நாங்கள் விவசாயிகள்
தீவிரவாதிகள் அல்ல.
எங்களின் கலப்பையினால்
நிலத்தில் கீறும் ஒவ்வோரு கோடும்
மகிழ்ச்சியோடு இருக்கும் மனிதனின்
சிரிக்கும் முகத்தைச் சித்திரமாய்த் தீட்டுகிறது.
நாங்கள் மனிதர்களுக்கல்ல
மண் புழுக்களுக்கும் சேற்றுத் தவளைகளுக்கும்
பதில் சொல்லக் கடமைப் பட்ட விவசாயிகள்.
நாடே கொள்ளை நோய்க்குக் கதவடைத்துக் கிடந்தபோது
நாங்கள் சேற்று வயலில் நின்று வேலை செய்தோம்.
அரிசியும், கோதுமையும், பாலும் , காய்கறியும் கொடுத்து
எங்கள் தாய்நாட்டின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தோம்.
எங்கள் வியர்வையை
டிராக்டர்களுக்கு டீசலாய் ஊற்றினோம்.
இதற்குக் கைமாறாய்
எங்கள் கைகளில் நீங்கள் கொடுத்ததுதான் என்ன?
பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்ட
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மூன்று சட்டங்கள்
கோடையில் சூரியனில் குளித்து
குளிரில் பூமித் தாயின் புழுதியைக்
கம்பளியாய் அணிந்த
ஐந்நூறு மில்லியன் விவசாயிகளை
கார்ப்பரேட்டுகளிடம் விலை பேசுகிறது அரசாங்கம்.
இதோ புறப்பட்டு விட்டது விவசாயிகளின் ஊர்வலம்
தலைநகர் தில்லியை நோக்கி.
ரயில் வண்டித் தொடர்போல்
பத்தொன்பது மைல்களுக்கு நீள்கிறது எங்களின்
நீதி கேட்கும் நேர்மையான பயணம்.
பஞ்சாப் , ஹரியானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் என்று
அவரவர் மண்ணின் புழுதி படிந்த கால்களால் நடந்து,
டிராக்டர்களில் பயணித்து,
பேருந்துகளில் கோஷமிட்டு
.தேசிய நெடுஞ்சாலைகளில் தூங்கி ,
உணவுகளைப் பிரசாதங்களை
எங்களை விரட்டியடிக்கும் காவலர்களுக்கும் வழங்கி
கண்ணீர்ப் புகைக் குண்டுகளைக் கடந்து,
பீச்சியடிக்கப்பட்ட நீர்த்தாரைகளை எதிர்த்து முன்னேறி
குரு கோவிந்த் சிங்கை நோக்கிப் பிரார்த்தித்து
நகர்கிறது
பசியெனும் நோய்க்கு மருத்துவம் பார்க்கும்
விவசாயிகளின் ஊர்வலம்.
எங்களைப் பற்றிக் கவலையோடு
கவிதை எழுதும் கவிஞர்களே
நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும்
கவிதைகளை முடித்து விடாதீர்கள்.
எங்கள் போராட்ட வெற்றியின் பரணியைப் பாட
நீங்கள் எங்களுக்குத் தேவை.