நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1910 ஆகஸ்ட் 27 அன்று கோபன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் மகளிர் மாநாட்டில் புரட்சி வீராங்கனை கிளாரா ஜெட்கின், தன் சக தோழர் அலெக்சாண்ட்ரா கொல்லன்டாய் மற்றும் இதர தோழர்களுடன் இணைந்து ‘‘சர்வதேச மகளிர் தினம்’’ அனுசரிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
வரலாறு படைத்திட்ட தீர்மானம்
தீர்மானத்தில் கூறப்பட்டிருந்ததாவது: ‘‘ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்ற அரசியல் மற்றும் வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர் வர்க்கத்தின் கீழ் இயங்கும் தொழிற்சங்க ஸ்தாபனங்களின் ஒத்துழைப்புடன் அனைத்து நாடுகளிலும் உள்ள சோசலிஸ்ட் மகளிர், ஒவ்வோராண்டும் மகளிர் தினத்தைக் கொண்டாடுவார்கள். அதன் தலையாய குறிக்கோள், மகளிர்க்கான வாக்குரிமையைப் பெற உதவுவதேயாகும். இந்தக் கோரிக்கையை, சோசலிஸ்ட் கட்டளைக்கிணங்கப் பெறப்பட வேண்டும். மகளிர் தினம் சர்வதேச குணாம்சத்துடன் அமைந்திட வேண்டும். அதற்கான தயாரிப்புப் பணிகள் மிகவும் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.’’ மகளிர்க்கான வாக்குரிமையானது, சோசலிசத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்தும் எனக் கருதப்பட்டது.
முதல் மகளிர் தினம்
தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட் கட்சிகள், உழைக்கும் பெண்கள் மன்றங்கள் மற்றும் பின்னிஷ் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பெண்கள் அடங்கிய பதினேழு நாடுகளைச் சேர்ந்த நூறு பெண் பிரதிநிதிகள் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார்கள். அடுத்த ஆண்டு – அதாவது 1911இல் – கோபன்ஹேகன் முன் முயற்சியின் விளைவாக ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அணிவகுத்தார்கள். 1848 புரட்சியைக் கொண்டாடும் மார்ச் 19 அப்போது மகளிர் தினத்திற்கான நாளாகத் தெரிவுசெய்யப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் மகளிர் தின அணிவகுப்புகள் மிக எழுச்சியுடன் நடைபெற்றன. ஜார் ஆட்சி புரிந்த ரஷ்யாவிலும் பிப்ரவரி கடைசி ஞாயிறில் மகளிர் அத்தினத்தை அனுசரித்தார்கள். (அன்றைக்கு ரஷ்யாவில் புழக்கத்தில் இருந்த ஜூலியன் காலண்டர்படி அன்றையதினம் கொண்டாடப்பட்டது. உலகில் உள்ள மற்ற நாடுகளில் புழக்கத்திலிருந்த கிரிகோரியன் காலண்டர்படி அன்றைய தேதி மார்ச் 8 ஆகும்.)
அமெரிக்காவில், சோசலிஸ்ட் பெண்கள் 1908இலேயே தேசிய மகளிர் தினத்தைக் கொண்டாடத் துவங்கிவிட்டார்கள். உண்மையில் உலகில் கொண்டாடப்பட்ட முதல் மகளிர் தினம் இதுவேயாகும். அப்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மகளிர் வாக்குரிமை மற்றும் பொருளாதார உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார்கள். ஆடை ஆயத்தத் தொழிலகங்களில் பணியாற்றி வந்த பெண்கள் போலீஸ் அடக்குமுறையையும் மீறி வீரஞ்செறிந்த வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தினார்கள். அந்த சமயத்தில் ஏகாதிபத்தியங்கள் உலக யுத்தத்திற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருந்தன. உலகம் முழுதுமிருந்த பெண்கள் யுத்தத்திற்கெதிராக அமைதிக்காக அறைகூவல் விடுத்தார்கள். 1913இல்தான் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-க்கு மாற்றப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டு, உலக யுத்தம் மூண்டது. 1915 மற்றும் 1916 ஆம் ஆண்டுகளில் மகளிர் தினத்தைக் கொண்டாட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், போரில் ஈடுபட்டிருந்தவர்கள் அமைதிக்காகக் குரல் கொடுத்தவர்கள் மீது அடக்குமுறையை ஏவினார்கள். ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. அலெக்சாண்ட்ரா கொல்லன்டாய் கூற்றின்படி அப்போது நார்வேயில் மட்டும்தான் மார்ச் 8 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிந்தது. சில பெண் பிரதிநிதிகள் கூடி, மிகவும் துணிவுடன் அமைதிக்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அடுத்து, மாபெரும் 1917 வந்தது. ரஷ்யாவில் ஜாரின் ஆட்சிக்கெதிராகப், பெட்ரோகிராடில் புயல் அடித்துக்கொண்டிருந்த சமயத்தில், பெண் தொழிலாளர்கள் மார்ச் 8 பேரணி/ஆர்ப்பாட்டத்திற்காகப் பெண்களை அணிதிரட்டிக் கொண்டிருந்தார்கள். பெண் தொழிலாளர்கள், ராணுவ வீரர்களின் மனைவிமார்கள், தொழிலாளர் வர்க்கத்தின் குடும்பப் பெண்கள், பட்டினிக் கொடுமைக்கு ஆளானோர் அனைவரும் பெட்ரோகிராட் தெருக்களில் அணிவகுத்தார்கள். அவர்கள் யுத்தத்திற்கெதிராகக் குரல் கொடுத்தார்கள். தங்களுக்கு அமைதி வேண்டும் என்றும், உணவு வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்கள். இவர்களது குரலுக்குத் தொழிலாளர்களும், ராணுவத்தினரும் ஆதரவு நல்கியதை அடுத்து பெட்ரோகிராடின் வீதிகளில் வீறுகொண்டு உணர்ச்சி முழக்கங்களுடன் முன்னேறினார்கள். மார்ச் 8 அன்று பெட்ரோகிராட் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுதும் மக்களின் எழுச்சியைப் பன்மடங்குப் பெருகச் செய்து, புரட்சிகர நிகழ்வுகளை ஏற்படுத்தி, உலகின் முதல் சோசலிஸ்ட் குடியரசு உதயமாவதற்கு இட்டுச் சென்றது. பெட்ரோகிராட் பெண்களும் மற்றும் ஜார் ஆட்சி செய்த ரஷ்யாவில் மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பெண்களின் ஆர்ப்பாட்டங்களும், ‘‘பெண்களின் பங்களிப்பு இல்லாமல் மாபெரும் சமூகப் புரட்சிகள் சாத்தியமில்லை’’ என்று மாமேதை காரல் மார்க்ஸ் 1868 டிசம்பர் 12அன்று லுட்விக் குடேல்மான் என்பவருக்கு எழுதியிருந்த கடிதத்தின் வாசகங்ளை சரி என்று மெய்ப்பித்தன. பிந்தைய வளர்ச்சிப் போக்குகள் பின்னர், 1922இல் முதல் தொழிலாளர் அரசு மார்ச் 8 மகளிர் தினத்தை விடுமுறை தினமாகப் பிரகடனம் செய்தது. அதே ஆண்டு சீனாவிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகளிர் தினக் கொண்டாட்டங்கள் உலகம் முழுதும் வளர்ந்து வந்தன. இந்தியாவில் 1931இல் சமத்துவத்திற்கான ஆசியப் பெண்களின் மாநாடு லாகூரில் நடைபெற்ற சமயத்தில் முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது. அப்போது பெண்களுக்கு சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், நாடுகளுக்கு விடுதலை கோருவதுடன் பெண்களின் சமத்துவத்தையும் இணைத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1960களுக்குப் பின்னர் சோசலிஸ்ட் நாடுகளிலிருந்த பெண்கள் மற்றும் அனைத்து நாடுகளிலும் இருந்த இடதுசாரி மகளிர் அமைப்புகளும் மகளிர் தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடத் துவங்கின. இதனையடுத்து, பெண்கள் சர்வதேச ஜனநாயக சம்மேளனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டதை அடுத்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் 1975இல் மார்ச் 8 தினத்தை சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாகப் பிரகடனம் செய்து, தீர்மானம் நிறைவேற்றியது. இன்று உலகம் முழுதும் அனைத்து நாடுகளும் மார்ச் 8 அன்று மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றன. இது வரவேற்கப்பட வேண்டிய அம்சமே என்றாலும், மார்ச் 8 உருவான வரலாற்றை – அதன் சோசலிச மற்றும் சமூகப் பின்னணியை, அதிலும் குறிப்பாக உழைக்கும் பெண்கள் முதலாளித்துவ சுரண்டல் அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுத்த வரலாற்றை – நீர்த்துப்போகச் செய்திட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இடம் தந்திடக் கூடாது.
இரண்டு அம்சங்கள்
மார்ச் 8 – மகளிர் தின வரலாற்றின் இரு அம்சங்கள் நமக்கு இன்றைக்கும் பொருந்தக் கூடியதாகும். இதில் முதலாவதும் மிகவும் முக்கியமானதும் முதலாளித்தவ சுரண்டலுக்கு எதிரான போராட்டத்திலும், சோசலிச மாற்றுக்கான போராட்டத்திலும் பெண் தொழிலாளர்களை அணிதிரட்டுவதாகும். ஐரோப்பா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் உழைக்கும் பெண்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களிலிருந்து தொழிலாளர் வர்க்கப் பெண்களின் கேந்திரமான பங்களிப்புக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றன. ஆரம்ப நாட்களில் தொழிற்சாலைகளில் பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களின் பணிநிலைமைகள் மிகவும் மோசமாக இருந்தன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் உழைப்பு முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில் உபயோகப்படுத்தப்பட்டன. ”
மார்க்ஸ் மூலதனத்தின் முதல் தொகுதியில், ‘‘…எனவே, எந்திர சாதனங்களைப் பயன்படுத்திய முதலாளிகள் முதலில் நாடிச்சென்றது பெண்கள், குழந்தைகளின் உழைப்பையே. எந்திரம் என்பது மனித உழைப்புக்குப் பதிலாக நிறுத்தப்பெற்ற அசுர அமைப்பு. எனினும் ஒவ்வொரு பாட்டாளிக் குடும்ப உறுப்பினரும் மூலதனத்தின் நேரடி ஆளுகையின்கீழ் உழைப்பாளி எனப் பதிவு செய்யப்பட்டனர். வயது வேற்றுமை, ஆண்/பெண் பால் வேற்றுமை எதைப்பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. மூலதனத்திற்காக அனைவரும் கட்டாயமாக உழைப்பாளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டனர்’’ என்று எழுதுகிறார். பெண் தொழிலாளர்களுக்கு எதிரான சுரண்டலுக்கு எதிராகப் பெண் தொழிலாளர்களை அணிதிரட்ட அவர்கள் மத்தியில் வேலை செய்த சோசலிஸ்ட்பெண் தலைவர்கள் மிகவும் முனைப்பாக செயல்பட்டார்கள். மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தலைமையின்கீழ் நடைபெற்ற முதலாவது கம்யூனிஸ்ட் அகிலம், பெண் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராடுவதற்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்தது. மேலும் ஒவ்வொரு தொழிற்சாலையில் உள்ள பெண் தொழிலாளர்கள் நிலைமைகள் குறித்தும் ஆய்வு செய்திட ஆழமான கேள்வித்தாளையும் வெளியிட்டது. அதுநாள்வரையில் அடிமைகள் போல் வேலை செய்து வந்த பெண்கள் மற்றம் குழந்தைத் தொழிலாளர்களுக்கும் 8 மணி நேர வேலை உட்பட பல கோரிக்கைகள் உருவாக்கப்பட்டன. கிழக்கு லண்டனில் இருந்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய பெண் தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்திடும் பணியில் மார்க்ஸ் புதல்வி எளியானார் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். 1988இல் லண்டனில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் வேலை பார்த்த பெண்கள் – இளம் பதின்மரிலிருந்து வயது முதிர்ந்த மூதாட்டி வரை – முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்களது வேலை நிறுத்தத்திற்கு அனைத்துத் தொழிற்சங்கங்ளும் ஆதரவு அளித்தன. வேலை நிறுத்தப்போராட்டம் பல முக்கிய சலுகைகளுடன் வெற்றி பெற்றது. இவ்வெற்றியானது பெண் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்தது. இதேபோன்று அமெரிக்காவிலும் பெண்தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றனர். ஆரம்ப காலத்தில் மகளிர்க்கென்று தனியே மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டுமா என்கிற கருத்து, ஆண் தொழிலாளர்கள்மத்தியில் இருந்தது. 1920இன் பிற்பகுதியில் தோழர் லெனின், தோழர் ஜெட்கின்னுடன் உரையாடிய சமயத்தில், சோசலிஸ்ட் அமைப்புகளிலும் தொழிற்சங்கங்களிலும் பெண்களுக்கென்று தனி அமைப்புகள் இருப்பதை விமர்சித்தவர்களை, தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயே பெண்களுக்குத் தனி அணுகுமுறையைக் கடைப்பிடித்திட வேண்டும் என்பதை அங்கீகரிக்காதவர்களைக் கடுமையாச் சாடினார். அப்போது அவர்சொல்லிய விமர்சனங்கள் இன்றைக்கும் பொருந்தக் கூடியதேயாகும்.
நவீன தாராளமயப் பொருளதாரக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில், பெண் தொழிலாளர்களும், கிராமப்புறத்தில் இருக்கின்ற பெண்கள் உட்பட ஏழைப் பெண்களின் நிலைமைகளும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அரசு, தன் சமூகப் பொறுப்புக்களைக் கைகழுவி விட்டுவிட்டதன் விளைவாகவும், பொருள்களின் விலைகளை சந்தை சக்திகளிடம் ஒப்படைத்து விட்டதன் காரணமாகவும், பணவீக்கம் அதிகரித்திருக்கிறது, வேலையின்மையும், வேலையிறக்கமும், குறைந்த ஊதியங்களும் பெண்களைக் கடுமையாகப் பாதித்துள்ளன. இதன் காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் ஊட்டச்சத்துக் குறைவு என்பது அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. எனவேதான் இக்கொடுமைகளுக்கு எதிராக பெண்களை அணிதிரட்ட வேண்டிய அவசிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. உலகில் முதன்முதலாகப் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது, சோவியத் யூனியன்தான். இப்போது நம் நாட்டில் மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 விழுக்காடும், உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு மகளிர் தினம் கொண்டாடப்பட நூறு ஆண்டுகளுக்கு முன், கோபன்ஹேகனில் முயற்சிகளை மேற்கொண்ட 100 பெண்கள், நூறாண்டுகள் கழித்து இந்த அளவிற்கு உலகம் முழுதும் மகளிர் தினம் கொண்டாடப்படும் என்று கற்பனை செய்திருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்கள் அன்றைய தினம் வைத்திட்ட முழக்கங்கள் இன்றைக்கும் பொருந்துகிறது. சர்வதேச மகளிர் தினம் என்பது முதலாளித்துவ நுகத்தடியில் பிணைக்கபட்டிருந்த பெண்களை விடுவிப்பதற்கான போராட்டத்தின் ஓர் அடையாளமாகும். அதே சமயத்தில் நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தும் இன்றைய சமூக அமைப்பில் மிகவும் மோசமான முறையில் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டலுக்கு ஆட்பட்டுள்ள உழைக்கும் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், கிராமப்புறமற்றும் நகர்ப்புறங்களில் முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களின் உரிமைகளுக்காக அணிதிரட்டுவதன் மூலமாகவே சமூகத்தில் தற்போது நிலவும் சமத்துவமின்மையை மாற்றியமைத்திட முடியும். வரும் மார்ச் 8 அன்று மகளிர் தினத்தின் நூற்றாண்டு தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடும் அதே சமயத்தில், இவர்களுக்கான போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல, சபதமேற்போம். மார்ச் 8 மகளிர் தினம் நீடூழி வாழ்க! தோழர் கிளாரா ஜெட்கின் நீடூழி வாழ்க!
தமிழில்: ச.வீரமணி