ.எஸ்.ஐ.ஆரிலிருந்து எடுக்கப்பட்டன. முதலில் இவை பம்பாய் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.பி.பட்டின் ஒற்றை நீதிபதி அமர்வு மூலம் நவம்பர் 25, 1975 அன்று சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டன. பின்னர் நீதிபதிகள் டி.பி. மடோன் மற்றும் எம்.எச். கனியா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிப்ரவரி 10, 1976 இல் சிறிய மாற்றங்களுடன் அவற்றை ஏற்றுக்கொண்டது.
பம்பாயிலிருந்து வெளியாகும் ஃப்ரீடம் ஃபர்ஸ்ட் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த மினூ.ஆர். மசானி என்பவர்தான் இந்த வழக்கின் வாதியாக இருந்தார். இந்த வழக்கில் பம்பாய் உயர்நீதிமன்றம் கையாண்ட அதே சட்டத்தைக் கொண்டுதான் ஏப்ரல் 1976 இல் குஜராத் உயர்நீதிமன்றமும் பூமிபூத்ரா பத்திரிக்கையின் நகல்களைப் பறிமுதல் செய்ததையும், அக்டோபர் 26, 1975 அதன் அச்சகத்தைக் கையகப்படுத்தியதையும் சட்டவிரோதமானது என்று அறிவித்து (அவசரநிலைக்கு எதிராக நீதிபதி எம்.சி.சக்லா மேற்கொண்ட உக்கிரமான உரையைக் குறிப்பிட்டு) அச்சிடப்பட்டது.
45 ஆண்டுகளுக்குப் பிறகு அவசரநிலைக் கால அனுபவத்தை நாம் நினைவுபடுத்திப் பார்க்கிற இந்த வேளையிலே இங்கு வலியுறுத்திச் சொல்லப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், தணிக்கைக்கு முந்தைய சட்டவிரோதமான விதிகளை ஃப்ரீடம் ஃபஸ்ட் மற்றும் பூமிபுத்ரா ஆகிய இரண்டு சிறு பத்திரிக்கைகள் மட்டுமே சவாலுடன் எதிர்கொண்டது என்பதைத்தான். பெரிய வணிகப் பத்திரிக்கைகளாகத் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட முக்கியச் செய்தித்தாள்களும், பத்திரிக்கையின் வருவாயை உயர்த்துவது விளம்பரங்களே என்கின்ற அதன் உரிமையாளர்களும் அரசின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கி நடக்க ஆரம்பித்தனர். அதிலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி ஸ்டேட்ஸ்மேன் ஆகிய பத்திரிக்கைகளாவது அரசுக்கு எதிராக முணுமுணுத்துக்கொண்டே செயல்பட்டார்கள் மற்றவர்களோ தொடர்ந்து அரசின் சட்டவிரோத நடவடிக்கைகள் முன் மண்டியிட்டனர். அதே வேளையில் தணிக்கைகளைப் பொறுத்தவரை தொடர்ந்து நடைபெற்ற, ஷா கமிஷன் பின்வருமாறு கூறியது குறிப்பிடத்தக்கது.
“இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை அதிகரிப்பதில் அக்கறை காட்டாத அவர்களது தொலைநோக்கு விதிகள் மற்றும் சட்டப்பூர்வ ஆணைகள் தனது இதழில் உள்ள நகைச்சுவைகள், கார்ட்டூன்கள் மற்றும் நையாண்டிக் கட்டுரைகள் என அனைத்தையும் தணிக்கைக்கு உட்படுத்தின என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளை அளித்தார் ‘துக்ளக்’ இன் ஆசிரியர் திரு. சோ ராமசாமி. ஆகவே, ‘துக்ளக்’ பத்திரிகையில் வெளியிடப்பட முயன்ற திரு. மொரார்ஜி தேசாயின் பிறந்தநாள் வாழ்த்துகள் கூட முற்றிலும் தணிக்கை செய்யப்பட்டன.மேலும் திருமதி இந்திரா காந்தியின் மேற்கோள்கள் கூட. தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. கட்டுரைகளையும் சில சமயங்களில் முழு இதழையும் முன் கூட முன் தணிக்கைக்காகச் சமர்ப்பிக்குமாறு எதனால் தான் கேட்டுக் கொள்ளப்பட்டார் என்பதை திரு இராமசாமி தெரிவித்தார். அதாவது ஜூலை 15, 1976 தேதியிட்ட ‘துக்ளக்’ இதழ் (i) நேருவின் தலையங்க பகுதிகள் (ii) வாசகர்களிடமிருந்து வந்த கடிதங்கள் (iii) இந்திரா காந்தியின் உரைகளிலிருந்து மேற்கோள்கள் (iv) ஹிட்லரின் மேற்கோள்கள் (v) முசோலினியின் மேற்கோள்கள் (vi) மேடை நாடகமான ‘துக்ளக்’ இன் பத்திகள் என அனைத்தும் தணிக்கையாளர்களால் ஆட்சேபனைக்குரியவையாகக் கருதப்பட்டன.” (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது)
வணிக ரீதியான அச்சுறுத்தல்
பத்திரிகைச் சுதந்திரத்தை மிகவும் திறம்படக் கட்டுப்படுத்துவதற்கு தணிக்கை என்பது அவசரநிலைக் கால ஆட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே வழிமுறையாக இருக்கவில்லை, அதோடு தனக்கு அடிபணிய மறுத்த செய்தித்தாள்களுக்கு விளம்பரங்கள் கிடைக்காமல் செய்வது என்ற மற்றொரு வெட்கக்கேடான வழிமுறையையும் நாடியது அரசு.
ஜூலை 26, 1975 அன்று இந்திரா காந்தியின் அறையில் நடைபெற்ற ஒரு உயர்மட்டக் கூட்டத்தில் அரசின் விளம்பரக் கொள்கையை மறுஆய்வு செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதில் அப்போதைய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்த வி.சி.சுக்லாவும் இடம்பெற்றிருந்தார் (ஜூன் 26 அன்று ஐ.கே. குஜ்ராலை மாற்றியதிலிருந்து).
ஜூன் 29, 1975 அன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நட்புநிலை, நடுநிலை மற்றும் விரோதம் என வகைப்படுத்தப்பட வேண்டிய செய்தித்தாள்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு முதன்மை தகவல் அதிகாரியிடம் (PIO) கேட்டுக் கொண்டார் சுக்லா. அப்போது PIO ஆக இருந்த ஏ.ஆர். பாஜி மூலம் ” முதலில் அவசரநிலை அறிவிப்புக்கு முன்னும், அதற்குப் பிறகும் செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் வகைப்படுத்தலைச் செய்யப்பட்டது”. பிறகு சுக்லாவின் நேரடி ஈடுபாட்டுடன் வரைவுப் பட்டியல் மேலும் சிறப்பாக அமைக்கப்பட்டது. பாஜியின் கூற்றுப்படி பார்த்தால் கூட அது “ஜூன் 12 முதல் ஜூன் 26, 1975 வரை செய்தித்தாள்களின் தலையங்கத்தில் பிரதிபலித்த கருத்துக்கள்” பற்றிய ஒரு குறுகிய ஆய்வாக இருந்தது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ‘தொடர்ச்சியான விரோதப்’ பிரிவில் வைக்கப்பட்டது, ஸ்டேட்ஸ்மேன் ‘பி’ பிரிவின் கீழ் வைக்கப்பட்டது, அதாவது நட்பாக நடக்கவில்லை எனில் விரோதம் என்ற அடிப்படையில். இதற்கிடையில், டைம்ஸ் ஆப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ் (மற்றும் அதன் இந்தி செய்தித்தாள், இந்துஸ்தான்), அமிர்த பஜார் பத்ரிகா மற்றும் தி இந்து ஆகிய அனைத்தும் ஏ பிளஸ் பிரிவின் கீழ் வைக்கப்பட்டன, அதாவது நேர்மறையான நட்பு. இத்தகைய வகைப்பாடு வெறுமனே ஒரு மேம்போக்கான நடவடிக்கையாக இல்லை. மாறாக அது நட்பாகக் கருதப்படும் செய்தித்தாள்களின் நிதி நிலையை முடுக்கிவிடுவதற்கும், ‘விரோதப் போக்குடையவர்கள்’ என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு அதை மறுப்பதற்குமே அது பயன்படுத்தப்பட்டது.
ஷா கமிஷனின் வார்த்தைகளில் சொல்வதானால் :
“இந்தக் காலகட்டத்தில் விளம்பர உதவி, செய்தித்தாள்களுக்கான நிதி உதவி ஆகியவற்றை மறுப்பதற்கான ஆதாரமாக அரசு அதன் கொள்கை முடிவுகளைப் பயன்படுத்தியது. இது பாராளுமன்றத்தில் அரசு முன்வைத்த கொள்கையுடன் முழுமையாக மாறுபட்டு இருந்தது. அதன்படி அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு விளம்பரங்களை அரசு மறுத்துவிட்டன. அதே சமயம் அரசின் கொள்கைகளை ஆதரிப்பதாகக் கருதப்பட்ட அமிர்தா பஜார் பத்ரிகா மற்றும் நேஷனல் ஹெரால்ட் போன்றவற்றிற்கு நியாயமான காரணங்களுக்கு அப்பாற்பட்ட விளம்பரங்களையும் அரசு வழங்கின. ”
அரசாங்க விளம்பரங்கள் என்பது செய்தித்தாள்களின் வருவாயில் ஒரு முக்கிய அங்கமாகும். 1954 ஆம் ஆண்டில் பத்திரிக்கை ஆணையம் செய்தித்தாள் வருவாயை ஆராய்ந்தபோது, அரசாங்க விளம்பரங்கள் அனைத்து செய்தித்தாள்களும் ஈட்டிய மொத்த வருவாயில் 7 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசாங்க விளம்பரங்களிலிருந்து செய்தித்தாள் வருவாயின் விகிதம் அந்தந்தக் காலகட்டத்தில் பொருளாதாரத்தின் நிலைக்கு ஏற்ப மாறுபடும்.
1990 களில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில், அரசாங்க விளம்பரங்களை தனியார் துறையின் விளம்பரங்கள் விஞ்சின. சமீபத்திய ஆண்டுகளில் பொருளாதாரம் மந்தமடைந்து வருவதால், செய்தித்தாள்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகை, ஊடகப் பணியாளர்கள் எனப் பலரையும் வீட்டிற்கு அனுப்புவதன் மூலமும் செலவுகளைக் குறைக்கத் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதால், அரசாங்க விளம்பரங்களிலிருந்து பெறப்படும் வருவாயின் தேவை மீண்டும் வளர்ந்துள்ளது.
எனவே இப்போது விளம்பர வருவாய்க்கான ஆதாரமாக மீண்டும் அரசாங்கத்தையே பெரிதும் நம்பியிருக்க வேண்டிய கட்டாயச் சூழலை அரசு பத்திரிக்கை, ஊடகங்களுக்கு ஏற்படுத்தி இருப்பதால், அவசரநிலைக் கால ஆட்சி மேற்கொண்ட வெட்கக்கேடான வழிமுறைகளை மீண்டும் நினைவுகூறுவது இன்று பொருத்தமானது. அவசரநிலை ஆட்சிக்கு காலகட்டத்தில் செய்தித்தாள்களுக்கான வருவாய் வீழ்ச்சியடைந்தபோது பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்த பத்திரிக்கைகள் மேலும் அரசின் விருப்பத்திற்கு முன்பாக இணக்கமான, மென்மையான போக்கினைக் கடைபிடிக்கும் தன்மைக்கு மாறின.
ஊடகங்களைப் படிப்பிக்கும் செயல்:
வரலாற்றின் நிகழ்வுகளில் எப்போதும் ஒன்று மற்றொரு காலத்தின் அனுபவத்திலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு வரலாற்று நிகழ்வுகளை எப்போதும் நிகழ்காலத்தின் பிரச்சினைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இதை ‘எல்லா வரலாறும் சமகால வரலாறு’ என்று பெனிடிட்டோ க்ரோஸ் கூறியதாக ஆர்.ஜி. கோலிங்வுட் வரலாற்றின் கருத்தை முன்வைப்பதில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். 1990 களில் இருந்து ஊடக உரிமையாளர்களில் ஒரு சிலர் சோப்பு மற்றும் ஷாம்பு போன்ற பொருட்களின் உற்பத்தியைப் போலவே ஊடகத்தையும் ஒரு வணிக நிறுவனமாக மாற்றியுள்ளது. இந்நிலையில் ஊடகங்கள் எடுத்துள்ள இத்தகைய திருப்பத்தை ஆராய வேண்டிய சூழலும் இன்று அர்த்தமுள்ளதாக இருக்கிறது. எனவே ஊடக அறத்தில் கவனம் செலுத்துவதிலிருந்து ஏற்பட்டிருக்கும் இத்தகைய மாற்றம் மறுபரிசீலனை செய்யப்படவும், விமர்சிக்கப்படவும் வேண்டும். பத்திரிகைகளும், ஊடகங்களும் ஜனநாயகத்தின் ஒரு கருவியாகப் பார்க்கப்பட வேண்டும். அவசரநிலைக் காலத்தின்போது பத்திரிகைகளின் அனுபவங்கள் நமக்குக் கற்பிப்பது போல, பத்திரிகை ,ஊடக நிறுவனங்களை வணிக நிறுவனமாக மாற்ற அனுமதிப்பது என்பது ஜனநாயகத்தின் அழிவிற்கு வித்திட்டு அதை மேலும் பலவீனப்படுத்தும் செயல்.
அவசரநிலைக் காலத்தின்போது வணிக நோக்கில் அரசாங்கத்தின் வெட்கக்கேடான சட்டவிரோதச் செயல்களுக்கு அடிபணிவதற்கு பதிலாக சில பத்திரிக்கைகள் இலவசமாக வழங்கும் முடிவுக்கே வந்தன. அவ்வாறு அடிபணியாக கூடாது என்று முடிவு செய்த அந்தப் பத்திரிக்கை உரிமையாளர்கள் (தன்னெழுச்சியாக உதித்த எதிர்ப்பின் விளைவாக) பெரிய விலைகொடுத்தே துணிச்சலான் அந்த முடிவைச் செயல்படுத்தினர். இருப்பினும் அந்த இருள் நீண்ட காலம் நீடிக்கவில்லை. மார்ச் 1977 இல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அது முடிவுக்கு வந்தது. ஜனதா அரசாங்கம், நேரத்தை வீணடிக்காமல், பிப்ரவரி 1976 இல் அவசரநிலைக் கால ஆட்சி இயற்றிய அனைத்து சட்டங்களையும் ரத்து செய்தது.
ஆனால், இன்று போலவே அனைத்து அவசரநிலைக் காலத்திலும் அரசால் ஏற்படுத்தப்படுகிற அழுத்தங்களுக்கு பத்திரிக்கை, ஊடகங்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடியவையாக இருக்கின்றன என்பதே உண்மை. இருப்பினும் கூட பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் என்பது அறத்தின் நெறி தவறாத நிறுவனமாகவும், ஜனநாயகத்தைக் காக்கும் நல்ல கருவியாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே நிகழ்வுக்கு 45 ஆண்டுகளுக்குப் பிறகும் அவசரநிலைக் காலம் நமக்கு கற்பிக்கும் ஒரு முக்கியமான பாடமாக இருக்கிறது.