ஆகஸ்ட் 26: சர்வதேச நாய் தினம் (International Dog Day) – ஏற்காடு இளங்கோ
உலக அளவில் மனிதர்களால் வளர்க்கப்படும் பிராணிகளில் மிகவும் பாசம் நிறைந்தது நாய் மட்டுமே. அது மட்டுமல்லாமல் மனிதர்களின் விருப்பமான செல்லப்பிராணியாக நாய் விளங்குகிறது. நாய் என்றால் நன்றி உள்ளது. அது நம் மீது பாசம் கொண்டது. மனிதனின் சிறந்த நண்பனாகவும் இருக்கிறது. ஆகவே தங்கள் குடும்ப உறுப்பினராகவே நாயைக் கருதுகின்றனர். நம் வீட்டில் ஆடு, மாடு, மீன், பறவைகள் போன்றவற்றை வளர்த்தாலும் நாய் மட்டுமே நம்முடன் மிகவும் நெருங்கி செல்லமாகப் பழகும்.
நாம் ஏதோ ஒரு ஊருக்குச் சென்று விட்டு, ஒரு நாள் கழித்து வீட்டுக்கு வந்தால் நம்மை கண்டவுடன் வாலை ஆட்டிக் கொண்டு, நம் மீது முன்கால் இரண்டையும் போட்டு அன்பை வெளிப்படுத்தும். நம்மைக் கட்டிப்பிடித்து, புரண்டு, உருண்டு பாசத்தைக் காட்டும். நம் பிரிவை அதனால் தாங்கிக் கொள்ள முடியாது. நாய் எப்போதும் விசுவாசமான துணையாக நமக்கு இருக்கிறது. அது செல்லப் பிராணியாக, சேவை விலங்காக, பாதுகாவலனாக தன் வாழ்நாள் முழுவதும் நமக்காக அர்ப்பணிக்கிறது.
இனங்கள்
நாய்க்கு மிகவும் ஒற்றுமையுள்ள காட்டு விலங்கு ஓநாய் ஆகும். இதற்கு அடுத்தப்படியாக மிக நெருங்கியது குள்ள நரி. நாய் ஓநாயின் வளர்ப்பு வழித்தோன்றல் என அறிஞர்கள் கூறுகின்றனர். ஆதி மக்கள் தம் குகைகளுக்கு ஓநாய் குட்டிகளைக் கொண்டு வந்து வளர்த்தனர். தாம் உணவாக உண்ட விலங்குகளின் இறைச்சி மற்றும் எலும்புகளை குட்டிகளுக்குப் போட்டனர்.
சுமார் 14,000 ஆண்டுகளுக்கு முன்பு பளீஸ்டோசீன் எனப்படும் ஓநாய் இனம் முற்றிலும் அழிந்து போனது. இந்த ஓநாய் குட்டிகள் தான் மனிதனால் வளர்க்கப்பட்ட முதல் நாய் இனம் ஆகும். சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாய்களை மனிதன் வளர்க்கத் தொடங்கினான் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். மனிதன் விவசாயம் செய்ய தொடங்கிய பிறகு இந்த நாய்களும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்டு வளரும் திறனைப் பெற்றது.

கார்ல் லின்னேயஸ் என்பவர் 1758 ஆம் ஆண்டில் இந்த இனத்திற்கு கேனிஸ் பேமிலியாரிஸ் (Canis familiaries) என்ற அறிவியல் பெயரைச் சூட்டினார். கேனிஸ் என்ற லத்தீன் வார்த்தைக்கு நாய் என்று பொருள்படும். இன்று உலகளவில் 350 க்கும் மேற்பட்ட நாய் வகைகள் உள்ளன. அவை உருவம், அளவு, நிறம் என பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இருப்பினும் இவை அனைத்தும் கேனிஸ் பேமிலியாரிஸ் என்னும் ஒரே இனத்தின் வேறுபாடுகளாகும்.
நாய் எந்த இனத்தைச் சேர்ந்தது எனச் சான்று வழங்கும் உலகளாவிய அமைப்பு “கென்னல் கிளப்” ஆகும். இந்த அமைப்பு இது வரை 350 நாய் இனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. நவீன நாய் இனங்களை மனிதன் 200 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினான். இது நாய்களின் புறத்தோற்றத்தில் வேறுபாடுகளைக் கொண்டு வந்தது. கடந்த 200 ஆண்டுகளில் பல நிறுவனங்களிடம் இருந்து இந்த நாய் இனங்கள் பெறப்பட்டன. மனிதர்களால் இவை செயற்கைத் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டன.
நாய்
நாய்களின் உயரம் மற்றும் எடை ஆகியவை அதன் இன வகைக்கு ஏற்ப மாறுபடுகிறது. நாய்களில் மிகச் சிறியது சிஹுவாஹுவா (Chihuahua) ஆகும். இது 8 முதல் 23 சென்டிமீட்டர் உயரமும்,1 முதல் 3 கிலோ எடையும் கொண்டது. நாய்களில் மிகப் பெரியது கிரேட் டேன் (Great Dane) என்பதாகும். இது 71 முதல் 90 சென்டிமீட்டர் உயரமும், 50 முதல் 79 கிலோ எடையும் கொண்டது.

நாய்கள் பொதுவாக சாம்பல், மஞ்சட் பழுப்பு, செம்பழுப்பு, வெள்ளை போன்ற நிறத்தில் இருக்கும். இதன் மீது பட்டையோ, கோடோ, வேறு குறிகளோ இல்லாமல் இருக்கும். ஆனால் மனிதனால் படைக்கப்பட்ட நாய்களில் மட்டுமே பட்டை, கோடு மற்றும் புள்ளி முதலியவற்றைக் காணலாம். பல நாய் இனங்களில் முடிகள் குறைவாக இருக்கும். ஆனால் சில இனங்களில் மிகவும் நீண்ட, அடர்த்தியான மூடிகள் உள்ளன. இந்த நாய்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகானவை.
நாய் விரைவாக ஓடுவதற்கேற்ப அதன் கால்கள் அமைந்துள்ளன. முன் கால்களில் 5 விரல்களும், பின் கால்களில் 4 விரல்களும் உள்ளன. நாயின் தாடைகளும், பற்களும் இரையை அழுத்தமாகப் பிடிப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. நீண்ட தாடையில் 42 பற்கள் உள்ளன.
மனிதர்களை விட நாய்கள் இருட்டில் நன்றாகப் பார்க்கும். ஆனால் அவை நம்மை விட குறைவான வண்ணப் பார்வையைக் கொண்டிருக்கும். மனிதர்களை விட 4 மடங்கு ஒலிகளைக் கேட்கும் திறன் கொண்டது. இதற்கு மோப்ப சக்தி அதிகம். வாசனை உணர்வு மனிதனை விட 10,000 முதல் 1,00,000 மடங்கு சக்தி வாய்ந்தது.
நாய்களுக்கு மனிதனைப் போல் வியர்வை உண்டாவதில்லை. வெயிலில் வேகமாக ஓடி வரும் நாய் தனது நாக்கை நீளமாகத் தொங்கப் போடும். அப்போது நாக்கு வழியாக உமிழ் நீர் சொட்டும். இதன் மூலம் உடலில் இருக்கும் வெப்பம் வெளியேறும். மேலும் தனது மூக்கு மற்றும் பாதம் வழியாகவும் வியர்வை வெளிப்படும்.
நாயின் வால் என்பது முதுகெலும்பு நெடுவரிசையின் முனைய இணைப்பாகும். இது 5 முதல் 15 முதுகெலும்புகளின் சரமாகும். இது தசைகள் மற்றும் தோலால் மூடப்பட்டிருக்கும். வால் உடலின் சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது. நாய்க்கு அச்சம் ஏற்பட்டால் தன் வாலைப் பின்னங்கால்களுக்கு இடையில் மடித்துக் கொள்ளும். இது எதிரிப் பிராணி தன் வாலைக் கவ்விப் பற்றிக் கொள்ளாமல் தடுக்கும் தந்திரமாகும்.
நாய்களால் 250 வார்த்தைகள் மற்றும் சைகைகள் வரை அடையாளம் காண முடியும். நாய்களும் கனவு காண்பதாகக் கூறப்படுகிறது. நாய்கள் அனைத்தும் குரைக்கும். ஆனால் ஆப்பிரிக்காவின் பாசன்ஜி என்ற ஒரு நாய் இனம் மட்டும் குரைக்காது. அது தன்னுடைய உணர்வுகளை ஒரு வகை ஒலியாக வெளிப்படுத்தும்.
நாய் படுப்பதற்கு முன்பு இரண்டொரு தடவை தன்னையே சுற்றிக் கொண்டு விட்டுப் படுக்கும். இதன் முன்னோர்கள் புல்வெளியில் உயரமாக வளர்ந்திருக்கும் புல்லை சமப்படுத்த, இரண்டு மூன்று தடவை சுற்றிப் புல்லை மடக்கி மிதித்து அந்த இடத்தில் படுத்துக் கொள்ளும். இது தன்னை வெளியே தெரியாமல் மறைத்துக் கொள்ளும். இந்த பழக்கம் தற்போதும் நாய்களிடம் தொடர்கிறது. சில நாய்கள் இரவில் ஊளையிடும். இதுவும் தன்னுடைய முன்னோர்களிடமிருந்து வந்த பழக்கமாகும்.
நாய் ஒரு வருடத்திற்குள் பருவம் அடையும். இதன் கர்ப்ப காலம் 63 நாட்கள் ஆகும். ஒரு தடவை 2 முதல் 4 குட்டிகள் வரை போடும். சில நாய் இனங்கள் 8-12 குட்டிகள் போடுவதும் உண்டு. குட்டிகள் 10 நாட்கள் கழித்த பிறகு கண் திறக்கும். நாயின் சராசரி ஆயுட்காலம் 12.7 ஆண்டுகள் ஆகும். ஆனால் சில நாய்கள் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
ஆபத்தான நாய்கள்
சில நாய்கள் மிகவும் ஆபத்தானவை. அவை வீடுகளில் பழக்கப்பட்ட போதிலும், சில சமயம் வளர்ப்பவர்களையும் கடித்துக் குதறிவிடும். ராட்வீலர் (Rottweiler) என்ற நாய் கால்நடைகளை மேய்ப்பதற்காக வளர்க்கப்படுகிறது. இதன் உடல் தடிமனானது. தாடைகள் மிகவும் சக்தி வாய்ந்தது. யாரை வேண்டுமானாலும் தாக்கும். டாபர்மேன் பின்ஷர், பிட்டில் டாகோ அர்ஜெண்டினா, டோசா, பிரேசிலியன் மாஸ்டிஃப், ப்ரெஸா கனாரியோ மற்றும் காகசியன் ஓவ்சர்கா (Caucasian Ovcharka) போன்ற நாய்கள் ஆபத்தானவை.
இந்த நாய்கள் சிங்கத்தை எதிர்த்தும் போராடும். ஒரு குத்துச்சண்டை வீரர் ஆக்ரோஷமாக தாக்குவது போல், இதன் தாக்குதல் இருக்கும். சில நாடுகளில் இதுபோன்ற ஆபத்தான நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தெரு நாய்கள்
உலகளவில் சுமார் 900 மில்லியன் நாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிகமான நாய்களைக் கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. சீனாவில் 110 மில்லியன் நாய்கள் சொல்லப்பிராணியாக வளர்க்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் 65.1 மில்லியன் குடும்பங்கள் குறைந்தது ஒரு நாயையாவது வைத்திருக்கிறார்கள்.
உலக அளவில் தெரு நாய்களின் எண்ணிக்கை சுமார் 200 மில்லியன் ஆகும். இந்தியாவில் 20 மில்லியன் தெரு நாய்கள் உள்ளன. தெரு நாய்களுக்கு வசிப்பதற்கு எனத் தனி இடம் கிடையாது. இவைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை. போதிய பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதியின்றி நோய்க்கு ஆளாகின்றன. எந்த ஆதரவும் இல்லாமல் தெருவில் சுற்றித் திரிகின்றன.
சர்வதேச நாய் தினம்

சர்வதேச நாய் தினத்தை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் கொலின் பைஜ் (Colleen Paige) ஆவார். இவர் ஒரு விலங்கு நல வழக்கறிஞர், பாதுகாவலர், நாய் பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு மில்லியன் ஆதரவற்ற நாய்களைக் காப்பாற்றியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஷெல்ட்டி (Sheltie) என்ற 10 வயது நாயை தத்தெடுத்தார். அதற்கு புட்டி (Buddy) எனப் பெயரிட்டு வளர்த்தார். அந்த நாயை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். இந்த நாயை அவர் தத்தெடுத்ததன் நினைவாக 2004 ஆண்டில் சர்வதேச நாய் தினம் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஆகஸ்ட் 26 அன்று சர்வதேச நாய் தினம் உலகளவில் கொண்டாடப்படுகிறது.
மனிதர்களாகிய நமக்கு நிபந்தனையற்ற அன்பை வழங்குவதில் நாய் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் வாழ்க்கையை முழுமையாகவும், மகிழ்ச்சியாகவும் ஆக்குகிறது. ஆகவே நாய்களை கவனித்துக் கொள்ள மக்களை ஊக்குவிப்பது இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும். நம் வாழ்வில் கொண்டுவரும் அன்பு, விசுவாசம் மற்றும் தோழமையைக் கொண்டாடும் ஒரு சிறப்பு நிகழ்வாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் ஆதரவற்ற நாய்களைத் தத்தெடுப்பது, சத்தான உணவு வழங்குவது, பாதுகாப்பான மற்றும் அன்பான சூழலை வழங்குவதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பயன்கள்
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் நாயை செல்லப்பிராணியாக வளர்கின்றனர். பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் முதியோர்களுக்கும், ஊனமுற்றோருக்கும் உதவி செய்கிறது. போலீஸ் நாய்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது. பனியில் புதைந்தவர்கள் மற்றும் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றும் வேலைகளிலும் நாய் ஈடுபடுகிறது.
கன்னிவெடிகளைக் கண்டுபிடித்தல், வேட்டைக்கு உதவுதல், கால்நடைகளைப் பராமரித்தல், வீட்டுக்குப் பாதுகாப்பு வழங்குதல் போன்ற பணிகளைச் செய்கிறது. பனிப் பிரதேசங்களில் சாமான்களைச் சுமந்து செல்லவும், வண்டி இழுக்கவும் நாய் உதவுகிறது. போர்க் காலங்களில் தூது செல்லுதல், காயம்பட்ட வீரர்களுக்கு உணவளித்தல் போன்ற பல அரிய செயல்களையும் செய்கிறது. மேலும் நாய்களுடன் பொழுதைக் கழிக்கும் போது மன அழுத்தம் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


நாய்கள் தினம் பற்றி விரிவான தகவல்களைக் கொண்ட கட்டுரையாக உள்ளது. வாழ்த்துகள் ஏற்காடு இளங்கோ ஐயா.