கருவிலேயே கருவை சுமக்கும் பூச்சி – ஸ்ரீ காளீஸ்வரர் செ

கருவிலேயே கருவை சுமக்கும் பூச்சி – ஸ்ரீ காளீஸ்வரர் செ

கருவிலேயே கருவை சுமக்கும் பூச்சி

உயிரினங்கள் தன்னுடைய இனத்தை பெருக்குவதற்காக இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது. உயிரினத்தின் வகை, இருப்பிடம், காலநிலை மற்றும் இன்ன பிற சூழல்களின் காரணமாக அதன் இனப்பெருக்க பண்புகள் மாறுபடுகிறது. ஆனால், நாம் அன்றாடம் கடந்து வரும் ஒரு பூச்சி, பிறப்பதற்கு முன்பே தன் வயிற்றில் கருவை சுமக்கிறது. கேட்பதற்கு விசித்திரமாக தோன்றலாம்!!

செடிப்பேன்

கருவிலேயே கருவை சுமக்கும் பூச்சி - ஸ்ரீ காளீஸ்வரர் செ (Sri Kaleeswarar S) | அசுவுணி அல்லது செடிப்பேன் (Aphid plant lice) - www.bookday.in

வீட்டில் இருக்கும் தக்காளி செடிகளில் இலைகளின் பின்புறம் குட்டி குட்டியாக பூச்சிகள் நிறைய காணப்படும். நாம் அவற்றின் மீது கைகளை வைத்தால், மிருதுவான சில சமயம் பிசுபிசுப்பான ஒரு உணர்வு ஏற்படும்(பொதுவாக அவற்றின் மீது கை வைப்பது பரிந்துரைக்கப்படுவது அல்ல). இந்த பூச்சிகளை சுற்றி எப்போதும் எறும்புகளும் சுற்றிக் கொண்டிருக்கும். ஆங்கிலத்தில் இவை Aphids (அபிட்ஸ் ) என அறியப்படுகிறது. Aphidoidea எனும் பேரினத்தைச் சேர்ந்து இப் பூச்சிகளில் 4300 க்கும் அதிகமான இனங்கள் காணப்படுகிறது.

தமிழில் இவை பொதுவாக செடிப்பேன் என அறியப்படுகிறது. பேச்சு வழக்கில் அசுவினி பூச்சிகள் என்றும் அறியப்படுகிறது.

இந்த பூச்சிகள் ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. தக்காளி செடிகள், சிட்ரஸ் செடிகள், முட்டைகோஸ் வகை காய்கறிகள் என பெரும்பாலான தாவரங்களின் இலைகள் மற்றும் தண்டுகளில் கிடைக்கும் சாற்றை உறிஞ்சி உட்கொண்டு வாழ்கின்றன. இடம் மற்றும் கால சூழலுக்கு ஏற்ப இவற்றின் இனங்களும் மாறுபடுகிறது.

உடலமைப்பு

செடிப்பேன் பூச்சிகளின் நீளம், அவற்றின் இனத்திற்கு ஏற்ப ஒரு மில்லி மீட்டர் முதல் 7 மில்லி மீட்டர் வரை இருக்கும். சில பூச்சிகள் ஒளிப் புகும் உடலமைப்பை (transparent) கொண்டிருக்கின்றன. சில பூச்சிகள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறங்களிலும் காணப்படுகிறது. இவை வசிக்கும் தாவரம், மற்றும் புற சூழல்களின் அடிப்படையில் இவற்றின் உடல் அமைப்பு தீர்மானிக்கப்படுகிறது. இவற்றின் சில இனங்களுக்கு இறக்கைகள் கூட இருக்கின்றன. மேலும் வசிப்பிடத்தில் ஆயிரக்கணக்கான பூச்சிகள் சேர்ந்தே ஒன்றாக வசிக்கும் பண்பை பெற்று இருக்கிறது

கருவிலேயே கருவை சுமக்கும் பூச்சி - ஸ்ரீ காளீஸ்வரர் செ (Sri Kaleeswarar S) | அசுவுணி அல்லது செடிப்பேன் (Aphid plant lice) - www.bookday.in
கருத்தரிப்பு முறை

செடிப்பேன் பூச்சிகளின் கருத்தரிப்பு முறை சற்று விசித்திரமானது. ஆண் பூச்சிகளின் துணை இன்றி, பெண் பூச்சிகளாலேயே தங்களைப் போன்ற சிறிய பூச்சிகளை உருவாக்க முடியும். பூச்சி உலகத்தில் காணப்படும் பெரும்பாலான பூச்சிகள் முட்டையிடும் பண்பை கொண்டிருக்கும்.

ஆனால், இந்த செடிப்பேன் பூச்சிகள் பாலூட்டிகளை போலவே குட்டிகளை ஈனும் பண்பை பெற்றிருக்கிறது. வெளிவரும் குட்டிப் பூச்சிகளின் வயிற்றிலும் , அடுத்த தலைமுறை பூச்சிகளுக்கான கரு இருக்கும். இது ஒரு சுழற்சி முறையாக அடுத்தடுத்த தலைமுறை பூச்சிகளை தோற்றுவிக்கிறது. இவற்றின் சில இனங்களில், ஒரே சிறிய பூச்சிக்குள் அடுத்தடுத்த பல தலைமுறை பூச்சிகளுக்கான கருக்களும் ஒன்றுக்குள் ஒன்று புதைந்து காணப்படும். இதுபோன்ற இனப்பெருக்க பண்பிற்கு telescope pregnancy என்று பெயர். இதன் மூலம், இனச்சேர்க்கையில் ஈடுபடாமலேயே இந்த பூச்சிகளால் அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்க முடியும்.

எறும்புகளுடன் உறவு

கருவிலேயே கருவை சுமக்கும் பூச்சி - ஸ்ரீ காளீஸ்வரர் செ (Sri Kaleeswarar S) | அசுவுணி அல்லது செடிப்பேன் (Aphid plant lice) - www.bookday.in

இந்தச் செடி பேன் பூச்சிகளின் சில இனங்கள், எறும்புகளுடன் உறவைப் பேணுகின்றன. செடிகளின் தண்டுகளில் இருக்கும் திரவத்தை உட்கொண்டு, ஒருவித தேன் போன்ற திரவத்தை எறும்புகளுக்கு வழங்குகிறது. இதை உட்கொள்ளும் எறும்புகள் இந்த பூச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. இதனால்தான் பெரும்பாலும் தக்காளி செடிகளில் இருக்கும் இந்த பூச்சிகளை எறும்புகள் எதுவும் செய்வதில்லை. இவை தாவரங்களில் வேகமாக பரவுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

பாதிப்பு

இந்த பூச்சிகளால் மனிதர்களுக்கு நேரடியாக பாதிப்புகள் எதுவும் கிடையாது. இருந்த போதிலும் வெறும் கைகளால் தொடும்போது ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், இவை வசிக்கும் தாவரங்களில் இருக்கும் முக்கியமான ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்வதால், தாவரங்களின் இலைகள் சுருங்கி வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் இவை வேகமாக இனப்பெருக்கம் செய்வதால் ஒரு செடியில் இருந்து விரைவாக அனைத்து செடிகளுக்கும் பரவக்கூடியது. இதனால் வேளாண் பரப்புகளில் விளைச்சல் பாதிப்பை இவை ஏற்படுத்தக் கூடியவை.இவற்றை, அளவில் பெரிய பூச்சிகள் உணவாக உட்கொள்கின்றன. இயற்கையின் விந்தையில் கருவிற்குள் கருவை சுமக்கும் செடிப்பேன் பூச்சிகளும் தனித்துவத்தை பெறுவதற்கு தவறுவதில்லை.

எழுதியவர் : 

ஸ்ரீ காளீஸ்வரர் செ (Sri Kaleeswarar S) - www.bookday.in

✍🏻 – ஸ்ரீ காளீஸ்வரர் செ,
முதுகலை இயற்பியல் மாணவர், அறிவியல் பலகை, bookday.in , தமிழ் கம்ப்யூட்டர், கணியம் உள்ளிட்ட இதழ்களுக்கு அறிவியல் கட்டுரைகளை எழுதி வருபவர். அரசு சாராத தொண்டு நிறுவனத்தின் விருப்ப நேர தமிழ் மொழிபெயர்ப்பாளர். பல ஆண்டுகளாக இந்து தமிழ் பத்திரிக்கையின் வாசகர். ஒலிம்பிக் 2024 என்கிற பெயரில் இணைய புத்தகம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *