தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய மொழிகளில் தயாராகும் படங்கள் பெரும்பாலானவற்றிலும் மூன்று அம்சங்கள் கண்டிப்பாக இருக்கின்றன. 1) கதாபாத்திரங்கள் வாய் திறந்து பாடி ஆடுகிற காட்சிகள், 2) உக்கிரமான சண்டைக் காட்சிகள், 3) சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள். பெரும்பான்மை ரசிக மனம் இவற்றைச் செயற்கையான ஒட்டு வேலை என்று கருதாமல் பாடலில் மயங்குகிறது, சண்டையில் துடிக்கிறது, நகைச்சுவையில் சிரிக்கிறது. சினிமாவுக்குப் பாட்டெழுதும் கவிஞர்கள் புகழோடு வலம் வருகிறார்கள். இசையமைப்பாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள், அவர்களில் குறிப்பிட்ட சிலர் தனி ஆளுமையே செலுத்துகிறார்கள். திரையில் அறிமுக எழுத்து  ஓடுகிறபோது நடன இயக்குநர் யார், சண்டை இயக்குநர் யார் என்று கவனிக்கப்படுகிறது. நகைச்சுவைக் கலைஞர்களின் பெயர் பார்த்துக் கரவொலி எழுகிறது.

ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, தயாரிப்பு மேலாண்மை, படத்தொகுப்பு என்ற பிரிவுகள் இருப்பது போலவே இந்தத் துறைகளும் கட்டாயத் தேவைகளாக வளர்ந்துள்ளன. சினிமாக் கவிஞர்களின் வெளிப்பாடுகள், மொழித்திறன், அழகியல், அரசியல் பற்றியே ஆய்வுகள் மேற்கொள்ள முடியும். ஏற்கெனவே அத்தகைய ஆய்வுகள் நடத்தப்பட்டு பல்கலைக்கழகப் பட்டங்கள் வழங்கப்பட்டிருக்கக்கூடும்.

இசையமைப்பாளர்களில் சிலர் அவரவர் காலகட்டத்துத் தலைமுறையினரின் நினைவுகளோடு பயணிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களைச் சார்ந்து எத்தனை பாடகர்கள், இசைக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்! சண்டைக்கலை இயக்குநர்கள் உதவியாளர்களையும், துணிச்சல் மிகு சாகசக் கலைஞர்களையும் கொண்ட படைகளையே அல்லவா வைத்திருக்கிறார்கள்!

நகைச்சுவையாளர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களும் தங்களுக்கென தனிக்குழுக்கள், உரையாடல் எழுதிக்கொடுப்போர் என்று கூட்டணியாக இயங்குகிறார்கள். இப்படி பாட்டு, சண்டை, நடனம், சிரிப்பு ஆகியவை ஒரு படம் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் முக்கியக் கூறுகளாக, சினிமா வணிகத்தின் தவிர்க்கமுடியாத செயலமைப்புகளாக வளர்ந்திருக்கின்றன. யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொதுவாகச் சொல்லிச் செல்வதற்குக் காரணம், தமிழ் சினிமா வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வந்துள்ள இவர்களில் யாரைச் சொல்வது, யாரை விடுவது என்ற மலைப்புதான். அத்துடன், இது அவர்களைப் பற்றிய எண்ணப் பகிர்வு அல்ல, இந்த நான்கும் எப்படி தமிழ் சினிமாவின் அங்கங்களாக மாறின என்ற சிந்தனைப் பரிமாற்றமே. இந்திய மொழிப்படங்கள் பெரும்பாலானவற்றுக்கும் இது பொருந்தும்.

இணைப்பு வேளை

Delhi doesn't want popcorn breaks for Hollywood films | Delhi News ...

இங்கே ஒரு “இடைவேளை”! இந்தியத் திரைப்படங்களில் கிட்டத்தட்ட சரியாதிக் கட்டத்தில் இடைவேளை விடப்படுவதோடு தொடர்புள்ளவை இந்த இணைப்புகள். ஒரு திருப்பக் காட்சியோடு, அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கிற இடத்தில் இடைவேளை விடப்படும். திரையரங்குகளில் ஆங்கிலப் படங்கள் பார்க்கிறபோது வருகிற இடைவேளை, படத்தை உருவாக்கிய இயக்குநரால் முடிவு செய்யப்பட்டதல்ல, விநியோகிப்பாளர் அல்லது திரையரங்க உரிமையாளரால் முடிவு செய்யப்பட்டதே என்பது பளிச்சென்று தெரியும். ஏனென்றால் அந்தப் படங்களின் காட்சிகள் தொடக்கத்திலிருந்து கடைசிவரையில் ஒன்றின் மீது ஒன்று தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். அந்தப் படங்கள் தயாரிக்கப்பட்ட நாடுகள் உட்பட பல நாடுகளில் இடைவேளையின்றி ஓட்டப்படுகின்றன. இங்கே வருகிறபோது இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஓட்டப்படுகின்றன.

ஆயினும் இங்கே ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம்: தொடக்கத்தில் ஹாலிவுட் படங்களிலும் இடைவேளை விடப்பட்டது. பின்னர்தான் அது கைவிடப்பட்டது. இந்தியப் படங்கள் மேற்கத்திய நாடுகளுக்குச் செல்கிறபோது இடைவேளை இல்லாமல் ஒரே தொடர்ச்சியாகத்தான் அனுப்பப்படுகின்றன.

எப்படி வந்தது இடைவேளைப் பழக்கம்? முன்பு மேலை நாடுகளின் நாடக அரங்குகளில் இடைவேளை விடப்பட்டன. பார்வையாளர்கள் சற்று வெளியே சென்று வருவதற்காக மட்டுமல்லாமல், கலைஞர்கள் அடுத்த முக்கியக் காட்சிக்காக ஒத்திகை பார்ப்பது, அரங்க்ப் பொருள்களைத் ஒழுங்குபடுத்திக்கொள்வது போன்ற தயாரிப்புகளில் ஈடுபடவும் அந்த இடைவேளை நேரம் பயன்பட்டது. பிற்காலத்தில் இந்தியாவில் மேடை நாடகங்கள் வளர்ச்சியடைந்தபோது இவ்வாறு சிறிது நேரம் இடைவேளை விடுகிற வழக்கமும் வந்திருக்கக்கூடும்.

ரீல் மாற்றும் நேரம்

Film Projector screening at Coimbatore Royal Theatre ...

திரைப்படங்கள் முதலில் நான்கைந்து நீண்ட ஃபிலிம் சரமாகவே படியெடுக்கப்பட்டு ஊர் ஊராய்க் கொண்டுசெல்லப்பட்டன. தனித்தனி ரீல்களாக வந்ததன் அடிப்படையில்தான் உண்மைக்கு மாறாகக் கதைவிடுகிறவர்களைப் பற்றி “நல்லா ரீல் விடுகிறார்களப்பா” என்று சொல்கிற பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரே ஒரு திரையீட்டு எந்திரத்தோடுதான் (புரொஜக்டர்) அன்றைய திரையரங்குகள் அமைக்கப்பட்டன. ஒரு மையமான ஊரில் தற்காலிகக் கூடாரம் அமைத்துச் சில நாட்கள் தங்கியிருந்து படம் காட்டிவிட்டு அடுத்த ஊருக்குப் பயணப்படுவார்கள். இப்படி ஊர் ஊராய் “டூர்” சென்றதால்தான் “டூரிங் தியேட்டர்”  (உலாவரும் அரங்கம்) என்ற பெயர் வந்தது. படச்சுருளிலேயே வசனம் பேசுவதையும் பாட்டுப் பாடுவதையும் ஒலிப்பதிவு செய்து அரங்கத்தின் ஒலிபெருக்கி வழியாகக் கேட்க வைக்கிற பேசும் தொழில்நுட்பம் இணைந்தபோது “டூரிங் டாக்கீஸ்”  (உலாவரும் பேசும்படம்) என்ற பெயர் உருவானது. படிப்படியாகவே நிலையான திரையரங்குகள் கட்டப்பட்டன.

ஒரே ஒரு புரொஜக்டர்தான் என்பதால், ஒரு ரீல் முடிந்து அடுத்த ரீலைப் பொருத்தி மறுபடியும் திரைக்கு ஒளியைப் பாய்ச்சுவதற்கு சிறிது நேரம் ஆனது. ஆகவே, அது தவிர்க்க முடியாத இடைவேளையானது. எத்தனை ரீல்கள் இருக்கின்றனவோ அவற்றுக்கு இடைப்பட்ட நேரங்களெல்லாம் இடைவேளைதான். நான்கு ரீல்கள் என்றால் மூன்று இடைவேளைகள் நிச்சயமாக இருக்கும்.

பொறுமையைச் சோதிக்கக்கூடிய அந்த நேரத்தை சமாளிப்பதற்காக, இந்தியாவில் திரையரங்க உரிமையாளர்களாலும் பட விநியோகிப்பாளர்களாலும் ஒரு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. அரங்க மேடையில் உள்ளூர்ப் பாடகர்களை அழைத்துப் பாட வைப்பது, நடனக் கலைஞர்களை ஆட விடுவது, உடற்பயிற்சி வல்லுநர்களை மேடையில் ஏற்றி மல்யுத்தம் செய்ய வைப்பது, தெருக்கூத்துக் கோமாளிக் கலைஞர்களிடம் சிரிக்க வைக்கும் வேலையைத் தருவது என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மௌனப்படங்களாக மட்டும் வந்துகொண்டிருந்தபோது, இடைவேளை நேரங்களில் ஒருவர் மேடைக்கு வந்து அதுவரை நடந்த கதையையும், இனி நடக்கப்போகிற கதைக்கான முன்னோட்டங்களையும் சொல்லிவிட்டுப் போவாராம்.

சோடா கலர் – கோம்போ ஆர்டர்

அந்த நேரங்களில் வெளியே அமைக்கப்பட்டிருக்கும் நொறுக்குத்தீனிக் கடைகளிலும் நல்ல வணிகம் நடக்கும். இடைவேளைகளில் அந்தக் கடைகளின் தொழிலாளர்கள் அரங்கிற்குள் வந்து “சோடா கலர்” என்று கூவிக்கூவி விற்றுவிட்டுப் போவார்கள். இன்று நவீன திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்கிறபோதே “கோம்போ” உணவுகளுக்கு “ஆர்டர்” கொடுக்கப்படுகிறது, சீருடைப் பணியாளர்கள் அந்த உணவுகளை  இருக்கைகளுக்கே கொண்டுவந்து  வழங்குகிறார்கள்.

Details about Western Electric Universal 35mm Sound Projector ...

ஒற்றைப் புரொஜக்டர் வெகுகாலம் நீடிக்கவில்லை. விரைவிலேயே அரங்குகளுக்கு இரண்டு புரொஜக்டர்கள் வந்துவிட்டதால், ஒரே ஒரு இடைவேளை மட்டும் விடப்பட்டது. இப்போது பல திரையரங்குகளில் ஃபிலிம் சுருள்களோ, அவற்றுக்கான புரொஜக்டர்களோ தேவையற்றதாகி, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், குறிப்பிட்ட படத்தைத் திரைக்கு அனுப்புவதற்கான கடவுச்சொல் என்றெல்லாம் வந்துவிட்டன. ஆயினும் இடைவேளை நேரம் தொடர்கிறது. ஒற்றைப் புரொஜக்டர் கால இடைவேளை நேரத்தை நிரப்பிய பாட்டு, நடனம், சண்டை, நகைச்சுவை ஆகியவை படத்தோடு படமாக நிலையாகப் பிணைந்துகொண்டுவிட்டன. இடைவேளை நேரமோ, நீண்ட நேரம் அமர்ந்திருந்ததன் உடல்சார்ந்த இயற்கைத் தேவைகளை ஈடுசெய்வதற்கும், பசியெடுக்கும் வயிறை சமாதானப்படுத்துவதற்குமான பொழுதாகிவிட்டது. சொல்லப்போனால், வெளியே 20 ரூபாய்க்குக் கிடைக்கும் தண்ணீர் பாட்டில் 50 ரூபாய்க்கும், காஃபி 80 ரூபாய்க்கும், ஐஸ் கிரீம் 100 ரூபாய்க்கும் என விற்கப்பட்டு, டிக்கட் விற்பனையை விட அதிகமான வருமானத்திற்கு வழிசெய்யப்பட்டிருக்கிறது.

செலவுச் சுமைகளைப் புலம்பலோடு பொறுத்துக்கொண்டு அரங்கில் மற்றவர்களோடு சேர்ந்து படம் பார்க்கிற ரசனை அனுபவத்தை விட்டுவிட மக்களும் தயாராக இல்லை. ஆங்கிலப் படங்களை வெளியிடும் சில அரங்குகளில், அவற்றின் ரசிகர்கள் பட ஓட்டம் பாதியில் தடைப்படுவதை விரும்புவதில்லை என்பதால், விளம்பரங்கள், செய்தித்தொகுப்புகள் முடிந்தபிறகு இடைவேளை விட்டு, பின்னர் முழுப்படமாகத் திரையிடப்படுகிறது.

இடைவேளை  நேரத்தில் இனி கதை எப்படி நகரும் என்று பேசிக்கொள்வது சினிமா ரசனை அனுபவத்தின் ஒரு முக்கியமான பகுதியல்லவா!

நம் ஊர்ப்படங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடகங்களாகவே இருக்கின்றன என்ற விமர்சனத்தைக் கேட்டிருப்பீர்கள். அது உண்மைதானா? நாயக நடிகர்கள் மீதான ஈர்ப்பு இங்கே அவர்களை வழிபடும் அளவுக்குச் சென்றது எப்படி? தமிழ் சினிமாவில் பெண்ணின் இடம் என்ன, பெண்ணியத்தின் நிலை என்ன? சாதி மத வரப்புகளைத் தாண்ட முடிந்தாலும் இலக்கைத் தொடுவதில் எந்த அளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது? காதல் பாடல்களையும் ஜாலியான ஆட்டங்களையும் எப்படி எடுத்துக்கொள்வது? இடைவேளைக்குப் பிறகு பார்ப்போமே!

File:A.Kumaresan.jpg - Wikimedia Commons

அ. குமரேசன்

என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *