பகடி
வாழ்க்கை ஒரு கோமாளியைப் போல
என்னை எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.
சிரிப்பதை நிறுத்திவிட்டால்
நான் அழத் தொடங்கி விடுவேன் என்பதால்
நான் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.
நிழல் யுத்த காலம் / இந்திரன்
![]()
கண்ணுக்குத் தெரியாத எதிரியின் முகத்தில்
காற்றில் முஷ்டியால் ஓங்கிக் குத்தி நிழல் யுத்தம்.
பதுங்கு குழியில் ஒளிந்திருப்பவனைப் போல
தனித்திருக்கிறேன் என் வீட்டில்.
காலை இளம் வெயிலில்
நகரத்து அமைதியை ரசித்தபடி
வாசலில் அசந்து தூங்கும் தெருநாய்
செத்து விட்டதா? விழித்திருக்கிறதா?
கொலையில் உதித்த தெய்வங்களைப் போல
இடுகாட்டு மண் மேடுகளில் காசித் தும்பைப் பூக்கள்
பூத்துச் சிரிப்பதை நிறுத்துவதே இல்லை ஏனோ? —
காய்ந்த மல்லிகைச் சரங்களோடு
சுவரில் தொங்கும் கடவுள் படங்களைத்
தொட்டு முத்தம் கொடுக்கத் தடுக்கும்
ஏதோ ஒன்றின் பூதாகர நிழல்.
வடித்த கஞ்சியாய் வெயில் பரவிய வானத்தில்
சவால் / இந்திரன்

மரத்துண்டைப் புரிந்து கொள்ள
நீயும் ஒரு மரத்துண்டாகிப் போ.
நண்டுகளைப் புரிந்து கொள்ள
நீயும் வளை தோண்ட வேண்டியது கட்டாயம்.
மண் புழுவின் அவஸ்தை
நீயும் மண்ணைத் தின்று பார்த்தால்தான் தெரியும்.
பூனை நடை
குறுகிய மதில்மேல் தடுமாறிக் கீழே விழாமல்
நடந்து பார்த்தால்தான் வரும்.
நகரத்தைப் புரிந்து கொள்ள
நீயும் அதன் சாக்கடையாய்
ஜனசந்தடியாய்
தொழிற்சாலைகள் விடும் அழுக்கு மூச்சாய்
வாழ்ந்து பார்.
அப்போதுதான் புரியும்
எப்படியும் வாழ்ந்து தீர்க்க வேண்டும் எனும்
நகரத்தின் சவால்.

