’வேர்ப்பற்று’ இந்திரா பார்த்தசாரதியின் ஓர் அரசியல் நாவல்.
– பெ.விஜயகுமார்.
தமிழ் இலக்கிய உலகுக்கு இந்திரா பார்த்தசாரதி அளித்துள்ள கொடை அளப்பரியது. கும்பகோணத்தில் தன்னுடைய இளமைக் காலங்களைக் கழித்த இவர் நிறைய நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார். திருச்சி தேசியக் கல்லூரியில் மூன்றாண்டுகளும், தில்லி பல்கலைக்கழகத்தில் முப்பதாண்டுகளும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். போலந்தின் வார்சா பல்கலைக்கழகத்தின் இந்தியத் தத்துவம் மற்றும் பண்பாட்டுப் பிரிவின் வருகைதரு பேராசிரியராக ஐந்தாண்டுகள் இருந்துள்ளார். புதுவை பல்கலைக்கழகத்தில் ‘சுவாமி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளி’யை நிறுவி தமிழ் நாடகக் கலையை வளர்த்தெடுத்தார். இவரின் ’நந்தன் கதை’ நாடகமும் ’ராமானுஜர்’ நாடகமும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
சாகித்ய அகாதமி விருதைப் பெற்ற இவரின் ‘குருதிப் புனல்’ நாவல் மிகப் பெரிய சர்ச்சைக்குள்ளானது. 1968இல் அன்றைய தஞ்சை மாவட்டத்தின் கீழ்வெண்மணி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் கூலிகள் 44 பேர் தீயிலிட்டுக் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வு வரலாற்றில் அழியாத வடுவாக இருக்கிறது. பண்ணை அடிமைகளாக வாழ்ந்த இவர்கள் செங்கொடியின் கீழ் திரண்டு அரைக்கால் அளவு நெல் கூலி உயர்வு கேட்டுப் போராடியதே இக்கொடூரத் தாக்குதலுக்குக் காரணம். ஆனால் இந்திரா பார்த்தசாரதி குருதிப் புனல் நாவலில் இந்த வன்முறைக்குக் காரணம் நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி நாயுடுவின் வக்கிரப் புத்தியே என்று சித்தரித்தார். இதன் மூலம் உணர்ச்சி மிகு இப்போராட்டத்தின் வர்க்க முரணை மறைக்கவும், மறுக்கவும் முற்படுகிறார் என்ற பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
இந்திரா பார்த்தசாரதியின் ’ராமானுஜர்’ நாடகம் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றது. இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும், ‘தி இந்து’ நாளிதழ் நடத்தும் ’லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய நிகழ்வின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றார். 2022இல் சாகித்ய அகாதமி இவருக்கு ஃபெல்லோஷிப் வழங்கிக் கௌரவித்தது. சிலப்பதிகாரக் காட்சிகளையும், சேக்ஸ்பியர் நாடகங்களையும் மேடையில் ஏற்றி வெற்றி கண்டார்.
இந்திரா பார்த்தசாரதியின் ‘வேர்ப்பற்று’ நாவல் விடுதலைக்குப் பின்னான இந்தியாவின் சமூகம், பொருளாதாரம், அரசியல் நிலைமைகளைக் கூர்மையுடனும், நேர்மையுடனும் விவாதிக்கும் காத்திரமான படைப்பாகும். 1946-52 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நிகழ்ந்த சமூக, அரசியல் மாற்றங்களை நாவல் சித்தரிக்கிறது. இந்திய விடுதலையை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத அளவிற்கு நாடு ’இந்தியா-பாகிஸ்தான்’ என்று இரண்டாகப் பிரிந்து, கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. ‘Holocaust’ என்றழைக்கும் அளவிற்கான பேரழிவு நிகழ்ந்தது. வரலாறு காணாத எண்ணிக்கையில் புலம்பெயர்வு நடந்தது. இந்து மகாசபை, முஸ்லீம் லீக், அகாலி தளம் போன்ற மதவாத அமைப்புகளின் தலைவர்கள் நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவித்தார்கள். அண்ணல் காந்தியின் கனவுகளைச் சிதைத்தார்கள். மதவெறி தலைவிரித்தாடியதால் அப்பாவி மக்கள் சொல்லொண்ணாத் துயர் அடைந்தனர்.
விடுதலைக்குப் பின் காங்கிரஸ் அமைப்பைக் கலைத்துவிட வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் வேண்டுகோளை நிறைவேற்றாமல் காங்கிரஸ் இயக்கம் அரசியல் கட்சியாகத் தொடர்ந்தது. தேர்தலில் பங்கேற்று ஆட்சிப் பொறுப்பேற்றது. விடுதலைப் போராட்ட தியாகிகளை எல்லாம் புறந்தள்ளியது. பெரும் முதலாளிகளும், நில உடைமையாளர்களும் ஆட்சி அதிகாரத்தைப் பங்குபோட்டுக் கொண்டனர். முதலாளித்துவ ஜனநாயகம் மக்களின் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றத் தவறியது. மக்கள் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாயினர்.
நல்லதொரு அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்ட இந்திய அரசு அதன் வழி நடக்கத் தவறியது. கருத்துரிமை, வாழ்வதற்கான உரிமை, சிறுபான்மையினருக்கான உரிமை, பூர்வகுடி மக்களுக்கான உரிமை என்று பல உரிமைகளும் அடிப்படை உரிமைகளாகும் என்று எழுதிவைத்தனர். தீண்டாமை தண்டனைக்குரிய குற்றம் என்று அரசமைப்புச் சட்டம் குறிப்பிட்டது. ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளும், விதிகளும் துச்சமென மதிக்கப்படும் அவலம் நிலவியது. மக்கள் அடைந்த இப்பெரும் ஏமாற்றத்தையே இந்திரா பார்த்தசாரதி ’வேர்ப்பற்று’ நாவலில் சித்தரிக்கிறார்.

கதையின் நாயகன் கேசவன் கும்பகோணம் நகரில் ஒரு வளமான பிராமணக் குடும்பத்தில் ஒரே மகனாக செல்லமாக வளர்ந்தான். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் படித்த அவனுக்குப் பிடித்த ஆசிரியர் முற்போக்குச் சிந்தனை கொண்ட சுப்பிரமணிய ஐயர். கேசவனுக்கு இலக்கியத்திலும், தத்துவத்திலும் ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தவர். சாதியில் நம்பிக்கை இல்லாதவர். தன்னுடைய பூணுலைக் கழற்றி எறிந்தவர். ”சாதியில்லை என்று சொல்லும் உங்கள் பெயருடன் இருக்கும் ஐயர் என்ற வால் எதற்கு,” என்று கேசவன் கேட்டான். ‘’கெஜட் நோட்டிஃபிக்கிஷேன் கொடுத்து மாத்திக்கலாம்… ஆனா, இதுவா பெரிய விஷயம்? மனசில சாதி கிடையாதுன்னு ஒரு ஆழமான நம்பிக்கை இருந்தா போறாதா”? என்றார். அவருடைய நேர்மையும், எளிமையும் கேசவனை மிகவும் கவர்ந்தன. அதன் வெளிப்பாடாக அவன் தன்னுடைய பூணுலைக் கழற்றி எறிந்தான்.
கல்லூரியில் அவன் நெருங்கிய நண்பன் முருகேசன் ஒரு கம்யூனிஸ்ட். கேசவனுக்கு மார்க்சியத்தைக் கற்றுக் கொடுக்க நினைத்தான் முருகேசன். ரஷ்யாவையும், ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்கையும் கண்டித்த சுப்பிரமணி ஐயரை முருகேசனுக்குப் பிடிக்காது. கேசவனை அவரின் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றான். ’’உலகத் தொழிலாளார் எதிர்பார்ப்புகளின் அடையாளமா இருக்கு ரஷ்யா. அந்த நாட்டைத் திட்டலாமா? ஸ்டாலின் இல்லாட்டா, ஹிட்லர் உலகத்தையே சாப்பிட்டு ஏப்பம் விட்டிருப்பான்’’ என்று கேசவனுக்கு விளக்கினான் முருகேசன்.
கேசவனை ஒரு காம்ரேடாக்கி முருகேசன் வெற்றி பெற்றான். ஆச்சாரமான வீடு ஒரு புறம்; மனதைக் கவர்ந்த மார்க்சிய சித்தாந்தம் ஒரு புறம்; இரண்டுக்கும் இடையில் கேசவன் தத்தளித்தான். கல்லூரியில் தன்னுடன் படித்த ஜானகியின் மீதும் ஒருவிதமான ஈர்ப்பு இருந்தது. ஊருக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் வருவதையொட்டி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. முருகேசன் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பை கேசவனுக்கு அளித்தான். அவனுடைய தலைமையுரை மிகச் சிறப்பாக அமைந்தது.
ஜானகி அவன் உரையைப் பாராட்டியதில் பெரு மகிழ்ச்சி அடைந்தான். கூட்டத்துக்கு வந்த ஒரு முக்கியத் தலைவர் தோழர்களுடன் அமர்ந்து சாப்பிடாமல் ஜானகியின் அண்ணன் அழைப்பையேற்று அவர்கள் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றதை கேசவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லா இயக்கத்திலும் பலவீனங்கள் இருப்பதுபோல் கம்யூனிட்டு இயக்கத்திலும் பலவீனம் இருப்பதைக் கேசவன் விரைவில் தெரிந்துகொண்டான். ஜானகி மீதான அவனின் காதல் ஒருதலைப்பட்டது என்பதறிந்து அவளிடமிருந்து விலகினான்.
ஒரு நாள் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தி இடியென இறங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகக் கண்டன ஊர்வலம் நடத்துவதா அல்லது மௌன ஊர்வலம் நடத்துவதா என்ற விவாதம் எழுந்தது. இறுதியில் கும்பகோணம் நகரின் மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்ட மௌன ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் முடிந்து வீட்டுக்குத் திரும்பிய கேசவன் காந்தியின் மரணம் அவன் பெற்றோரை பெரிதும் பாதித்திருந்ததை அறிந்தான். அன்று முழுவதும் அவன் அம்மா சாப்பிட மறுத்துவிட்டார். அவன் தந்தையும் காந்தியைக் கொன்ற கோட்சேயை ஆதரித்துப் பேசிய ஒருவனைக் கடிந்து பேசியதைக் கேட்டு கேசவன் அதிர்ந்து போனான். காந்தியின் இறப்பு அவனைப் பெரிதும் பாதித்தது. காந்தி பற்றி அவன் கொண்டிருந்த சிந்தனையில் பெரும் மாற்றம் பிறந்தது.
மதக் கலவரங்கள் நடந்தபோது காந்திஜி காட்டிய கொள்கைத் துணிவு; தனி மனித வீரம் ஆகியன குறித்துக் கேசவன் பெருமிதம் அடைந்தான். அந்தக் கொடூரச் சமயத்தில் யாரால் நவகாளிக்கு போயிருக்க முடியும்; காந்தியைத் தவிர? நாட்டுப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய 56 கோடி ரூபாயைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்க காந்தியைத் தவிர யாரால் முடியும்? வேறு யாரால் டில்லி மசூதிகளை ஆக்கிரமித்துக் கொண்ட ஹிந்து அகதிகளை அப்புறப்படுத்தி அவர்களுக்கென்று அமைக்கப்பட்ட முகாம்களுக்கு அவர்களை அனுப்பியாக வேண்டும் என்று வலியுறுத்தியிருக்க முடியும்? பத்து நாட்களுக்கு முன்பு காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட செய்திவந்தபோது போலீஸ் எதற்கும் தயாராக இருந்திருக்க வேண்டும். ஆனால் காந்திஜி தனக்குப் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று மறுத்துவிட்டார். ஏன்? மக்களின் மீதிருந்த நம்பிக்கை! சுதந்திரம் கிடைத்த ஆறு மாதத்தில் காந்தியை பலி கொடுத்துவிட்டோமே என்று கேசவன் ஆழ்ந்த வருத்தம் அடைந்தான்.

காந்தியைக் கொன்ற கோட்சே ஓர் ஆர்எஸ்எஸ்காரன் என்றும் அவன் காந்தியைக் கொன்றதற்கான காரணம் அவர் துலுக்கர்களுக்குப் பரிந்து பேசினார் என்றும் அக்ரகாரத்துக்காரன் ஒருவன் சொன்னதும் கேசவனின் தந்தை,”நீ உருப்படுவியா! காந்தி செத்தது நல்லதுன்னு சொல்றியே! யார் யாரைக் கொன்றாலும் அது நல்லதில்ல. அது பாவம். இதுதான் நம்ம தர்மம். காந்தி நாட்டைத் துலுக்கனுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தார் என்கிறாயே! நீ ஆத்துக்கீரை வாங்கிறது யார் கிட்டே? அன்னிக்குப் பேரனுக்கு விஷக்கடின்னு மேலக்காவேரிக்கு தூக்கிக்கொண்டு ஓடினியே யார் கிட்ட? துலுக்கன் உனக்கு என்ன செஞ்சான்? ஒற்றுமையா இருக்கிற ஜனங்களை இருக்கவிடாதபடி இந்த எழவெடுத்த அரசியல் வந்து முளைச்சிருக்கு,” என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தை அவர் கண்டித்ததைக் கேட்டு கேசவன் தந்தை மீது பெருமிதம் கொண்டான்.
பட்டப் படிப்பு முடிந்ததும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் எம்.ஏ. படிக்க விரும்பினான். அவனுடைய தந்தைக்கு அதில் ஒப்புதல் இல்லை. தமிழ் படிப்பதற்குப் பதிலாக வேறு ஏதேனும் பாடத்தைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார். தமிழ் படித்தால் ஆசிரியர் வேலை தவிர வேற வேலை எதுவும் கிடைக்காது என்றார். அதுவும் பிராமணனான கேசவனுக்கு தமிழ் வாத்தியார் வேலை கிடைக்காது என்று அவன் தந்தை உறுதியாக நம்பினார். ஆனால் கேசவனுக்கு தமிழில் ஆழ்ந்த பற்று இருந்தது. தந்தையின் எதிர்ப்பையும் மீறி தமிழ் எம்.ஏ. படிக்க சிதம்பரம் சென்றான். அன்று தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திராவிட அரசியல் மூன்றும் கோலோச்சின. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசியல் கொதிகளனாக இருந்தது. நீதிக்கட்சியிலிருந்து பிறந்த திராவிடக் கழகம் வீறுடன் வளர்ந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கேசவனின் ஹாஸ்டல் அறைத் தோழனாக கிருஷ்ணன் என்ற சிறந்த படிப்பாளி அமைந்தான். இருவரும் தமிழ் எம்.ஏ. படித்தனர். இருவரும் படிப்பில் ஆர்வத்துடன் இருந்தனர். எந்நேரமும் இலக்கியம், தத்துவம், அரசியல் குறித்த விவாதங்களில் ஈடுபட்டனர். மார்க்சிய இலக்கியத்தை மட்டுமே படிக்கும் கேசவனுக்கு மாற்று இலக்கியத்தை கிருஷ்ணன் அறிமுகம் செய்கிறான். ஜார்ஜ் ஆர்வெல், ஆர்தர் கோஸ்லர், ஸ்டீஃப்ன் ஸ்பெண்டர் போன்றோர் எல்லாம் முதலில் கம்யூனிஸ்டுகளாக இருந்து பின்னர் அதனை விமர்சித்தவர்கள் என்றான். கிருஷ்ணனின் அறிமுகம் கேசவனை ஒரு புதிய இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தது. ஜேம்ஸ் ஜாய்ஸ், டி.எஸ்.எலியட், ஆடன், தாமஸ் மன், தாஸ்தோவ்ஸ்கி, ஃப்ராஸ்ட் போன்ற சிறந்த எழுத்தாளர்களை எல்லாம் தேடித்தேடிப் படிக்கத் தொடங்கினான்.
மாணவர் பேரவைக்கான தேர்தல் நடந்தது. கேசவன் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவின் சார்பில் போட்டியிட்டான். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தேர்தலில் களமிறங்கினர். கடுமையான போட்டியாக இருந்தது. வன்முறை வெடித்தது. துணைவேந்தர் திராவிட அரசியலை ஆதரித்தவர் என்பதால் கம்யூனிஸ்ட் இயக்க மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். கேசவன் சஸ்பெண்டு செய்யப்பட்டதால் ஊர் திரும்ப வேண்டியிருந்தது. அவன் தந்தை படிப்பை விட்டுவிட்டு வயல் வேலையைக் கவனிக்கச் சொன்னார். கேசவன் துணைவேந்தர் எடுத்த நடவடிக்கைக்கு எதிராகப் போராட வேண்டும் என்று நினைத்தான்.
பல்கலைக்கழகத் துணைவேந்தரிடமிருந்து கடிதம் வந்தது. சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்கள் தந்தையுடன் வந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த பின்னரே மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றது. கேசவனின் தந்தை, ‘’நீ, படித்தது போதும்; கிராமத்துக்குப் போய் விவசாயத்தைக் கவனி,” என்றார். குத்தகை விவசாயிகள் நியாயமாக நடந்துகொள்வதில்லை. எனவே கேசவன் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுவது நல்லது எனறு அவன் தந்தை நினைத்தார். ”நான் நிச்சயம் துணைவேந்தரைச் சந்திக்க வரமாட்டேன்,” என்று உறுதியாகக் கூறினார்.
துணைவேந்தரின் இந்த மாணவர் விரோத நடவடிக்கையை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கேசவன் நினைத்தான். மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க அவன் மனம் ஒப்பவில்லை. ஆனால் சஸ்பெண்டு செய்யப்பட்ட மற்ற மாணவர்கள் எல்லாம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டார்கள். என்பதறிந்து மனம் வருந்தினான். நெருக்கடி வரும்போது மனிதர்கள் தங்கள் கொள்கையிலிருந்து நழுவிச் செல்வது கண்டு வேதனை அடைந்தான். வேறுவழியின்றி மன்னிப்புக் கடிதத்துடன் துணைவேந்தரைச் சந்திக்கச் சென்றான். தன் தந்தை வெளிநாடு சென்றுவிட்டதால் தான் மட்டும் வந்திருப்பதாக அவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு துணைவேந்தர் அவனை மீண்டும் படிப்பைத் தொடரச் சொன்னார். இத்துடன் கேசவனின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
கேசவனின் அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளிவைத்த அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகம் அவனுக்கான வாழ்க்கைத் துணையைக் கொடுத்தது. கிருஷ்ணனின் கசின் சுபத்ரா என்ற மருத்துவம் படிக்கும் மாணவியின் அறிமுகம் கிடைக்கிறது. காதலாக மலர்கிறது. படிப்பை முடித்து ஊருக்குத் திரும்பும் கேசவனை அவன் தந்தை திருச்சியிலிருக்கும் தேசியக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்வதற்கு ஏற்பாடு செய்கிறார். எந்த சாதி எனும் வேர்ப்பற்றிலிருந்து விட்டுவிலக நினைத்தானோ அந்த சாதி அடையாளத்துடனேயே வேலையில் சேர வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. ஆம்; அவனுக்குப் பேராசிரியர் வேலை கிடைத்தது அவன் ஒரு வைஷ்ணவ பிராமணன் என்பதாலேயே! வேலைக்குச் சேர்ந்ததற்கு அடையாளமாகப் பதிவேட்டில் கையெழுத்து வைத்ததும் ஆசிரியர் அறையில் இடிந்துபோய் அமர்ந்தான். ‘’சாதிகள் இல்லையடி பாப்பா’’ என்ற பாடிய முண்டாசுக் கவிஞன் இல்லாமல் போனது நல்லதுதான் என்று நினைக்கிறான். ’இதுதான் சுதந்திர இந்தியா’ என்று நாவல் முடிவடைகிறது.
வேர்ப்பற்று நாவலின் நாயகன் கேசவன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியனாக வாழ்ந்திட வேண்டும் என்ற கனவு காண்கிறான். ஆனால் காலச் சக்கரத்தின் சுழற்சியில் அவன் கனவு நனவாகவில்லை. காந்தியம், மார்க்சியம், திராவிட அரசியல் என்று அனைத்து இசங்களின் பலத்தையும், பலவீனத்தையும் அலசி ஆராயும் நாவலாக வேர்ப்பற்று நாவல் முழுப் பரிமாணம் பெறுகிறது.
நூலின் விவரங்கள்:
நூல் : ‘வேர்ப்பற்று’ நாவல்
ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு : காலச்சுவடு
விலை: ரூ.340
எழுதியவர் :
✍🏻 – பெ.விஜயகுமார்.
மதுரை- 18.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
