இன்னும் மிச்சமிருக்கிறது கவிதை – சாரதா மைந்தன்

இன்னும் மிச்சமிருக்கிறது கவிதை – சாரதா மைந்தன்




நண்பரே..!
உமது எழுத்து
பசிக்கு உணவளிக்கும் என்று படிக்கவில்லை

உன் கவிதைகள்
எமது துயரங்களுக்கு
தீர்வு தரும் என்று கருதவில்லை

உம் கதைகள் எம் வாழ்வினைப்
புரட்டிப் போட்டுவிடும் என்று
வாசிக்கவில்லை

உமது படைப்புகள்
எம்மை ஞானியாக்கிவிடும் என்று
உனக்கு வாசகனாகவில்லை

எழுத்தாளன் சமூகத்தை அவதானிப்பவன்
தமக்குள் கேள்விகள் எழுப்பிக்கொண்டே
தீர்வை நோக்கி நகர்பவன்
சற்றேனும் நகர்த்துபவன்

எப்பக்கச் சாய்வும் இல்லாமல்
அறத்தின் சாய்வாக
எழுத்தாளன் அமைய வேண்டும்

சமூகத்தை(ஒட்டு மொத்த மக்கள்)
முன்னடத்தும் சாரதியாக
விளங்க வேண்டும்

*******
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
என்றான்
சில்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்
வள்ளுவன்
சாதி இரண்டொழிய வேறில்லை என்றாள்
பன்னூற்றாண்டுகளுக்கு முன்
நம் தமிழ் மூதாட்டி
யாதும் ஊரே யாவரும் கேளீர்
என்கிறது புறம்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே
சமூக வேலிகளை உடைத்து
சமத்துவம் படைக்க முனைந்தது
தமிழ் எழுத்துலகம்
ஆனால்
அங்கொன்றும், இங்கொன்றுமாக
தமிழ்ச்சமூகத்தை
பள்ளம் நோக்கி இழுக்கும்,
வேலிகளை இறுக்கக் கட்டும்
மனுதர்ம முள்ளியார்களும் இருந்துள்ளனர்..
அவர்களையும் கடந்து
தமிழன் தமது மொழியை
இறுமாந்து போற்றுவதற்கு காரணம்
வள்ளுவரும், பூங்குன்றனார்களுமே..!

********
அறிவுக்கும், அறிவியலுக்கும் பொருந்தாத குறுகியச் சுவர்களை
இடிக்க மனமில்லையெனில்….,
நாமிருவரும் சோதரர்களாக
கைகோர்ப்பதற்குத் தடையாக இருக்கும்
வேலிகளைப் பிடுங்கி எறிய
விருப்பமில்லையெனில்…

நீ எவ்வளவு திறமைசாலியாகவும்
இருந்துவிட்டுப்போ
மனுவின் குட்டையில் ஊறிய
மட்டைகளால்
மாற்றங்களை கிரகித்துக்கொள்ள முடியாது..!

********
மஞ்சளை வாரிப் பூசிக்கொண்டு
மங்களகரமானதாகப்
புளகாங்கிதம் கொள்கிறீர்..
அக்கினிச் சட்டியில்
குஞ்சுகள் பொறித்தவர்களுக்கு
எழுத்தால் கிரீடம் சூட்ட முனைகிறீர்..

அறிவுக்கொவ்வாத
உணர்ச்சிகளை உசுப்பி விட்டு
கெளுத்திகளாய் துள்ளி வளரும்
இளைஞர்களை
கொளுத்திகளாக மாற்றும்
அரசியல் குறுநலவாதிகளின்
அடிப்பொடியாகத் தொடர்வீரெனில்
சற்றே உம்மிடமிருந்து விடை பெறுகிறேன்..!

உம் எழுத்து
வேறு யாருக்கேனும்
சாமரம் வீசட்டும்..!

உம் படைப்புகள்
காதலுக்கெதிராக
கத்தி வீசுவோருக்கு
விருந்து படைக்கட்டும்!

உன் ஆற்றல் அனைத்தும்
எளியவர்களையே
எதிரிகளாகக் கட்டமைக்க முயலும்…
சோதரர்களையே
சண்டைக் கோழிகளாக மாற்றும்
மஞ்சள் பொடிகளின்
மகத்துவத்தையே பேசட்டும்..!

********
உமது எழுத்துகளின் வசீகரத்தால்
?இழுக்கப் பட்டவன்தான்…
எம் மக்களின் கையறு நிலையை
வேறுவகையில் காட்சிப் படுத்த முயன்ற
உம் எழுதுகோளுக்கு
முத்தங்கள் பதிக்க விழைந்தவன்தான்…

எம் நட்பு வட்டங்களில்
உம் எழுத்துகளை விதந்தோதியவன்தான்…
உமக்கான வாசகப் பரப்பை
எம்மால் இயன்ற அளவு
முன்னெடுத்தவன்தான்..

உமது நட்பை, தோழமையை
இறும்பூதெய்தியவன்தான்

உமது நூல்களுடன்
உறவாடுவதிலும் ,உரையாடுவதிலும்,
அலாதி விருப்பம் கொண்டவன்தான்

ஆனால்
உமக்கான முகவரியை
நீரே அறிவித்துக் கொண்டபோது

அம்முகவரியில்
எமக்கான தேடல் ஏதும்
இல்லாதபோது..
தற்காலிகமாக விடை பெறுகிறேன்

*********
மாற்றங்களின் மேல்
நம்பிக்கைக் கொண்டவன் நான்!
ஒருவேளை
உழைக்கும் மக்களின்
ஒற்றுமை காப்பதற்கு
உரத்த குரல்
உம்மிடமிருந்தும் வரலாம்
அன்று ஒன்றினையும் புள்ளி
இன்னும் மிச்சமிருப்பதாகவே கருதுகிறேன்…

நல்லது
மீண்டு வருவீரெனில்
மீண்டும் சந்திப்போம்…!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *