கேள்வி
———————-
நாடு விட்டு நாடு பறந்து செல்லும் பறவைகளில்
ஏதேனும் ஒன்று பதில் சொல்லாதா என்ற ஆதங்கத்தில்
வானத்தைப் பார்க்கிறேன் நான்.
பெயர் தெரியாமல் பூத்து
பிரபஞ்சத்தின் மூலையை அலங்கரித்து விடுகிற காட்டுப்பூவில்
ஏதேனும் ஒன்று பதில் தராதா என்று
பூமியைப் பார்க்கிறாள் அவள்.
சிரிப்பொலி
———————-
பழைய கதையை மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும்
ஒரு குழந்தையைப் போல
அலைபேசி வழியாகச் சிதறும் உன் சிரிப்பொலிகளை
மீண்டும் மீண்டும் கேட்க விரும்புகிறேன்
உனது புகைப்படம்
—————————————
கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒன்றை
என் இதயம் கண்டெடுத்தது
உன் புகைப்படத்தில்.
ஏதென்று சொல்லத் தெரியாத
சங்கீதமொன்று
திடீரென
என் தோளைத் தொட்டு
காதில் ஏதோ முணுமுணுத்துச் சென்றது
சூரிய சந்திரனாய் தன்னம்பிக்கையில் ஜொலிக்கும் விழிகளும
வர்ணக் கனவுகளை மனசுக்குள் புதைத்த
மலர்ந்தும் மலராத கம்பீர பூ முகத்தை
வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.
ஒர் அரூப ஓவியமாக வேண்டுமானால்
தீட்டிக் காட்டலாம்.
கடந்த காலத்தைக் கையில் பிடிக்கும் பிரயத்தனமாய்
அருகில் நின்ற உன்மேல் விழிகளை ஓட்டினேன்.
புகைப்படத்தின் வாசனை
இன்னமும் கமழ்ந்தது உன்னைச் சுற்றி..
–இந்திரன்
முந்தைய கவிதைகள் படிக்க:
முத்திரைக் கவிதைகள் 1: வாக்குமூலம் – இந்திரன்
முத்திரைக் கவிதைகள் 2: ராப்பிச்சைக்காரன்– இந்திரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.