Iniya Sorkal Short Story by Shanthi Saravanan இனிய சொற்கள் சிறுகதை - சாந்தி சரவணன்

இனிய சொற்கள் சிறுகதை – சாந்தி சரவணன்




கோதை பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள். பள்ளிக் குழந்தைகள் தேனீக்கள் போல் ஓடி வந்து பேருந்தில் ஏறுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் படிக்கும் காலத்தில் காலார நடந்து சென்று நண்பர்களோடு விளையாடிய நாட்கள் கண்முன் நிழலாடியது.

நல்லூர் கிராமம் அவளின் ஊர. 50 வருடங்கள் முன்பு இருந்த கிராம சூழல். பாரதிராஜா படங்களில் வரும் கிராமம் நம் கண் முன்னே கற்பனை செய்து கொள்ளலாம்.

பச்சைப் பசேல் புல்வெளி. மண் கலந்த வீதிகள். சாலைகளின் இருபுறமும் புளிய மரங்கள், பனை மரங்கள், ஆல மரங்கள். ஆல மரத்தின் விழுதுகளில் ஊஞ்சல் விளையாட்டு. மூக்குத்திப் பூ எடுத்து பெண்கள் மூக்கு குத்தி கொண்டும், காதில் பூ எடுத்து கம்மலாக பாவித்து போட்டு கொண்டு விளையாடுவது. இதற்கிடையில் சிட்டுக் குருவிகள் வழிநெடுக பறந்த வண்ணம் இருக்கும் அழகைப் பார்ப்பது…

பள்ளி வாசலில், கொய்யா, நாவல் பழம், மாங்காய், தேன் மிட்டாய், தேங்காய் பர்பி, ஸ்டார்ங் மிட்டாய், மிட்டாய் வாட்ச், இப்படி எத்தனை எத்தனை பொருட்கள். அவற்றை ருசி பார்த்துக் கொண்டை நடக்கும் நடை பயணம் உடலுக்கும் மனதிற்கும் அளிக்கும் புத்துணர்ச்சியே ஒரு அலாதி சுவை.

அதிலும் மிட்டாய் வாட்ச் செய்து கொடுக்கும் அண்ணன் இரண்டு சக்கர மிதிவண்டி பார்த்து விட்டால் பிள்ளைகள் கூட்டம் அந்த வண்டியை சுற்றி அவரை “அண்ணா அண்ணா….” என அழைத்தே அவர் அனைவரின் அண்ணன் ஆகிவிடுவார்.

அடுத்து குச்சி கலர் ஐஸ். பல வண்ணங்களில் அந்த குச்சி ஐஸ்ஸை ரசித்து ருசித்து சாப்பிடும் அழகே தனி. இதற்கிடையில் ஆசிரியர் யாராவது கடந்து சென்றால், “வணக்கம் அய்யா’ என வழியிலும் ஆசிரியருக்கு என்ற மரியாதை மனதிலிருந்து வார்த்தைகளாக மலரும்.

“அய்யா வகுப்பு ஆரம்பித்து விடுவார்கள். சீக்கிரம் போக வேண்டும்” என்ற மாணவர்களது கெஞ்சல் உரையாடல், நாம் கடந்து செல்லும் போது கேட்பதற்கு இனிமையாக இருக்கும். ஆனால் இப்போது மாணவர்களின் உரையாடல் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. வழியில் ஆசிரியர் சென்றாலும் டேய் “வாத்தி” டா என்று அவர்கள் பேசிக் கொள்ளும் சொல்லாடல் பல ஆசிரியர்களுக்கு மன வலியை உண்டாக்குகிறது. அது மட்டுமல்ல ஆசிரியரைத் தாக்கும் ஆயுதங்களாக மாணவர்கள் மாறிவிடும் அபாயமும் ஆங்காங்கே நடக்கின்றது. விதிவிலக்கு அனைத்திலும் உண்டு.

கோதை ஆசிரியராக வேண்டும் என்பதற்காகவே சிறு வயது முதல் எண்ணம் கொண்டு “ஆசிரியர்” என்ற ஸ்தானத்தை அடைந்தாள். அவள் தொழிலாக ஆசிரியர் பணியை பார்க்கவில்லை. சிலாகித்து விருப்பத்துடன் அந்தத் துறையை தேர்வு செய்து ஆசிரியராக பணிபுரிகிறாள். ஆதலால் தற்போதைய மாணவர்களின் உரையாடல் அவளை பெருங் கலக்கம் கொள்ள செய்கிறது.

“நற்சொற்கள்” நம்மை விட்டு நாடு கடத்தபட்டதற்கு காரணம் என்ன? என்று யோசித்த வண்ணம் கோதை பயணித்து கொண்டு இருந்தாள். சில ” இனிய சொற்கள் ” அவள் காதுகளில் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டே இருந்தது.

“வணக்கம்”.
“ஆசிரியர் வந்தால் எழுந்து மரியாதை அளிப்பது”.
*எப்படி இருக்கிங்க?”
“சாப்பிட்டிங்களா? ”
“பூக்கார அக்காவிடம் பேரம் பேசாமல் பூ வாங்குவது? ”
“ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிய தொகையை விட கூட கொடுப்பது”.
கோரியர் போஸ்ட் மானியம் எடுத்து வருபவரிடம் , “தண்ணீர் வேண்டுமா என கேட்பது.”
“நன்றி” என கூறுவது
“வாழ்த்துகள்” தெரிவிப்பது.
“புன்னகையை” விசாலமாக கொடுப்பது
“பகிர்ந்து உண்பது”

“வெறுப்பை உமிழாமல் அன்பை அள்ளி அள்ளிக்கொடுப்பது பொறாமையையும், கோபத்தையும் அனல் பறக்க சக தோழமைகள் மேல் தெறிக்கவிடாமல், தென்றல் தீண்டும் சுகத்தை இனிய மொழியில் தருவது.

எப்படி நமது நாக்கு நற்சுவையையே விரும்புகிறதோ அதே போல நம் வாயில் இருந்து உதிரும் வாக்கும் சுவையானதாக இருந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும். அதையே நமது பிள்ளைகளுக்கு நமது வருங்கால சந்ததியினர் அறியும் வண்ணம் அந்த சுவையை அவர்களை பருக வைக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை தானே. பெற்றோர்களாக, ஆசிரியராக, உறவுகளாக, நண்பர்களாக, சமூகமாக ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டும் என சிந்தனை அவளை மேலும் ஆட்கொண்டது.

அவளின் அரசு பள்ளி பேருந்து நிலையம் நிறுத்தம் வந்தது. தனது வகுப்பிற்கு சென்று கரும்பலகையில், “இன்று முதல் நற் சொற்கள் பேசும் மாணவர்கள் பட்டியல் எடுக்கப்படும். மாதம் ஒருமுறை அந்த மாணவருக்கு பரிசு வழங்கப்படும்” என்று எழுதிவிட்டுப் பாடம் எடுக்க துவங்கினாள்.

மாணவர்கள் மத்தியில் சலசலப்பு.

சிறிது நேரத்தில் அந்த சலசலப்பு காணாமல் போனது. ஒவ்வொரு மாணவர்களும் இனி நற் சொற்கள் மட்டுமே பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர் என்பதை அவர்களின் முகம் பிரதிபலித்தது. கோதை வகுப்பை விட்டு வெளியே வர எழுந்த போது, டேய் “வாத்தி போயிடுச்சு டா” என்ற சொல்லாடல் மறைந்து “நன்றி அம்மா” என்ற பிள்ளைகளின் குரல் கோதை காதுகளில் ரீங்காராமாக ஒலித்தது. சிறிய மாற்றம் தான் பெரிய மாற்றத்தின் துவக்கம் என்பது நாம் அறிந்ததே.

“ஓருவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்பிலே “ மட்டுமே அல்ல, ஆசிரியரின் வழிநடத்தலிலும், சமூகத்தின் மன்னிப்பு அளிக்கும் தனிமையில் உள்ளது என நினைத்து கொண்டே மன நிம்மதியோடு பேருந்து நிலையத்தில் பேருந்து வருகைக்காக காத்து இருந்த கோதையின் கண்களில் பள்ளியின் சுவரில் ..
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”.
என்று திருக்குறள் எழுதப்பட்டிருந்தது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 4 Comments

4 Comments

  1. Rathika vijayababu

    அருமை👏👏

  2. சிந்து.நீ

    குழந்தைகளின்‌ நல்ல ஒழுக்கங்களுக்கு மிகமுக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கும் ஆசிரியரின் பொறுப்பை எளிமையாக கூறும் கதை…

  3. Jayaprakash

    அருமை………………..5 ல் வளையாதது 5ல் வளையாது. நல்லவைகள் சிறு வயதில் தொடர்ந்தால் அவை வீடு, ஊர், சமூகம் மற்றும் இந்நாட்டிற்க்கும் நன்மை பயக்கும். மேன்மேலும் சமூகம் காக்கும் குழந்தைகள் கதைகளை எழுத வாழ்த்துக்கள்.

  4. jayasree balaji

    கதையின் முதற்பாதி வாசிப்பாளர்களை பள்ளிக்கு இட்டுச் செல்கிறது.

    “நாக்கு நற்சுவையை விரும்புகிறது அதே போல உதிரும் வாக்கும் சுவையானதாக இருந்தால்… ”

    “ஒருவன் நல்லவன் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பில் மட்டுமல்ல ஆசிரியரின் வழிநடத்தலிலும் உள்ளது…. ”

    இவ்விரண்டு கருத்துகளும் கதையை சிறப்பித்துள்ளது.

    தொடர்ந்து எழுதி வரும் தங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் அன்பு 😊😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *