முத்திரைக் கவிதைகள் 4 – இந்திரன்முகமூடிகளின் யுகம் / இந்திரன்

————————————

புதையுண்ட நகரங்கள் போல்
புன்னகைகள் முகமூடிகளின் கீழே.

வாயால் பேச முடியாமல்
கண்ணீரால் பேசிக் கொள்கிறார்கள் துயரத்தை.

முகமூடிகளுடன்
வெளியே போய் விட்டு வரும் மனிதர்களை
யாருடையதோ போலவோ வரவேற்கிறது வீடு.

இரவில் தூங்கப் போவதற்கு முன்னால்
முகமூடி இல்லாமல் கண்ணாடியில் பார்க்கையில்
யார் முகம்போலவோ தெரிகிறது சொந்த முகம்.

முகமூடி அணியாதபோது
ஏதோ நிர்வாணமாய் இருப்பதுபோல்
பதறுகிறது மனம்.

தங்கத்திலும், வெள்ளியிலும்
தயாரிக்கப்பட்ட முகமூடிகள்
கோயம்புத்தூர் நகைக்கடைகளில்
விற்பனைக்குக் காத்திருக்கின்றன.

வாஷிங்டன், சாவ் பாவ்லோ , டெல்லி
உலகின் எல்லா தெருக்களிலும்
முகமூடி அணியாமல் திரிவது
மரணம் மட்டுமே.

முத்திரைக் கவிதைகள் 3 – இந்திரன்