Indiavil Nigarnokku Nadavadikkaigal (Affirmative Action in India) Book Review by Dravidar Kazhagam General Secretary Veeramani in Tamil

சமூகநீதிக்கு – இதோ ஓர் அறிவாயுதம்! | கி. வீரமணி



இந்தியாவில் நிகர்நோக்கு நடவடிக்கைகள் (Affirmative Action in India)
அஸ்வினி தேஷ்பாண்டே 
தமிழில்: மருத்துவர். இரா.செந்தில்
பாரதி புத்தகாலயம் 
விலை: 175.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com

கரோனா காலத்து இடர்ப்பாடுகளிலும், இன்னல் சூழ்நிலைகளிலும், கொள்கை உறவுகளும், கொண்ட நட்புறவுகளும் பலர் நம்மிடமிருந்து பறிக்கப்படும் பரிதாபம் நம்மையாட்டி வருந்த செய்கிறது.

என்ன செய்வது. இது நம்மால் பரிகரிக்க முடியாத துன்பம்தான்; துயரம்தான் என்றாலும் அதிலிருந்து மீளுவதற்கு ஒரு சிறந்த வழி மேலும் அதிகமாக உழைப்பில் கவனஞ்செலுத்தி, உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளல் என்பதே சரியான வழி முறை!

அன்றாடம் அலுவலகத்திற்குச் செல்லுதல், சற்றுப் பயணங்களில் ஈடுபடுவது இப்போது பாத்தியமில்லை என்பதால், சோம்பிக் கிடக்காமல், சுறுசுறுப்பான பணியில் நாட்டம் செலுத்துதல், நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரு நல்ல வழி முறை என்பதை கரோனா கொடுந்தொற்று நம்மில் பலருக்குக் கற்றுக் கொடுத்து வருகிறது.

பயனடைந்தவர்களில் ஒருவன் யான்! நிறைய படிக்க, எழுத வாய்ப்புகள் கிட்டியுள்ளன. “நூலைப்படி, நூலைப்படி காலையில் படி, மாலையில் படி கடும் பகலில் படி” என்று ஆணையிட்டு அறிவுரை வழங்கும் புரட்சிக் கவிஞரின் வாக்கு செயல் வடிவம் பெற்றுள்ளது என்னைப் பொருத்தவரை – ‘விடுதலை’,’உண்மை ‘, ‘பெரியார் பிஞ்சு’, ‘The -lodern Rationalist’ – புத்தகங்களை உருவாக்குதல், மற்ற நிர்வாகப் பணிகள், ஆறுதல் கூறும் ஒத்தறிவுக் கடமைகள் – இவைகளுக்கு பஞ்சமே இல்லை. எனவே நேரம் பறந்து சென்றுவிடுகிறது!

பல அரிய நூற்களை படிக்கிறேன். குறிப்புகளை எடுக்கிறேன். எழுதினால் கூட உடனே விடுதலை’யில் (4 பக்கங்களாக குறுகிவிட்டாலும்) நானே அவைகளை ஆக்கிரமித்துக் கொண்ட குற்றத்தைச் செய்து விடக்கூடாது என்பதாலும் பல விஷயங்கள் நம் வேகத்திற்குத் தடைகளாகத்தான் அமைகின்றன.

தருமபுரி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவரும், உயரிய கொள்கையாளருமான டாக்டர் செந்தில் அவர்கள் சீரிய சிந்தனையுள்ள எழுத்தாளர் – பல நூல்கள் எழுதியுள்ளார். நான் அவைகளைப் பற்றி எழுதியுள்ளேன்.

அவர் நல்ல மொழி பெயர்ப்பாளராகவும் உள்ளார் என்பது அண்மையில் அவரால் தமிழாக்கம் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு நூல் இந்தியாவின் நிகர் நோக்கு நடவடிக்கைகள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அஸ்வினி தேஷ்பாண்டே எழுதிய ஆங்கில நூல் ‘Affirmative Action in India’ என்ற நூல் ஆகும்.



அவர் அனுப்பியிருந்ததை படித்து முடித்து பல நாள் ஆனபோதிலும், வாழ்வியலை எழுத, அதன் வரிசை இப்போதுதான் வாய்த்தது போலும்! காரணம் நேர நெருக்கடி, ஏட்டில் இட நெருக்கடி, இப்படிப் பல நெருக்கடி.

‘மிக அருமையான நூல்’ என்று கூறுவதற்கு முன் நல்ல புரியும்படியான கருத்தமைவு கெடாத தமிழாக்கம் – அருவி நீரோடை போல!

‘இடஒதுக்கீடு’ ஆங்கிலத்தில் பல நாடுகளில் பல பெயர்களில் நடைமுறையில் உள்ளன. நம்மில் பலருக்கும் Reservation (இட ஒதுக்கீடு’) என்பது, ‘சமூகநீதி’ என்றும், ‘வகுப்புரிமை’ என்றும் இப்படிப் பல பெயர்களில் அக்கொள்கை தலைப்பிடப்பட்டு – படுகிறது.

Affirmative Action என்பது அமெரிக்க அரசு சார்பில் தரப்படும் இட ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்படுகிற பெயர்.

அதன் கருத்தாக்கம் அப்படியே புரியும் வகையில் ஒரு நல்ல தமிழ்ச் சொல்லாக்கம்தான் ‘நிகர்நோக்கு’ என்ற டாக்டர் செந்தில் அவர்களின் சிறப்பான மொழிபெயர்ப்பு

சென்னை பாரதி பதிப்பகத்தார் வெளியிட்ட இந்த அருமையான தமிழ் நூல், 168 பக்கங்கள் கொண்டது. விலை 175 ரூபாய்.

‘இடஒதுக்கீடு’ பற்றி திட்டமிட்டே குழப்பும் வகையில் தங்களது ஆதிக்கச் சரிவு இதன் மூலம் ஏற்படுகிறதே என்ற பார்ப்பனர் மற்றும் மேலாண்மை ஜாதியினர் திட்டமிட்டுப் பரப்பும் பல பொய்யுரைகளுக்கு தெளிவான மறுப்புகளை அஸ்வினி தேஷ்பாண்டே ஆணியடித்ததுபோல கூறுகிறார்!

அதை நன்றாக, அனைவருக்கும் புரியும் தமிழில் வாசகர் மனதில் பதியும் வண்ண ம் மொழியாக்கமாக்கித் தந்துள்ளார் நமது புத்தாக்க எழுத்தாளர் தருமபுரிடாக்டர் செந்தில் அவர்கள்.

இச்சிறிய நூல் சமூகவியலாளர்களை மட்டு மல்லாமல், அதில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும், இந்தியாவில் எடுக்கப்பட் டுள்ள நிகர்நோக்கு நடவடிக்கைகளுக்கான காரணங்களையும் விவரங்களையும் அறிந்து கொள்ளப் பயன்படும் கையேடு என்ற நூலாசிரியர் அஸ்வினி தேஷ் பாண்டே கூறுவது சரியானதே.

பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் அளித்துள்ள அணிந்துரையில் முத்தாய்ப்பாக இந்நூல் தமிழ்நாட்டைப் பற்றி, “மருத்துவர் செந்தில் இம்மொழி பெயர்ப்பின் வாயிலாக சமூகநீதிக்கானப் போரில் கையிலேந்துவதற்காக, தமிழ்ச் சமுதாயத்திற்கு ஓர் அறிவாயுதத்தை அளித்துள்ளார்” என்ற கூற்று ஓர் ஒப்பற்ற உண்மை !

இதுபோன்ற பல நல்ல நூற்களை டாக்டர் செந்தில் மொழி பெயர்த்து தமிழுக்கும் தமிழ் கூரும் நல்லுலகத்திற்கும் தொண்டு செய்க! வாழ்த்துகள்!!

நன்றி: விடுதலை நாளிதழ்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. இரா.சிசுபாலன்

    ஆசிரியர் அவர்களின் மதிப்புரை மிகச்சிறப்பு.வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *