ஹெலிகாப்டர் பற்றி சுவாரசியத் தமிழில்…ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு | மதிப்புரை: மு.முத்துவேலு

ஹெலிகாப்டர் பற்றி சுவாரசியத் தமிழில்…ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு | மதிப்புரை: மு.முத்துவேலு

இயற்கை இறக்கைகளைக் கொண்டு பறக்கும் தும்பிகளைப் போல எந்திர இறக்கைகளைக் கொண்டு பறக்கும் ஹெலிகாப்டரை எந்திரத் தும்பிகள் என்று பெயரிட்டு இருப்பதே ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு அறிவியல் அறிஞர் மட்டுமல்ல படைப்புத் திறன் மிக்க பன்முக ஆளுமை கொண்டவர் என்பதை நமக்கு வெளிப்படுத்தி விடுகிறது.

நூல், ஹெலிகாப்டர் பற்றியது என்பதால் வாசகர்களைப் பயணிகள் என்று அழைத்து வந்தமருங்கள்! பறப்போம் பதினேழு அத்தியாயங்கள் என்பதில் தொடங்கும் அழகிய இனிய தமிழ் நடை ‘தும்பிகளின் தோட்டங்கள்’ என்று நிறைவு செய்திருக்கும் தலைப்புகளின் வழி வெளிப்படுகிறது.

ஓவ்வோர் அத்தியாயத்தின் முடிவும் ஒரு வினாவோடு முடிவதால் அடுத்த அத்தியாயத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. அந்த வினாவிற்கு விடையாக அடுத்த இதழின் தலைப்பு இருப்பது மிகவும் அருமை. எந்திரத் தும்பிகளுக்கு ‘ஏன் இந்த விசிறிகள்? என்று முதல் அத்தியாயம் முடிந்தால் அடுத்த அத்தியாயத்தின் தலைப்பு ‘வால் விசிறி’ என்று தொடங்குகிறது. இது நூலாக்கத்திட்டத்தின் சிறப்பு.

உலகில் ஹெலிகாப்டர் தோற்றம் கண்டது தொடங்கி அதன் இன்றைய வளர்ச்சி வரை விளக்கியுள்ளார்.

Image

இது ஹெலிகாப்டர் பற்றித் தமிழில் வெளிவரும் முதல் நூல் இதில் அதன் தோற்றம், பாகங்கள், அவற்றின் செயல்பாடு, இயக்கும் விமானியின் பணியும் பங்களிப்பும், பறக்கும் வேகம் என ஹெலிகாப்டர் தொடர்பான அத்தனை அறிவியல் தொழில்நுட்ப விவரங்களையும் நூலாசிரியர் விஞ்ஞானி என்ற நிலையில் நுட்பாமாகவும் அதே நேரத்தில் எல்லா மக்களும் புரிந்து கொள்ளும் முறையிலும் விளக்கியுள்ளார். அவ்வாறு அவர் தமிழில் விமானவியல் தொழில் நுட்பக் கலைச் சொற்களை உருவாக்கும் போது அவற்றிற்கான ஆங்கிலச் சொற்களையும் அடைப்புக்குள் தந்திருப்பது பொருத்தமாக உள்ளது.

சந்தன வீரப்பனைப் பிடிப்பதில் இருந்து, பெங்களூருவில் அடுக்குமாடி மேல்தளப்பரப்பை அளந்தது, வெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காத்தது என்று அனைத்து விதங்களிலும் ஹெலிகாப்டரின் பயன்பாட்டை விளக்கியுள்ளார்.

ஹெலிகாப்டர் என்றால் விமானப்படையில் மட்டும் பயன்படுபவை என்று எண்ணியிருக்கும் நமக்கு அவை முப்படைகளின் பயன்பாட்டிலும் உள்ள பல்வேறு செயல்பாடுகளை ஆசிரியர் விளக்கியிருப்பது வியப்பளிக்கிறது.

இந்த நூலில் ஆசிரியர் உருவாக்கியிருக்கும் அறிவியல் கலைச் சொற்களை எல்லாம் தொகுத்தால் அதுவே ஒரு சொற்களஞ்சியத் தொகுப்பாக அமையும். அந்தக் கலைச் சொற்களில் காது கவசங்கள், ஏவல் தேனன் முதலிய சொல்லாக்கங்கள் ஓரிரு எடுத்துக்காட்டுகள்.

Image
                            ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

விமானவியல் செய்திகளை இவ்வளவு எளிமையாகவும், தெளிவாகவும் தமிழில் எடுத்துக் கூற முடியும் என்பதற்கு இந்நூல் எடுத்துக் காட்டாகும்.

வாசகனுக்கு வலிக்காமல் அறிவியல் எழுதுவது சவாலானது என்று முன்னுரையில் குறிப்பிட்டு தொடங்கியிருக்கும் ஆசிரியர் அதில் வெற்றி பெற்றுள்ளார்.

ஹெலிகாப்டர் குறித்து அவர் திரட்டியிருக்கும் தரவுகளையும், தகவல்களையும் நூலில் காணும் பெட்டிச் செய்திகள் உணர்த்துகின்றன. இந்திரா பார்த்தசாரதி நாவலுக்கு இட்ட தலைப்பில் இருந்து கிரிக்கெட்டில் இடம் பெறும் ஹெலிகாப்டர் ஷாட் வரையிலும், அவை சுவை கூட்டி நிற்கின்றன.
நூலில் காணப்படும் படங்களும், படக்கருத்துக்களும் அறிவியல் கருத்துகளை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ள வழி செய்கின்றன.

விமானவியலின் தொழில்நுட்பமும் பழகு தமிழின் இளமையும் கலந்த இந்நூல் அறிவியலுக்கு புதுவரவு.

இது எல்லோருக்கும் புரியும் எளிமையான அறிவியல்!

தலைப்பு: எந்திரத் தும்பிகள்: ஹெலிகாப்டர் ஓர் அறிமுகம்
ஆசிரியர்: விஞ்ஞானி வி.டில்லிபாபு
வெளியீடு: முரண்களரி / திசையெட்டு
விலை: ரூ 150/-
தொடர்புக்கு: [email protected]

மதிப்புரை:
முனைவர் மு.முத்துவேலு,
தமிழ்ப் பேராசிரியர் (ஓய்வு)
மாநிலக் கல்லூரி, சென்னை.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *