ராப்பிச்சைக்காரன்
————————————
அபியின் தெருவில் சுற்றிய ராப்பிச்சைக்காரன்
இரவு தோறும்
இப்போது என் தெருவுக்கும் வருகிறான்.
பார்வையற்ற புத்திசாலியாய்
வாசனையால் மட்டுமே வழி கண்டு பிடித்து
இரவு தோறும் என் வீட்டு வாசலில்
வந்து நிற்கிறான்
நிரப்பி மாளாத பிச்சைப் பாத்திரத்தோடு.
இரண்டாம் ஜாமத்தின் பாதி உறக்கத்தில்
அலையும் தெரு நாய்கள்
அவனை விடாமல் துரத்தி வந்து குரைக்கின்றன.
சுக்கிலம் தெறிக்க
அவனது ருத்ர தாண்டவத்தின் உடுக்கை ஒலி
என் தனிமையான படுக்கை அறையின்
நான்கு சுவர்களிலும் எதிரொலிக்கிறது.
தோலுரிக்கப்பட்ட ஆடுகள்
வாலில் மட்டும் முடிகளோடு
உயர்ந்த கொக்கிகளில் மாட்டப்பட்டுத்
தொங்குவது போல
வரிசையாய் மாட்டப்பட்டுள்ள ஆசைகளின்
மாமிசம் கேட்கிறான் அவன்.
ஏழை பணாக்காரரென்று பேதம் பாராமல்
இரவு தோறும் எல்லோரிடமும்
யாசிக்கிறது அவன் குரல்.
தழு தழுத்தக் குரலில் பிச்சை எடுத்த அவன்
இப்போது அதிகாரமாய் அதட்டிப்
பிச்சை கேட்பது கண்டு துணுக்குறுகிறேன்.
” போ “ என்று விரட்டினாலும்
நகராமல் மீண்டும் மீண்டும் யாசிக்கும்
அவனை அடித்து விரட்ட
மனசில்லை ஏனோ.
திறந்து விரிக்கப்பட்ட கைகளுடன்
வரவேற்கப்பட வேண்டிய ஒரு நண்பனைப் போல
அவனை அழைத்துச் செல்கிறேன் வீட்டிற்குள்.
அவன் உதடுகளில் கசியும் பாடலுக்காக
என்னிடம் இருக்கும் கடைசி நெல் மணியையும்
பகிர்ந்து கொள்வதென முடிவெடுக்கிறேன்.
எதிர்ப்போ கோபமோ
இயலாமையில் பிறக்கும் வெறுப்போ இன்றி
தன்னை வரவேற்பவனின்
ரத்தக் கோட்டை அடிவானத்துக்கு அப்பால் உள்ள
மானுடத்தின் அமரத்துவம் நோக்கி இழுத்துச் செல்கிறது
தினந்தோரும் யாசிக்கும் அவன் குரல்.
முந்தைய கவிதைகள் படிக்க:
முத்திரைக் கவிதைகள் 1: வாக்குமூலம் – இந்திரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.