பெருநிறுவன உந்துதலால் ஏற்படும் இணையவழிக் கல்வி மாணவர்களை மனிதநேயமற்றவர்களாக்கி, சமூக யதார்த்தத்திலிருந்து அந்நியப்படுத்தி விடக்கூடும்: ஜவஹர் நேசன் நேர்காணல்
நமது கல்வித்துறை இது போன்ற பெரும் நெருக்கடியான காலங்களில், சமூகத்தில் உள்ள சவால்களை எதிர்கொண்டு, அவற்றின் மீதான கேள்விகளை எழுப்பி, தங்களை விடுவித்துக் கொள்வதற்கு இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்கிறார் மைசூரு, ஜே.எஸ்.எஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜவஹர் நேசன். சந்தையால் கட்டளையிடப்பட்டுள்ள பாடத்திட்டங்களுக்கான காலக்கெடுவை மட்டுமே நிறைவேற்றிட உதவுகின்ற இந்த இணையவழிக் கல்விக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், மாணவர்களை சமூக யதார்த்தத்திலிருந்து நாம் அந்நியப்படுத்தி வைக்கிறோம் என்று அவர் கூறுகிறார்.
நேர்காணலில் இருந்து சில பகுதிகள் …
கடந்த சில ஆண்டுகளில் கல்வித்துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய ஊரடங்கு கல்வித்துறையைப் பொறுத்தவரை முக்கியமான காலமா?
தொற்றுநோய் தொடங்கிய பிறகு, முடங்கிப்போன முதல் துறை கல்வித்துறைதான். கல்வி வளாகங்களுக்குள் சமூக இடைவெளி என்பது சாத்தியப்படாது. கொரோனா வைரஸ் காரணமாக பெருகிவரும் இறப்பு எண்ணிக்கையால் சமூகம் இப்போது மிகப்பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறது. அதன் விளைவுகள் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. வாழ்க்கை நிலைமைகளும், வாழ்வு முறைகளும் மறுவரையறையை எதிர்கொண்டுள்ளன. தேவைகளும், அளிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. உற்பத்திகள் இல்லை. உயர்கல்வி வளாகங்கள், முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாடத்திட்டங்களை வழங்குவதற்கான இடங்களாக இருப்பது மட்டுமல்லாமல், சமகால முன்னேற்றங்கள், சவால்கள், சமூகத்தின் தேவைகளுக்குப் பதிலளிக்கின்ற வகையில் இளைஞர்களை வடிவமைப்பதற்கான இடங்களாகவும் இருக்கின்றன.
தற்போதைய சூழ்நிலைக்கேற்றவாறு கல்வி அமைப்பு செயல்படவில்லையா? எட்–டெக் நிறுவனங்களின் திடீர் வளர்ச்சி இந்த ஊரடங்கின் நேரடி விளைவாக இருக்கிறதா?
இந்த தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பார்த்தால், நவீன தாராளமய சக்திகள் இந்த கொந்தளிப்பான நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவது தெரிகிறது. கொள்கை வகுப்பாளர்கள், சட்டமியற்றுபவர்கள், கல்விச் சேவை வழங்குபவர்கள் மற்றும் அலுவலகத் தலைமையில் உள்ளவர்கள் அனைவரும் இணையத்தின் மூலம் கற்பிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது, மனதை எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்வது, எண்ணங்களை எவ்வாறு ஒழுங்குபடுத்திக் கொள்வது என்பவை குறித்து குழந்தைகளும், இளைஞர்களும் கற்றுக் கொண்டு, முடிவுகளை எடுப்பதில் தர்க்கரீதியாக தங்கள் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். தாங்கள் வாழும் சமூகத்திலிருந்து அவர்கள் துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இணையவழிக் கல்வி மாணவர்களுக்கு மோசமானது என்று சொல்கிறீர்களா?
இணையவழி நிகழ்ச்சிகள், வளங்கள் நிச்சயமாக கற்பித்தல் விஷயங்களுக்கு உதவியாக இருக்கலாம். மாணவர்களின் கற்றல் அனுபவத்தை அவை மேம்படுத்தலாம் என்பதிலும் எந்தவித சந்தேகமுமில்லை. ஆனால், இது கற்பவர்களுக்கு முழுமையான கற்றல் வாய்ப்பை வழங்கி, பாடத்திட்ட நோக்கங்களை அடைய கல்வித் திட்டங்களுக்கு எவ்வாறு உதவும்? இவ்வாறான திட்டங்கள் சந்தைக்கான வேலைவாய்ப்புள்ள ஒருவரை உருவாக்குவதில் எந்தவிதமான இடையூறும் ஏற்படுவதைத் தடுக்கின்ற நோக்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. இது மாணவர்கள் இப்போது அனுபவித்து வருகின்ற அனுபவத்துடன் எந்த சம்பந்தமும் இல்லாதது. மாணவர்களையும், கல்வியையும் ஒரு பொருளாகவே இது கருதுகிறது. ஒரு நெருக்கடிக்கு மத்தியில் நாடு இருக்கும்போது, அங்கே இருக்கின்ற கல்வி முறை அந்த சமூகத்திற்கான விடுதலைக்கு உதவுவதாக இருக்க வேண்டும்.
சந்தை வழங்கியுள்ள புதிய திட்டங்களை பெரும்பாலான நிறுவனங்கள் அறிமுகப்படுத்தவில்லை. அவர்கள் ஏற்கனவே இருக்கும் பாடத்திட்டத்தை முடிப்பதற்குத்தானே இந்த நேரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
இத்தகைய வாதங்கள், ‘நேரம் என்பது பணம்’, ‘பணத்திற்கான மதிப்பு’, ‘நிறுவனத்திற்கான செலவு’, ‘ஸ்மார்ட் சேவைகள்’ போன்ற நவீன தாராளமய பொருளாதார சக்திகளின் வெற்று எண்ணங்களைத் தவிர வேறொன்றுமில்லை. கல்வியின் ஒரு வடிவமாக, புதிதாக, திடீரென்று அனைவரையும் ஈர்த்திருக்கும் இணையவழிக் கல்வி மற்றும் கற்றல் தளங்கள் நிச்சயமாக இவ்வாறான ‘இணக்கமாகப் போகின்ற வாழ்க்கை’யை விரைவில் ஏற்படுத்தித் தரும்.

இது நிச்சயம் இளைஞர்களை மனிதாபிமானமற்றவர்களாக ஆக்கி, குடிமக்கள் உருவாவதைத் தடுக்கும். நமது உயர்கல்வித் துறையை, தாராளமயச் சந்தைகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களால் உருவாக்கப்பட்ட இணையவழிப் பொருட்களை சார்ந்து இருக்கின்ற வகையில் மாற்றி, அதனை கற்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்ற வகை நோக்கி வழிநடத்தும். எந்தவொரு முதலீட்டையும் செய்யாமல், வேலைவாய்ப்புள்ள மாணவர்களை உருவாக்குவதன் மூலம், இந்தியாவில் இருந்து பணம் சம்பாதிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். கல்வி என்பது சமூகத்தின் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட வேண்டும்.
கற்றல் விளைவுகளை மறுவரையறை செய்வதன் மூலம், உயர்கல்வி முறை ஒட்டு மொத்தமாக மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் பரிந்துரைக்கிறீர்களா?
சமுதாயத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்ப்தற்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சந்தைகள் இருக்க வேண்டும். தற்போது சந்தையின் பிரச்சினையை சமூகம் தீர்த்து வைக்கிறது. சந்தை எதிர்பார்க்கின்ற பாத்திரங்களுக்கு ஏற்ற ஊழியர்களை உருவாக்குகின்ற குறுகிய திறன்களாக கற்றல் விளைவுகளை மறுவரையறை செய்வதற்காகவே பெருநிறுவனங்கள் அரசுடன் கூட்டு சேர்ந்துள்ளன.
மக்களை சிந்திக்கவும், கேள்வி கேட்கவும், கற்றுக்கொள்ளவும், புதுமைப்படுத்தவும், சவால் செய்யவும் கல்வி தூண்ட வேண்டும். மனித குலம் கஷ்டங்களுக்கு எதிராக முயற்சிகளை உருவாக்கும் ஆர்வத்துடனே எப்போதும் இருக்கிறது. வெற்றிகரமான அனுபவம் அறிவு என்று அழைக்கப்படுகிறது. கல்வி சமூக ரீதியாக உந்தப்படுகின்ற அறிவு உருவாக்கத்தை நோக்கியே செயல்பட வேண்டும்.
சுஷ்மிதா ராமகிருஷ்ணன்
2020 மே 10, எக்ஸ்பிரஸ் செய்தி சேவை
தமிழில்
முனைவர் தா.சந்திரகுரு