இந்தியாவின் கரும்புப் பெண்மணி - ஜானகி அம்மாள் | Janaki Ammal | ஜானகி அம்மாள் | இ. பா. சிந்தன் | Chinthan Ep

புத்தகத்தில் சொல்வதைப் போல “இரும்பு பெண்மணி என்றால் தெரியும், ஆனால் அது என்ன கரும்பு பெண்மணி? இந்த நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் தோன்றும் முதல் கேள்வி இதுவாகத் தான் இருக்கும்.

உங்களுக்கும் இதே கேள்வி வருகிறதா? இந்தியாவின் இனிப்பான கரும்பைக் கண்டுபிடித்தவர் தான் ஜானகி அம்மாள். அதனால் தான் அவரை கரும்புப் பெண்மணி என்று அழைக்கிறோம். ஆனால் இவ்வளவு பெரிய சாதனையாளரை நம்மில் பலருக்கு ஏன் தெரியவில்லை என்கிற சந்தேகம் வருகிறதா? நிச்சயமாக வரவேண்டும். அதற்கு சில காரணங்கள் இருக்கலாம் தானே! வாருங்கள். அதையெல்லாம் ஜானகி அம்மாளின் திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கையின் வழியாக சுவாரசியமாகத் தெரிந்துகொள்ளலாம்”.

ஆம், ஒரு நாள் மீஞ்சூர் பகுதி வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற புத்தக அறிமுக கூட்டத்தில் தோழர் Jai Ganesh Bala Sundaram அவர்கள் அறிமுகப்படுத்திய புத்தகம் தான் ‘இந்தியாவின் கரும்புப் பெண்மணி ஜானகி அம்மாள்’ அப்போதே நான் கேட்டேன். அது என்ன கரும்புப் பெண்மணி இரும்புப் பெண்மணி என்று தானே வரவேண்டும் என்று புத்தகத்தை வாங்கி பார்த்தேன். ஆம், இந்தியாவின் கரும்புப் பெண்மணி என்று தான் அச்சிட்டு இருந்தது. ஒருவேளை அச்சுப்பிழையோ என்று நினைத்தேன் இல்லவே இல்லை கரும்புப் பெண்மணிதான் என்று அவர் புத்தகத்தை விளக்கி அறிமுகம் படுத்திய பின்னரே உறுதி செய்து கொண்டேன். பின்னர் புத்தகத்தை வாங்கி படிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அப்போதே அவர் சைந்தவி தோழருக்கு புத்தகத்தை கொடுத்து இருந்தார். அதனால் புத்தகத்தை அப்போதைக்கு படிக்க முடியவில்லை. தற்போதைக்கு பாரதி புத்தகம் தோழர் ரமேஷிடம் சொல்லி வாங்கிய வாசித்த பிறகு தான் தெரிகிறது உண்மையிலேயே இந்தியாவின் இரும்புப் பெண்மணி ஜானகி அம்மாள் தான் என்று..

ஏன் கரும்புப் பெண்மணியை இரும்பு பெண்மணி என்று சொல்கிறேன் என்றால் பெண்கள் படிக்க முடியாத காலத்தில் படித்தார் ன. அதுவும் பெரியபெரிய படிப்பு எல்லாம் படித்தார். அமெரிக்காவிற்கே சென்று படித்தார். இந்தியாவின் முதல் பெண் தாவரவியலாளர் ஆனார். பல அவமானங்களைத் தாண்டி, ஏழைகளுக்கும் சர்க்கரை கிடைப்பதற்கு உழைத்தார். இந்தியச் செடிகொடிகளைக் காப்பாற்றினார். இறுதிவரை இயற்கையைப் பாதுகாக்கப் போராடினார். அப்படிப்பட்ட ஜானகி அம்மாளை நாம் மறக்கலாமா? நமக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்ல வேண்டும் தானே.

இப்போது இந்த கேள்விக்கு உரக்கப் பதில் சொல்லுங்கள் பார்ப்போம். “இந்தியாவின் கரும்புப் பெண்மணி யார்;”
ஜானகி அம்மாள். என்று முடியும் புத்தகத்தை எழுதியவர் தோழர் Chinthan Ep இதுவே குழந்தைகளுக்காக இவர் எழுதிய முதல் நூல்.

இதற்கு முன்னதாக இவரது நூலை கிரிக்கெட்டில் சாதித்த இந்திய சூப்பர் ஸ்டார் பல்பங்கர் பலு என்ற (கிரிக்கெட்) விளையாட்டு துறை சார்ந்த வாழ்க்கை வரலாற்று நூலை வாசித்திருந்தேன்.

நான் வாசிக்கும் இரண்டாவது புத்தகம் தான் கரும்புப் பெண்மணி ஜானகி அம்மாள்.இதுவே அவரது முதல் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது இதுவரை நான் வாசித்த புத்தகங்களிலும் சரி கல்விக்கூடங்களில் கற்பித்த புத்தகங்களும் சரி அறியாத நபர்களை பற்றி வாசிக்கும் போது புத்துணர்ச்சி மேலோங்கி எழுகிறது. அதுபோன்றுதான் ஜானகி அம்மாள் குறித்து வாசிக்கையிலும்.

புத்தகத்தில் குறிப்பிட்டது போல உங்களுக்குத் தெரிந்த விஞ்ஞானியின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், ஐன்ஸ்டீன், எடிசன் அப்துல் கலாம், சர்.சி.வி ராமன், போன்ற பெயர்களை நாம் சொல்லலாம் .சரி, பெண் விஞ்ஞானி யாராவது தெரியுமா என்றால், மேரி கியூரி என்று சொன்னபின்…

ரொம்பவும் யோசிக்க ஆரம்பித்து விடுவோம். உண்மைதானே விஞ்ஞானிகள் பெயர்களை குறைந்த அளவில் தான் தெரியும். அதிலும் பெண் விஞ்ஞானிகள் என்றால் சொல்லவே தேவையில்லை.

தற்போது தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே என்று தெரிந்துக் கொண்டிருக்கிறோம். அதற்கே இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

அதற்குள்ளாகவே முதல் பெண் விஞ்ஞானி என்று கேட்டால் நாம் எங்க போய் தேடுவது. .

அதற்கான பதிலைத்தான் இந்த புத்தகம் தருகிறது. ஏன் ஜானகி அம்மாளை விஞ்ஞானி என்று சொல்கிறார்கள் என்றும். இந்தியாவின் இனிப்பான கரும்பை கண்டுபிடித்தவர் யாராக இருக்கும். அவரால் தானே நமது காலை காபி முதல் மாலை தேநீர் வரையும் இனிப்பாக இருக்கிறது. அதனால் இந்தியாவின் இனிப்பான கரும்பை நமக்கு தந்தவரைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள் என்று ஒரு குழந்தையின் வாஞ்சையுடன் கை பிடிக்காதக் குறையாக அழைத்துச் செல்கிறார் புத்தகத்திற்குள் ஆசிரியர் நம்மை.

“1897 ஆம் ஆண்டு கேரளாவில் தலச்சேரி என்னும் ஊரில் ஜானகி அம்மாள் பிறந்தார். அவருக்கு 18 சகோதர சகோதரிகள் இருந்தனர். அதாவது அவருடைய பெற்றோருக்கு 19 குழந்தைகள் ஒரே வீட்டில் 19 குழந்தைகள் என்று அதிர்ச்சி அடையாதீர்கள். அப்போதெல்லாம் அது சாதாரணமாக இருந்தது” ஆனால், இது கொஞ்சம் அதிகம் தான்.

எல்லோரையும் போல பள்ளிப்படிப்பை ஜானகி அம்மாள் முடித்த பிறகு பெண்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். அதேபோல அவருக்கும் திருமணம் செய்யலாம் என்று அவரது பெற்றோர்கள் நினைத்தனர். ஆனால், ஜானகி அம்மாள் திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏன் திருமணம் வேண்டாம்? என்று கேட்டதற்கு ஜானகி அம்மாள் கூறிய பதில். “எனக்கு நிறைய படிக்க வேண்டும்” என்று. ஆனால் படிப்பதற்கு எங்கே போவது அதிக செலவாகுமே, என்று அவங்க அப்பா சொன்ன பிறகு,

“அப்பா, எனக்கு கல்யாணமே வேண்டாம். என் திருமணத்திற்கு செலவாகும் பணத்தை வைத்து என்னைப் படிக்க வையுங்கள் என்று ஜானகியம்மாள் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

அதன் பிறகு அவர் நன்றாகவே படித்தார். கேரளாவில் பிறந்த அவர் சென்னையில் ராணி மேரி கல்லூரியில் படிப்பதற்கு கேரளாவில் இருந்து வந்து படித்தார் என்பது நம் தமிழ்நாட்டிற்கு பெருமை தானே.

மேலும், புத்தகத்தில் சொல்வதைப் போல ராணி மேரி கல்லூரியில் நடந்த ஒரு சம்பவத்தில் ஆசிரியரையே கேள்வி கேட்டு, தாவரங்கள் பற்றி தனக்குத் தெரிந்த நிறைய விஷயங்களை சொல்லி மாநிலக் கல்லூரியில் தாவரவியல் படிப்பில் சேர்ந்து விட்டார்.

நமக்கு எல்லோருக்கும் தெரிந்துதானே இப்போது கூட சிலர் பெண்களைப் படிக்க விடுவதே பாவம் என்று நினைக்கிறார்கள் பொம்பள புள்ள படிச்சு என்னத்த கிழிக்க போகுது என.

அதிலும் அந்த காலக்கட்டத்தில் சொல்லவே வேண்டாம். சென்னை மாநிலக் கல்லூரியில் தாவரவியல் படித்த முதல் பெண்ணும் அவர்தான் அங்கே அவர் நன்றாக படித்தார் முதல் மதிப்பெண் எடுத்து தாவரவியல் பட்டமும் பெற்றார்.

அதன் பிறகு சென்னையில் இருக்கும் பெண்கள் கிறித்துவ கல்லூரியில் வேலை கிடைத்தது. அங்கு இரண்டு ஆண்டுகள் ஆசிரியராக வேலை பார்த்தார். மேலும் படிக்க வேண்டும் என்று ஆசை அவருக்கு இருந்தது. அப்போது ஏழை நாடுகளில் நன்றாக படிக்கிற பெண்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பார்பர் என்பவர் இந்த ஸ்காலர்ஷிப்பை உருவாக்கி இருந்தார். அந்த ஸ்காலர்ஷிப்பில் அமெரிக்காவுக்கு புறப்பட்டு ‘தாவர உயிரணுவியல்’ என்கிற துறையில் படித்து 1931 ஆம் ஆண்டு தாவரவியலில் டாக்டர் பட்டம் பெற்று சாதித்தார். இந்தியாவிலேயே முதல் முதலில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் அவர்தான்.

டாக்டர் பட்டம் பெற்ற கையோடு இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி வந்தார். ஏதாவது கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார் ஜானகி அம்மாள்.
அவர் வாழ்ந்த காலத்தில் சர்க்கரைக்கு பெறும் கட்டுப்பாடுகள் இருந்தது. ஏனெனில் இந்தியாவில் விளையும் கரும்புகளிலிருந்து தான் பெரும்பாலும் சர்க்கரை எடுக்கப்படுகின்றன. ஆனால், ஜானகி அம்மாள் வாழ்ந்த காலத்தில் அப்படி இல்லை. பனைமரத்திலிருந்து எடுத்த வெள்ளத்தையும் கருப்பட்டியும் தான் இனிப்புக்காக பயன்படுத்தினார்கள். ஆனால் நாட்டில் இருக்கும் எல்லா மக்களுக்கும் கருப்பட்டி போதவில்லை. அதற்கு பதிலாக கரும்பிலிருந்து சர்க்கரை எடுத்து இருக்கலாமே என்ற யோசனை வந்ததின் அடிப்படையில் கரும்பு விதைகளில் சில மாற்றங்களை செய்து ஆய்வுக்கு உட்படுத்தினார்.ஆனால் இனிப்பான கரும்பு வளர பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தார். புத்தகத்தில் குறிப்பிடுவது போல ஒரு நல்ல ஆய்வாளருக்கு பொறுமை அவசியம். தாமஸ் ஆல்வா எடிசன்தான் பல்பை கண்டுபிடித்தார் என்று உங்களுக்கு தெரியும். அவர் சரியான பல்பைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் எத்தனை முறை தோற்றார் தெரியுமா? ஆயிரம் முறை.ஆனாலும் தோற்பதற்கு அவர் பயப்படவே இல்லை. பொறுமையோடு மீண்டும் மீண்டும் முயன்றார். அதுபோலவே நமது ஜானகி அம்மாளும் பொறுமையாக காத்திருந்து, காத்திருந்து இனிப்பான கரும்பை ஆய்வுக்கு உட்படுத்தி மிகச்சிறந்த இனிப்பான கரும்பை கண்டுபிடித்தார்.

ஆனால், அப்படிப்பட்ட அறிவியல் ஆய்வாளருக்கு தனது அலுவலகத்தில் தினமும் வேலை முடிந்து ஜானகி அம்மாள் கிளம்பியதும் அவர் உட்கார்த்திருந்த இடத்தை எல்லாம் தண்ணீர் ஊற்றி கழுவினார்கள். அலுவலக நேரத்தில் அவருடன் யாருமே பேசவில்லை. அவர் என்ன சொன்னாலும் யாரும் கண்டு கொள்வதுமில்லை. அவர் கலப்பினப் பயிர் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதை உலகின் புகழ்பெற்ற அறிவியல் பத்திரிகையான நேச்சுருக்கு அனுப்ப நினைத்தார். ஆனால் அதற்கு அவருடைய அலுவலகத்தில் இருந்த அதிகாரி கையெழுத்து போட வேண்டும். அதிகாரியோ ஜானகி அம்மாவின் கட்டுரைக்குக் கையெழுத்துப் போடாமல் இருந்தார். இப்படி அவர் எழுதிய கட்டுரை அதிகாரியின் மேசை மேலே இருந்தது. இப்பேற்பட்ட நிகழ்வுகள் ஜானகி அம்மாளுக்கு கசப்பை தந்தன.

மேலும் அவர் ஒதுக்கப்படும் முதல் காரணம் அவர் பெண் என்பதும், பெண்ணாக இருந்தால் என்ன? திறமை இருந்தால் போதாதா என்றுதானே நினைக்கிறீர்கள். ஆனால் பெண்கள் படிக்கவே கூடாது என்று சொல்லப்பட்ட காலம் அது ஆனால் ஜானகி அம்மாள் நிறைய படித்தார் ஆண்களை விட புதிதாக நிறைய கண்டுபிடிக்கவும் செய்தார். அது அங்கு வேலை செய்த ஆண்களுக்கு பிடிக்கவில்லை அதனால் ஜானகி அம்மாளை அவமானப்படுத்தினர்.

மேலும் என்னதான் ஆய்வு மேற்கொண்டு நல்லபடியாக ஆராய்ச்சிகள் செய்தாலும் படிப்பில் சிறந்து விளங்கினாலும் அந்த காலத்தில் பெண் என்பதாலும் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்ததாலும் ஜானகி அம்மாள் அவமானப்படுத்தினர். சரியான வாய்ப்புகளைத் தரவில்லை. பாராட்டும் கிடைக்கவில்லை. ஆனாலும், அவர் கடுமையாக உழைத்தார்.

கோவையில் வேலை பார்த்தபோது ஒரு புதுவகை கரும்பை கண்டுபிடித்தார். அந்த கரும்பு இனிப்பாக இருந்தது அதுவும் இந்தியாவிலேயே அதிக இனிப்பை கொண்ட கரும்பாக அது மாறியது. வெளிநாட்டிலிருந்து கரும்பு வாங்குவதும் குறைந்தது. அதனால் அந்த கரும்பைதான் இந்தியா முழுவதும் விளைவித்தார்கள். அந்த கரும்பில் இருந்து சர்க்கரையும் எடுக்கப்பட்டது. பணக்காரர்கள் மட்டுமல்லாமல் ஏழைகளும் சர்க்கரை வாங்கும் அளவிற்கு அதன் விலை குறைந்தது.
எப்பேர்பட்ட சாதனைக்கு சொந்தக்காரரான ஜானகி அம்மாளை சமூகம் எப்படி எல்லாம் அவமானப்படுத்தியது என்பதை இந்த புத்தகத்தில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவின் சாதிய ஒடுக்கு முறையைகளால் பாதிக்கப்பட்ட எத்தனையோ நபர்களில் தானும் ஒருவர் என்று அடங்கி, ஒடுங்கி விடாமல் சமூகத்தை எதிர்த்து போராடினார். இந்தியாவை விட்டு லண்டனுக்குச் சென்றார். பல ஆய்வுகளை மேற்கொண்டு பல கண்டுபிடிப்புகளை செய்தார் அதில் முக்கியமானது ‘குரோமோசோம் அட்லஸ் ஆஃப் கல்டிவேட்டட் பிளாண்ட்ஸ்’ என்கிற நூல் இன்றைக்கும் தாவரவியல் படிப்பவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
கண்டுபிடிப்புகளுக்கு மேல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டு இருந்தார் ஜானகி அம்மாள். அப்போது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நேரம் அறிவியல் தெரிந்தவர்கள் நிறைய பேர் இந்தியாவுக்கு தேவைப்பட்டார்கள். அப்போது ஜவஹர்லால் நேரு அன்றைய பிரதமர் அவர்கள் லண்டனுக்கு ஒரு வேலையாக சென்று இருக்கும்போது ஜானகி அம்மாளை இந்தியாவுக்கு திருப்பி வர வேண்டும் என்று அழைத்தார்.

“சுதந்திரம் பெற்ற பிறகும் இன்னொரு நாட்டுக்கு நாம் அடிமையாக இருக்கக் கூடாது. இதுவரை இந்தியாவில் செடிகளையும் விதைகளையும் சேகரித்தவர்கள் எல்லோருமே பிரிட்டன்காரர்கள் தான் அதனால் நம் செடிகள் நம்மிடம் கூட இல்லை” என்றார். அதனால் இந்திய செடிகளை சேகரிக்கும் வேலையை ஜானகியம்மாள் தொடங்கினார். அதில் வெற்றியும் பெற்றார். சுதந்திரம் பெற்ற பிறகும் ஆணாதிக்கமும், சாதிய ஏற்றத்தாழ்வுகளும் ஒழிந்ததாக தெரியவில்லை ஏனெனில் இவ்வளவு வேலைகள் செய்தும் ஜானகி அம்மாளுக்கு கடைசி வரையும் பொட்டானிக்கல் சர்வேயின் தலைவர் பதவி கொடுக்கப்படவே இல்லை.
பதவியில் என்ன இருக்கிறது பதவி இல்லாமலேயே தன் தாய் நாட்டிற்காக தொடர்ந்து ஆய்வுகளையும், வேலையும் செய்து கொண்டே இருந்தார்.

தனது 87 வயது வரை இந்த சமூகத்தை எதிர்த்து இயற்கையை காப்பாற்ற போராடினார்.

ஆம், இந்தியாவின் கரும்பு பெண்மணி மட்டுமல்ல இந்தியாவின் இரும்பு பெண்மணியும் ஜானகி அம்மாள் தான் என்பது புத்தகத்தை வாசித்த பிறகு நான் உணர்வது.

இறுதியாக, ஹமபிரபா சொல்வதைப்போல “இந்தியாவின் கரும்புப் பெண்மணியான ஜானகி அம்மாளின் பிறப்பு தொடங்கி, பெண் கல்வி மறுக்கப்பட்ட காலத்திலும் கல்வி ஒன்றே போதும் என்று கண்ணாக இருந்து, கடல் கடந்து சென்று படித்து எப்படி ஆய்வாளர் என்பதை சொல்கிறது. ஒர் ஆய்வாளர் ஆனாலும், சாதிய அடக்கு முறையும், ஆணாதிக்கும் நம் நாட்டின் அறிவு வளத்தை நாட்டை விட்டே துரத்திவிட்ட வலிமிக்க கதையை கூறுகிறது”.

துயரமும், போராட்ட குணமும், அறிவுமிக்க இக்கதையை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு செல்வோம். புத்தகங்களை வாசிக்க வைப்போம் அறிவுள்ள சமூகத்தை படைப்போம்.

புத்தகத்தை எழுதிய இ. பா. சிந்தன் (Chinthan Ep) அவர்களுக்கும் வெளியிட்ட ஓங்கில் கூட்டம் புக்ஸ் ஃபார் சில்ட்ரனுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

 

நூலின் தகவல்கள்: 


நூலின் பெயர்
: இந்தியாவின் கரும்புப் பெண்மணி “ஜானகி அம்மாள்”

தமிழில் : இ. பா. சிந்தன்

விலை ரூ. 40/-

பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம்

 

அறிமுகம் எழுதியவர்: 

அமுதன் தேவேந்திரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *