ஆர் பத்ரி (R.Badhri) எழுதிய இங்கு அரசியல் பேசவும் ( Ingu Arasiyal Pesavum) - நூல் அறிமுகம் - https://bookday.in/

இங்கு அரசியல் பேசவும் – நூல் அறிமுகம்

இங்கு அரசியல் பேசவும் – நூல் அறிமுகம்

“வரலாறு என்பது மக்கள் வெற்றியின் கதை”

ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்க போராட்டங்களின் வரலாறு என்பார் காரல் மார்க்ஸ். வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டுமாயின் அதனை அனைத்து கோணங்களில் இருந்தும் கிரகித்துக் கொள்ள வேண்டும் ஒளிவட்டத்தையும் பிம்பத்தையும் கொண்டு பல வரலாறுகளை பல ஏடுகள் பதிவு செய்திருக்கின்றன.

ஆனால் ஏழை எளிய மனிதர்களின் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறாமலே போயிருக்கின்றன. .

நாம் வாழ்கின்ற முதலாளித்துவ சமூக அமைப்பு நமக்குள் உருவாக்கும் பொது புத்தியானது முதலாளித்துவ சிந்தனைகளே பெரும்பாலும் உள்ளடக்கமாக கொண்டிருக்கும். நமக்குள் உருவாகி இருக்கும் படிமத்தை சற்று கலைத்துப் போட்டுவிட்டு ஒரு புதிய பார்வையை மாற்றுக் கண்ணோட்டத்தை நமக்குள் ஏற்படுத்திக் கொள்ளாமல் புதிய சிந்தனைகள் உருவாகாது.

நமது சிந்தனைகளை மழுங்கடிக்கும் விதத்தில் உருவாக்கப்படும் விளம்பரங்கள் ஒரு கண்காணிப்பு கேமராவை போல் நம்மை எப்போதும் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றன விளம்பரங்களின் பிடியிலிருந்து நம்மால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.

அப்பா அம்மாக்களை விட “ஆப் “களே (App) நம்மளுக்கு நெருக்கமாகவும் நம்மை நமது தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதாக உள்ளன. இதன் மூலம் நம் அனைத்து உறவுகளும் உணர்ச்சிகள் அற்ற வெறும் பண உறவாக மாற்றிவிட்டது முதலாளித்துவம்.

அபாயங்களையும் நெருக்கடிகளையும் சமூகமயமாக்குவது லாபத்தை தனியார் வசமாக்குவது என்பதே இன்றைய அரசுகளின் பொது விதியாக மாற்றப்பட்டுள்ளது. சேவைகளில் இருந்து முற்றிலும் விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது இந்த அரசு.

மக்களை அல்லது சமூகத்தை கட்டுப்படுத்த அரசு இரண்டு விதமான கருவிகளை பயன்படுத்தும் ஒன்று அடக்குமுறை கருவி மற்றொன்று சித்தாந்த கருவி.

காவல் ராணுவம் சட்டம் நீதிமன்றம் நிர்வாகம் இவைகள் அடக்குமுறைகளுக்கான கருவிகள் ஆகும்.

கல்வி பண்பாடு குடும்பம் அரசியல் நம்பிக்கைகள் உள்ளிட்ட இதர அம்சங்கள் சித்தாந்த கருவிகள் ஆகும்.

வேலையின்மையால் பசியா வாடும் மக்களுக்கு ஆன்மீகத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு அருள் ஆசி வழங்குகிறது அரசுகள்.

வேலையில்லா திண்டாட்டமும், பட்டினியும் இருக்கும் சூழலில் அரசு கார்ப்பரேட்டுகளுக்கு கடனையும் சலுகையும் தருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு கடவுளையும் கோவிலும் காட்டுகிறது.

வரலாற்றுக்கு பதிலாக புராணங்களை காட்டுவது…. தத்துவத்திற்கு பதிலாக மத / சமய கருத்தியலை முன்வைப்பது… அறிவியலுக்கு எதிராக மூட நம்பிக்கையை பரப்புவது என்ற நிலையில் தான் இந்த அரசுகள் செயல்படுகிறது.

இடதுசாரி இயக்கங்கள் களப் போராட்டங்களோடு வலுவான கருத்தியல் போராட்டங்களையும் வலுவாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. கருத்தியல் தளத்தில் வலுவாக இல்லாத போது களப் போராட்டங்களில் கூட பின்னடைவும் ஏற்படக்கூடும்.

இது போன்ற பல்வேறு கருத்துக்கள் எளிய நடையில் வழங்கியுள்ளார் நூலாசிரியர்.

புத்தக வாசிப்பு சமூகத்தை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை நமக்கு தருவதோடு நாம் நிகழ்த்த வேண்டிய கருத்தியல் போராட்டத்திற்கான பாதையையும் நமக்கு கொடுக்கிறது என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

நமக்குள் இருக்கும் சமூகம் சார்ந்த அக்கறையையும் நம்பிக்கையும் இந்த முதலாளித்த சமூகம் சீரழித்து விட்டது .

மனிதர்கள் ஒன்றாக கூடி பரசுரம் பேசி அனுபவங்களை பகிர்ந்து கொள்ள கூட நேரம் இன்றி ஓடிக்கொண்டிருக்கிறோம் .
நமது சிந்தனைகளை மழுங்கடிப்பதற்கான நுட்பமான ஏற்பாடுகள் நமது சமூகத்தில் நிறைந்து இருக்கின்றன என்பதையும் வலியுறுத்துகிறார் நூலாசிரியர்.

போராடிக் கொண்டே இருப்பதால் என்ன பயன் எனும் கேள்வி தற்போது பரவலாக மக்கள் மத்தியில் உள்ளதை பார்க்கலாம்.

இது போராட்டங்களின் கூர்முனையை மழுங்கடிக்கும் நுண்ணரசியல் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மாற்றம் எனும் சொல்லைத் தவிர அனைத்தும் மாறும் என்பது தத்துவம். ஆனால் அத்தகைய மாற்றங்கள் எதுவும் இயல்பாக நிகழ்ந்து விடுவதில்லை. மாற்றத்தை விரும்புவோரிடம் அதற்கான முயற்சி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

போராட்டங்கள் இல்லாமல் வரலாறுகள் இல்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறது இந்த நூல்.

12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலை தோழமை உணர்வுள்ளவர்கள் அத்தனை பேரும் வாசிக்க வேண்டிய அற்புதமான எளிய நூல்.

நூல் : “இங்கு அரசியல் பேசவும்”
(கலாச்சார தொழிற்சாலை)
நூலாசிரியர் :  ஆர் பத்ரி
விலை : ரூபாய் 60/-
வெளியீடு :  பாரதி புத்தகாலயம்
சென்னை-600018.
நூல் அறிமுகம் எழுதியவர் : 
MJ. பிரபாகர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *