உலக புலிகள் தினம் (International Tiger Day) - ஏற்காடு இளங்கோ | சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) | புலிச் சிங்கம் - டைகன் (Tiger Lion - Tigon) - https://bookday.in/

உலக புலிகள் தினம் (International Tiger Day) – ஏற்காடு இளங்கோ

உலக புலிகள் தினம் (International Tiger Day)

நமது கிரகத்தில் வாழக்கூடிய மிகச் சிறந்த விலங்குகளில் ஒன்று புலி ஆகும். இது பார்ப்பதற்கு மிக அழகாகவும், கம்பீரமாகவும் காணப்படும். விலங்குகளை வேட்டையாடி உண்பதால் இது கொடூர விலங்காகக் கருதப்படுகிறது. இது அடர்ந்த வனப்பகுதியில் அமைதியாக வாழ விரும்புகிறது.

பூமியில் வாழக்கூடிய மிகப்பெரிய வேட்டையாடி உயிரினமாக புலி கருதப்படுகிறது. சிங்கத்துடன் ஒப்பிடும்போது சராசரியாக புலிகள் சிறியதாக தெரியும். ஆனால் நன்கு வளர்ந்த புலிகள் சிங்கங்களை விட பெரியதாக இருக்கும். புலிகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உலக புலிகள் தினம் (World Tiger Day) கடைபிடிக்கப்படுகிறது.

புலி இனம்

புலி பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இதன் அறிவியல் பெயர் பந்தேரா டைகரிஸ் (Panthera tigris) என்பதாகும். கார்ல் லின்னேயஸ் என்பவர் 1758 ஆம் ஆண்டில் புலியை அறிவியல் பூர்வமாக விவரித்து எழுதினார். இவர் இதற்கு பெலிஸ் டைகரிஸ் எனப் பெயரிட்டார்.

அதன் பிறகு விலங்கியல் அறிஞர் ரெசினால்ட் இன்னஸ் போகாக் என்பவர் பெரும் பூனைகளை வகைப்படுத்தினார். இதன் அடிப்படையில் பந்தேரா டைகரிஸ் என்ற பெயரை 1929 ஆம் ஆண்டில் சூட்டினார். ஆகவே புலியானது பெரும் பூனை இனத்தின் கீழ் இடம் பெற்றுள்ளது.

புலிகளில் 9 துணை இனங்கள் இருப்பதாக இருபதாம் நூற்றாண்டில் நம்பப்பட்டது. இவற்றில் 3 துணை இனங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. வாழ்ந்து கொண்டிருக்கும் புலிகளின் உருவவியல், சுற்றுச்சூழல் மற்றும் மரபியல் பண்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் மரபணு ரீதியாக 6 துணை இனங்கள் இருப்பதாக 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

ஆசியாவின் நிலப்பரப்பில் வங்காளப் புலி, மலேசியப் புலி, இந்தோசீனப் புலி, சைபீரியப் புலி மற்றும் தென் சீனப் புலி என 5 துணை இனங்கள் வாழ்கின்றன. மற்றொரு துணை இனம் சுந்தா தீவுகளில் வசிக்கிறது. இது சுமத்ரான் புலி ஆகும். இந்த 6 துணை இனங்களில் மிக முக்கியமானது வங்காளப் புலியாகும்.

வங்காளப் புலி

வங்காளப் புலி இந்திய துணைக் கண்டத்தில் வாழ்கிறது. ராயல் பெங்கால் புலி (Royal Bengal Tiger) என்றும் அழைக்கப்படுகிறது. இது தலை முதல் வாலின் நுனி வரை சராசரியாக 10 அடி நீளம் கொண்டது. ஆண் புலி 200 முதல் 300 கிலோ எடை வரை இருக்கும். பெண் புலி ஆண் புலியை விட சிறியது. பெண் புலி 110 முதல் 180 கிலோ வரை எடையைக் கொண்டிருக்கும்.

புலிக்கு பிடரி மயிர் கிடையாது. முதிய ஆண் புலிகளின் கன்னத்தில் உள்ள மயிர் கிருதா போலச் சற்று நீண்டும், பரவிக் கொண்டும் இருக்கும். புலிகளுக்கு வலிமையான தசைகளும், குட்டையான கால்களும், அகன்ற பாதங்களும் உள்ளன. முன் கால்கள் மிகவும் வலிமையானவை. ஒரே குத்தில் ஒரு மிருகத்தைக் கொல்லவோ அல்லது எலும்புகளை உடைக்கவோ முடியும்.

உலக புலிகள் தினம் (International Tiger Day) - ஏற்காடு இளங்கோ | சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) | புலிச் சிங்கம் - டைகன் (Tiger Lion - Tigon) - https://bookday.in/
வங்காளப் புலி (Royal Bengal Tiger)

புலியின் முன் கால்களில் ஐந்து விரல்களும், பின் காலில் நான்கு விரல்களும் இருக்கும். புலிகள் தங்கள் நகங்களை உள்ளிழுக்கும் உரைக்குள் வைத்துக் கொள்ளும். வளைந்த நகங்கள் 10 சென்டிமீட்டர் நீளத்தை எட்டக்கூடியது. இது வேட்டையாடுவதற்குத் தேவைப்படும் போது மட்டுமே வெளியே எடுப்பதால் கூர்மையாக இருக்கும். புலிகளுக்கு பார்க்கும் திறன் அதிகம். இரவில் மனிதனை விட 6 மடங்கு சிறப்பாக பார்வைத் தெரியும்.

இதன் காதுகள் வட்டமானவை. இதற்கு நன்கு கேட்கும் திறனும் உண்டு. புலிகளுக்கு 30 மிகவும் உறுதியான பற்கள் உள்ளன. மேலும் சற்று வளைந்த கோரைப் பற்களையும் கொண்டுள்ளன. அவை இறைச்சியை நன்கு கிழிக்க உதவுகின்றன.

புலிகளின் உடலில் கோடுகள் காணப்படும். இந்தக் கோடுகள் அதன் தோலிலும் காணப்படும். உரோமங்கள் மொட்டை அடிக்கப்பட்ட பிறகும், அவற்றின் கோடுகளைப் பார்க்க முடியும். மனிதனின் கைரேகைகளைப் போலவே, இரண்டு புலிகளுக்கு ஒரே மாதிரியான கோடுகள் இருப்பதில்லை. மேலும் ஒரே புலியின் இரண்டு பக்கங்களிலும் கூட வேறுபடும்.

‌புலியின் உடலில் உள்ள கோடுகள் பட்டை பட்டையாக காணப்படும். இது மஞ்சள் முதல் வெளிர் ஆரஞ்சு நிறத்தைக் கொண்டுள்ளது. இதில் அடர் பழுப்பு முதல் கருப்பு நிற கோடுகளைக் கொண்டிருக்கும். இதன் வயிறு மற்றும் கால்களின் உட்புற பாகங்கள் வெண்மையாக இருக்கும். மேலும் வால் இளஞ்சிவப்பு நிறத்தில் கருப்பு வளையங்களுடன் காணப்படும். புலியின் உடல் மீது 21 முதல் 29 கோடுகள் இடம் பெற்றிருக்கும்.

உணவு

புலிகள் காடுகளில் வாழ்கிறது. காய்ந்த மரங்கள், நாணல்கள் மற்றும் உயரமான புற்களைக் கொண்ட பகுதிகளில் புலிகள் மறைந்து இருக்கும். உடலில் உள்ள கோடுகள் உருமறைப்பிற்கு பெரும் உதவியாக அமைகிறது. புலிகள் புதர்களுக்குப் பின்னால் பதுங்கியிருந்து வேட்டையாட விரும்புகிறது. மேலும் இரவு நேரத்திலேயே வேட்டையாடுகிறது.

புலி மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும். ஆனால் அது குறுகிய தூரங்களுக்கு மட்டுமே சாத்தியம். ஒரு புலி ஒரே தாவலில் 10 அடி தூரம் வரை தாவும். இது எல்லா விதப் பிராணிகளையும் வேட்டையாடும். பெண் யானை, யானைக் கன்று, காட்டு மாடு, காட்டெருமை, மான், காட்டுப் பன்றி, கரடி, முள்ளம் பன்றி, சிறுத்தை ஆகியவற்றை வேட்டையாடி உண்ணும்.

பசி அதிகரிக்கும் போது கோழி, ஊர்வனம், செத்துக் கிடக்கும் பிராணியின் இறைச்சி ஆகியவற்றை தின்னும். இரை கிடைக்கவில்லை என்றால், சில சமயம் கிராமங்களில் இருந்து மாடு, கன்றுகளைத் தூக்கிக் கொண்டு போய்விடும். வாரக் கணக்கில் பசியுடன் இருக்கும் ஒரு புலியால், ஒரே அமர்வில் 22 முதல் 32 கிலோ இறைச்சியை உண்ண முடியும்.

ஆயுட்காலம்

பெண் புலி ஒரு முறை 2 முதல் 3 குட்டிகளை ஈனும். குட்டிகளைப் பாதுகாப்பான இடத்தில், பொதுவாக குகைகளில் ஈனுகிறது. பிறந்த குட்டிகளுக்கு கண் தெரியாது. குட்டிகள் தங்கள் தாயின் வாசனையைப் பின்பற்றுகின்றன. குட்டிகள் 2 ஆண்டுகள் வரை தாயுடனே இருக்கின்றன. அதன் பிறகு குட்டிகள் தனியே பிரிந்து சென்று வாழ தொடங்குகின்றன.

புலி குட்டிகளை கழுதைப் புலி, சிறுத்தை மற்றும் காட்டு நாய் போன்ற விலங்குகள் வேட்டையாடி கொன்று உண்ணுகின்றன. சில இளம் புலிக் குட்டிகள் உணவுப் பற்றாக்குறையாலும் இறக்கின்றன. நன்கு வளர்ந்த புலியை காட்டு விலங்குகள் வேட்டையாடுவது கிடையாது. ஏனென்றால் புலி உருவத்தில் பெரியது மற்றும் வலுவானது.

புலிகள் தனித்து வாழவே விரும்புகின்றன. ஒரே வயதுடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட புலிகள் காடுகளில் ஒன்றாக சுற்றித் திரிவது மிக அரிது. வனப்பகுதியில் புலிகள் தனியாக நிதானமாக நடந்து செல்லும். புலிகள் பொதுவாக மரம் ஏறுவது கிடையாது. ஆனால் ஆபத்து நேரிடும் போது மரத்தில் ஏறும். மேலும் புலிகளுக்கு நன்றாக நீந்தத் தெரியும். பல மணி நேரம் நீரில் நீந்தி விளையாடும். இதன் ஆயுட்காலம் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.

வெள்ளைப் புலி
உலக புலிகள் தினம் (International Tiger Day) - ஏற்காடு இளங்கோ | சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) | புலிச் சிங்கம் - டைகன் (Tiger Lion - Tigon) - https://bookday.in/
வெள்ளைப் புலி (White tiger)

இதன் ரோமங்கள் வெள்ளை நிறமாகும். அதில் கருப்பு அல்லது கரும்பழுப்பு கோடுகள் காணப்படும். இந்த புலியின் கண்கள் நீல நிறமாக இருக்கும். 10,000 புலிகளில் ஒன்றில் மரபணு பிறழ்வு ஏற்படலாம். இதன் காரணமாக வெள்ளைப் புலிகள் பிறக்கின்றன. இந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட வெள்ளைப் புலிகள் இருக்கின்றன. இவற்றை நாம் மிருகக்காட்சி சாலைகளில் காணலாம்.

கலப்பினங்கள்

சிங்கம் மற்றும் புலிகளுக்கு இடையே இனப்பெருக்கம் செய்வதன் மூலம் கலப்பினங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு ஆண் சிங்கத்திற்கும்,ஒரு பெண் புலிக்கும் பிறந்த விலங்கிற்கு லைகர் எனப் பெயரிட்டனர். அதாவது சிங்கம்(Lion) மற்றும் புலி (Tiger) ஆகியவற்றின் கலப்பிற்கு லைகர் (Li+ger – Liger) எனப் பெயர் சூட்டப்பட்டது. இது சிங்கப்புலி என அழைக்கப்படுகிறது.

உலக புலிகள் தினம் (International Tiger Day) - ஏற்காடு இளங்கோ | சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) | புலிச் சிங்கம் - டைகன் (Tiger Lion - Tigon) - https://bookday.in/
சிங்கப்புலி அல்லது லைகர் (Liger)

இது சிங்கம் மற்றும் புலியை விட உருவத்தில் பெரியது. ஹெர்குலஸ் என பெயர் வைக்கப்பட்ட ஒரு சிங்கப்புலி 418.2 கிலோ எடை கொண்டுள்ளது. இது பூமியில் வாழும் மிகப்பெரிய பூனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. தற்போது உலக முழுவதும் சுமார் 100 க்கும் மேற்பட்ட சிங்கப் புலிகள் உள்ளன.

ஒரு ஆண் புலிக்கும், ஒரு பெண் சிங்கத்திற்கு பிறந்த கலப்பின சந்ததியை டைகன் என்கின்றனர். அதாவது புலி (Tiger) மற்றும் சிங்கம் (Lion) ஆகியோருக்கு பிறந்த விலங்கின் பெயர் டைகன் (Tig+on – Tigon) ஆகும். இது இரண்டு விலங்குகளின் ஆங்கில பெயரை வெட்டி ஒட்டியதாகும். இது புலிச் சிங்கம் என அழைக்கப்படுகிறது.

தேசிய விலங்கு

இந்தியாவின் தேசிய விலங்கு வங்காளப் புலி ஆகும். தேசிய விலங்கு என்பது தேசத்தின் அங்கீகாரமாக திகழ்கிறது. 1972 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கம் இருந்தது. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில் குறையத் தொடங்கியது. குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்காக 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று புலிகள் திட்டம் தொடங்கப்பட்டது.

உலக புலிகள் தினம் (International Tiger Day) - ஏற்காடு இளங்கோ | சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) | புலிச் சிங்கம் - டைகன் (Tiger Lion - Tigon) - https://bookday.in/
புலிச் சிங்கம் – டைகன் (Tiger Lion – Tigon)

இதன் அடிப்படையில் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வங்காளப் புலி இந்தியாவின் தேசிய விலங்கு அறிவிக்கப்பட்டது. கருணை, வலிமை, சுறுசுறுப்பு, அதன் பிரம்மாண்டமான தோற்றம் மற்றும் மகத்தான சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய விலங்காக புலி தேர்வு செய்யப்பட்டது. இதன் பிறகு புலிகளைப் பாதுகாக்கும் செயல்பாடுகளில் அரசு ஈடுபட்டது.

உலக புலிகள் தினம்

ஆசியா முழுவதும் வங்காளப் புலிகள் 1900 ஆம் ஆண்டில் 1,00,000 என்ற எண்ணிக்கையில் இருந்தன. வரலாற்று ரீதியாக புலிகள் ஒரு காலத்தில் ஆசியா முழுவதும் பரவலாக வாழ்ந்தன. 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட அழிவு காரணமாக புலிகளின் எண்ணிக்கை 95 சதவீதம் குறைந்தது. அதாவது 2005 ஆம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை 4,000 மட்டுமே இருந்தன. மேலும் 2010 ஆம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை 3,200 ஆக குறைந்தது.

இதனால் புலிகள் வாழக்கூடிய 13 நாடுகள் புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என முடிவு செய்தனர். 2010 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் செயின் பீட்டர்ஸ் பார்க் நகரில் சர்வதேச புலிகள் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 13 நாடுகள் கலந்து கொண்டன. புலிகளின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பது, புலிகளைப் பாதுகாப்பது, புலிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று உலக புலிகள் தினம் கடைபிடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இருட்டிப்பாக்குவது என திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த குறிக்கோளை அடையும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று சர்வதேச அளவில் உலக புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக புலிகள் தினம் (International Tiger Day) - ஏற்காடு இளங்கோ | சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) | புலிச் சிங்கம் - டைகன் (Tiger Lion - Tigon) - https://bookday.in/
வங்காளப் புலி (Bengal Tiger)
புலிகள் காப்பகங்கள்

இந்தியாவில் 53 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில் 14 புலிகள் காப்பகங்கள் உலகளாவிய பாதுகாப்பு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. அவை அசாமில் உள்ள மனாஸ், காசிரங்கா மற்றும் ஓராங்; மத்தியப் பிரதேசத்தில் சத்புரா, கன்ஹா மற்றும் பன்னா; மகாராஷ்டிராவில் பென்ச், பீகாரில் வால்மீகி புலிகள் காப்பகம்; உத்திரபிரதேசத்தில் துத்வா; மேற்கு வங்கத்தில் சுந்தர்பன்; கேரளாவில் பரம்பிக்குளம்; கர்நாடகாவில் பந்திப்பூர்; தமிழ்நாட்டில் முதுமலை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகும்.

தமிழ்நாட்டில் களக்காடு முண்டந்துறை மற்றும் சத்தியமங்கலம் என மேலும் இரண்டு புலிகள் காப்பகங்கள் உள்ளன. தற்போது இந்தியாவில் புலிகள் காப்பகங்கள் சுமார் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

புலிகளின் எண்ணிக்கை

இந்தியாவில் புலிகள் திட்டம் 1973 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட போது புலிகளின் எண்ணிக்கை 268 ஆகும். இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படுகிறது. 2006 ஆம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை 1,411 ஆகும். 2010 இல் 1,706, 2014 இல் 2,226, 2018 இல் 2,967 மற்றும் 2022 இல் 3,167 என புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 264 ஆகும். இது 2022 ஆம் ஆண்டில் 306 ஆக அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு

மரம் வெட்டுதல், பாதைகள் அமைத்தல், விவசாயம் போன்ற காரணங்களால் புலிகள் தங்கள் வாழ்விடங்களை இழந்து வருகிறது. தற்போது புலிகளின் வாழ்விடம் என்பது சுமார் 7 சதவீதம் மட்டுமே உள்ளது. புலிகளின் எலும்பு, தோல் மற்றும் பிற உறுப்புகளுக்காக வேட்டையாடப்படுகிறது. இது போன்ற காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டன.

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் புலியானது அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய பூங்காக்களில் புலிகள் சுதந்திரமாக வாழ முடிகிறது. புலிகளைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல. இதில் மக்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். புலிகளை நேசிப்போம், புலிகளைப் பாதுகாப்போம்.

கட்டுரையாளர்:-

உலக புலிகள் தினம் (International Tiger Day) - ஏற்காடு இளங்கோ | சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) | புலிச் சிங்கம் - டைகன் (Tiger Lion - Tigon) - https://bookday.in/

ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *