பின்னகரும் கவிதை
மண்ணில் புரளும் மஞ்சள் சருகுகள்
மீண்டும் மேல் நோக்கிப் பறந்து
கிளைகளில் சென்று ஒட்டிக் கொள்ள
காய்ந்த மரம் பச்சைப் பசேலென துளிர்த்து கனிகளால் குலுங்க
கனிந்த பழங்கள் மலர்ந்த பூக்களாய் மலர
பட்டாம்பூச்சிகள் வந்து மொய்த்தவுடன்
பூக்கள் மொட்டுக்களாய்ச் சுருங்க
மரம்
செடியாய் உருமாற
செடி விதைக்குள் சென்று ஒளிந்தது
மண்ணில்
ஒரு துளி மழைநீர் விழாதா என
காத்திருக்கும் தவம் தேடி.
கடலோரத்தில் கால்பந்து
கடலோரத்தில் நடக்கிறது
தினந்தோறும் கால்பந்து விளையாட்டு
சிவப்புப் பந்தாய்
அடிவானத்தில் மறையும் சூரியனை
வானில் எகிறிக் குதித்து
எட்டி உதைத்து விளையாடுகிறார்கள் இளைஞர்கள்.
வெற்றி தோல்விகள் குறித்து கரவொலித்து குரலெழுப்ப
சுற்றிலும் கூட்டமில்லை
ஆனாலும் ஆர்ப்பரித்துப் பாராட்டுகின்றன கடல் அலைகள்.
தப்பித் தவறி கடலில் போய் விழும் கால் பந்தை
உடனுக்குடன் கொண்டு வந்து திருப்பித் தருகிறது கடல்.
ஆட்டக்காரர்களின் நிழல்கள்
தனியாக கோஷ்டி சேர்ந்து கொண்டு
மணல் மேல் விழுந்து புரண்டு ஆடுகின்றன
இன்னொரு கால் பந்தாட்டம்.
நிழல்கள் கரைந்து
கவியும் இருளில்
கால் பந்து காணாமல் போகும் வரையிலும்
தொடர்ந்து நடைபெறுகிறது கால் பந்தாட்டம்.
நினைவு
காணாமல் போய் விட்ட நாயின் நினைவு
பீங்கானில் பளபளக்கும்
பொம்மையாய் என் மேசைமேல்.
வர்ணப்பூச்சால் கருத்த மூக்கும்
மனிதனைப் போன்ற புருவமும் கொண்டு
தலை தூக்கி என்னை நோக்கும்
இரவின் அமைதியைத் துளைக்கும்
அதன் ஊளைச்சத்தம்
படிக்கட்டில் கட்டி வெறுமனே தொங்கிக் கொண்டிருக்கும்
நாய்ச் சங்கிலியின்
வெறுமையிலிருந்து எழும்.
முந்தைய கவிதைகள் படிக்க:
முத்திரைக் கவிதைகள் 1: வாக்குமூலம் – இந்திரன்
முத்திரைக் கவிதைகள் 2: ராப்பிச்சைக்காரன்– இந்திரன்
முத்திரைக் கவிதைகள் 3: கேள்வி, சிரிப்பொலி, உனது புகைப்படம் – இந்திரன்
முத்திரைக் கவிதைகள் 4: முகமூடிகளின் யுகம் – இந்திரன்
முத்திரைக் கவிதைகள் 5: பனிச்சிற்பம் – இந்திரன் (Indran Rajendran)
முத்திரைக் கவிதைகள் 6 – இந்திரன் (Indran Rajendran)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.