சுசித்ரா விஜயன், பிரான்சஸ்கோ ரெச்சியா எழுதிய இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்க முடியும்? - நூல் அறிமுகம் - https://bookday.in/

இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்க முடியும்? – நூல் அறிமுகம்

இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்க முடியும்? – நூல் அறிமுகம்

 

‘விடுதலைக்காகப் போராடும் அனைவருக்கும்’ என்று நூலை சமர்ப்பித்துவிட்டுத்தான் முன்னுரைக்குச் செல்கிறார்

“பயங்கரவாத மற்றும் மாவோயிச நடவடிக்கைகளைப் பொறுத்தவரையிலும், நேரடியாக ஏதேனும் திட்டத்தைச் செயல்படுத்தினார்களா இல்லையா என்பதெல்லாம் முக்கியமில்லை. அவர்களுது சிந்தனைகளும் அவர்களின் கருத்தியலுமே பேராபத்தாகும். அதனால், அவர்களைச் சிறையில் அடைக்க எவ்விதக் குற்றத்திலும் அவர்கள் நேரடியாகப் பங்கேற்றிருக்க வேண்டுமென்ற்கிற அவசியமில்லை”

மேற்கண்ட கருத்தினை உதிர்த்தவர் சாமானிய மனிதர் அல்ல உச்சநீதிமன்றத்தின் நீதிபதி எம்.ஆர்.ஷா அவர்கள் ஆவார். இக்கருத்து மும்பை நீதிமன்றம் 2022 ஆண்டு அக்டோபர் மாதம் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா மற்றும் அவருடன் வழக்கில் தொடர்புடைய ஐவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வெளியாகி 24 மணி நேரத்திற்குள் இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற விசாரணைக்குழு அவசர அவசரமாகக் கூடி அதுவும் சனிக்கிழமை அதிகாலையிலேயே கூடி மும்பை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது. அப்போது தான் அக்கருத்து சுட்டிக்காட்டப்பட்டிருக்கு. அந்தத் தீர்ப்பின் கருத்தை நாம் உள்வாங்கினோம் என்றால் யாரும் குற்றவாளியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சிந்தித்தாலே சிறையில் தள்ளலாம் என்றால் அவர்கள் யாரைக் கைதுசெய்ய நினைக்கிறார்களோ அவர்கள் மீது பதியப்படும் வழக்கின் தன்மை மட்டுமே போதுமானது. அதற்கு எவ்வித ஆதாரமும் தேவையில்லை என்பதே. இது எப்படி என்பது பேரதிர்ச்சியாகவே உள்ளது. மக்கள் தலைவர்கள், கட்சித் தலைமையின் கீழ் போராடும் யார் ஒருவரும் அல்லது போராடுவார் என்று இட்டுக்கட்டப்பட்டு கைதுசெய்யப்படும் நபர்கள் அனைவருமே குற்றவாளி என்று முத்திரைக் குத்தப்படுவார்களே. இது அரசியலமைப்புக்கு எப்படி உகந்ததாக இருக்க முடியும்.

பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா வழக்கு ஓர் உதாரணம் மட்டுமே. இதேபோல் வடக்கு டெல்லியில் இருக்கும் இஸ்லாமியர்கள் எப்படி நசுக்கப்பட்டார்கள்; மகாராஷ்டிரா பீமா கோரேகானில் தலித் செயல்பாட்டாளர்களுக்கும், வலதுசாரி குண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவ்வழக்கின் பெயரே ‘பீமா கோரேகான் 16’ என்பதாகும். ஆனந்த் டெல்டும்பே, ஸ்டான் சுவாமி உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் யாரும் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. அந்த பதினாறு பேரில் கலைஞர்கள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள், கள செயல்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைப்போராளிகளும் அடங்குவர். இவர்கள் கலவரம் செய்யக்கூடியவர்களா என்பது கட்டுக்கதை என்றே இந்நூலை வாசிக்கும் யார் ஓருவருக்கும் புரிந்துவிடும். ஸ்டான் சுவாமி அவர்கள் சிறையில் இருந்தபோது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டார். அவருடைய கையால் குடிநீர் டம்பளரை பிடிக்க முடியாத அளவுக்கு கைநடுக்கம். அதற்காக உறிஞ்சி குழாய் வேண்டும் என்று அவர் கோரிய போது நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுத்தான் வழங்க முடியும் என்றும் அவ்வாறு கேட்டபோது நீதிமன்றமும் உறிஞ்சி குழாய் கொடுக்க மறுத்துவிட்டது. அவர் சிறையிலேயே மறைந்தார் என்பதை நாம் மறந்துவிடவில்லை. இவையெல்லாம் எதற்காக என்றால் நம் நாடு இப்போது செல்லும் பாதை மிகவும் கரடுமுரடாகவே உள்ளது. அப்பாதையினை சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் குரல் கொடுக்கும்போது ஆளும் வர்க்கத்திற்கு பிடிக்கவில்லை. விளைவு மனிதத்தன்மைக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் குறித்து இந்நூல் மிகவும் விரிவாக பேசுகிறது.

யார் யார் எப்போது கைதுசெய்யப்பட்டனர்; எதற்காக கைதுசெய்யப்பட்டனர்; கைதுசெய்வதற்காக என்னென்ன கதைகள் இட்டுக்கட்டப்பட்டன என்பனவற்றை இந்நூல் ஆசிரியர்கள் மிகவும் விரிவாக பதிவு செய்துள்ளனர். அவற்றை தமிழில் மிக எளிமையாக மொழிப்பெயர்த்து எவ்வித அயர்ச்சியும் ஏற்படா வண்ணம் வாசிக்கக் கொடுத்துள்ளார். இந்நூலில் ஓவியம் வடிவில் கடிதம் எழுதிய சிறைக்கைதியை காணலாம்; குற்றப்பத்திரிக்கை பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் டிஜிடலில் வழக்கறிஞர் காட்டியபோது மட்டுமே பார்த்த சிறைக்கைதி; சிறைக்கைதியின் தன்மையை பொறுத்து சிறைக்கூடம் அமைவது அதாவது வேண்டப்படாத கைதி என்றால் அவருக்கு கழிவறைக்குப் பக்கத்திலே இடம் ஒதுக்குதல் என துயரங்களின் பக்கங்களே அதிகம். இந்நூலில் 26 பக்கங்கள் கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர்களும், அவர்களுக்கான வழக்கின் தன்மையுமே அடங்கியிருக்கு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கொடுமை என்னவென்றால் களவரத்தைத் தூண்டியவர் ஆளும் வர்க்கத்தின் நபராக இருப்பார். ஆனால் பாதிப்பது சம்மந்தமில்லாத சாமானிய மக்களே.

இப்படித்தான் வடக்கு டெல்லியில் வாழும் இஸ்லாமியர்கள் கலவரம் என்ற பேரில் அதிகம் தாக்கப்பட்டனர். அப்படித்தான் 2020 ஆம் ஆண்டு சிஏஏவுக்கு எதிராகப் போராடும் கூட்டத்தைக் கலைத்துத் துரத்தாவிட்டால் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தெருவில் இறங்கிப் போராடுவேன் என்று பாஜக கபில் மிஷ்ரா அவர்கள் அறிவித்த பிறகு அடுத்த நான்கு நாள்களில் வடக்கு டெல்லியில் பெரும் கலவர பூமியாக மாறியது. அக் கலவரத்தை காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது என்றால் என்ன சொல்வது. அக் கலவரத்தில் இறந்தவர்கள் 53 பேர்கள். அதில் பெரும்பான்மை இஸ்லாமியர்களே. அதுமட்டுமல்ல கலவரம் தூண்டியவர்கள் என்று இஸ்லாமியர்களே கைது செய்யப்பட்டனர். அக் கலவர வழக்கில் முக்கிய நபரான பாஜகவின் கபில் மிஷ்ரா பெயர் இல்லை. இது ஒன்றே போதும் ஆளும் அரசின் நோக்கம் என்னவென்று அறிந்துகொள்வதற்கு. இந்நூல் எழுதுவதற்கே மிக முக்கியமான தகவல் ஒன்று இருந்துள்ளது. ஆம் வெகு மக்கள் பத்திரிக்கைகள் கண்டு கொள்ளாத செய்திகளையும், மக்களின் போராட்டங்களையும் தொகுத்து வெளியிடவே ‘போலிஷ் திட்டம்’ என்கிற பெயரில் தொடங்கியது தான் இந்நூல் வெளி வருவதற்கான காரணம். இதனுடன் நிறைய களப்பணிகள் கொண்டு ஆய்வு செய்து நமக்கு நூலாகக் கொடுத்துள்ளார்கள். இந்நூலை வாசித்து பல மாதங்கள் ஆகிவிட்டது. நீண்ட பதவிட வேண்டுமே என்கிற நோக்கத்தில் இவ்வளவு நாளாக தள்ளிப்போட்டு வந்திருக்கிறேன். இனியும் தாமதிக்கக் கூடாது என்பதற்குத்தான் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு இதோ நூறில் ஒரு கொசுறை மட்டும் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். ஸ்டான் சுவாமி பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பாரதி புத்தகாலயத்தில் வெளிவந்துள்ள ‘சாதியின் குடியரசு, கருப்புப் பிரதியின் கயர்லாஞ்சி, தமுஎகசவின் சாதி வர்க்கம் ஏகாதிபத்தியம் உள்ளிட்ட நூல்களை எழுதிய ஆனந்த் டெல்டும்பே உட்பட சிறையில் தள்ளப்பட்டுள்ளனர் என்றால் அவர்கள் மக்களுக்காக எப்படி களத்தில் நின்றிருப்பார்கள் என்பதை சொல்லாமலே விளங்கலாம்.

இன்னும் நிறைய எழுதலாம் மார்க் அங்க்ள் கோவிச்சிக்க மாட்டார். ஆனால் வாசிக்க உங்களுக்கு அதிகம் கஷ்டத்தைக் கொடுக்க வேண்டாம் என்று இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இந்நூலை மிகவும் நேர்த்தியாக தமிழில் வடித்துக் கொடுத்த அன்புத் தோழர் இ.பா.சிந்தன் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அவருக்கு நன்றி சொல்வதென்றால் அவரின் பல்வங்கர் பலூ, அரசியல் பேசும் அயல் சினிமா, உக்ரைனில் என்ன நடக்கிறது, ஜானகி அம்மாள் தற்போது சுடச்சுட ஸ்டெத்தாஸ்கோப் பெண்கள் உள்ளிட்ட நூல்களும், கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும், நிழல் இராணுவங்கள், ஆன்மிக அரசியல், நாதுராம் கோட்சே, இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி? இந்தியா ஏமாற்றப்படுகிறது ஆகிய மொழிப்பெயர்ப்பு நூல்களையும் படிப்பது என்பதாகும். எனவே மக்கள் சார்ந்த எழுத்தாளரின் நூல்களை அவசியம் வாசிப்போம். அதன்மூலம் நமக்கான பாதை எது என்பதை முடிவு செய்வோம்.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

நூலின் தகவல்கள் : 

நூல் : இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்க முடியும்? {இந்திய அரசியல் கைதிகளின் குரல்கள்}
ஆசிரியர் : சுசித்ரா விஜயன், பிரான்சஸ்கோ ரெச்சியா
தமிழில் : இ.பா.சிந்தன்
வெளியீடு : எதிர் வெளியீடு
ஆண்டு : முதல் பதிப்பு ஜனவரி 2025
விலை : ரூ.399
நூலைப்பெற : 04259-226012, 9942511302

நூல் அறிமுகம் எழுதியவர் : 

இரா. சண்முகசாமி
புதுச்சேரி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *