இந்தியாவின் ஊதியச் சட்ட விதிகளில்  உள்ள ஓட்டைகளை  சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கிறது – ச.வீரமணி

இந்தியாவின் ஊதியச் சட்ட விதிகளில் உள்ள ஓட்டைகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கிறது – ச.வீரமணி

புதுதில்லி:

மத்திய அரசு, நாட்டில் உள்ள தொழிலாளர் நலச்சட்டங்களை அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஊதியச் சட்ட விதிகள் (Wage Code Rules) என்று கொண்டு வந்திருப்பதில் உள்ள ஓட்டைகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் சுட்டிக்காட்டி இருக்கிறது.

மத்திய அரசு இந்தியாவில் புதிய ஊதியச் சட்டம் தொடர்பாக வரைவு விதிகள் வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக மக்களிடமிருந்து கருத்துக்களைப் கேட்டறிந்தபின் விரைவில் அறிவிக்கை வெளியிடவும் இருக்கிறது.

இந்த வரைவு விதிகளில் உள்ள ஓட்டைகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் வெளியிட்டிருக்கிறருது. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் சார்பாக “விவாத ஆவணம்: ஊதியச் சட்டம் மற்றும் விதிகள்” (“Discussion Paper: Wage Code and Rules”) என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஊழியர்களின் ஊதியம் எந்தெந்த அம்சங்களின்கீழ் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கம் எதுவும் இல்லை என்றும், அதேபோல் அதை அவ்வப்போது எப்படி மாற்றியமைத்திட வேண்டும் என்பது குறித்தும், அதனை வீட்டில் வேலை செய்திடும் தொழிலாளர்களுக்கு எப்படிப் பிரயோகிப்பது என்பது குறித்தும் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறது.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தில் ஊதியம் தொடர்பான நிபுணரான சேவியர் எஸ்டுபிணன் (Xavier Estupinan) மற்றும் வி.வி.கிரி தேசிய தொழிலாளர் நிலையத்தில் பணியாற்றுமை அனூப் சத்பதி, மத்திய பொருளாதாரப் பணிக்குழு (Indian Economic Service cadre) அதிகாரியான பிகாஷ் கே. மாலிக் முதலானவர்கள் இந்த ஆவணத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

ஊதியங்கள் சட்டம், ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்திட வேண்டும். இதனை நிர்ணயிப்பதற்காக மத்திய தொழிலாளர்நல அமைச்சகம் பொது மக்களிடமிருந்தும், வல்லுநர்களிடமிருந்தும் கருத்துக்களை கோரியிருக்கிறது. அவற்றைப் பெற்று, ஆய்வு  செய்து, பின்னர் அது இறுதி விதிகளை அறிவித்திட வேண்டும்.

வீடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும்  அரசாங்கம் நிர்ணயிக்கும் விகிதத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வரைவு விதிகள், வீடுகளில் வேலை பார்த்திடும் தொழிலாளர்களுக்கு (domestic workers), வேலையளிப்பவர் – வேலைசெய்பவர் ஆகியோருக்கு இடையேயான உறவுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து எதுவும் கூறாது மவுனம் கடைப்பிடித்துள்ளது. இந்தியாவில் தனியார் வீடுகளில் இத்தகைய தொழிலாளர்களுடன் எவ்விதமான எழுத்துபூர்வமான ஒப்பந்தங்களும் கிடையாது.

“எந்தவொரு ஊழியரும் அல்லது  ஊதியம் ஈட்டுபவரும் உலகளாவிய முறையில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள ஊதிய விதிகளுக்கு உட்பட்ட முறையில் ஊதியம் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். இந்த அடிப்படையில் வீட்டுவேலை செய்திடும் தொழிலாளர்களுக்கும் ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்,” என்று அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

வீடுகளில் வேலைக்கு வைக்கப்படும் தொழிலாளர்களிடமும் ஒருவிதமான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டும் என்று சத்பதி கூறினார்.

மேலும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பாக எவ்விதமான ஃபார்முலாவும் கூறப்படவில்லை என்றும் ஆவணம் சுட்டிக்காட்டி இருக்கிறது. மாறாக விதிகள் பரிந்துரைத்திருப்பது என்னவெனில், முத்தரப்புக்குழுவால் உணவு, உடை, வீட்டுவசதி செலவுகள் மற்றும் இதர காரணிகள் அடிப்படையில் பொருத்தமான ஊதியம் கணக்கிடப்படும் என்பது மட்டுமேயாகும்.

“இந்தியாவின்  ஊதிய விதிகளை நிர்ணயிக்கும்போது, இந்தியா, குறைந்தபட்ச ஊதியம் முறைப்படுத்தலில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டுவந்த அனுபவத்தையும், கடந்த 24 ஆண்டுகளாக அமல்படுத்தி வந்த தேசிய அளவிலான அடிப்படை குறைந்தபட்ச ஊதிய (NFLMW-National Floor Level Minimum Wage) அனுபவத்தையும், அடிப்படைக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யும்போது கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட முடியாது,”  என்றும் ஆவணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

சத்பதி, 2018இல் வல்லுநர் குழு ஒன்றிற்குத் தலைமை வகித்திருந்தார். இந்தக் குழு, வயதுவந்த ஒரு நபர் நாள்தோறும் உட்கொள்ளவேண்டிய கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச்சத்துக்களின் குறிப்பிட்டட அளவுகளுடன் உண்ணவேண்டிய சரிவிகித உணவு குறித்தும், அதற்காகும் உணவு செலவினங்களைக் கணக்கிடுவது தொடர்பாகவும் ஒரு ஃபார்முலாவைத் தயாரித்து அளித்திருந்தது.

மேலும் இந்தக்குழு, உடைகள், கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான செலவினங்களையும் சேர்த்திருந்தது. பின்னர் இது வீட்டிலுள்ளவரின் மனைவி, இரு குழந்தைகள் (இரு குழந்தைகள் ஒரு வயது வந்தவருக்கான செலவிற்குச் சமம்) மற்றும் வயது முதிர்ந்த பெற்றோர்கள் (இருவர் இருந்தால் அவர்கள் 0.6 வயதுடையவராக எடுத்துக்கொள்ளப்படுவார்கள்). இவ்வாறு கணக்கிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை 3.6 பங்காக பெருக்கிட வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இதன் அடிப்படையில் அக்குழு 2018 ஜூலை விலைவாசிக் குறியீட்டெண் அடிப்படையில் நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் நபர் ஒருவற்கு 375 ரூபாய் என்று பரிந்துரைத்தது. ஆயினும் இந்த அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், அரசால் முன்மொழியப்பட்டுள்ள வரைவு விதிகளில், அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும்  என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

(நன்றி: தி டெலிகிராப்)  

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *