பன்னாட்டு உயிரின வேற்றுமை தினம் (International Day for Biological Diversity) – சிறப்பு கட்டுரை: தேசிய விலங்கும் வந்திடுமோ இல்லம் தேடி…!
– முனைவர். பா. ராம் மனோகர்
இந்தியா என்ற அழகிய நம் நாடு, வெவ்வேறு தட்ப வெப்பநிலை கொண்டு, வேறுபட்ட இயற்கை, வளத்தினை, வெவ்வேறு விதமான வாழிடங்களில் பெற்றுள்ளது. வடக்கில் இமயமலை, வட கிழக்கில் அசாம், மேகாலையா, உட்பட்ட மாநிலங்களில், வேறுபட்ட காடுகள், மேற்கில் ராஜஸ்தான் பாலைவனம், மையத்தில் உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், உட்பட்ட மாநிலங்களில் கங்கை-சிந்து சமவெளி பிரதேசம், குஜராத் முதல் தெற்கே குமரி முனை வரை மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கில், வங்காள விரிகுடா கடற்பகுதி ஒட்டிய டெல்டா சமவெளி பகுதி, மேற்கில் கேரள, கர்நாடக, அரபிக்கடல் கடற்கரை என்று மாறுபட்ட இயற்கை சூழல், தன்னகத்தே, வேறுபட்ட “உயிரின வேற்றுமை “(BIODIVERSITY) வளத்தினை, கொண்டு அமைந்திருக்கின்றன.
இது நம் நாட்டின் சிறப்பு எனில் மிகையில்லை.மேலும் நமது நாட்டின் முக்கிய பெருமை ஆகும். அது இந்திய தேசிய விலங்கு புலி, அதன் முக்கியத்துவம், ஒரு அடர் காட்டுச் சூழலின் உணவு சங்கிலியில், (ECOLOGICALPYRAMID – FOOD CHAIN) முக்கிய ஊன் உண்ணி (CARNIVORE) ஆக விளங்கி வருகின்ற வன விலங்கு ஆகும். அந்த விலங்கின், இனத்தொகை ஆரோக்கியமாக நம் வனங்களில் இருப்பது மிக அவசியம் ஆகும்.
சமீபத்திய 2022-23 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, 3167 புலிகள் நமது நாட்டில் வசித்து வருகின்றதாக அரசு தெரிவித்துள்ளது. இது 2018 ஆம் ஆண்டின் எண்ணிக்கையினை விட (2967) கூடுதல் ஆகும். உலகின், 75% புலிகள், இந்தியாவில் மட்டும் 2.3% நிலப்பரப்பில் வாழ்கின்றன. மேலும் நம் நாட்டில் உள்ள 57 புலிகளுக்கான,காடுகள் (TIGER RESERVES), 79897 ச. கி. மீ பரப்பளவில் அமைந்துள்ளன. ஆனால், இவை பாதுகாப்பான காடுகள் என அரசு கூறி வந்தாலும், அதிக அளவில் மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளாகவே இவை காணப்படும் நிலை வருந்துதற்குரிய ஒன்று ஆகும்.
ஏனெனில் மொத்தம் 3167 புலிகளில், ஏறக் குறைய 60%, மட்டும் அதாவது 1977 புலிகள் காடுகளின், உட்பகுதியில், நிழல் பட கருவிகள் (CAMERA) மூலம் எண்ணிக்கை இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு நாட்டின் வனவிலங்கு வளம் என்பது, வெறும் எண்ணிக்கை புள்ளி விபரத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்மானம் செய்துவிடுவது, மேலோட்டமான தகவல் ஆக இருக்கும். குறிப்பிட்ட வனவிலங்கு பாதுகாப்பு மேலாண்மை பல்வேறு கூறுகள், கொண்ட அளவீடுகள், உள்ளடக்கியது ஆகும். தேசிய புலி பாதுகாப்பு ஆணையம் (NATIONAL TIGER CONSERVATION AUTHORITY) வெளியிட்ட “புலி மற்றும் இணைந்த கொல்லுயிரிகள் மற்றும் அவற்றின் வேட்டை உணவு விலங்குகள் நிலை -2022 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, புலிகள் வாழிடம்,சரியாக கணிக்க இயலாதபடி மாறுபட்டும், சில இடங்களில் மட்டும், காணப்படும் நிலை இருப்பது தெரிகிறது.
மேலும் மத்திய பிரதேச மாநிலத்தில், ரத பாணி, வீரங்கன்னா துர்காவதி புலி காடுகளும், தோல்ப்பூர்-கரெவ்லி புலி காடு ராஜஸ்தான் மாநிலத்திலும், குரு காசி தாஸ்-தாமர் பிங்களா சரணாலயம் சதீஸ்கர் மாநிலத்திலும் புதியதாக 2023-24 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டன. எனவே NTCA 2022 ஆம் ஆண்டு ப்படி கூறியுள்ள புலி கணக்கெடுப்புக்குள் மேற்கூறப்பட்ட நான்கு புதிய காடுகள் சேர்க்கப்படவில்லை. ஆனால் 18 இந்திய மாநிலங்களில் உள்ள 11% மொத்த 53 காடுகள் பரப்பளவில், மட்டுமே 40% புலி எண்ணிக்கை உள்ளது. கார்பட் சரணாலயத்தில் 231 புலிகள், மற்றும் நாகர் ஹோலே காட்டில் 127,பந்தி ப்பூர் சரணாலயத்தில் 126 மற்றும் காசி ரங்கா, பந்தவ் கார் காடுகளில் முறையே 104 எண்ணிக்கை, தமிழ் நாட்டின் முதுமலை காடுகள் 105 புலிகள் பெற்றுள்ளன என தகவல்கள்
தெரிவிக்கிறது.

மேலும் இனத் தொகை தரவுகளின் ஆய்வுப்படி 15அல்லது 28 சதவீத புலிக்காடுகள், ஐந்து முதல் மிகக்குறைவான் எண்ணிக்கையினை மட்டுமே கொண்டுள்ளன. மேற்கு வங்காளத்தின் பக்ஸா, டேம்பா-மிசோரம், பாலமா -ஜார்கண்ட், ஆகிய புலிக்காடுகளில், ஒரு புலி கூட எண்ணிக்கை பதிவாக இல்லை என்பது அதிர்ச்சி தரும் தகவல் ஆகும். சதீஸ் கர் மாநிலத்தில் இந்திராவதி காடு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள, ராம்தார்-விஷ்தாரி காடு, ஆகிய இடங்களில் 2022 ஆம் ஆண்டு புலி கணக்கெடுப்பு நடத்தவில்லை. புலிகள் மட்டும் அல்ல, அனைத்து வன விலங்குகளும் தமக்கு ஏற்ற ஆரோக்கியமான இயற்கைச் சூழல், உணவு போன்றவை தடையில்லாமல், கிடைக்கும் போது, அவற்றின் இனத்தொகையும் சரியான சம நிலையில் இருக்க இயலும். கிட்டத்தட்ட, 1980களின் துவக்கத்தில், என் முதுகலை வன விலங்கியல் கல்வி பட்ட ஆய்வுக்காக, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள முதுமலை சரணாலயத்தில், மசினகுடி என்ற காட்டு கிராமத்தில், தங்கியிருந்த வாய்ப்பு கிடைத்தது.
ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு மேல் அங்கு வன விலங்குகள், குறிப்பாக யானை, கரடி, மான்கள் போன்றவை ஊருக்குள் வருவதும், மக்கள் அச்சம் கொண்டு, எதிர் வினை ஆற்றிய காட்சிகள் என் மனதில் நினைவுக்கு வருகிறது. ஆம், விலங்குகளின் வாழிடமும், மனிதர்கள் வசிக்கும் ஊர்கள், கிராமங்கள் ஒருங்கிணைந்து இருக்கும் போது இது தவிர்க்க இயலாது. அப்போது மனிதர்களும் விலங்குகளை எதிரிகளாக பார்க்கும் நோக்கத்தில், அவற்றை விரட்டி, கோபம் கொள்ள செய்தல், வேட்டை யாட முயற்சி செய்வது நிகழ்கின்றன. வனத்துறை அறிவுரை பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறி பல சமயம், மனித – வனவிலங்கு மோதல் இயல்பாக ஆகிவிட்டது. கடந்த இரு ஆண்டுகளில், பல்வேறு புலிக் காடுகளில், புலிகள் இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 182, 2024 ல் 109, புலி இறப்புகள் நடந்துள்ளன. ஆனால் அவற்றின் இறப்புக்கான காரணங்களையும், சரியான எண்ணிக்கையினயும் அலுவல் ரீதியாக உறுதி செய்யவில்லை என்பது வருத்தம் தரும் செய்தி ஆகும். இத்தகைய நிலை தேசிய விலங்கு என நாம் பெருமையுடன் குறிப்பிடும் புலி, மட்டும் அல்ல, அனைத்து வன விலங்குகளின் எதிர் கால நிலை பற்றி எண்ணும்போது சற்று கவலை கொள்ள தோன்றுகிறது. சரி! எண்ணிக்கை மட்டும் அல்லாது, புலிகள் வசிக்கும் காடுகளின் மேலாண்மை பற்றிய ஆய்வு மற்றும் காலத்திற்கு ஏற்ப, பாதுகாப்பு நடவடிக்கைகள், மீளாய்வு செய்யப்பட்டு அதில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, புலியின் இரை உயிரினங்கள், வேறு காட்டுபகுதிகள், விலங்கியல் பூங்காக்களிலிருந்து, எங்கெல்லாம் புலிகளுக்கு வேட்டை, இரை விலங்குகள் குறைவாக உள்ளதோ அங்கு கொண்டு செல்லப்பட்டன. இம்முறை, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேச மாநிலங்களில் பின்பற்றப்பட்டது. இதன் காரணமாக புலிகளின் இனத்தொகை, மேலாண்மை சரியான முறையில் தொடர்ந்து இருந்ததாக அலுவல் பூர்வ தகவல் கூறுகிறது.மேலும், புலிகளின் வேட்டை இரை விலங்கு (புள்ளி மான்), ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில், குறைந்தது 25 தேவைப்படுகிறது. சராசரியாக ஒரு ஆண்டுக்கு 50 புள்ளி மான்கள், இரையாக, ஒரு புலிக்கு தேவை எனில், அந்த காட்டில் 500 முதல் 600 மான்கள் வசித்து, இனப்பெருக்கம் செய்யும் நிலை இருக்க வேண்டும். ஆனால், இதில் அதிக மனித தலையீடு இருப்பது தவிர்க்க இயலாது. மேலும் வாழிட அழிவு, ஆக்கிரமிப்பு, வேட்டை, உயிரின கடத்தல் போன்ற குற்ற செயல்கள் சவாலாக இருப்பது உண்மை ஆகும்.

எடுத்துக்காட்டாக, ராஜஸ்தான் மாநிலத்தின் முகுந்தரா புலிகாட்டில் 2022 ஆம் ஆண்டு ஒரு புலி மட்டும் இருந்தது. நில்கய் என்ற நீல பசு விலங்குகள் எண்ணிக்கை அங்கு குறைவாகவே இருந்தது (3.59 /ச. கி. மீ), சிங்கரா மான் (2.05/ச. கி. மீ) எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததும், புள்ளி மான்கள், முற்றிலும் இல்லை (NTCA REPORT) தகவல் ஆகும். ஆனால் செயற்கை முறையில், புலிகளுக்கான இரை விலங்குகளை அதிகப்படுத்துவது, பற்றிய கருத்து மாறுபாடு, ராந்தம்பூர் காட்டு விஞ்ஞானி தர்மேந்திர கண்டால் மற்றும் கர்நாடக, “ இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் “என்ற தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் டாக்டர். உல்லாஸ் கரந்த் ஆகியோருக்கு உள்ளது.
அவர்கள் மேற்கண்ட இரை விலங்கு பெருக்க முறை தவிர்த்து, நெடுங்கால மேலாண்மை வழிகளை அரசு மேற்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். அதாவது புலிகளின் வாழிடம் துண்டாதல், வாழிட இழப்பு, கடத்தல், மற்ற மனித தாக்கம் கொண்ட பயமுறுத்தல்கள் பற்றிய ஆய்வு, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகின்றனர். மிக முக்கியமாக பெரும்பாலான புலிக்காடுகளில் சுரங்க பிரச்சினை யால் புலி வாழிடம் பாதிப்பு, சூழல் சிதைவு, கடத்தலின் வேகம் தடுக்க இயலாத நிலை, குறைந்த வனத்துறை பணியாளர்கள் போன்ற குறைபாடுகள் உள்ளன.
அந்நிய தாவரங்களான, லாண்டானா காமிரா, கருவை மரம் குரோமெலியோன் ஒடரெட்டா, போன்ற, பயனில்லா களைத் தாவரங்கள், 20 மாநிலங்களில் 66% இயற்கை பகுதிகளில் ஆக்கிரமித்துள்ளது. தமிழ் நாட்டின் சத்ய மங்கலம் காடுகளில், 37000 ஹெக்டர், இயற்கை பகுதி அந்நிய களை தாவரங்கள் படர்ந்துள்ளது. டேராடுன், இந்திய வன விலங்கு கல்வி மையம் விஞ்ஞானி குரேஷி என்ற தாவர ஆராய்ச்சியாளர் அந்நிய களை தாவர மிகுதியால் புலிகளின், இரை உணவாக உள்ள தாவர உண்ணி மான்கள் போன்றவைகளுக்கு சரியான உணவு இல்லாமல் போகும் நிலை உள்ளது. மிக முக்கியமாக புலிக்காடுகளில் முறையாக வன பணியாளர்கள் நியமனம் இல்லை.
மிசோரம் மாநிலத்தில் 43% பணி இடங்கள் நெடுங்காலமாக காலியாக உள்ள நிலை மிகவும் வருத்தம் தரும் செய்தியாகும். சாஹ் யாத்ரி என்ற புலிகாட்டில் 3 விலங்குகள் மட்டும் உள்ளன. இங்கு கடத்தல், வன பொருட்கள் சேகரிப்பு, வாழிட சிதைவு, காட்டு தீ, எரி பொருள் விறகு சேகரிப்பு, வேட்டை அதிகம் நடைபெறுகிறது. தேசிய கனிம வள வளர்ச்சி கழகம் மூலம் பண்ணா புலிகாட்டில் தலைமையிடம்கொண்டு புலி வாழிட மாற்றம் காண்கிறது. இந்திராவதி, சத்யமங்கலம், அம்ரா பாத் நாகர்ஜுன சாகர், பென்ச், சாஹ் யாத்ரி, ஸ்ரீசைலம் சரிஸ்கா ஆகிய காடுகளிலும் கனிம சுரங்க பிரச்சினைகள் தொடர்கிறது. மேலும் ரயில் பாதைகள், சாலை, மின்சார கம்பி போன்றவற்றாலும் புலி வாழிட பிரச்சனை அதிகரித்து வருகின்றன.
மேற்கண்ட பிரச்சினைகளுக்கு அரசு ஓரளவு உடன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனினும்,உரிய முறையான, ஒவ்வொரு காட்டுக்கும் ஏற்ற அறிவியல் பூர்வ வன மேலாண்மை செயல்பாடுகள் அவசியம் ஆகும். தேசிய விலங்கு என்று பெருமை கொள்ளக் கூடிய புலி ஆங்காங்கே, வாழிட பிரச்சினைகள் சந்திக்கின்ற நிலை, பற்றி பொது மக்கள், குறிப்பாக, அவற்றின் வாழிடங்களை ஒட்டி வசிக்கும் கிராம, நகர மக்கள் உணர்வது நன்று. மீண்டும், மீண்டும் இயற்கை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து மனித குடியிருப்பு பகுதிகள் உருவாகும்போது, “புலிகள் தமது காடுகளை இழந்து, அவை மனித வீடுகளை தேடி வருவதை “ தவிர்க்க இயலாது.
நாளைய நாள் (மே 22, 2025 ) உலக உயிரின வேற்றுமை நாள் (International Day for Biological Diversity)!, வன உயிரினங்களை ரசித்து, வியந்து, மகிழ்ச்சி கொள்வது மட்டும் அல்லாமல் அவற்றை முறையாக, அவற்றின் வாழிடங்களில் வசிக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் அவசியம் என்பதை உணர்வோம்!!
எழுதியவர் :

முனைவர். பா. ராம் மனோகர்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

