இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நடைப்பெற்ற ஒரு கல்வி சார்ந்த விழாவில் இந்த புத்தகத்தை கல்வியாளர்கள் வசந்தி தேவி அம்மா மற்றும் மாடசாமி ஐயா என பல கல்வியாளர்கள் முன்னிலையில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.

வெளியிடப்பட்ட சற்று நேரத்திலே இந்த புத்தகத்தை வாங்கினேன்.வாங்கியது மட்டுமில்லாமல் ஒரு வாரக் கால இடைவெளியில் இந்த புத்தகத்தை வாசித்தும் முடித்தேன்.

இந்த போட்டிக்காக இரண்டாம் முறையாக வாசிக்க எடுத்து பொழுது,புத்தகத்தை முதல் முறையாக படிப்பது போன்ற ஒரு நிலை ஏற்பட்டது.மேலும் மேலும் புதிய தகவல் மற்றும் கருத்துகளை அறிந்து கொள்ள முடிந்தது.

எளிதாக கிடைத்துவிடவில்லை நம் நாட்டின் சுதந்திரம்.நம் நாட்டின் சுதந்திர வரலாற்றின் பின்னால் எண்ணற்ற மனிதர்களின் தியாகம் மற்றும் போராட்ட குணங்களின் வழியாக பெற்றோம். அதுப்போலவே நம் நாட்டின் கல்வியும் எளிதாக கிடைக்கவில்லை.பல மக்களின் எழுச்சி மிகுந்த போராட்டங்களின் விளைவாகவே நமக்கு கல்வி கிடைத்தது.

அத்தகைய எழுச்சி மிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த கல்வி போராளிகளை இந்த புத்தகம் எடுத்து கூறுகிறது.

தற்போதுள்ள இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலேயே கல்வி என்பது பல மக்களுக்கும் எட்டாக் கனியாக இருக்கின்றது.இந்த அவல நிலையை பல்வேறு இடங்களில் நாம் தொடர்ந்து கண்கூடாக பார்த்து கொண்டு தான் வருகிறோம்.இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இந்த நிலை என்றால்?!

சற்று சிந்தித்து பாருங்கள்!இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மக்களுக்கு கல்வி என்பது எந்த வகையில் இருந்திருக்க முடியும் என்று?

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய கல்வி முறை என்பது பெரும்பாலும் அவர்களின் நிறுவனங்களில் பணிபுரிய தேவைப்படும் கும்பினி கல்வி முறையை தான் அவர்கள் நம் நாட்டில் அறிமுகப்படுத்தினர்.

கல்வி | #HeloGuru #கல்வி #கல்வி மற்றும் ...

ஆனால், அவர்களின் கல்வி முறை மேலும் மேலும் நம்மை அடிமை தளத்திற்கு செல்லவே வழிவகுக்கும் கல்வி முறை என்பதை உணர்ந்த பல்வேறு கல்வியாளர்கள்,சமூக சீர்திருத்தவாதிகள்,பெண்ணியவாதிகள் என பலரும் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு கல்வி போராட்ட முன்னெடுப்புகளை கையிலெடுத்து அதில் பலரும் வெற்றியையும் கண்டு உணர்ந்தனர்.

ஆசிரியர் பயிற்சியில் கூட அறிந்திராத நம் நாட்டின் கல்வி போராளிகளை இந்த புத்தகத்தின் வாயிலாக அறிய முடிந்தது.இருபத்து மூன்று கல்வி போராளிகளை ஆசிரியர் ஆயிஷா.இரா.நடராசன் அவர்களின் எழுத்து நடையின் வழியாக அப் போராளிகள் கல்விக்காக சந்தித்த எண்ணற்ற இன்னல்களை என்னவென்று சொல்வது?!

இப்பொழுது நாம் கற்றுக் கொண்டிருக்கின்ற பல்வேறு தகுதி வாய்ந்த கல்வி முறைகளின் முன்னோடிகள் தான் இவர்கள்!

பொதுக் கல்வி முறையை எதிர்த்து போராடிய ராஜாராம் மோகன் ராய், மதமாற்ற கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஸிக் கிருஷ்ண மாலிக்,குழந்தை திருமணங்களை தடுத்து குழந்தைகளை பள்ளிக்கு செல்ல வழிவகுத்த பெக்ராமஜிமலபாரி,ஆசிரியர் பயிற்சியை அறிமுகம் செய்த ஈஸ்வர சந்திர வித்யாசாகர்,இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்ரிபாய் பூலே,கட்டாய இலவசக் கல்வியை முதன்முதலாக முன் மொழிந்த கோபால கிருஷ்ண கோகலே,அறிவியல் கல்விக்கு வித்திட்ட சர் சையது அகமதுகான்,நம் நாட்டு மக்களுக்கு மருத்துவக் கல்வியை வழங்கப் போராடிய ஜம்ஷெட் ஜிஜிஜி பாய்,ஒடுக்கப்பட்ட மக்களும் பள்ளியில் சரிசமமாக கல்வியை அளிக்க போராடிய மகாத்மா அய்யன் காளி,அடிப்படை கல்வியை அரசின் கடமையாக்கிய ராணி கவுரி பார்வதி பாய்,இரவு நேரப் பள்ளிகளின் வழியாக எண்ணற்ற மக்களுக்கு கல்வியை புகட்டிய கேஷாப் சந்திர சென்,ஆயிரம் பள்ளிகளை கண்ட பெண்ணிய போராளி அபலா போஸ்,தொழிற்கல்வியை நம் இந்திய மண்ணில் அறிமுகப்படுத்திய அசுடோஷ் முகர்ஜி,இசுலாமிய பெண்கள் கல்வி கற்றிட பல போராட்டங்களை முன்னெடுத்த இணையரான ஷேக் அப்துல்லா மற்றும் பேகம் வஹீத் ஜஹான்,ஆதாரவற்றோருக்கு ஆதாரக் கல்வியை தந்த முத்து லட்சுமி ரெட்டி என எண்ணற்ற போராளிகளை பற்றி கூறுகிறது.

ஆயிஷா நடராஜனுக்கு சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது! - மாற்று
மும்மொழிக் கொள்கை,5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு,கலைக் கல்லூரிகளில் சேர நுழைவுத்தேர்வு என பல திட்டங்கள் புதிய தேசிய கல்வி கொள்கையில் உள்ளன.இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் நாம் அனைவரும் கல்வியில் இருண்ட காலத்தை தான் சந்திப்போம்.

எண்ணற்ற தியாக செம்மல்களால் கிடைக்கப்பெற்ற கல்வியை அழித்து விடாமல் பாதுகாக்கவும்,மேலும் பல சீர்த்திருத்தங்களால் பொலிவு பெறவும் இந்த புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும்!

நன்றி🙏 

புத்தகம் : இந்திய கல்வி போராளிகள்.

ஆசிரியர் : ஆயிஷா.இரா.நடராசன்.

பக்கங்கள் : 128.

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன்.

₹ : 100/-

இப்புத்தகத்தை வாங்க கிளிக் செய்க: இந்தியக் கல்விப் போராளிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *