திசைகள் நான்கல்ல நூலிலிருந்து…
இந்த வருடம் இந்திரன் ஐயாவின் யாளி பதிப்பகத்தில் வெளியிட்டிருக்கும் புது புத்தகம். ஐயா ஏராளமான பயணங்களை மேற்கொண்டவர். அவற்றையெல்லாம் எழுதினால் அதுவே ஆயிரமாயிரம் பக்கங்கள் வந்து விடும் என்பதால் சிலவற்றை மட்டும் நமக்காக எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகத்தில் இருக்கும் விவரங்களை அவர் பேசும் போதே சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். அவற்றை அவருடைய நேரடி எழுத்தில் படித்தது உற்சாகமூட்டியது. கடந்த ஆண்டும் அதே போல் அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்களின் இரு தொகுதிகளை வாங்கி விடாமல் படித்து முடித்தேன். இந்த ஆண்டும் (2025) முதலாவதாகப் படித்து முடித்த புத்தகம் அவருடையதுதான்.
’திசைகள் நான்கல்ல, நாலாயிரம்’ என்ற முன்னுரையுடன் தொடங்குகிறார் இந்திரன். அவருடைய பல்வேறு பயணங்களில் தம்மைத் தொலைத்து விட்டதாக அவர் எழுதுகிறார். அவருடைய பயணங்களில் நம்மைத் தொலைத்து மூழ்கி விடுகிறோம்!
நிர்வாணம் என்பதனை கலை எப்படிப் பார்க்கிறது என்பதில் தொடங்குகிறது புத்தகம். நம் கோவில்களில் கூட பல சிற்பங்களை அப்படிப் பார்த்திருப்போம். பல ஓவியங்கள் அப்படி வந்திருக்கின்றன. ‘ஜெர்மெனியின் செந்தேன் மழையே’ என்ற பாடலில் நிர்வாணமான பளிங்குச் சிற்பங்களைப் பார்த்திருக்கிறோம். அந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஒரு விரிவான கட்டுரையைப் புனைந்திருக்கிறார்.
அடுத்த கட்டுரை என்னை அசர வைத்தது. இப்போதுதான் வீ.பா.கணேசனின் எழுத்துகளில் மகாகவி தாகூரை தரிசித்திருந்தேன். அந்த சாந்திநிகேதனிலேயே ஒரு தமிழ் ஓவியர் பணிபுரிந்திருக்கிறார் என்பதையும், அவர் அருகிலிருந்த பழங்குடியினரின் குடிசைச் சுவர்களில் ஓவியம் வரைந்ததையும், அவர்கள் அந்த ஓவியங்களைப் பார்த்து வியந்து நின்றதையும், அதைக் கண்டு பிடித்த நந்தலால் போஸ் அந்த விவரத்தை ரவீந்திரரிடம் சொல்ல, அவர் சாந்திநிகேதன் வெளியிட்ட புத்தகத்தில் அதைப் பற்றி எழுதச் செய்ததையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். அந்த விவரத்தை வி..பா.வுக்கு புகைப்படம் எடுத்து அனுப்பி மகிழ்ந்தேன். ஆனால் 88 வயது வரை மதுரையில் வாழ்ந்த அ.பெருமாள் உரிய அங்கீகாரமின்றி வாழ்ந்தார் என்பதை அறிந்து வருத்தம்தான் மிஞ்சியது.
அடுத்து பிரிட்டனின் மியூசியத்தில் இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பொருட்களில் தம்மைத் தொலைத்து, நம்மையும் இழுத்து விடுகிறார் இந்திரன். ஆங்கிலேயர்கள் நம்முடைய சொத்தைக் கொள்ளையடித்து வளர்ச்சி பெற்றது மட்டுமல்ல, நமது கலைச்செல்வங்களையும் கோடிக் கோடியாகக் கொள்ளையத்துச் சென்றுள்ளனர். எவ்வளவு நட்டம்! டாக்கா மஸ்லினை ஒழித்துக் கட்ட, அந்த நெசவாளர்களின் கட்டை விரலை வெட்டிய அவர்களது கொடூரம் ஏனோ நினைவுக்கு வந்து வாட்டுகிறது.
அங்கு வைக்கப்பட்டிருக்கும் திப்புவின் புலி பற்றி ஒரு விரிவான கட்டுரை பேசுகிறது.
திருவள்ளுவர் உருவச்சித்திரம் மாறிய கதையை இன்னொன்று பேசுகிறது.
பசிபிக் பெருங்கடலின் நடுவில் எங்கோ இருக்கும் கொதுலுப் தீவுகளையும், அங்கு அடையாளம் இழந்து நிற்கும் தமிழர்களையும் பேசும்போது இன்னும் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் துன்பப்படுகிறார்களோ என்ற பதைப்பு எழுகிறது. அவர்கள் யாரென்பதே அறியாது இருந்தாலும் தமிழ்க் கலாச்சாரத்தின் சில அம்சங்களை உயிருடன் வைத்திருக்கின்றனர் என்பது ஆறுதல்.
அவருக்கு மிகவும் பிடித்தமான இடமாக நெதர்லாந்தின் டப்ளின் இருக்கிறது. அங்கு அவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடத் தேர்ந்தெடுக்க்கும் இடம் ஒரு அதிர்ச்சி. கல்லறைப் பூங்கா! இது ஒரு அதிர்ச்சி என்றால், அந்தப் பூங்காவை நெதர்லாந்து மக்கள் கொண்டாடும் விஷயத்தைப் படித்தால் மேலும் வியப்பும், அதிர்ச்சியும். அதற்குள் ஒரு கேஃப்டீரியாவே இருக்கிறது. அவர்கள் மரணத்தைக் கொண்டாடுகிறார்கள் என்ற செய்தி மிகவும் வியப்பாக இருக்கிறது. ஒரு சில மாதங்களுக்கு முன் ஆஃப்கானிஸ்தாலில் ஏராளமாகப் படிக்க வேண்டுமென்று ஏங்கிய இரு சகோதரிகளை பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பில் கொன்று விட, அவர்களது பெற்றோரும், உறவினரும், அவர்களைப் புதைத்திருக்கும் இடத்துக்கருகிலேயே ஒரு நூலகத்தை அமைத்தனர் என்று விஜய் பிரசாத் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது.
மேலும் பல ஓவியர்கள், கவிஞர்களைப் பற்றியும், அவர்களுடன் இவர் கழித்த நேரம், அவர்களுடன் அளவளாவியது, பேட்டி எடுத்தது என்று புத்தகம் முழுவதும் ஈர்த்துக் கொண்டே இருக்க, புத்தகம் முடிந்து விட்டது என்பதே ஒரு ஏக்கத்தை உருவாக்கி விட்டது. விரைவில் அவர் மீதமிருக்கும் பயணக் கட்டுரைகளை எழுதி வெளியிட வேண்டும். அவற்றுக்காகக் காத்திருப்போம்.
நூலின் தகவல்கள்:
நூல் : திசைகள் நான்கல்ல
ஆசிரியர் : இந்திரன்
வெளியீடு : யாளி பதிப்பகம்
விலை : ரூ. 250
நூல் அறிமுகம் எழுதியவர்:
கி.ரமேஷ்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

