இதுவரை பல நூல்களை நான் வாசித்திருக்கலாம். இனியும் பல நூல்கள் நான் வாசிக்க காத்திருக்கலாம். ஆனால் அவை எல்லாவற்றையும் விட இந்நூல் எனக்கு மிகவும் பிடித்த நூலிது. இதனை மறப்பது அத்தனை எளிதானதல்ல.
சோர்வுறும் தருணங்களில் எல்லாம் என்னை உற்சாகம் கொள்ள வைக்கும் எஸ்.ரா.வின் எழுத்துகள்…
இனி நூலைப் பற்றி…..
பலதரப்பட்ட வெவ்வேறு விதமான தளங்களைப் பேசும் 24 கட்டுரைகளின் தொகுப்பு நூல் “இன்றில்லை எனினும்.”
“நல்லார் ஒருவர்” என்ற முதல் கட்டுரையில், தான் பணிபுரியும் அரசுப் பள்ளியை முன்மாதிரிப் பள்ளியாக மாற்றிக் காட்டிய ஆசிரியர் பிராங்களின் அவர்களைப் பற்றிக் கூறி அவரைப் போன்றே அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தன்முனைப்போடு பணிபுரிவார்களாயின் தமிழக அரசுப்பள்ளிகளின் தரம் உலகளாவிய புகழ்பெறும் என்கிறார். கவலை வேண்டாம் அய்யா, நீங்கள் இக்கட்டுரையை எழுதும் போது நிலை என்னவோ, ஆனால் இன்றைக்கு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தாங்கள் கண்ட பிராங்க்ளின் அவர்களைப் போன்றே மாணவர் நலனே பிரதானமென கடமையாற்றுகிறார்கள். நிச்சயம் நம் தமிழக அரசுப்பள்ளிகளின் தரம் இனி உலகிற்கே முன்மாதிரியாய் மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.
ஆனால் “படிப்பதற்காகவே வாழ்பவர்”, “புத்தகங்களை என்ன செய்வது” ஆகிய இரு கட்டுரைகளிலும் புத்தகம் வாசித்தலிலுள்ள உணர்வுப்பூர்வமான இன்பம், தீவிர வாசிப்பு பழக்கமுடையோர் சுற்றியுள்ளோரால் படும் அவஸ்தைகள், அதையெல்லாம் தாண்டி புத்தக வாசிப்பே தங்களின் வாழ்க்கையின் அடிநாதமென வாழும் வாசிப்பாளர்களை அடையாளம் காட்டி புத்தக வாசிப்பை ஊக்குவிக்கிறார்.
ஓரிடத்தில் எஸ்.ரா. கூறுகிறார்:
” வீடு புத்தகங்களை ஒருபோதும் அனுமதிப்பதேயில்லை. புத்தகம் படிக்கிற மனிதனை உதவாக்கரையாகவே நினைக்கிறது. குடிகாரனை, சோம்பேறியை, முரடனைக் கூட சகித்துப்போக முடிகிற இவர்களால் படிப்பை நேசிப்பவனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இடத்தை அடைத்துக்கொண்டு ஏன் இந்த புத்தகங்களை வீட்டில் வைத்திருக்கிறாய் என சண்டையிடாத குடும்பமே இல்லை. உடைந்துபோன நாற்காலிகள், பழைய பாய், தலையணைகள், நசுங்கிய பாத்திரங்களைக் கூட பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் குடும்பங்கள் புத்தகங்களை வெறுப்பது என்பது பண்பாட்டின் வீழ்ச்சியே. உலகின் அவமானங்களை ஒரு படிப்பாளியால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் சொந்த வீடும், உறவும் அவரை தொடர்ந்து அவமதிப்பதைத் தாளவே முடியாது.”
அத்தனையும் சத்தியமான வார்த்தைகள். இவ்வரிகளின் வலியை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும். நான், வீட்டிற்கு தெரியாமல் கதை புத்தகங்களையும், பகுத்தறிவு நூல்களையும் கல்லூரி புத்தகங்களின் நடுவில் வைத்து வாசித்த நாட்களெல்லாம் உண்டு. கடையைக் கவனிக்காமல் எப்போதும் நூலகத்திலேயே சென்று அமர்ந்திருந்ததால் உறவினர்களிடம் திட்டு வாங்கிய நினைவுகளெல்லாம் இவ்வரிகளை வாசிக்கையில் என்னுள் நிழலாடின. நன்றி திரு. எஸ்.ரா. அவர்களே.
அதேபோல் வாசிப்பவர்களை சந்தேகக் கண்கொண்டு, “உண்மையிலேயே நீ இவற்றையெல்லாம் வாசித்திருக்கிறாயா? அதற்குள் இவ்வளவு படித்து முடித்து விட்டாயா? வாசிக்கிறாயா அல்லது வாசித்து விட்டதைப் போல் நடித்து உன்னைப் பெரியாளாய் காட்டிக் கொள்கிறாயா?” என்ற வினாக்களை எழுப்புபவர்களை நிறையவே நாம் கண்டிருப்போம். அவர்களின் வினாக்களுக்கெல்லாம் சற்று கோபமாகவே விடையளித்துள்ளார் ஆசிரியர் இந்நூலில்.
“இன்றில்லை எனினும்” எனும் கட்டுரையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றி நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளமை ஜேகே-வைப் பற்றிய ஒரு முழுமையான தகவல் களஞ்சியமாய் அமைந்து இனிவரும் நாட்களில் ஜேகே-வினை வாசிக்க வேண்டுமென்ற உத்வேகத்தினை ஏற்படுத்திவிட்டது.
எழுத்தாளர்கள் மெளனி, கி.ரா., பிரமிள் ஆகியோர், நடிகையர் திலகம் சாவித்திரி பற்றிய கட்டுரைகளெல்லாம் நம்மை கவர்கின்றன.
இன்றைய கல்விமுறையின் அவலங்கள் பற்றிய, “கேட்பார் இல்லாத கல்வி”, ” இதுதானா கல்வி?”, “பரீட்சைக் குளறுபடிகள்” போன்றவை கல்வியாளர்கள் வாசிக்க வேண்டியவை. இக்கட்டுரைகளில் சிலவற்றில் எழுத்தாளரின் கருத்துகளோடு முரண்பட்டாலும் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளக்கூடியவைகளாகவே உள்ளன.
“காதுள்ளவன் கேட்கட்டும்” என்ற காந்தியைப் பற்றிய கட்டுரை நிச்சயம் இன்றைய இளைஞர்கள் வாசிக்க வேண்டிய கட்டுரை. அதில் அவர் பரிந்துரைத்துள்ள நூல்களையும், ஒலி வடிவ கோப்புகளையும் நிச்சயம் கேட்க வேண்டும்.
இறுதியாக, நூலிலிருந்து சில மேற்கோள்கள்:
–> தனியார் பள்ளியோ, அரசு பள்ளியோ எதுவாக இருப்பினும் மாணவர்கள் மதிப்பெண் வாங்கும் திறனை மட்டுமே வளர்க்க முனைகின்றன. மனப்பாடம் செய்யும் இயந்திரமாக மாணவர்களை மாற்றுவதே அவர்களின் லட்சியம். சுயசிந்தனையும், கற்பனை ஆற்றலும், தனித்துவமான எண்ணங்களும் கொண்ட மாணவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கல்வி நிலையங்களின் கட்டடங்கள் உயர்ந்த அளவிற்கு கல்வியின் தரம் உயரவில்லை.
–> ஆசிரியர்களின் அடிப்படை தவறு என்ன தெரியுமா? அவர்களுக்குப் பாடத்தின் மீது இருக்கும் அதே ஆர்வம் குழந்தைகளுக்கும் இருக்கும் என்று தப்புக் கணக்குப் போடுவது தான்.
–> இந்தியாவின் இன்றைய அரசியல் ஏமாற்றம் தருகிறது. அதிகாரப் போட்டி அருவெறுக்க வைக்கிறது. மதவாதம் நம்மை துண்டாட நினைக்கிறது. அதற்காக இந்தியா மீண்டும் அடிமைப்பட வேண்டும் என்று படித்தவர்களே நினைப்பது முட்டாள்தனம்.
–> ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு கதைசொல்லி அவசியம். பாட புத்தகங்களை மாற்றி எழுதுவதால் மட்டும் கல்வியில் மாற்றம் வந்து விடாது. கற்றுத் தரும் முறைகளில் மாற்றம் தேவை. அதற்கு எளிய வழி, கதை சொல்வதை முதன்மைபடுத்திய கற்கும் முறை உருவாக்க வேண்டும் என்பதே.
–> புத்தக வாசகனுக்கு தான் வாங்கிய புத்தகங்களோடு உள்ள உறவு அது, ஒரு புத்தகம் என்பதைத் தாண்டியது. அது ஒருவிதமான தோழமை உணர்வு. புத்தக வாசகன் ஒரு புத்தகத்தை இழப்பதை எப்போதுமே தனது அந்தரங்க வலியாக உணர்கிறான். உலகின் கண்களில் புத்தகங்கள் வெறும் அச்சிடப்பட்ட காகிதங்கள். ஆனால் வாசகன் கண்ணில் அது ஒளிரும் ஒரு வைரக்கல்.
உங்களின் வாசிப்புப் பட்டியலில் நிச்சயம் இடம் பெற வேண்டிய நூல் எஸ்.ரா. அவர்களின் “இன்றில்லை எனினும்”
நூல் : இன்றில்லை எனினும்
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள் : 160
விலை : ₹ 125
வகை : கட்டுரைகள்