நூல் அறிமுகம்: ’ஔரங்கசீப்’, மொகலாயப் பேரரசின் ஒரு நெருக்கடிக் காலத்தைக் காட்சிப்படுத்தும் இந்திரா பார்த்தசாரதியின் வரலாற்று நாடகம்.
தமிழ் நாடக இலக்கியத்துக்கு இந்திரா பார்த்தசாரதியின் கொடை அளப்பரியது. சமூகம், வரலாறு, தொன்மம் என்று அனைத்து நாடக வகைமைகளிலும் பங்களிப்புச் செய்துள்ளார். இவரின் ’ஔரங்கசீப்’, ‘ராமாநுஜர்’ இரண்டும் பெரும் வெற்றி பெற்றுள்ள வரலாற்று நாடகங்கள். ஒன்று மதத்தில் புரட்சி செய்த மகான் ராமாநுஜரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்துகிறது. மற்றொன்று மொகலாயப் பேரரசன் ஔரங்கசீப்பின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் சித்தரிக்கிறது.
திரைப்படக் கலையின் வருகையினால் மிகவும் பாதிப்புக்குள்ளானது நாடகக் கலையாகும். தமிழ் நாடகக் கலையை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு சில நாடகாசிரியர்களுள் முக்கியமானவர் இந்திரா பார்த்தசாரதி. தன்னுடைய நாடகங்கள் போதியளவு தமிழ்நாட்டில் அரங்கேற்றப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு உண்டு. ஔரங்கசீப் நாடகம் தமிழில் அரங்கேறுவதற்கு முன்னரே இந்தியில் அரங்கேறியது மிகப் பெரிய நகைமுரணாகும். தமிழர்கள் மனதில் திரைப்படங்கள் மீதான ஈர்ப்பு வலுவாக இருப்பதால் நாடகங்கள் அரங்கேறுவது அரிதாகி வருகிறது. இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் இன்றும் இடையறாது அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. பார்த்தசாரதியின் நாடகங்களை மேடையில் பார்த்து மகிழ வாய்ப்பு இல்லாவிட்டாலும் நாம் புத்தகங்கள் வழி படித்து மகிழலாம்.
1526இல் முதலாம் பானிபட் போரில் டில்லி சுல்தான் லோடியை வென்று பாபர் நிறுவிய மொகலாயப் பேரரசு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை நீடித்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முற்றுப் பெறுகிறது. ஔரங்கசீப் மொகலாயப் பேரரசின் கடைசிப் பேரரசனாகத் திகழ்ந்துள்ளார். பின்னர் வந்தவர்கள் மொகலாயப் பேரரசின் அழிவுக்கு இட்டுச் சென்றதில் பங்கேற்றவர்களாகவே இருந்துள்ளனர். இதில் அக்பர் மொகலாயப் பேரரசை பொற்காலமாக மாற்றியவராகக் கொண்டாடப்படுகிறார். ஔரங்கசீப் மொகலாயப் பேரரசை ஒரு வல்லரசாக மாற்றிய பெருமைக்குரியவராகிறார். அக்பர் மதநல்லிணக்கத்தின் அடையாளமாகப் போற்றப்படுகிறார். ஔரங்கசீப் இஸ்லாமிய மதக் கோடுபாடுகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்து எளிமையான வாழ்வு வாழ்ந்தவராகத் திகழ்ந்துள்ளார்.
’ஔரங்கசீப்’ நாடகம் பேரரசர் ஷாஜகானின் அந்திமக் காலத்தில் நடக்கும் சோகத்துடன் தொடங்குகிறது. அரச குடும்பத்தில் நடக்கும் அதிகாரப் போட்டியே நாடகத்தின் கருப்பொருளாகும். மிகக் குறைந்த கதாபாத்திரங்களே மேடையை அலங்கரிக்கிறார்கள். ஷாஜகான், அவரின் இரு புதல்விகள் ஜஹனாரா, மற்றும் ரோஷனாரா, ஷாஜகான் புதல்வர்கள் தாரா மற்றும் ஔரங்கசீப், டில்லியின் எல்லைப்புற படைத் தலைவன் மாலிக் ஜீவன் ஆகியோரே முக்கியப் பாத்திரங்கள் ஆவர். அதிகாரப் போட்டியில் குடும்பம் இரண்டாகப் பிரிந்து நின்று மோதுகிறார்கள். இவர்களின் மனப் போராட்டத்தையே நாடகம் காட்சிப்படுத்துகிறது. ஷாஜகான் – அவர் மகன் ஔரங்கசீப் இடையிலான முரண், ஜஹனாரா – ரோஷனாரா சகோதரிகள் இடையிலான முரண். தாரா – ஔரங்கசீப் சகோதரர்கள் இடையிலான முரண் இவை அனைத்தும் நாடகத்தை சுவாரசியமாக்குகின்றன. இதில் சகோதரர்களுக்கு இடையிலான முரண் போரில் முடிந்து ஔரங்கசீப் பேரரசனாக முடி சூட்டிக்கொள்வதில் நாடகம் முடிகிறது.
அரச குடும்பங்களின் அதிகாரப் போட்டியில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுவதை வரலாறுதோறும் பார்க்கிறோம். பேரரசுகள் எல்லாம் இரத்தத்தில் கட்டப்படுவதாகவே இருக்கின்றன. அதிலும் ஔரங்கசீப் சிம்மாசனமேற மிகப் பெரிய விலையைக் கொடுக்கிறான். தந்தை ஷாஜகானைச் சிறையிலடைக்கிறான். சகோதரர்கள் தாரா, ஷுஜா, மூரத் மூவரின் கல்லறை மேல் தன்னுடைய அரியாசனத்தைக் கட்டுகிறான்.
நாடகம் யமுனை நதிக்கரையில் ஆக்ராவின் அரசவையில் ஷாஜகான் சோகத்துடன் வீற்றிருக்கும் காட்சியுடன் தொடங்குகிறது. தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தவாரே தாஜ்மஹலின் அழகைக் கண்டு ரசிக்கிறார். தாஜ்மஹலின் அழகில் தன் மனைவியின் அழகைக் காண்கிறார். மனைவி மும்தாஜ் மஹலின் நினைவிலேயே காலத்தைக் கழிக்கும் ஷாஜகானுக்கு இப்போது தாஜ்மஹலுக்கு இணையாக மற்றுமொரு மஹல் கட்டும் ஆசையுள்ளது. மனைவியின் கல்லறைக்கு எதிராக யமுனை நதியின் மற்றொரு கரையில் தான் சாவதற்கு முன்னாலேயே தனக்கான கல்லறையைக் கட்ட ஆசைப்படுகிறார். தாஜ்மஹல் வெள்ளை நிறப் பளிங்குக் கல்லினால் கட்டப்பட்டுள்ளது, தனக்கான கல்லறை கருப்பு நிறப் பளிங்குக் கற்கலால் கட்டப்பட வேண்டும் என்ற விரும்புகிறார். இக்கனவை தன் பிள்ளைகள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறார்.
நாடகத்தின் முதல் காட்சியில் தன் அன்பு மகள் ஜஹனாராவிடம் தன் கனவு நனவாகிடுமா என்று கேட்டு ஆதங்கப்படுகிறார். வயோதிகத்தின் அத்தனை பலவீனங்களும் அவரிடம் காணப்படுகின்றன. பேரரசு நான்காகப் பிரிந்து கிடக்கிறது. வடக்கில் தாராவும், கிழக்கில் ஷுஜாவும், மேற்கில் மூரத்தும், தெற்கில் ஔரங்கசீப்பும் ராஜ்யத்தைப் பிரித்து நிர்வகிக்கிறார்கள். ஷாஜகானின் மரணத்திற்குப் பின்னர் ஒட்டு மொத்த ராஜ்யத்தை யார் ஆளப்போகிறார்கள்? ஆக்ராவில் தன் தந்தையுடன் தங்கியிருக்கும் தாராவா? மொகலாயப் பேரரசின் தெற்குப் பகுதியை நிர்வகிப்பதோடு அதனை விஸ்தரிக்கும் பணியில் ஓயாது உழைக்கும் ஔரங்கசீப்பா? இருவருக்கும் இடையிலான போட்டி தீவிரமடைகிறது. தாராவை ஆதரித்து ஜஹனாராவும், ஔரங்கசீப்பை ஆதரித்து ரோஷனாராவும் சகோதரிகள் இருவரும் எதிரெதிர் அணியில் நிற்கிறார்கள்.
தாரா – ஔரங்கசீப்: இருவருக்குமான இடைவெளி மலைக்கும், மடுவுக்குமானது. தாரா இந்து மதக் கோட்பாடுகளைக் கற்றறிவதில் ஆர்வத்துடன் இருக்கிறான். இந்து – இஸ்லாம் மதங்களிக்கிடையில் அப்படி ஒன்றும் வேறுபாடில்லை என்று நினைக்கிறான். எம்மதமும் சம்மதம் என்பது அவன் வாதம். ஔரங்கசீப் நாட்டின் எல்லைகளை விஸ்தரிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளான். மொகலாய சாம்ராஜ்யத்தில் இஸ்லாமியக் கோட்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்பது அவன் ஆசை.
ராஜ்ய நிலைமைகள் குறித்து ஜஹனாரா – தாரா இடையில் நடக்கும் உரையாடல் மூலம் நாடகத்தின் கருப்பொருள் தெளிவாகிறது. ‘’அக்பர் பரம்பரையில் வந்த எனக்கு நாட்டை மதத்தின் அடிப்படையில்தான் ஆள வேண்டுமென்ற நம்பிக்கை கிடையாது. நான் எந்த மதத்திற்கும் விரோதியில்லை.’’ என்கிறான் தாரா. ஜஹனாரா உடனே அவனின் பேச்சைக் கேட்டு சிரித்துக்கொண்டே, ‘’தாரா! ஒன்றை மறந்துவிடாதே! அக்பர் மதச்சார்பின்மை பேசும்போது அவர் ஒரு சக்கரவர்த்தி! நீ, இன்னும் சக்கரவர்த்தி ஆகவில்லை என்பதைப் புரிந்துகொள். உன் சகோதரன் ஔரங்கசீப் இஸ்லாமிய மதத் தலைவர்கள் எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்றிருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள். இந்த அரசவையின் அதிகார மையம் இஸ்லாமியக் கோட்பாடுகளுகளை அமல்படுத்துவதில்தான் நாட்டமுள்ளது என்பதையும் அறிந்துகொள். சாதாரண இஸ்லாமியர்களின் நம்பிக்கையையும் நீ பெறவில்லை. ஹிந்துஸ்தானத்தில் இஸ்லாமை நீ முன்னெடுத்துச் செல்ல மாட்டாய் என்பதே அவர்களின் எண்ணம். உன் சகோதரர்கள் யாரும் உனக்கு ஆதரவாக இல்லை என்பதை உணர்ந்துகொள்”. என்கிறார்.
இவர்களின் உரையாடலைச் சற்றும் கவனியாது தன்னுடய கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஷாஜகான்,’’நீ, இந்தக் கரையில் வெள்ளை மலரில் இருந்து கொண்டிரு, நான் அந்தக் கரையில் ஒரு கரு மலரில் குடிவருகிறேன். ஆம்; ஒரு கருஞ்சலவைக் கல் மஹல். நாம் இருவரும் ஒருவரை இருவர் பார்த்துக்கொண்டிருப்போம்” என்று ஷாஜகான் தனக்குள் புலம்புவதைக் கேட்டு ஜஹனாரா கோபமடைகிறாள். ‘’நீங்கள் ஆசைப்படும் இன்னொரு மஹலின் விலையைப் பற்றி யோசித்தீர்களா, சக்கரவர்த்தி? மக்கள் இத்தனை விலை கொடுத்து உங்களின் கனவை நிறைவேற்ற வேண்டுமா? கோடிக்கணக்கில் செலவழித்து சமாதி கட்ட வேண்டும் என்றால் மக்களிடமிருந்து பணம் வராமல் வேறு எங்கிருந்து வரும்?”. என்று கேட்கிறாள் ஜஹனாரா. ”மக்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் கனவு எனக்குச் சொந்தம்,’’என்கிறார் ஷாஜகான். தன் தந்தையின் ஆசையைக் கேட்ட தாரா,’’சாவின் விளிம்பில் இருக்கும் என் தந்தையின் ஆசையை நிறைவேற்றவே நான் விரும்புகிறேன்’’ என்கிறான். இதைக் கேட்டதும், மகிழ்ச்சி பொங்கிட ‘’நீதான் என் கனவை நிறைவேற்ற வேண்டும் தாரா!. நீதான் என் வாரிசு!’’ என்று உரக்கக் கூறுகிறார் ஷாஜகான்.
இவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழையும் ரோஷனாரா, தன் சகோதரி ஜஹனாராவைப் பார்த்து,’’ஆகா! என்னவொரு ஆசை சக்கரவர்த்திக்கு! அவருக்கொரு சமாதி, அப்புறம் உனக்கொரு சமாதி, தாராவுக்கு ஒரு சமாதி! ஹிந்துஸ்தான் முழுவதும் சமாதிகளால் நிறைந்திருக்கப் போகிறது. ஔரங்கசீப் ஒரு மடையன் உங்களைப்போல் அழகை ரசிக்கத் தெரியாதவனாக இருக்கிறான். தினம் திருக்குரான் ஓதுகிறான். ஐந்து தடவை நமாஸ் செய்கிறான். மது அருந்துவதில்லை, மங்கையரைப் பார்ப்பதில்லை. ஆடம்பரத்தை வெறுக்கிறான். நபி நாயகத்தின் பக்தனாக இருந்து எளிமையாக வாழ்கிறான்,’’ என்று தன் சகோதரன் ஔரங்கசீப்பைப் புகழ்கிறாள்.
ஜஹனாரா, ரோஷனாரா சகோதரிகளிடையே வாதம் வலுக்கிறது. ’’தனக்கு மஹல் கட்டித்தருகிறேன் என்றதும் தாராவை தன் வாரிசு என்று அறிவிக்கிறார் சக்கரவர்த்தி. இதைக் கேட்டுக்கொண்டு ஔரங்கசீப் சும்மா இருப்பானா? என்று ரோஷனாரா சொன்னதும், ஜஹனாரா,’’இதில் என்ன தப்பு? தாராதானே மூத்தமகன். மூத்தமகன் பட்டமேறுவதில் என்ன தப்பு?’’ என்கிறாள் ஜஹனாரா. ‘’இந்தக் கேள்வியை அவரிடம் கேள்; சக்கரவர்த்தியிடம் கேள்! உனக்குத் தெரியாமல் இருக்கலாம். அவருக்குச் சரித்திரம் மறந்திருக்காது. அவர் தந்தைக்கு அவர்தான் மூத்தமகனா என்று கேள்’’! ரோஷனராவின் இந்தக் கேள்வி ஜஹனாராவை வாயடைக்கச் செய்கிறது. ஷாஜகான் தன் சகோதரர்களைப் பலி கொடுத்துத்தான் அரியணை ஏறியவர்!.
ரோஷனாராவைச் சாந்தப்படுத்தும் பொருட்டு ஷாஜகான் அவளைப் பார்த்து,’’ஔரங்கசீப்பிடம் என் கனவை நிறைவேற்றுவானா என்று கேட்டுச் சொல் மகளே! அவனை என் வாரிசாக அறிவிக்கிறேன்’’ என்கிறார். ’’என்னை மகளே, என்றழைத்தற்கு நன்றி சக்கரவர்த்தி. நீங்கள் இப்போது தாரா என்கிற மண் குதிரையை நம்பாமல் ஔரங்கசீப் என்கிற இரும்புக் குதிரையை நம்புவதற்குப் பாராட்டவும் செய்கிறேன். ஔரங்கசீப் உங்கள் கனவை நிறைவேற்றுவானோ இல்லையோ; நிச்சயம் உங்களுக்குத் தீங்கிழைக்க மாட்டான். இது உறுதி’’. என்கிறாள். ‘’அவன் என்னைக் கொன்றானாலும் சரி. என் கனவை நிறைவேற்றுவானா?’’ என்று ஷாஜகான் கேட்டதும், ஜஹனாரா,’’சக்கரவர்த்தி! இதில் எந்த நியாயமும் இல்லை. சற்றுமுன் தாராவை உங்கள் வாரிசாக அறிவித்தீர்கள். இப்போது உங்கள் ’மஹல்’ கட்டும் கனவுக்காக ஔரங்கசீப்புக்கு இந்த ராஜ்யத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள். இது தாராவை வஞ்சிப்பதாகும். தாராவைப் பணயம் வைத்து நீங்கள் உங்கள் ஆசையை அடைய நினைக்கிறீர்கள்” என்று ஆவேசத்துடன் கத்துகிறார் ஜஹனாரா.

இந்நிலையில் ஒரு வீரன் ஷாஜகானுக்கு ஒரு கடிதத்தைக் கொண்டு வருகிறான். ஔரங்கசீப்பின் படை ஆக்ராவை நோக்கி வருவதைக் கடிதம் தெரிவிக்கிறது. ஔரங்கசீப் ஒரு வாரத்துக்குள் ஆக்ரா கோட்டையைப் பிடித்துவிடுவான் என்பதைத் தளபதி தெரிவிக்கிறான். ஆக்ரா கோட்டைக்குள் ஔரங்கசிப்புக்கு ஆதரவு பெருகியுள்ள உண்மையையும் சொல்கிறான். நிலைமையைப் புரிந்துகொண்ட ஜஹனாரா தன் சகோதரன் தாராவை டில்லிக்குத் தப்பிச் செல்! என்று சொல்கிறாள். தந்தையின் பாதுகாப்பை அவள் பொறுப்பேற்றுக் கொள்வதாகச் சொல்கிறாள். ’’ஒரு மனிதனின் லட்சியத்தை போரின் வெற்றி-தோல்விகளைக் கொண்டு நிர்ணயம் செய்யக்கூடாது. லட்சியங்கள் நிரந்தரமானவை,’’ என்று தத்துவ விஷாரம் செய்கிறான் தாரா. ‘’உன் ஆன்மீகத் தத்துவங்கள் போருக்குப் பயன்படாது. நீ உடனே டில்லிக்குப் புறப்படு’’ என்று சொல்லி அவனை டில்லிக்கு அனுப்புகிறாள் ஜஹனாரா.
ஔரங்கசீப்பின் படை ஆக்ரா கோட்டையை நெருங்கிவிட்ட செய்தி கேட்டதும் ஷாஜகான் மீண்டும் தன் புலம்பலைத் தொடருகிறார். ‘’மும்தாஜ்! இதோ! உன் மகனும், நானும் நேருக்கு நேர் மோதும் நேரம் நெருங்கிவிட்டது. நீ பெற்ற பதினாறு பிள்ளைகளில் இப்போது நான்கு பேர் மட்டுமே இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் கருவுயிர்த்து அதனாலேயே நீ இறந்து போனதற்கு நானே காரணமானேன்’’. என்று ஷாஜகானின் புலம்பலைக் கேட்க விருப்பமில்லாத ஜஹனாரா அவரிடமிருந்து வெளியேறுகிறாள்.
ஔரங்கசீப்பும் அவன் தளபதிகளும் ஆக்ரா கோட்டைக்குள் நுழைந்து நமாஸ் செய்கிறார்கள். நமாஸ் முடிந்ததும் ஔரங்கசீப்பின் மகன் சுல்தான் முகம்மத் போரில் தன் சித்தப்பா மூரத் கொல்லப்பட்ட செய்தியைச் சொல்கிறான். ‘’சித்தாப்பாவுக்கு தேவைப்படும் மதுவும், மங்கையும் தாராளமாக வழங்கியிருக்கிறார்கள். அவர் மயக்கத்தில் இருக்கும்போதே அவரைக் கைது செய்து குற்றம் சாட்டி அவர் கதையை முடித்துவிட்டார்கள்’’ என்று தன் சித்தப்பா மூரத்துக்கு நேர்ந்த கதியை விளக்குகிறான் சுல்தான் முகம்மத்.
’’உங்கள் சகோதரர் மூரத்துக்கு இவ்வளவு பெரிய தண்டனையை வழங்க வேண்டுமா’’? என்ற தன் தளபதிகள் இஸ்லாம் கான், ஜுல்ஃபிகர், கலீலுல்லா கான், ஆகியோர் கேள்விக்கு,’’மக்கள் நலங் கருதிதான் மூரத் பட்டத்துக்கு வரக்கூடாது என்று நான் தீர்மானித்தேன். மூரத் ஆட்சியில் மதுக் கடைகளும், விலைமாதர் விடுதிகளும்தான் நிறைந்திருக்கும். இவ்வளவு இரத்தம் சிந்தி அத்தகைய ஆட்சி அமைய என் மனம் இடங்கொடுக்கவில்லை. ஹிந்துஸ்தானில் மதுக் கடைகளையும், விலைமாதர் விடுதிகளையும் உடனே மூடிவிடப் போகிறேன். நாட்டிலுள்ள கலைஞர்கள் ஏர் பிடித்து உழுதொழில் செய்யட்டும். நாட்டியமாடும் பெண்கள் போர் வீரர்களை மணந்து இல்லற வாழ்வை மேற்கொள்ளட்டும்’’. என்று ஔரங்கசீப் தான் ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் செய்ய வேண்டிய கடமைகளைச் சொல்கிறான்.
தன் சகோதரன் ஔரங்கசீப் ஆக்ரா கோட்டை வந்து சேர்ந்தது அறிந்து அவனைப் பார்க்க ரோஷனாரா வருகிறாள். ‘’சக்கரவர்த்தி என்னைப் பார்க்க அழைப்புவிடுத்துள்ளார்,’’ என்று ஔரங்கசீப் மகிழ்ச்சியுடன் சொல்கிறான். ‘’உன்னைச் சிறைப்பிடிக்கச் சதித்திட்டம் செய்கிறார் கிழப்புலி, உன் தந்தை, ஏமாந்துவிடாதே! டில்லியிலிருந்து தாரா படையுடன் வந்து ஆக்ராவைக் கைப்பற்ற வருகிறான், கவனமாக இரு!’’ என்று ரோஷனாரா எச்சரிக்கிறாள். ‘’இனியும் நான் பாசத்துக்கு இடங்கொடுக்க மாட்டேன் ரோஷனாரா! இப்போதே நம் தந்தையைக் கைது செய்து ஆக்ரா கோட்டையில் சிறையில் அடைக்கிறேன். அவர் கோட்டையில் இருந்தவாறே தாஜ்மஹலைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கட்டும்; தாராவின் கதையை டில்லியிலேயே முடித்துவிடுகிறேன்,’’ என்று தன் திட்டத்தைக் கூறுகிறான்.
அடுத்த காட்சியில் டில்லிக்குத் தப்பிச் சென்ற தாரா தன் மெய்க்காப்பாளன் மகம்மத்துடன் சோகமே உருவாக நிற்கிறான். அவனிடம் தன் துயரம் தோய்ந்த குரலில், ‘’இனி நான் எதற்காக வாழவேண்டும் என்று தெரியவில்லை மகம்மத்? நாதிராபானுவும் போய்விட்டாள். ஒரு பட்டமஹிஷியாக வாழ்ந்திருக்க வேண்டியவள். என்னை மணந்ததினால் ஏற்பட்டிருக்கும் அவலத்தைப் பார். வனாந்திரத்தில் அனாதையாக இறந்துகிடக்கிறாள். நாதிரா! நான் உன் அன்புக்கு அருகதை உடையவானா? லாகூரில் மியான்மீரின் சமாதிக்கருகே இவள் சமாதி இருந்தால்தான் என் மனம் அமைதி அடையும். இவள் உடலை லாகூருக்கு எடுத்துச் செல்’’,என்று விரக்தியின் உச்சியில் கூறுகிறான். ’’சக்கரவர்த்தி! ஏன் இவ்வளவு விரக்தி அடைகிறீர்கள்? உங்கள் பாட்டனாருக்குப் பாட்டனார் ஹுமாயுன் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதறிவீர்கள். ஆனால் விரக்தி கொள்ளாமல் தன் வீரத்தாலும், ராஜ தந்திரத்தாலும் இழந்த ராஜ்யத்தைத் திரும்பப் பெறவில்லையா’’ என்று மகம்மத் வரலாற்றை நினைவூட்டுகிறான்.
‘’இல்லை; மகம்மத்! ஔரங்கசீப்பின் ராஜதந்திரத்துக்கு ஈடுஇணையே கிடையாது. அவனிடம் நான் தோற்றுப்போயுள்ளேன்’,’’ என்று தாரா கூறியதும்; ‘’இல்லை சக்கரவர்த்தி! மக்கள் உங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். ஔரங்கசீப்பை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,’’ என்கிறான் மகம்மத். ‘’மக்களிடம் பிரபலாமாக இருப்பது என்பது வெறும் மாயை; மகம்மத். ஆள்கின்றவர்கள் வீசி எறிகின்ற சில ரொட்டித் துண்டுகளுக்காக மனசாட்சியை விற்கும் சுயநலவாதிகளாக இன்றைய அறிவாளிகள் இருக்கும்போது கல்வி அறிவில்லாத மக்களை நொந்து என்ன பலன். நான் ஹிந்துஸ்தானில் வாழ விரும்பவில்லை. இந்நாட்டின் எதிர்காலம் ஔரங்கசீப்பின் கைகளில்! வீரத்துக்கும், தியாகத்துக்கும் பேர்போனவர்கள் ராஜபுத்திரர்கள் என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால் இப்போது நாம் ஜஸ்வந்த்சிங்குகளையும், ஜெய்சிங்குகளையும்தான் பார்க்கிறோம். அற்பச் சலுகைகளுக்காக நாட்டையே அந்நியர்களுக்கு விலைக்குக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இந்த ஐரோப்பிய வணிகர்கள் பின்னொரு காலத்தில் இந்த நாட்டையே விலைக்கு வாங்கினாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். மகம்மத்! நீ நதிராவின் உடலை லாகூரில் அடக்கம் செய்த பிறகு ஔரங்கசீப்பிடம் சரணடைந்துவிடு,’’ என்று தாரா கூறியதும் அதிர்ச்சியடைந்து.’’சக்கரவர்த்தி! நீங்கள் எங்கே போகிறீர்கள்?’’ என்றதும், ‘’என்னைச் சக்கரவர்த்தி என்றழைக்காதே மகம்மது. நான் அந்த தகுதியை இழந்துவிட்டேன். நான் என் நம்பிக்கைக்குப் பாத்திரமான மாலிக் ஜீவனிடம் போகப்போகிறேன். ஒரு காலத்தில் அவன் உயிரைக் காப்பாற்றியவன் நான். அவன் என்னை இன்னும் நேசிப்பான் என்று நினைக்கிறேன்’’ என்று சொல்லி அவனை வழியனுப்புகிறான் தாரா.
தாரா தன் வாழ்வின் மிகப் பெரிய அதிர்ச்சியை சந்திக்கப்போவது அறியாமல் மாலிக் ஜீவனைப் பற்றி உயர்வாக நினைக்கிறான். அடுத்த காட்சியில் மாலிக் ஜீவன் மிகப் பெரிய துரோகி என்பதை அறிகிறான். தாராவை கைது செய்து சங்கிலியில் கட்டி ஔரங்கசீப் முன்னால் நிறுத்துகிறான் மாலிக் ஜீவன், ஆக்ரா கோட்டையில் மயிலாசனத்தில் ஔரங்கசீப் அமர்ந்திருக்கிறான். அருகில் ரோஷனாரா நிற்கிறாள். இருவரும் தாராவைக் கேலி செய்கிறார்கள்.
‘’ஔரங்கசீப்! உனக்கு இஸ்லாம் பற்றி மட்டுமே தெரியும். ஆனால் தாரா இந்துமதக் கோட்பாடுகளையும் தெரிந்த அறிவாளி என்பது தெரியுமா’’? என்று ரோஷனாரா கேட்டதும், ஔரங்கசீப்,‘’தெரியும்! என் சகோதரன் தாரா, உபநிஷதங்களை ‘’சிர்-உல்-அஸ்ரார்’ என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்துள்ளதையும் அறிவேன். உபநிஷதங்கள் என்ன சொல்கின்றன ரோஷனாரா? என்று ஔரங்கசிப் கேட்டதும், ரோஷனாரா, ’அகம் பிரும்மாஸ்மி’ அதாவது நான் தான் கடவுள் என்கின்றன உபநிஷதங்கள் என்று ரோஷனாரா பதில் அளிக்கிறாள். ஔரங்கசீப் உடனே கோபத்துடன் எழுந்து,’’தாரா! உபநிஷதங்களை படித்தாயே, அவற்றில் என்ன கண்டாய்? திருக்குரானில் கூறப்பட்டுள்ளதைவிட மிகச் சிறப்பாக உள்ளனவா? என்று கேட்கிறான். ‘’உபநிஷதங்கள் குரானைவிட உயர்ந்தவை என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. மதங்கள் அனைத்துமே குருடர்கள் யானையை அடையாளம் காண்பதுபோல்தான் என்கிறான் தாரா. இருவருக்குமிடையே மதங்கள் குறித்த விவாதங்கள் நீண்ட நேரம் நடக்கின்றன. மதங்கள் குறித்த விவாதங்களுக்கு முடிவேது? இறுதியில் ஔரங்கசீப் காவலர்களைக் கூப்பிட்டு,’’தாராவின் தலையை வெட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்! அதைப் பொதுவிடத்தில் தொங்கவிட வேண்டும். முல்ஹீத்துகளுக்கு ஏற்படும் முடிவை மக்கள் தெரிந்துகொள்ளட்டும்’’. என்று ஆணையிடுகிறான்.
நாடகத்தின் கடைசிக் காட்சி கிரேக்க செவ்வியல் நாடகங்களின் காட்சியை ஒத்திருக்கிறது. நாடகம் தொடங்கிய இடத்தில் முடிய வேண்டும் என்பதே செவ்வியல் நாடக ஒழுங்கு முறையாகும். நாடகம் ஷாஜகானுக்கும், அவர் மகன் ஔரங்கசிப்புக்கும் இடையிலான அதிகார மோதலுடன் தொடங்குகிறது. நாடகத்தின் இறுதியில் ஔரங்கசீப்புக்கு எதிராக அவன் மகன் கிளர்ந்து எழுகிறான். ஷாஜகானின் அந்திமக் காலத்துடன் தொடங்கும் நாடகம் ஔரங்கசீப்பின் அந்திமக் காலத்துடன் முடிகிறது. ஔரங்கசீப் அல்லாவிடம் மன்றாடுகிறான். ’’அல்லாவே! நான் வரும்போது வெறுங்கையுடன் வந்தேன். போகும்போது ஒரு பாவ மூட்டையைச் சுமந்துகொண்டு போகிறேன். என் கைகளில் உள்ள ரத்தக்கரையைக் கழுவ யமுனை நதியின் நீர் முழுவதும் போதாது. நான் யார்? மதவெறியனா? இல்லை பாசத்துக்காக ஏங்கிய அனாதையா? ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான். நான் சரித்திரமாக மாறிவிட்டேன்! அவன் கீழே விழுந்து அழும் குரல் கேட்கிறது. அரங்கத்தின் திரையும் கீழே விழுகிறது.
வரலாற்றில் ஔரங்கசீப் பல வழிகளிலும் சித்தரிக்கப்பட்டுள்ளான். இஸ்லாம் மதவெறியனாகச் சித்தரிப்பவர்களும் உண்டு. இஸ்லாம் மார்க்கத்தை தீவிரமாகக் கடைப்பிடித்தவனேயன்றி மதவெறியன் அல்ல என்று சொல்வாரும் உண்டு. வரலாறு திரிபுகளுக்கும், திருத்தங்களுக்கும் உள்ளாவதை அறிவோம். சான்றுகளின் வழி அறிவியல் பூர்வமாக எழுதப்பட்ட வரலாற்றின் அடிப்படையிலேயே இந்திரா பார்த்தசாரதி ’ஔரங்கசீப்’ நாடகத்தை எழுதியுள்ளார். காய்தலும், உவர்த்தலும் இன்றி நடுநிலையில் இருந்து வரலாற்று நாடகத்தை எழுதி வெற்றி பெற்றுள்ளார். நாடகத்தின் மொழி தனித்துவமானது. புனைவிலக்கிய மொழியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்திரா பார்த்தசாரதி நாடகமொழியை மிகச் சிறப்பாகக் கையாளுகிறார். இதனால் அவரின் நாடகங்கள் அரங்கேறும்போதும், படிக்கும்போதும் இன்பமளிக்கின்றன.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “ஔரங்கசீப் (நாடகம்)” |
| ஆசிரியர்: | இந்திரா பார்த்தசாரதி |
| வெளியீடு: |
காலச்சுவடு பதிப்பகம்
|
| விலை: | ₹.150 |
| அறிமுகம் எழுதியவர்: |
பெ.விஜயகுமார்
|
******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

